வந்துதானே ஆகணும் (சிறுகதை)
முனைவர் த. ஆதித்தன்
இணைப்பேராசிரியர்,
அரிய கையெழுத்துச் சுவடித்துறை,
தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.
E. mail. Kumaritathithan@gmail.com
இராமன், ஜோசப், பாயிஸ் மூவரும் மீண்டும் ஒரே நிறுவனத்தில் பயில்வோம் என நினைக்கவில்லை. மாநிலத் தலைநகரின் பழமையான கல்லூரியில் முதுகலை ஒன்றாகப் படித்தார்கள். விடுதியில் ஒரே அறை நண்பர்கள். இரண்டு ஆண்டுகள் முடிந்ததும் தங்களது ஊர்களுக்குச் சென்று விட்டனர். இராமன் குமரியைச் சார்ந்தவன் ஜோசப்புக்கு வேலூர். பாயிஸ் கோவையைச் சார்ந்தவன்.
மீண்டும் தமிழகத்தின் மையப்பகுதியில் அமைந்த பல்கலைக்கழகத்தில் ஒரே துறையில் முனைவர் பட்டம் பயில சேர்ந்துள்ளதை எண்ணும் போது வியப்பு ஏற்பட்டது. மிகவும் நெகிழ்ச்சியாக உணர்ந்தனர். நல்ல முறையில் பட்டம்பெற இது வழிவகுக்கும் எனவும் மகிழ்ந்தனர்.
இவர்கள் ஒற்றுமையாகப் பயில்வதைப் பார்த்து அனைவரும் ஆச்சரியப்பட்டனர். இராமன் தென் எல்லையைச் சார்ந்த வைதீக வழிபாட்டில் நம்பிக்கை உள்ளவன். ஜோசப் இன்னொரு எல்லையைச் சார்ந்த கிறிஸ்த்தவன். பாயிஸ் வடமேற்கில் வாழும் இசுலாமியன். மூவரும் விடுதியில் தங்காமல் பல்கலைக்கழகத்தின் அருகே தனியாக வாடகைவீட்டில் தங்கினர். சென்னையில் பயின்றவர்களுக்கு இவ்விடம் அவ்வளவு வசதிபடவில்லை. இவ்விடம் புதிதாக நகரமாக அறிவிக்கப்பட்டிருந்தாலும் கிராமியச் சூழல் நிறைந்ததாக இருந்தது.
ஒரு விடுமுறைநாள் மாலை வேளையில் பல்கலைக்கழகத்தின் பின்புற சாலையோரம் தள்ளுவண்டிக் கடையில் மூவரும் பாணிபூரி சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். இராமன் பூரியுள் விடப்பட்ட இரசத்தைத் துளிகூட கொட்டாமல் சாப்பிடும் லாவகத்தை ஜோசப்பும், பாயிசும் வியந்து, அதேபோல தாங்களும் செய்ய முயன்று கொண்டிருந்தனர். இருந்தாலும் வாயை மூடும்போது துளிரசமோ, மசாலாவோ உதடுகளைத் தாண்டி வெளியே எட்டிப்பார்த்துவிடுகின்றது.
ஏற்கனவே பாணிபூரி சாப்பிட்டுக்கொண்டிருந்த ஒரு மாணவன் இவர்களையே பார்த்துக்கொண்டிருந்தான். இவர்களிடம் பேச முயல்வதுபோல் தெரிந்தது. ஜோசப் அவனது முகத்தைத் திரும்பி பார்க்கவும் பேசினான்.
“சென்னையில் உங்க காலேஜ்ல போன வருசம் நடந்த பன்னாட்டுக் கருத்தரங்குல நானும் கலந்துகிட்டேன். இங்க நம்ம பல்கலைக்கழகத்துல முதுகலை இறுதியாண்டு படிக்கிறேன். பேரு ராமசாமி.”
“அப்படியா…. எங்க தங்கியிருக்க?” என்றான் பாயிஸ்.
“விடுதியில தான்”
“சொந்த ஊரு எது?” என்றான் இராமன். அதற்கு பக்கத்தில் இருபது கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஊரைச் சொன்னான். உடனே ஜோசப்,
“வீட்டில இருந்தே வரலாமே. ஏன் விடுதியில தங்கியிருக்கிற?”என்றதற்குக் கிடைத்த பதில் அதிர்ச்சியளித்தது.
“பார்க்கலாம்.” என்றபடி அவர்கள் கலைந்து சென்றாலும், ராமசாமி ‘தான் ஒரு மாணவர் அமைப்பின் நிர்வாகப் பொறுப்பில் இருப்பதாகவும், விடுதியின் பின்புறச் சாலையில் சென்றால் தாம் சார்ந்த அமைப்பின் இயக்க அலுவலகக் கிளை இருப்பதாகவும், அவர்களின் வழிகாட்டுதல்படியே விடுதியில் தங்கியிருப்பதாகவும்’ கூறியது அவர்களின் காதுகளில் ஒலித்துக் கொண்டேயிருந்தது.
ராமசாமி ஒருநாள் நண்பர்கள் மூவரையும் விடுதிக்கு அழைத்தான். பார்க்கும் போதெல்லாம் கூப்பிட்டு நட்பு பாராட்டினான். தொடர்ந்து அழைப்பதால் பார்த்து வரலாம் என ஒருநாள் விடுதிக்குச் சென்றனர். வரவேற்ற ராமசாமி
“நீங்க எப்படியும் இங்க வந்துதானே ஆகணும் என்றான். அதுகுறித்து எதுவும் ஆராயாமல் நட்பு பாராட்டினர் மூவரும். விடுதி மாணவர்கள் பலரும் தேடிவந்து பேசினர். மரியாதைகாட்டினர். தலைநகரில் இவர்களும் விடுதி மாணவர்களாக இருந்தவர்கள்தாம். அங்கு இப்படியெல்லாம் பார்த்ததில்லை. விடுதி முற்றத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். மாணவர்கள் வருவதும் இவர்களிடம் பேசிவிட்டு செல்வதுமாக இருந்தனர். அப்பொழுது ராமசாமி சொன்னான்,
“இவங்க எல்லோரும் அறிவுத்தளத்துல இயங்குறவங்க.” என்றதோடு அவர்களின் எண்ணவோட்டங்கள் குறித்தெல்லாம் எடுத்துரைத்தனர்.
இராமனுக்கு அவன் சொல்வதற்குப் பின்னால் ஏதோ தீர்மானம் இருக்கிதோ, வன்மம் இருக்கிறதோ அல்லது வேறு ஏதோ உணர்வு பொதிந்திருக்கிறதோ என தோன்றியது. இத்தகைய உரையாடல், சந்திப்பு அவனுக்குப் புது அனுபவம். ஜோசப்பும், பாயிசும் இவற்றை பெரிததாக எடுத்துக் கொண்டதாகத் தெரியவில்லை.
….
நண்பர்கள் மூவரும் நூலக வராந்தாவில் அமர்ந்திருந்தனர். தூரத்தில் ராமசாமி சில மாணவர்களோடு பேசிக்கொண்டிருப்பது தெரிந்தது. இராமன் நண்பர்களிடம், “ ராமசாமி ஆபத்தானவனா, தெரியுறான். நாம அவங்கிட்ட இருந்து கொஞ்சம் ஒதுங்கியிருக்கிறது நல்லதுனு படுது”
“ஏன் என்னாச்சு.” என்றான் ஜோசப்.
“செமினார் ஹால்ல சில ஸ்டூடன்ட்ஸ் பேசிக்கிட்டிருந்தாங்க, இவன் வெளிய இருந்து சில அமைப்புகள் கொடுக்கிற அசைன்மெண்டுகள முடிக்கிற கைக்கூலின்னி
நானும் சிலநாள் ரோட்டு பக்கத்துல தோளுல துண்ட போட்டுகிட்டு திரியிற அவன் சார்புள்ள அமைப்பைச் சார்ந்தவங்ககிட்ட பேசிகிட்டு இருக்கிறத பார்த்தேன்”. என்ற இராமனிடம் பாயிஸ்,
“படிக்கிற வயசுல இப்படி வழிமாறிட்டா இளமை வீணாயிடும் என்கிறது இவங்களுக்குப் புரிகிறதுயில்ல. முதல்ல வேலைய தேடணும். அல்லது தொழில்ல இறங்கணும். வீடுகட்டணும், குடும்பப் பொறுப்ப ஏத்துக்கணும். நல்லபடியா வாழ்றதுக்குள்ள வழியப் பாக்கணும். அதவிட்டுட்டு இப்படிதிரிஞ்சா வாழ்க்கை வீணாயிடாது…… நாம எடுத்துச் சொல்வோம்”, என்றவனிடம் வேண்டாம் என இருவரும் தடுத்தனர், காரணம் அப்படி செய்தால் அந்த கும்பல் இவர்களுக்கு எதிராகச் செயல்பட வாய்ப்புள்ளதாக நம்பினர்.
சில நாட்கள் கடந்த நிலையில் ஒருநாள் சில விடுதி மாணவர்களுக்கும், வெளியில் தங்கி பயிலும் சில மாணவர்களுக்குமிடையே சண்டை ஒன்று நடந்தது. அதற்கு ஏதேதோ காரணங்கள் கூறப்பட்டன. ஆய்வு மாணவர்களின் துறைத்தலைவர் அந்த பிரச்சினைக்கான காரணங்களைக் கண்டறிவதற்காக அமைக்கப்பட்ட குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார்.
அன்று மாலை துறைத்தலைவரிடம் இருந்து மூவருக்கும் அழைப்பு வந்தது. சென்றதும் அங்கிருந்த பிற மாணவர்களை வெளியில் அனுப்பினார். அவர்களுள் ராமசாமியும் இருந்தான். செல்லும் போது இவர்களைப் பார்த்து சிரித்தப்படி சென்றான்.
பேராசிரியர் பேசத் தொடங்கினார்.
“விடுதியில நடந்த பிரச்சினை உங்களுக்குத் தெரியும். மாணவர்களுக்காக, அவங்க வசதிக்காக உருவாக்கியிருக்காங்க அந்த விடுதிய. இது இல்லனா எத்தனைபேரு அதிக வாடகை கொடுத்து வெளியதங்கி படிக்கமுடியும். அப்படித்தானே?”
மூவரும் ஒருமித்த குரலில் “ஆமா சார்” என்றனர்.
“உங்களுக்கு ராமசாமியோடு நல்ல தொடர்பு இருப்பது எனக்குத் தெரியும். விடுதி பிரச்சினைக்குப் பின்னால அவனும் இருக்கிறான். உங்களுக்கும் அந்த பிரச்சினைக்கும் எந்த சம்பந்தமும் இல்லைனும் தெரியும். இருந்தாலும் நாளைக்கே விடுதியில சேர்ந்திடுங்க. அதனால பல பலன் இருக்கு.
வெளிய, உள்ளேனு இல்லாம ஒண்ணாயிடுச்சினு ரிப்போர்ட் குடுத்திடலாம். காரணமாதான் சொல்றேன். உங்க ஆய்வை முடிக்கிறதுக்கும் பயனுள்ளதா இருக்கும்”. என்று அழுத்தமாகச் சொன்னார் பேராசிரியர்…
அடுத்த நாள் மூவரும் மூட்டைமுடிச்சுகளோடு விடுதிக்குச் சென்றபோது, விடுதியின் முற்றத்தில் இருந்த மாணவர்களிடம் உத்வேகம் தென்பட்டது. உள்ளிருந்து ஒருகுரல் கேட்டது, ‘மாணவர் ஒற்றுமை ஓங்குக’! என்பதாக. அக்குரல் ராமசாமியுடையது. இராமனின் உள்ளம் இம்முழக்கம் எவ்வகையில் இவர்களின் எதிர்காலத்தைக் கட்டமைக்கும் என்பதைக் குறித்து எண்ணத் தொடங்கியது.
