Month: August 2015

  • இந்த வார வல்லமையாளர்!

    ஆகஸ்ட் 31, 2015

    இவ்வார வல்லமையாளர்
    வல்லமைமிகு அன்பு ஜெயா அவர்கள்

    Anbu Jeya

     

    வல்லமை இதழின் இந்த வார வல்லமையாளராகப் பாராட்டப்படுபவர் சிட்னி ஆஸ்திரேலியாவில் வசிக்கும் திருவாளர் அன்பு ஜெயா அவர்கள். மருந்தாக்கியல் துறையில் முப்பத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றியவராயினும் தமிழின்பால் ஆர்வம் மிக்கவர். உயரதிகாரியாகப் பணியாற்றிய இவர் தனது பணி ஓய்விற்குப் பிறகு தான் பங்கேற்ற தமிழ் சார்ந்த தன்னார்வப்பணிகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர். அந்த வரிசையில், சென்ற வாரம் (ஆகஸ்ட், 24 அன்று)மதுரை உலக தமிழ்ச்சங்கத்தில் நடந்த கலந்துரையாடலில் பங்கேற்று, ஆஸ்திரேலியாவில் தமிழ் வளர்ச்சிப் பணிகள் பற்றிய சிறப்புரையாற்றினார். அயல்நாட்டில் தமிழ் வளர்க்கும் அரும்பணியை ஆற்றிவரும் திரு. அன்பு ஜெயா அவர்களை இவ்வார வல்லமையாளராகப் பாராட்டுவதில் வல்லமைக் குழுவினர் மகிழ்ச்சி அடைகிறோம்.

    சென்னையைச் சேர்ந்த முனைவர் அன்பு ஜெயா அவர்கள், மதுரை மருத்துவக் கல்லூரியிலும், ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேலஸ் பல்கலைக்கழகத்திலும் உயர்கல்வி பயின்றவர். இரண்டாம் மொழி கற்பித்தலில் பயிற்சி பெற்று இருபது ஆண்டுகளுக்கும் மேலாக சிட்னி பாலர் மலர் தமிழ்ப்பள்ளிகளில் தன்னார்வலராகவும், அதன் மக்கள்தொடர்பு அதிகாரியாகவும், ஹோல்ஸ்வொர்த்தி கிளை தமிழ்ப்பள்ளியின் முதல்வராகவும் எனத் தொடர்ந்து பற்பல பொறுப்புகளை ஏற்றுத் தமிழ்ச்சேவை செய்து வருபவர். தற்பொழுது பாலர் மலர் தமிழ்ப்பள்ளி ஆலோசகராகவும், கடந்த பதினைந்து ஆண்டுகளாக ஆஸ்திரேலியாவின் நியூ சவுத்வேல்ஸ் மாநிலத் தமிழ்ப்பள்ளிகள் கூட்டமைப்பின் புத்தகக் குழுவில் பங்கேற்று, பாடப்புத்தகங்கள் வெளியிடும் பணியிலும் ஈடுபட்டுள்ளார்.

    தமிழ் ஆஸ்திரேலியன்” மாதஇதழின் (http://www.tamilaustralian.com.au/) இணையாசிரியரான அன்பு ஜெயா அவர்கள், ஆஸ்திரேலியாவிலும், புலம்பெயர்ந்த தமிழர் வாழும் அயல்நாடுகளிலும் தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களுக்குப் பயிலரங்குகள் நடத்தி வருகிறார். தமிழை இரண்டாம் பாடமாகக் கற்கும் மாணவர்களுக்கு உதவியாகத் தனது இணையதளத்தில் (http://www.anbujaya.com/) பல பயிற்சிகளை தொகுத்து அளித்துள்ளார். தமிழ் பயிற்றுவிக்கும் அயலக பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இத்தளம் பெரிதும் உதவும் வகையில் அமைந்துள்ளது.

    வாரம் ஓரிரு மணிநேரங்களே தமிழ்கற்கும் சூழ்நிலையில் வளர்பவர் அயலகத்தில் வளரும் தமிழ்க்குடும்பங்களின் பிள்ளைகள். புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் சிறுவர்களுக்குத் தமிழை இரண்டாம் மொழியாகக் கற்பிக்கும் பொழுது, தாயகத்தில் கற்பிக்கும் முறையில் இருந்து சற்று வேறுபட்ட உத்திகளைப் பயன்படுத்தவேண்டியத் தேவையுள்ளது. இத்தேவை குறித்தும், அதற்கு உதவும் உத்திகள் குறித்தும் “சிறார்க்குத் தமிழ் கற்பிக்கப் பயன்படும் உத்திகள்” என்று அன்பு ஜெயா விவரிக்கும் கட்டுரையும் இத்தளத்தில் இடம் பெறுகிறது. இக்கட்டுரையை அவர் மலேசியாவில் 2013 ஆம் ஆண்டு நடந்த 10 ஆவது உலகத்தமிழாசிரியர் மாநாட்டில் சமர்ப்பித்துள்ளார். மறு ஆண்டு, கோவையில் நடந்த “தாயகம் கடந்த தமிழ் 2014” எழுத்தாளர் மாநாட்டில், “ஆஸ்திரேலியாவில் தமிழ்க்கல்வி” என்ற தலைப்பில் ஒரு கட்டுரையையும் சமர்ப்பித்தார்.

    இந்த ஆண்டு, மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் நடந்த கலந்துரையாடலில் பங்கேற்ற ஆஸ்திரேலியா பாலர் மலர் தமிழ்ப்பள்ளி ஆலோசகரான திரு. அன்பு ஜெயா அவர்கள்,

    Anbu Jeya Madhurai

    “ஆஸ்திரேலியாவில் தமிழர்களின் வளர்ச்சியும் தமிழ்மொழியின் வளர்ச்சியும்” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். ஆஸ்திரேலியாவில்தான் முதன்முதலில் தமிழ் வளர்ச்சிக்கான பன்மொழிக்கொள்கை கொண்டுவரப்பட்டது என்றும், தாய் மொழியைத் தவிர வேற்று மொழியொன்றை அறிந்துகொள்ள இத்திட்டம் வழிவகுக்கிறது என்றும் கூறினார். அந்த பாடத்திட்டத்திற்கேற்ப ஏழாம் வகுப்பு நூல்கள் உருவாக்கப்பட்டுவிட்டன என்றும், அடுத்த கட்டமாக எட்டாம் வகுப்புக்கான நூல்கள் உருவாகும் பணி தொடர உள்ளது என்றும் கூறினார். மேலும், திருக்குறள் நிகழ்ச்சிகள், இலக்கிய நிகழ்ச்சிகள் ஆகியவை ஆஸ்திரேலியாவில் நடத்தப்பட்டு மாணவர்களுக்குத் தமிழின் சிறப்பு உணர்த்தப்படுகிறது என்றும், மதுரை உலகத் தமிழ்ச்சங்கத்தின் ஆலோசனைகளும் பெறப்பட்டு ஆஸ்திரேலியாவின் தமிழ்வளர்சிப் பணி தொடரும் எனவும் கலந்துரையாடலில் ஆஸ்திரேலியாவில் தற்பொழுது மேற்கொள்ளப்படும் தமிழ் வளர்ச்சிப்பணிகள் பற்றியத் தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

    ஆஸ்திரேலியாவில் சிட்னி, மெல்பேர்ன், அடிலெய்டு போன்ற நகரங்களில் தமிழ் அமைப்புகள், தமிழ்ச் சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. அங்கு 24 மணி நேரமும் ஒலிபரப்பாகும் தமிழ் வானொலிகள் உள்ளன. பன்மொழிச் சூழலில் வாழும் தமிழ்க் குழந்தைகள் தமிழ்மொழியில் சொல்வளம் பெற இத்தகைய வானொலிகள் பெரும் பங்காற்றுகின்றன. தமிழ் ஓசை, கலப்பை, தென்றல், மெல்லினம் போன்ற அச்சு இதழ்களும் ஆஸ்திரேலியாவில் வெளி வருகின்றன. தமிழ்க் கல்வியினைப் பொறுத்தவரை தமிழ் அமைப்புகள் சில சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் தமிழைக் கற்பிக்கின்றன போன்ற தகவல்களையும் வழங்கி ஆஸ்திரேலிய தமிழ்வளர்ச்சியின் நிலையை எடுத்துரைத்தார்.

    புலம் பெயர்ந்த தமிழ்க் குடும்பங்களின் தமிழ்க்கல்வி வளர்ச்சிக்காகத் தொடர்ந்து கடந்த கால்நூற்றாண்டாகத் தன்னார்வப் பணியாற்றிவரும் வல்லமையாளர் அன்பு ஜெயா அவர்களைப் பாராட்டி அவர் பணிகள் சிறப்புறவும், அதனால் அயலகத் தமிழர்கள் பயன் பெறவும் வாழ்த்துகிறோம்.

    **************************************************************************************
    வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
    தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
    வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

    **************************************************************************************

    [இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

    Contact Links:
    website: http://www.anbujaya.com/
    blog: தமிழ்ப் பந்தல்: http://tamilpandal.blogspot.com.au/
    facebook: https://www.facebook.com/anbu.jaya
    google.plus: https://plus.google.com/116850260359140513353/posts
    youtube: https://www.youtube.com/channel/UCAS3JlgjchEQxRMM8enxneQ
    http://tamilaustralian.com.au/magazine/?feb2014
    email: anbujaya2005@gmail.com
    Sources:
    http://epaper.dinamani.com/575841/Dinamani-Madurai/25-08-2015#page/1/1
    http://epaper.dinamalar.com/Gallery.aspx?id=25_08_2015_273_014_002&type=P&artUrl=25082015273014&eid=356
    http://www.dinamani.com/edition_madurai/madurai/2015/08/25/ஆஸ்திரேலியாவில்-தமிழ்ச்சொ/article2992538.ece

    Share
  • படக்கவிதைப் போட்டி (28)

    பவள சங்கரி

    அன்பிற்கினிய நண்பர்களே!

    வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?

    11910747_881781468542720_327804745_n


    61341525@N03திரு. ராகுல் ரவீந்திரன்
    எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பு ஆசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (05.09.2015) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினர், தமிழ் இலக்கிய ஆராய்ச்சியாளர் திருமதி மேகலா தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பல முறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். இது, கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்கு பெற அழைக்கிறோம்.

    புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்த திருமதி மேகலா இராமமூர்த்தி கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்றவர். அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009 ம் ஆண்டுகளில் (ஆர்லாண்டோ & அட்லாண்டா) கவியரங்கம், இலக்கிய வினாடி வினா நிகழ்ச்சிகளில் பங்கேற்று பாராட்டுகளும், பரிசுகளும் பெற்றுள்ளவர். புறநானூறு, குறுந்தொகைப் பாடல்களில் அதிக நாட்டமும், இலக்கியக் கூட்டங்களில் சுவைபட பேசுவதிலும் வல்லமை பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்

    Share
  • கர்மவீரர் காமராசர்

    –ச. பொன்முத்து.

    “அன்னை சிவகாமி பெற்றெடுத்த தமிழ்ச் சிங்கம்.. பொற்கால ஆட்சியை நடத்திக் காட்டிய தலைவர்! தர்மமே மானிடப் பிறப்பெடுத்துத் தரணியிலே வந்துதித்து ஏழைகளைக் காத்து நின்றதென்றால் காமராசருக்கே அது சாலப் பொருந்தும். நம் தமிழ் நாட்டில் இலட்சோப லட்சம் மக்கள் கல்விச்செல்வம் பெற்றுத் திகழ்வதற்கு காமராசர் ஒருவரே காரணம் என்பதை மறுக்க இயலாது.

    எளிமைக்கு இவர், இனிய எடுத்துக்காட்டு! கருப்புத் தங்கம்.. காங்கிரஸ் பேரியக்கத்தில் மாநிலத் தலைவர் – இந்திய தேசிய காங்கிரசின் தலைவர்- இரண்டுமுறை இந்தியாவின் பிரதம மந்திரிகளை நிர்மாணித்த கிங் மேக்கர்! தன்னிகரில்லாப் பெருந்தலைவர்! ஈடில்லா உழைப்பாளி! மக்களுக்காகவே வாழ்ந்து மக்களுக்காகவே தியாக வாழ்வேற்று மறைந்த மா மனிதர் இவர் என்பதை இவரின் இறுதி ஊர்வலத்தில் கூடிய கூட்டம் சாட்சி சொன்னது! என்றும், அந்த நன்றிப் பெருக்கோடு உளம் கனிந்து அத்திருமகனாரை நினைவில் நிறுத்தும் பொருட்டு, உலகெங்கும் வாழும் தமிழர்கள் பலரும் பங்கேற்க, “கர்மவீரர் காமராசர்” என்னும் கட்டுரைப் போட்டியை அறிவித்திருக்கிற நிலையில், துணிவு மிக்க செயற்குரியவர்; எளிமை கண்டு இரங்கிடும் பண்பாளர்; ஏழ்மையில் தான்  உழன்றதை எந்நிலையிலும் மறவாதவர்; அதிகாரம் என்ற அழுக்கு ஒட்டாத தூய்மையாளர்;  உலகச் சிந்தனையாளர்கள்  வார்த்தைகளில் உதிர்த்தவற்றை வாழ்ந்து காட்டியதோடு, மக்களின் நலம் சார்ந்து நல்லபல செயல்களைச் சட்டமியற்றி செயல்படுத்திச் சாதித்தவர் எனப்  பலவகையில் காமராசரைப் போற்றிப் புகழலாம்.

    அரசியலில் அக்பரைப் போல் கெட்டிக்காரர்; அனுபவத்தில் நேருஜிக்கு இணையானவர், நேர்மையிலும், தியாகத்திலும், எளிமையிலும் காந்திஜிக்கு இணையான தலைவர். தன்னைத்தானே தூய்மைப்படுத்திக் கொள்பவனும், சுயமாகத் தியாகம் செய்யக் கூடியவனுமான இந்தியனே, தான் பிறந்த நாட்டுக்கு உற்ற துணையாக இருக்க முடியும் என்று கூறிய மகாத்மா காந்தி கருத்துப்படி நடந்து காட்டியவர்  தென்னாட்டு காந்தி காமராசர். இளமை என்னும் வசந்த காலத்தை இந்த நாட்டின் சேவைக்கு அர்ப்பணித்து திருமணமே செய்து கொள்ளாமல் வாழ்ந்தவர் கர்மயோகி கர்மவீரர் எனப் பல வண்ணம் புகழ்ந்து வணங்கலாம்.

    “மானிடத் தன்மையைக் கொண்டு – பலர்

    வையத்தை ஆள்வது நாம் கண்டதுண்டு

    மானிடத் தன்மையை நம்பி – அதன்

    வண்மையினால் புவி வாழ்வுகொள் தம்பி

    ‘மானிடம் ’ என்றொரு  வாளும்- அதை

    வசத்தில்  அடைந்திட்ட உன்இரு தோளும்

    வானும் வசப்பட வைக்கும் – இதில்

    வைத்திருக்கும் நம்பிக்கை வாழ்வைப் பெருக்கும்”

    இக்கவிதையில் பாவேந்தர் பாரதிதாசன், உலகத்தின் உயர்வு என்பது ஒவ்வொரு தனி மனிதனின் சிந்தனையிலும் கூட்டுழைப்பிலும் தங்கி நிற்கின்றது; ஒவ்வொரு மனிதனின் தோற்றமும் வாழ்வும், ஆக்கமும் அழிவும் அவன் சார்ந்துள்ள சமுதாயத்தின் நலத்திற்காகவே நிகழ்கின்றன;  நிகழவும் வேண்டும்  என்றுரைக்கிறார். இச்சிந்தனை வழியே, கர்மவீரர் காமராசரின் வாழ்க்கையின் அத்தனை நிகழ்வுகளும் இந்தச் சமூகத்து மக்களின் நலத்திற்காகவே அமைந்தது என்றால் அது மிகையாகாது.

    இளமையில் கர்மவீரர்

    தங்கமணி மாளிகையில்

    தனிவயிரப் பந்தலிட்டு

    மங்கையர்கள் சுற்றிவந்து

    மங்கலமாய் கோலமிட்டுத்

    திருநாள் அலங்காரச்

    சிலைபோல் அலங்கரித்து

    வாழ்த்தொலிக்கப் பெற்றெடுக்கும்

    மகனாக வந்ததில்லை!

    . . . .     . .  .      . .  .

    நிமிர்ந்தால் தலையிடிக்கும்

    நிற்பதற்கே இடமிருக்கும்

    அமைவான ஓர்குடிலில்

    ஐயா நீ வந்துதித்தாய்!

    என்னும் கவியரசு கண்ணதாசனின் கவிதை வரிகள் காமராசரின் பிறப்பையும், இல்லச் சூழலையும் எடுத்தியம்புவன.

    ஏழ்மை குடியிருக்கும் எளிய குடும்பச் சூழலில் பிறந்து ஏழ்மையைக் கண்டு துவண்டு விடாமல்,  ஏழைமக்கள் ஏற்றம் பெறும் வகையில்  சிந்தித்த, செயலாற்றிய பெருமகன் இராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து  1987-ல் நிர்வாகக் காரணங்களால் பிரிக்கப்பட்ட விருதுநகர் மாவட்டத்திலுள்ள விருதுநகரில் 15.07.1903-ல் நாள் பிறந்தார். அவரது தந்தை  குமாரசாமி,  தாயார் சிவகாமி அம்மாள் ஆவார்.  அவர்களின் குல தெய்வமான காமாட்சி அம்மனின் பெயரால் முதலில் காமராசருக்கு “காமாட்சி” எனப்  பெயரிட்டார்கள்.  காமராசரை “ராஜா” என செல்லமாக  அவரது தாயார் அழைத்து வந்தார். பின்னர் காமாட்சி மற்றும் ராஜா ஆகிய பெயர்களை இணைத்து காமராசர் என்றே அழைத்தார்கள்.

    1909 ஆம் ஆண்டு தனது 6 வயதில்  தந்தை குமாரசாமி நாடார் காலமாகவே சில ஆண்டுகளே பள்ளிக்குச் சென்றார் காமராசர். பின்னர் தனது 12-வது வயதில் படிப்பை நிறுத்த வேண்டிய நிலை உருவாகவே,  ஜவுளிக் கடை ஒன்றில் காமராசர் வேலையைப் பார்க்க நேரிட்டது.

    பள்ளியில் நடைபெற்ற  விநாயகர் பூசையின்போது குறைவாக பிரசாதம் வாங்கி வந்ததற்காக கடிந்து கொண்ட தனது பாட்டியிடம், ஒவ்வொருவரிடமும் ஐந்து பைசா வீதம் வசூல் செய்த ஆசிரியர் பிரசாதத்தையும் ஒரே மாதிரியாகப் பிரித்து வழங்க ஏற்பாடு செய்யாததற்கு ஆசிரியரைத்தான் கடிந்து கொள்ள வேண்டும் என  மாணவப் பருவத்தில் காமராசர் கூறியது அவரது உயர்ந்த பண்புக்கு சான்றாகும்.

    காலைநேரத்தில் மதம் பிடித்த நிலையில் ஓடிக் கொண்டிருந்த யானையை அடக்க முடியாமல் அனைவரும் அஞ்சி நடுங்கி, பயந்து ஓட,   அதன் நிலையை உணர்ந்த காமராசர் விரைந்து கோயிலுக்குச் சென்று அதனைக் கட்டியிருக்கும் இரும்புச் சங்கிலியை யானையின் துதிக்கைக்கு வீசி எறிந்து அதனுடைய கோபத்தை தணித்த சிறுவனாக,  எழுந்துள்ள சிக்கலுக்கான தீர்வை எளிதில் செயல்படுத்தும் தீரம் இளமையிலேயே காமராசரிடம் குடிகொண்டிருந்தது என்பதற்கு சான்று பகர்வதாகும்.

    விடுதலைப் போரில் கர்மவீரர்:

                அவ்வப்போது சாலைகளில் கேட்கப்படுகிறது ‘வந்தே மாதரம்’ என்ற சொல்லும், விடுதலைப் போராட்டக் களமும் இளைஞனாக இருந்த காமராஜரை விடுதலைப் போராட்டத்தின் பக்கம் திருப்பியது.  1919 ஏப்ரலில் ரௌலட் சட்டத்தை எதிர்த்து காந்தியடிகள் விடுத்த அழைப்பை ஏற்று காங்கிரசின் முழுநேர ஊழியரானார்.  இதே ஆண்டில் சத்தியமூர்த்தியைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.

    அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை

    திறனறிந்து தேர்ந்த கொளல்.

    என்னும் வள்ளுவத்திற்கிணங்க, சத்தியமூர்த்தியை தன்னுடைய அரசியல் ஆசானாகவே ஏற்றார்.

                தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராகச் சத்தியமூர்த்தி இருந்தபோது, காமராஜ் செயலாளராக இருந்தார்.  பிறகு காமராஜ்  தலைமைப் பொறுப்புக்கு வந்தபோது, சத்தியமூர்த்தி செயலாளராக இருந்து செயல்பட்டார்.  சத்தியமூர்த்தியும் காமராஜரும் ‘குரு-சீடர்’ என்ற முறையில் இருந்தார்கள் எனச் சிலர் சொல்வதுண்டு.

                1927-ம் ஆண்டு சென்னையில் ‘கர்னல் நீல்’ சிலையை அகற்றம் போராட்டம் நடத்த  அண்ணல் காந்தியிடம் அனுமதி பெற்ற நிலையில், போராட்டம் நடத்தாமலேயே அச்சிலை அகற்றப்பட்டது. 1928-ல் மதுரைக்கு வந்த சைமன் குழுவை எதிர்த்துப் போராட்டம் ;  வேதாரண்யம் உப்புச் சத்தியாகிரகம்; 1930-ல் சட்டமன்றுப்பு இயக்கம்; 1945-ல் ஆகஸ்டு புரட்சி  எனப் பல்வேறு விடுதலை வேள்விகளில் கலந்து கொண்டு,  சிறைவாசம் அனுபவித்தார்.

    முழந்துண்டு சட்டைக்கும் முதலில்லாத் தொழிலாளி

    பழனிமலை ஆண்டிக்குப் பக்கத்தில் குடியிருப்போன்

    பொன்னில்லான், பொருளில்லான், புகழன்றி வசையில்லான்

    இல்லாளும் இல்லான், இல்லையெனும் ஏக்கமிலான்

    அரசியலைக் காதலுக்கே அர்பணித்தார் மத்தியிலே

    காதலையே அரசியலுக்கு கரைத்துவிட்ட கங்கையவன்

    என வாழ்க்கை முழுமையையும் காமராசர் மக்கள் பணிக்கே அர்ப்பணித்ததை படம் பிடித்துக் காட்டுகிறார் கவிஞர் கண்ணதாசன்.  இதனை உள்வாங்கிய தமிழருவி மணியன்,

    நீ. . . முக்கால் கைச் சட்டையிலும்

    முழந்துண்டு வேட்டியிலும்

    சுயதேவைக்குச் சுவரெழுப்பியவன்

    என வியந்து போற்றுகிறார்.

    கட்சிப் பணியில் கர்மவீரர்

    “வெறும் படிப்பறிவு, சொல்லிக் கொடுத்த கலையறிவு – இவை மட்டும் நாட்டை ஆள்வோருக்குப் போதாது.  எளிதில் எவரும் எட்டமுடியாத பட்டறிவைத்தான் அவர்கள் நிறையப் பெற்றிருக்க வேண்டும்.  வாழக்கையின் பெரும் பகுதியை அந்தப் பட்டறிவைப் பெறுவதில் செலவிட்ட ஒருவனே எஞ்சிய காலத்தில் நாட்டை ஆளத் தகுதியுடையவனாவான்” என்ற பிளேட்டோவின் கூற்று நம் கர்மவீரர் காமராசருக்குரியது.

                “எனக்குச் சுமார் 18 வயது. 1923ஆம் வருஷம் காங்கிரஸில் சேர்ந்திருந்தேன். . .  சுயராஜ்யம் நம்நாட்டுக்கு வேண்டும்; காங்கிரசும் காந்தியுமே அதைப் பெற முடியும்’- இதுதான் அப்போது எனக்கத் தெரிந்த அரசியல் விவகாரம்.  காங்கிரஸ் இடும் வேலையை முன் பின் பாராமல் அப்படியே செய்வேன்.  காங்கிரஸிலில் உள்ள தலைவர்களில் ஒற்றுமை, வேற்றுமை ஒன்றும் தெரியாது.  காங்கிரஸ் சட்டசையைப் பகிஷ்கரிக்கச் சொல்கிறது, தீவிரமாகப் பிரச்சாரம் செய்து அதைச் செய்யப் பாடுபட்டேன்.

    அடுத்தாற்போல் சுயராஜ்யக் கட்சியைச் சட்டசபைக்குள் செல்ல அனுமதி கொடுத்து எல்லாக் காங்கிரஸ்காரர்களையும் வேலை செய்யச் சொன்னார்கள்.  அதையும் பிரச்சாரம் செய்தேன்.  பிறகு 1930ஆம் வருஷத்தில் சட்டமறுப்பு நடந்தது.  சட்ட மறுப்பில் சிறை சென்றேன்.  இப்போது  சட்டசபைக்கு என்னை அனுப்பியிருக்கிறார்கள்.  இவை எல்லாவற்றிலும் காங்கிரஸ் கட்டுப்பாட்டுப்படி நடப்பதுதான் எப்போதும் நான் கொண்ட கொள்கை.” என காமராஜ் தனது கட்சிப் பணி குறித்து விவரிப்பது நோக்கத்தக்கது.

    தமுக்கடிக்கும் தொண்டராய் இருந்து  தலைவர்களுக்கு ஆலோசனை கூறும் உயர்தகு நிலைக்கு தன்னை உயர்த்திக் கொண்டதும், கட்சிக்காக உண்டியல் குலுக்கி நிதி திரட்டிய நிலையிலிருந்து பிரதமர்களை நிர்ணயிக்கும் ‘கிங் மேக்கராக’ செல்வாக்கு பெற்றதும், 1940 முதல் 1954 வரை 14 ஆண்டு காலம்,  இடைவெளியின்றி காங்கிரஸ் கட்சித் தலைவராகவும், 12 ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினராகவும், 15 ஆண்டுகள் தமிழகச் சட்டமன்ற உறுப்பினராகவும், 9 ஆண்டுகள் முதலமைச்சராகவும்  தொடர்ந்து நீடிக்கும் அளவிற்கு தன் நிலையை நிர்ணயித்துக் கொண்டதும், காமராசர்  ஆற்றிய  அரிய பணிகளால் என்றால் அது மிகையாகாது.

    கல்விப் பணியில் கர்மவீரர்:

     என்னருந் தமிழ்நாட்டின்கண் எல்லாரும்கல்வி கற்றுப்

    பன்னருங் கலைஞானத்தால் பராக்கிரமத்தால் அன்பால்

    உன்னத இமயமலைபோல் ஓங்கிடும் கீர்த்தியெய்தி

    இன்புற்றார் என்றுமாற்றார் இயம்பக்கேட்டிடல் எந்நாளோ?

    என ஏங்கிய பாரதிதாசனின் ஏக்கத்தைப் போக்கவும்,  பாமரப் பிள்ளைகள் படித்து பண்டிதர் களாக்கவும் முதலமைச்சராகப் பொறுப்பேற்றவுடன் ராஜாஜி மாற்றி அமைத்து நடைமுறைப் படுத்திய குலக் கல்விக் கொள்கையைக் கைவிட்டதோடு எல்லா ஏழைக் குழந்தைகளுக்கும், தொடக்கக் கல்வி இலவசம் என்னும் திட்டத்தைச் செயல்படுத்தினார் காமராசர்.

    ராஜாஜியால் நிதிப்பற்றாக்குறை காரணமாக மூடப்பட்ட 6000 ஆரம்பப் பள்ளிகளை  ஆட்சிக்கு வந்த சிலமாதங்களில்  மீண்டும் திறக்கும்படி  ஆணையிட்டார் காமராசர். மேலும் 300 மக்கள் இருக்கும் கிராமத்திற்கு ஓர் ஆரம்பப்பள்ளி.  3 மைல்களுக்கு ஒரு நடுநிலைப்பள்ளி.  5 மைல்களுக்கு ஓர் உயர் நிலைப்பள்ளி என 14000 புதிய பள்ளிகள் கட்டவும் உத்தரவிட்டார்.  எல்லா நகரங்களிலும் கல்லூரிகள் என தொடங்கி தமிழ்நாட்டு மக்கள் ஒளிபெற கல்விக்கண்களை திறந்துவிட்டார்.

                ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள், உடற்பயிற்சிக் கல்லூரிகள், கலைக் கல்லூரிகள், மதுரையிலும், தஞ்சாவூரிலும் மருத்துவக் கல்லூரிகள் என கல்வித் துறையில் மிகப் பெரிய புரட்சி செய்தார்.

                கல்வி கற்பது என்பது ஏதோ பகட்டான செயல் என்ற எண்ணத்தைப் போக்கி, பாமர மக்களும் முயன்றால் எதையும் எட்டிப்பிடிக்க முடியும் என்கிற நிலையை உருவாக்கினார் காமராசர்.  அன்று இட்ட வித்துகள் முளைத்து வேர்விட்டு வளர்ந்து தழைத்து இன்றைய தமிழகத்தில் பெரும் விருட்சங்களாகப் பெரிய பெரிய கல்வி நிறுவனங்களாக பல்வேறு பல்கலைக் கழகங்களாகப் பல்துறைக் கல்வியை வழங்கிக் கொண்டிருக்கின்றன.

    kplan” நான் படிக்கக் காரணம் என் அப்பா. என் அப்பா படிக்கக் காரணம் காமராசர். Happy Birthday Kamaraj…” என அவரது பிறந்த நாளில் வாழ்த்துக் கூறி தன்னுடைய முகநூலில் (Facebook) பதிவு செய்கிறார் கார்த்திகேயன் சுப்பிரமணியன்.

    ஆயிரமாயிரம் ஆண்டுகளாக தமிழ் மக்களுக்கு மறுக்கப்பட்டு வந்த கல்வி என்கிற சொத்தை இலவசமாக வழங்கி புரட்சி செய்தவர் காமராஜர். அதனால் தான் அவரை எல்லோரும் ‘கல்வி வள்ளல்’ என்றும் ‘கல்விக்கண் திறந்த காமராசர்’

     

     என்று அழைத்தனர்.  ஆனால் இன்றோ மாணவர்களின் நிலையோ வேறாக உள்ளது என்பதைச் சுட்டிக் காட்டுகிறது மேலுள்ள படம்.

    இன்று உயர்வகுப்பினர் மட்டுமே ஆக்கிரமித்துள்ளதாகக் குற்றம் சாட்டப்படும் ஐஐடி நிறுவனத்தை, அனைத்து வகுப்பு மாணவர்களின் உயர்கல்விக்காகவும் தொடங்கிய பெருந்தகையாளர் காமராசர். படிக்க வரும் மாணவர்கள் பட்டினியாக இருக்கக் கூடாதென்று உணவும் அளிக்கும் வகையில் ‘மதிய உணவுத்’ திட்டம் தீட்டி நிறைவேற்றினார்!

    முற்பகல் மூளை நிரப்பி

    பிற்பகல் வயிறு நிரப்பி

    தார்க்கோல் சிறுவர்களை

    எழுதுகோல் ஏந்த வைத்தாய்

    அது உன் தொலைநோக்கு.

    என வைரமுத்து தன் வார்த்தைகளில் காமராசரை வாழ்த்துகிறார்.

                தமிழ்நாட்டு மக்களின் வாழ்க்கை நிலைபற்றிய காமராசரின் துல்லிய அறிவும், மக்கள் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் அவருக்கிருந்த ஆர்வமும், துறைச் செயலாளர்களிடத்தில் அவரது மதிப்பையும் மரியாதையையும் பலமடங்கு உயர்த்தின.  அலுவலர்கள் அறியாத பல விஷயங்களை, முதலமைச்சராவதற்கு முன்னரும் பின்னரும் அவர் மேற்கொண்ட பயணங்கள் அவருக்குக் கற்றுத் தந்தன. தமிழகத்தின் ஒவ்வொரு மூலைமுடுக்கும் அவருக்கு நன்கு தெரியும்.  ஒவ்வொரு முறையும் சுற்றுப் பயணத்திலிருந்து திரும்பியதும், மக்கள் தேவைகளைக் கண்டறிந்த காமராசர், பல புதுமைகளைப் புகுத்தி நிர்வாகத்தைச் செம்மைபடுத்தினார்.

    நீர் மேலாண்மையில் கர்மவீரர்:

      பெருந்தலைவர் காமராசர் கல்வி வளர்ச்சி ஏற்பட்டுவிட்டால், சாதி வித்தியாசம் தன்னாலே அகன்றுவிடும். தாழ்த்தப்பட்ட ஒருவர் கலெக்டராகிவிட்டால், ‘நான் உயர்ந்த சாதி ஆகையால் நான் அவர் கீழ் வேலை செய்ய மாட்டேன்’ என்று யாரும் கூற முடியாதுன்னேன். உயர்ந்த சாதின்னு கூறிக் கொள்பவன் தானாவே கலெக்டர் உத்தரவுக்கு வேலை செய்யறான். ஆகவே, கல்வியே இந்த ஜாதிய கொடுமைய போக்க வழிவகுக்கும்ன்னேன்!”

                ” டாக்டருக்கு படிச்ச தாழ்த்தப்பட்டவன் ஊசி போட்டு எந்த நோயாளி செத்தான்னேன்? பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த எஞ்சினீயர் கட்டுன எந்தப் பாலம் இடிஞ்சுபோச்சுன்னேன்? யாருக்கு வாய்ப்பு கொடுத்தாலும் இஞ்சினியரும் ஆகலாம். டாக்டரும் ஆகலாம்னேன்!” என சாதி கட்டமைப்புகளை அடியோடு வெறுத்தார்.

    தனது அமைச்சரவையில் பரமேஸ்வரன் என்னும் தாழ்த்தப்பட்டவரை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சராக்கி கோயில்களில் முதல்மரியாதை பெற வைத்தவர் காமராசர். பேச்சுதான் செயல்.. செயல்தான் பேச்சு என வாழ்ந்தவர் காமராசர்.

                 நீர்பாசனமற்று வறண்டு கிடந்த பூமியை வளமாக்கும் நோக்கோடு மழைநீரை சேமித்து, தேக்கி விவசாய நிலங்களுக்கு நீர்பாசனம் செய்ய அமராவதி அணை, ஆரணியாறு அணை, வைகை அணை, மணிமுத்தாறு அணை, மலம்புழா அணை, சாத்தனூர் அணை, மேட்டூர் கால்வாய், குந்தா அணை,  வாலையாறு அணை, பரம்பிக்குளம்-ஆழியாறு அணை, கீழ்பவானி அணை, கிருஷ்ணகிரி அணை, புள்ளம்பாடி அணை, மங்கலம் அணை, கோமுகி அணை, மேல்கட்டளை கால்வாய்,  வீடுர் அணை, தோப்பியார் ஏரி, மீனக்கரை ஏரி, பெரியாறு நீர்மின் திட்டம் என்பன போன்ற அணைகளைக் கட்டி நீர்மேலாண்மையை மேம்படுத்திய பெருமை காமராசரைச் சாரும்.  இதனையே,

    நதிகளை ‘அணை’த்து

    நீரிலும் பெயரெழுதி

    நிலைத்தாய்,

    அது உன் சரித்திரம்.

     என வார்த்தைகளில் வடிக்கிறார் வைரமுத்து.

                மேலும், நீர்மேலாண்மையோடு நீர்மின்சக்தி தயாரிக்கும் பணிகளையும் மேற்கொண்டார் காமராசர்.  தொழில்வளம் பெருகும் நிலையில், தொழிற்சாலைகளுக்கு மின்சாரம் தேவைப்படும்  என்ற நோக்கில் அவர் ஆற்றிய பணிகள் அளப்பரியது.

    தொழில் மேம்பாட்டில் கர்மவீரர்:

    தொழிற்சாலைகளுக்கான அடிப்படை கட்டமைப்புகளை ஒருங்கிணைந்த முறையில் காமராசர் உருவாக்கியதன் மூலமாக தொழில் வளர்ச்சியில் இந்தியாவிலேயே தமிழகம் இரண்டாவது  இடத்தைப் பிடித்தது. அயல்நாட்டுச் சுற்றுப்பயணத்தின்போது இந்திய தேசத்தின் நலத்திற்கும்,  தமிழகத்தின் உயர்வுக்கும் வித்திட்டார்.

    1. நெய்வேலி நிலக்கரித் திட்டம், 2.பெரம்பலூர் ரயில்பெட்டித் தொழிற்சாலை, 3.திருச்சி பாரத் ஹெவி எலெக்ட்ரிகல்ஸ், 4.ஊட்டி கச்சா பிலிம் தொழிற்சாலை, 5.ஆவடி கனரக வாகன தொழிற்சாலை, .கல்பாக்கம் அணுமின் நிலையம், கிண்டி டெலிபிரின்டர் தொழிற்சாலை, 8.சங்ககிரி துர்க்கம் சிமெண்ட் தொழிற்சாலை, 9.மேட்டூர் காகிதத் தொழிற்சாலை, 10.கிண்டி அறுவைச் சிகிச்சைக் கருவித் தொழிற்சாலை, 11 .துப்பாக்கி தொழிற்சாலை, 12. நெய்வேலி நிலக்கரி சுரங்கம், 13. சேலம் இரும்பு உருக்காலை, 14. பெரம்பூர் ரயில்பெட்டித் தொழிற்சாலை, 15. அரக்கோணம் இலகுரக ஸ்டீல் ப்லான்ட் தொழிற்சாலை, 16. சமய நல்லூர் அனல்மின் நிலையம், 17. சென்னை அனல்மின் நிலையம், 18. நீலகிரி கச்சாபிலிம் தொழிற்சாலை என்பன போன்ற தொழிற்சாலைகளை நிறுவி எண்ணற்ற தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பினையும் அவர்களுக்கான வாழ்வாதாரத்தையும் உருவாக்கித் தந்த பெருமை காமராசரையே சேரும்.

    பதவித் துறப்பில் கர்மவீரர்:

    வேலூர் சிறையில் இருந்தபோது,  1941-ம் ஆண்டில் விருதுநகர் நகராட்சி மன்றத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.  1937-ல் இப்பதவி தம்மைத் தேடி வந்தபோது, குறுகிய வட்டச் செயல்பாட்டுக்குள் தம்மை நிறுத்திக் கொள்ள விரும்பாததால் ஏற்கமறுத்தார் காமராசர்.  இதுபோன்ற பதவியில் இருப்பவர்கள், சரியாகக் கவனித்து பொறுப்போடு செயலாற்ற வேண்டும் என்பதில் உறுதியோடு இருந்தார்.  விடுதலையானதும் விருதுநகருக்கு வந்து, முனிசிபல் கவுன்சில் கூட்டத்தில் தலைவராகக் கலந்து கொண்டு, தம்மைத் தேர்ந்தெடுத்ததற்கு நன்றி கூறிவிட்டுத் தொண்ணுhறாவது தீர்மானத்தை நிறைவேற்றிவிட்டுப் பதவியை ராஜினாமா செய்தார்; கட்சி வேலைகளுக்காகப் பதவியைத் தூக்கி எறிந்தார்.

    காமராசர் முதலமைச்சராக இருந்தபோது பிரதமராக ஜவஹர்லால் நேரு பதவி வகித்தார். அப்போது காங்கிரஸ் கட்சியில் சில பிரச்சனைகள் உருவாகின. எனவே காமராசர் ஒவ்வொரு மாநிலத்திலுள்ள மூத்த தலைவர்களும் நீண்ட நாட்கள் பதவி வகிக்கின்றவர்களும், ஆட்சிப் பணியை விட்டு விலகி கட்சிப்பணியில் ஈடுபட வேண்டும் என்ற திட்டத்தை பிரதமர் ஜவஹர்லால் நேருவிடம் கூறினார். இந்தத் திட்டத்தைப் பிரதமர் ஜவஹர்லால் நேரு வரவேற்று ஆதரித்தார்; மிகவும் பாராட்டினார்; உலகத்திலுள்ள நாளிதழ்களெல்லாம் பெருந்தலைவர் காமராஜரின் இந்தத் திட்டத்தைப் பாராட்டின. மூத்த தலைவர்கள் பதவி விலகும் திட்டத்தை “காமராசர் திட்டம்” என்றே அழைத்தார்கள். இதனை ‘கே பிளான்’ என்றே கூறினார்கள். இதற்கு முன்னுதாரணமாக தான் வகித்த முதலமைச்சர் பதவியைத் துறந்து கட்சிப்பணிக்கு தன்னை அர்ப்பணித்துக் கொண்டார்.

    இராமனுக்கு நாளைய தினம் முடிசூட்டு விழா என்றபோது எந்தளவுக்கு மகிழ்வாய் இருந்தானோ அதே அளவுக்கு மறுநாள் வனவாசம் என்றபோதும் மகிழ்வாய், ‘அன்றலர்ந்த தாமரையாய்’ இருந்ததாக கம்பன் வர்ணிப்பதைப் போல காமராசர் தன்னுடைய முதலமைச்சர் பதவியைத் துறந்தபோது மனமகிழ்வாய் இருந்ததாகக் கூறுவர்.  ஆனால், கர்மவீரர் காமராசரோ,

    இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள்

    துன்பம் உறுதல் இலன்.

    என வள்ளுவப் பெருந்தகை குறிப்பிடும் மனநிலையை ஒத்திருந்தார். அதனால்தான் கண்ணதாசன்,

    தீயன நாடார், என்றும்

        சிறுமைகள் நாடார், வாழ்வில்

    மாயங்கள் நாடார், வெற்று

         மந்திரம் நாடார், நீண்ட

    வாய்கொண்டு மேடை சாய்க்கும்

         வரட்டு வார்த்தைகள் நாடார்

    தமிழ் மேம்பாடும் நீதிமன்ற சூடும்:

          கர்மவீரர் காமராசர் தமிழ்ப் புத்தாண்டு தினமான 13.04.1953 அன்று தமிழக முதலமைச்சராகப் பதவி ஏற்றுக் கொண்டார். பகல் உணவுத் திட்டத்தை முதலில் எட்டயபுரத்தில் தொடங்குவது என முடிவெடுத்தார்.

    ‘வயிற்றுச் சோறிட வேண்டும்-இங்கு

    வாழும் மனிதருக் கெல்லாம்

    பயிற்றிப் பலகல்வி தந்து-இந்தப்

    பாரை உயர்த்திட வேண்டும்’

    என்றும்,

     ‘அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்;

          ஆல யம்பதி னாயிரம் நாட்டல்;

    அன்ன யாவினும் புண்ணியம் கோடி

          ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறி வித்தல்’

    என்று பாடிய மகாகவி பாரதி  பிறந்த மண்ணில் இத்திட்டத்தைத் தொடங்கி வைத்து  தமிழ்க் கவிதைகளால் விடுதலைக்கு வேகமூட்டிய மகாகவிக்கு மரியாதை செய்தார்.

    மூதறிஞர் ராஜாஜியின் பல்வேறு செயல்பாடுகளில் காமராசர் முரண்பட்டிருந்தாலும்,  தான் அமைத்த மந்திரிசபையில் சி.சுப்பிரமணியம் உட்பட ராஜாஜியின் அமைச்சரவையில் இருந்தவர்களையும் சேர்த்துக் கொண்டார். இவ்வாறு தமிழுக்கும், தமிழுக்காக உழைத்தவர்களும் பெருமை சேர்த்ததோடு,

    கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த

    ஒன்றுநன்று உள்ளக் கெடும்

    என்ற வகையில் ஒருவரிடம் உள்ள நல்ல செயலை எடுத்துக் கொண்டு அவரைப் பாராட்டவும் அவர்களிடம் ஆலோசனை பெறவும் முனைந்தவர் காமராசர்.

    ஆனால், ஈழப் பிரச்சனையில்  முதலமைச்சர் எடுத்த முடிவு சரியில்லை என  முரண்பட்டார் என்பதற்காக, “வீட்டு வசதி வாரிய தலைமை அலுவலகக் கட்டடத்தின் மேல், பெரிய அளவில் நியான் விளக்கு போர்டு உள்ளது. அதில், “தமிழ் வாழ்க’ என்கிற வார்த்தை பொறிக்கப்பட்டுள்ளது. இதை உண்மையாக நடைமுறைப்படுத்த வேண்டுமென்றால், கொள்கை ரீதியான மாறுபாடுகள் இருந்தாலும் மனுதாரரைப் போன்ற தமிழ் எழுத்தாளர்கள், தமிழ் அறிஞர்கள், தமிழ் சிந்தனையாளர்களை கவுரவப்படுத்த வேண்டும். தமிழ் சிந்தனையாளர்களை பாதுகாப்பதன் மூலமே தமிழ் வாழும். அப்போது தான், நியான் விளக்கு பொருத்தப்பட்ட போர்டில் உள்ள, “தமிழ் வாழ்க’ என்கிற வாசகம் மேலும் மிளிரும்” என  நீதிபதி சந்துரு ஆணையிடும் அளவுக்கு கீழ்த்தரமான அரசியல் நடத்துவோரே இன்றுள்ள அரசியல்வாதிகளாய் நாட்டை வலம் வந்து கொண்டுள்ளனர்.

    விளம்பரம் விரும்பா கர்மவீரர்:

                “விளம்பரத்தைத் துரத்திக்கொண்டு ஓடும் அரசியல் வாதிகளிடையே, விளம்பரம் தன்னைத் தேடி வந்தபோதும், அதைத் துரத்தி அடிக்கும் அரசியல்வாதியாகக் காமராசர் வாழ்ந்தார்” எனப் பத்திரிகையாளர்சோ  குறிப்பிட்டதற்கு சான்றாக ஒன்றைக் குறிக்கலாம்.

    காமராசர் இலங்கை, மலேயா, ரஷ்யா, கிழக்கு ஜெர்மனி, ஹங்கேரி, பல்கேரியா, செக்கோஸ்லேவாகியா, யூகோஸ்லோவாகியா போன்ற வெளிநாடுகளுக்கு பயணம் செய்துள்ளார். இரஷ்யாவின் அழைப்பை ஏற்று 22.06.1966-ம் ஆண்டு மாஸ்கோ சென்றார்.  குளிரைச் சிறிதும் பொருட்படுத்தாமல் எளிய உடையில் சென்ற காமராசரை அங்குள்ள மக்கள் வியப்புடன் பார்த்தனர்.   நமது நாட்டு வேட்டியும் சட்டையுமே அணிந்து சென்றதால் இந்த எளிய உடை பற்றியும் அவருடைய எளிமை குறித்தும் அந்தந்த நாட்டு பத்திரிகைகளும் வெகு சிறப்பாக பாராட்டின.  மக்களும் வியந்து போற்றினர்.  வைரமுத்து இதனை,

    சோவியத்தின் உறைபனிக்

    காற்றிலும்

    கதராடை பூண்டே

    கைவீசி நடந்தாய்

    அது உன் எளிமை.

    என வார்த்தெடுக்கிறார்.

    பள்ளியில் தொடர்ந்து கல்விகற்க இயலாத நிலையில், காமராசருக்கு ஆங்கில அறிவு குறைவு என்று கூறுவாருண்டு. ஆனால் அவர்களுக்கு பதிலளிக்கும் விதமாக ஒரு சம்பவத்தைச் சுட்டுகின்றனர் காமராசரைக் குறித்து அறிந்தோர்.  லால் பகதூர் சாஸ்திரி பிரதமராக இருந்தபோது இலங்கைக்குச் சென்று  ஒப்பந்தம் ஒன்று செய்துகொண்டு திரும்பினார். சென்னையில் ராஜ்பவனில் நிருபர்கள் அவரைச் சந்தித்துக் கேள்விகள் கேட்டனர். ஒருவர் கேட்டார், “இப்போது நீங்கள் செய்துகொண்டிருக்கிற ஒப்பந்தத்தை தொடர்ந்து பதவிக்கு வரும் ஆட்சியாளர்கள் மதித்து நடப்பார்களா?”” என்றார். அப்போது அங்கிருந்த பெருந்தலைவர்,

     “Don’t go and print any such suggestions in the paper. This is an agreement signed by two Democratic Governments. Just as any Democratic Government in India would honour this agreement, the successive Governments in Ceylon will also honour this agreement. That is the principle involved in it.”  என ஆங்கிலத்தில் பதிலிறுத்தாராம். இந்த பதிலினை சாஸ்திரியும் ஒப்புக் கொண்டாராம்.  மேலும், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் போன்ற மொழிகளும் காமராசருக்குத் தெரியும் என்கின்றனர்.

                ஆனால் இன்றுள்ள அரசியல்வாதிகள் எனக்கு பல மொழிகள் தெரியும் என்று கூறிக் கொண்டாலும், வழக்கு சார்ந்த தாள்களைப் பார்க்க, தமிழில் மொழிபெயர்க்கக் கூறி தங்களின் மொழியறிவை மக்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டும் அவலநிலையும் உள்ளது.

                கல்விச் சாலைகள், தொழிற்கூடங்கள், அணைக்கட்டுகள், போக்குவரத்து சாலைகள், மக்கள் மேம்பாடு,  என காமராசரின் ஆட்சி சிறப்பாக நடந்து வந்த நிலையில், ‘மலையக் கொடஞ்சு அணைகள் கட்டியிருக்கிற குந்தா அணை போன்றவற்றையும், நாம் செய்த சாதனைகளையும் ஒரு ‘நியூஸ் ரீலா’ எடுத்தா வர்ற தேர்தலுக்கு உதவியாக இருக்கும்’ என்று  நெல்லை ஜெபமணி கூற, சற்றே யோசித்த காமராசர், ‘எவ்வளவு செலவாகும்’ என்று வினவ, ‘ஒரு மூணு இலட்சம் வரை ஆகும்’ என்று பதிலளிக்கப்பட்டது.

                ‘ அடப்பாவிகளா? . .  மூணு இலட்சமா? இந்த மூணு இலட்சம் இருந்தா நான் இன்னும் பத்து ஊர்ல பள்ளிக்கூடம் கட்டிப்பிடுவேன். . . புள்ளைங்க படிக்க வழியக் காணோம், நீ நியூஸ் ரீல் காட்டி வெளிச்சம் போடப் பாக்குறியா. .  போ. . போ . .’  என காமராசர் விரட்டினார்.

                ஆனால் இன்றுள்ள அரசியல்வாதிகள், சட்டப்பேரவை வைரவிழா நினைவுத் தூண் கட்டுவதற்கு ரூ.1.32 கோடி செலவும், அதனை திறப்பதற்காக பத்திரிகைகளில் விளம்பரம் கொடுக்க ரூ.1.43 கோடியும் செலவு செய்வதைப் பார்க்கிறபோது, காமராசரின் பெயரை ஓட்டுக்காக உச்சரிக்கிறார்கள் என்பது மட்டும் தெளிவாகிறது.

    பொதுவாழ்வில் கர்மவீரர்:

    உலகில் முதன்மையானது எது என்று நபி(ஸல்) அவர்களிடம் கேட்டபோது, ‘தாய்’ என்றாராம். இரண்டாவதாக எது முதன்மையானது எனக் கேட்டபோது, ‘தாய்’ என்றாராம். மூன்றாவதாக முதன்மையானது எது என்று கேட்டபோதும், ‘தாய்’ என்றாராம்.

    காதற்ற ஊசியும் வாராதுகாண் கடைவழிக்கே என்று வாழ்ந்து, எல்லாவற்றையும் துறந்த பட்டினத்தடிகள் கூட, தாயின் மரணத்தில் கண்ணீர் விட்டு ‘ஐயிரண்டு திங்களாய் அங்கம் எலாம் நொந்து பெற்று’ எனப் பாடித் தீமூட்டினாராம்.  ஆனால்  காமராசர் தனது தாயிடம் நடந்து கொண்ட விதம் நம்மை எல்லாம் மெய் சிலிர்க்கச் செய்கிறது. இதனை உள்வாங்கிக் கொண்ட தமிழருவி மணியன்

    நீ. .  ஏழ்மையில் பிறந்து ஏழ்மையை உணர்ந்து

    ஏழைகள் வாழ ஆட்சியில் அமர்ந்தவன்!

    உன் பொது வாழ்க்கை. . .

    வேள்வி வளர்க்கும் தபோவனத்தைப் போல்

    தூய்மையானது.

    வாய்மையும் நேர்மையும்

    உன் வாழ்க்கை நதியின்

    இரண்டு கரைகள்.

    எனப் புகழ்ந்துரைக்கிறார்.

    காமராசர்  அமைச்சரவையிலிருந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ஆர்.வெங்கட்ராமன், விருதுநகரிலுள்ள காமராசரின் வீட்டிற்கு கோடை காலத்தின் பொழுது சென்றிருந்தார். அப்பொழுது  காமராசரின் தாயார் சிவகாமி அம்மாள் பனை ஓலை விசிறியால் விசிறிக் கொண்டிருந்தார். உடனே தன்னுடைய சொந்த செலவில் ஒரு மின் விசிறியை வாங்கி வந்து, அதை இயக்குவதைப் பற்றி அவரிடம் சொல்லிக் கொடுத்து விட்டுப் போனார். பிறகொரு சமயம் வீட்டிற்குப் போனபோது மின் விசிறியைப் பார்த்துவிட்டு விசாரித்த காமராசர், எத்தனையோ தாய்மார்கள் பனை ஓலை விசிறியால் தான் விசிறிக் கொள்ளும் பொழுது, உனக்கு மட்டும் வெங்கட்ராமன் மின் விசிறி ஏன் வாங்கித் தந்தார்? முதலமைச்சரின் அம்மா என்பதால் தானே. இது கூட சலுகை லஞ்சம் மாதிரி தான் என்று சொல்லி விட்டு அந்த மின்விசிறியை விருதுநகரில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்திற்கு எடுத்துக் கொண்டு போகச் சொல்லிவிட்டார் .

    தன்னுடைய பெயரை பயன்படுத்தி தனது குடும்பத்தினர் எந்த தவறான காரியத்திலும் ஈடுபடக் கூடாது என காமரசர் மிகவும் கண்டிப்பாக இருப்பார். இதனாலேயே தனது தாயாரை தான் முதல்வரான பிறகும் விருது நகரிலேயே தங்க வைத்தார்.  அம்மாவை சென்னைக்கு அழைத்து வந்தால், “அவர்களோடு கூட நாலு பேரு வருவான்,  அப்புறமா அம்மாவை பாக்க , ஆத்தாவை பார்க்கன்னு பத்து பேரு வருவான் . இங்கேயே டேரா போடுவான். இங்க இருக்குற டெலிபோனை யூஸ் பண்ணுவான், முதலமைச்சர் வீட்டிலிருந்து பேசறேன்னு சொல்லி அதிகாரிகளை மிரட்டுவான் எதுக்கு வம்புன்னு தான் அவங்களை விருதுநகர்லயே விட்டு வச்சிருக்கேன்” என தனது நண்பரிடம் கூறினாராம்.

    டெல்லியில் நடந்த உலகக் கண்காட்சி  துவக்க விழாவுக்கு அன்றைய பிரதமர் நேருவுடன் காமராசரும் சென்றிருந்தார். தற்பொழுது பேரூந்து நிலையங்களிலும் இரயில் நிலையங்களிலும் வெகு சாதாரணமாகக் காணப்படுகிற எடை பார்க்கும் எந்திரம் அந்தக் கண்காட்சியில் அறிமுகமாகியிருந்தது . நேரு எந்திரத்தில் ஏறி நின்று, காசு போட்டு எடை பார்த்தார். மத்திய அமைச்சர்கள் பலரும் அவ்வாறே செய்தனர். காமராசர் மட்டும் சற்றே ஒதுங்கி நின்றிருக்க, நேரு அவரையும் எடை பார்க்கும்படி கட்டாயப் படுத்தினார். அவரோ மறுத்துவிட்டார். சுற்றியிருந்தோர் பிரதமர் சொல்லியும் காமராசர் மறுக்கிறாரே என்று திகைத்து நின்றனர்.

    அப்பொழுது நேரு சொன்னார்; ” காமராசர் எதற்கு மறுக்கின்றார் என்று எனக்குத் தெரியும் , இந்த எந்திரத்தில் ஏறி நின்று போடும் காசு கூட இப்பொழுது இவரிடம் இருக்காது” என்றார். பிறகு, காமராசருக்கு தானே காசு போட்டு எடை பார்த்தார் நேரு .

    முழந்துண்டு சட்டைக்கும் முதலில்லாத் தொழிலாளி

    பழனிமலை ஆண்டிக்குப் பக்கத்தில் குடியிருப்போன்

    பொன்னில்லான், பொருளில்லான், புகழன்றி வேறில்லான்

    என்ற கவிதைவரிகள் காமராசரின் நிதர்சன வாழ்வை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

    தேர்தல் சமயத்தில் எல்லா அரசியல்வாதிகளும் தங்களின் சொத்து விபர கணக்குகளை வெளியிட்டு இருக்கின்றனர். நம் பெருந்தலைவர் காமராசர் அவர்களின் சொத்து விபரக் கணக்குகளை ஒப்பிட்டு பார்த்தால் அவரின் எளிய வாழ்க்கை நமக்குப் பாடமாக அமையும்.

    1. சட்டை பையில் .. ரூபாய் 100
    2. வங்கிகணக்கில் .. ரூபாய் 125
    3. கதர் வேட்டி .. 4
    4. கதர் துண்டு .. 4
    5. கதர் சட்டை .. 4
    6. காலணி .. ஜோடி 2
    7. கண் கண்ணாடி .. 1
    8. பேனா .. 1
    9. சமையலுக்கு தேவையான பத்திரங்கள் -6

                இவற்றையெல்லாம் கண்ணுறும்போது கர்மவீரரின் பொதுவாழ்வில் தூய்மை என்னும் உயர்பண்பு உள்ளபடியே எண்ணி வியக்கத்தக்கது.

    ‘ஈன்றாள் பசிகாண் பானாயினும் செய்யற்க

    சான்றோர் பழிக்கும் வினை’

    என்ற குறள்வழி வாழ்ந்த காமராசரின் செயல்களைப் பார்த்தே மறைந்த அப்துல்கலாம் அவர்களும்,  குடியரசு மாளிகையில் வந்து தங்கிய தனது குடும்பத்தினருக்கான செலவை தனது வருமானத்திலிருந்து எடுத்து செலவு செய்தாரோ என்று எண்ணத் தோன்றுகிறது.

    கர்மவீரர் குறித்து சான்றோர்:

                “காமராசர் பதவியையே நம்பி வாழ்பவரல்லர்.  தம்மாலானதை மக்களுக்குச் செய்யவோமென்று நினைத்துக் கொண்டு செய்பவர். காலுக்கு ஆகாத செருப்பைக் கழற்றியெறிவது போல தம் மக்களுக்குத் தொண்டு செய்ய இடந் தராத பதவியை அவர் விரும்பவில்லை. காரணம் அவர் பெண்டு, பிள்ளை குட்டி அற்றவர்.  யாருக்கும் சொத்து சேர்க்க வேண்டும் என்ற அவசியமும் இல்லாதவர்.  எனவேதான் அவரால் மக்களுக்கு நன்மை செய்ய முடிகிறது.  மற்ற எந்த அரசியல்கட்சியை எடுத்துக் கொண்டாலும் அவரைப் போன்ற ஆளைக் காட்ட முடியாது.

                “கல்வி சம்பந்தப்பட்ட வரையில் எந்த நிகழ்ச்சி ஆரம்பித்தாலும் கடவுள் வாழ்த்துச் சொல்வரை நிறுத்திவிட்டுக் காமராஜருக்கு வாழ்த்துக் கூற வேண்டும்””

    நமது நாட்டைப் பொறுத்தவரையில் காமராசர் ஒரு பெரிய தியாகி ஆவார்.   காமராசர் கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளில் இந்தியாவில் தோன்றியிராத ஓர் அதிசய மனிதராகி, மக்களின் பாராட்டுதலையும் போற்றுதலையும் பெற்றவராக விளங்கினார்.  கடந்த 2000 ஆண்டுகளில் தமிழகம் கண்டிராத வளர்ச்சியை காமராசர் ஆட்சியில் காண்கிறோம் என தந்தை பெரியார் பாராட்டினார். மேலும் “பச்சைத் தமிழர்” என்றும் பெரியார் காமராசரைப் புகழ்ந்துரைத்தார். பொதுக்கூட்டங்களில் குழந்தைகளுக்குப் பெயர் வைக்க வலியுறுத்தும் போது பெரியார் அந்தக் குழந்தைகளுக்கு காமராசர் என்றே பெயர் வைப்பாராம்.

    23.04.1967 அன்று காஞ்சிபுரம் பச்சையப்பன் உயர்நிலைப்பள்ளி ஆண்டுவிழாவில் காமராசர் திருவுருவப் படத்தை திறந்து வைத்து அண்ணா ஆற்றிய உரையில், ” நான் அவரது படத்தை நான் திறக்கிறேன் என்றால் அவர் தமிழகத்துக்கு நன்மை என்பதற்காக.  அடக்கி ஒடுக்கப்பட்ட சமுதாயத்திலிருந்துதான் உன்னதானமான மனிதர்கள் தோன்றுவார்கள் என்று மூதறிஞர்கள் கூறியிருக்கிறார்கள்.

    வைரம் என்பது நீண்ட நெடுங்காலத்துக்குப் பூமியின் அழுத்தத்தால், கீழே அடங்கி ஒடுங்கிக் கிடந்த கரித்துண்டுதான்.  அதுபோல் நெடுங்காலமாக அடக்கி ஒடுக்கப்பட்ட சமுதாயத்திலிருந்து தோன்றி வைர மணிகளில் ஒருவரே காமராசர்” எனப் போற்றிப் புகழ்ந்தார்.

    தமிழ்நாடு காங்கிரசின் அப்போதைய நான்கு தூண்களாக இருந்த பெரியார், திரு.வி.க. சேலம் டாக்டர் வரதராஜுலு நாயுடு, சர்க்கரைச் செட்டியார் ஆகியோர் ராஜாஜியின் மேட்டுக்குடி அரசியல் பிடிக்காமல் காங்கிரசிலிருந்து விலகிய நிலையில், ராஜாஜியை எதிர்த்து கடைசி வரை காங்கிரசில் இருந்தவர் காமராசர்.  இதைக் கருத்தில் கொண்டே  தமிழ்த்தென்றல் திரு.வி.“எங்கள் நான்கு பேரின் ஒரே உருவமாக நீங்கள் இருக்கிறீர்கள்.  ரொம்ப மகிழ்ச்சி” எனக் காமராசரைப் புகழ்ந்துரைத்தார்.

    சென்னை மாநகராட்சியைக் கைப்பற்றிய தி.மு.க. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த காமராசருக்கு ஆளுயர வெண்கலச் சிலையை நிறுவியது.  இந்தச் சிலையை 09.10.1961-ல் அன்றைய பிரதமர் நேரு திறந்து வைத்தார்.  அவ்விழாவில், “உண்மையான தலைவன் என்பதற்கு எடுத்துக் காட்டத் தக்கதோர் உதாரணம்; மக்கள் மத்தியில் உருவானதோர் தலைவன்; தான் ஏற்றுக் கொண்டுள்ள பொறுப்பை நிறைவேற்றத்தக்க ஆற்றல் கொண்ட தலைவன்; செயலில் தன்னை மறந்து ஈடுபடும் தலைவன் சிலையைத் திறக்கிறேன்.

    உயிரோடு இருப்பவர்களுக்குச் சிலை அமைப்பதை நான் விரும்புவதில்லை.  முறைந்த பின் மரியாதை செலுத்துவதே ஏற்றது என எண்ணுபவன் நான்.  ஆனால் காமராஜ் என் நண்பர் என்ற முறையிலும், அவர் மக்களிலிருந்து தோன்றிய மக்கள் தலைவர் என்ற முறையிலும் அவருக்கு விதிவிலக்கு  அளிப்பதே மாண்பு.

    நாட்டில் குறைந்த (ஏழுபேர்) மந்திரிகளைக் கொண்டு இந்தியாவில் முன் உதாரணமான மாநிலமாக தமிழ்நாட்டை ஆக்கி, ஊழலற்ற ஆட்சி நடத்தினார்.  அதை கவுரவிக்கும் வகையில் அவரது சிலையைத் திறக்கிறேன்” என்றார்.

    எம்.ஜி.ஆர். அவர்கள், “காமராசர் என் தலைவர்; அண்ணா என் வழிகாட்டி” என மொழிந்தார். கலைஞர் கருணாநிதி தன் எழுத்திலும் பேச்சிலும் காமராசரைப் பல வகைகளில் புகழ்ந்துரைத்துள்ளார்.  மேலும் காமராசர் பிறந்த நாளான ஜுலை 15-ஐ ‘கல்வி வளர்ச்சி நாள்’  என அறிவித்தார்.

    காமராசர் தன்னுடைய தனிப் பெரும் செயல்களால்  மாற்று அரசியல் களத்தில் இருந்தவர்களும் மதிக்கத்தக்க வகையில் நடந்து கொண்டார்.  ‘குற்றம் இலனாய் குடிசெய்து வாழ்வானைச் சுற்றமாய்ச் சுற்றும் உலகு” என வள்ளுவப் பெருந்தகை கூறியது  கர்மவீரர் காமராசரையே குறிக்கும்.

    கர்மவீரருக்கு நாம் செய்தன; செய்யத்தக்கன:

    02.10.1977அன்று இம்மண்ணுலகை நீங்கிய கர்மவீரரரின்  நாட்டுத் தொண்டுக்கு மதிப்பளித்து இந்திய அரசு “பாரத ரத்னா” பட்டம் வழங்கியது. தமிழக அரசு விருதுநகர் இல்லத்தையும் சென்னை திருமலைப் பிள்ளை சாலையில் அவர் வாழ்ந்து வந்த இல்லத்தையும் அன்னாரின் நினைவு இல்லங்களாக ஆக்கியுள்ளது.  ஓவ்வொரு நாளும் பலரும் அங்கே சென்று அவர் வாழ்ந்த இடத்தையும் அவர் உபயோகப்படுத்திய பொருட்களையும் கண்டு வணங்கிச் செல்கின்றனர்.

    மதுரைப் பல்கலைக் கழகம் இன்று “மதுரை காமராசர் பல்கலைக் கழகம்” என்று பெயர் மாற்றப் பெற்றுள்ளது.  கல்வித்  தொண்டாற்றிய காமராசருக்குத் தக்க நினைவுச் சின்னமாகும். சென்னை கிண்டியில் காமராசர் அடக்கம் செய்யப்பட்ட இடம் காமராசர் நினைவு ஆலயமாக அமைக்கப்பட்டுள்ளது.

    ஊருக்கு உழைத்தவனே உறங்குகிறாயோ

    உழைத்தது போதுமென்று உறங்குகிறாயோ

    ஊராருக்கு அழுதவனே உறங்குகிறாயோ

    ஊராரை அழ வைத்து உறங்குகிறாயோ

    நாடு பார்த்ததுண்டா இந்த நாடு பார்த்ததுண்டா

    நாடு பார்த்ததுண்டா இந்த நாடு பார்த்ததுண்டா

    தன் வீடு பார்க்காமல் வாழ்வு பார்க்காமல்

    நாடு முன்னேற நாளும் உழைத்தவனை  (நாடு பார்த்ததுண்டா. . )

    பள்ளி அறியாத பிள்ளை பல பேரின் முகத்தை பார்த்தானடா

    அது ஊரு சுற்றாமல் சோறு தான் போட்டு படிக்க வைத்தானடா

    மாடு பிடித்த கையில் ஏடு கொடுத்த மகராஜன் இவன்தானடா

    ஊரு உலகெங்கும் தேடி பார்த்தாலும் ஈடு எவந்தானட

    இத்தனை தவம் தான் என்று வருந்த வைக்கிறானே

    திரும்ப வர வேண்டுமே எங்கள் கருப்பு காந்தி இவனே (நாடு பார்த்ததுண்டா. . )

    பதவி இருந்தாலும் பதவி போனாலும் உதவி புரிவானடா

    தனை பெற்ற தாயை விட பிறந்த நாடு தான் பெரிது என்பானடா

    ஆற்று நீரையே அணைகள் கட்டியே தேக்க வைத்தானடா

    கண்கள் ஊற்றும் நீரை தடுக்க இயலாமல் ஏங்க வைத்தானடா

    வலிமை இருந்த போதும் மிக எளிமையோடு இருந்தான்

    வெள்ளை உள்ளம் கொண்ட எங்கள் கருப்பு காந்தி இவனே(நாடு பார்த்ததுண்டா. . )

    காமராஜருக்காக வாலி எழுதி இளையராஜா பாடிய பாடல் காமராசரின் இறுதி ஊர்வலத்தை நம் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தும் காவியம்.

    உன் பிரிவுக்குப் பின்

    நாங்கள் வரங்கள் வாங்கிய தேவர்கள் அல்லர்.

    சாபங்கள் சுமக்கும் சாதாரண மனிதர்கள்.

    உன் பார்வை வெளிச்சம் படமுடியாததால்

    எங்கள் வாழ்க்கை

    பாழும் இருட்டில் படுத்திருக்கிறது.

    என்னும் தமிழருவி மணியனின் இரங்கலும் எண்ணத்தக்கது.

    சோலை  என்றால் பூத்து மணம் பரப்ப வேண்டும். தோட்டம் என்றால், காய்த்துக் கனி குலுங்க வேண்டும்.   தலைவனென்றால்.. மக்கள் பணி ஆற்ற வேண்டும் அந்த வகையில்,  எளிமை, அடக்கம், ஒழுக்கம், மனத்திட்பம், சிக்கனம், முயற்சி, ஊக்கம்,  வாய்மை,  நேர்மை,  நடுநிலைமை, துப்புரவு, உள அமைதி,  நிறையுடைமை, பணிவுடைமை என்பன போன்ற சான்றோர் போற்றும் பண்புகளை தன்னகத்தே கொண்டு குழந்தைகள் படிப்பதற்காகவும், மதிய உணவுக்காகவும் உலக நாடுகளிடம் கையேந்தி உதவிய கொடை வள்ளல் கர்மவீரர் காமராசர்.

    பதினெண்கீழ்க்கணக்கு  நூல்களுள் ஒன்றான நாலடியார் அறிவிக்கிற,

    இளையான் அடக்கம் அடக்கம் கிளைபொருள்

    இல்லான் கொடையே கொடைப்பயன் – எல்லாம்

    ஒறுக்கும் மதுகை உரனுடை யாளன்

    பொறுக்கும் பொறையே பொறை. (நாலடியார் 65)

    என்ற பாடல்  ஒருவர்,  இளமைக் காலத்தில் தங்களின் ஐந்து புலன்களுக்கும்  மிக எளிதாக அடிமைப்பட்டு விடுவர். அவரே முதியவராகும் பொழுது புலனடக்கம் என்பது எளிதாகின்றது. ஆனால், உண்மையான புலனடக்கம் என்பது ஒருவர் இளையவராக இருக்கும் பொழுது அடக்குவதே என்றும்,  கொடை என்பது  ஒருவரிடம் பொருள் குறைந்து இருக்கும் நிலையில், அவர் மற்றவருக்கு உதவி செய்வாரானால், அதுவே கொடை எனவும் விளக்குகின்றது இந்தப் பாடல்.

    நிதியில்லை, அதனால் மதுக்கடைகளைத் திறந்து நிதி திரட்டுகிறோம் என அரசாட்சி நடத்தும் இன்றைய அவல நிலையை எண்ணி தலைகுனிய வேண்டியுள்ளது.

    கர்மவீரர் காமராசர் என்ற தலைப்பில்  பேராசிரியர் சி.இலக்குவனார் நூலொன்றை எழுதியுள்ள நிலையில்,  ‘வல்லமை இணையதளம் நடத்தும் இக்கட்டுரையை, அவரைப் போற்றிப் புகழ்ந்து கொண்டாடிக் கொண்டிருக்கிற அரசியல் தலைவர்கள் காமராசர் வாழ்ந்த நெறிகளிலிருந்து எங்ஙனம் பிறழ்ந்து தங்களின் செயல்பாடுகளை வகுத்துக் கொண்டுள்ளார்கள் என்ற கோணத்தில் அணுகுவோம்.

    ‘இந்தியாவே உன்னிடம் இருந்தது! ஆனால் உன் சட்டைப்பை காலியாகவே இருந்தது’ என்ற தலைப்பிலான கவிஞர் மேத்தாவின் கீழ்க்கண்ட வரிகளிலும் இந்த நெருப்புமழை பொழிவதைக் காணலாம்.

    ஒரு தீர்க்கதரிசியை நேசிப்பதைப் போல் உன்னை நேசிக்கிறேன். உன்னால்தான் முடிந்தது தாயையும் பார்க்காமல் நாட்டைப் பார்ப்பதற்கு! உன் கையில் தராசு! இவர்கள் கையிலோ சூட்கேஸ்! நீ நினைத்திருந்தால் கரன்ஸி நோட்டுகளால் விருதுநகரில் இன்னொரு இமயமே எழுந்திருக்கும்!  (இந்தியாவே உன்னிடம் . . )

    ஆலைகளை  நேசித்தவரிடையே நீ அபூர்வமானவன்! ஏழைகளை நேசித்தாய்! நீ லட்சுமியை அனுப்பி சரஸ்வதியை வரவழைத்தாய்.  இவர்களோ சரஸ்வதியையே லட்சுமியாக்கிக் கொண்டிருக்கிறார்கள். ஆமாம். . நீ கல்விக்கண் திறந்தாய்! இவர்களோகல்விக் கடை திறந்தார்கள்! என்னால் கள்ளுக்கடை வைத்திருப்பவர்களை மன்னிக்க முடிகிறது. கல்விக்கடை வைத்திருப்பவர்களை மன்னிக்க முடியவில்லை

    நிஜத்தைச் சொல்கிறேன் நேரு குடும்பத்தின் மீது நீ  பாசம் வைக்காதிருந்தால் இந்தியாவின் பரிமாணமே வேறு காந்திதான் நீயும். .  கருப்புக் காந்தி மகாத்மா காந்தியோ சிரிக்கும் நெருப்பு நீ சிரிக்கத் தெரியாத  நெருப்பு! அந்த நெருப்பு திரு நீறாகி விட்டது. உன் சாம்பலுக்கும் தணல் தகிக்கிறது.

    பெரியாரின்  பல்கலைக்  கழகத்தில் பச்சைத் தமிழன் எனும் பட்டம் பெற்றவனே இன்று நீ இங்கிருந்தால் இங்கிருக்கும் காய்ந்த தமிழர்களைக் கண்டித்திருப்பாய்! இன உணர்வு தமிழனுக்கு இருந்திருந்தால் இந்தியாவின் ஸ்டாலினாய் இருந்திருக்க வேண்டியவன் நீ! நீ நாடியிருந்தால் ஒரு தமிழன் பிரதமராயிருக்க முடியும். நீதான். .  நாடா ராயிற்றே!

    மணிமுடி உன்முன் வைக்கப்பட்டது. ஆனால் நீ காளிக்குத் தலையை வெட்டித் தந்த கபாலிகனாகவே காலத்தை முடித்தாய்! மறக்க முடியவில்லை மனது வலிக்கிறது! உன்னை  நினைக்கவும் முடியவில்லை நிஜம் நெஞ்சைக் கிழிக்கிறது!

    பொதுவாழ்வில் நேர்மை, தனிவாழ்வில் தூய்மை, வார்த்தைகளில் வாய்மை இம்மூன்று பண்புகளையும் உள்ளடக்கிய இரசாயனக் கலவையில் உதித்தவன்தான் கர்மவீரர் காமராசர்  என்பார் தமிழருவி மணியன்.

    மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார் கண்துஞ்சார்

    எவ்வெவர் தீமையு மேற்கொள்ளார் – செவ்வி

    அருமையும் பாரா ரவமதிப்புங் கொள்ளார்

    கருமமே கண்ணா யினார் (நீதிநெறி விளக்கம்.53)

    என்பதற்கொப்ப, தாம் எடுத்த பணியை, காரியத்தை எத்தனை தடைகள் வந்தாலும்  செவ்வனே செய்து முடிக்கிற தீரமிக்க ஆற்றலாளராய் விளங்கியதால்தான் காமராசர் கர்மவீரர் என்ற புகழுக்குரியவரானார்.

    அத்தகு புகழுக்கும் சிறப்புக்கும் உரிய காமராசரின் வாழ்வியல் நெறிகள், தலைமைப் பண்புகள், தனி மனித மாண்புகள் என ஏராளமாய் உள்ளவற்றில்  சிலவற்றைச் சுட்டிக் காட்டுவது  வாழும் மக்களுக்கும், வருங்காலத் தலைமுறைக்கும் அறிமுகப்படுத்தியதாக அமையும் என்ற நோக்கில் காலம் உள்ள வரையும் நிலைத்து நிற்கும் மாமனிதரின் வாழ்வியலில் நுழைவோம்; அவர் வழி நடப்போம்இந்தியாவின் பெருமையை உலகில் நிலை நிறுத்துவோம்.

    —————–

    கட்டுரைக்கு உதவிய நூல்கள்:

    1. காமராஜ் ஒரு சகாப்தம்

    .கோபண்ணா,  சூர்யா பப்ளிகேஷன்ஸ்,  ‘காமராஜ் பவன்’,  573, அண்ணா சாலை, தேனாம்பேட்டை, சென்னை-6  முதற்பதிப்பு ஜூலை 2003

    1. காமராஜ் ஒரு சரித்திரம்

    முருக தனுஷ்கோடி,  பூம்புகார் பதிப்பகம்,  சென்னை-108  பதிப்பு 1975

    1. காமராஜரும் கண்ணதாசனும்

    தமிழருவி மணியன், கற்பகம் புத்தகாலயம், 50/18, ராஜாபாதர் தெரு, தியாகராய நகர், சென்னை-17  பதிப்பு 2006.

    1. காமராஜருடன் கால்நூற்றாண்டு

    உதவியாளர் வைரவன், ரமணா கம்யூனிகேஷன்ஸ், புதிய எண் 25/2, லட்சுமி காலனி, தியாகராய நகர், சென்னை-17  மூன்றாம் பதிப்பு 2013.

    1. திருக்குறள்
    2. நாட்டுக்கு உழைத்த நல்லவர் காமராஜ்

    சந்தான லக்ஷ்மி,  பழனியப்பா பிரதர்ஸ், சென்னை-14, முதற் பதிப்பு 14.11.1975.

    1. நாலடியார்
    2. நீதிநெறி விளக்கம்
    3. பாரதிதாசன் கவிதைகள்
    4. பாரதியார் கவிதைகள்
    5. பெருந்தலைவர் காமராசர்

    பட்டத்தி மைந்தன், சீதை பதிப்பகம், 6/16, தோப்பு வெங்கடாசலம் தெரு, திருவல்லிக்கேணி, சென்னை-5,  முதற்பதிப்பு  திசம்பர் 2006.

    1. பெருந்தலைவர் காமராஜ் நற்பணி டிரஸ்ட்டின் நான்காம் ஆண்டு மலர்.

    –           62/2 பேரம்பாலு தெரு, பழைய வண்ணை, சென்னை-21.

    1. காமராசர் குறித்த தமிழருவி மணியன்  அவர்களின் பேச்சு

                  (https://www.youtube.com/watch?v=jloAIJBhvxE)

    Share
  • “பெருந்தலைவர் காமராஜர்” – கர்மவீரர் காமராசர்!

    கீதா மதிவாணன்.

    நாடறிந்த ஒரு நல்லவரைப் பற்றி என்ன எழுதுவது? என்ன எழுதாமல் இதுவரை விட்டுப்போயிருக்கிறது? காமராஜர் என்னும் கம்பீரத் தோற்றத்துள் அடங்கிக் கிடந்த எண்ணற்ற ஆளுமைகளுள் எதைப்பற்றிப் பேசுவது? பெயரைக் கேட்ட மாத்திரத்திலேயே அவர்தம் புகழ்பாடும் நாவுகளிலிருந்து அன்னாரது தனிப்பட்ட குணநலன்கள் பற்றியும் அவருடைய தன்னிகரில்லா சேவையைப் பற்றியும் அறியமுடிகிறது. கட்சி பேதமற்று அனைவரும் அவர் ஆட்சியைப் போற்றுவதிலிருந்தே அம்மாமனிதரின் தீர்க்கமான அரசியல் வாழ்வைப் பற்றியும், ராஜதந்திர காய்நகர்த்தல்கள் பற்றியும் ஏராளமாய் அறியமுடிகிறது… இவற்றுள் எதைச்சொல்ல? எதை விட?

    வெற்றுப்பேச்சும் வீராப்பும், போலி அலங்கார வார்த்தை ஜாலங்களும் அறியாத வெள்ளந்தி மனிதர் அவர். ஓட்டுகளைக் குறிவைத்து மக்களை மடமையாக்கும் வஞ்சகம் அறியாத மக்கள் தலைவர். தான் படிக்காத போதும் தலைமுறைகளைப் படிக்கவைத்த மாபெரும் கல்விப் புரட்சியாளர். குலக்கல்வித்திட்டத்தை ஒழித்து குடும்பங்கள்தோறும் அறிவொளியை ஏற்றிவைத்த அன்பின் சுவாலை. செவிக்குணவில்லாத போது வயிற்றுக்கும் சிறிது ஈயப்படும் என்றார் வள்ளுவர். அந்த சிறிதளவு உணவும் இல்லாமல் சோர்ந்துபோய்ச் சரியும் ஏழைக்குழந்தைகளுக்கு சோறு போட்டு நிமிர்த்திய தாயுள்ளம்.

    1903 ஆம் ஆண்டு ஜூலைத்திங்கள் 15 ஆம் நாளில் தாங்கள் பெற்றெடுத்த தனயனுக்கு காமாட்சி என்று குலதெய்வத்தின் பெயரைச் சூட்டி மகிழ்ந்தனர் சிவகாமி அம்மாளும் குமாரசாமி அய்யாவும். பின்னாளில் நாடாளப்போகும் ஒரு உத்தமனைப் பெற்றிருக்கிறோம் என்று அந்த நாளில் அவர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை என்றாலும் விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பதற்கிணங்க, சிறுவனாயிருந்த காலத்திலிருந்தே நேர்மையும், ஒழுக்கமும், சமயோசிதமும், சகாயகுணமும், பொறுமையும், நிதானமும், துணிவும், தேசபக்தியும் போட்டி போட்டுக்கொண்டு காமாட்சியிடத்தில் நிறைந்திருந்தன.

    பேரனின்பால் பிரியமுள்ள பாட்டி, ‘காமாட்சி’ என்றழைக்க, தாய் ‘ராஜா’ என்றழைக்க, தந்தை ‘காமாட்சிராஜா’ என்றழைக்க… பின்னாளில் அனைவராலும் ‘காமராஜர்’ என்றழைக்கப்பட்டார். தந்தையோடு கல்வி போம் என்பது அவர்தம் வாழ்வில் உண்மையாகிப்போனது. காமராஜரின் தந்தை இறந்ததன் காரணமாக, குடும்பப்பொறுப்பை ஏற்கும் நிர்ப்பந்தம் அவரை ஆறாம் வகுப்போடு முடக்கியது. தாய்மாமன்மார் கடைகளில் வேலைபார்த்து குடும்பக் கடமையை ஆற்றினார். ஆனாலும் நாட்டுக்காற்ற வேண்டிய கடமை குறித்த எண்ணம் அவர் உள்ளத்துள் நீறு பூத்த நெருப்பாகக் கனன்றுகொண்டே இருந்தது.

    சுதந்திரப்போராட்டக்கனல் நாடெங்கும் தீவிரமாய் தன் அக்னிச்சுவாலையை வீசிக்கொண்டிருக்க, அதில் ஈர்க்கப்பட்டு களத்தில் இறங்கினார் வாலிப வயதிலிருந்த காமராஜர். இளமைக்கனவுகளில் ஈடுபடும் வயதில் அவர் இலட்சியக்கனவில் ஈடுபட்டிருந்தார். அரசியல் அவரது முழுநேரப் பணியாகிப் போனது. கள்ளுக்கடை மறியல், நாக்பூர் கொடிப் போராட்டம், வெள்ளையனின் சிலையகற்றுப் போராட்டம், சைமன் கமிஷனுக்கு எதிர்ப்புப் போராட்டம் என்று நாடு தழுவிய பல போராட்டங்களில் கலந்துகொண்டார். பலவற்றை முன்னின்று நடத்தினார். பலமுறை கைதுசெய்யப்பட்டார்.

    காமராஜர், தம் வாழ்நாளில் கிட்டத்தட்ட ஒன்பது ஆண்டுகளை சிறையில் கழித்தார். இன்றைய அரசியல்வாதிகளின் சிறைவாசம் போல அன்றைய அரசியல்கைதிகளின் சிறைவாசம் அத்தனை சொகுசானதன்று. அப்படியிருந்தும் தண்டனைக்காலத்தைக் குறைத்துக்கொள்ள அவர் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. எடுக்கப்பட்ட முயற்சிகளுக்கும் ஒத்துழைக்க மறுத்துவிட்டார். தன்னோடு கைதுசெய்யப்பட்டவர்கள் சிறையில் இருக்கையில் தான் மட்டும் வெளிவருவது அவர்களுக்கும் நாட்டுமக்களின் நம்பிக்கைக்கும் செய்யும் துரோகம் என்றார்.

    பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானினும் நனி சிறந்தனவே’ என்பார் பாரதி… ஆனால் காமராஜருக்கோ… பெற்ற தாயை விடவும் பிறந்த பொன்னாடே பெரிதெனத் தோன்றிற்று. அதனால்தான் தன் தாயை விட்டு விலகிவந்து தாய்நாடே கதியென்று கிடக்க அவரால் இயன்றிருக்கிறது. தாய்நாட்டின் மக்களின் உயர்வுக்காகவும் வளர்ச்சிக்காகவும் உயிரைக்கொடுத்துப் போராட முடிந்திருக்கிறது.

    ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய் என்னும் குறளை அவர் தாய் அறிந்திருப்பாரா, தெரியவில்லை. ஆனால் தன்னை வந்து காணவும், தன் கையால் ஒருவாய் சோறுண்ணவும் நேரமில்லாது, நாட்டுமக்களின் நலனையே தன் உயிர்மூச்சாய் எண்ணி இரவும் பகலும் பாடுபடும் மகனை எண்ணி நிச்சயம் பெருமைப்பட்டிருக்கும் அந்த தாயுள்ளம்.

    மயில் ஆடுவதைக் கண்டு அது குளிரால் நடுங்குகிறதென்று நினைத்து, அது கேளாமலேயே தன் போர்வையை வழங்கினானாம் வள்ளல் பேகன். ஆனால் உண்மையிலேயே குளிரால் நடுங்கிய காமராஜரின் தாய், ஒரு போர்வை தேவைப்பட்டபோது அதைக்கூட அவர் தன் மகனிடம் கெஞ்சிக் கேட்டுத்தான் பெறமுடிந்திருக்கிறது. இது என்ன பெரிய செய்தியா என்று யாரும் கேட்கலாம். அப்போது காமராஜர் அவர்கள் தமிழ்நாட்டின் முதலமைச்சராய் இருந்தார் என்பதுதான் விசேடம். தான் மட்டுமல்லாது, தன்னைச் சார்ந்தவர்களுக்காகவும் எந்த சலுகையையும் அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. ஒரு முதலமைச்சரின் தாயென்ற எண்ணம், அவருடைய தாய்க்கு ஒருநாளும் உண்டாகியிருக்க வாய்ப்பே இல்லை. பெற்றத் தாயையும் நாட்டிலுள்ள மற்றத் தாய்மார்களையும் ஒன்றாக மதித்தார். ஒன்றுபோலவே நடத்தினார். அவர்களுக்கில்லாத வசதியும் வாய்ப்பும் தன் தாய்க்கு மாத்திரம் தருவதை தேசத்துரோகமாகவே மனத்தில் எண்ணிய மகான் அவர். நாட்டுப் பிள்ளைகளையெல்லாம் தான் பெற்ற பிள்ளைகளாக எண்ணி மகிழ்ந்தார். அவர்களுடைய எதிர்கால வாழ்க்கைக்கு கல்வியென்னும் அடித்தளத்தை அமைக்க அயராது பாடுபட்டார்.

    அரசியலின் அடிப்படிக்கட்டில் கால்வைத்தவன் கூட அமோகமாய் சம்பாதிக்கும்போது ஒரு முதலமைச்சராய் இருந்தும் அவர் எந்த ஆடம்பரத்தையும் நாடவில்லை என்பது எவ்வளவு பெரிய செய்தி. அது மட்டுமா? ஒரு முதலமைச்சருக்கு முன்னால் செல்லும் பாதுகாப்பு வாகனங்களைக் கூட மறுத்து, சிக்கன நடவடிக்கையை மேற்கொண்டவர் அந்த சீரிய மனிதர்.

    முதலமைச்சர் பதவி என்பதை நாட்டு மக்களுக்கு சேவைசெய்யக் கிடைத்த ஒரு வாய்ப்பாக மட்டுமே எண்ணியவர் அவர். பதவிக்கும் பொருளுக்கும் புகழுக்கும் ஆசைப்படாத அவரது நெஞ்சம் ஏழை எளிய மக்களின் வளமான வாழ்வுக்காகவும் நாட்டின் நலனுக்காகவுமே பேராசைப்பட்டது. முதலமைச்சர் என்னும் பதவியைக் கொண்டு நாட்டை வளப்படுத்தும் பணியில் தன்னாலான எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டார். தேவை ஏற்பட்ட ஒருநாளில் அப்பதவியையும் துச்சமெனத் துறந்தார். முதலமைச்சராய் மட்டுமல்ல, பதவியில் இல்லாத ஒரு தொண்டனாகவும் பொதுமக்களுக்கு சேவை செய்யமுடியும் என்பதை செயலில் காட்டியவர். தன்னையே நாட்டுக்கு அர்ப்பணித்த தார்மீகத் தலைவர் அவர்.

    தனிமனித வாழ்விலும் சரி, அரசியல் வாழ்விலும் சரி, கறை படியாத கரங்கள் காமராஜரின் கரங்கள்… தன்னிடம் இருப்பதையும் இல்லாதவர்க்கு தாரை வார்த்த செங்கரங்கள்… தன்னலம் பாராது, தனக்கென எதையும் ஒதுக்காது, பிறர்நலனே பெரிதென்று உழைத்தார்.

    பிரச்சனைகளைக் கண்டு பயந்து ஒதுங்கிச் செல்வதால்தானே பிரச்சனைகள் பூதாகரமாய் உருவெடுக்கின்றன. அவற்றைத் துணிவுடன் எதிர்கொண்டு தேவையான முயற்சிகளை மேற்கொண்டு முளையிலேயே கிள்ளியெறிந்துவிடும் வண்ணம் தீர்வுகண்டுவிட்டால்? வாய்ச்சொல் வீரர்களாயிருப்பவர்களுக்கு மத்தியில் செயல்வீரராய்த் திகழ்ந்த காமராஜர் அதைத்தான் செய்தார். அதனால்தான் அவர்தம் அமைச்சர்களுக்கு சொன்னார், “பிரச்சனையை எதிர்கொள்ளுங்கள். அவை எவ்வளவு சிறியதாக இருந்தாலும் பரவாயில்லை. அவற்றைத் தீர்ப்பதற்கான வழியைத் தேடுங்கள். “

    பகைவனுக்கருள்வாய் – நன்னெஞ்சே பகைவனுக்கருள்வாய் என்ற பாரதியின் வாக்கை மெய்யாக்கிய நன்னெஞ்சு காமராஜருடையது. கட்சியில் அவருக்கெதிராக செயல்பட்டவர்களையும் தன் அமைச்சரவையில் இருத்தி அழகுபார்த்த பரந்த உள்ளம் அவருடையது. தொண்டர்களை அடிமைகள் போலெண்ணி தங்கள் ஆதாயத்துக்காக பயன்படுத்தும் அரசியலில் அவர்களை உண்மையான பாசத்தோடும் அக்கறையோடும் அணைத்து செயல்பட்டவர் காமராஜர். தொண்டர்களின் தலைவரான அவர், தன்னுடைய பண்பாலும் நன்னடத்தையாலும் கட்சியின் தலைவரானார்… கடமையின்மீதான சிரத்தையாலும் சீரிய செயல்திறத்தாலும் கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் மனத்தில் நிறைந்தார்… கட்சிபேதமற்று மக்கள் அனைவரும் போற்றி வணங்கும் தனிப்பெருந்தலைவரானார்.

    மனிதனை சிந்திக்கவைக்காத எந்த விஷயமும் சமுதாயத்துக்குத் தேவையில்லை என்பது அவருடைய கருத்து. “கடவுள் இருக்கிறது, இல்லை என்பதைப் பற்றி எனக்கு எந்தக் கவலையும் இல்லை. செய்யும் காரியம் நல்ல காரியமாக இருந்தாலும் போதும். கோயில், சாமி என்று பணத்தை உண்டியலில் கொட்டுபவன், அந்தக் காசைக் கொண்டு சாலைவசதி செய்துதந்தால் என்ன? பள்ளிக்கூடம் கட்டினால் என்ன? மதம் மனிதனை பயமுறுத்தி வைத்திருக்கிறதே தவிர, தன்னம்பிக்கையை வளர்த்திருக்கிறதா?’ என்று கேள்விகளையெழுப்பி சிந்திக்கத் தூண்டுகிறார். அதனால்தான் பகுத்தறிவுப் பகலவன் பெரியாருக்கும் பிடித்தமான தலைவராகிப் போனார்.

    விடுதலை பத்திரிகையில் எழுதிய தலையங்கம் ஒன்றில் பெரியார், “காமராசரைப் போன்ற தன்னலமற்ற ஒருவரை அரசியலில் இனி நாம் காணவே முடியாது. காமராசர் தமிழர்களுக்குக் கிடைத்த நிதி போன்றவர். அவரது ஆட்சி தமிழகத்தில் மேலும் நீடிக்கவும் அவருடைய ஆட்சிக்கு இடையூறு எதுவும் ஏற்படாமலும் பார்த்துக்கொள்ள வேண்டியது தமிழ் மக்களின் தலையாய கடமையாகும்.” என்று எழுதியுள்ளார்.

    காமராஜரை தென்னாட்டு காந்தி என்பார்கள். ஆனால் காந்திக்கும் இவருக்கும்தான் எவ்வளவு வேறுபாடு. வளரும்போது கோணலாய் வளர்ந்து பின் தானே நிமிர்ந்து நேராகி நின்று கிளைவிட்டுத் தழைத்த மரம் அது. இதுவோ… முளை விட்ட நாளிலிருந்தே நெஞ்சுநிமிர்த்தி நெடுநெடுவென்று நேர்வழியில் வளர்ந்து நின்று செழித்த மரம். எளிமையும் நேர்மையும் அவரிரு கண்கள்… சீரிய சிந்தனையும் செயல்பாடும் அவரிரு கரங்கள்… மக்கள் நலனே அவரது நாடித்துடிப்பு.

    படிக்காதை மேதை என்று இவரைக் குறிப்பதும் சரியா என்று யோசித்துப் பார்க்கிறேன்… படிக்காதவர் என்று எதன் அடிப்படையில் சொல்லப்படுகிறார்? படிப்பு என்பது எதைக் குறிக்கிறது? பள்ளிப்படிப்பை மட்டும்தானா? வாழ்க்கைப் படிப்பைக் கற்றுத்தேர்ந்த வல்லான் அல்லவா அவர்? பள்ளிப்படிப்பை விட்டாலும் அன்றாடம் நூலகம் சென்று உலகநடப்பையும் நாட்டுநடப்பையும் வாசித்தறிந்துகொண்டாரே… உலகளவில் புகழ்பெற்ற அரசியல் ஆளுமைகளைப் பற்றியும், தங்கள் நாட்டு விடுதலைக்காக போராடிய அயல்நாட்டுத் தலைவர்களைப் பற்றியும் படித்தறிந்தாரே… அவையெல்லாம் படிப்பு என்னும் வரையறைக்குள் வாராதா என்ன? பள்ளிப்படிப்பை முடிக்காவிட்டாலும் வாழ்க்கைப் பாடத்தை முழுவதும் கற்றுத்தேர்ந்து முதுகலைப் பட்டம் பெற்றவரன்றோ காமராஜர்?

    தலைமைப் பண்புகளான நேர்மை, நாணயம், சேவை மனப்பான்மை, தியாகம், நம்பிக்கை, தெளிவு, திட்டமிடல், முடிவெடுத்தல், வழிநடத்தல், சூழ்நிலையை சாதுர்யமாகக் கையாளுதல், மற்றவர்களை தம் கருத்துக்கு இணங்கவைக்கும் தன்மை, மற்றவர் கருத்துக்கு மதிப்பளித்தல், எதிரிகளையும் மன்னிக்கும் பெருந்தன்மை, தோல்வியிலும் துவளாத மனம் போன்ற அனைத்துப் பண்புகளும் இயல்பிலேயே கைவரப் பெற்றவர் காமராஜர். ஒரு தலைவன் என்பவன் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு, தானே ஒரு உதாரண புருஷனாய் வாழ்ந்துகாட்டியதால்தானே அவர் பெருந்தலைவர் காமராஜர் என்றழைக்கப்படுகிறார்.

    அரைநூற்றாண்டுகால பொதுவாழ்க்கைக்குப் பிறகு, தன்னிகரற்ற அந்த தாயுள்ளம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி மீளாத்துயிலில் ஆழ்ந்தது. 1975 அக்டோபர் மாதம் இரண்டாம் நாள் காமராஜர் நம்மைவிட்டு மறைந்தார். அவரது மறைவுக்கு நாடே துக்கம் அனுசரித்தது. கட்சிபேதமற்று அனைத்துத் தலைவர்களும் அன்னாரது மறைவுக்காய் வருந்தினார்கள். அவருக்கு முன்னும் பின்னும் எத்தனையோ தலைவர்கள் நாடாள வந்தார்கள்.. போனார்கள்… வாழ்கிறார்கள்… ஆனாலும் காமராஜரின் ஆட்சிக்காலம் மட்டுமே தமிழக வரலாற்றில் பொற்காலம் என்னும் பதிவுசெய்யத்தக்கப் பெருமை கொண்டது என்பது என்றும் எவராலும் மறுக்கமுடியாத உண்மை.

    Share
  • “பார்க்கட்டும் … ஆகலாம் …” – கர்மவீரர் காமராசர்!

    ச.சசிகுமார்.

    “ஏதாவது செய்யதான் நாமெல்லாம் இங்க இருக்கோம். இந்த கோட்டையில வந்து உக்காந்திருக்கோம்னேன்… முடியாதுன்னு சொல்ல ஆயிரம் காரணம் கண்டுபிடிக்கவா படிச்சிருக்கோம்? முடியும்னு சொல்ல ஒரு காரணம் கண்டுபிடிங்கன்னேன்…”

    —முதலமைச்சரின் அறை அதிர்ந்தது. சில அதிகாரிகளும், அமைச்சர்களும் இருக்கைகளில் அமர்ந்திருக்க, சில நொடிகள் அசாத்திய அமைதி… மின்விசிறியின் சப்தம் மட்டும் சன்னமான இரைச்சலில் …

    “Dead investment… பிரயோஜனம் இல்லாத திட்டம்னு எல்லாம் சொல்ல நம்மை மக்கள் தேர்ந்து எடுக்கலை… ஏதாவது செய்வோம்னு தான் மக்கள் காத்திருக்காங்க… உங்க பட்ஜெட்ல இதுக்கெல்லாம் பணமில்லேன்னாக்கூட இது நடக்கணும்… அதுக்குள்ள வழியைப் பாருங்க..”

    —தண்ணீர் குடித்து விட்டு, கல்வி ஆலோசகர் நெ. து . சுந்தரவடிவேலு-வை அழைத்துக்கொண்டு, அறையிலிருந்து வெளியேறினார் முதல்வர். அதிகாரிகள் செய்வதறியாமல் எழுந்தனர். தத்தமக்குள் பேசிக்கொண்டு கலைந்தனர்.

    சில வாரங்களுக்கு முன்…
    1956 – நெல்லை அருகே , சேரன்மாதேவி… முதல்வரின் வாகனம், அதற்கான அடையாளங்கள் இன்றி எளிமையாக விரைந்துகொண்டிருக்கிறது. வெயிலடிக்கும் வறண்ட வெளியில் அங்கொன்றும் இங்கொன்றுமாக மேய்ந்துகொண்டிருக்கும் கால்நடைகள். தொலைவில் கையில் குச்சியுடன் மாடு மேய்த்துக் கொண்டிருக்கும் சிறுவன். கல்வி வள்ளல், முதல்வர் காமராசர் வண்டியை ஓரமாக நிறுத்தச் சொல்கிறார். காரிலிருந்து இறங்கி, மெல்ல அந்த சிறுவனை நோக்கி நடக்கிறார்… வெள்ளை கதராடை அனற்காற்றில் படபடக்கிறது… ஆளற்ற வெளியில் இரண்டு அதிகாரிகள் தொடர, முரட்டு காலணிகளின் கீழ் சருகுகளும், முட்களும் சரசரக்க… தமிழக முதல்வர் சிறுவனை நோக்கி நடக்கிறார். ஏதும் புரியாமல், அதிகாரிகள் ஓட்டமும் நடையுமாக.

    “தம்பி… என்னப்பா பதினோரு மணி ஆகுது… பள்ளிக்கூடம் போகாம இங்க இருக்கே …” முதல்வர் கேட்க சிறுவனிடமிருந்து பதிலில்லை.

    “தம்பி சொல்லுப்பா… பள்ளிக்கூடம் போகலையா?”

    “ம்ம்… நீங்க யாரு…?” சிறுவன் கேட்க, சிரிக்கிற முதல்வர். அதிகாரிகள் அவனிடம் எதோ சொல்ல முயல, அமைதியாக இருக்கச் சொல்லி விட்டு தொடர்கிறார்.”

    உன் கேள்விக்கு பதில் நான் சொல்றேன்… என் கேள்விக்கு பதில் சொல்லு தம்பி…”

    சிறுவன் முதல்வரை மேலும் கீழும் பார்த்தவாறே,” அப்பா, அம்மா ரெண்டுவேரும் கூலி வேலைக்கு போயிருவாங்க… தங்கச்சி தம்பிய பாத்துக்கிடுவா… நான் காலையில மாட்டைப் பத்திக்கிட்டு வந்து, சாயங்காலம் போனாத் தான், நாங்க ரெண்டு வேளை சோறு திங்க முடியும்…”

    “தம்பி… படிச்சா… வளர்ந்து நல்ல வேலைக்கு போயி, நல்லா இருக்கலாம்லா டே…” அவன் மொழியில் கேட்கிறார்.

    “ஐயா, படிச்சா… நாளைக்கு நல்லா இருக்கலாம்… இன்னிக்கு பசிக்குமே…” சிறுவன்

    “சரி தம்பி…பசிக்கு, சோறு போட்டா பள்ளிக்கூடம் போவியா?”

    கண்களில் புரியாத சந்தேகத்துடன் சிறுவன் ,” நீங்க சோறு போடுவீங்களா?”

    அன்று, சென்னை திரும்பும் வரை முதல்வர் மனதிலும், செவியிலும் அந்த சிறுவனின் கேள்வி தொடந்து ஒலித்துக் கொண்டிருந்தது. சில நாட்களுக்கு முன், பெருந்தல்மண் கல்விமேம்பாடு கூட்டத்திற்கு சென்று வந்த கல்வி ஆலோசகர் நெ.து.சுந்தரவடிவேலு மேலும் கொடுத்த தகவல்கள் முதல்வர் மனதை உலுக்கின. மதியவேளையில் பள்ளிப் பிள்ளைகள் பசிக் கொடுமையால், மயங்கி விழுந்த செய்தி அதிர்ச்சி அடையச் செய்தது. அவசர அவசரமாக அதிகாரிகளைக் கூட்டி, ஆலோசனை செய்து, பள்ளிகளில் மதிய உணவு வழங்குவதற்கான வழிமுறைகள் கேட்டால், “DEAD INVESTMENT” எனவும், நிதி நிலைமை அதற்கு இடம் கொடுக்கவில்லை எனவும் அடுக்கடுக்காக காரணங்கள்.

    அறையில் இருந்து வெளியே வந்து முதல்வர் நெ. து .சு விடம், “இவங்க என்ன சொன்னாலும் நான் இந்த திட்டத்தை கண்டிப்பாக நிறைவேத்தத்தான் போறேன்னேன்… அரசு கஜானால பணம் இல்லைன்னாலும் இது நடக்கும்… வெளைச்சல்ல முதல் படி கடவுளுக்கும், ரெண்டாவது படி வேலைசெஞ்சவனுக்கும் அளந்து கொடுக்கும் வசதி உள்ளவங்க, மூணாவது படி நெல்லை படிக்கிற பிள்ளைகளுக்காக அளந்து கொடுங்கன்னு கேக்கப் போறேன்… நம்ம பிள்ளைங்க படிக்கணும்யா… படிக்கணும்… அவங்களுக்காக நான் ஊர், ஊரா… போயி… பிச்சைப் பாத்திரம் ஏந்தினா என்ன தப்புங்கிறேன்?”

    — பிச்சைப் புகினும் கற்கை நன்றே… ஔவையின் வார்த்தைகளை அந்த தலைவன் படித்ததில்லை. உணர்ந்திருந்தது தான் ஆச்சர்யம். அன்று, அந்த அதிசயத் தலைவனின் வார்த்தைகளுக்கு, தமிழ் மாநிலம் கட்டுப்பட்டது. நாகலாபுரம் விவசாயப் பெருமக்கள் இசைந்து படியளக்க, பல் வேறு இடங்களில் இருந்தும், உதவித் தொகைகளும், உணவு தானியங்களும் வந்து நிறைய, ஒரு மாநில முதல்வரின் முயற்சியால், அரசு நிதியுதவி ஏதுமின்றி 1956 ஜூலை மாதத்தில் தொடங்கியது “மதிய உணவுத் திட்டம்”. ஏறத்தாழ பதின்மூன்று மாதங்கள் அரசு நிதியின்றி, தொடர்ந்த திட்டம். பிள்ளைகள் பள்ளிக்குச் செல்ல தடையாக இருந்த, பசி, பட்டினி… நீங்கி பள்ளிகளில் மாணவர்கள் கல்வியில் கவனம் செலுத்தத் தொடங்கினார்கள். 1957 அக்டோபர் மாதம் முதல் அரசு நிதியுதவியுடன் மதிய உணவுத் திட்டம் தொடரும் என அறிவிப்பு வந்தது.

    கல்வி வள்ளல் காமராசர்… கர்ம வீரர் காமராசர்… கறுப்பு காந்தி காமராசர்… The King maker காமராசர்… இந்திரா காந்தி அம்மையார் அருகே, கால் மேல் கால் போட்டு கம்பீரமாக மேடையில் அமர்ந்து காட்சி தரும் இந்த மனிதரின் ஆளுமையின் வீச்சு என்ன?

    பள்ளிப்படிப்பை முடிக்காத இந்த எளிய மனிதரிடம், பண்டித நேரு வந்து ஆலோசனை கேட்க அவசியப்படுத்தியது எது?

    கோடு உயர்ந்து, குன்றம் தாழ்ந்து போன போதும், ராஜாஜி போன்ற பெரிய மேதைகளை மதித்தும், அதே சமயம் முரண்பட்டும், அரசியல்செய்யும் இவரின் பலம் என்ன விதமானது?

    இந்திய விடுதலைக்காக, காந்தியடிகளின் உண்மைத்தொண்டனாக வாழ்வில் ஆறாண்டுகளுக்கு மேல் சிறைகளில் வாடி வெளிவந்த இந்த மனிதர் நாட்டிடத்தும், மக்களிடத்தும் கொண்ட பற்று எத்தகையது? “குணாளா… குலக்கொழுந்தே…” என எதிர்க்கட்சி பேரறிஞரையும் உருகி மடல் எழுத வைத்த நேர்மை எவ்வகை சார்ந்தது?

    “காமராசர் ஆட்சி மீண்டும் மலர வாக்களியுங்கள்…” – ஒவ்வொரு ஐந்து வருட இடைவெளியிலும் தமிழ் கூறும் நல்லுலகின் மூலை , முடுக்கெல்லாம், தெருக்களிலெல்லாம்… வெவ்வேறு மேடைகளில், வெவ்வேறு குரல்களில் ஒலிக்கும் ஒரே வாக்கியம். இதற்காக இந்த மனிதர் செய்தது என்ன?

    இவை தலைமுறைகள் தாண்டி தொடரும் கேள்விகள்.

    காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர், அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர், தமிழக முதல்வர்… இந்திய அரசியல் அரங்கில் இரண்டு பிரதமர்களை உருவாக்கிய மத்திய ஆட்சி பீடத்தின் ராஜ குரு… இத்தனையில் இவர் யார்? இத்தனை பதவிகளில், இத்தனை பொறுப்புக்களில், இத்தனை பெருமைகளில்… எது இன்று வரை இந்த மனிதரை எண்ணி எண்ணி வியக்க வைக்கிறது? “இது தான்” என அறுதியிட்டு, உறுதி பட பதில் சொல்லிவிட இயலாத கேள்வி.

    ◆ “வயதான காலம் நான் தனியா இங்கிருந்து என்ன ஐயா செய்ய… அங்க உன்னோட வந்து இருந்து, உனக்கு பொங்கி போட்டு, கொறைய காலத்தை கழிக்கலாம்னு நெனைக்கேன்! நீ சரின்னு சொன்னா, கெளம்பி வந்துருவேன்!” – மணமாகாமல் தனித்து இருக்கும் தன் மகன் மேலுள்ள அக்கறையில் தாய் சிவகாமி அம்மாள் தனது தள்ளாத வயதில் தயங்கித், தயங்கி கேட்க,”வேண்டாம்” -என மறுத்து விட்டார். “அம்மா நீ… அங்க வந்து என்னோட இருக்கது பத்தி பிரச்சனையில்லை… அப்புறம், உன்னைப் பாக்க வந்தேன்னு சொல்லி ஊர்ல இருந்து பத்து பேரு சொந்தக்காரன் வருவான்… தங்குவான்… முதலமைச்சருக்கு சொந்தம்னு ஊரெல்லாம் சொல்லுவான்… அதெல்லாம் சரிப்பட்டு வராதுன்னேன்… தவிர, நாம வாங்குற சம்பளத்துக்கும் அதெல்லாம் கட்டுப்படி ஆகாதுன்னேன்…” – சுற்றம் சூழ்ந்து, அதனால் நேர்மை கேள்விக்குள்ளக்கப் படுமோ? என்ற தூய எண்ணம்.

    ◆ தலைமைச் செயலகத்தில் ஒரு உயர் அதிகாரி, தனக்கு கீழ் வேலை செய்யும் ஒரு கடை நிலை ஊழியரை தொடந்து இழிவாக நடத்துவது முதல்வரின் கவனத்துக்கு வருகிறது. தனிப்பட்ட முறையில் உறுதி செய்து கொள்கிறார். ஒரு நாள் தனது அறைக்கு அந்த அதிகாரியை அழைக்கிறார். எதிரே இருக்கும் நாற்காலியில் அமரச் சொல்லுகிறார். முதல்வர் அவரது பணிகளைத் தொடர்கிறார். சற்று நேரத்தில் அந்த கடைநிலை ஊழியரை தனது அறைக்கு அழைத்து, அவரையும் இன்னொரு நாற்காலியில் அமரச் சொல்லி, மேசையில் இருக்கும் கோப்புக்களை பார்க்கத் தொடங்குகிறார். உயர் அதிகாரியும், கடை நிலை ஊழியரும் ஒன்றும் புரியாத குழப்பத்தில் ஒருமணி நேரத்திற்கு மேல் அருகருகே அமர்ந்து இருக்கிறார்கள். சற்று நேரம் கழித்து, “சரி… நீங்க போகலாம்…” என்று கடை நிலை ஊழியரை அனுப்பி விடுகிறார். அவர் போன பின்னர், உயர் அதிகாரியிடம், “என்ன ஆயிருச்சி?? ஒன்றரை மணி நேரம் பக்கத்துல, பக்கத்துல தானே உக்காந்து இருந்தீங்க… என்ன ஆயிருச்சி? போயி உங்க வேலைய நீங்க பாருங்க… அவரு வேலைய அவரு பார்ப்பாரு… புரிஞ்சிதா? நாம எல்லாம் செய்யிற வேலை நாட்டுக்கு தான் வெளங்குச்சா?… இதுல என்ன பெருசு… சிறுசு… மேலு? கீழு? -ன்னேன் ? போங்க!” – முதல்வர் முன்னால் வியர்த்து கொட்டிவாறு நின்றிருந்த உயர் அதிகாரி தன இருக்கைக்கு திரும்பினார். கடுமையற்ற, கண்டிப்பினால் தவறை திருத்துகிற லாவகம்.

    ◆ முதல்வர் மேசையில் குவிந்து கிடக்கும் மருத்துவ படிப்பு சேர்க்கைக்கான விண்ணப்பப் படிவங்கள். ஐம்பது மாணவர்களை அவர்களின் தகுதி அடிப்படையில் முதல்வர் தெரிந்தெடுத்து மருத்துவக் கல்விக்கென பரிந்துரைக்கலாம். ஐநூறு விண்ணப்பப் படிவங்கள், ஐம்பதை தேர்வு செய்ய வேண்டும். கல்வி அமைச்சரும், இதர செயலாளர்களும் அந்தப் பணியை செய்து உதவ முதல்வர் அறையில் காத்திருக்கிறார்கள்… முதல்வர் வந்து அமர்கிறார். சொல்கிறார்கள். “இப்ப முடிச்சு கையில கொடுத்துடுறேன்… ஐம்பது விண்ணப்பங்கள் தானே…” என்கிறார் முதல்வர். “ஐயா… மொத்தம் ஐநூறு … அதுல இருந்து ஐம்பது தெரிவு செய்யணும்…. நாங்க அவங்க மதிப்பெண் தகுதி, மற்ற விஷயங்களை எல்லாம் பார் த்து உங்ககிட்ட ஒரு நூறு விண்ணப்பங்கள் நாங்க கொடுக்கிறோம்…”

    “அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்… ஒரு அரை மணி நேரம் உக்காருங்க…” கல்வி வள்ளல் விண்ணப்ப படிவங்களை சரசரவென புரட்டுகிறார். தெரிவு செய்து கொடுக்கிறார். “எத்தனை ஆயிருக்கு? பாருங்க?” “ஐயா… அறுபத்து ஏழு ஆயிருக்கு … “

    “சரி… அறுபத்து ஏழு பேருக்கும் சீட்டு குடுக்கணும்.. பார்த்து ஏற்பாடு செய்ங்க” – நாற்பத்தைந்தே நிமிடங்களில் வேலை முடிந்து அடுத்த வேலைக்கு போகிறார். கல்வியமைச்சரும், செயலாளர்களும், வியக்கிறார்கள். எந்த அடிப்படையில் தெரிந்தெடுத்தார் என விளங்காமல் குழம்புவதைப் புரிந்து கொண்டு,”
    ஒண்ணுமில்லை… அந்த விண்ணப்பபடிவங்களில் எதுல, பெற்றோர் கையெழுத்து -ங்கிற பகுதியில விரல் ரேகைப் பதிவா கைநாட்டு இருந்ததோ அதை எல்லாம் எடுத்துக் கொடுத்தேன்… பெத்தவங்க எழுதப் படிக்கத் தெரியாம இருக்கும் குடும்பத்துக்கு, மருத்துவக் கல்வி போய்ச் சேரணும்… அது தான் முக்கியம்னேன்…” – முதல்வர் சொல்லச் சொல்ல, அனைவரும் வியந்து நின்றனர். தெளிவு… எது யாருக்குப் போய்ச் சேர வேண்டும் என்பதில் தெளிவு.

    ◆ மாநிலத்தின் நீர்ப்பாசன நிலை மற்றும் மேம்பாடு குறித்து ஆலோசனைக்கூட்டம் நடக்கிறது. மெத்தப் படித்த விற்பன்னர்கள் திட்டங்கள் குறித்து ஆங்கிலத் தமிழில் விளக்குகிறார்கள். ஒரு தகவல் ஆங்கிலத்தில் தவறாக விளக்கப்படுகிறது. முதல்வர் குறுக்கிடுகிறார்.” அந்த அணையின் கொள்ளளவு இன்னும் அதிகம். அதன் மூலம் பாசன வசதி கிடைக்கும் நிலஅளவு நீங்க சொன்னதை விட அதிகம்… சரி பாத்துட்டு சொல்லுங்க… தவறான தகவல் சொள்ளக்கூடாதுன்னேன்…” அந்த நீர் பாசனத்துறை விற்பன்னர் சரி பார்த்து திருத்திக் கொண்டு தவறுக்கு வருந்துகிறார்.

    ” பரவாயில்ல… விடுங்க… இனிமேல் சரியா தயார் பண்ணிட்டு வரணும்… எந்த ஆறு எங்க தோன்றி, எங்க கடலில் கலக்குது? அதுக்கு எத்தனை கிளை நதிகள் இருக்கு, குறுக்கே எத்தனை அணைகள் கட்டி இருக்கு? அதனுடைய கொள்ளளவு எத்தனை? அதன் மூலம் எந்த மாவட்டத்துக்கு, எத்தனை பரப்பளவு நிலத்துக்கு பாசன வசதி செய்யப்பட்டிருக்கு? எத்தனை மின்னுற்பத்தி நிலையங்கள் இருக்கு? எத்தனை வாய்க்கால்கள்? அதன் குறுக்கே எத்தனை பாலங்கள்? – எல்லாம் உங்களுக்கு தெரியணும்னேன்… எனக்கு மட்டும் தெரிஞ்சிருந்து பிரயோஜனம் இல்லை… பூகோளம் தெரியாத எனக்கு அதைப் பற்றி தெரிஞ்சி என்ன பிரயோஜனம்? உங்களுக்கு தெரியணும்… படிச்சவங்களுக்கு விவரம் தெரிஞ்சாத் தான் மக்களுக்கு பிரயோஜனமா இருக்கும்னேன்…” படிக்காத மேதை சொல்லச் சொல்ல, படித்தோர் கூட்டம் தலையசைத்து ஆமோதித்தது. மக்கள் நலன் குறித்தே, மனதாலும், அறிவாலும், உடலாலும், உணர்வாலும், உயிராலும் செயல்பட்ட கர்ம வீரர்.

    தனிமனித வாழ்வின் ஒழுக்கம் மற்றும், விழுமியங்களை மகாத்மா காந்தியிடமிருந்தும், நாட்டு முன்னேற்றம் குறித்த, நவீன சிந்தனை, செயலாக்கங்களை பண்டித நேருவிடமிருந்தும், அரசியல் பயிற்சியினை தீரர் சத்தியமூர்த்தியிடமிருந்தும் கற்று, மூவரின் சரிவிகிதக் கலவையாக வாழ்ந்த காமராசர் எனும் மாபெரும் மனிதர் எண்ண, எண்ண … வியக்க வைக்கும் பேரதிசயம். காமராசர் எனும் அதிசய மனிதரின் வரலாறு, எந்த அரசியல் கட்சியின் வரலாற்றோடும் இணைத்துப் பார்க்க இயலாத தனி வரலாறு. தாமரை இல்லை நீர்த்துளி போல் எவற்றுடனும் ஒட்டாத தனிப்பெரும் வாழ்க்கை. பதவியில் இருந்தாலும், இல்லாவிடினும், மக்களுக்காக, மக்கள் வாழ்வின் மேம்பாட்டுக்காக, மக்களின் கல்விக்காக, கணந்தோறும், உழைத்து, உருகிய உன்னதத் தலைவர். தன்னுடன் பணியாற்றிய அத்துணை அமைச்சர்களையும் தனது நேர்மையாலும், அறத்தாலும், நெறியாலும் ஆழமாக பாதித்த பேராளுமை. கக்கன், வி ராமையா, லூர்து அம்மாள் சைமன்… என எளிமையாய் மக்களுக்கென வாழ்ந்து, மறைந்த அதிசய அந்நாளைய அமைச்சர்கள், இந்நாளில் நமக்கு வேற்று கிரக வாசிகளைப் போல் தெரிவது தான் வேதனை. மாற்று அரசியல் நிலைப்பாடு கொண்ட தந்தை பெரியார் “பச்சைத் தமிழர் ” என மனமுவந்து கொண்டாடியதும், எனது சமூக சம நீதி கொள்கைகளை செயல்படுத்துவது காமராசர் தான் என நெகிழ்ந்ததும் வலிமையான வரலாற்று பதிவுகள்.

    மணவாழ்வு துறந்து, துணை துறந்து, பற்று அத்தனையும் துறந்து துறவியென வாழ்ந்து மறைந்த மாமனிதரை மொத்த தமிழ் கூறும் நல்லுலகின் மனங்களெல்லாம் தமது இல்லத்து இனிய உறவென ஏற்றுக்கொண்டு அன்றும், இன்றும், என்றும் போற்றுகின்றன. தனது தோழர் ஜீவா விடம் காமராசர் 1950 -வருட நாட்களில் நாட்டு விடுதலை குறித்தும், இன்னும் நாடு பயணிக்க வேண்டிய தூரம் குறித்தும் பேசிக்கொண்டு இருக்கையில், ” ஜீவா… சோறு பொங்கி தயாரா இருக்கு… எல்லாம் வயிறாரச் சாப்பிடணும்… என்ன ஒண்ணு ?? பரிமாறும் போது பாத்து கவனமா… சிந்தாம பரிமாறணும் … வீணாப் போயிறக் கூடாது… நெருப்புல நெறைய, நெறைய்ய… கட்டைகள் வெந்துருக்கு… ” கண்களில் கண்ணீர் துளிகளோடு சொல்லியிருப்பதாக வாசித்தது நினைவுகளில் அலையடித்துக் கொண்டிருந்தது.

    சிந்தாமல் பரிமாறப் பட்டிருக்கிறதா? எழுபதாண்டுகள் நிறைவடைய இன்னும் சில ஆண்டுகளே இருக்கும் தருணத்தில்… கேள்விகள். “இந்தியாவின் வல்லரசு” குறித்து கனவுகளும், குரல்களும்… நாடெங்கும் ஒலிக்கும் தருணத்தில், வாங்கிய விடுதலை வகையாய் பயன் கொள்ளப்பட்டிருக்கிறதா? சகலமும் அரசியலாக்கப்பட்டு, வாக்குகளாக மாற்ற எத்தனை, எத்தனை கூச்சல்கள், குழப்பங்கள்… கூத்துக்கள். நல்லரசே பெருங்கனவாக இருக்க வல்லரசு இங்கே சாத்தியமா?

    அத்துவான வறண்ட வெளியில், வெயிலின், அனற் காற்றில், மாடு மேய்க்கும் சிறுவனாக கர்மவீரர் வரவுக்காக கேள்வியுடன் காத்திருப்பதாக உணர்ந்தேன். தூரத்தில் நெடிதுயர்ந்த உருவம், வெள்ளை உடை அவரே தான்… நெருங்கி வர, வர, எனது இதயத் துடிப்பு துரிதமானது… “ஐயா” தொண்டை அடைக்க அழைத்தேன்.

    “சொல்லுங்க தம்பி…”

    “ஐயா… உங்களிடம் ஒரு கேள்வி… கேக்கலாமா… “

    புன்னகையுடன், கேட்கலாம் என்று தலையசைக்கிறார்.

    “ஐயா… சில சிக்கலான, பதில் சொல்ல தயக்கமான கேள்விகளுக்கும், கோரிக்கைகளுக்கும் “ஆகட்டும்… பார்க்கலாம்” என சொல்லி கடந்துவிடுவீர்கள் என கேள்விப்பட்டு இருக்கிறேன்… எனது கேள்விக்கு தயவு செய்து அந்த பதிலை சொல்ல வேண்டாம்… என தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்…”

    ” ம் … கேளுங்க தம்பி…”

    தயக்கத்துடன் கேட்கிறேன், “ஐயா… வாங்கிய விடுதலையே இன்னும் வகையாக பகிர்ந்தளிக்கப் படாத இன்றைய நிலையில், இந்தியாவில் நல்லரசு என்பதே நனவாகாத நிலையில்… ஐயா…வல்லரசு என்பது சாத்தியமா?”

    கண்களைப் பார்த்து சிரித்தார்.
    “பார்க்கட்டும் … ஆகலாம்….”

    “ஐயா… என்ன?”

    “பார்க்கட்டும்… ஆகலாம்னேன்…”

    “புரியலீங்க ஐயா”

    “தம்பி… புரியலியா… பதவிப் பொறுப்பில் இருக்கவங்க மட்டுமில்லாம, மக்களும் கூட , ஒவ்வொருத்தரும் அவருக்கான வேலையை நியாயமா, நேர்மையா, உண்மையா, முழு மனசோடு , பார்க்கட்டும்… நீங்க எதிர்பார்க்கிற மாதிரி இந்தியா சீக்கிரம் நல்லரசு ஆகும்… வல்லரசும் ஆகலாம்”
    “பார்க்கட்டும் … ஆகலாம்… “

    அர்த்தம் புரிந்த மாதிரி இருந்தது. திடுக்கென விழித்துக்கொண்டேன். விடியற் காலை இரண்டு மணி வரை விழித்திருந்து கர்மவீரர் காமராசர் பற்றி எழுதியதன் விளைவு … கனவிலும் கர்மவீரர். எனது உடல் முழுதும் வியர்த்திருந்தது.

    எழுந்து தண்ணீர் குடித்து கடிகாரம் பார்த்தேன்… நான்கு மணி.

    “”பார்க்கட்டும் … ஆகலாம்… “””பார்க்கட்டும் … ஆகலாம்… ” செவிகளில் எதிரொலித்துக்கொண்டு இருந்தது.

    “ஆக வேண்டியதை, பார்க்க வேண்டும்…”

    அன்று, அதன் பின்னர் தூக்கமில்லை.

    Share
  • கர்மவீரர் காமராசர்

    — ஸ்வேதா மீரா கோபால்.

    கனவு மெய்ப்பட வேண்டும் …

    அந்தச் சிவகாமி மகனிடம் போய் செய்தி சொல்பவர் எவருமுண்டோ? புகழுரைகள் கண்டு மயங்காத சிந்தனையாளரைப் பற்றி இங்கே அனைவரும் புகழ்ந்து எழுதும் கட்டுரைகளை அவரிடம் ஒப்படைக்க இறைவா நீயே ஒரு நல்லவழியைக் காட்டிவிடு…

    பட்டியை நகராக்கி விருதுகள் பல பெற்ற மாமனிதனைப் பற்றி எழுதுவது சுலபமல்லவே… இப்படியும் ஒருவர் வாழ முடியுமோ என்ற ஆச்சரியக்குறிக்குச் சொந்தமான தமிழன்னையின் செல்லப்பிள்ளை… இமாலய சாதனைகள் பல இவர் ஆற்றிய பொழுதும் அனைத்தையும் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதன்றோ? கர்மவீரர் காமராசர் பற்றி எழுதுவதில் எதை எடுப்பது, எதை விடுப்பது என்று சற்றே குழம்பியிருக்கிறேன்!

    கருப்பு காந்தி என்று போற்றப்படும் காந்தியவாதி; சூழ்நிலைக் காரணமாக தன்னால் பள்ளிக்கல்வி கற்க இயலவில்லையே, ஆனால் தன் நாட்டு மக்கள் அனைவரும் கல்வியறிவுப் பெற்றவர்களாக திகழ வேண்டும் என்று பெரிதளவில் முனைந்த “கல்வியாளர்”; ஆம், பட்டித்தொட்டிகளிலெல்லாம் கல்விச்சாலைகளும் தொழிற்கூடங்களும் நிறுவியவர்…

    ஒருமுறை மாடு மேய்க்கும் சிறுவன் ஒருவனிடம் ஏன் பள்ளிக்குச் செல்லவில்லை என்று முதலமைச்சர் காமராசர் வினவ, அதற்கு அச்சிறுவன் கஞ்சிக்கே வழியில்லை என்று கேட்பவர் யார் என்று கூட அறியாமல் கூறிவிடுகிறான். நமது பெருந்தலைவரும் “கஞ்சி கிடைத்தால் பள்ளிக்குச் செல்வாயா…?” என்கிறார். ஆம், என்று அச்சிறுவன் பதிலளிக்கவே, தமிழ்நாட்டில் அறியாமை நீங்கி அனைவரும் கல்வி கற்கத் திட்டங்கள் தீட்டுகிறார் கர்மவீரர்.

    ஏழை, எளியவர், தாழ்ந்தவர் என்று எந்த பாகுபாடுமின்றி அனைவரும் கட்டாயம் கல்வி கற்க வேண்டும் என்று அவர் வகுத்த இலவச மதிய உணவு மற்றும் சீருடைத் திட்டம் உலக வரலாற்றில் சிறந்த மைல்கற்களில் ஒன்றாகும். கல்வி கற்பிக்கவும் ஆசிரியர்கள் வேண்டும் அல்லவா? அதற்காக ஆசிரியர்கள் நலன் கருதி இவர் அமைத்த மூன்று நலன் திட்டம் ஆசியக் கண்டத்தில் முதல்முறை அமுலுக்கு வந்த திட்டமாகும். அதுமட்டுமல்லாது தமிழகத்தில் பல நூலகங்களையும் தோற்றுவித்தவர்.

    காமத்திற்கு அப்பாற்பட்ட மகாராஜா இவர். சமுதாய மேம்பாட்டிற்காகத் தொண்டாற்றியதால் தனக்கென்று குடும்பம், சொத்து என்று எதுவும் அமைத்துக் கொள்ளவில்லை. அவரது சொத்து ஒரு சில கதராடைகளும் சில நூல்களும் மட்டும் தான். முதலமைச்சராய் பதவி வகுத்தக் காலத்தில் தன் தாய்க்குக் கூட சலுகைகளும் சௌகரியங்களும் செய்யாத அபூர்வ மனிதர். தேசநலனுக்காகவே உழைத்து தன் சுகங்களை முற்றிலும் துறந்த தியாகி. இன்று இவரைப் போன்ற ஒரு தலைவரைக் காண முடியுமோ?

    தொழிற்சாலைகளின் வளர்ச்சி, விவசாயத்தில் பசுமை, அணைக்கட்டுகள் அமைத்து நீர்நிலைகளை அதிகரித்தது என்று மேலும் மேலும் அடுக்கிக் கொண்டே போகலாம் இந்த சரித்திரநாயகனின் சாதனைகளை… நேர்மையான நோக்குடன் உண்மையாகவே தன் மாநிலத்தின் வளர்ச்சிக்காக சுமார் ஒன்பது ஆண்டுகள் (1954- 1963) முதலமைச்சராகப் பதவி வகுத்த காலத்தில், மற்ற அமைச்சர்களையும் அரவணைத்துச் சென்றதால் இவரது திட்டங்களுக்கு மக்களின் ஆதரவும் அமோக வெற்றியும் கிடைத்தது. இவரது ஆட்சியின் பொழுது தமிழகம் இந்தியாவிலேயே முதல் மாநிலமாக விளங்கியது. கர்மவீரரின் ஆட்சி தமிழகத்தின் பொற்காலம் ஆகும்.

    அரசன் எவ்வழியோ அமைச்சர்கள் அவ்வழி என்ற கூற்றுக்கு ஒப்ப இவரது அமைச்சர்களும் எளிமையாகவும் நேர்மையாகவும் வாழ முன்னோடியாய் வாழ்ந்துகாட்டிய உதாரணப் புருஷர். தனக்கு எதிராகப் போட்டியிட்ட கட்சிக்காரர்களையும் நண்பர்களாக்கி அவர்களுடன் சேர்ந்து நாட்டிற்காக உழைத்த உத்தமர். எதிரும் புதிருமாயிருக்கும் இன்றையத் தலைவர்கள் நாட்டு முன்னேற்றத்திற்காக ஒற்றுமையாய் வாழ இவரிடமிருந்து கற்க வேண்டியப் பாடமிது. பிற தலைவர்களுடன் கருத்து வேறுபாடு கொண்ட பொழுதும் அவர்களைப் பற்றி அவதூறுகள் தானும் பரப்பாமல் மற்றவர்களையும் பரப்பவிடாமல் செய்த பெருந்தலைவர்.

    விடுதலைப் போராட்டத்தின் போது கிடைத்த சிறைவாசத்தில்கூட ஆங்கிலம் மற்றும் பல பிற மொழிகளைக் கற்று நேர நிர்ணயம் செய்த நிர்வாகி. தமிழ் வடிவம் தட்டச்சில் மேண்மையடைய பாடுபட்டவர். பத்தரிக்கைக்காரர்களின் தோழர். ஒருமுறை பத்தரிக்கைக்காரர் ஒருவர் பல கோணங்களில் இவரைப் படம்பிடிக்க, என்ன செய்தாலும் தன் முகமோ அல்லது நிறமோ மாறப்போவதில்லை. இருக்கும் முகம் தானே வரப்போகிறது என்று நகைச்சுவையுடன் பதிலளித்த நகைச்சுவையாளர். சோவியத் நாடுகளுக்குக் கூட வேட்டி சட்டை அணிந்த எளிமையானவர். கடும்குளிரில் தாக்குப்பிடிக்க அதிகபட்சம் சால்வை அணிந்தவர்!

    இவ்வாறு எத்தனையோ சம்பவங்கள் அடுக்கிக் கொண்டே போகலாம். இவரது உயர்ந்த நெறிகளைப்பற்றிக் கூற…லாவகமாக இரண்டு பிரதமர்களை உருவாக்கிய “கிங்மேக்கர்”; காமராசர் திட்டம்( கே பிளான்) மூலம் தானே முதலில் பதவி விலகிப் பிற மூத்த தலைவர்களுக்கு எடுத்துக்காட்டாய்த் திகழ்ந்த உத்தமர்.

    வெறும் வார்த்தைகளால் அல்லாது செயல்களால் துணிந்து அற்புதங்கள் ஆற்றிய செயல்வீரர்.

    பிறந்த பொழுதிலே காமாட்சி என்று பெயர் சூட்டப்பட்டு, பிறகு, தன் தாய்க்கு ராசாவாகி, இல்லை… இல்லை… ஒட்டுமொத்த தமிழர்களின் முடிசூடா மன்னராகி, காமராசராகிய சக்கரவர்த்தியே, நீவீர் மீண்டும் பிறக்க வேண்டும் எம் அன்னைத் தமிழ்நாட்டினிலே. பல இயற்கை வளங்களிலிருந்தும் மின்சாரம் அபிவிருத்தியடையவும், நம் மாநிலத்தில் காவிரி பாய்ந்தோடவும், மேன்மேலும் தொழில் வளர்ச்சியடையவும், சாலைகள் சீராகவும், பன்னாட்டு நிறுவனங்களின் முதலீடுகள் பெருகவும், சுத்தமான, சுதந்திரக்காற்றை சுவாசிக்கவும், கல்வி, கலை அனைத்தும் வளரவும், எல்லாவற்றிற்கும் மேல் கல்வியறிவுடன் பண்பும் நிறைந்த மனிதர்களாய்த் தமிழர்கள் திகழ, நமது மாநிலம் மீண்டும் முதலிடம் பெற்று நம் நாட்டிற்காக மட்டும் அல்லாமல் இவ்வுலகிற்கே வழிகாட்டியாக அமையத் தமிழனாய் இன்றேப் பிறந்திடுவீர் நம் தமிழ்நாட்டிலே.

    விருதுப்பட்டி போல் எத்தனையோ பட்டிகள் நகரமாவதற்குக் காத்துக்கொண்டிருக்கிறது, மீண்டும் தங்கள் வருகைக்காக. அமைதிப்பூக்கள் வளர்த்து மற்றுமொரு வசந்தகாலம் தமிழ்நாட்டில் உலவ இன்றே வாரீர். உம் வருகைக்காகத் துடித்துக் காத்துக்கொண்டிருக்கும் தமிழர்கள் நாங்கள் என்ற இந்தச் செய்தியை அந்தச் சிவகாமி மகனிடம் போய் செய்தி ( தூது) சொல்பவர் எவருமுண்டோ, எவ்வழியுண்டோ, இறைவா காட்டிவிடு விரைவில்.

    Share
  • மரணத்தின் நினைவுகள்

    -கவிஜி

    இப்போதெல்லாம்
    ஒலி எழுப்பாமலே சற்று
    ஒதுங்கித்தான் போய்க்
    கொண்டிருக்கிறேன்,
    போன வாரம் ஏதோ ஒரு வண்டியில்
    அடிபட்டுச் செத்துப்போன
    தெருநாய் எப்போதும் தூங்கும்
    நடுப்பாதையை…

    நாக்கை வெளியே விட்டபடி
    தூங்கும் நாயின்
    மரணத்துக்குள்
    வண்டிகளின் முகப்பாய் என்
    ஒதுங்குதலும் தெரியலாம்…

    நான் பாதங்களைக் கூடச்
    சத்தமின்றியே
    வைத்து எடுக்கிறேன்…

    முகப்பு வெளிச்சமற்ற
    தேகத்தில் இளைப்பாறட்டும்
    மரணத்தின் முந்தைய நினைவுகள்…!

     

    Share
  • ஒரு கல் ஒரு சொல்

    -மீ.விசுவநாதன்

    குளத்தில் ஒரு கல் வீச…
    சிறிய வட்டம், பெரிய வட்டம்,
    மிகப்பெரிய வட்டமாய்
    அலைகள்
    என்காலை வந்து தொட்டன.

    மனத்தில் ஒரு சொல் எறிய…
    சிறிய காயம், பெரிய காயம்,
    மிகப் பெரிய
    காயமாய்க் கவலைகள்
    அன்பை நோகச் சுட்டன.

    ஆனால்
    அந்தக்
    குளமும், அன்பும்
    அப்படியே இன்றும்
    ஒரு
    துளிகூடக்
    குறையாமல் நிறைவாக.

     

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 178

    -மலர் சபா

    மதுரைக் காண்டம் – 06: கொலைக்களக்  காதை

    கோவலன் கண்ணகியை நோக்கிக் கழிந்ததற்கு இரங்கிக் கூறுதல்

    இனிதே உண்டு முடித்தபின்
    மிகச்சிறந்த பெருமை வாய்க்கப்பெற்ற கோவலனுக்கு,
    வெற்றிலையோடு பாக்கினையும் தந்த
    கருமையான குளிர்ந்த கூந்தலையுடைய கண்ணகியை
    ‘வருக’ என்று கூறி அணைத்து அருகில் அமர்த்தி…       kovalan kannagi new

    “பெரிய கற்கள் நிறைந்த வழியதனைக்
    கடக்கும் வண்ணம்
    சிறிதளவேனும் வலிமை
    நின் பாதங்கள் எங்ஙனம் பெற்றனவோ…
    கொடிய வெம்மையான மறவர் நிறைந்த
    ஆபத்தான வழியில் வந்ததை எண்ணி
    நம் பெற்றோர் எங்ஙனம் வருந்தினரோ…
    யான் கண்டது கனவு என்னும் மாயையோ…
    அல்லது இது நனவாயின்
    யான் முன் செய்த தீவினையின் பயனோ…

    இப்போது எம் உள்ளம்
    கலக்கம் உற்று இருப்பதால்
    இதை என்னால் அறிந்து கொள்ள முடியவில்லை.

    நான் முன்பு பயனில்லாத சொல் பேசுபவருடனும்
    புதிய பரத்தையரை நாடும் காமுகரோடும்
    கூடித் திரிந்தேன்;

    சிறுமையானவற்றைப் பேசும் கயவர்கூட
    இழிந்து பேசும் நிலைக்கு ஆளானேன்.
    இங்ஙனம் சிறுபுத்தியுடன்
    அறவோர் சொல் கேளாது
    நல்லன செய்ய மறந்து
    நல்லொழுக்கத்தைக் கைவிட்டேன்.

    அது மட்டுமல்லாமல்
    என் தாய் தந்தையர்க்குச் செய்ய வேண்டிய
    பணிவிடையும் செய்யத் தவறினேன்;
    இளமையாய் இருந்தும் மூதறிவு பெற்ற
    உனக்கும் தீங்கு செய்தேன்.

    எனினும் நான் செய்த எதையும் ஆராய்ந்து பார்க்காமல்
    ‘மதுரைக்குப் புறப்படு’ என்றதும் புறப்பட்டுவிட்டாயே!
    மறுப்பேதும் கூறவில்லையே!
    எனக்காக என்ன அரிய காரியம் செய்துவிட்டாய்?!”
    என்று கோவலன் மனம் இரங்கிக் கூறினான்.

    அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 54 – 70

    http://ilakkiyam.com/sangailakkiyam/23-tamil/iyal/sangailakkiyam/pathinenmerkanaku/ettuthogai/pura-nanooru/1133-kolaikalakathai–

     

    Share
  • குறளின் கதிர்களாய்…(86)

    -செண்பக ஜெகதீசன்

    இளைதாக முள்மரங் கொல்க களையுநர்
    கைகொல்லுங் காழ்த்த விடத்து. (திருக்குறள்-879: பகைத்திறம் தெரிதல்)

    புதுக் கவிதையில்…

    முற்றிடுமுன்னே
    முள்மரத்தை அழிக்கவேண்டும்,
    முதிரவிட்டால்
    தொடும் கையைக் கிழித்துவிடும்

    அதுபோல்
    பகையை முற்றவிட்டாலும்
    பேராபத்து…!

    குறும்பாவில்…

    முற்றிடுமுன்னே அழிக்கப்படவேண்டும்
    முள்மரமும் பகையும்,
    முற்றவிட்டால் துன்பந்தரும் இரண்டும்!

    மரபுக் கவிதையில்…

    முள்மரம் முதிர விட்டுவைத்தால்
    –மெதுவாய் அதனைத் தொட்டாலும்,
    முள்ளது குத்தியே புண்ணாவதால்
    –முதிர விடாமல் வெட்டவேண்டும்,
    உள்ளம் நிறைந்த பகையுடனே
    –உலவும் மனிதர் பகைதெரிந்தே
    எள்ளின் அளவும் மிச்சமின்றி
    –இளைதாய் அழித்தல் நலந்தருமே!

    லிமரைக்கூ…

    முள்மரம் முதிர்ந்துவிட்டால் குத்திவிடும் முள்,
    முதிருமுன்னே அழித்திடு அதனை,
    அதுபோல்தான் பகையையும் கருத்தினில் கொள்!

    கிராமிய பாணியில்…

    முள்ளுமரம் முள்ளுமரம்
    தள்ளிப்போ முள்ளுமரம்,
    முத்திப்போனா குத்தும் மரம்
    முள்ளுகையக் குத்தும் மரம்,
    முத்துமுன்னே வெட்டிப்புடு
    மொத்தமாவே வெட்டிப்புடு

    மனுசன்பகயும் இதுபோலத்தான்,
    முத்துமுன்னே அழிச்சிப்புடு
    மொத்தமாவே அழிச்சிப்புடு

    முள்ளுமரம் முள்ளுமரம்
    முத்திப்போனா குத்தும் மரம்…!

     

    Share
  • உன்னையறிந்தால் . . . . . . (20)

    வாழ்க்கைத் துணையுடன் ஒத்துப்போவது

    உனையறிந்தால்

    நிர்மலா ராகவன்

    கேள்வி: நான் பள்ளிப்படிப்புடன் என் கல்வியை நிறுத்திவிட்டேன். அது தெரிந்தே என் அழகுக்காக என்னைக் காதலித்து மணந்தவர், இப்போது `மேலே படி,’ என்று உயிரை வாங்குகிறார். எனக்கு விருப்பமில்லை. முதலிலேயே ஒரு பட்டதாரியைத் தேடிப் பிடித்திருக்க வேண்டியதுதானே?

    விளக்கம்: பெரும்பான்மையான திருமணங்களில் ஏற்படும் பிரச்னையே இதுதான். எல்லா வேலைகளுக்கும் முன் அனுபவம் தேவைப்படுகிறது. ஆனால், வாழ்நாள் முழுவதும் இருவர் இணைந்து குடும்பம் நடத்த மட்டும் கிடையாது.
    சில வருடங்கள் காதலித்திருந்தாலும், ஒரே வீட்டில், இரவு பகலாக சேர்ந்திருந்தால், பிரச்னைகள் வரத்தான் செய்யும். ஒன்றாக வளர்ந்த அண்ணன் தம்பிகள், அக்கா தங்கைகளுக்குள்ளேயே சண்டை பூசல் வருவதில்லையா? அதுபோல்தான்.
    தனக்கு வரப்போகும் மனைவி வாளிப்பான உடலழகுடன், படிப்பு, செல்வம் எல்லாவற்றிலும் சிறந்திருக்க வேண்டும் என்று ஆண் கனவு காண்கிறான். பெண்ணுக்கோ, பெரிய உத்தியோகம், ஆடம்பரமான வாழ்க்கை இதெல்லாம் கொண்ட ஆண்தான் கணவனாக வரவேண்டும் என்ற ஆசை.

    அழகான பெண் மனைவியாக அமைந்தால், அத்துடன் திருப்தி அடைய முடிவதில்லை. `நண்பருடைய மனைவி இன்னும் அதிகமாகப் படித்திருக்கிறாளே! புத்திசாலித்தனமாகப் பல விஷயங்களை விவாதிக்கிறாளே!’ என்ற போட்டி மனப்பான்மை எழுகிறது.

    தன் கனவுப்படியே பெரிய உத்தியோகஸ்தனை மணந்தவளோ, அவருக்குத் தன்னைக் கவனிக்கவோ, கொஞ்சவோ நேரமே இல்லையே என்று ஏங்கி வாடுகிறாள். ஓயாமல் குறை கூற, அவர் பயந்து, நண்பர்களை அதிகமாக நாடுகிறார். ஆனால் எப்போதும்போல, விளையாட்டு, அரசியல், பெண்கள் என்று கலகலப்பாகப் பேச முடிவதில்லை. `பெண்’ என்றாலே மனைவி ஞாபகம் வர, வாயடைத்துப்போகிறது!

    `கலகலப்பான பெண்’ என்று மகிழ்ந்து ஒரு பெண்ணைக் காதலிக்கிறான் மௌனச்சாமியான ஒருவன். அவளை மனைவியாக்கிக் கொண்டதும், `என்ன இவள், வாய் ஓயாமல் பேசுகிறாளே!’ என்ற அலுப்பு தோன்றும். பொதுவாக, முதலில் ஈர்த்த குணமே பிறகு வெறுப்பை விளைவிக்கும். இதனால், கல்யாணத்துக்குமுன் ஏற்படும் அனுபவங்களை வைத்து, பிறகு நடக்கப்போவதை கணிக்க முடியாது.

    கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் மாற்ற முயற்சிப்பார்கள். இதைவிட ஒரு நாயைப் பூனையாக்குவது எளிது.
    இந்த முயற்சி ஒரு மாரத்தான் பந்தயம் போலத்தான். முதலில் மெதுவாக ஆரம்பிக்கும். சிறிது பொறுத்து, தன் பலமும், `எதிரி’யின் பலகீனமும் புரிந்துபோக, வேகம் அதிகரிக்கும். எப்படியும் மாற்ற முடியாது என்று புரிந்தவுடன் ஏமாற்றம் எழ, அதுவே ஆத்திரமாக மாறுகிறது.

    மிகச் சிலரே தமக்கு என்ன வேண்டும் என்பதைப் புரிந்து கொண்டிருக்கிறார்கள்.

    `எனக்குப் பிடித்தவைகளில் (இசை, நாட்டியம், சித்திரம் வரைதல், இலக்கியம் — எவ்வளவு இல்லை!) அவருக்கும் நாட்டம் இருக்க வேண்டும். என்னை ஊக்குவித்து, பக்கபலமாக இருப்பவரையே நான் மணக்க விரும்புகிறேன்’ என்று கூறும் பெண் புத்திசாலி. தான் மகிழ்ச்சியாக வாழ என்ன தேவை என்று புரிந்து வைத்திருக்கிறாள்.

    (இதிலும் ஒரு சிக்கல் இருக்கிறது. ஒரே துறையில் இருக்கும் இருவருக்குமிடையே போட்டி எழாதா? அடுத்தவரின் ஆற்றலைக் குறைத்து மதிப்பிடாமல், விட்டுக்கொடுக்க எத்தனை பேர் முன்வருவார்கள்?)

    `கூட்டுக் குடும்பத்தில் என் பெற்றோரை அன்பாகப் பராமரிக்கும் பெண்தான் வேண்டும். மற்ற தகுதிகள் எல்லாம் இரண்டாம் பட்சம்தான்!’ என்று நிபந்தனை விதிக்கும் ஆண் அபூர்வம்.

    இவர்களைப் போன்றவர்களுக்குத் தெரியும், எப்படிப்பட்ட துணையால் தங்களது வாழ்க்கையில் அதிகமான பிரச்னைகள் எழாது என்று. பரஸ்பர மதிப்புடன், ஒருவருக்கொருவர் எல்லாவற்றிலும் உறுதுணையாக இருப்பார்கள்.

    ஆணுக்கும், பெண்ணுக்குமிடையே உள்ள உடலமைப்பின் வித்தியாசத்தால் ஆரம்பத்தில் ஈர்ப்பு ஏற்படலாம். ஆனால், இருவருடைய உளவியலும், உணர்ச்சிபூர்வமான நடத்தைகளும் வெவ்வேறு. அது புரியாததால்தான் கோபமோ, பயமோ ஏற்படுகிறது.

    நண்பர்களுக்கிடையே புரிந்துணர்வும், அதனால் மற்றவரை ஏற்பதும் எளிது. தம்பதிகளுக்கு ஏனோ இது கைவரவில்லை. ஒருவரை ஒருவர் கட்டுப்படுத்த முயலுகிறார்கள். ஒருவரைப் புரிந்துகொள்ள இயலாதபோது, அவரை ஏற்பது மட்டும் இயலுமா?

    திருமணமான புதிதில் இருந்ததுபோல் யாரும் இருப்பதில்லை, பத்து, இருபது வருடங்களுக்குப்பின். இதனால் ஏமாற்றம் அடையாது, `தானும் ஒன்றும் அப்படியே நிலையாக இருந்து விடவில்லையே!’ என்ற ஞானோதயம் பெறவேண்டும். உங்கள் கணவர் பூதம் மாதிரி இருந்தாலும், அவரை நீங்கள் ஆணழகர் என்று நினைத்தால், அதுதான் உண்மை அன்பு.

    நான் பார்த்த தம்பதிகளிலேயே மிக ஒற்றுமையாக, மகிழ்ச்சியாக இருந்தவர்கள் என் பள்ளித்தோழியின் பெற்றோர். தந்தை உயரமாக இருப்பார். பெரிய உத்தியோகம், நல்ல அழகர். தாய்க்குக் கூனல், முகம் சற்று கோணலாக இருக்கும். அடிக்கடி சமையலறைக்குள் நுழைந்து, மனைவியின் தோளைக் கட்டிக்கொண்டு ஏதாவது கேட்பார். தான் செய்வது எல்லாவற்றையும் அவளைக் கலந்து ஆலோசிப்பார். பிறருக்காக ஆடும் நாடகமாகத் தெரியவில்லை. அவருடைய உணர்ச்சிகளைப் புரிந்துகொண்டு, அதற்கு மதிப்பு கொடுத்து நடந்ததாலோ, என்னவோ, மனைவியைக் கண்டால் உயிர் அவருக்கு. அறுபது வருடங்களுக்கு மேலாகியும், இவர்கள் என் மனதில் நிற்கிறார்கள்.

    Share
  • நம்பிக்கை

    தமிழ்நேசன் த.நாகராஜ்

    பெற்றெடுத்துப் பெயரிட்டு
    அறிவும் அழகும் அடையாளமாக்கிப்
    பெருவாழ்வு தந்த
    தாய் தந்தையை
    உதறி விட்டு…
    உனது கடைக்கண் பார்வையில்
    தனது கடைநிலையை இழந்து காதலில் விழுந்து…
    உன் ஆண்மையில் தஞ்சம்
    அடையும் பெண்மையும்…
    உன் பெண்மையில் தஞ்சம்
    அடையும் ஆண்மையுமே…
    ’நம்பிக்கை!’

    Share
  • பிரியமானவளே!

    -ரா.பார்த்தசாரதி

    திருவிழாவில் மாவிலைத் தோரணம் கட்டி
    அழகாக அலங்கரிக்கக் கண்டேனே,
    வானம்  எனும் வீதியிலே நிலவும்,
    நட்சத்திரங்களும் மின்ன
    அவைகள் என்னைக் கவர்ந்ததே!

    தோரணத்தில் ஆங்காங்கே  பூக்களும்,
    இலைகளும் செருகியதே ஓர்  அழகு,
    உனது நறுமணமிக்க பார்வை என்னை விழுங்கியதே
    நீ நீர்தெளித்துக் கோலமிடும் பெண்களுடன் நின்றேன்,
    கோலத்தை ஒளிப்படம் எடுக்கும்போது என்னை ரசித்தாய்!

    ஆடி மாத அம்மனுக்குப் பொங்கல் இட
    சுள்ளிகளைப் பெண்களுடன் சேர்ந்து தீயில் இட்டேன்
    அந்த வெயிலில்  தூரத்துச் சூரியனாய் ஒளிர்ந்து நின்றாய்!
    சாமிக்குப் படைக்கப்பட்ட சர்க்கரைப் பொங்கலைக் கொடுக்கும்போது
    என் இதயம் இனிக்கிறது என்றாய்
    உன் சொல்லால் உலகமே இனித்தது எனக்கு!

    மறுநாள் ஊருக்குக் கிளம்புகையில்
    திரும்ப எப்ப வருவே  எனும் ஏக்க
    விழியாலும், பார்வையாலும் என்னை நோக்கினாய்!
    பிரியமானவளே, அப்போதுதான் புரிந்துகொண்டேன்
    என் உடலை விட்டு என் உயிரை எடுத்துச் செல்கிறாய் என்று!

     

    Share
  • கட்டற்ற மென்பொருள் கணித்தமிழ் வளர்ச்சிக்கு இடரா?

    நீச்சல்காரன்.

    மென்பொருட்கள் உரிமையடிப்படையில் இரண்டு வகையுண்டு. ஒன்று அதன் நிரல்கள் காப்புரிமை கொண்டு பெரும்பாலும் விற்பனையிலோ, சிலசமயம் விலையில்லாமலும் வெளிவருபவை. அடுத்தவகை நிரல்கள் எல்லாம் கட்டுப்பாடுகள் இல்லாத உரிமையில் பெரும்பாலும் இலவசமாக வெளிவருபவை. அந்த இரண்டாவது வகையே கட்டற்ற மென்பொருள் என்று பொதுவாக விலையில்லாமலும், எந்தவிதக் காப்புரிமை இன்றியும் விநியோகிக்கப்படுகிறது. இதனை யாரும் மேம்படுத்தலாம், யாரும் இலவசமாகப் பயன்படுத்தலாம். இதனால் தொழிற்நுட்பம் எளிதில் அனைவருக்கும் வந்தடைகின்றது, அதன் பலனை ஒட்டுமொத்தச் சமூகமும் அனுபவிக்கலாம். இவற்றை யார் உருவாக்குகிறார்கள்? பெரும்பாலும் தன்னார்வலர்கள் ஒரு குழுவாகச் சேர்ந்து உருவாக்கியும், அதை மேம்படுத்தியும் வளர்க்கிறார்கள். இவர்கள் வருமானத்திற்கு என்ன செய்வார்கள்? பொதுவாக நேரடி லாபம் இல்லாவிட்டாலும், நன்கொடைகள், சேவைக் கட்டணம், விளம்பரம் போன்ற வழிகளில் பலனடைகிறார்கள். காப்புரிமை கொண்ட மென்பொருட்களில் பயன்படுத்தப்பட்டுள்ள யுக்திகள் வெளிப்படையாக இல்லாததாலும், பணம் கொடுத்து வாங்கியவர்கூட நிரல்களை மாற்றியமைக்க முடியாததாலும் கொள்கையடிப்படையில் கட்டற்ற மென்பொருளுக்குப் பெரிய ஆதரவு உண்டு.

    விக்கிப்பீடியா உட்பட வெற்றி பெற்ற பல கட்டற்ற மென்பொருள்கள் எல்லாம் நன்கொடைகளின் மூலமே தொடர்ந்து இயங்குகின்றன. வேறு சில மென்பொருள் நிறுவனங்கள் இலவச மென்பொருளுக்கு இதர சேவைகள் மூலம் வணிகம் செய்கிறார்கள். ஒருவகையில் கட்டற்ற மென்பொருள் என்பது விளம்பரயுக்தியாக பயன்பட்டாலும் சாமானியப் பார்வையில் இது தேவையாக உள்ளது. இவ்வகை மென்பொருட்களைச் சட்டப்படி விற்பனையும் செய்யலாம் ஆனால் தனியொருவரின் காப்புரிமையில் இருப்பதில்லை, மேலும் மேம்படுத்தியவரும் அதே காப்புரிமையில் விற்பனை செய்து கொள்ளலாம். இங்குக் கவனிக்க வேண்டிய மற்றொரு தகவல் கட்டற்ற மென்பொருட்கள் பரவலாக அறியப்பட்ட துறையில் அதற்கு மேம்பட்ட அல்லது இணையான தரத்தில் காப்புரிமையுடன் தொழில்முறை மென்பொருட்கள் இருக்கும். காரணம் பெரிய வணிகம் இல்லாததால் தன்னார்வலர்களால் ஆய்வுத் துறையில் (R&D) அதிகம் செலவழிக்க முடியாது. மேலும் இத்தகைய தொழில்முறை மென்பொருள் உற்பத்தியாளரால்தான் உத்திரவாதத்துடனும், அர்ப்பணிப்புடனும் செயல்படமுடியும். செலவு குறைக்க விரும்புவோர் லிபரல்ஆபிஸ் போன்ற கட்டற்ற மென்பொருளை நோக்கியும், சேவை அதிகம் விரும்புவோர் மைக்ரோசாப்ட் ஆபிஸ் போன்ற காப்புரிமையுடைய மென்பொருளை நோக்கியும் செல்கிறார்கள்.

    இப்பொருளாதார மாதிரி வளர்ந்த நாடுகளுக்கு உகந்தது. ஆனால் வளரும் நாடுகள் குறிப்பாகத் தமிழ்ச் சூழலில் உகந்ததா என்பதே கேள்வி. இங்குத் தமிழ் மென்பொருளுக்கு ஆய்வு செய்யவே ஆட்கள் குறைவு. மேலும் உருவாகும் மென்பொருளையும் வாங்கி ஆதரிக்கும் பொதுப்போக்கு இல்லை. மென்பொருளுக்கான நன்கொடைகள் குறிப்பிடுமளவு இல்லை. அதிகமாக இலவசங்களுக்குப் பழக்கப்பட்ட மக்கள் சேவைக் கட்டணத்தை விரும்புவதில்லை. சிறிய சமுதாயம் என்பதால் ஆய்வுகளுக்கான செலவு விகிதம் அதிகம். “தமிழை வைத்து காசு பார்க்கிறார்கள்” என்ற பொதுச்சிந்தனையால் தமிழ் மென்பொருளுக்கு வணிகச் சந்தை அழிந்துவருகிறது. பிறமொழிகளில் இருக்கும் கட்டற்ற மென்பொருளைத் தமிழில் மொழிபெயர்த்து இங்கு விலையில்லாமல் விநியோகிக்கும் போது தமிழுக்கான ஆய்வு செய்து வெளிவரும் மென்பொருட்கள் புறக்கணிக்கப்படுகின்றன. “இது இலவசம்” என்று கொடுக்கும் போது அப்பொருளின் சந்தை மதிப்பு பூஜ்யமாகிறது. மேலும் இலவசமாகக் கிடைக்கும் போது ஏன் காசு கொடுக்கவேண்டும் என்று பிரச்சாரம் செய்து சந்தை அழிக்கப்பட்டுவருகிறது. எனவே அதே துறையில் புதிதாக யாரும் முதலீடு போட்டு மென்பொருட்கள் உருவாக்கமாட்டார்கள். மீறி சுயமுயற்சியில் மென்பொருட்கள் உருவாக்குபவர்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்காமல் கட்டற்ற முறையில் வெளியிட அழுத்தம் கொடுப்பது கணித்தமிழ் வளர்ச்சிக்கு உகந்ததல்ல. அதே நேரத்தில் பெரிய ஆய்வுகளின்றித் தமிழில் கட்டற்றவளங்களும் வளர்வதில்லை. இயல் மொழிப்பகுப்பாய்வுத் துறையில் கட்டற்ற மென்பொருட்கள் தமிழில் இல்லை என்பது பெரிய குறை. தங்களாலும் ஆய்வு செய்யமுடியாமல், ஆய்வு செய்தவர்களையும் ஆதரிக்கமுடியாமல் நிற்கிறது கட்டற்ற கொள்கை.

    OpenSourceகட்டற்று இருப்பதால் பலருக்கும் ஆய்வு செய்ய வசதி கிடைக்கும் என்று எண்ணினால் அது தவறு. எந்தவிதப் பொருளாதார எதிர்ப்பார்ப்பையும் கொண்டிருக்காதவர்கள் தான் இதில் ஆய்வு செய்யமுடியும் காரணம் அதன் கட்டற்ற கொள்கை. ஆய்வை வெளியிட்டு பணமீட்ட முடியாது. எனவே கணித்தமிழ் ஆய்வுகள் வேலைவாய்ப்பைத் தருவதில்லை என்று நேரடியாகவே மாணவர்களிடம் ஆசிரியர்கள் சொல்லும் அளவிற்கு நாம் சென்றுவிட்டோம். தமிழ் படித்தால் வேலை இல்லை என்ற நிலையை உருவாக்கி வருகிறோம். முன்பு கணித்தமிழுக்கு உழைத்தவர்கள் தொடர்ந்து உழைக்க முடியாமல் போன காரணத்தை அறியவேண்டும். தப்பித் தவறி வெற்றிபெற்ற மென்பொருட்கள் எல்லாம் தனிமனிதர்களின் சுயஉந்துதல் என்பதையும் உணரவேண்டும். இந்நிலை நீடித்தால் கணித்தமிழ் வளர்ச்சியில் ஒரு தேக்கம் நிலவலாம். பெரு ஊடகங்கள் தங்கள் சுய உந்துதலால் மென்பொருட்களை உருவாக்கி உதவினால் தவிர கணித்தமிழ் ஆய்வு மாணவர்கள் உருவாகமாட்டார்கள். தமிழ் எழுத்துலகம் வளர எப்படி தமிழ்ப்புத்தகத்திற்கு ஒரு சந்தை வேண்டும் என்கிறோமோ அதுபோல தமிழ்மென்பொருட்களுக்கும் ஒரு சந்தை வேண்டும். இங்கு வெற்றிகரமான வணிக மென்பொருட்கள் ஏதுமின்றிக் கட்டற்ற கொள்கையைக்காட்டி காப்புரிமை கொண்ட மென்பொருட்களுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்கிறோம். காப்புரிமை கொண்ட மென்பொருட்களுக்குத் தகுந்த விலைகொடுக்காமல் கட்டற்ற உரிமத்திற்கு வற்புறுத்துகிறோம். கணித் தமிழ் வளர்ச்சிக்குத் தேவை திறமூலமோ(open source), மூடியமூலமோ(closed source) அல்ல கணித் தமிழாய்வுகள்தான்.

    வெற்றிகரமான மாதிரி என்பது காப்புரிமையுடன் ஒரு மென்பொருள் வணிகலாபத்தை அடைந்து அதில் ஒருபகுதியைச் சமூக மேம்பாட்டிற்குக் கட்டற்ற முறையில் வழங்குவதே ஆகும். மூடியமூலம் கொண்ட மென்பொருள்தான் வணிகரீதியாகச் சிறந்தது. இத்தகைய வணிகம்தான் நாட்டின் உள்நாட்டு உற்பத்தியை உயர்த்தும், ஆய்வுகள் செய்ய பொருளாதாரம் கிடைக்கும். புதிய மாணவர்கள் இத்துறையில் ஆர்வம் காட்டுவார்கள். அடிப்படைக் கல்வியைப் போல மொழிக்கருவிகள் முக்கியமானது அனைவருக்கும் விலையில்லாமல் கிடைக்கவேண்டும். ஆனால் அதைக் கல்வி நிறுவனங்கள் அல்லது அதிகார அமைப்புகள் உருவாக்கத் தவறியபோது தனிமனிதர்களின் உழைப்பில் உருவானவற்றைக் கட்டற்ற முறையில் இல்லை என்று எதிர்ப்பது எதிர்கால வளர்ச்சியைச் சிதைக்கும். தமிழ்மென்பொருட்களுக்கு உருவாகும் சந்தையைக் கட்டற்ற கொள்கை கெடுக்குமானால் அக்கொள்கை கணித்தமிழ் வளர்ச்சிக்குப் பாதகமானது. எனவே தொலைநோக்குப் பார்வையுடன் அணுகி, பயனுள்ள தமிழ் மென்பொருட்கள் எவ்வகையில் இருந்தாலும் ஆதரிப்போம் வளர்த்தெடுப்போம்.

    படம் உதவி: http://packetpushers.net/podcast/podcasts/show-205-open-source-network-monitoring-omdistro-org/

    Share
  • கர்ம வீரர் காமராசர்

    சி. உமா சுகிதா.

    முன்னுரை:
    சுயநலமின்றி, நேர்மையுடன் நெறி தவறாமல் நாட்டுக்காகப் பணியாற்றியவர்கள் மறைந்துவிட்டாலும், ஈடு இணையற்ற தலைவர்களாக மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். இப்படிப்பட்டவர்களில், “பெருந்தலைவர்” என்று மக்கள் தங்கள் இதயங்களில் வைத்துத் துதிக்கும் தலைவர்தான் கர்ம வீரர் காமராசர்!

    பிறப்பும் சிறப்பும்:
    ஏழைக் குடும்பத்தில் பிறந்தாலும் அயராத உழைப்பால் தூய்மையான தொண்டால் ஒரு மனிதன் வான் போல் உயர முடியும் என்பதை உலகத்துக்கு நிரூபித்துக் காட்டியவர்! “நாட்டு நலனே எனது நலன்” என்று கருதி காந்தி வழியில் அரும்பாடுபட்ட காமராசர், தான் கொண்ட கொள்கைகளைப் பரிசு சுகத்திற்காகப் பறிகொடுக்காத உத்தமர். இவர் 15.07.1908 ஆண்டு பிறந்தார்.

    பள்ளிப் படிப்பிற்கு முற்றுப்புள்ளி:
    5 வயதில் காமராசர் தொடக்கப் பள்ளிக் கூடத்தில் சேர்க்கப்பட்டார். அந்தப் பள்ளிக்கூடத்தை நடத்தி வந்த வேலாயுதம் என்பவர் மிகவும் கண்டிப்பானவர். அவரிடம் காமராசரால் கல்வி கற்க முடியவில்லை. பின்னர், காமராசர் “ஏனாதினாத நாயனார் வித்தியாசாலா” என்ற பள்ளிக் கூடத்தில் சேர்க்கப்பட்டார். இந்தப் பள்ளியில் தமிழ் எழுத்துக்களைப் படிக்கவும், எழுதவும் காமராசர் கற்றுக்கொண்டார். அடுத்த ஆண்டே, காமராசரை, ‘சத்திரிய விருத்தாச்சலா” என்ற பள்ளியில் சேர்த்தனர்.

    அந்தப் பள்ளியில் காமராசர் சேர்ந்து ஒரு ஆண்டு கூட ஆகவில்லை, அப்பொழுதுதான் காமராசரின் குடும்பத்தையே நிலைகுலையச் செய்த அந்தச் சம்பவம் நடந்தது. ஒரு நாள் காமராசரின் தந்தை குமாரசாமிக்கு தலைவலி ஏற்பட்டது. அவர் வீட்டிற்குச் சென்று படுத்தார். மறுநாள் எழ முடியவில்லை, குமாரசாமி இறந்து விட்டார். அப்பொழுது காமராசருக்கு 6 வயது, அவர் தங்கை நாகம்மாளுக்கு 4 வயது.

    சின்னஞ் சிறுவரான காமராசர் வழக்கம்போல் பள்ளிக்குச் சென்று வந்தார். அவரது மாமா கருப்பையா அந்த ஊரின் நாட்டாமைக்காரராவார். அதனால், அவருக்கு மரியாதை இருந்தது. மாமா நாட்டாமைக்காரன் என்பதனால், கோவில், பள்ளிக்கூடம் போன்ற இடங்களில் அவருக்குத் தனி சலுகை இருந்தது. இதுவே, காமராசரின் படிப்பைச் சீரழித்தது. இளமைப் பருவத்திற்கே உரிய வீர விளையாட்டுக்களில் அவரது எண்ணம் சென்றது. இதைக் கண்ட காமராசரின் மாமா கருப்பையா தமது ஜவுளிக்கடையில் வைத்துக்கொண்டார். பின்னாளில் லட்சக்கணக்கான ஏழைக் குழந்தைகளின் கல்விக் கண்ணைத் திறந்த காமராசரின் பள்ளிப் படிப்புக்கு அப்பொழுது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

    நெஞ்சில் வளர்ந்த நாட்டுப்பற்று:
    இந்தச் சமயத்தில் தான் முதல் உலகப்போர் தொடங்கியது. போர் செய்திகளையும் அறிந்து கொள்ளும் ஆர்வம் சிறுவன் காமராசருக்கு ஏற்பட்டது. போர் செய்திகளைப் படிக்கும்போதே இந்திய விடுதலைப் போராட்டத்தில் உள்ள கருத்துக்களைப் பற்றியும் படிக்கத் தொடங்கினார். அப்பொழுதுதான் மெல்ல மெல்ல அவரது நெஞ்சில் நாட்டுப் பற்று வளரத் தொடங்கியது. காங்கிரஸ் கட்சியினர் நடத்தியப் பொதுக்கூட்டங்களுக்கும் செல்லத் தொடங்கினார்

    விருதுநகரில், நடந்த பொதுக்கூட்டத்தில், டாக்டர் வரதராஜூலு உணர்ச்சி போங்க உருக்கமாக ஜாலியன் வாலாபாக் படுகொலையைக் கண்டித்துப் பேசினார். இந்தப் பேச்சைக் கேட்ட காமராசர் விடுதலை வேட்கைக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டு ஆங்கிலேயே ஆட்சிக்கு முடிவு கட்ட தீர்மானித்தார். இதைத் தொடர்ந்து, காங்கிரசே கட்சியின் தொண்டரானார். அப்பொழுது அவருக்கு வயது 16.

    காமராசர் காங்கிரஸில் சேர்ந்து அவரது உறவினர்களுக்குப் பிடிக்கவில்லை. இதைத் தொடர்ந்து, காமராசரின் மாமா கருப்பையா, காமராசரைத் திருவனந்தபுரத்திற்கு அனுப்பி வைத்தார். அங்கு காமராசரின் இன்னொரு மாமா காசி நாராயணன் மரக்கடை வைத்து இருந்தார். “வீர சுதந்திரம் வேண்டி நின்றார்… பின்னர் வேறொன்று கொள்வாரோ?” என்று பாரதி பாடியது போல் காமராசரின் மனம் மாறவில்லை. கேரளா மாநிலம் வைக்கத்தில் நடந்த சத்தியாகிரக போராட்டத்தில் காமராசர் கலந்து கொண்டார். இதை அறிந்த கருப்பையா காமராசர் எங்கிருந்தாலும் பொதுத் தொண்டில் ஈடுபடத்தான் செய்வார் என்பதைத் தெரிந்து கொண்டு அவரை விருது நகருக்கே அழைத்துக்கொண்டார். இதன் பின்னர், அரசியலில் தீவிரமாக ஈடுபடத் தொடங்கினார் காமராசர். அப்பொழுது காந்தி வெள்ளையருக்கு எதிராக ஒத்துழையாமை இயக்கத்தை அறிவித்தார். இந்த நேரத்தில் காங்கிரஸ் கட்சி தேர்தலில் போட்டியிட்டு அமைச்சரவை அமைக்க வேண்டும் என்று ஒரு தரப்பினரும்,தேர்தலில் போட்டியிடக்கூடாது என்று இன்னொரு தரப்பினரும் கூறி வந்தனர்.

    கல்விக்கண் திறந்தவரின் வாழ்க்கைப் பாதை:
    ◆ 1903 ஜூலை 15ந் தேதி விருதுநகரில் எளியக் குடும்பத்தில் பிறந்தார் காமராசர். அவரது தந்தை குமாரசாமி நாடார், தாய் சிவகாமி அம்மாள்.

    ◆ 1908 -ம் ஆண்டு காமராசர் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் சேர்க்கப் பட்டார். 1909ல் இவரது தந்தை குமாரசாமி நாடார் காலமானார்.

    ◆ 1919 – ஏப்ரல் மாதம் ரவுலெட் சட்டத்தை எதிர்த்து காந்தியடிகள் விடுத்த அழைப்பை ஏற்றுக் காங்கிரஸின் முழுநேர ஊழியர் ஆனார்.

    ◆ 1923 – மதுரையில் நடந்த கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டார். நகர்புரி கொடி போராட்டத்தில் பங்கு பெற்றார்.

    ◆ 925 – கடலூரில் இருந்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    ◆ 1926 – சத்தியமூர்த்தி – ஸ்ரீனிவாச அய்யங்கார் ஆகியோருடன் தேர்தல் பணி புரிந்தார்.

    ◆ 1930 – வேதாரணியத்தில் நடைபெற்ற உப்பு சத்தியாகிரகத்தில் கலந்து கொண்டு இரண்டாண்டு அலியூர் சிறையில் அடைக்கப்பட்டார்.

    ◆ 1931 – காந்தி இர்வின் ஒப்பந்தம் காரணமாக காமராசர் விடுதலை செய்யப்பட்டார். ராமநாதபுரத்தில் இருந்து சென்னை மாகாண காங்கிரஸ் செயற்குழுவிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    ◆ 1933 – சதி வழக்கில் காமராசர் சிறைக்கு அனுப்பப்பட்டு குற்றம் நிரூபிக்கப்படாததால் விடுதலை செய்யப்பட்டார்.

    ◆ 1934 – காமராசரின் கடும் உழைப்பால் பொதுத் தேர்தலில் காங்கிரஸ் பெருவாரியான வாக்குகள் பெற்று வெற்றி பெற்றது.

    ◆ 1936 – காங்கிரஸ் கமிட்டி தேர்தல் காரைக்குடியில் நடந்தது. சத்தியமூர்த்தி தலைவராகவும் காமராசர் செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.

    ◆ 1937 – சட்டமன்ற பொதுத்தேர்தலில் காமராசர் விருது நகரில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். விருதுநகர் நகராட்சி மன்றத் தேர்தலில் 7வது வார்டில் போட்டியிட்டு வென்றார்.

    ◆ 1948 -ம் ஆண்டு மார்ச் மாதம் சிறையில் இருந்து விடுதலையானார். ஒரு நாள் மட்டும் நகராட்சிக் கூட்டத்தில் கலந்துகொண்ட பிறகு, தீவிர கட்சிப் பணிக்காக நகராட்சித் தலைவர் பதவியை ராஜிநாமா செய்தார்.

    ◆ 1942 -ஆம் ஆண்டு ஆகஸ்ட் போராட்டத்தில் கைது செய்யப்பட்டு அமராவதி சிறையில் இரண்டு ஆண்டுகள் கழித்த பின்னர் பிறகு வேலூர் சிறைக்கு மாற்றப்பட்டார்.

    ◆ 1945 – விடுதலை ஆனார்.

    ◆ 1946 – மே மாதம் 16ஆம் தேதி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    ◆ 1947 – ஆகஸ்ட் 15ஆம் நாள் இந்தியா விடுதலைப் பெற்றது. பண்டிதர் நேருவின் தலைமையில் இடைக்கால அரசு உருவானது. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் ஆனார்.

    ◆ 1948 – மூன்றாவது முறையாகத் தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஆனார்.

    ◆ 1950 – நான்காவது முறையாகத் தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஆனார்.

    ◆ 1952 – மூதறிஞர் ராஜாஜி முதல் அமைச்சர் ஆவதற்கு காமராசர் ஒத்துழைப்பு நல்கினார்.

    ◆ 1952 – ஐந்தாவது முறையாகத் தமிழ் நாடு காங்கிரஸ் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    ◆ 1954 – 13ம் தேதி சென்னை மாநிலத்தின் முதல் அமைச்சர் ஆனார்.

    ◆ 1955 – ராமநாதபுரம் மாவட்டத்தில் புயலாலும் மழையாலும் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்த்து நிவாரண உதவிகளைச் செய்தார்.

    ◆ 1956 – ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகள் படிப்பதற்கான பள்ளியில் இலவச மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.

    ◆ 1961 – அக்டோபர் 9ஆம் தேதி சென்னை மாநகராட்சி உருவாக்கிய காமராசர் திருவுருவச் சிலையை பிரதமர் நேரு திறந்து வைத்தார்.

    ◆ 1963 – எல்லோருக்கும் இலவசக் கல்வித் திட்டத்தை அமுல்படுத்தினார். அக்டோபர் 2ஆம் தேதி காமராசர் திட்டத்தின்படி இளைஞர்களுக்கு வழிவிடும் நோக்கத்தில் முதல் அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்தார்.

    ◆ 1964 – அனைத்திந்திய காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    ◆ 1971 – பொதுத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்தது ஆனாலும் காமராசர் வெற்றி பெற்று எம்.பி. ஆனார்.

    ◆ 1972 – காமராசருக்கு தாமிரப் பத்திர விருது வழங்கப்பட்டது.

    ◆ 1975 – எளியக் குடும்பத்தில் பிறந்து விடுதலைப் போராட்டத் தொண்டனாக வாழ்க்கையைத் தொடங்கி தன்னலமற்ற உழைப்பால் தியாகத்தால் மக்கள் தலைவராக உயர்ந்து கோடான கோடி இதயங்களில் குடிகொண்ட காமராசர், 1975 ஆம் ஆண்டு அக்டோபர் 2ஆம் தேதி மறைவு எய்தினார். அன்றைய தினம் அண்ணல் காந்தியடிகள் பிறந்த தினம் என்பது குறிப்பிடத்தக்கது.

    எதிலும் வேகம்:
    விருதுநகரில் உள்ள ஒரு பள்ளிக்கூடக் கொட்டகை தீப்பிடித்து எரிந்தது. புதிய கொட்டகை போடுவதற்காக வேம்பர் நாடார் என்பவற்றின் தலைமையில் ஊரில் உள்ள 20 முக்கியஸ்தர்கள் காமராசரை சந்திக்கச் சென்னை வந்தனர். இதைத் தெரிவித்த இரண்டு தரப்புக்குப் பொதுவான நண்பரிடம், ” இவங்க ஆளுக்கு கொஞ்சம் பணம் போட்டாலே கொட்டகை போட்டிருக்கலாமே, இத்தனை பேர் மெட்ராசுக்கு வந்து போகிற செலவு, தாங்கும் செலவு, ஊர் சுற்றிப் பார்க்கிற செலவு, இதெல்லாம் வீண்தானே.. என்று சத்தம் போட்டுவிட்டு, ‘அவங்களைக் கூப்பிடு.. என்றார்.. நண்பர் வெளியே போய் பார்த்தால், ஒருவர் கூட காணவில்லை.

    “சரி. நான் பார்த்துக்கிறேன்” நீ வீட்டுக்குப் போ என்றார் காமராசர்!

    சென்னை வந்த முக்கியஸ்தர்கள் ஊர் திரும்புவதற்குள் பள்ளிக்கூடத்திற்குக் கொட்டகை போடப்பட்டிருந்தது, அதுதான் காமராசர்.

    நேருவுக்கு கோபமூட்டிய குறட்டைச் சத்தம்:
    1927 ஆம் ஆண்டு சென்னையில் காங்கிரஸ் மாநாடு நடந்தது. இதில் கலந்து கொள்ள நேரு சென்னை வந்திருந்தார். மாநாடு முடிந்ததும் சத்திய மூர்த்தியின் வீட்டில் தங்கினார். இரவு நேரத்தில் நேருவின் ஆழ்ந்த தூக்கத்தை பலத்த குறட்டை ஒலி ஒன்று இடையூறு செய்தது. தூக்கம் கலைந்த கோபத்தில் எழுந்த நேரு அவர்கள் தனது அறையில் இருந்து எட்டிப்பார்த்தார். அங்கே காங்கிரஸ் தொண்டர் ஒருவர் தன்னை மறந்த நிலையில் உறங்கிக் கொண்டிருந்தார்.

    உரத்த குரலில் சத்திய மூர்த்தியை அழைத்த நேரு “இந்த மனிதன் விடும் குறட்டைச் சத்தத்தால் என்னால் தூங்க முடியவில்லை. தயவு செய்து இந்த மனிதரைச் சென்னை நகருக்கு அப்பால் கொண்டுபோய் விட்டு விடுங்கள்” என்று கோபமாக கூறினார். நேருவின் கோபத்துக்கு ஆளான அந்தக் குறட்டை விட்ட நபர் காமராசர்!

    ஏழைப் பங்காளன் காமராசர் படுத்துறங்கிய இடம் சத்திய மூர்த்தி இல்லத்தின் மாடிப்படிகளின் கீழ்ப் பகுதிதான்.

    அன்று குறட்டைஒலிக்காக காமராசர் மீது கோபம் கொண்ட நேரு பின்னர் காலத்தின் கட்டாயத்தால் மக்கள் தலைவர், காமராசரைக் கௌரவிக்க வேண்டியவரானார்.

    உயிர் பிரிந்தது:
    காமராசர் உயிர் பிரியும்போது அருகே இருந்தவர் அவர்தாம் உதவியாளர் வைரவன். தமிழ்நாடு காங்கிரஸ் அலுவலகத்தைச் சார்ந்து எப்போதும் பெருந்தலைவருக்கு பணிவிடை செய்துவந்தவரான சாரங்கராசன், ராமபத்ரன் ஆகியவர்களே. அக்டோபர் 2ஆம் தேதி 1975 ஆம் ஆண்டு பிற்பகல் 3.10 மணிக்கு காமராசர் உயிர் பிரிந்தது.

    டாக்டர்கள் வந்து தெரிவிக்கும் வரையில் காமராசர் உயிர் போனது எவருக்கும் தெரியாது. காரணம் மல்லார்ந்து படுத்திருந்த அவர் உடல் தோற்றத்திலோ.. முகத்திலோ எந்த வித்தியாசமும் காணமுடியவில்லை. தூங்குவது போலவே அவரது முகம் காணப்பட்டது.

    ஒளி விளக்கு:
    இளவயது முதலே நாட்டுப்பற்று, அர்ப்பணிப்பு கொண்ட புனிதன் காமராசர், நாட்டுக்காகச் சிறையில் செலவிட்ட நாட்கள் மட்டும் 3000த்திற்கும் மேல்.

    “பந்தம் வந்தால் பாசம் வரும்! பாசம் வந்தால் தேசப்பணி பாதிக்கும்!” என்று கருதிய அவர் திருமணமே செய்து கொள்ளாமல் நாடே என் வீடு என்று நாட்டுக்காகத் தன்னையே அர்ப்பணித்தார். பாரத மக்களுக்கு வழிகாட்டும் ஒளி விளக்காய் விளங்கியவர்.

    முடிவுரை:
    இவ்வாறு கர்மவீரர் காமராசர் எனப் போற்றப்படும் இந்தக் கறுப்புத் தங்கம், பாரத ரத்னா உள்ளிட்ட விருதுகளையும் பெற்றுள்ளார். இவரது நாட்டுப்பற்றை நாமும் பின்பற்றி பிறரையும் நல்வழிப் படுத்த வேண்டும்…

    சி. உமா சுகிதா
    8ஆம் வகுப்பு “பி” பிரிவு.
    அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, சாயல்குடி.

    Share