Photo-contest-298

-மேகலா இராமமூர்த்தி

புகைப்படக் கலைஞர் திருமிகு. ராமலக்ஷ்மி எடுத்த இந்தப் படம் வல்லமை பிளிக்கர் குழுமத்திலிருந்து தெரிவுசெய்யப்பட்டுப் படக்கவிதைப்போட்டி 298க்கு வழங்கப்பட்டிருக்கின்றது.

கையிலே கோல்வைத்துக் குறிசொல்லும் பெண்மணியை இப்படத்தில் காணுகின்றோம். இவ்வாறு குறிசொல்லும் பெண்டிரை ’அகவன் மகளிர்’ என்றழைத்தனர் அன்று. வெள்ளியால் செய்த பூணிட்ட சிறுகோலைத் தாங்கியிருக்கும் இம்மகளிரை, ’வெண்கடைச் சிறுகோல் அகவன் மகளிர்’  (குறுந்: 298) என்கிறது குறுந்தொகை.

தலைவியின் காதலை வீட்டுக்குத் தெரிவிக்க விரும்பும் தோழி, குறிசொல்ல வந்த அகவன் மகளைப் பார்த்து, ”சங்குமணி போன்ற நரைத்த நெடுங்கூந்தலையுடைய அகவன் மகளே! அவர் நன்னெடுங் குன்றத்தை மீண்டும் மீண்டும் பாடுக!” எனச் சொல்லி அந்த ’அவர்’தாம் தலைவியின் காதலர் என்பதைத் தலைவியின் தாய்க்கும் செவிலித்தாய்க்கும் குறிப்பால் உணர்த்துகின்றாள்.

அகவன் மகளே அகவன் மகளே
மனவுக்கோப் பன்ன நன்னெடுங் கூந்தல்
அகவன் மகளே பாடுக பாட்டே
இன்னும் பாடுக பாட்டேஅவர்
நன்னெடுங் குன்றம் பாடிய பாட்டே. (குறுந்: 23)

சங்க கால அகவன் மகளைப் புலவர்கள் பாடினர்; இதோ இந்நாளைய அகவன் மகளைப் பாட நம் கவிஞர்களை அழைக்கின்றேன்!

*****

”எறும்பாய் என்றும் உழைத்திருக்க எதிர்காலக் கவலை ஏதுமில்லை;
குறிக்கோளில் குறியாய் இருந்திருக்கக் குறிச்சொல் கேட்கத் தேவையில்லை”என்று பொருளுரை புகலுகின்றார் திரு. வேங்கட ஸ்ரீநிவாசன்.

குறி கேளீர்!

அறமும் திறமும் கொண்டோரை
அறச்சொல் ஏதும் செய்வதில்லை
அறிவும் உழைப்பும் இழந்துவிட்டால்
அதிர்ஷ்டம் உதவத் தேவையில்லை

நற்சிந்தை கொண்டு வாழ்வோரை
நாளும் கோளும் கெடுப்பதில்லை
இன்சொல் இயல்பாய் அமைந்துவிட்டால்
இன்பம் வாழ்வில் தொலைவதில்லை

நேர்மறை எண்ணம் நிறைந்திருக்க
நித்தமும் நிறைவு தேய்வதில்லை
சோர்வைத் தவிர்த்துச் செயல்பட்டால்
சுகத்துக்கு எப்போதும் கேடில்லை

கடமையைத் தொடர்ந்து செய்திருக்கக்
காலம் கனியாமல் போவதில்லை
கட்டுப்பாடும் கலந்திருந்தால்
கண்ணியம் வாழ்வில் குறைவதில்லை

எறும்பாய் என்றும் உழைத்திருக்க
எதிர்காலக் கவலை ஏதுமில்லை
குறிக்கோளில் குறியாய் இருந்திருக்கக்
குறிச்சொல் கேட்கத் தேவையில்லை

*****

”மற்றவரின் கைபிடித்து மாறிவரும் காலநேரம்
மணிக்கணக்கில் நீ உரைத்திட்டாலும் மாறிடுமோ உன் சொல் நயம்தான்” என்று குறிசொல்லும் பெண்ணை நயம்படப் பாராட்டுகின்றார் திருமிகு. சுதா மாதவன்.

கருப்பு வெள்ளை நிறமதனில்
கண்டுகளித்த உன் முகமதனைக்
கற்பனையில் வடித்திட்டுக்
கவிதையொன்றைச் சொல்லவா?

கையினிலே கோலேந்திக்
குறி சொல்லும் குலத்தவளா?
குறுநகையோடு இருப்பவளா? இல்லை
குடும்பச் சுமை சுமந்திட்டுக்
குத்துவிளக்காய் வலம் வருபவளா?

கடைத்தெருவில் காலாற
நடந்துவரும் உன்னடையழகில்
கறுப்புவெள்ளை என்பதெல்லாம்
கண்டுகொள்ள மாட்டாரன்றோ!

மொத்தத்தில் நீ நடந்து வந்தால்
திருவாரூர்த் தேரழகி!
காணக் கோடிக் கண்களெனக்
காத்துநிற்பர் கடைத்தெருவினிலே
பொருள் வாங்க மறப்பர் தன்னிலைதனிலே!

மற்றவரின் கைபிடித்து
மாறிவரும் காலநேரம்
மணிக்கணக்கில் நீ உரைத்திட்டாலும்
மாறிடுமோ உன் சொல் நயம்தான்!
ஆம்
நீ கையினிலே கோலேந்திக்
குறிசொல்லும் குலத்தவளே!!

*****

குறிசொல்லும் அகவன் மகளைப் பற்றிய சிந்தனைகளைச் சிறப்பாகத் தம் கவிதைகளில் பதிவுசெய்திருக்கும் கவிஞர்களைப் பாராட்டி மகிழ்கின்றேன்.

அடுத்துவருவது இவ்வாரத்தின் சிறந்த கவிதையாகத் தெரிவுபெற்றிருப்பது…

உழைப்பிலே…

உலக வாழ்வில் உயர்வுபெற
உன்னை நம்பி உழைத்திடுவாய்,
பலனது சொல்வார் பிழைத்திடவே
பார்த்தே உனது கையினையே,
நலமென நம்பிப் படுத்திடாதே
நாளை வாழ்வு உழைத்தால்தான்,
நலம்பெற உதவிடு அவருக்கும்
நம்பிச் செயல்படு கடமையிலே…!

”மனிதா! பலன்சொல்வார் சொல்லை நம்பாமல் உன்னை நம்பி உழைத்திடு! அவர் நலம்பெற அவருக்கும் உதவிடு!” என்று மனிதநேயத்தையும் உழைப்பின் உயர்வையும் இணைத்து வலியுறுத்தும் இக்கவிதையைப் படைத்திருக்கும் திரு. செண்பக ஜெகதீசனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.