பல்லழகன் – பகுதி 9
திவாகர்
“சரியா சொல்லறீங்க. இந்த கேஸுலேர்ந்து தப்பிக்கற வழிக்காக அடிக்கடி தன்னை ரிசர்வ்டு டைப்’ன்னு சொல்லறாரோ என்னவோ..
“அதுவும் கரெக்ட்தான் சார்..”
“கோமதி..”
“ஸார் நான் கோம்டி சார்..”
“சரி கோம்டிதான். கொஞ்சம் இந்த சுமதி விஷயமும் பாருங்களேன்.. எனக்கு ரொம்பவே ஏதோ இங்கே இடிக்குது. அந்தப் பொண்ணு மேலே சந்தேகம் இன்னும் தீரலே.. கல்யாண் ரொம்பவே இரக்கம் காட்டி சப்போர்ட் பண்றார்..”
கல்யாண் நெளிந்தான்.. “அது அப்படியெல்லாம் இல்லே சார்..”
கோம்டிக்கு கோபமே வந்தது.
“யார் சார் இந்த சுமதி.. எனக்குத் தெரியாத விஷயமா இருக்கு.. எனக்கு கல்யாண் இதைப் பத்தி ஒண்ணுமே சொல்லலே..”
“சுமதியை சரியா விசாரிங்கன்னு எனக்கு சிபாரிசு பண்ணதே முரளிதான். காரணம் இல்லாம முரளி எனக்கு இவ பேரைக் கொடுத்திருக்கமாட்டாரு. எதுக்குன்னா அன்னிக்கு சுமதி வீட்டுக்கு உங்க பெரியப்பாவை கார்ல டிரைவ் பண்ணிப் போனதே முரளிதான்..”
குழப்பமாகப் பார்த்தாள் கோம்டி. அவளுக்கு அன்று தான் இன்ஸ்பெக்டரோடு சென்றபோது நடந்ததை விவரித்தான். முடிவில் அவள் எப்படி இந்தக் கொலையில் சம்பந்தப்படுத்தமுடியும் என்று கேள்வியும் எழுப்பினான்.
“ஸார்.. இதைக் கொஞ்சம் தீர்க்கமா யோசிச்சா புரியும். பெரியப்பா எத்தனையோ பேருக்கு இந்த மாதிரி உதவி பண்ணியிருக்கிறார். அதுல ஒருத்திதான் இந்த சுமதி.. இன்னும் உதவி பண்ணக்கூட இல்லே.. அதுக்குள்ளே அவர் போயிட்டார். சுமதியை இதுக்காக எப்படி சந்தேகப்படமுடியும்.?” ஆனால் கோம்டி குறுக்கிட்டாள்.
“நீங்க எதுக்காக அவளுக்கு வக்காலத்து வாங்கற மாதிரி பேசணும்? முரளி சொன்னாருன்னா இதுல ஏதோ விஷயம் இருக்குன்னுதான் அர்த்தம். அவளோட அட்ரஸ் கொடுங்க.. நானே போய் விசாரிக்கிறேன்..”
“கரெக்ட் கோமதி.. சாரி….. கோம்டி.. உங்களுக்கு சுமதி அட்ரெஸ் மெஸ்ஸேஜ் பண்ணிடறேன்.. பார்த்துட்டு வந்து எனக்கும் விவரம் சொல்லுங்க.. இவரோட பார்வை வேற.. உங்க பார்வை வேற இல்லையா..”
அதே சமயத்தில் ஒரு அனாதை ஆசிரமம்.. பாலபாலிகா என்று பெயர்ப் பலகை இருந்தது. அருகே தன் ஸ்கூட்டரை நிறுத்தி விட்டு உள்ளே நுழைந்தான் சுந்தர். இவன் அங்கு நுழைந்ததைப் பார்த்துவிட்டு அவன் பின்னே தொடர்ந்து வந்த ரவியும் தன் வண்டியை வெளியேயே நிறுத்தி விட்டு சுந்தர் உள்ளே சென்றதைப் பார்த்து பின் தொடர்ந்தான். சுந்தர் அங்கே உள்ளே சென்றதும் அங்குள்ள ஒரு வயதானவரிடம் பேசிவிட்டு அவர் அழைத்துச் செல்ல உள்ளே சென்றான்.
இங்கே போலிஸ் ஸ்டேஷனிலிருந்து கோம்டியும் கல்யாணும் கிளம்பினார்கள். காரில் போகும்போது முதலில் ரவிக்கு ஃபோன் செய்தாள். ஸ்பீகர் வாய்ஸ் இல் ஃபோனை வைத்துக்கொண்டாள். அதனால் காரை டிரைவ் செய்துகொண்டிருந்த கல்யாணும் கேட்கமுடிந்தது. சாலை ஓரத்தில் இருந்த ரவி ஃபோனை எடுத்தான்.
‘கோம்டி! நீ சொன்னது சரி, இப்போ இங்க பாலபாலிகா ஆசிரமத்துக்குள்ளே சுந்தர் நுழைஞ்சிருக்கான். இனிமேதான் நான் உள்ளே போய் விசாரிக்கணும். அவனுக்கு இங்கே என்ன வேலைன்னு தெரியலை.’
‘நான் எதிர்பார்த்தேன் ரவி.. சரி, நான் அவனுக்கு ஃபோன் பண்றேன்.. நீ அவன் வெளியே வந்தப்பறம் உள்ளே நுழைஞ்சு எதுக்கு அவன் வந்தான்னு கேட்டுக்கோடா.. அவன் உன்னை பாக்கக்கூடாது..’
‘சரி.. கல்யாண் என்ன பண்றான்..?’
‘ம்ம்.. பல்லைக் காட்டிக் காட்டி வெறுப்பேத்திண்டிருக்கார்.. வைடா ஃபோனை..’
‘நீதானே ஃபோன் பண்ணே.. நீயே ஆஃப் பண்ணு..’
சுந்தருக்கு ஃபோன் போட்டாள்..
“மிஸ்டர் சுந்தர்! சாரி.. ஆஃபீஸ்லதானே.. உங்களை டிஸ்டர்ப் பண்றேனா?”
“நிச்சயமா ஆஃபீஸ்லதான்.. ஆஃபீஸ்லதான் இருக்கேன்.. .. எனக்கு நிறைய வேலை பாக்கி இருக்குன்னு சொன்னேனே.. இருந்தாலும் சீக்கிரம் சொல்லுங்க.. என்ன விஷயம்..?
‘எனக்குத் தெரியும் சார்.. இப்போதானே உங்களை அங்கே பார்த்தேனே.. மீடிங்க் கீடிங்க் போயிட்டீங்களோன்னுதான் கேட்டேன்.’
‘ஆமாங்க.. உங்க கால்னவுடனே மீடிங்க்லேர்ந்து நடுவுல வந்திருக்கேன். சீக்கிரம் சொல்லுங்க.. திரும்பவும் நான் மீடிங்க் போகணும். எல்லோரும் காத்துண்டிருக்காங்க.. என்னோட ப்ரெஸெண்டேஷன் வேற இருக்கு. என்ன விஷயம்?”.
“சார்.. உங்களை கேக்க மறந்துட்டேன்.. உங்க அங்கிள் கொலை செய்யப்பட்ட அன்னிக்கி நீங்க ஊர்ல இல்லே.. முரளி ஃபோன் செய்த உடனே நாலு நாலரை மணி நேரத்துல ஸ்பாட்டுக்கு வந்துட்டீங்க இல்லையா? சுந்தர் நீங்க எந்த ஊர்லேர்ந்து புறப்பட்டு வந்தீங்க?”
அவன் கோபம் அவன் குரலில் தெரிந்தது. “என்னங்க என் மேல ஏதாவது சந்தேகமா? டைரக்டா சொல்லுங்க.. நான் நேரே கல்யாண்கிட்டயே பேசறேன்.. இல்லே போலீஸ்கிட்ட சொல்லிக்கிறேன்.. இல்லே ஒரு வக்கீல் மூலமா கூட பேசுவேன்.”
“ஐய்யய்யோ.. என்னங்க நீங்க இவ்வளோ கோபப்படறிங்க.. விவரம் சேகரிக்கறச்சே நான் சரியா கலெக்ட் பண்ணணுங்க.. இப்போ நான் முடிவுல கல்யாண்கிட்டே ரிப்போர்ட் தரணும்.. மிஸ்டர் சுந்தர்னு வரச்சே நான் சரியா எழுதணும்.. கொலை நடந்த அன்னிக்கி விவரம் கேட்டவுடனே சுந்தர் இந்த ஊரிலேர்ந்து இத்தனை நேரத்துல புறப்பட்டு சம்பவ இடத்துக்கு வந்தார்னு சரியா எழுதணுமா இல்லையா.. இன்ஸ்பெக்டர் மோகன் அதான் அந்தப் போலிஸ் இன்ஸ்பெக்டர் கூட இப்பல்லாம் எங்கிட்டே சும்மாச் சும்மா விவரம் கேட்கிறார். கொஞ்சம் கோஆபரேட் பண்ணுங்க சுந்தர். “
போலீஸ் இன்ஸ்பெக்டர் எனும் வார்த்தையைக் கொஞ்சம் அழுத்திச் சொல்கிறாள் கோம்டி. அது வேலையும் செய்தது. சுந்தரின் குரல் சாந்தமாக வந்தது.
“இப்போ நான் அன்னிக்கு எங்கேயிருந்து கிளம்பி வந்தேங்கிறது வேணும் இல்லையா.. எனக்கு முரளி ஃபோன் பண்ணது ராத்திரி எட்டு மணிவாக்குலதான்.. அப்போ சரியா வைத்தீஸ்வரன் கோயில் மேற்கு வாசல் வீதிலே ஒரு ஓட்டல்ல டிபன் சாப்பிட்டுண்டு இருந்தேன். அப்போ கிடைச்ச செய்தி என்னை உடனடியா கிளம்ப வெச்சது. ராத்திரி அரௌண்ட் பன்னிரண்டரை ஒண்ணுக்கெல்லாம் பெரியப்பா வீட்டுக்கு வந்துட்டேன். இவ்வளவுதான்.. இதுக்கும் மேல ஏதாவது சந்தேகம் இருந்தா கேளுங்க.. நான் மீடிங்க் போகணும்.. ஆனா உங்களுக்குப் பதில்சொல்லிட்டே போறேன். போதுமா..?”
“வைத்தீஸ்வரன் கோயில்ங்கிறது சிதம்பரம் தாண்டினா வரும் இல்லையா?”
“ஆமாங்க.. அன்னிக்கு நான் சிதம்பரம் கூட போயிருந்தேன்.”
“சிதம்பரம் போனீங்களா?” கோம்டி சாதாரணமான குரலில்தான் கேட்டாள்.
“சிதம்பரம்…” என்று சொல்லிவிட்டு அவன் குரல் நிதானித்தது.. “ஆமாங்க.. மத்தியானம் லஞ்ச் டைம்ல அங்க சாமி தரிசனம் பண்ணிட்டு அப்படியே இங்க வைத்தீஸ்வரன் கோயில் போயிட்டு கூடவே..”
“நாடி ஜோஸ்யம் பார்த்துட்டு டிபன் சாப்பிடப் போயிட்டீங்க.. அப்போ கால் வந்தது.”
“எப்படிங்க நாடி ஜோஸ்ய விஷயம்லாம் தெரிஞ்சுண்டீங்க.. கரெக்ட்தான்..”
“ரொம்ப தேங்க்ஸ் மிஸ்டர் சுந்தர்.. இப்போ நீங்க உங்களோட மீடிங்க் போங்க.. அப்புறமா தேவைப்பட்டா கூப்பிடறேன். வெச்சுடட்டுமா?”
அவன் திரும்ப பதில் சொல்லாமல் கட் செய்தது அவர்களுக்குத் தெரிந்தது.
“எங்கேயோ அனாதை ஆசிரமத்துலேர்ந்து பேசிண்டு தன்னோட ஆஃபீஸ் மீடிங்க்னு சொல்றான் கல்யாண்.. கேட்டீங்களா.. இந்த சுந்தர் சொல்றது எல்லாமே சுத்தப் பொய்! இவன் சிதம்பரத்துக்குப் போனது மட்டும் உண்மை. சிதம்பரத்துல அந்த ரஞ்சிதாவைப் பார்த்திருக்கிறான் என்பது என் ஊகம்…”
சட்டென காரை பிரேக் போட்டு சாலைப் பக்கத்தில் நிறுத்தினான் கல்யாண். அவன் குரலில் ஆச்சரியம் அதிகமாக இருந்தது.
“எப்படி சொல்லறீங்க கோம்டி?.. சுந்தர் இந்தக் கொலைல இன்வால்வாகி இருப்பாங்கிறிங்களா?”
“அது எனக்கு எப்படித் தெரியும்? அதைக் கண்டுபிடிக்கவேண்டியது போலீஸ். ஆனா அவங்களாலே சிதம்பரத்துல விலாசம் இருந்தும் ரஞ்சிதா’ங்கறது யாருன்னே கண்டுபிடிக்கமுடியலியே..”
“அப்போ நீங்க மட்டும் எப்படி சிதம்பரம் விஷயத்துல அவன் பொய் சொல்லறான்னு சொல்லறீங்க?..
“அவன் எங்கிட்டே பேசின விதம் கேட்டீங்களா? சிதம்பரம்ங்கிற வார்த்தையை ரொம்ப கவனமா நிதானிச்சு யூஸ் பண்ணான். ஒருவேளை அவன் சிதம்பரத்துக்குள்ளே போகலே, பைபாஸ்ல வைத்தீஸ்வரன் கோயில் ரோட்ல போனேன்னு சொன்னான்னு வெச்சுக்குங்க.. நானோ இல்லே போலீஸோ சிதம்பரத்துல ரஞ்சிதாவைப் பிடிச்சுட்டோம்னா இவனுக்கு டேஞ்சர் இல்லையா.. அவ நிச்சயமா இவன் பேரைச் சொல்லுவான்னு அவன் பயந்திருக்கலாம். ஆனா சரியா யோசிக்காம தப்பா ஒரு வார்த்தை சொல்லிட்டான் உங்க சித்தி பையன்.”
“என்ன தப்பு?”
“லஞ்ச் டைம்ல கோயில்ல போயி தரிசனம் பண்ணிட்டு’ன்னு சொன்னான் பாருங்க.. அது தப்பு. கரெக்டா பன்னெண்டு மணிக்கு சிதம்பரம் கோயில் க்ளோஸ் பண்ணிடுவாங்க. ஆனா இவன் சிதம்பரம் போனதும் அந்த பத்து லட்சம் பணத்தைப் பட்டுவாடா பண்ணியதும் உண்மையா இருக்கலாம்.. நாம நிறைய இன்னும் இதுல கண்டுபிடிக்கணும், இதை நாம் இப்போதைக்கு இன்ஸ்பெக்டருக்கு சொல்லவேணாம்!”
“ஹைய்யோ.. உங்களுக்கு எப்படித் தெரியும் கோயில் சரியா க்ளோஸ் பண்ற டைம்லாம்..”
“நாங்க ஒருவாட்டி பன்னிரெண்டு மணி வாக்குல நடராஜர் தரிசனத்துக்காக போயிருக்கோம். கோயில்ல ‘மூடற நேரம்..’னு சொல்லிட்டு தரிசனத்துக்கு கடகடவென ஓடச் சொன்னாங்க.. இல்லேன்னா சாயங்காலம் நாலு மணி வரைக் காத்திருக்கணும்.. நல்ல வெய்யில் காலத்துல அந்தக் கோயில் வடக்கு வாசல்லேர்ந்து கனகசபை வரைக்கும் வேகவேகமா ஓடிப்போயி பன்னெண்டு மணி அடிக்கறதுக்குள்ள நடராஜரைப் பார்த்துட்டோம். அப்போதான் பூஜை முடிஞ்சு நல்ல அலங்காரத்துல கற்பூர தீபாராதனைப் பார்த்தது எங்க நெஞ்சுல அப்படியே பதிஞ்சுருக்கு. தரிசனம் பண்ணிட்டு இப்படி வந்தோம். சொன்னபடி கோயில் சபையை மூடிட்டாங்க.”
“நீங்க கச்சிதமா சொல்லறதையெல்லாம் பார்த்தா எனக்கு எல்லார் மேலயும் சந்தேகம் வருது கோம்டி. சரி, நீங்க சொல்றபடியே இன்ஸ்பெக்டர்கிட்டே அப்புறமா சொல்லிக்கலாம். ஆனா எங்க பெரியப்பா இந்த பண மேட்டருக்கெல்லாம் முரளியைத்தான் அதிகம் ஹெல்ப் எடுத்துக்குவாரு, முரளியை நீங்க விசாரிங்க.. நான் விசாரிச்சா அவன் என்கிட்டே அழுதுடுவான், கொஞ்சம் வெகுளி. வெளிப்படையா பேசுவான்,, அவனை நான் போய் ஏதாவது கேட்டா என்னை சந்தேகிக்கிறாயாடா’ ன்னு நேரடியா கேட்பான். அத்தோட போலீஸ் கூட அவன் பேருல ரொம்ப சந்தேகம் காட்டுது. ஏன்னா அவன் மட்டும்தான் பெரியப்பாவுக்கு ரொம்ப க்ளோஸ். அதனாலெல்லாம் அவனை சந்தேகப்படலாமா? ஆனா, சுந்தரை நேரா பார்த்து நானே கேட்கிறேனே.. உண்மை எனக்குப் பாதி தெரியுங்கிறப்போ மீதியையும் அவன் சொல்லியாகணும் இல்லையா.. கொலைக்கு இந்த விஷயம் சம்மந்தமில்லேன்னா நிச்சயமா அவன் நடந்ததைச் சொல்லுவான். இல்லேன்னு முழு பூசணிக்காயை மறைச்சான்னா நாம் போலீஸ் வெச்சே டீல் பண்ணுவோம்.. என்ன சொல்லறீங்க.”
“ஆனா இன்ஸ்பெக்டர் மோகன் சிதம்பரம் அட்ரஸ்ல யாரும் அப்படி ஒரு பேருல இல்லேன்னு சொல்றதையும் நாம கணக்குல எடுத்துக்கணும். சுந்தரை நீங்க விசாரிக்கவேணாம்.. உங்கள்ட்ட பேசறச்சே உரிமை எடுத்துக்கலாம். ஆனா நானே பேசறேன். ஒருவேளை இந்த ரஞ்சிதாங்கிற பேரை வெச்சு சுந்தர் ஏதேனும் கோல்மால் பண்ணியிருந்தா?.. ஒரு பேச்சுக்குச் சொல்லறேன். உங்க பெரியப்பாவையே பண விஷயத்துல சுந்தர் மோசம் பண்ணியிருக்கமாட்டாருன்னு என்ன நிச்சயம்? கொலைக்கு இது சம்பந்தப்படாதுதான், ஆனா உங்க பெரியப்பா ஏன் இப்படி இதுதான் கடைசி.. இனிமே கேக்காதேங்கிற மாதிரி எழுதணும்?”.
“அப்போ இது ஒரு தனிக் கேஸா இல்லே மாறும். நோ நோ இப்படி நாம திசை மாறக்கூடாது.. இப்போ நம்ம ரூட்டே கொலை ஏன் நடந்தது. யார் கொலைகாரன்.. அவ்வளவுதான். ஒருவேளை ஏதாவது பணமோசடியை சுந்தர் எங்க பெரியப்பாகிட்டே பண்ணான்னா அது அவங்க தலையெழுத்து. எப்படி வேணா போகட்டும் அவங்க..”
எரிச்சலுடன் சொன்னவனைப் பரிதாபமாகப் பார்த்தாள்.
“அப்படியே பணமோசடின்னு தெரிஞ்சாதான் இந்த மாதிரி வேற எங்கயாவது பண்ணியோ அல்லது இவரு ஏமாந்தோ அந்த வஞ்சம் தீர்க்கறதுக்காக இவரை கொலை பண்ணியிருக்கலாம். சுந்தர் ரஞ்சிதா மேட்டர் ஒரு சின்ன லீட் விஷயம். இதை இப்படித்தான் டீல் பண்ணனும் கல்யாண்.”
அவன் ஒப்புக்கொள்வதைப் போல தலையாட்டினான். “சரி, இப்போ நாம சுந்தரைப் பார்க்கப் போகணுமா? அவன் ஆபீஸ் மீடிங்க்னு அடாவடியா பொய் பேசினானே.. நம்மளைப் பார்க்க வருவானா?”
“சுந்தரை இன்னிக்கு விட்டுப் பிடிக்கலாம். ரவி இப்பவும் அவனோட பின்னாலதான் இருக்கான்? அவனைப் பத்தி ரவி என்ன விஷயம் கொண்டு வர்ரான் என்பதைப் பொறுத்துதான் நாம் டீல் பண்ணியாகணும். நாம ஏதோ சந்தேகப் படறோம்னு அவனுக்குப் புரிஞ்சு போச்சு. அவன் ஃபோன் நம்பரை ட்ராக் பண்ணனும். எங்கிட்டே பேசினதலேர்ந்து அவன் யார்கிட்டயெல்லாம் பேசினான்.. நாளைக்குக் காலை வரைப் பேசப் போறான்னு விவரம் எனக்குத் தெரியணும். இந்த ட்ராக்கிங்க் விஷயத்துல எல்லாம் எனக்கு ஹெல்ப் பண்றவர் ஒருத்தர்கிட்ட மெஸேஜ் அனுப்பிக் கேட்கிறேன்.. அவர் எனக்கு இதுமாதிரியெல்லாம் நிறைய உதவி செய்யறவர்தான். பொதுவா இந்த விவாகரத்துக்காக எங்கிட்டே நிறைய பேரு வரச்சே இவர்தான் குறிப்பிட்ட கல்பிரிட் ஃபோனையெல்லாம் ட்ராக் பண்ணி கேஸை ரொம்ப சீக்கிரம் முடிச்சுக் கொடுக்க உதவியிருக்கார்.”
“உங்க பிரதாபங்களையெல்லாம் கேட்கக் கேட்க பிரமிப்பாதான் இருக்கு. பேசாம பல் கிலினிக் மூடிட்டு நிரந்தரமா பெரிய அளவுல இன்வெஸ்டிகேடிவ் ஏஜென்ஸி வெச்சுடலாம். இந்த கேஸ் முடிச்சுக் கொடுங்க.. நானே பெரிய ஆஃபீஸ் வெச்சுக் கொடுக்கறேன்.”
அவர்கள் வீடு இருக்கும் வீதி முனையிலேயே வண்டியை நிறுத்தச் சொல்கிறாள்.
“எதுக்குங்க? நீங்க எனக்காக வேலை பண்ணறிங்க.. உங்களை உங்க வீட்டுல இறக்கி விடறதுதான் முறை.”
“இந்த முறை கிறை எல்லாம் வேண்டாமே.. எங்க வீட்டுல நான் உங்களுக்காக வேலை பண்றது அவங்களுக்குக் கொஞ்சம் கூட பிடிக்கலே.. நீங்க என்ன பண்ணுங்க உங்க பெரியம்மா பையன் முரளிக்கு ஃபோன் பண்ணி சாதாரணமா வீட்டுக்கு வரச் சொல்லுங்க.. நானும் அப்போ வரேன். ஓகே.. பை.,”
“பை.”. என்று சொல்லிவிட்டு தன் எத்துப்பல்லு தெரிய சிரிக்கிறான்.
தொடரும்
