சுட்டும் விழிச்சுடர்!
பவள சங்கரி
நெஞ்சுரமும், நேர்மைத் திறமும்!
வாழ்க்கையில் ஒருவருக்கு எந்த நேரமும் துன்பங்களும், துயரங்களும், அபாயங்களும் நேரலாம். இதில் ஆண் என்ன பெண் என்ன… இதற்கெல்லாம் நாம் எப்போதும் தயாராக இருக்க முடியாது என்றாலும், நம் குழந்தைகளுக்கு இளம் வயது முதலே அதற்கான துணிவையும், மன உறுதியையும் ஊட்டி வளர்க்க வேண்டியது ஒரு பெற்றோரின் கடமையாகிறது. எங்கு பார்த்தாலும், வன்முறைகள் கொடி பிடித்து ஆட்டம் காட்டும் இன்றைய காலகட்டத்தில் இது போன்ற தெளிவை நம் குழந்தைகளுக்கு ஏற்படுத்த வேண்டியது அவசியமாகிறது! ஆனாலும் ஒரு பெண் என்றால் இரும்பைப் போன்ற நெஞ்சுரமும், எதையும் தாங்கும் இதயமும், கடுமையான உழைப்பும், அன்பான குணமும், விடாமுயற்சியும் சற்று அதிகமாகவே இருப்பது இயல்பு. அதற்கான தேவையும், சமயமும், சந்தர்ப்பமும், சூழ்நிலையும் அமையும்போது அதை அவள் வெளிப்படுத்தத் தயங்குவதில்லை. இதற்கான அருமையான ஒரு உதாரணம்தான் மாரிசெல் அபாதன் என்ற இந்தப் பெண். அவளுடைய கதையைக் கேட்டால் நமக்குள்ளும் ஒரு உத்வேகம் பிறப்பது நிச்சயம்! வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் தம் இரண்டு கைகளும், பத்து விரல்களுமே மூலதனம் என்பார்கள். ஆனால் இச்சிறு தேவதைக்கு இரண்டு கரங்களும், அந்தப் பத்து விரல்களும் கூட இல்லை! ஆனாலும் உறுதியை இழக்கவில்லை அவள். மருத்துவர்கள் பொதுவாகச் சொல்கிற ஒரு விசயம், மருந்து மற்றும் மருத்துவத்தின் பங்கு 50 சதவிகிதம் என்றால் ஒரு நோயாளியின் நம்பிக்கையும், பிழைக்க வேண்டும் என்ற மன உறுதியும், மீதம் 50 சதவிகிதம் இருந்தால்தான் அவர் பிழைக்க முடியும் என்பார்கள். அதற்கும் ஒரு எடுத்துக்காட்டு இச்சிறுமி.
2000 வது ஆண்டு, செப்டம்பர் மாதம் 25ம் நாள், சாம்போயங்கா (பிலிப்பைன்சு – Zamboanga) எனும் இடத்தில், மாரிசெல் அபாதன் என்ற ஒரு பதினொரு வயது சிறுமி தன் தந்தையுடன், தண்ணீர் எடுத்து வருவதற்காக தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தாள். திடீரென்று வழியில் நான்கு தடியன்கள் நீண்ட கத்தியுடன் அவர்களை மடக்கி, அப்பெண்ணின் தந்தையை சரமாரியாக வெட்டிக் கொன்றனர். அதிர்ச்சியில் உறைந்துபோன மாரிசெல், அச்சத்தில் கண்மண் தெரியாமல் ஓட ஆரம்பித்தாள். இத்தனைக்கும் அவர்கள் அவளுடைய அண்டை வீட்டுக்காரர்கள்தான். எப்படியும் தப்பித்து விடவேண்டும் என்று வேகமாக ஓடியவள், “என்னை கொன்று விடாதீர்கள், கொஞ்சமாவது இரக்கம் காட்டுங்கள்” என்று நடுக்கத்துடன் கதறினாள். ஆனால் ஈவு இரக்கமற்ற அந்த மிருகங்கள் அச்சிறுமியையும் கழுத்தில் வெட்டினர். மாரிசெல் மயங்கிச் சரிந்தாள். அந்த கொலைகாரப் பாவிகள் என நினைத்தார்களோ அத்தோடு விட்டுவிட்டு ஓடி விட்டனர். மயக்கம் தெளிந்தவுடன், மாரிசெல் தம் பலம் அனைத்தையும் திரட்டி மெல்ல எழுந்து தம் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு ஓட ஆரம்பித்தாள். ஆனால் வழியில் செல்லும்போதே தமது இரு முன்கரங்களும் விழுவதை உணர்ந்தாள். கைகளும் வெட்டுப்பட்டிருப்பதை அப்போதுதான் அறிகிறாள்.
கத்திக்கொண்டே ஓடிக்கொண்டிருக்கிறாள். வழியில் சில முறைகள் மயங்கியும் விழுகிறாள். மீண்டும் சமாளித்து எழுந்து ஓடுகிறாள். வீட்டினருகில் வந்தவுடன் சத்தம் போட்டு தாயை அழைக்கிறாள். இரத்தத்தில் நனைந்து வந்திருக்கும் மகளைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்து போனவர், அவசர அவசரமாக துணியைச் சுற்றி மருத்துவமனைக்கு எடுத்துச் செல்கிறார். புறநகர் பகுதியில் இருக்கும் அவர்கள் வீட்டிலிருந்து மருத்துவமனை செல்வதற்கு 12 கி.மீ. நடந்தே செல்ல வேண்டும். மருத்துவமனையில் அச்சிறுமியைக் கண்ட மருத்துவர்கள், அவள் பிழைப்பது அரிது என்று தெரிவித்தும் விட்டனர். ஆனால் 5 மணி நேர அறுவை சிகிச்சை, 25 தையல்கள் என அனைத்தும் முடிந்து மாரிசெல் பிழைத்துவிட்டாள். ஆம், அவள் உள்ள உறுதி அவளை பிழைக்க வைத்தது என்றுதான் சொல்லவேண்டும்! ஆனால் அவளுடைய இரு கைகளையும் இழக்க வேண்டிவந்தது. அடுத்த நாள் தன்னுடைய 12 வது வயதில் அடி எடுத்து வைக்கப்போகும் அச்சிறுமிக்கு இரு முன்னங்கைகளும் இழந்து வாழ வேண்டிய துர்பாக்கிய நிலை. ஆனால் அதோடு அவள் துன்பம் முடியவில்லை. வீட்டிற்கு திரும்பி வந்த தாய், மகளுக்கு மற்றொரு அதிர்ச்சி காத்திருந்தது. ஆம், அவர்கள் வீடு சூறையாடப்பட்டு, தீயினால் எரிக்கவும்பட்டிருந்தது. மிகவும் ஏழ்மையில் இருந்த மாரிசெல் குடும்பம் மருத்துவமனைச் செலவைக்கூட ஏற்க முடியாத நிலையில் இருந்ததைக் கண்டு அவர்களுடைய உறவினர்கள் பரிதாபப்பட்டு மருத்துவமனை செலவை ஏற்றதோடு, குற்றவாளிகளை நீதி மன்றத்தில் நிறுத்தவும் உதவி செய்தனர்.
ஆனால் இவையனைத்தையும்விட அதிசயம், மாரிசெல் அதற்குப் பிறகு வீட்டில் முடங்கிப்போய்விடவில்லை. வாழ்க்கையை எதிர்த்து ஓட ஆரம்பித்தாள். முன் கைகள் இரண்டும் வெட்டுண்டதால் எதுவுமே செய்ய முடியாதே என்று துவண்டு விடவில்லை மாரிசெல். அவள் தற்பொழுது தன் மணிக்கட்டின் மூலம் பல வேலைகள் செய்யப் பழகிவிட்டாள். இன்று ஊனமுற்றவர் பள்ளியின் மிகச்சிறந்த சமர்த்துப் பெண்ணாகவும், கணினி வல்லுநராகவும், உலகமே பாராட்டும் வகையில் மரியாதைக்குரியவராகவும் வாழ்ந்து கொண்டிருக்கிறார். 2008ம் ஆண்டில் சொகுசு விடுதி மற்றும் உணவக மேலாண்மைக் கல்வியில் பட்டம் பெற்றுவிட்டாள். அதோடு கலை மற்றும் கைவினைப் பொருட்கள் பயிற்சியில் தங்கப் பதக்கமும் பெற்று, 2011ம் ஆண்டில் தம் சமையல் பணி கல்வியையும் (செஃப்) முடித்து பட்டம் பெற்றார். எந்தத் தடையும் இச்சிறுமியின் கனவை கலைக்க முடியவில்லை. இன்று தம் சுய கால்களில் நிற்கிறாள் மாரிசெல்! விதியையே ஓட ஓட விரட்டியவள் இந்த புதுமைப்பெண்!
படங்களுக்கு நன்றி : இணையம்
சிறந்த ஊக்குவிக்கும் கட்டுரை; அனைவரும் படிக்க வேண்டும்