முனைவர் நா. தீபா சரவணன்
உதவிப்பேராசிரியர்
குமரகுரு பன்முகக்கலை அறிவியல் கல்லூரி, கோவை.

“மிஸ் எதுக்கு இப்படி அவசரமா ஓடிவர்றீங்க நாங்க நிக்கறோம். இப்பதா டீ குடிச்சோம் மெதுவா வாங்க.” என்றான் கிளீனர் மணி.

“நீங்கதான மிஸ் மொத ஆளா ஏர்றீங்க லேட்டானா யாருக்குத் தெரியப்போகுது` என்றார் டிரைவர் ஆறுமுகம்.

அகிலா ‘வணக்கம்’ சொல்லி விட்டு வேகமாக ஏறி உட்கார்ந்தாள். கைக்கடிகாரத்தைப் பார்த்தாள். மணி 7.25. இளம் சந்தன நிறத்தில் பள்ளி வேன் தனக்காகக் காத்திருப்பது தூரத்திலிருந்து பார்க்கும்போதே தெரியும். அன்றைக்கெல்லாம் இப்போது இருக்கற மாதிரி பள்ளி, கல்லூரி வாகனங்கள் மஞ்சள் நிறத்தில் தான் இருக்கவேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. எந்த நிறத்தில் வேண்டுமானாலும் இருக்கலாம். அதற்குப்பிறகு வெள்ளை, மஞ்சள், இளநீலம் என மூன்று நிறங்கள் பள்ளி கல்லூரிப் பேருந்த்திற்கென ஒதுக்கப்பட்டிருந்தது. அதற்குப்பிறகுதான் தற்போதுள்ள மஞ்சள் நிறம் அமலுக்கு வந்தது. அகிலாவுக்குத் திருமணமாகி இது மூன்றாவது வருடம். ஒரு பெண் குழந்தை. ஆனால் பார்த்தால் வயது தெரியாது. துடியலூர் வழியிலுள்ள சரோஜா பப்ளிக் பள்ளியில் கணினி ஆசிரியராகப் பணி புரிகிறாள். புதூருக்கு அடுத்த பெருமாள் கோயிலில் வீடு. பள்ளிப்பேருந்து சரியாக 7.15க்கு பெருமாள் கோயிலுக்கு வந்துவிடும். அகிலா தான் முதலில் ஏறுவாள். சாலையைக்கடந்து வந்து ஏறவேண்டும். எதிரே உள்ளத்தெருவில் கொஞ்சதூரம் உள்ளே நடந்துசெல்ல வேண்டும். அகிலாவிற்குத் தானொரு பள்ளியாசிரியர் என்ற கர்வம் பார்த்தெல்லாம் யாரிடமும் பழகத்தெரியாது. அவள் ஏறி இரண்டு ஸ்டாப்பிற்கு யாரும் ஏறுவதில்லை. மற்ற மாணவர்கள் ஏறும்வரை மணியிடமும், ஆறுமுகத்திடமும் சகஜமாக பேசிக்கொண்டு வருவாள். ஒருமுறை வீட்டில் முறுக்கு செய்தார்கள் என்று இருவருக்கும் கொண்டு வந்து கொடுத்தாள். அவர்களுக்கு அப்படி ஓர் ஆனந்தம்.
“இப்படியெல்லாம் யாரும் எங்ககிட்ட பேச மாட்டாங்க மிஸ். எங்கள டிரைவர், கிளினர் அப்படினுதா பழகுவாங்க. சில டீச்சருக பேருந்து ஏறும்போது நான் அவங்க பையெல்லா வாங்கிப் புடிக்கணும். அதிகாரத்தோடயே நடந்துக்குவாங்க. நீங்க வித்தியாசமா இருக்கீங்க மிஸ் ” மணி சொல்லுவான்.

பள்ளி இருக்கிற எடத்தில சரியான அளவு போக்குவரத்து வசதியில்லை. அதனால ஒன்னு அவரவர் வாகனத்திலதா வரணும். இல்ல, பள்ளி வாகனம் இதுதான் வழி. ஆசிரியர்களுக்குப் பேருந்தில் இலவசம். நல்ல வசதியான பள்ளிதான். கோவையில் உள்ள தொழிலதிபர்களின் குழந்தைகள் அனைவரும் அங்குதான் படிக்கிறார்கள். இருபது ஆண்டுகளுக்கு முன்பே குதிரைப் பந்தயத்திற்கு செல்வதற்கானப்பயிற்சி, நீச்சல்,ஸ்கேட்டிங் போன்றவைகளையும் கற்றுக்கொடுத்த ஒரே பள்ளி.

அடுத்த இரண்டு நிறுத்தம் தள்ளி இரண்டு மாணவர்கள் ஏறுவார்கள் அடுத்த நிறுத்தத்தில் இரண்டு மாணவர்களும், இரண்டு ஆசிரியர்களும். அதில் ஒரு மாணவியின் அம்மாவும் அதே பள்ளியில் ஆசிரியர்தான்.

பேருந்து அமைதியாக இருந்தது. ஆறுமுகமும், மணியும் எதுவும் பேசவில்லை. மாணவர்களும் ஆசிரியர்களும் ஆங்கிலத்தில் பேசிக்கொண்டனர். தமிழில் பேசினால் அசெம்பிளியில் ஃபைன் கட்ட வேண்டுமே.

மாலை திரும்ப வரும் போதும் அகிலாதான் கடைசியில் இறங்குவாள். அனைவரும் இறங்கிவிட்டபிறகு. அகிலா மட்டும்தான் பேருந்தில் இருந்தாள். மணி கதவைச் சாத்திவிட்டு அப்போதுதான் சீட்டில் வந்து உட்கார்ந்தான்.

“மிஸ் நீங்க ஒருத்தங்கதா மிஸ் எங்களயெல்லாம் மதிச்சு பேசறீங்க. மத்தவங்கெல்லா எங்கள கேவலமா தா நெனக்கறாங்க. எங்களுக்கும் இன்னக்கி மீட்டிங்கில பசங்ககிட்டயோ, டீச்சர்ஸ்கிட்டயோ நாங்க பேசக்கூடாதுனு சொல்லியிருக்காங்க. இந்தாங்க மிஸ் எங்க தோட்டத்தில காய்ச்சது. சாப்பிடுங்க.” என்று அவன் பைக்குள்ளிருந்து ஒருசீப்புப் பழத்தை எடுத்து நீட்டினான். அகிலா அதில் ஒன்றை எடுத்துக்கொண்டாள்.

“அப்படியா! தோட்டமெல்லா இருக்கா அப்புற ஏ இந்த வேலக்கி வர்றீங்க.”

“சாகுபடிய நம்பீட்டிருந்தா குடும்பத்த ஓட்ட முடியாது. தோட்டத்தில தென்னமரந்தா வெச்சிருக்கோம். தண்ணி இல்லாமயே கெடக்கு. அம்மா, அண்ணா, அண்ணினு எல்லாருமே அந்த வேலக்குப் பழகினவங்க. அவங்களுக்கே அங்க வேலயக்காணொ நாமளாவது வெளில வந்து நாலு காசு சம்பாரிச்சு கொடுத்தா ஏதோ ஒத்தாசயா இருக்குமேனுதா வர்றோம்.”

“மிஸ். வேலக்கி சேத்தும்போது பேருந்த மட்டும் கவனிச்சாப் போதும்னு சொன்னாங்க. இப்ப கொஞ்சம் கொஞ்சமா, தோட்டவேலை, சாப்பாடு பரிமாற்ர வேல. தட்ட எடுக்கறதுனு ஒண்ணு ஒண்ணா சொல்றாங்க மிஸ்.”

பேச்சு திசைமாறியது. அப்பாடா நாம எறங்கற எடம் வந்திடுச்சு.

“சரி வர்றேண்ணா, வர்றேன் மணி”. என்று இறங்கி விட்டாள்.

“நாளைக்கிப் பாக்கலா மிஸ்” என்றான் மணி.

அகிலாவுக்கும் கோவை புதிதுதான். உடுமலைப்பேட்டைக்கருகில் ஒரு சிறு கிராமம் தான் அவளுடையது. மரங்கள் நிறைந்த வயல்வெளிகள், கிணறு, வீதியெங்கும் மரம் செடிகொடிகள், ஒவ்வொரு வீட்டிற்கும் பெரிய பெரிய வாசல் என செழிப்பான இயற்கை சூழலில் வளர்ந்த அவளுக்கு இங்கு எல்லாத்தெருவும் ஒரே மாதிரியாகத் தெரிந்தது. எதுவழியாகச் சென்றால் எப்படி வெளியில் வருவது என்று தெரியாத அளவிற்கு எங்கும் நெருக்கமாக இருக்கும் கட்டிடங்கள். பெரிய கோலம் போட இடமில்லாத அளவிற்கு சின்ன வாசல். மரங்களற்ற வறட்சியான தெருக்கள், குழாயடியில் வரிசையாக வைக்கப்பட்டிருக்கும் குடங்கள். எட்டு அடிக்கு ஒரு ஹோட்டல், அல்லது ஒரு பேக்கரி. வலம் வந்து வழிபடக்கூட இடமில்லாத கோயில்கள் என அனைத்துமே அவளுக்குப் புதிதாகத்தான் இருந்தது. நகரத்தில் சாமிக்குக்கூட இவ்வளவு இடம் இருந்தால் போதுமோ என மனதில் எண்ணிக் கொண்டாள்.

அவள் பேருந்திலிருந்து இறங்க வேண்டிய நிறுத்தத்தின் பெயரும் பெருமாள் கோயில் பஸ்ஸ்டாப் தான். அவ்வளவு பெரிய ஊருக்குப் பேருந்து நிறுத்தத்தின் பெயர் பெருமாள்கோயில். ஆனால் கோயிலோ பெட்டிக்கடை அளவிலிருந்தது. கோயிலுக்கு அமைதியைத் தேடிப் போவார்கள். ஆனால் இந்தப்பெருமாளோ பாவம் வண்டிகளின் பேரொலியைக்கேட்டு சாலைநடுவில் இருக்கிறார். எப்படியும் பெருமாள் உறங்க இரவு 12 மணி ஆகிவிடும். அப்போதுதான் சாலையில் வாகனங்கள் குறைந்து அமைதியாகும். இரவு ஏழு மணிக்கெல்லாம் ஒருவரும் வீட்டை விட்டு வெளியே வராத அமைதியாக இருந்து பழகிய அவளுக்கு, இரவு பதினொரு மணியாகியும் சாலைகளில் வாகனங்களின் ஓயாத இரைச்சல், மனிதர்களின் நடமாட்டம், சாலையோரக்கடைகள், வண்டிக்கடைகளில் உணவிற்காக நிற்கும் கூட்டம் என அனைத்துமே ஆச்சரியமாகத்தான் இருந்தது. கிராமத்தில் எட்டு மணிக்குமேல் வெளியே வரவே பயமா இருக்கும். ஒன்பது மணிக்கு வர்ற கடைசி பேருந்தில நாலுபேரு இருந்தாலே பெரிசு.

திருமணமான புதிதில் இரவு ஒன்பது மணிக்குத்தான் இருவரும் சாப்பிட்டுவிட்டு ஒரு ரூபாய் காயின் போட்டு அம்மாகிட்ட பேச மெயின் ரோட்டுக்கு வருவார்கள். வீட்டுத்தெருவிலிருந்து மெயின் சாலை வர பத்துநிமிடம் நடக்கவேண்டும். பதினைந்து வருடங்களுக்குமுன்பு லேன்ட்லைன் ஃபோன் மட்டும்தானே வீடுகளில் இருக்கும். திருமணமாகி வந்த பெண்ணிற்கு பிறந்தவீட்டை தொடர்புகொள்ள தற்போது உள்ளதுமாதிரி அலைபேசி, வீடியோ இதெல்லாம் கிடையாதே. பேருந்திலிருந்து இறங்கி நடந்துகொண்டிருந்த அகிலா தானாகவே சிரித்துக்கொண்டே நடந்துகொண்டிருந்தாள். இந்த பெருமாள் கோயில் நிறுத்தத்தை நினைக்கும்போது அவளுக்கு சுவாரஸ்யமான நிகழ்வு ஒன்று நினைவுக்கு வந்தது.

‘ஏப்ரல் பத்தாம் தேதி எனக்கும் வினோதுக்கும் திருமணம் நடந்தது. திருமணத்துக்கு முன்னால உடுமலைப்பேட்டையில வீட்டுக்குப் பக்கத்தில உள்ள ஒரு பள்ளியில வேலைக்குப் போயிட்டிருந்தே. எட்டாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்புவரை பாடம் நடத்தனும். மார்ச்சில கல்வியாண்டு முடிந்து ஏப்ரல் மாசத்திலதான் திருமணமானது. திருமணமாகி அஞ்சாவது நாள் பத்தாம்வகுப்புத் தேர்வு விடைத்தாள் திருத்த நியமனக்கடிதம் வந்துச்சு. சரி அவரும் வேலைக்கு போயிட்டார்னா வீட்டில சும்மாதானே இருக்கோம். அத்தையு நானும் எவ்வளவு நேரம் பேசிட்டு இருக்கறது. சும்மா இருக்கறதுக்கு பேப்பர் திருத்தறதுக்காவது போலாமேனு போனேன். திருத்தற இடம் சிங்காநல்லூரில இருக்கு. வினோத் காலைல ஆபீசுக்குப் போகும்போது சிங்காநல்லூர் அரசு பள்ளில விட்டுவிட்டு அப்படியே வேலைக்குப்போனார். முதல் அனுபவம், முதல்நாள் விடைத்தாள் திருத்தற வேல இரவு எட்டு மணிவர நடந்தது. வினோத் சொன்ன அதேவழியில வந்து 1- சி பேருந்தில ஏறனே. வடவள்ளினு போட்டிருந்துச்சு. இந்த ஊர்ப்பெயர பார்த்தாலே சிரிப்பாக இருந்தது. அதென்ன வட. போண்டா பஜ்ஜியெல்லா இல்லயானு தோன்றியது. பேருந்தில கொஞ்சநேரம் கழிந்துதான் டிக்கெட் கொடுக்க வந்தார். பெருமாள்கோயில் ஒன்னு குடுங்க என்று பணத்தை நீட்டினேன்.

“எந்த பெருமாள் கோயில் மா”

அப்போதுதா கொஞ்சம் வயிறு கலங்கியது.

“அண்ணா! எத்தன பெருமாள் கோயில் இருக்குனு தெரியாதுனா பெருமாள் கோயில்னு டிக்கட் வாங்க சொன்னாரு. நான் ஊருக்குப் புதுசு ண்ணா”

“ஏம்மா எந்தக்கோயில்னு தெரியாம எப்படி எறங்குவே?”

அழவேண்டும் போலத்தோன்றியது

போன் கிடையாது. யாரையும் தெரியாது. எங்க எறங்கறதுனு தெரியாது.மூஞ்சி தொங்கிப்போனது

“இல்லண்ணா அவரு வந்து நிக்கறேனு சொல்லி யிருக்கார். முன்னாடி நிப்பாருண்ணா

“ சரி இதோ இவங்க அடுத்த ஸ்டாப்பில எறங்கிருவாங்க. இங்க முன்னாடி டிரைவர்கிட்ட வந்து உட்காரும்மா. எடம் வந்தா சொல்லுமா நிப்பாட்டறே.”

“ம்ம்ம்……..”

தேவையா? இது தேவையா கல்யாணம் முடிஞ்சு அஞ்சு நாள்தாஆச்சு. ஊரும் பழகல, தெருவும் பழகல. அதுக்குள்ள இது தேவயானு எனக்கு நானே திட்டிக்கொண்டே. ஒருவழியா ஒவ்வொரு நிறுத்தத்திலும் வெளியே எட்டி எட்டிப் பார்த்து வினோதைத்தேடினே. ஒரு வழியா பெருமாள் கோயில் ஸ்டாப்பில வினோத் கை காட்ட இறங்கிட்டே’ என நடந்த நிகழ்வை நினைத்துக்கொண்டு மனதிற்குள் சிரித்தவளாய் நடந்தாள். அவள் வீட்டிற்கு 10 நிமிடங்கள் நடக்கவேண்டும். வடிவக்கா வழியில பார்த்து “என்ன வேல முடிச்சு வர்றியா?”

“ஆமாக்கா நீங்க எங்க கா கோயிலுக்கா?”

“ஆமாப்பா இன்னக்கி சங்கடஹர சதுர்த்தி அதுதா விநாயகருக்கு மால கொடுத்திட்டுக் கும்பிட்டு வர்றலானு போயிட்டிருக்கே. இன்னக்கி கொஞ்சம் சீக்கிரமா வந்திட்டியோ”

“இல்லக்க எப்பவும் வர்ற நேரந்தா சரி வர்றே கா” என்றபடி நடந்தாள். சரி என்று தலையசைத்துவிட்டு அவளும் நடந்தாள். அந்தத் தெருவைச்சுற்றி வினோதோட சொந்தக்காரங்க நெறயபேரு இருக்காங்க. கொஞ்சநேரம் சாப்பிட்டு வெளியில காத்தாட நடக்கலாமுனு பாத்தா எந்தத் தெருவுக்குப்போனாலும் ஏதாவது ஒரு சொந்தக்காரங்க பேச புடிச்சுடுவாங்க. பேசி பேசியே நேரமாகிடும். அப்பறம் நடக்கவே முடியாது. வீட்டுக்குத் திரும்ப வந்துவிட வேண்டியதுதா. அதுவும் ஒருவகையில நல்லாதா இருக்கு நம்மள சுத்தியும் நம்ம சொந்த பந்தங்கல்லா இருக்கறது. ஆனா இந்த தலமுற புள்ளகளுக்கு இதெல்லா எங்க புடிக்குது. அவங்களுக்கு தனியா இருக்கறதுதா புடிச்சிருக்கு. சொந்தபந்தங்க கூட சேர்ந்திருக்கறதையே தொல்லையா நெனக்கறாங்க. அதைவிட காமெடியான மற்றொரு விசயமும் நினைவுக்கு வந்தது. திருமணம் முடிந்து ஐந்தாவது நாள் தொடங்கி மூன்று நாட்களுக்குள் விடைத்தாள் திருத்தும் பணி முடிஞ்சது. ஏற்கனவே நேர்முகத்தேர்வு முடிந்து ஒரு பள்ளியில் தேர்வாகியிருந்தே. அடுத்த பத்துநாட்களுக்குள் அந்தப்பள்ளியில் வேலைக்கு வரச் சொல்லியிருந்தாங்க. கோடைக்கால விடுமுறை என்பதால் ஆசிரியர்கள் மட்டுந்தா வேலைக்கு வந்திருந்தாங்க. வீட்டில கல்யாணத்துக்காக போட்ட பந்தல் கூட இன்னும் கழட்டவில்லை. எனக்கு அந்த பந்தல் தான் வீட்டிற்கு அடையாளம். எனக்குப் பொதுவாகவே இடங்கள், மனிதர்களோட முகம், இவங்கள எங்க சந்திச்சோங்கறதெல்லாம் நெனவில வெச்சிருப்பதில கொஞ்சம் ஞாபகசக்தி குறைபாடுதான். அன்றும் காலை எப்போதும் போலப் பள்ளிக்குக் கெளம்பிட்டே. வரும்போது எப்போதும் போலப் பேருந்து இறங்கி 10 நிமிடம் நடந்தாயிற்று. வீடு வரவேயில்லை. அவளுக்குச் சந்தேகமானது. தெரு மாறி வந்து விட்டோமோ. வீட்டைக்காணோம். அப்போதுதா பின்னால அத்தையோட குரல் கேட்டது.

“ம்மா அகிலா எங்க போறே? வீடு இங்கே இருக்கு.” அகிலா வீட்டைக்கடந்து செல்வதைப்பார்த்து பக்கத்து வீட்டுக்காரம்மா அத்தைகிட்ட சொல்ல. சமையல்கட்டிலிருந்து அத்தை வெளியில ஓடி வந்து கூப்பிட்டுருக்காங்க.

“அத்தெப் போகும்போது பந்தல் இங்கெ இருந்துச்சே. அதுக்குள்ள யாரு கழட்டனது? நான் பந்தலத்தா அடையாளமா வெச்சிருந்தே”. அத்தைக்கு சிரிக்கறதா வருத்தப்படறதானு தெரியல. சிரிச்சாங்க.

“என்னம்மா நீ இப்படி இருக்கே.வா உள்ள வா. இதுதா வீடு.”

பக்கத்து வீட்டுக்காரம்மா வேற பாத்துகிட்டு இருக்காங்க. அவமானமாப் போச்சு.

இப்படி இந்த ஊருக்கு வந்து அடைந்த சின்ன சின்ன நிகழ்வுகளையும், வேடிக்கையான அவமானங்களையும் எண்ணிச் சிரித்துக்கொண்டே நடந்தாள்.

அடுத்த நாள் பள்ளிவிட்டு வரும்போது எப்போதும் மூன்றாவது சீட்டில் உட்கார்ற அகிலா அன்று படிக்கட்டு ஏறினதும் வலப்புற சீட்டில் உட்கார்ந்தாள். ஒவ்வொரு மாணவர்கள் இறங்கும்போதும் மணியும் படிக்கெட்டிலிருந்து இறங்கி ஏற வேண்டும். சிறு பிள்ளைகள் என்றால் தூக்கி இறக்கி விடவேண்டும். பெரிய பிள்ளைகள் என்றால் அவர்களின் புத்தகப்பையை இறக்கி வைக்க வேண்டும். புத்தகப்பைதான் கிலோ கணக்கில பாரமா இருக்கிறதே. ஆனால் பணக்காரப்பள்ளில படிக்கறதனால என்ன ஒரு நல்ல காரியம்னா. வண்டிலிருந்து எறங்கனதும் வேலக்காரங்க காரவெச்சிட்டு நிப்பாங்க. இதே மிடில்கிளாசு புள்ளகனா கழுத சொமக்கறமாதிரி அத சொமந்துட்டுதா போகுதுக. அதுக சாப்படற சாப்பாடு இந்த மூட்டயத் தூக்கறதுக்கே போதாது.

ஒரு ஸ்டாப்பில மட்டும் நாலு பிரைமரி மாணவர்களும் மூன்று பெரிய மாணவர்களும் இறங்க வேண்டும். மணி ஒவ்வொருவரையாக இறக்கி விட்டுக்கெண்டிருந்தான். ஒன்பதாம் வகுப்பு வினிதா இறங்கும்போதுதான் அகிலா மணியைக் கவனித்தாள். தயங்காமல் கேட்டுவிடவேண்டும் என்றெண்ணினாள். அனைவரும் இறங்கும்வரை காத்திருந்தாள். இவள்தானே கடைசியில் இறங்குவாள். பேருந்தில் யாரும் இல்லாதபோது கேட்டுவிட்டாள்.

மணி வெறும் சிரிப்பை மட்டும் விடையாகக்காட்டி நிறுத்திவிட்டான்.

“அதைத்தா மிஸ் நானும் இவங்கிட்ட பல தடவ சொல்லீட்டே. சொன்னா காதிலயே வாங்கிக்க மாட்டீங்கறா என்றார் ஓட்டுனர் ஆறுமுகம்.

நாளக்கு இப்படி இருக்கக்கூடாது என்று கூறிவிட்டு இறங்கி விட்டாள்.

அடுத்த நாள் மணியைப பார்த்ததும் கேட்டாள்.

“இனியும் நீ மாறலியா மணி. இவ்வளவு தடவ ஏறிஎறங்கற கால்ல ஏதாவது ஆணியோ கண்ணாடியோ குத்திச்சுன்னா அதுக்கப்பறம் டாக்டர்கிட்ட போய் செலவு செய்யறதுக்கு இப்பவே ஒரு செருப்ப வாங்கிப்போட வேண்டியதுதானே. ஏ செருப்பு போட மாட்டேங்கறே”

“ இப்படியே பழகிடுச்சு மிஸ். இந்தமாச சம்பளம் வந்தரட்டு மிஸ் கண்டிப்பா வாங்கிடறேன்.”

அடுத்தநாள் அகிலா 50 ரூபாய் எடுத்து தனது பேகில் வைத்தாள் 2004-ல் 50 ருபாய்க்கு மதிப்புதான். சம்பளமே 3000/- ரூபாய்தான். செருப்பு வாங்க மணிக்கு பணம் கொடுக்கலாமா? ஏதாவது தப்பாப்போயிடுமோ. அவங்களே தோட்டமெல்லாம் வெச்சிருக்காங்க. காசு கொடுத்தா ‘ஏங்க மிஸ் நாங்கென்ன அவ்வளவு கேவலமானவங்களான்னு’ சொல்லிடுவானோ? ஒருவேள பிராண்டடு செருப்புதா போடுவானோ? அம்பது ரூபாய்க்கு என்ன செருப்பு வாங்கறதுன்னு யோசிப்பானோ?. வினோத்கிட்டயாவது ஐடியா கேட்கலாம்னு பாத்தா.

“ இப்போதா நீயே பள்ளில போய் சேந்திருக்கே அதுக்குள்ள ஒனக்கு எதுக்கு இந்த வேண்டாத வேல. காசு போகுமேனு சொல்லல. கொடுத்து கேவலப்படாதேனு சொல்றேனு.’ ஒரே பதிலா சொல்லிடுவாரு. எடுத்த பணத்த பேகிலேயே வைத்துவிட்டாள்.

அன்று பள்ளி அரையாண்டுத்தேர்வின் கடைசி நாள். அடுத்த நாளிலிருந்து கிறிஸ்துமஸிற்காக பத்து நாள் பள்ளி விடுமுறை.

விடுமுறை முடிந்து முதல் நாளே அகிலா பேருந்த தவறவிட்டு ஆட்டோவில் போனாள். எப்போதுமே அப்படித்தானே வேலக்குபோறவங்களுக்கு சனி ஞாயிறு முடிஞ்சு திங்கட்கிழம வந்தாலே ஒரு சின்ன சோம்பேறித்தனமாயிடும் கிளம்ப, இதில பத்துநாள் லீவுமுடிஞ்சு போறது. அந்த சோம்பேறித்தனம்தா பேருந்து வர்ற நேரத்துக்கு அவளால கிளம்ப முடியவில்லை. பள்ளி முடிந்து திரும்ப வரும்போது பார்த்தா டிரைவரும் கிளினரும் வேறு யாரோ. ஒரு வேள பேருந்து மாத்தி விட்டிருப்பாங்களோ?. அவள் எதுவும் பேசவில்லை. தொடர்ந்து இரண்டு நாட்களும் வேற டிரைவரும் கிளினரும்தான் வந்தாங்க. அவங்களுக்கு என்னாச்சுனு கேட்கலாமா? வேண்டாமா? ரொம்ப நேரம் தயங்கினாள். ஆனால் கேட்கவில்லை.

பள்ளில டிரைவர், கிளீனர் பத்தியெல்லாம் யாரும். பேசமாட்டாங்க. மூணாவது நாள் காலையில வினோத் பள்ளியில இறக்கிவிட்டாரு. ஆபீஸ் வேலயா அந்தப் பக்கம் யாரையோ பார்க்க வேண்டி இருந்ததால இறக்கிவிட்டாரு. திரும்பப்போகும்போது பேருந்தில வரசொல்லிட்டாரு. வரும்போது பேருந்தில வந்தா. ஆறுமுகம் வந்திருந்தாரு. பேருந்திலிருந்து எல்லோரும் இறங்கும் வரை காத்திருந்து கேட்டாள்.

“எங்க ரெண்டு நாளா ரெண்டு பேத்தயும் காணோம். மணி இன்னக்கு வரலியா லீவா? “

“மிஸ் ஒங்களுக்கு விஷயமே தெரியாதா?

தெரியலையே. சொல்லுங்க. மணிக்கு வேற வேல கெடச்சிருச்சா? இல்ல கல்யாணமா?”

“மணி எறந்திட்டா மிஸ்.நம்மளவிட்டு போயிட்டா மிஸ். அவ எறந்து நேத்தயோட எட்டு நாளாச்சு. அதுக்குதா நானும் லீவு போட்டிருந்தே”

“நெஞ்சடைத்தது ஐயோ என்…..னா……ச்சு”

“நாங்க டிரைவர் கிளீனர் எல்லாரும் சேர்ந்து லீவில கேரளாவில நெல்லியாம்பதிங்கற ஒரு எடத்தில வாட்டர் ஃபால்சுக்குப் போயிருந்தோம். மணியும் வந்திருந்தா. எல்லாரும் குளிச்சு வெளையாண்டுட்டு திரும்பிட்டோம் மிஸ்.வர்ற வழில குளம் மாதிரி ஒரு எடத்தில வித்தியாசமா ஒரு கலர்ல தாமரப்பூ பூத்திருந்துச்சு.”

அதுக்குள்ள ஒருத்தர் வெளியில டூவீலர்ல பேருந்துக்கு நேரா வந்தாரு. ‘பாருங்க எப்படி வர்றானு’ என்று பேச்சு எங்கோசென்றது.

“சொல்லுங்கண்ணா என்னாச்சு.?”

“அந்த தாமரப்பூ பாக்கறதுக்கு சுத்திலும் நீலநிறத்தலயும் நடுவுல எளஞ்செவப்பாவும் இருந்துச்சு. நாங்க அத பாத்திட்டு பேசாம வந்திட்டோம். கடைசில அவ நம்ம கோகுலண்ணாகூட வந்திட்டிருந்தா. அவனுக்கு அந்த பூவ பறிக்கணும்னு ஆச. எல்லாருமே சொன்னோம் வேண்டா பாற வழுக்கும் வழுக்கும்னு. இருண்ணா வந்தடறேனுட்டு அந்தப்பாறமேல நின்ன பூவ எட்டிப்புடுங்கனா. பாற ஈரமா இருந்திருக்கும்போல செருப்பில்லாம வெறுங்கால்ல போனதால காலு வழுக்கிடுச்சு. பொதக்குழில போய் விழுந்திட்டான் மிஸ். கையப்புடிச்சு இழுக்க இழுக்க உள்ளே இழுத்துட்டுப்போயிடுச்சு. திடீர்னு மழவேற வந்திருச்சு. Fire Service வந்து மூணு மணிநேரம் போராடித்தான் வெளில எடுத்தாங்க. அதுக்குள்ள அவன் போய்ட்டா மிஸ்.” ஆறுமுக அண்ணாவின் குரலும் இடறியது. ஆம்புலன்சில வீட்டுக்குக்கொண்டுபோகும்போது நைட்டுமணி ரெண்டாயிடுச்சு மிஸ். பாவம் அவனோட அம்மாவ நெனச்சாதா கவலயா இருக்கு. அவ அப்பா எறந்தபின்ன இவனுக்காகதா அந்த அம்மா தோட்டவேலைசெஞ்சு கஷ்டப்பட்டிட்டு இருந்தாங்க. அவ அண்ணனும் வீட்டுக்கு அவ்வளவுக்கா எதுவும் கொடுக்க மாட்டாரு. இப்போதா இவ வேலக்குப்போக ஆரம்பிச்சதுக்கப்பறம் கொஞ்சம் நிம்மதியா இருந்தாங்க. அவங்களுக்குத்தா என்ன சொல்லி சமாதானப்படுத்தறதுனே தெரியல.”

என்ன பேசறதுனு தெரியாம கைக்குட்டையால் கண்களைத் துடைத்தாள் அகிலா

“மிஸ் நாங்க கேரளா போகும்போதுகூட ஒங்களப்பத்தி பேசிட்டு வந்தா மிஸ்.”

கேட்க ஆர்வமாகத்தா இருந்தது ஆனா மனது கனத்தது.

“ அவ சொல்லிகிட்டே இருந்தா மிஸ். ஊருக்குப்போனதும் போய் நல்லொரு செருப்பா வாங்கணுண்ணா. இனியு செருப்புப்போடாம போனா அகிலா மிஸ் கோவிச்சுவாங்க. பாவம் நம்ம மேல இருக்கற அக்கரயிலதான அவங்க இத்தனதடவ சொல்றாங்கனா”

“நா அப்பவே கேட்டே ஏண்டா டூரு வரும்போதே வாங்கிருக்க வேண்டியதுதானேனு. அதுக்கு அவ என்ன சொன்னா தெரியுமா மிஸ். பள்ளி தொறந்து போகும்போது புதுசா போட்டா நல்லா இருக்கு. இப்பவே வாங்கிட்டா பழசு மாதிரி இருக்குண்ணா. வாங்கும்போது ஆத்தாவுக்கு ஒரு செருப்புவாங்கித் தரணு. அதுதா அதயு கூட்டிகிட்டு கடைக்குப்போகணு. அண்ணங்கிட்ட கேட்டுகிட்டே இருந்துச்சு. அண்ண கண்டுக்கடறமாதிரி தெரியல. பாவண்ணா சேத்தில செருப்பில்லாம நடந்து நடந்து காலெல்லா அழுகிக்கெடக்குனு வருந்தினா.

அவளால் கண்ணீரை கட்டுப்படுத்தவே முடியவில்லை.

என்ன சொல்வது. பெருமாள்கோயிலில் வண்டி நின்றது.”

“மிஸ் உங்க ஸ்டாப்” என்றார்

சட்டென்று பையை எடுத்துக்கொண்டு இறங்கினாள். ஆறுமுகத்திடமும் எதுவும் சொல்லவில்லை. கண்களை துடைத்துக்கொண்டு நடக்கத்தொடங்கினாள்.

பையில் வைத்திருந்த ஐம்பது ரூபாயை வெளியில் எடுத்துப்பார்த்தாள்

“ஒரு வேளை ஐம்பது ரூபாய் கூட ஓர் உயிரைக் காப்பாத்த உதவி இருக்குமோ.?”

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.