பல்லழகன் – பகுதி 4
திவாகர்

‘அவனும் இந்த எதிர்வீட்டுலதான் இருக்கான்.. அவனோட பெரியப்பாவைத்தான் நேத்து சாயங்காலம் கொலை பண்ணி இருக்காங்க..’ “கொலையா?” “ஆமாண்டி.. பகல்லயே கொலை பண்ணியிருக்கான். கொடுமைதான். ஆனா அவனுக்கு ஆண்டவனாப் பாத்துதாண்டி இந்த தண்டனைக் கொடுத்திருக்கார்.” ‘அடக் கடவுளே.. ஆனா அவனை அதான் கல்யாணை இங்கே நான் பார்த்தது கிடையாதே..’ ‘அவன் எப்போவதுதான் வருவான்.. இந்த பெரியப்பா அவனை வேற ஊருலதான் வெச்சு படிக்கவெச்சாரு. அவன் கூட வைசாக்லத்தான் காலேஜ் முடிச்சான். அங்கயே இருக்கான்னு தெரியும்.. அவனைத்தான் நீ பார்த்துருக்கே.. தெத்துப்பல்லன்’னு எல்லாரும் கூப்பிடுவாங்கன்னு அந்த பொன்னம்மா, அவங்க வீட்டு வேலைக்காரி சொன்னாடி.’ ‘அப்படியா.. அப்போ இவன் இங்கேதான் வீடா? கரெக்ட்தான். இந்த கந்தசாமி கூட மூணு வருஷம் முன்னாடித்தானே இந்த பங்களா வாங்கினான்!.’ ‘ஏம்மா.. அவன் என்கிட்டே பேசறச்சே எங்க பெரியப்பா ரொம்ப அன்பானவரு, ரொம்ப ரொம்ப நல்லவருன்னு பேசினான்.. அவனுக்கு இந்த ஆளைப் பத்தி சரியா தெரியாதா?’ ‘அடி கோமதி, நீ ரொம்ப வெச்சுக்காதே அவங்ககிட்டே.. அந்த கிழவனும் போயிட்டான்.. கொலையோ தற்கொலையோ.. ஒழிஞ்சான் விடுன்னு போவியா.’ ‘அம்மா.. நான் ஒருவாட்டி அந்த தெத்துப்பல்லனைப் பார்த்துட்டு வரட்டுமா.. நம்ம ரவியோட ஃப்ரெண்ட்மா.. நல்லா ஜோவியலா பேசினான்மா. என் கிளாஸ்லாம் மாடலிங் பண்ணிருக்கான், ஒரு ஆறுதல் சொல்லிட்டு வரேனே..’ ‘தறுதல போனதுக்கு ஆறுதல் சொல்லப்போறியா? அந்த அயோக்கியன் வீட்டுக்குள்ள உன் கால் படக் கூடாது, சொல்லிட்டேன். இப்பகூட அந்தப் பாவியோட பொணம் எடுக்கலியாம். உங்கப்பா சொன்னார். அவரும் போய். சும்மா பார்த்துட்டு வரேன்னார். ‘ஒண்ணும் வேணாம்’னு சொல்லி நிறுத்தினேன். ‘
அப்பா அவர்களை நோக்கி வருகிறார்.
‘நான் ஏன் போகணும்னு சொன்னேன் தெரியுமா கோம்டி?. கடைசி நேரத்துல அவன் முகம் எவ்வளோ கோரமா இருக்கும்னு பாக்கற ஆசைதான். இவனுக்கெல்லாம் நல்ல சாவே கிடைக்காது நான் சாபம் விட்டுருக்கேன்.. என் சாபம் பலிச்சுடுச்சி.’ அம்மா தலையில் அடித்துக் கொள்கிறாள். ‘ஏய் கோமதி, இவரோட திருவாயை கொஞ்சம் மூட சொல்லுடி. இந்த ஓட்ட வாய் எத்தையாவது உளறிக்கொட்டுமோன்னு பயந்துதான் நான் இவரை போகவேணாம்னு சொன்னேன். கொலைகாரன் யாருன்னு போலீஸ்க்கு தெரியலை. தேடிக்கிட்டுருக்காங்க. உங்கப்பா அங்க போயி எத்தையாவது உளறினாருனு வெச்சுக்கோ…சந்தேகத்தின் பேரிலேயே அரெஸ்ட் பண்ணி உள்ளே வெச்சுடுவாங்க.’ ‘அது எப்படி வெப்பாங்க? நாம என்ன கொலையா பண்ணோம்? எவன்கிட்டயாவது செமையா ‘மாட்டியிருப்பான்.. சுட்டுத் தள்ளிட்டான்…’ கோமதி அவனை அமைதிப்படுத்தினாள். ‘அப்பா.. நீ கொஞ்சம் திருவாயை மூடிண்டு சும்மா இருக்கணும். உன்னோட கமெண்ட், கோபம்லாம் மூட்டைகட்டி ஓரமா போடு. எப்படியோ போயிட்டான். திருப்தி! அவ்வளவுதான். இனிமே நமக்கு அதுவும் சம்பந்தமில்லாத விஷயம் கூட. ஒருவேளை எதிர்வீடு விசாரணைன்னு உன்னை போலீஸ் விசாரிச்சா கூட அந்தாளு ஏரியாவுக்கே இப்போதான் வந்தான்.. புதுசு.. எனக்கு ‘ஒண்ணும் தெரியாது’ன்னு சொல்லிடு.’ ‘அம்மா.. சாயங்காலமா வீடெல்லாம் அமைதியாயிடும் இல்லியா.. அப்போ போறேன்மா. நான் ஒரு இன்வெஸ்டிகேடிவ் ப்ரொஃபெஷன்ல இருக்கேன். என்னதான் ஆச்சுன்னு, எப்படி போனான்’னு எனக்குத் தெரிஞ்சிக்க ஆசைதான். ஆனா கொஞ்சம் ஜாக்கிரதையா இதை கையாளணும். அவன்கிட்டேயே கேட்கிறேன்.. சரி.. எனக்கு பசிக்குது.. இன்னிக்கு உஷா வீட்டுக்கு போயிட்டு அவ விஷயத்தை முடிச்சுக்கொடுத்துட்டு சாந்தி வீட்டுக்கு போகணும். எங்களோட அமெரிக்கா விசா க்ளியர் ஆயி வந்துடுச்சு.. அதை நாங்க ரெண்டு பேரும் சேர்ந்துபோய் கலெக்ட் பண்ணிக்கணும்.’ ‘ஆமா.. உனக்கு விஸா வந்து என்ன யூஸ்? உன்கூட படிச்ச சாந்தி புத்திசாலித்தனமா யோசிச்சு அவங்க சொந்தக்காரங்க மூலமா அமெரிக்கா போயி பல் டாக்டரா வேலை பண்ணப்போறா. நீதான்.. விசாரணை.. விவாகரத்து சர்வீஸ்ன்னு சொல்லிட்டு ஊர் சுத்தறே.. பேசாம உங்கப்பா சொல்றமாதிரி கல்யாணம் பண்ணிக்கோடி..’ ‘அட போம்மா.. எதிர்வீட்ல ஒரு கொலையே விழுந்திருக்கு.. இப்போ நீ கல்யாணத்தைப் பத்திப் பேசறே.. போயி டிஃபனை எடுத்து வையு.’
அந்த நாள் மாலை – கல்யாணின் வீடு
இன்ஸ்பெக்டர் மோகன் மெதுவாக கல்யாணுடன் பேசிக்கொண்டிருந்தார். கல்யாணும் ரவியும் அங்கே இருந்தனர்.
‘கல்யாண்.. நாங்க எதிர்பார்த்த அளவுக்கு அவருக்கு பலமான பகை இருக்கற ஆள் யாருமே இல்லே. ஆனா ஷேர் மார்க்கெட்ல பயங்கரமா பிசினஸ் பண்ணிண்டு இருந்தார். ஒருவேளை ஷேர் மார்க்கெட் பிசினஸ்ல நஷ்டம்ன்னு தற்கொலை ஏதாவது பண்ணியிருக்கலாம்னா அதுவும் அப்பிடி இருக்கமுடியாதுன்னு அவர் ஆடிட்டர் சொல்றார். நல்ல லாபம் பார்த்துதான் பணம் போடுவாராம்.’ ‘ஆமாம் சார், நானும் யோசிச்சு யோசிச்சு பார்த்துட்டேன்.. அவரோட ஷேர் எல்லாம் ரொம்ப காலமா பெரிய கம்பெனிங்கள்ல இருக்கு. ரிஸ்க் இல்லாத முதலீடு. அத்தோட தற்கொலைன்னு ஏன் பண்ணிக்கணும் அவரு? காரணம் இல்லையே.’ ‘நீங்க சொல்றது சரிதான்.. ஆனா நாங்க அந்த ஆங்கிள்லயும் பார்த்துட்டுதான் சார் விசாரணையை ஆரம்பிக்க முடியும். தற்கொலையா இருந்தா இந்த வழக்கு உடனடியா க்ளோஸ் பண்ணிடலாம்.. ஆனா நாங்க அப்பிடி நினைக்கலே.. எப்படி அவரோட கொலைக்கு மோட்டிவ் கிடைக்கலியோ அவர் தற்கொலைக்குக் கூட மோட்டிவ் இல்லே.’ ‘சார், காலைல வந்ததுலேர்ந்து அவரை நெருப்புல வெக்கற வரை நான் அவரையே பார்த்துண்டு இருந்தேன். சிரிப்பு முகம் சார்.. அவருக்கெல்லாம் கோவம் கூட வராது சார்.. அத்தோட அவர் ரொம்ப தைரியசாலி சார்.. வாழ்க்கைல எதிர்நீச்சல் போட்டு முன்னேறணும்னு சொல்லுவார். என்னை அப்படித்தான் வளர்த்தார்.’ ‘சார் இன்னொரு விஷயம் கவனிச்சேன்..’ ‘சொல்லுங்க கல்யாண்..’ ‘அவரோட பொட்டுல துப்பாக்கி குண்டு பாய்ஞ்ச இடத்துல பெரிய பள்ளம் இருக்கு. இது ஒருவேளை தன் கையாலேயே தற்கொலை பண்ணினால் வரலாம். ஆனா அவர் மார்புலயும் குண்டு பாய்ஞ்சிருக்கு.. ஒருவாட்டி தன் மேலேயே குண்டு போட்டுண்டு சுட்டா கூட கை தடுமாறாதா சார்? மார்புல சுட்டாலும் கை தடுமாறும் அல்லது உயிர் போகிற நிலையிலே ஞாபக சக்தியே போய்டும். அவர் எப்படி பொட்டுலே வெச்சு சுட்டுக்கமுடியும் சார்? எப்படி சார் நடந்துது.. புரியவே இல்லையே சார்.’ ரவி நடுவில் புகுந்தான். ‘ரெண்டு வாட்டி சுட அப்படி என்ன வன்மமோ.. இதை தீர விசாரிக்கணும் சார்.. இது கொலையாதான் என் மனசுக்குப் படுது’. ‘எக்ஸாக்ட்டா எனக்கும் அதுதான் தோணிச்சு கல்யாண். அத்தோட அந்த பீரோ ஹேண்டில்ல ரத்தக் கறை.. அங்க தரையிலயும் ரத்தக் கறை இருக்கு. ஒருவேளை திருட்டுப் போச்சான்னு அதுவும் இல்லே.. காஷ், கொஞ்சம் நகைங்க எல்லாம் அப்படியே இருக்கு. முரளி சொன்னது என்னன்னா அவரோட சொந்த லைசென்ஸ்ட் ரிவால்வர் பீரோலதான் வெச்சிருக்கார்ன்னாரு. எதுக்கும் அந்த ரத்தக் கறையெல்லாம் எடுத்துட்டுப் போயிருக்காங்க.. போஸ்ட் மார்ட்ட்ம் ரிசல்ட் எப்படியும் நாளைக்கு வந்துடும்.. அப்போ பார்த்துக்கலாம், இது கொலையா இல்லே தற்கொலையான்னு. இப்போ நீங்க சொல்லுங்க. உங்க பெரியப்பா எப்படிப்பட்டவரு? யார்கிட்டயாவது தகராறு பண்ணிண்டே இருப்பாரா? அவருக்கு உங்கப்பா ஒரே தம்பியா இல்லே அவருக்கு வேற யாராவது உறவுக்காரங்க இருக்காங்களா? இன்னிக்கு எத்தனை உறவுக்காரங்க வந்தாங்க?.. தூக்கம் விசாரிச்சாங்க?.’ ‘எங்க சொந்த ஊர் திருச்சி சார்.. எங்கப்பாவும் பெரியப்பாவும் சிநேகிதர் மாதிரி பழகினாங்களாம். எங்கப்பா எங்கம்மா ரெண்டு பேருமே நான் குழந்தையா இருக்கறப்பவே ஒரே நாளில் செத்துப்போனாங்க. ஆனா இது நடக்கறச்சா எங்க தாத்தா பாட்டி இருந்தாங்க. வீட்லேயே ஒரு சின்ன விபத்துல போயிட்டாங்கன்னு பாட்டியும் தாத்தாவும் சொன்னாங்க. நான் அப்போ. பள்ளிக்கு கூட போக ஆரம்பிக்கலே. ஆனா எங்க பெரியப்பா ரொம்ப தைரியமா என்னை வளர்த்து வந்தாரு. அப்பா அம்மா இல்லாத குறையை பாட்டி தாத்தா கொஞ்ச வருடம் போக்கினாங்கன்னா அதுக்கு அப்புறம் எனக்கு எல்லாமே எங்க பெரியப்பான்னு ஆகி போயிடுச்சு..’ ‘அப்போ பெரியப்பா கல்யாணம் பண்ணிக்காமயே இருந்துட்டாரா?’ ‘சார். எனக்கு தெரிஞ்சு அவருக்கு கல்யாணம் ஆகலை. எங்கப்பா கல்யாணத்துல சந்தோஷமா ஆடி ஓடி வேலை செஞ்சதை எங்க பாட்டி சொல்லிருக்காங்க. நான் பள்ளில படிக்கறச்சே என்னை ஜாக்கிரதையா கொண்டு விட்டு கொண்டு வருவார். நான் வேற ஊருக்கு காலேஜ் படிக்கப் போனதும்தான் அவருக்கு திருச்சில நான் இல்லாம ஊரே பிடிக்கலேன்னு சொல்லிண்டுருப்பார். வைசாக்ல நான் பிஜி படிச்சு முடிச்சேன். சென்னைக்கு என்னை வரவழைச்சு என்னோட இருக்கணும்கிறதுக்காக இந்த வீட்டையே வாங்கினார். ஆனா நான், என் படிப்பு, என் வேலைன்னு வைசாக்லேயே இருந்துட்டு எப்பவாவதுதான் பெரியப்பாவை இங்கே வந்து பார்ப்பேன். ஆனா எனக்கு பெரியப்பாவை வந்து சரியா கவனிக்க முடியலே.. இனிமேயாவது நம்ம பக்கத்துலேயே அவரை வெச்சுக்கணும்னு அப்பப்ப நினைப்பேன் சார்.. ஆனா அதுக்குள்ளே…’
கண்களைத் துடைத்துக் கொண்டான் அவன். ரவியும் சேர்ந்து கொண்டான்.
“வைசாக்ல இருக்கறச்சே கூட அப்பப்போ பெரியப்பா பத்திதான் பேசுவான். பெத்த அப்பாவை விட பெரியப்பா மேல இப்படிப் பாசம் வெச்சிருக்கானேன்னு ஆச்சரியப்படுவேன். ஆனா இவங்கப்பா இவன் குழந்தையா இருக்கறச்சயே போயிட்டாரு இல்லையா.. வளர்த்த பெரியப்பா மேல வெச்சிருக்கற பாசம் சரிதான்னு தோணும்”.
கல்யாண் ரவியை கையை ஆறுதலுக்காக பற்றிக்கொண்டான். ‘இப்படியெல்லாம் நடக்கும்னு யாருக்குத் தெரியும்டா ரவி, . இப்படி அநியாயமா என்னை விட்டுப் போயிட்டாரேடா..’
அப்போது அங்கே கோம்டி வருகிறாள்.
திடீரென்று கல்யாண் எழுந்தான். ரவியும் கூடவே ஆச்சரியத்துடன்.
‘காலையில நான் உங்ககிட்டே எதுவும் பேச முடியலே கோமதி.. ஸாரி கோம்டி.. இதோ ரவியும் காலைல ஃப்ளைட் பிடிச்சு வந்துட்டான். ஆனா என் வீடு உங்களுக்கு எப்படி தெரிஞ்சுது? ஓ.. டி.வில கூட இதைப் பத்தி நியூஸ் இன்னிக்கு மார்னிங் பார்த்தேனே.. நீங்களும் பார்த்திருப்பீங்கதான். சென்ட்ரல்ல போகறச்சே சொல்லிக்கொள்ளாம போகறது கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கு. ஆனா அதிர்ச்சியான செய்தி இல்லையா?’ ‘பரவாயில்லே! உங்களை இந்த சமயத்துல இப்படி ஒரு நிலைமைல பார்க்கிறோமேன்னு வருத்தம்…. எவ்வளோ அன்பா உங்க பெரியப்பா பத்தி என்கிட்டே ட்ரெயின்ல நேத்து பூரா பேசிட்டு வந்தீங்க? ச்சே.. உலகம் தலைகீழா மாறிப் போன மாதிரி இருக்கு.’
இன்ஸ்பெக்டர் மோகன் ஆச்சரியமாக அவளைப் பார்த்தார்.
‘கோம்டி! நீங்களா.. நீங்க எப்படி இங்கே வந்தீங்க?’ ‘சார், நான் எதிர்வீட்டுக்காரி சார்.. கந்தசாமிதான் இவரோட பெரியப்பான்னு எனக்கு தெரியாதுதான். வைசாக்லேர்ந்து நானும் இவரும் பேசிண்டே ஒரே கம்பார்ட்மெண்ட்ல வந்தோம். இன்னிக்குக் காலைலதான் வண்டில இறங்கறச்சே இவரோட பெரியப்பா பத்தி நியூஸ் வந்தது. அதான் பார்த்துட்டுப் போகலாமேன்னு வந்தேன்.” வந்தவள் கல்யாணிடம் திரும்பினாள். “இன்ஸ்பெக்டர் மோகன் எனக்குத் தெரிஞ்சவர்தான். நிறைய விஷயங்களுக்காக அவர்கிட்டே உதவி கேட்பேன். ஆனா உங்க பெரியப்பாவைப் பத்தி எத்தனை அருமையாப் பேசினீங்க.. அவருக்கு இப்படி ஆயிடுச்சே..” ‘கோம்டி.. நீங்க எதிர்வீடுதானே.. கந்தசாமியைப் பத்தி உங்களுக்கு தெரிஞ்சதை சொல்லுங்களேன்.’ “சார்.. என்னோட ப்ரொஃபெஷன் டென்டிஸ்ட்.. வீட்லேயே கிலினிக் வெச்சுருக்கேன், ஆனா ஃப்ரீ டைம் நிறையா இருக்கறதுனாலே பார்ட் டைம் ஜாப்ல இன்வெஸ்டிகேடிவ் வேலையை எடுத்துண்டு இருக்கேன் சார்.” “அதுதான் ஏற்கனவே எனக்குத் தெரியுமே.. நான் கேட்டது இவங்க பெரியப்பாவைப் பத்தி என்ன தெரியும்னு?” “மிஸ்டர் கந்தசாமியைப் பத்தி எனக்கு, எங்க எதிர்வீட்டுக்காரர் என்கிற அளவுலதான் தெரியும். அவரு யார்கிட்டேயும் அவ்வளவு அதிகமா பழகறவர் இல்லேன்னு எங்க வீட்ல சொல்லுவாங்க…’. எனக்கு அவரைப் பத்தி பர்சனல் விஷயம் எதுவுமே தெரியாது சார்.”
திடீரென கோமதியைப் பார்க்கிறான் கல்யாண்.
‘கோம்டி, நீங்க ஏதோ இன்வெஸ்டிகேஷன் தொழில் பாக்கறேன்னு சொன்னீங்களே.. இது.. இந்த வழக்கை ஒரு சவாலா எடுத்து செய்யுங்க.. எவ்வளோ பணம் செலவானாலும் நான் தரேன். இதோ நம்ம ரவியும் கூடவே இருப்பான். அத்தோட நம்ம இன்ஸ்பெக்டர் மோகன் நான் பழகினவரைக்கும் தங்கமானவர். அவரு உங்களுக்கு ஃபுல் கோஆபரேஷன் தருவார்..’
இன்ஸ்பெக்டர் மோகன் மட்டும் கோமதியை ஒரு மாதிரி பார்த்தார்.
‘ஆகட்டும்.. செய்யலாம்.. ஆனா இவங்க சாதாரணமா இந்த விவாகரத்து கேஸுங்களுக்கு உதவி கேட்டுதான் வர வழக்கம்.. ஆனா இது கொலை கேஸ். போலீஸ்தான் உண்மையான விசாரணை செய்து சட்டப்படி பண்ணணும். இல்லையா கோம்டி?’ “ஆனா எங்களை மாதிரி உள்ளவங்கதான் சார் சரியான வழியிலே போய் விசாரிக்கமுடியும். உங்க சட்டப்படி போகறச்சே கொஞ்சம் இடைஞ்சல் வரலாம் இல்லையா.. நான் இதை எடுத்துச் செய்யறேன் சார்..” “இங்க பாருங்க கோம்டி.. இந்தக் கொலை வழக்குல ஏதாவது தகவல் தெரிஞ்சா நீங்க என்கிட்டே உடனடியா சொல்லணும். சட்டம் உங்களைப் பாதுகாக்கும் எப்போன்னா நீங்க சட்டத்துக்கு மதிப்புத் தரவரைக்கும்.. புரிஞ்சுதா..” என்றவர் கல்யாண் பக்கம் திரும்பினார். ‘சரி.. மிஸ்டர் கல்யாண்.. நான் இன்னும் இரண்டு நாள் கழிச்சு பாக்கறேன். ஏன், நீங்களே கூட என்னை ஸ்டேஷன்ல வந்து பாக்கலாம். என் மொபைல் நம்பர் உங்ககிட்டே இருக்கு இல்லே. சி ஐ டி அம்மா.. உங்களுக்கும்தான்.. இது கொலை கேஸுன்னு கொஞ்சம் ஞாபகம் வெச்சுக்கணும். மர்ம ஆசாமியால இவரோட பெரியப்பா கொல்லப்பட்டிருக்கலாம்னு சந்தேகம் இருக்கு. அது மட்டும் நிஜமா இருந்தா அந்த ஆள் எப்படியோ.. நீங்க இதுல தலையிடறதுல கோபம் வந்து உங்களையும் போட்டு தள்ளினா?. எங்களுக்குத் தான் ஒரு வழக்கு எக்ஸ்ட்ரா ஆகும்.. ஜாக்கிரதை..!’
அவளை எச்சரித்து விட்டு வீட்டை விட்டு வெளியே போனார்.
தொடரும்
