பெரிய புராணம் எனும் பேரமுதம் – பகுதி 13
63 நாயன்மார்கள் வரலாறு – 12. அரிவாட்டாயர் நாயனார்

தாவில்கண மங்கலத்துள் வேளான் டொன்மைத்
தாயனார் நாயனார் தமக்கே செந்நெற்
றூவரிசி யெனவிளைவ தவையே யாகத்
துறந்துணவு வடுவரிசி துளங்கு கீரை
யாவினினைந் துடன் கொணர்வார் கமரிற் சிந்த
வழிந்தரிவாள் கொண்டூட்டி யரியா முன்னே
மாவடுவி னொலியுமரன் கரமுந் தோன்றி
வாள்விலக்கி யமரர்தொழ வைத்த வன்றே.
சோழ வளநாட்டில் சுரும்பும் வண்டும் சூழ்ந்து மொய்க்கும் வளம் கொழிக்கும் பசுமையான ஊர் கணமங்கலம். இதனால் இங்குள்ள உழவர்கள் குபேரன் போலச் செல்வச் செழிப்புடன் வாழ்ந்தனர். குளத்து நீரிலும் நீல மலர்கள் பூத்துக்குலுங்கி கொண்டாடச் செய்யும். இத்தகைய சிறப்புடைய கணமங்கலத்தில் வேளாண்குடி மக்களின் தலைவராக விளங்கியவர் தாயனார் என்ற ஒரு சிவனடியார். பொருட்செல்வமும், அருட்செல்வமும் குறைவிலாது பெற்று அறநெறி பிறழாமல் வாழ்ந்துவந்தவர். இல்லறத்தை நல்லறத்துடன் நடத்தும் பண்பாளர். அவர்தம் துணைவியாரும் நாயனாரின் குறிப்பறிந்து ஒழுகும் தன்மையர். நாயனார் என்பெருமானுக்குச் செந்நெல்லரிசியும் செங்கீரையும் மாவடுவும் வைத்து அன்றாடம் திருவமுது செய்வித்து வருவது வழக்கம். அண்ணலுக்கு அமுதூட்டும் பணி செம்மையாக நடந்துகொண்டு வந்திருக்கும் காலத்தில், நாயனாரின் பெருமையை உலகறியச் செய்யும் திருவுளம் கொண்ட எம்பெருமான் தம் திருவிளையாடலைத் தொடங்கினார். அதன் விளைவு செல்வச் செழிப்புடன் வாழ்ந்து வந்த நாயனாரின் செல்வம் மெல்ல மெல்ல குறைய ஆரம்பித்து, இறுதியில் மொத்தமாக வறுமையின் பிடியில் சிக்கியவராக கூலிக்கு நெல் அறுப்பவராகி, தாங்கூலியாகப் பெற்ற செந்நெல் அனைத்தையும் சுவாமிக்குத் திருவமுது செய்வித்து, கார் நெல்லைக்கொண்டு தம் வாழ்க்கையை நடத்தி வந்தார்.
ஆனால் இறையருளால் அவ்வூரிலிருக்கின்ற வயல்களிலுள்ள நெல்லெல்லாம் செந்நெல்லாகிவிட தாயனாரும் இதற்கு கவலைப்படாமல் முழுமனதுடன் அகமகிழ்ந்து, எம்பெருமானின் வழிபாட்டிற்குப் பயன்படுத்தக் கிடைத்த பெருவாய்ப்பாகக் கருதியவர் நாள்தோறும் வயல்களுக்குச் சென்று நெல்லறுத்து, கூலி வாங்கி சிவபெருமானுக்கு திருவமுது செய்விப்பாராயினார். அவரது செல்வம் யானை உண்ட விளாம்பழம் போல ஒன்றுமில்லாதது ஆனபோதும் சிவனடியார்க்கு உணவு வழங்கும் கடமையைத் தவறாமல் செய்துவந்தார். அவரது மனைவியார் ஆன்மா பெற்றிருக்கும் ஐந்து ஆகிய நமசிவாய மந்திரத்தைச் சொல்லிக்கொண்டே தம் கணவருக்கு துணை நின்றார்.
கணவனும், மனைவியும் செந்நெல்லைப் பெருமானுக்கு அளித்துவிட்டு வீட்டின் பின்புறத்திலுள்ள தோட்டத்திற்குப் போய், இலைக்கறி கொய்து எடுத்து வந்து அதை மட்டும் உணவாக்கிக் கொண்டனர். சில நாட்கள் இப்படியே செல்லவும், பின்னர் அந்தக் கீரையும் கிடைக்காமல் தண்ணீரை மட்டுமே குடித்துக் கொண்டு உயிர் வாழ்ந்தனர். பல நாட்கள் உணவின்றி, உடல் தள்ளாடிய நிலையில் அப்போதும் எம்பெருமானுக்கு செந்நெல்லும், செங்கீரையும் மாவடும் பஞ்ச கவ்வியமும் எடுத்துக்கொண்டு திருக்கோயில் நோக்கிச் சென்றனர். வயல்வெளி வழியாகச் செல்லும்போது மேடு பள்ளமும், குண்டும், குழியுமாக விளங்கிய வயல்வெளியில் நாயனார் தடுமாறி கீழே சாயப்போனார். அப்போது நாயனாரின் மனைவியார் பஞ்சகவ்வியக் கலயத்தை மூடியிருந்த கையினால் அவரை அணைத்தார். பெருமானாருக்குரிய பஞ்சகவ்யம் கீழே விழப்போகிறதே என்ற பதற்றத்தில் நாயனார் கீழே சாய்ந்தார். அப்போது அவர் கூடையில் சுமந்து சென்ற ஆண்டவன் திருவமுது செய்ய வைத்திருந்த செந்நெல்லும் மாவடும் வயல்வெளியின் வெடுப்பில் சிந்தியது. இனி கோயிலுக்குச் சென்று என்ன செய்யப்போகிறோம், அன்றுடன் தம் வழிபாடும், திருத்தொண்டும் முற்றுப் பெற்றதே, இனி வாழ்ந்து என்ன பயன் என்று கருதியவர், மனம் நொந்து அரிவாளை எடுத்துத் தன் ஊட்டியை (குரல்வளையை) அறுக்க முயன்றார். அப்பொழுது எம்பெருமான் அந்த வெடுப்பிலிருந்து எடுத்த மாவடுவைக் கடித்தலால் உண்டாகுகின்ற விடேல் விடேல் என்னும் ஓசையும் எழுந்தது. அதுமட்டுமின்றி அவ்வெடுப்பிலிருந்து திருக்கரமும் உயரத் தோன்றி நாயனார் கரங்களைப் பற்றியது. நாயனார் தன்வசம் இழந்தார். ஊறு நீங்கியது. நாயனாரும், துணைவியாரும் எம்பெருமானின் கருணையை எண்ணிப் போற்றினர். அரிவாளால் கழுத்தை அறுக்கும் கையை சிவபெருமான் கை பிடித்து நிறுத்தியபோது தாயனாரின் பாவங்கள் நீங்கின. சிவன் அருளை எண்ணித் தாயனார் கைகூப்பித் தொழுதார். அடியேனின் அமுதை ஏற்றுக்கொண்ட பரனே போற்றி. அம்மையப்பா போற்றி. நீறு பூசிய நெருப்பு மேனியனே போற்றி, என்றெல்லாம் சொல்லிப் போற்றினார்.
மாசறு சிந்தை அன்பர் கழுத்து
அரி அரிவாள் பற்றும்
ஆசில்வண் கையை மாற்ற
அம்பலத்து ஆடும் ஐயர்
வீசிய செய்ய கையும் மாவடு
விடேல் விடேல் என்ற
ஓசையும் கமரில் நின்றும்
ஒக்கவே எழுந்த அன்றே
விடைமேல் தோன்றிய எம்பெருமான், ‘நீ புரிந்த செயல் நன்று. நீயும் உன் துணைவியும் என்றும் நம் உலகில் வாழ்வீராக’ என்றருளினார். அரிவாளால் ஊட்டி அரிந்ததால் நாயனாருக்கு அரிவாட்தாயர் என்ற நாமமும் உண்டாயிற்று. நாயனாரும், அவர்தம் மனைவியாரும் பெறற்கரிய பேறு பெற்றனர்.
அரிவாட்டாய நாயனார் புராணம் சொல்லும் கருத்து
ஊட்டியை அரிய முயன்ற கரத்தை வண் என்று (வலிய) கூறாமல் தனக்கு உணவு இல்லாமல் பட்டினியோடு இருந்தும் எம்பெருமானுக்கு செந்நெல்லும், மாவடும் அளித்த கொடையையே முன்நிறுத்த, ‘வண்’ கை (வள்ளன்மை மிக்க) என்று குறித்த தெய்வச் சேக்கிழார் தெய்வ நலக்கவிதை போற்றுதற்குரியது. நாயனார் வெடிப்பில் வெளிப்பட்ட பெருமானைப் போற்றியது நாமே வழிபாட்டில் நாளும் போற்றிச் சொல்லப் பயன்படுத்துவோம்.
வைகலும் உணவு இலாமை
மனைப் படப்பையினிற் புக்கு
நைகரம் இல்லா அன்பின் நங்கை
கைஅடகு** கொய்து
பெய்கலத்து அமைத்து வைக்கப்
பெருந்தகை அருந்தித் தங்கள்
செய்கடன் முட்டா வண்ணந்
திருப்பணி செய்யும் நாளில்.
பொதுவாகவே தவம் செய்யும் முனிவர்கள் முற்றும் துறந்து காடு சென்று தண்ணீரையும், காற்றையுமே உணவாக உண்டு வாழ்வாராம். ஆனால் இல்லறத்திலே வாழ்ந்தும் கணவனும், மனைவியும் எம்பெருமான் மீது கொண்ட பக்தியால் தண்ணீரும் காற்றுமே உணவாக உண்டு தவ வாழ்க்கையை மேற்கொண்டனர்.
இச்சிவபுண்ணியத்தால் மிகச் சிறப்புற்றவர் இவ்வரிவாட்டாய நாயனார். இவர் தமது பெருஞ்செல்வமெல்லாம் இழந்து, மிகக் கொடிய வறுமை எய்தியும், கூலிக்கு நெல் அறுப்பவர் ஆகி, தாம் கூலியாகப் பெற்ற செந்நெல் எல்லாம் சிவனுக்கு அமுது செய்வித்து, கார் நெல்லைக் கொண்டு தாம் பிழைப்பு நடத்தி வரும் நாளிலும் சிவபெருமானுக்குத் தாம் செய்யும் தொண்டினைக் கைவிடாமல் இருப்பதே சிவனடியார்களின் தன்மை என்பதையும் விளங்கச் செய்கிறார்.
அடியனேன் அறிவு இலாமை கண்டும்
என் அடிமை வேண்டிப்
படி மிசைக் கமரில் வந்து இங்கு
அமுது செய் பரனே போற்றி
துடியிடை பாக மான
தூயநற் சோதி போற்றி
பொடியணி பவள மேனிப் புரி
சடைப் புராண போற்றி.
திருச்சிற்றம்பலம்
