அப்படித்தான் (சிறுகதை)
முனைவர் த. ஆதித்தன்
இணைப்பேராசிரியர்,
அரிய கையெழுத்துச் சுவடித்துறை,
தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.
கல்லூரியில் முதுகலையை முடித்துவிட்டு பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் படிக்கவேண்டும் என்ற கனவு நிறைவேறியதில் மட்டற்ற மகிழ்ச்சி குமாருக்கு. குமாரின் ஆய்வு மீதான ஈடுபாடும், அற்பணிப்பும் நெறியாளருக்குப் புரிந்திருந்தது. நெறியாளரின் வழிகாட்டலையும் மீறி, வாழ்க்கைக் குறித்த தேடலும், ஆய்வுத் தேடலும் குமாரை அடுத்தநிலைக்கு நகர்த்திச் சென்றன. தனது எதிர்காலத்தைக் குறித்து பெரிய நம்பிக்கையும் கனவும் அவனுக்குப் பெரும் ஊக்கிகளாக அமைந்தன.
நெறியாளர் இவனது நம்பிக்கை, கனவு, அபிப்ராயம் இவற்றிற்கு அப்பாற்பட்டவர். ஆய்வில் சர்வாதிகார மனப்பான்மை வேறு. ஒருவேளை திமிரோ என்னவோ? ஆய்வில் ஐயமேற்படும் போதெல்லாம் நூலகம் தேடியோ, இணைய நூல்களைத் தேடியோ நகர்வானே தவிர, நெறியாளரை அணுகுவது குறைவு. ஏனோ அவர் தொடர்பு இயல்பாய் அமையவில்லை அவனுக்கு.
அன்று பிற்பகல் ஆராய்ச்சி நெறிமுறைகள் தேர்வு. துறை ஆய்வு மாணவர்கள் அறையில் படித்துக் கொண்டிருந்தான். பாடத்தில் ஐயம் தோன்ற நெறியாளர் அறையை எட்டிப் பார்த்தான். அவர் ஏதோ எழுதிக்கொண்டிருந்தார். ஆய்வுக் கட்டுரையோ அல்லது அதற்கான தயாரிப்பாகவோ இருக்கலாம். மூத்த மாணவர்கள் புத்தகங்களையும், தரவுகளையும் தகுந்த முறையில் அவரிடம் வழங்குவதுபோல் இருந்தது. அவர் முகம் தீவிரமாக இருந்தது. புன்னகையோ, மகிழ்ச்சியோ தென்படவில்லை. சில அடிகள் நகர்ந்து பேராசிரியரின் அறை வாசல் பக்கம் சென்றான். அவர் இவனைப் பார்த்துவிட, “வணக்கம் சார்” என்றான்.
“ம்… வணக்கம். மதியம்தான தேர்வு”
“ஆமாம்”
“உள்ள வா …. படிச்சிட்யா? ”
“ஆமா சார்”
“எக்சாம் முடிஞ்சி வரும்போது, இந்த சீட்ல இருக்கிற புத்தகங்களை லைப்ரரியில இருந்து எடுத்துக்கிட்டு வந்துடு” என்றபடி ஒரு காகிதத்தைக் கொடுத்தார்.
“சரிங்க சார்”, வாங்கிக்கொண்டு சென்றுவிட்டான். ஐயம் எதுவும் கேட்கவில்லை.
*******
தேர்வறையை விட்டு வெளியே வந்ததும் செல்போனைப் பார்த்தப்படியே நடந்த அவனது கால்கள் அவனை அறியாமலேயே விடுதிநோக்கி சென்றது. அப்படியே விடுதி அறைக்குச் சென்றதும் முந்தயநாள் விழித்திருந்து படித்தசோர்வும் களைப்பும் அவனைக் கண்ணயரச் செய்துவிட்டது. அவன் வேறு உலகத்திற்கே சென்றுவிட்டான்.
திடீரென விழிப்பு வந்தது. அறையின் வெளியே மாணவர்கள் இரவு உணவிற்காக உணவக அறை நோக்கி செல்வதைப் பார்த்தான். அவனும் கை, கால், முகம் கழுவிக் கொண்டு உணவுக்குச் சென்றான். வந்ததும் மீண்டும் தூங்கினான்.
*******
மறுநாள் விடுதி அறையில், இருந்து குமார் துறைக்குப் புறப்பட்டான். தோளில் மாட்டியிருந்த புத்தகப்பையில் வெளியே நீட்டிக் கொண்டிருந்த காகிதத்தைப் பார்த்ததும் அதிர்ந்தான். அது அவனது நெறியாளர் நேற்றுக் கொடுத்த சீட்டு. நேற்றுமாலை நூலகத்திற்குச் சென்று நூல்களை எடுத்துக்கொடுக்க மறந்ததை எண்ணி கலங்கினான். விடுப்பு எடுத்துவிட்டு விடுதியிலேயே இருந்து விடலாமா என தோன்றியது. அடுத்த நிமிடம் சரி என்ன நடந்திடும் போகலாம் என்றபடி நடக்கத் தொடங்கினான். குமார் செல்லும் முன்பே பேராசிரியர் அறையில் இருந்தார். இவன் அவர் அறைவாசலை அடைந்ததும், “வணக்கம் சார்” என்றான்.
“ம்… வணக்கம், இதுல ஒண்ணும் குறைச்சல் இல்ல… ” என்றபடி முறைப்போடு பார்த்தார்.
“சார் உடனே நூலகம் போறேன்…. புக்க எடுத்திட்டு வாறேன்….. ”
“ஓ நாங்க, நீங்க நினைக்கறபடி மாறிடனும்”
“சார் வந்து…… ”
“வந்து போயி….. வந்துனு போயி…. முதல்ல இங்கிருந்து போ…போ…”
வேகமாக வெளியேறிய குமார் ஆய்வு மாணவர்கள் அறைக்குச் சென்றான். தனது புத்தகங்களை எல்லாம் பைக்குள் எடுத்து வைத்தபடி ஏதேதோ கத்தத் தொடங்கினான். “நான் எதுக்கு இருக்கேன்னே தெரியல…. பிடிக்கல…. இந்த கேம்பசே பிடிக்கல….. ”
அவனது சத்தம் அறையைத் தாண்டியும் கேட்குமளவு வீரியமாகியிருந்தது.
தொடர்ந்து கத்தினான்.. “ஏன் பி.எச்.டி முடித்தாதான் உலகத்துல வாழ முடியுமா? எப்படியும் வாழலாம்”.
சகமாணவன், “ஏண்டா கத்தற…. நம்ம சார் எப்பவுமே அப்படித்தானடா…. அவர் இயல்பே அப்படித்தான்டா….”
எப்படியும் இருந்திட்டு போகட்டும். நான் போறேன். என்றபடி வெளியேறிக் கொண்டிருந்தான். எதிர்ப்பின் குரூரம் அவன் முகத்தில் படர்ந்திருந்தது.
ஆய்வு மாணவர்கள் அறையில் நடந்ததை மூத்த மாணவன் ஒருவன் பேராசிரியரிடம் சொல்லிக் கொண்டிருந்தான். பேராசிரியர் சொன்னார், இங்கேயேவா இருக்க முடியும்…. முடியாது….. முடியாது….. போக வேண்டியதுதான். எல்லாரும்….. ஆனா இங்க இருக்கிற கொஞ்ச நாட்கள்ல படிப்ப முடிச்சிட்டு பேனாதான நல்லபடியா வாழ முடியும்….
“ம்…. இந்த கால பசங்களே இப்படித்தான்”. என்றபடி முன்னால் இருந்த கோப்பை புரட்ட ஆரம்பித்தார்.
“சார் அவன் அப்படிதான். ஆனா, குமார் போறத பார்த்தா வருவானானு சந்தேகமா இருக்கு…” என்றபடி அமைதியாக நின்றான்.
“என்ன யோசிக்கிறே”
“ஒன்னுமில்ல சார்”
“கல்வி எத சொல்லிக்குடுக்குதுனு தெரியல. எது எப்படி நடக்கனுமோ அது அது அப்படி அப்படி நடக்கும் நீ போ…”
வெளியே வந்த மாணவன் சுற்றிலும் பார்த்தான். இயல்பாய் அனைத்துப் பணிளுகம் நடந்து கொண்டிருந்தன.
