படக்கவிதைப் போட்டி – 299

அன்பிற்கினிய நண்பர்களே!
கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?
புகைப்படக் கலைஞர் எஸ்.இராமலிங்கம் எடுத்த இப்படத்தை அவர்களது தொகுப்பிலிருந்து ராமலக்ஷ்மி தேர்ந்தெடுத்து வழங்கியுள்ளார். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.
இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் ஞாயிற்றுக்கிழமை (21.03.2021) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கெனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.
ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.
சிற்பியைப் போற்றுவோம்…
கல்லில் கலையின் வண்ணமது
கலைஞன் ஒருவன் எண்ணமதாய்
வெல்லும் கால ஓட்டமதை
விளங்கும் சிலையாய்க் காலமெல்லாம்,
வல்லமை இதுதான் பேர்சொல்லும்
வையம் உளநாள் வரையிலுமே,
சொல்லிப் புகழ்வோம் இவர்திறனை
சோரா திருக்க வாழ்த்துவோமே…!
செண்பக ஜெகதீசன்…
செதுக்கி வைத்த சிற்பங்கள்
செவ்வனே வடித்திட்ட இதில்
சிற்பியின் கைகள்தான்
சிறப்பம்சம் கொண்டதுவே
எத்தனையெத்தனை வர்ணங்கள்
எத்தனையெத்தனை முக அம்சங்கள்
அத்தனையத்தனை வடிவங்களும்
தத்துவமதனை உரைத்திடுமே
மனம் அதில் சொக்கிடசொக்கிட வைத்திடுமே அதைப் போற்றிட போற்றிட
சிற்பக்கலையில் சிறந்தவனே
செம்மொழியில் சிறந்த தமிழன்தான்
வள்ளுவனுக்கோர் சிலை கண்ணகிக்கோர் சிலை
நுட்பம் வாரி வழங்கியது அவன் நிலை
மாமல்லபுர சிலைகளை சொல்வதா
சிறந்ததோர் ஆலயச் சிலைகளைச் சொல்வதா
கருத்துக்கள் கூறும் சிலைகளைச் சொல்வதா
தரணிபுகழ் பலச்சிலைகளைச் சொல்வதா
இத்துணை சிற்பங்கள் சிறந்திட
சிற்பியின் கைகள்தான்
சிறப்பம்சம் கொண்டதுவே நம்
மனமும் அதில் கொள்ளை கொண்டதுவே
சிற்பக்கலை அழியாக்கலை
சுதா மாதவன்
உளியின் வலி
உள்ளத்தின் எண்ணிய சிந்தை
உருக் கொண்டு எழுந்ததோர் விந்தை
உளி கொண்டு உருவாக்கிய கவிதை
உருவாக்கியவன் கையிலோ கந்தை
விரல்களில் விளையாடும் கலை
வியப்பூட்ட உருவான சிலை
உழைத்து உரவாக்கியவன் நிலை
எண்ணிப் பார்த்தவர் எவரும் இலை
ஆலயங்காணும் கடவுளர் திருமேனி
காலங்கள்தோறும் நிலைத்திடும் வண்ணம்
மாயங்கள் காட்டும் மனங்கவர் சிற்பம் – அவர்
காயங்கள் துயரங்கள் காட்டியா நிற்கும்