“பார்க்கட்டும் … ஆகலாம் …” – கர்மவீரர் காமராசர்!

0

ச.சசிகுமார்.

“ஏதாவது செய்யதான் நாமெல்லாம் இங்க இருக்கோம். இந்த கோட்டையில வந்து உக்காந்திருக்கோம்னேன்… முடியாதுன்னு சொல்ல ஆயிரம் காரணம் கண்டுபிடிக்கவா படிச்சிருக்கோம்? முடியும்னு சொல்ல ஒரு காரணம் கண்டுபிடிங்கன்னேன்…”

—முதலமைச்சரின் அறை அதிர்ந்தது. சில அதிகாரிகளும், அமைச்சர்களும் இருக்கைகளில் அமர்ந்திருக்க, சில நொடிகள் அசாத்திய அமைதி… மின்விசிறியின் சப்தம் மட்டும் சன்னமான இரைச்சலில் …

“Dead investment… பிரயோஜனம் இல்லாத திட்டம்னு எல்லாம் சொல்ல நம்மை மக்கள் தேர்ந்து எடுக்கலை… ஏதாவது செய்வோம்னு தான் மக்கள் காத்திருக்காங்க… உங்க பட்ஜெட்ல இதுக்கெல்லாம் பணமில்லேன்னாக்கூட இது நடக்கணும்… அதுக்குள்ள வழியைப் பாருங்க..”

—தண்ணீர் குடித்து விட்டு, கல்வி ஆலோசகர் நெ. து . சுந்தரவடிவேலு-வை அழைத்துக்கொண்டு, அறையிலிருந்து வெளியேறினார் முதல்வர். அதிகாரிகள் செய்வதறியாமல் எழுந்தனர். தத்தமக்குள் பேசிக்கொண்டு கலைந்தனர்.

சில வாரங்களுக்கு முன்…
1956 – நெல்லை அருகே , சேரன்மாதேவி… முதல்வரின் வாகனம், அதற்கான அடையாளங்கள் இன்றி எளிமையாக விரைந்துகொண்டிருக்கிறது. வெயிலடிக்கும் வறண்ட வெளியில் அங்கொன்றும் இங்கொன்றுமாக மேய்ந்துகொண்டிருக்கும் கால்நடைகள். தொலைவில் கையில் குச்சியுடன் மாடு மேய்த்துக் கொண்டிருக்கும் சிறுவன். கல்வி வள்ளல், முதல்வர் காமராசர் வண்டியை ஓரமாக நிறுத்தச் சொல்கிறார். காரிலிருந்து இறங்கி, மெல்ல அந்த சிறுவனை நோக்கி நடக்கிறார்… வெள்ளை கதராடை அனற்காற்றில் படபடக்கிறது… ஆளற்ற வெளியில் இரண்டு அதிகாரிகள் தொடர, முரட்டு காலணிகளின் கீழ் சருகுகளும், முட்களும் சரசரக்க… தமிழக முதல்வர் சிறுவனை நோக்கி நடக்கிறார். ஏதும் புரியாமல், அதிகாரிகள் ஓட்டமும் நடையுமாக.

“தம்பி… என்னப்பா பதினோரு மணி ஆகுது… பள்ளிக்கூடம் போகாம இங்க இருக்கே …” முதல்வர் கேட்க சிறுவனிடமிருந்து பதிலில்லை.

“தம்பி சொல்லுப்பா… பள்ளிக்கூடம் போகலையா?”

“ம்ம்… நீங்க யாரு…?” சிறுவன் கேட்க, சிரிக்கிற முதல்வர். அதிகாரிகள் அவனிடம் எதோ சொல்ல முயல, அமைதியாக இருக்கச் சொல்லி விட்டு தொடர்கிறார்.”

உன் கேள்விக்கு பதில் நான் சொல்றேன்… என் கேள்விக்கு பதில் சொல்லு தம்பி…”

சிறுவன் முதல்வரை மேலும் கீழும் பார்த்தவாறே,” அப்பா, அம்மா ரெண்டுவேரும் கூலி வேலைக்கு போயிருவாங்க… தங்கச்சி தம்பிய பாத்துக்கிடுவா… நான் காலையில மாட்டைப் பத்திக்கிட்டு வந்து, சாயங்காலம் போனாத் தான், நாங்க ரெண்டு வேளை சோறு திங்க முடியும்…”

“தம்பி… படிச்சா… வளர்ந்து நல்ல வேலைக்கு போயி, நல்லா இருக்கலாம்லா டே…” அவன் மொழியில் கேட்கிறார்.

“ஐயா, படிச்சா… நாளைக்கு நல்லா இருக்கலாம்… இன்னிக்கு பசிக்குமே…” சிறுவன்

“சரி தம்பி…பசிக்கு, சோறு போட்டா பள்ளிக்கூடம் போவியா?”

கண்களில் புரியாத சந்தேகத்துடன் சிறுவன் ,” நீங்க சோறு போடுவீங்களா?”

அன்று, சென்னை திரும்பும் வரை முதல்வர் மனதிலும், செவியிலும் அந்த சிறுவனின் கேள்வி தொடந்து ஒலித்துக் கொண்டிருந்தது. சில நாட்களுக்கு முன், பெருந்தல்மண் கல்விமேம்பாடு கூட்டத்திற்கு சென்று வந்த கல்வி ஆலோசகர் நெ.து.சுந்தரவடிவேலு மேலும் கொடுத்த தகவல்கள் முதல்வர் மனதை உலுக்கின. மதியவேளையில் பள்ளிப் பிள்ளைகள் பசிக் கொடுமையால், மயங்கி விழுந்த செய்தி அதிர்ச்சி அடையச் செய்தது. அவசர அவசரமாக அதிகாரிகளைக் கூட்டி, ஆலோசனை செய்து, பள்ளிகளில் மதிய உணவு வழங்குவதற்கான வழிமுறைகள் கேட்டால், “DEAD INVESTMENT” எனவும், நிதி நிலைமை அதற்கு இடம் கொடுக்கவில்லை எனவும் அடுக்கடுக்காக காரணங்கள்.

அறையில் இருந்து வெளியே வந்து முதல்வர் நெ. து .சு விடம், “இவங்க என்ன சொன்னாலும் நான் இந்த திட்டத்தை கண்டிப்பாக நிறைவேத்தத்தான் போறேன்னேன்… அரசு கஜானால பணம் இல்லைன்னாலும் இது நடக்கும்… வெளைச்சல்ல முதல் படி கடவுளுக்கும், ரெண்டாவது படி வேலைசெஞ்சவனுக்கும் அளந்து கொடுக்கும் வசதி உள்ளவங்க, மூணாவது படி நெல்லை படிக்கிற பிள்ளைகளுக்காக அளந்து கொடுங்கன்னு கேக்கப் போறேன்… நம்ம பிள்ளைங்க படிக்கணும்யா… படிக்கணும்… அவங்களுக்காக நான் ஊர், ஊரா… போயி… பிச்சைப் பாத்திரம் ஏந்தினா என்ன தப்புங்கிறேன்?”

— பிச்சைப் புகினும் கற்கை நன்றே… ஔவையின் வார்த்தைகளை அந்த தலைவன் படித்ததில்லை. உணர்ந்திருந்தது தான் ஆச்சர்யம். அன்று, அந்த அதிசயத் தலைவனின் வார்த்தைகளுக்கு, தமிழ் மாநிலம் கட்டுப்பட்டது. நாகலாபுரம் விவசாயப் பெருமக்கள் இசைந்து படியளக்க, பல் வேறு இடங்களில் இருந்தும், உதவித் தொகைகளும், உணவு தானியங்களும் வந்து நிறைய, ஒரு மாநில முதல்வரின் முயற்சியால், அரசு நிதியுதவி ஏதுமின்றி 1956 ஜூலை மாதத்தில் தொடங்கியது “மதிய உணவுத் திட்டம்”. ஏறத்தாழ பதின்மூன்று மாதங்கள் அரசு நிதியின்றி, தொடர்ந்த திட்டம். பிள்ளைகள் பள்ளிக்குச் செல்ல தடையாக இருந்த, பசி, பட்டினி… நீங்கி பள்ளிகளில் மாணவர்கள் கல்வியில் கவனம் செலுத்தத் தொடங்கினார்கள். 1957 அக்டோபர் மாதம் முதல் அரசு நிதியுதவியுடன் மதிய உணவுத் திட்டம் தொடரும் என அறிவிப்பு வந்தது.

கல்வி வள்ளல் காமராசர்… கர்ம வீரர் காமராசர்… கறுப்பு காந்தி காமராசர்… The King maker காமராசர்… இந்திரா காந்தி அம்மையார் அருகே, கால் மேல் கால் போட்டு கம்பீரமாக மேடையில் அமர்ந்து காட்சி தரும் இந்த மனிதரின் ஆளுமையின் வீச்சு என்ன?

பள்ளிப்படிப்பை முடிக்காத இந்த எளிய மனிதரிடம், பண்டித நேரு வந்து ஆலோசனை கேட்க அவசியப்படுத்தியது எது?

கோடு உயர்ந்து, குன்றம் தாழ்ந்து போன போதும், ராஜாஜி போன்ற பெரிய மேதைகளை மதித்தும், அதே சமயம் முரண்பட்டும், அரசியல்செய்யும் இவரின் பலம் என்ன விதமானது?

இந்திய விடுதலைக்காக, காந்தியடிகளின் உண்மைத்தொண்டனாக வாழ்வில் ஆறாண்டுகளுக்கு மேல் சிறைகளில் வாடி வெளிவந்த இந்த மனிதர் நாட்டிடத்தும், மக்களிடத்தும் கொண்ட பற்று எத்தகையது? “குணாளா… குலக்கொழுந்தே…” என எதிர்க்கட்சி பேரறிஞரையும் உருகி மடல் எழுத வைத்த நேர்மை எவ்வகை சார்ந்தது?

“காமராசர் ஆட்சி மீண்டும் மலர வாக்களியுங்கள்…” – ஒவ்வொரு ஐந்து வருட இடைவெளியிலும் தமிழ் கூறும் நல்லுலகின் மூலை , முடுக்கெல்லாம், தெருக்களிலெல்லாம்… வெவ்வேறு மேடைகளில், வெவ்வேறு குரல்களில் ஒலிக்கும் ஒரே வாக்கியம். இதற்காக இந்த மனிதர் செய்தது என்ன?

இவை தலைமுறைகள் தாண்டி தொடரும் கேள்விகள்.

காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர், அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர், தமிழக முதல்வர்… இந்திய அரசியல் அரங்கில் இரண்டு பிரதமர்களை உருவாக்கிய மத்திய ஆட்சி பீடத்தின் ராஜ குரு… இத்தனையில் இவர் யார்? இத்தனை பதவிகளில், இத்தனை பொறுப்புக்களில், இத்தனை பெருமைகளில்… எது இன்று வரை இந்த மனிதரை எண்ணி எண்ணி வியக்க வைக்கிறது? “இது தான்” என அறுதியிட்டு, உறுதி பட பதில் சொல்லிவிட இயலாத கேள்வி.

◆ “வயதான காலம் நான் தனியா இங்கிருந்து என்ன ஐயா செய்ய… அங்க உன்னோட வந்து இருந்து, உனக்கு பொங்கி போட்டு, கொறைய காலத்தை கழிக்கலாம்னு நெனைக்கேன்! நீ சரின்னு சொன்னா, கெளம்பி வந்துருவேன்!” – மணமாகாமல் தனித்து இருக்கும் தன் மகன் மேலுள்ள அக்கறையில் தாய் சிவகாமி அம்மாள் தனது தள்ளாத வயதில் தயங்கித், தயங்கி கேட்க,”வேண்டாம்” -என மறுத்து விட்டார். “அம்மா நீ… அங்க வந்து என்னோட இருக்கது பத்தி பிரச்சனையில்லை… அப்புறம், உன்னைப் பாக்க வந்தேன்னு சொல்லி ஊர்ல இருந்து பத்து பேரு சொந்தக்காரன் வருவான்… தங்குவான்… முதலமைச்சருக்கு சொந்தம்னு ஊரெல்லாம் சொல்லுவான்… அதெல்லாம் சரிப்பட்டு வராதுன்னேன்… தவிர, நாம வாங்குற சம்பளத்துக்கும் அதெல்லாம் கட்டுப்படி ஆகாதுன்னேன்…” – சுற்றம் சூழ்ந்து, அதனால் நேர்மை கேள்விக்குள்ளக்கப் படுமோ? என்ற தூய எண்ணம்.

◆ தலைமைச் செயலகத்தில் ஒரு உயர் அதிகாரி, தனக்கு கீழ் வேலை செய்யும் ஒரு கடை நிலை ஊழியரை தொடந்து இழிவாக நடத்துவது முதல்வரின் கவனத்துக்கு வருகிறது. தனிப்பட்ட முறையில் உறுதி செய்து கொள்கிறார். ஒரு நாள் தனது அறைக்கு அந்த அதிகாரியை அழைக்கிறார். எதிரே இருக்கும் நாற்காலியில் அமரச் சொல்லுகிறார். முதல்வர் அவரது பணிகளைத் தொடர்கிறார். சற்று நேரத்தில் அந்த கடைநிலை ஊழியரை தனது அறைக்கு அழைத்து, அவரையும் இன்னொரு நாற்காலியில் அமரச் சொல்லி, மேசையில் இருக்கும் கோப்புக்களை பார்க்கத் தொடங்குகிறார். உயர் அதிகாரியும், கடை நிலை ஊழியரும் ஒன்றும் புரியாத குழப்பத்தில் ஒருமணி நேரத்திற்கு மேல் அருகருகே அமர்ந்து இருக்கிறார்கள். சற்று நேரம் கழித்து, “சரி… நீங்க போகலாம்…” என்று கடை நிலை ஊழியரை அனுப்பி விடுகிறார். அவர் போன பின்னர், உயர் அதிகாரியிடம், “என்ன ஆயிருச்சி?? ஒன்றரை மணி நேரம் பக்கத்துல, பக்கத்துல தானே உக்காந்து இருந்தீங்க… என்ன ஆயிருச்சி? போயி உங்க வேலைய நீங்க பாருங்க… அவரு வேலைய அவரு பார்ப்பாரு… புரிஞ்சிதா? நாம எல்லாம் செய்யிற வேலை நாட்டுக்கு தான் வெளங்குச்சா?… இதுல என்ன பெருசு… சிறுசு… மேலு? கீழு? -ன்னேன் ? போங்க!” – முதல்வர் முன்னால் வியர்த்து கொட்டிவாறு நின்றிருந்த உயர் அதிகாரி தன இருக்கைக்கு திரும்பினார். கடுமையற்ற, கண்டிப்பினால் தவறை திருத்துகிற லாவகம்.

◆ முதல்வர் மேசையில் குவிந்து கிடக்கும் மருத்துவ படிப்பு சேர்க்கைக்கான விண்ணப்பப் படிவங்கள். ஐம்பது மாணவர்களை அவர்களின் தகுதி அடிப்படையில் முதல்வர் தெரிந்தெடுத்து மருத்துவக் கல்விக்கென பரிந்துரைக்கலாம். ஐநூறு விண்ணப்பப் படிவங்கள், ஐம்பதை தேர்வு செய்ய வேண்டும். கல்வி அமைச்சரும், இதர செயலாளர்களும் அந்தப் பணியை செய்து உதவ முதல்வர் அறையில் காத்திருக்கிறார்கள்… முதல்வர் வந்து அமர்கிறார். சொல்கிறார்கள். “இப்ப முடிச்சு கையில கொடுத்துடுறேன்… ஐம்பது விண்ணப்பங்கள் தானே…” என்கிறார் முதல்வர். “ஐயா… மொத்தம் ஐநூறு … அதுல இருந்து ஐம்பது தெரிவு செய்யணும்…. நாங்க அவங்க மதிப்பெண் தகுதி, மற்ற விஷயங்களை எல்லாம் பார் த்து உங்ககிட்ட ஒரு நூறு விண்ணப்பங்கள் நாங்க கொடுக்கிறோம்…”

“அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்… ஒரு அரை மணி நேரம் உக்காருங்க…” கல்வி வள்ளல் விண்ணப்ப படிவங்களை சரசரவென புரட்டுகிறார். தெரிவு செய்து கொடுக்கிறார். “எத்தனை ஆயிருக்கு? பாருங்க?” “ஐயா… அறுபத்து ஏழு ஆயிருக்கு … “

“சரி… அறுபத்து ஏழு பேருக்கும் சீட்டு குடுக்கணும்.. பார்த்து ஏற்பாடு செய்ங்க” – நாற்பத்தைந்தே நிமிடங்களில் வேலை முடிந்து அடுத்த வேலைக்கு போகிறார். கல்வியமைச்சரும், செயலாளர்களும், வியக்கிறார்கள். எந்த அடிப்படையில் தெரிந்தெடுத்தார் என விளங்காமல் குழம்புவதைப் புரிந்து கொண்டு,”
ஒண்ணுமில்லை… அந்த விண்ணப்பபடிவங்களில் எதுல, பெற்றோர் கையெழுத்து -ங்கிற பகுதியில விரல் ரேகைப் பதிவா கைநாட்டு இருந்ததோ அதை எல்லாம் எடுத்துக் கொடுத்தேன்… பெத்தவங்க எழுதப் படிக்கத் தெரியாம இருக்கும் குடும்பத்துக்கு, மருத்துவக் கல்வி போய்ச் சேரணும்… அது தான் முக்கியம்னேன்…” – முதல்வர் சொல்லச் சொல்ல, அனைவரும் வியந்து நின்றனர். தெளிவு… எது யாருக்குப் போய்ச் சேர வேண்டும் என்பதில் தெளிவு.

◆ மாநிலத்தின் நீர்ப்பாசன நிலை மற்றும் மேம்பாடு குறித்து ஆலோசனைக்கூட்டம் நடக்கிறது. மெத்தப் படித்த விற்பன்னர்கள் திட்டங்கள் குறித்து ஆங்கிலத் தமிழில் விளக்குகிறார்கள். ஒரு தகவல் ஆங்கிலத்தில் தவறாக விளக்கப்படுகிறது. முதல்வர் குறுக்கிடுகிறார்.” அந்த அணையின் கொள்ளளவு இன்னும் அதிகம். அதன் மூலம் பாசன வசதி கிடைக்கும் நிலஅளவு நீங்க சொன்னதை விட அதிகம்… சரி பாத்துட்டு சொல்லுங்க… தவறான தகவல் சொள்ளக்கூடாதுன்னேன்…” அந்த நீர் பாசனத்துறை விற்பன்னர் சரி பார்த்து திருத்திக் கொண்டு தவறுக்கு வருந்துகிறார்.

” பரவாயில்ல… விடுங்க… இனிமேல் சரியா தயார் பண்ணிட்டு வரணும்… எந்த ஆறு எங்க தோன்றி, எங்க கடலில் கலக்குது? அதுக்கு எத்தனை கிளை நதிகள் இருக்கு, குறுக்கே எத்தனை அணைகள் கட்டி இருக்கு? அதனுடைய கொள்ளளவு எத்தனை? அதன் மூலம் எந்த மாவட்டத்துக்கு, எத்தனை பரப்பளவு நிலத்துக்கு பாசன வசதி செய்யப்பட்டிருக்கு? எத்தனை மின்னுற்பத்தி நிலையங்கள் இருக்கு? எத்தனை வாய்க்கால்கள்? அதன் குறுக்கே எத்தனை பாலங்கள்? – எல்லாம் உங்களுக்கு தெரியணும்னேன்… எனக்கு மட்டும் தெரிஞ்சிருந்து பிரயோஜனம் இல்லை… பூகோளம் தெரியாத எனக்கு அதைப் பற்றி தெரிஞ்சி என்ன பிரயோஜனம்? உங்களுக்கு தெரியணும்… படிச்சவங்களுக்கு விவரம் தெரிஞ்சாத் தான் மக்களுக்கு பிரயோஜனமா இருக்கும்னேன்…” படிக்காத மேதை சொல்லச் சொல்ல, படித்தோர் கூட்டம் தலையசைத்து ஆமோதித்தது. மக்கள் நலன் குறித்தே, மனதாலும், அறிவாலும், உடலாலும், உணர்வாலும், உயிராலும் செயல்பட்ட கர்ம வீரர்.

தனிமனித வாழ்வின் ஒழுக்கம் மற்றும், விழுமியங்களை மகாத்மா காந்தியிடமிருந்தும், நாட்டு முன்னேற்றம் குறித்த, நவீன சிந்தனை, செயலாக்கங்களை பண்டித நேருவிடமிருந்தும், அரசியல் பயிற்சியினை தீரர் சத்தியமூர்த்தியிடமிருந்தும் கற்று, மூவரின் சரிவிகிதக் கலவையாக வாழ்ந்த காமராசர் எனும் மாபெரும் மனிதர் எண்ண, எண்ண … வியக்க வைக்கும் பேரதிசயம். காமராசர் எனும் அதிசய மனிதரின் வரலாறு, எந்த அரசியல் கட்சியின் வரலாற்றோடும் இணைத்துப் பார்க்க இயலாத தனி வரலாறு. தாமரை இல்லை நீர்த்துளி போல் எவற்றுடனும் ஒட்டாத தனிப்பெரும் வாழ்க்கை. பதவியில் இருந்தாலும், இல்லாவிடினும், மக்களுக்காக, மக்கள் வாழ்வின் மேம்பாட்டுக்காக, மக்களின் கல்விக்காக, கணந்தோறும், உழைத்து, உருகிய உன்னதத் தலைவர். தன்னுடன் பணியாற்றிய அத்துணை அமைச்சர்களையும் தனது நேர்மையாலும், அறத்தாலும், நெறியாலும் ஆழமாக பாதித்த பேராளுமை. கக்கன், வி ராமையா, லூர்து அம்மாள் சைமன்… என எளிமையாய் மக்களுக்கென வாழ்ந்து, மறைந்த அதிசய அந்நாளைய அமைச்சர்கள், இந்நாளில் நமக்கு வேற்று கிரக வாசிகளைப் போல் தெரிவது தான் வேதனை. மாற்று அரசியல் நிலைப்பாடு கொண்ட தந்தை பெரியார் “பச்சைத் தமிழர் ” என மனமுவந்து கொண்டாடியதும், எனது சமூக சம நீதி கொள்கைகளை செயல்படுத்துவது காமராசர் தான் என நெகிழ்ந்ததும் வலிமையான வரலாற்று பதிவுகள்.

மணவாழ்வு துறந்து, துணை துறந்து, பற்று அத்தனையும் துறந்து துறவியென வாழ்ந்து மறைந்த மாமனிதரை மொத்த தமிழ் கூறும் நல்லுலகின் மனங்களெல்லாம் தமது இல்லத்து இனிய உறவென ஏற்றுக்கொண்டு அன்றும், இன்றும், என்றும் போற்றுகின்றன. தனது தோழர் ஜீவா விடம் காமராசர் 1950 -வருட நாட்களில் நாட்டு விடுதலை குறித்தும், இன்னும் நாடு பயணிக்க வேண்டிய தூரம் குறித்தும் பேசிக்கொண்டு இருக்கையில், ” ஜீவா… சோறு பொங்கி தயாரா இருக்கு… எல்லாம் வயிறாரச் சாப்பிடணும்… என்ன ஒண்ணு ?? பரிமாறும் போது பாத்து கவனமா… சிந்தாம பரிமாறணும் … வீணாப் போயிறக் கூடாது… நெருப்புல நெறைய, நெறைய்ய… கட்டைகள் வெந்துருக்கு… ” கண்களில் கண்ணீர் துளிகளோடு சொல்லியிருப்பதாக வாசித்தது நினைவுகளில் அலையடித்துக் கொண்டிருந்தது.

சிந்தாமல் பரிமாறப் பட்டிருக்கிறதா? எழுபதாண்டுகள் நிறைவடைய இன்னும் சில ஆண்டுகளே இருக்கும் தருணத்தில்… கேள்விகள். “இந்தியாவின் வல்லரசு” குறித்து கனவுகளும், குரல்களும்… நாடெங்கும் ஒலிக்கும் தருணத்தில், வாங்கிய விடுதலை வகையாய் பயன் கொள்ளப்பட்டிருக்கிறதா? சகலமும் அரசியலாக்கப்பட்டு, வாக்குகளாக மாற்ற எத்தனை, எத்தனை கூச்சல்கள், குழப்பங்கள்… கூத்துக்கள். நல்லரசே பெருங்கனவாக இருக்க வல்லரசு இங்கே சாத்தியமா?

அத்துவான வறண்ட வெளியில், வெயிலின், அனற் காற்றில், மாடு மேய்க்கும் சிறுவனாக கர்மவீரர் வரவுக்காக கேள்வியுடன் காத்திருப்பதாக உணர்ந்தேன். தூரத்தில் நெடிதுயர்ந்த உருவம், வெள்ளை உடை அவரே தான்… நெருங்கி வர, வர, எனது இதயத் துடிப்பு துரிதமானது… “ஐயா” தொண்டை அடைக்க அழைத்தேன்.

“சொல்லுங்க தம்பி…”

“ஐயா… உங்களிடம் ஒரு கேள்வி… கேக்கலாமா… “

புன்னகையுடன், கேட்கலாம் என்று தலையசைக்கிறார்.

“ஐயா… சில சிக்கலான, பதில் சொல்ல தயக்கமான கேள்விகளுக்கும், கோரிக்கைகளுக்கும் “ஆகட்டும்… பார்க்கலாம்” என சொல்லி கடந்துவிடுவீர்கள் என கேள்விப்பட்டு இருக்கிறேன்… எனது கேள்விக்கு தயவு செய்து அந்த பதிலை சொல்ல வேண்டாம்… என தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்…”

” ம் … கேளுங்க தம்பி…”

தயக்கத்துடன் கேட்கிறேன், “ஐயா… வாங்கிய விடுதலையே இன்னும் வகையாக பகிர்ந்தளிக்கப் படாத இன்றைய நிலையில், இந்தியாவில் நல்லரசு என்பதே நனவாகாத நிலையில்… ஐயா…வல்லரசு என்பது சாத்தியமா?”

கண்களைப் பார்த்து சிரித்தார்.
“பார்க்கட்டும் … ஆகலாம்….”

“ஐயா… என்ன?”

“பார்க்கட்டும்… ஆகலாம்னேன்…”

“புரியலீங்க ஐயா”

“தம்பி… புரியலியா… பதவிப் பொறுப்பில் இருக்கவங்க மட்டுமில்லாம, மக்களும் கூட , ஒவ்வொருத்தரும் அவருக்கான வேலையை நியாயமா, நேர்மையா, உண்மையா, முழு மனசோடு , பார்க்கட்டும்… நீங்க எதிர்பார்க்கிற மாதிரி இந்தியா சீக்கிரம் நல்லரசு ஆகும்… வல்லரசும் ஆகலாம்”
“பார்க்கட்டும் … ஆகலாம்… “

அர்த்தம் புரிந்த மாதிரி இருந்தது. திடுக்கென விழித்துக்கொண்டேன். விடியற் காலை இரண்டு மணி வரை விழித்திருந்து கர்மவீரர் காமராசர் பற்றி எழுதியதன் விளைவு … கனவிலும் கர்மவீரர். எனது உடல் முழுதும் வியர்த்திருந்தது.

எழுந்து தண்ணீர் குடித்து கடிகாரம் பார்த்தேன்… நான்கு மணி.

“”பார்க்கட்டும் … ஆகலாம்… “””பார்க்கட்டும் … ஆகலாம்… ” செவிகளில் எதிரொலித்துக்கொண்டு இருந்தது.

“ஆக வேண்டியதை, பார்க்க வேண்டும்…”

அன்று, அதன் பின்னர் தூக்கமில்லை.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *