நீ யோசி (சிறுகதை)

0
1

சுருளி காந்திதுரை

சாரல் மழை இரவு முழுவதும் கொட்டிக் கொண்டே இருந்தது. அந்தியில் வந்த மழையும், விருந்தாளியும் விடியக்காலைப் போகவனு… சொன்னது போல மழை தூரிக் கொண்டே இருந்தது.

அஞ்சுமணிக்கு எழுந்து இருவரும் டீ போட்டுக் குடிச்சிட்டு, “சூரியனின் வருகைக்குக் காத்து இருந்த தாமரை போல” மகளின் வருகைக்காகக் காத்திருந்தார்கள்.

ஆயிரம் சோக ராகம் இருவரின் முகத்திலும் அப்பிக் கிடந்தது. மழை குளுமை வேறு; வீட்டின் முன்பக்கம் இருந்த வாதா பழங்களைக் கொரித்துக் கொண்டே கூக்கு கூக்கு க்கூக்கூ க்கூ எனக் குயில் கூவிக் கொண்டிருப்பது மகிழ்ச்சியாக ஏக்கமாக இல்ல, இது துணைக்கான அழைப்பா? இல்ல ஏதோ ஒன்னா இருக்கும். நமக்கு என்ன தெரியல. குயில் கூக்குக்கூக்குன்னு கூவுது. அதுதான் நமக்கும் தெரியும்.

ஆனா, இனம் புரியாத சோகம் இலையோடிக் கொண்டிருப்பதை உணர்ந்தவர்களால் மட்டுமே உணரமுடியும். புரிந்தவர்களுக்குப் புரியும். உன்னிப்பாகக் கவனித்தால் குயிலோசை வீட்டிச் சுற்றியே பலமாக ஒலித்துக் கொண்டு இருந்தது.

ஆட்டோ வீட்டின் முன் நின்றது. அமுதா சூட்கேஸ், பேக் சகிதமாக இறங்கினாள். அப்பா – ராஜா வேகமாகக் கேட்டைத் திறந்தார்.

என்னம்மா, ஆட்டோவுக்கு காசு கொடுத்திட்டிய்யா.

கொடுத்துட்டேன்ப்பான்னு வீட்டுக்குள் நடந்தாள்.

அமுதாவின் அத்தை வாம்மான்னு பெட்டியையும் பையையும் வாங்கினாள். அமுதா நேர கொல்லப்புறம் போயிட்டு வர, அத்தை பஞ்சு அமுதாவிற்கு காப்பியை இளம்சூட்டில் தந்தாள்.

ஒத்தப் பெண்ணா வளர்ந்தவள். வீட்ல அமுதா வைச்சதுதான் சட்டம். அம்மா, அப்பா இருவரும் மகளின் பேச்சுக்கு மறுப்பு சொல்லாதவர்கள். ஆமாம், போட மட்டுமே தெரிந்தவர்கள். அப்பா, அம்மா இருவரும் அரசுப்பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்கள்.

அவளைக் கருப்புன்னும் சொல்ல முடியாது, சிகப்புன்னும் சொல்ல முடியாது. மாநிறம். அவளின் கண்களுக்கு என்றே இறைவன் கவர்ச்சியும் ஈர்ப்பையும் கொடுத்து இருந்தான். “பரியப்போற நெல் பயிர் எப்படி தளதளன்னு இருக்குமோ” அதைப்போல பொழுது புலரும்போது ஒரு அழகு, உச்சிப்பொழுதில் வேறு, அந்தி மாலை இளம் காத்தும் அதன் அசைவும் பார்த்து முடியாது நெற்பயிரை, அப்படித்தான் அமுதாவும்.

அமுதாவின் வளமையும் செழிமையும் அழகைக் கூட்டியதைக் கேட்க வேண்டியதில்லை. நல்லா படித்தாள். கொஞ்சம் அல்ல நிறையவே கர்வமுண்டு. சும்மா சொல்லக்கூடாது. “வளமான ஓட்டு வாழைப் பொத்திப்போடும் முன்ன அவ்வளவு வாளிப்பாகப் பசுமையா இருக்குமே” அதைப்போல இருந்தாள். கொட்டிக்காரன் வாழை மாதிரியாக கருப்பு அழகில், மதுரம் கூட்டிய கடும் டீ போல இன்னும் அழகாக இருந்தாள்.”

சம்பாத்தியம், படிப்பு, அழகு இவை மூன்று அமுதாவிடம் தூக்கலாக இருந்தது.

அப்பா, இவனா டைவர்ஸ் பண்ணிட வக்கீலப் பாருங்கப்பா. இனிமே நான் ரஞ்சித்தோடச் சேர்ந்து வாழப்போறது இல்ல… மனதுக்குள் இனி சேந்து வாழ்ற எண்ணம் இனிமே வராது.

ஐ ஹேட் யு… ஐ ஹேட் யூன்னு மீண்டும் மீண்டும் சொன்னாள். அவள் பேச்சு உதட்டொலி அல்ல உள்ளத்தில் இருந்து ரஞ்சித்தை உதறித் தள்ள நினைத்தாள்.

டேய், அமுதா நீ போக வேண்டாமிடா? நம்ம வீட்ல இருந்துக்கோ! நம்ம வீட்ல இருடா. இனி அவன்ட்ட போக வேண்டாம்ன்னு அப்பா ஆறுதல் மொழி கூறினார். அவன்கிட்ட எனத்த பெரிச வாழ்ந்த போதும் போதும் உனக்கு.

“டைவர்ஸ்” பண்ணிருவோம்.

அவன் நமக்குச் சரிப்படமாட்டான். அவனுக்கு வாய்கொழுப்புக்கூட… போடாக் கண்ணு குளிச்சிட்டு வந்து சாப்பிட்டுன்னு அப்பனும் அம்மையும் மகளுக்கு ஆறுதல்மொழி சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

அமுதா பயணக்களைப்பு தீரக் குளிக்கப் போய்விட்டாள்.

ராஜாவின் தங்கை பஞ்சு, என்ன அண்ணே, பாவம் அவளே அவசரப்பட்டு வந்துட்டா? புள்ளயிட்ட இப்பிடியாச் சொல்றது. கொஞ்சம் கூட மனச்சாட்சியில்ல. அமுதா என்னம்மா, நடந்தது என்ன சமச்சாரம்ன்னு கேட்டு யார் மேலக் குத்தமின்னு கேட்கறத விட்டுட்டு என்ன அண்ணே, நீ பாட்டுக்க மகக் கோவத்துத் தூவம் போட்டா நல்லாவாயிருக்கும்?

இனிப் போயி புருஷன் வீட்ல இருந்து அமுதா வாழ வேண்டாமா? அவ முடிவு எடுத்த எடுத்ததுதாம்மா.

இந்தாம்மா பஞ்சு, நீ இந்த விஷயத்தில தலையிடாத? உனக்குப் புரியாது. அவுக படிச்சவுக. சட்டம் தெரியும். அவன் பிள்ளைய “பெல்டக் கழட்டி அடிச்சிருக்கான்” தெரியுமா?

அவனச் சும்மா விடக்கூடாதுன்னு “ராஜா குடல் கொதிச்சுப் பேசினார்.” மகள் மீது பாசம்.

தங்கச்சி உனக்குத் தெரியுமில்ல நான் கூட எம்மகள அடிச்சது கிடையாது.

அண்ணன் சொல்லவும். என்ன வார்த்தை அண்ணே நீ பேசுற. உம்பேச்சே சரியில்லயே. பஞ்சு இனி இவுகட்டப் பேசிப் பயனில்லன்னு அமைதியானாள். அவுங்க அவுங்களுக்கு அவுங்க பிள்ளை உசத்தியாப் போச்சு.

அண்ணே, இப்ப உங்களுக்கு எதுவுமே புரியாது. பாசம் கண்ண மறைக்கிது. நியாயத்த சொல்லாம மகளோட சேந்துப் பேசுனா? வாழறப் பிள்ளைய தாய் கெடுத்த கதையாப் பொண்ணு நாளப்பின்ன புருசன் வீட்ல கூடச்சேர்ந்து வாழ்றதா இல்லயா? இனி நம்ம… “வீட்டோட வாழாக்குடியா வைச்சிக்கிறதான்னு” மனதுக்குள் பேசினாள் பஞ்சு.

ராஜா என்ன நினைத்தாரோ தெரியல; தங்கச்சிகிட்ட இந்தாம்மா பஞ்சு இதெல்லாம் உனக்குப் புரியாது. இதப்பத்தி நீ அழுதாக்கிட்டப் பேச வேணாம். நாங்க பார்த்துக்கிறோம். நம்ம காலம் வேற…. இப்ப காலம் வேற…

ஆக்குப்பறைக்குள் போனவள், தன் தோள் பட்டையைத் தடவிப் பார்த்தாள். அவளையும் அறியாமல் கண்களில் நீர் கசிந்தது.

புருசன் அடித்தக் காயத்தின் தழும்பு. தன் இருப்பையும் நினைவுகளையும் சுண்டியிழுத்தது. செத்த நேரம் மனம் கொதித்து அமைதியானாள்.

தன்னை அடிச்சப் புருசனைப் பற்றிய எண்ணம் மனதுக்குள் ஓடிக்கொண்டிருந்தது.

ஆனா மனாப் பயலுக்குக் காட்டிக் கொடுக்காம? அம்மச்சல்லிக்கு பயன் இல்ல. முழுநேரக் குடிகாரன். ஆத்தா அப்பன் சம்பளத்தில் தின்னுட்டு இருந்தவன். எங்கயும் வேலைக்கும் போறதுமில்ல. இப்ப நான் அடிக்கொப்புமில்ல, நுனிக்கொப்புமில்ல. அனாதையா இருக்கோமேன்னு நினைச்சதும். மளமளன்னு கண்களில் கண்ணீர் வழிந்தது.

மனதுக்குள் அண்ணன் மீது இருந்த பிம்பம் கொஞ்சம் கொஞ்சமாக மாறியது. என்ன மனுசன் எல்லாத்துக்கும் சமமாப் பேசுனா அண்ணே… ஊர்ல யாருக்கும் வேண்டாதவன்னு பேர் வாங்காத அண்ணே. இப்படி சுயநலமா யோசிக்கிதே.

இப்ப அண்ணனுக்கு என்ன ஆச்சு.

யார் இன்னாரு மகன் ராஜாவா. படிச்ச பிள்ளைப் பேசுனா நியாயமா இருக்கும்னு ஊரே சொல்லும். அப்படியிருந்த அண்ணன் இன்னைக்கு மகளுக்காக நியாயமில்லாமப் பேசுதுன்னா.

பஞ்சுவாலத் தாங்க முடியல.

மனசு தளும்பின்மேல மையம் கொண்டது. ஆறுமாத வாழ்க்கை அவள் மனதில் வடுவா உறைஞ்சு போச்சு… கணவனிடம் இன்பத்தைக் காட்டிலும் துன்பத்தை அனுபவித்தே துவண்டுப் போனாள்.

பஞ்சு பனங்காக் கறுப்பு, இருந்தாலும் மொகக் கலையானவள். அளவான உயரம், அதுக்கு ஏத்த சதைப்பிடிப்பு. கண்ணு ரெண்டும் மிதக்கிற விழிகள். அந்தப் பருவ வயதில் அவள் அழகிதான். சும்மா சொல்லக்கூடாது. பஞ்சு கறுப்பழகி.

பஞ்சுவின் புருசன் முருகனும் குச்சியாட்டம் வாட்டசாட்டமான ஆள். பகல்ல அவன மாதிரி மண்வெட்டி வேலபாக்க முடியாது. அவ்வளவு கோளாறு புத்தியான ஆளு. என்ன தண்ணியக் குடிச்சிட்டா மட்டும் மருவாதை எதுவும் கிடையாது. மிருகம்தான். இதுலப் பீடி, சிகரெட் வேற என்னான்னு தெரியல. முருகனப் பார்த்ததும் பிடிச்சுப் போச்சு ராஜாவுக்கு. திருமணம் நடந்தது.

“ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள் போனதும்”, பழகின மண்வெட்டி வேலைக்கு தொனயிருப்பது போலத்தான் இருந்தான்.

என்னமோ கழுதைக் கூடுவாரோட கூடி குடிக்க ஆரம்பிச்சுட்டான். நம்ம ஊர்கள்ல இப்ப குடிக்காதவுக யார்னு சுலபமாச் சொல்லிடலாம்.

நம்ம சாமியும் குடிக்கிது. அதுக்காக இப்படியா. மார்நாடு, மடைக்கருப்பன், முன்னோடும் கருப்பு இந்த சாமிகளுக்கு காவக்கொடுக்கணும்னா… படையல் சாராயம்தான்.

ராத்திரி பன்னிரெண்டு மணிக்க மேலாகத்தான் கொடுப்பாக. குடும்பன், வாரியன், ஊர்ல வீடு தவறாம சொல்லிட்டு வந்தாலும், எப்படியும் பத்து அம்பது பேர் சேந்துருவாங்க.

பட்சிக்களுக்கான அரவரம் அடங்கியதும், சுட்டான் வேல ஆரம்பமாகும். நடுச்சாமன் உச்சிப்பொழுது எப்படாக் கழியும்னு இருப்பாக, உச்சிப்பொழுது மாறுனதும்… கருப்பு சாமியாடி புலம்பாமல் இருப்பாரு. என்ன மேடையும் குத்துக்கல்லும் அறுவா, காவல் தெய்வம் தான். நடுச்சாமம் 12 மணிக்கு கொடுத்த வாக்கும், அள்ளி எடுத்த சாம்பலும் வீண் போகாது. மந்தையில இருந்த ஈச்சமரத்தில் பறவைகளின் சத்தம் அடங்கியிருச்சு.

என்ன சாமி வேலையா, எல்லாம் கண் அசைவுமட்டுமே. இந்த மாசம் ரெண்டு சேவ ஏழுப்பாட்டில்… போதும் போதும் ஆளுக்கு ஒரு மடக்கு வரும். ராசா அண்ணா குடிக்க மாட்டார். அவரோட பங்குக் கிடைக்கும்.

சாமி தீர்த்தம்… ரெண்டு பேர் டேய், இது போதைக்கின்னு நினைச்சா… கருப்பன் சங்கப்பிடிச்சிப்பிடுவாரு… ரெண்டு மடக்கு தீர்த்தம்… அவ்வளவே.

அடப் போடாத் தொத்தா இதுல, போதை இருக்காது. என்ன அய்யா சொல்லுறீங்க.

கருப்பன்ட்ட குழியில ஊத்திட்டு சாமியாடி ஒரு மடக்கு குடிச்சா எல்லாத்தையும் அவர் வாங்கிருவாரு… பின்ன சரக்கில்ல என்ன இருக்கப்போது.

நமக்கு பச்சைத்தண்ணி மாதிரியிருக்கும். பேச்சுக்கு இடையில, சேவல அறுத்துக் கருப்பனுக்குக் காவக் கொடுத்து ரெண்டே பேர், வால் ரெக்கை மயித்தப் புடுங்குங்கடா… சேவல் வெரைச்சுட்டா மல்லுக்கட்டி இழுக்கணும்.

ஆளுக்கு ஒரு ரெக்கையா இழுத்தார்கள். என்னப்பா ஒரு கிலோ தேறுமா? டேய் கூடயிருக்கும்டா?

போப்பா ரெண்டும் சேந்து ரெண்டரைக்குக் கொறையாது. இருக்கிற ஆளுக்குச் சரியா வருமா?

டேய், அப்படிச் சொல்லப்பிடாது. கருப்பன் கோபத்தைத் தாங்க முடியாது. தப்பாப் பேசாத?

ஊருக்கே படி அளக்கிறான். நமக்கு அளக்க மாட்டானா? போப்பா அள்ள அள்ளக் குறையாது, தின்ன முடியாது. மிச்சத்தப் பொதச்சுட்டுப் போயிருக்கம்.

இளந்தாரிகள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தார்கள். இதுக்குள்ள ராஜேந்திரன் சேல பக்குவமா துண்டம் போட்டுச் சுள்ளியில் அடுக்குவதில் கைத் தேர்ந்தவர். என்ன இராஜேந்திரா மச்சான் அதுக்குள்ள என்ன அவசரமா?ன்னு…

பன்றி ஈரலச் சேவக் கறியைச் சுடுவதிலும் பக்குவம் பாத்து எடுப்பதிலும் கண்ணப்பனுக்கு தம்பின்னு தான் சொல்லனும். சிவனுக்கேச் சுவைச்சுப் பார்த்துப் படைச்சவன்!

பித்தள தாம்பலத் தட்டுல சுட்டக் கோழிக்கறிய அடுக்கிப்பக்குவமா தூக்கிட்டு வர்றது வரைக்கும், ஒரு சனம் ஓங்கிப் பேசாது.

யார், இராஜேந்திரன் வேல சுத்தமாயிருக்கும், பகிர்வதும் ஆள் பாத்து, மென்னு தின்னம்மிய… பண்டத்தைச் சாமிப் பண்டத்தைக் கீழப்போடாம வாங்கி குழித் தோண்டி மூட ரெண்டு பேர் இருப்பாக… “நாய் நரி பறிக்கக்கூடாது பாரு.”

சாமிக்கு படையல் படைக்க அரிக்கேன் விளக்கு தன் முழுப்பலத்தையும் கூட்டி எரிந்து கொண்டிருந்தது. தளுகைப் போடப்பட்டு இலையில, சுட்ட சேவக்கறிப் பறத்தி வைக்கப்பட்டது. சாமியாடிக்கு பல்லுக்கு பதமா இருக்கிறதாத் தனிய ஈரல் ரெண்டையும் நல்லாச்சுட்டு தனியா எடுத்து வைக்கனும், சின்னப்பூசாரி பழம் தேங்காய் எல்லாம் சகிதமா எடுத்து வைக்கவும், யாரோ பத்தியக் கொளுத்திட்டு இருந்தான்…

எல்லாம் ரெடியா இருக்கு, வடக்குப் பார்த்த கோயில். கிழக்கும், மேற்கும் சனங்க வரிசையா நிப்பாக. முன்னும் பின்னும் போயிட்டு வர கோயில்ல மணி அடிக்க, இப்பிடியாக சாமி தீர்த்தம்மனும், ஊர்ல இருக்கிற பங்காளி மச்சினன் மாமா ரெண்டு பேரும் ஒன்னா உக்காந்து குடிப்பாக. இங்கே பரிமாறப்படுவது சாராயம் அல்ல. கருப்பணின் தீர்த்தம்.

பலருக்கு இந்த இடம் குடிக்க ஆரம்பிச்ச இடமா இருக்கலாம். சிலருக்கு மாதம் மாதம் நடக்கும் வேண்டுதல். கருப்பன் ஆட்டநாளில் குடிப்பது மட்டுமே, வேற எங்கேயும் குடிக்க மாட்டார்கள். என்ன குடிகாரப்பயனு நினைச்சியா? கடவுள் தீர்த்தம் அதுக்காகக் குடிச்சேன்.

இன்னும் பழக்கதைகளும் காரணங்களும் இருக்கு. என்ன ஆளுக்கும் இடத்துக்கும் வேறுபாடுகள் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால், முருகனின் குடிக்கான காரணம் கடினமா வேலைப் பார்க்கிறான். அப்ப அப்ப அலுப்புத் தீரக் குடித்தான். நாளும் ஒரு காரணம், நாளுக்கு நாள் குடியின் தொடர்புத் தொடர்ந்து, பகுதிநேரக் குடிகாரனாக மாறிப் போனான்.

பஞ்சு புருஷன் முருகன், தண்ணியக் குடிச்சிட்டு வந்து போதையில, தார் கம்பு எடுத்து வெளுக்கப் பஞ்சுக்கு உடம்பு எல்லாம் காயமாப் போச்சு.

அங்ஙன இருந்த ஆளுக யார் மறுச்சும் நிக்கலே? அடி, உதை, மிதி, “புடிக்கப் புடிக்க வருமா கோவம் புலுக்கப்பயலுக்கு” அப்படி அன்னைக்கி முருகனுக்கு வந்துச்சு.

எம் புருசன் சின்ன வயசுலயிருந்து ஆட்டு மாட்டோடத் திரிஞ்சப் புத்தி, அது மாதிரியாத் தானே இருக்கும். மக்க மனுசன்னு அனுசரணையாப் பழகுனாக் குணம் வரும். எதுக்கும் நாலு இடத்துக்கு மக்க மனுசர்ன்னு போனாத்தானே, மனுசப்பயலுக்கு பழக்கவழக்கம் தெரியும். பஞ்சு மனசுக்குள் குமைந்தாள்.

அடித்த அடியில் உடம்பு பூராம் தடிச்சுப் போச்சு. மாமியா உதடிக்கிழவி “மஞ்சளும்  நெல்லும் அம்மில வச்சு மைபோல அரைச்சுப் பத்துப்போட்டு விட்டுச்சு…” அடியே பஞ்சு அடிபட்ட இடம் புண்ணாப்போகுமா. இருக்க நெல்லும் மஞ்சளும் பத்துப்போட்டா புண்ணாகாம இரத்தக்கட்டு கறைஞ்சுரும்ன்னு கை வைத்தியம் பாக்கும்.

அவன் கையில, கட்டை மொளைக்கக் கறித்திடீர்ல காக்காக் கொத்தன்னு மனுசி திட்டித் தீர்த்தாள் மகனை. பாவம் கைம்பெண் அவளால் தன் மகளை வேறு என்ன செய்ய முடியும்.

கைம்பொம்பள… இவன வழக்கவே வெகுபாடுபட்டு காலாகாலத்தில கல்யாணம் பண்ணிக் கண்ணழகுப் பார்த்தா. கல்யாணம் முடிஞ்சு ஏழு எட்டு மாசம் ஆச்சு. ஏதாச்சும் புழு பூச்சி உண்டான நாதாரிப்பய மகனுக்கு வம்சம் விருத்தியாகும்ன்னு பாத்தா? நாயி நெதம் விட்டக் கொறைத் தொட்டக் கொறை மறுநாளும் சண்டை, தினந்தோறும் சண்டை.

ஏன்டா, இந்தப் பிள்ளையப் போட்டு இப்பிடி அடிக்கிறீயேன்னு கேட்ட அவுக ஆத்தாவுக்கு நாலு அடி விழுந்துச்சு.

இனி இந்த மனுசன் கூடயிருந்து வாழ்றதுக்கு பிறந்த வீட்ல போயி மாடுமேய்ச்சு, சாணிச்சகதி அள்ளிப்போட்டு பிறந்தவன் காலடியில கிடக்க வேண்டியதுன்னு புருஷன் வீட்டை விட்டுப்புறப்பட்டாள் பஞ்சு.

பஞ்சு புருஷன்ட்டக் கோவிச்சுட்டு போனதும் அவுக வீட்ல கேட்ட கேள்வி மாப்பிள வரல?

குடும்பம்ன்னா சின்னச்சின்ன சண்டைச்சச்சரவு வரும். அதுக்காக அவசரப்பட்டு அப்பன் ஆத்தா இருக்காகன்னு வரக்கூடாது. வாழ்க்கையினாச் சமாளிச்சுப் பழகணும் எங்க அம்மா நிக்கவச்சு கேள்வி கேட்டுச்சு.

அவுக அம்மையிட்டச் சொன்னியா? அவுக வீட்டு ஆளுககிட்டச் சொன்னியா?

எங்க அம்மா கேட்டக் கேள்விக்கு, இங்க ஏண்டா வந்தோம்ன்னு தோனுச்சு. பேசாம்மே அங்கேயே நாண்டுக்கிட்டு செத்து இருக்கலாமோன்னு எனக்கு மனசுக்குள் எண்ணம் ஓடியது.

எதுவும் பேசாமல் வான்னு, பஞ்சு அம்மாவை வீட்டுக்குள்ளக் கூட்டிப் போயி சாக்கெட்டக் கழட்டிக் காட்டிய பின்னதான்… அய்யோ அய்யோ…

என்னடி, இது.

உன் மருமகன் அடிச்சது.

டேய் பெரியவனே, போடாப் புளியங்குளத்தானாக் கட்டியிழுத்துட்டு வாங்கடா?ன்னு எங்க அம்மாப் போட்ட சத்தத்துல எதையோ வீட்டுக்குள்ள எழுதிட்டு இருந்த அண்ணன் வெளிவந்து… என்ன பஞ்சு எப்படா வந்த?

என்னம்மா பிரச்சனை… சண்டையா?

உன்ன ஏம்மா அடிச்சான். நீ என்ன பண்ணுன.

இப்படிக் கேள்வி கேட்க… ஆரம்பிச்சுருச்சு. நான் எதுவுமே பேசல, அவருதான் குடிச்சிட்டு வந்து அடிக்கிறாப்பிள, எந்த விஷயத்தையும் காது கொடுத்துக் கேட்டா தானே. தண்ணியக் குடிச்சிட்டு வந்ததும் சும்மா, எதையாச்சும் பேசிச் சண்டைப் போட்டு அடிக்க வேண்டியது. அத்தை தான் பொறுத்துப் பொறுத்துப் பார்த்துப் போம்மா உங்க வீட்டுக்குன்னு சொல்லிச்சு.

அண்ணே, அதுக்கு நாலு அடி விழுந்துச்சு. அசிங்கம் அசிங்கம்மா பேசுறாரு?

உம் ஊருக்குள்ள அக்கம் பக்கம் யாரும் வந்து புத்திமதி சொல்லலயா?

யாரு முன்னால வருவாக. குடிகாரப்பயட்ட? பஞ்சு சொன்னதும்.

கண்ணத்தில பளார்ன்னு ஒரு அரை விழுந்தது என் முன்னாடியே இப்படிப் பேசுனா, அங்க எம்புட்டுப் பேசியிருக்க மாட்ட. பொம்பளப்பிள்ளைக்கு வாய் அடக்கம் வேணும். தெரியாதான்னு சொன்ன அண்ணே… இப்ப தம் மகளுக்கு வரவும் எப்படி பேசுதுப்பாரு; அது தப்புள்ள.

“தனக்குனாத் தாச்சேலையும் களம் கொள்ளும்ன்னு சும்மாவா சொல்லியிருங்காங்க”ன்னு பஞ்சுக்குக் கோவம் கோவமா வந்தது.

பிள்ள படிச்சுட்டாளும், குடும்பம் பண்றதுக்கு தெரிய வேணாம். பொம்பளப் பிள்ளைக்குச் சமூக வளமை மறந்து போயிருக்குமா…ன்னு பேச்ச இழுத்த வாக்கில. எல்லாம் காசு, பணத்தோடக் கோளாரு. தனக்குத்தானே பேசிட்டு இருந்தாள் பஞ்சு.‘

நாலு எழுத்தப்படிச்ச திமிரு. என்னத்த சொல்ல காலக் கொடுமைய?

துணி கிழிஞ்சு போனா? ஊசி நூல் கொண்டு தைக்கலாம். ஊசி ஆடாம இருந்தாவுல நூலக் கோக்க முடியும். அம்மையும் அப்பனும் ஆட்டம் ஆடுனா, மக இன்னும் பத்து அடி தூரம் சேர்ந்துள்ள ஆடுவா? வாழ்றப் பிள்ளையத் தாயார் கெடுத்தக் கதையாப் போச்சு.

லட்சம் லட்சமா பணம் இருந்தாலும், கொண்டவன் கூடயிருக்கிறது மாதிரியா வருமா?

இத அமுதாட்ட யார் சொல்லி புரிய வைக்கிறதுன்னு நினைத்தபடி அடுக்களை வேலையில் மும்முரமாக இருந்தாள் பஞ்சு.

எண்ண அலைகள் பலவாறு ஓடியது. ஊத்துவார் சோத்துக்கு ஒக்காந்து இருக்க வேண்டிய நிலையாப் போச்சே. செத்தாலும் அடிய மிதிய வாங்கிட்டு அங்கேயே செத்துயிருக்கனும். காலம் ஓடிப்போச்சுன்னு எதை எதையோ நினைக்க ஏமாத்தா சொல்வா? ஏக்கத்தச் சொல்லவான்னு பஞ்சுமனம் “ஊரப்போட்ட மொச்சைப்பயிறு கல்லாறப்பட்டது” போல பஞ்சுவின் மனசும் கல்லாறப்பட்டு, வாழ்க்கையின் அபிலாசைகளைத் தனக்குத்தானே மென்று தின்றாள்.

பஞ்சு அம்மை சொன்னது மனசுக்குள் ஓடியது. அடியே மகளே! “அறுத்து அறுத்து ஆயிரம் பேருக்கு வாக்கப்பட்டாலும் அவனும் அப்படித்தான் இருப்பான்” அடுப்புல வைக்கிற விறகுக் கட்டை “எரிஞ்சு சம்பாலாகனும், எரிஞ்சும் எரியாமலும் இருந்தா அதுக்குப் பெயர் கொள்ளிக்கட்டை.” மகளேன்னு இப்ப சொல்லுவது போல பஞ்சு காதில் ஒலித்தது.

அடுப்பில் இருந்த சட்டி அடிப்பிடித்தது போல கருகின வாடை வந்தது.

என்ன அத்தை ஏதோ அடிப்பிடிச்சு வாடை வருதுன்னு அமுதா அடுக்களைக்குள் வந்தாள். அத்தைன்னு தோளை உலுக்கியதும் தான் உடம்பைக் குலுக்கி தன் நிலைக்கு வந்தாள் பஞ்சு.

என்ன அமுதா,

அத்தை அப்படி என்ன நினைவு பால் அடிப்பிடிச்சது கூடத் தெரியாம?

ஏதேதோ யோசனை.

அன்னைக்கு என் வாழ்க்கையில அடிப்பிடிச்சது தெரியாம இருந்துட்டேன். இப்ப எனக்கு நினைவுக்கு வருது… நீ பால் அடிப்பிடிச்சதப் பத்தி சொல்ற…ன்னு இழுத்தாள்.

என்ன அத்தை புதிர் போடுறீங்க. எதுனாலும் ஓப்பனாப் பேசுங்க. இப்ப என்ன பிரச்சனை உங்களுக்கு. கண்டதையும் நினைச்சிட்டு மனசப் போட்டு குழப்புறீங்க. தெளிவாயிருங்க அத்தை.

அமுதா கையில் வைத்திருந்த செல்போன் சிணுங்கியது.

ஐ ஹேட் யூ, ஐ ஹேட் யூ ன்னு சொல்லிட்டு கட் பண்ணினாள்.

என்ன அமுதா யாரு. அவன் தான். வந்துட்டேனான்னு கேக்க கூப்பிடுறான் ரஞ்சித்.

என்னடா அம்மா, ரெண்டு பேத்துக்கும் சண்டையா? கேட்டதற்குக் கழுத்தை வெட்டிட்டுப் போயிட்டாள். திரும்பி வந்து அத்தை என்ன சொல்ல வாறீங்க, சொல்லுங்க. மொத எங் கதையக் கேளு.

நானும் இப்படித்தான். ஆளுக சொல்லும்போது புருஷன் இல்லாத சோறு இறங்காதான்னு கேட்டேன். இப்பயும் ஞாபகமிருக்கு, “புருஷன் இல்லாதச் சோறு உப்பில்லாதச் சோறு ருசிக்காதுன்னு…” அன்னைக்கு சொல்லிச்சு முனியம்மா கிழவி.

இருந்தும் என் வீராப்புல இருக்கணும்.

இப்ப, தெரியாதுடி பேத்தியா? பின்னு பிறகு நீ யோசிக்கும்போது எல்லாம் கையமீறிப் போயிரும். நீ மட்டுமே தனிமரமா இருப்பே. அப்ப, என்னைய நெனப்ப. நான் இல்லாமப் போயிருப்பேன். பாட்டிச் சொல்லுறதக் கேளு, பிள்ளப் பிறந்துட்டா எல்லாம் சரியாப் போகும்.

அதுல சரியில்லாட்டி வேணாம்; வாழ்க்கையின்னா ரெண்டும் தான். பாட்டி முனியம்மா சொன்னது நெசம் போல் உண்மை. வாழத் தொலைச்சமா? வாழ்க்கையச் தொலைச்சமா? தெரியில.

ஆனா, முருகன் ரெண்டாவது கல்யாணம் முடிஞ்சு ரெண்டு பிள்ளையப் பெத்து குடும்பமா இருக்காரு. நான் தீர்வையே வாங்கிட்டு அண்ணே வீட்ல தனிக்கட்டையா இருக்கேன். என் நிலமையப்பாருடா? அமுதா.

மருமகளே; ஆயிரம் இருந்தாலும் நமக்குன்னு ஒரு தொணை வேணும். நமக்கு சண்டைப் போட ஆளு வேணுமா வேணாமா?.

இப்ப அத்தை யார் கூடச் சண்டை போட முடியும்? என் வாழ்க்கை பாறையில போட்ட விதை; உன் வாழ்க்கை அப்படி ஆகிடக் கூடாதுன்னு அத்தை சொல்லுறது உனக்கு கோபமாயிருக்கும். “புண்ணு விலப் புடுச்சது மாதிரியா இருக்கும்.” தனியா நீயா யோசி…. அத்தையப் பார்க்க நீயிருக்க, உன்னைப் பார்க்க யாரு இருக்கா…. நல்லா யோசி, நீ படிச்சப் புள்ள, நான் படிக்காதவ…

என்ன அத்தை எதையோ சொல்லிக் குழப்புறீங்க. மோகன் எனக்கு வேண்டாம். ஐ ஹேட் யூ, ஐ ஹேட் யூ.

சரிம்மா மோகன் வேண்டாம், டைவஸ் வாங்கிட்டு வந்து மறுபடியும் வேற ஒருத்தரத் திருமணம் முடிச்சிக்க.

அத்தை என்ன பேசுறீங்க.

இல்ல அமுதா பேச்சுக்குச் சொன்னேன். நீ இன்னொரு கல்யாணம் பண்ணி அவனும் மோகன் தம்பி மாதிரியில்லாம, அவரக் காட்டிலும் மோசமான ஆளாப்போச்சுன்னு வை, பேச்சுக்கு. அப்ப மீண்டும் மீண்டும் டைவஸ் வாங்குவியா.

டைவஸ்தான் வாங்க முடியுமா? அமுதா.

நெனச்சுப்பாரு. நீ படிச்ச புள்ள, கெஞ்சும் போது  நாம மிஞ்சுனா நம்ம வாழ்க்கை தான் போகும். அமுதா யோசி. நல்ல முடிவா இருக்கட்டும். அப்பா, அம்மா இப்ப இருப்பாங்க. நாளப் பின்ன உனக்கு யார் துணை?

அத்தைக்கு அமுதா இருக்கே? அமுதாவுக்கு யார் இருக்கா?…

என்ன அத்தை இப்படிப் பேசுறீங்க…

நான் என்ன படிக்காதவளா… உங்கள மாதிரி… எங்களுக்கு எல்லாம் தெரியும் யார் துணையில்லாம வாழவும் தெரியும்.

“பெல்டக் கழட்டி உங்கள அடிச்சிருந்தாத் தெரியும். தெரியாம எதையும் பேசாதீங்க அத்தை…” பஞ்சு மௌனியாகத் தன் தோளில் பட்டத் தழும்புகளைக் காண்பித்தாள்.

அம்மா மருமகளே! நீ வாங்கியதக் காட்டிலும் பத்து மடங்கு காயம் பட்ட மனசு. அன்னைக்கு என்னை யோசிக்க சொன்னபோது ஏளனமா இருந்துட்டேன். அந்த நிலை உனக்கு வந்திரக்கூடாதுன்னு சொன்னேன்.

அமுதா அமைதியாக இருந்தாள். “நீர் அடிச்சு நீர் விலகுறதில்ல.” புருஷன் பொண்டாட்டிச் சண்டைச் சின்னப்பிள்ள விளையாட்டு மாதிரி எடுத்துகிட்டா… இன்பம் துன்பமில்ல…

அமுதாவின் கைகள் அத்தையின் தோளைத் தடவியது…

பஞ்சு தான் வாழ்ந்த வாழ்க்கையின் சுயத்தைச் சுயமாகச் சொன்னாள்.

பேச்சின் ஊடே, பஞ்சுவின் அண்ணன் ராஜா என்னம்மா பிள்ளையிட்ட ரொம்ப நேரம் பேசிட்டேயிருந்தேன்னு கேட்டார்.

ஒன்னுமில்ல அண்ணே, படிச்சுப் பிள்ளைட்ட நான் என்ன பேசிப்புரிய வைக்கப் போறேன்னு…

மீண்டும் அமுதாவிடம் பஞ்சு பேசும்போது நான் சொல்லுறது உனக்கு கோவமாத்தான் இருக்கும். ஆனாலும் அத்தை சொல்லுறதக் கேளும்மா? காசு பணம் இன்னைக்கி இருக்கும். நாளைக்கி வராது. அழகும் இளமை ரோஜாப்பூ மாதிரி. உனக்குப் புரியும்ன்னு நினைக்கிறேன். தம்பிட்ட பேசும்மா?

அத்தை உங்கத் தொல்லை தாங்க முடியல… எப்பபாரு, இதேப்பேச்சு.. நான் இங்க இருக்கிறது உங்களுக்கு எதுவும் இடைஞ்சலா இருக்கு போல,

வேண்ணா நான் எங்கிட்டாவது போயிடட்டுமா?

பெரிய வார்த்தையும் காட்டமாகவும் முகம் வெளிப்படுத்தியது. பஞ்சு மனசு பதறிப்போனாள்.

கோழியைச் சேவல் விரட்டி வந்தது. சேவல் பிடியில் தப்ப முடியாமல் கோழி நின்றது…

அமுதாத் தனிமையில் யோசித்தாள். மனம் எதையோ மீண்டும் மீண்டும் சொன்னது. ஞாயிற்றுக்கிழமை காலைப்பொழுது, காலிங் பெல் அடிக்கும் சத்தம் கேட்டு, அமுதா கேட்டைத் திறக்கவந்தாள். கேட் முன் நிற்கும் உருவத்தைப்பார்த்து அமைதியானாள்.

வாங்க தம்பி, நல்லா இருக்கீங்களா… பஞ்சுக் கேட்டாள். நல்லா இருக்கம்மான்னு மோகன் சொல்ல,

அதற்குள் அமுதாவின் அப்பா, யாருடா… இங்க என்ன உனக்கு வேலைன்னு அடிக்கக் கையை ஓங்கினார்.

அமுதா, அப்பா நான்தான் அவரை வரச்சொன்னேன்…. தப்பு எங்க ரெண்டுபேர் மேலயும்… எதுவும் பேசல போய்விட்டார். அத்தை சீக்கிரம் சமையல் ரெடி பண்ணுங்க. நானும் உங்க மகனும் கோயிலுக்குப் போகனும்.

அமுதாவின் மனசு மார்கழி மாசத்துக்குளிர் போல குளிர்ந்தது.

முற்றும்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.