“பெருந்தலைவர் காமராஜர்” – கர்மவீரர் காமராசர்!
—கீதா மதிவாணன்.
நாடறிந்த ஒரு நல்லவரைப் பற்றி என்ன எழுதுவது? என்ன எழுதாமல் இதுவரை விட்டுப்போயிருக்கிறது? காமராஜர் என்னும் கம்பீரத் தோற்றத்துள் அடங்கிக் கிடந்த எண்ணற்ற ஆளுமைகளுள் எதைப்பற்றிப் பேசுவது? பெயரைக் கேட்ட மாத்திரத்திலேயே அவர்தம் புகழ்பாடும் நாவுகளிலிருந்து அன்னாரது தனிப்பட்ட குணநலன்கள் பற்றியும் அவருடைய தன்னிகரில்லா சேவையைப் பற்றியும் அறியமுடிகிறது. கட்சி பேதமற்று அனைவரும் அவர் ஆட்சியைப் போற்றுவதிலிருந்தே அம்மாமனிதரின் தீர்க்கமான அரசியல் வாழ்வைப் பற்றியும், ராஜதந்திர காய்நகர்த்தல்கள் பற்றியும் ஏராளமாய் அறியமுடிகிறது… இவற்றுள் எதைச்சொல்ல? எதை விட?
வெற்றுப்பேச்சும் வீராப்பும், போலி அலங்கார வார்த்தை ஜாலங்களும் அறியாத வெள்ளந்தி மனிதர் அவர். ஓட்டுகளைக் குறிவைத்து மக்களை மடமையாக்கும் வஞ்சகம் அறியாத மக்கள் தலைவர். தான் படிக்காத போதும் தலைமுறைகளைப் படிக்கவைத்த மாபெரும் கல்விப் புரட்சியாளர். குலக்கல்வித்திட்டத்தை ஒழித்து குடும்பங்கள்தோறும் அறிவொளியை ஏற்றிவைத்த அன்பின் சுவாலை. செவிக்குணவில்லாத போது வயிற்றுக்கும் சிறிது ஈயப்படும் என்றார் வள்ளுவர். அந்த சிறிதளவு உணவும் இல்லாமல் சோர்ந்துபோய்ச் சரியும் ஏழைக்குழந்தைகளுக்கு சோறு போட்டு நிமிர்த்திய தாயுள்ளம்.
1903 ஆம் ஆண்டு ஜூலைத்திங்கள் 15 ஆம் நாளில் தாங்கள் பெற்றெடுத்த தனயனுக்கு காமாட்சி என்று குலதெய்வத்தின் பெயரைச் சூட்டி மகிழ்ந்தனர் சிவகாமி அம்மாளும் குமாரசாமி அய்யாவும். பின்னாளில் நாடாளப்போகும் ஒரு உத்தமனைப் பெற்றிருக்கிறோம் என்று அந்த நாளில் அவர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை என்றாலும் விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பதற்கிணங்க, சிறுவனாயிருந்த காலத்திலிருந்தே நேர்மையும், ஒழுக்கமும், சமயோசிதமும், சகாயகுணமும், பொறுமையும், நிதானமும், துணிவும், தேசபக்தியும் போட்டி போட்டுக்கொண்டு காமாட்சியிடத்தில் நிறைந்திருந்தன.
பேரனின்பால் பிரியமுள்ள பாட்டி, ‘காமாட்சி’ என்றழைக்க, தாய் ‘ராஜா’ என்றழைக்க, தந்தை ‘காமாட்சிராஜா’ என்றழைக்க… பின்னாளில் அனைவராலும் ‘காமராஜர்’ என்றழைக்கப்பட்டார். தந்தையோடு கல்வி போம் என்பது அவர்தம் வாழ்வில் உண்மையாகிப்போனது. காமராஜரின் தந்தை இறந்ததன் காரணமாக, குடும்பப்பொறுப்பை ஏற்கும் நிர்ப்பந்தம் அவரை ஆறாம் வகுப்போடு முடக்கியது. தாய்மாமன்மார் கடைகளில் வேலைபார்த்து குடும்பக் கடமையை ஆற்றினார். ஆனாலும் நாட்டுக்காற்ற வேண்டிய கடமை குறித்த எண்ணம் அவர் உள்ளத்துள் நீறு பூத்த நெருப்பாகக் கனன்றுகொண்டே இருந்தது.
சுதந்திரப்போராட்டக்கனல் நாடெங்கும் தீவிரமாய் தன் அக்னிச்சுவாலையை வீசிக்கொண்டிருக்க, அதில் ஈர்க்கப்பட்டு களத்தில் இறங்கினார் வாலிப வயதிலிருந்த காமராஜர். இளமைக்கனவுகளில் ஈடுபடும் வயதில் அவர் இலட்சியக்கனவில் ஈடுபட்டிருந்தார். அரசியல் அவரது முழுநேரப் பணியாகிப் போனது. கள்ளுக்கடை மறியல், நாக்பூர் கொடிப் போராட்டம், வெள்ளையனின் சிலையகற்றுப் போராட்டம், சைமன் கமிஷனுக்கு எதிர்ப்புப் போராட்டம் என்று நாடு தழுவிய பல போராட்டங்களில் கலந்துகொண்டார். பலவற்றை முன்னின்று நடத்தினார். பலமுறை கைதுசெய்யப்பட்டார்.
காமராஜர், தம் வாழ்நாளில் கிட்டத்தட்ட ஒன்பது ஆண்டுகளை சிறையில் கழித்தார். இன்றைய அரசியல்வாதிகளின் சிறைவாசம் போல அன்றைய அரசியல்கைதிகளின் சிறைவாசம் அத்தனை சொகுசானதன்று. அப்படியிருந்தும் தண்டனைக்காலத்தைக் குறைத்துக்கொள்ள அவர் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. எடுக்கப்பட்ட முயற்சிகளுக்கும் ஒத்துழைக்க மறுத்துவிட்டார். தன்னோடு கைதுசெய்யப்பட்டவர்கள் சிறையில் இருக்கையில் தான் மட்டும் வெளிவருவது அவர்களுக்கும் நாட்டுமக்களின் நம்பிக்கைக்கும் செய்யும் துரோகம் என்றார்.
பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானினும் நனி சிறந்தனவே’ என்பார் பாரதி… ஆனால் காமராஜருக்கோ… பெற்ற தாயை விடவும் பிறந்த பொன்னாடே பெரிதெனத் தோன்றிற்று. அதனால்தான் தன் தாயை விட்டு விலகிவந்து தாய்நாடே கதியென்று கிடக்க அவரால் இயன்றிருக்கிறது. தாய்நாட்டின் மக்களின் உயர்வுக்காகவும் வளர்ச்சிக்காகவும் உயிரைக்கொடுத்துப் போராட முடிந்திருக்கிறது.
ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய் என்னும் குறளை அவர் தாய் அறிந்திருப்பாரா, தெரியவில்லை. ஆனால் தன்னை வந்து காணவும், தன் கையால் ஒருவாய் சோறுண்ணவும் நேரமில்லாது, நாட்டுமக்களின் நலனையே தன் உயிர்மூச்சாய் எண்ணி இரவும் பகலும் பாடுபடும் மகனை எண்ணி நிச்சயம் பெருமைப்பட்டிருக்கும் அந்த தாயுள்ளம்.
மயில் ஆடுவதைக் கண்டு அது குளிரால் நடுங்குகிறதென்று நினைத்து, அது கேளாமலேயே தன் போர்வையை வழங்கினானாம் வள்ளல் பேகன். ஆனால் உண்மையிலேயே குளிரால் நடுங்கிய காமராஜரின் தாய், ஒரு போர்வை தேவைப்பட்டபோது அதைக்கூட அவர் தன் மகனிடம் கெஞ்சிக் கேட்டுத்தான் பெறமுடிந்திருக்கிறது. இது என்ன பெரிய செய்தியா என்று யாரும் கேட்கலாம். அப்போது காமராஜர் அவர்கள் தமிழ்நாட்டின் முதலமைச்சராய் இருந்தார் என்பதுதான் விசேடம். தான் மட்டுமல்லாது, தன்னைச் சார்ந்தவர்களுக்காகவும் எந்த சலுகையையும் அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. ஒரு முதலமைச்சரின் தாயென்ற எண்ணம், அவருடைய தாய்க்கு ஒருநாளும் உண்டாகியிருக்க வாய்ப்பே இல்லை. பெற்றத் தாயையும் நாட்டிலுள்ள மற்றத் தாய்மார்களையும் ஒன்றாக மதித்தார். ஒன்றுபோலவே நடத்தினார். அவர்களுக்கில்லாத வசதியும் வாய்ப்பும் தன் தாய்க்கு மாத்திரம் தருவதை தேசத்துரோகமாகவே மனத்தில் எண்ணிய மகான் அவர். நாட்டுப் பிள்ளைகளையெல்லாம் தான் பெற்ற பிள்ளைகளாக எண்ணி மகிழ்ந்தார். அவர்களுடைய எதிர்கால வாழ்க்கைக்கு கல்வியென்னும் அடித்தளத்தை அமைக்க அயராது பாடுபட்டார்.
அரசியலின் அடிப்படிக்கட்டில் கால்வைத்தவன் கூட அமோகமாய் சம்பாதிக்கும்போது ஒரு முதலமைச்சராய் இருந்தும் அவர் எந்த ஆடம்பரத்தையும் நாடவில்லை என்பது எவ்வளவு பெரிய செய்தி. அது மட்டுமா? ஒரு முதலமைச்சருக்கு முன்னால் செல்லும் பாதுகாப்பு வாகனங்களைக் கூட மறுத்து, சிக்கன நடவடிக்கையை மேற்கொண்டவர் அந்த சீரிய மனிதர்.
முதலமைச்சர் பதவி என்பதை நாட்டு மக்களுக்கு சேவைசெய்யக் கிடைத்த ஒரு வாய்ப்பாக மட்டுமே எண்ணியவர் அவர். பதவிக்கும் பொருளுக்கும் புகழுக்கும் ஆசைப்படாத அவரது நெஞ்சம் ஏழை எளிய மக்களின் வளமான வாழ்வுக்காகவும் நாட்டின் நலனுக்காகவுமே பேராசைப்பட்டது. முதலமைச்சர் என்னும் பதவியைக் கொண்டு நாட்டை வளப்படுத்தும் பணியில் தன்னாலான எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டார். தேவை ஏற்பட்ட ஒருநாளில் அப்பதவியையும் துச்சமெனத் துறந்தார். முதலமைச்சராய் மட்டுமல்ல, பதவியில் இல்லாத ஒரு தொண்டனாகவும் பொதுமக்களுக்கு சேவை செய்யமுடியும் என்பதை செயலில் காட்டியவர். தன்னையே நாட்டுக்கு அர்ப்பணித்த தார்மீகத் தலைவர் அவர்.
தனிமனித வாழ்விலும் சரி, அரசியல் வாழ்விலும் சரி, கறை படியாத கரங்கள் காமராஜரின் கரங்கள்… தன்னிடம் இருப்பதையும் இல்லாதவர்க்கு தாரை வார்த்த செங்கரங்கள்… தன்னலம் பாராது, தனக்கென எதையும் ஒதுக்காது, பிறர்நலனே பெரிதென்று உழைத்தார்.
பிரச்சனைகளைக் கண்டு பயந்து ஒதுங்கிச் செல்வதால்தானே பிரச்சனைகள் பூதாகரமாய் உருவெடுக்கின்றன. அவற்றைத் துணிவுடன் எதிர்கொண்டு தேவையான முயற்சிகளை மேற்கொண்டு முளையிலேயே கிள்ளியெறிந்துவிடும் வண்ணம் தீர்வுகண்டுவிட்டால்? வாய்ச்சொல் வீரர்களாயிருப்பவர்களுக்கு மத்தியில் செயல்வீரராய்த் திகழ்ந்த காமராஜர் அதைத்தான் செய்தார். அதனால்தான் அவர்தம் அமைச்சர்களுக்கு சொன்னார், “பிரச்சனையை எதிர்கொள்ளுங்கள். அவை எவ்வளவு சிறியதாக இருந்தாலும் பரவாயில்லை. அவற்றைத் தீர்ப்பதற்கான வழியைத் தேடுங்கள். “
பகைவனுக்கருள்வாய் – நன்னெஞ்சே பகைவனுக்கருள்வாய் என்ற பாரதியின் வாக்கை மெய்யாக்கிய நன்னெஞ்சு காமராஜருடையது. கட்சியில் அவருக்கெதிராக செயல்பட்டவர்களையும் தன் அமைச்சரவையில் இருத்தி அழகுபார்த்த பரந்த உள்ளம் அவருடையது. தொண்டர்களை அடிமைகள் போலெண்ணி தங்கள் ஆதாயத்துக்காக பயன்படுத்தும் அரசியலில் அவர்களை உண்மையான பாசத்தோடும் அக்கறையோடும் அணைத்து செயல்பட்டவர் காமராஜர். தொண்டர்களின் தலைவரான அவர், தன்னுடைய பண்பாலும் நன்னடத்தையாலும் கட்சியின் தலைவரானார்… கடமையின்மீதான சிரத்தையாலும் சீரிய செயல்திறத்தாலும் கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் மனத்தில் நிறைந்தார்… கட்சிபேதமற்று மக்கள் அனைவரும் போற்றி வணங்கும் தனிப்பெருந்தலைவரானார்.
மனிதனை சிந்திக்கவைக்காத எந்த விஷயமும் சமுதாயத்துக்குத் தேவையில்லை என்பது அவருடைய கருத்து. “கடவுள் இருக்கிறது, இல்லை என்பதைப் பற்றி எனக்கு எந்தக் கவலையும் இல்லை. செய்யும் காரியம் நல்ல காரியமாக இருந்தாலும் போதும். கோயில், சாமி என்று பணத்தை உண்டியலில் கொட்டுபவன், அந்தக் காசைக் கொண்டு சாலைவசதி செய்துதந்தால் என்ன? பள்ளிக்கூடம் கட்டினால் என்ன? மதம் மனிதனை பயமுறுத்தி வைத்திருக்கிறதே தவிர, தன்னம்பிக்கையை வளர்த்திருக்கிறதா?’ என்று கேள்விகளையெழுப்பி சிந்திக்கத் தூண்டுகிறார். அதனால்தான் பகுத்தறிவுப் பகலவன் பெரியாருக்கும் பிடித்தமான தலைவராகிப் போனார்.
விடுதலை பத்திரிகையில் எழுதிய தலையங்கம் ஒன்றில் பெரியார், “காமராசரைப் போன்ற தன்னலமற்ற ஒருவரை அரசியலில் இனி நாம் காணவே முடியாது. காமராசர் தமிழர்களுக்குக் கிடைத்த நிதி போன்றவர். அவரது ஆட்சி தமிழகத்தில் மேலும் நீடிக்கவும் அவருடைய ஆட்சிக்கு இடையூறு எதுவும் ஏற்படாமலும் பார்த்துக்கொள்ள வேண்டியது தமிழ் மக்களின் தலையாய கடமையாகும்.” என்று எழுதியுள்ளார்.
காமராஜரை தென்னாட்டு காந்தி என்பார்கள். ஆனால் காந்திக்கும் இவருக்கும்தான் எவ்வளவு வேறுபாடு. வளரும்போது கோணலாய் வளர்ந்து பின் தானே நிமிர்ந்து நேராகி நின்று கிளைவிட்டுத் தழைத்த மரம் அது. இதுவோ… முளை விட்ட நாளிலிருந்தே நெஞ்சுநிமிர்த்தி நெடுநெடுவென்று நேர்வழியில் வளர்ந்து நின்று செழித்த மரம். எளிமையும் நேர்மையும் அவரிரு கண்கள்… சீரிய சிந்தனையும் செயல்பாடும் அவரிரு கரங்கள்… மக்கள் நலனே அவரது நாடித்துடிப்பு.
படிக்காதை மேதை என்று இவரைக் குறிப்பதும் சரியா என்று யோசித்துப் பார்க்கிறேன்… படிக்காதவர் என்று எதன் அடிப்படையில் சொல்லப்படுகிறார்? படிப்பு என்பது எதைக் குறிக்கிறது? பள்ளிப்படிப்பை மட்டும்தானா? வாழ்க்கைப் படிப்பைக் கற்றுத்தேர்ந்த வல்லான் அல்லவா அவர்? பள்ளிப்படிப்பை விட்டாலும் அன்றாடம் நூலகம் சென்று உலகநடப்பையும் நாட்டுநடப்பையும் வாசித்தறிந்துகொண்டாரே… உலகளவில் புகழ்பெற்ற அரசியல் ஆளுமைகளைப் பற்றியும், தங்கள் நாட்டு விடுதலைக்காக போராடிய அயல்நாட்டுத் தலைவர்களைப் பற்றியும் படித்தறிந்தாரே… அவையெல்லாம் படிப்பு என்னும் வரையறைக்குள் வாராதா என்ன? பள்ளிப்படிப்பை முடிக்காவிட்டாலும் வாழ்க்கைப் பாடத்தை முழுவதும் கற்றுத்தேர்ந்து முதுகலைப் பட்டம் பெற்றவரன்றோ காமராஜர்?
தலைமைப் பண்புகளான நேர்மை, நாணயம், சேவை மனப்பான்மை, தியாகம், நம்பிக்கை, தெளிவு, திட்டமிடல், முடிவெடுத்தல், வழிநடத்தல், சூழ்நிலையை சாதுர்யமாகக் கையாளுதல், மற்றவர்களை தம் கருத்துக்கு இணங்கவைக்கும் தன்மை, மற்றவர் கருத்துக்கு மதிப்பளித்தல், எதிரிகளையும் மன்னிக்கும் பெருந்தன்மை, தோல்வியிலும் துவளாத மனம் போன்ற அனைத்துப் பண்புகளும் இயல்பிலேயே கைவரப் பெற்றவர் காமராஜர். ஒரு தலைவன் என்பவன் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு, தானே ஒரு உதாரண புருஷனாய் வாழ்ந்துகாட்டியதால்தானே அவர் பெருந்தலைவர் காமராஜர் என்றழைக்கப்படுகிறார்.
அரைநூற்றாண்டுகால பொதுவாழ்க்கைக்குப் பிறகு, தன்னிகரற்ற அந்த தாயுள்ளம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி மீளாத்துயிலில் ஆழ்ந்தது. 1975 அக்டோபர் மாதம் இரண்டாம் நாள் காமராஜர் நம்மைவிட்டு மறைந்தார். அவரது மறைவுக்கு நாடே துக்கம் அனுசரித்தது. கட்சிபேதமற்று அனைத்துத் தலைவர்களும் அன்னாரது மறைவுக்காய் வருந்தினார்கள். அவருக்கு முன்னும் பின்னும் எத்தனையோ தலைவர்கள் நாடாள வந்தார்கள்.. போனார்கள்… வாழ்கிறார்கள்… ஆனாலும் காமராஜரின் ஆட்சிக்காலம் மட்டுமே தமிழக வரலாற்றில் பொற்காலம் என்னும் பதிவுசெய்யத்தக்கப் பெருமை கொண்டது என்பது என்றும் எவராலும் மறுக்கமுடியாத உண்மை.
அன்பு கீதா மதி.
தென் மாவட்டங்களில் கல்வி கற்றதால், பெருந்தலைவர் அவர்களைச் சந்திக்கும்,பேச்சைக்
கேட்கும் வாய்ப்புகள் அதிகம் கிடைத்தன.
அவர் தலைமை தாங்கிய பள்ளி நிகழ்ச்சிக்கு வெய்யிலில்
எங்களை
நிற்கவைத்ததற்காக அதிகாரிகளை நொந்து கொண்டார்.
அவரைப் பற்றிய அருமைத் தகவல்களைக் கொடுத்து மனதை நிரப்பி விட்டீர்கள்.
மிக மிக நன்றி மா
.வாழ்க பெருந்தலைவர் நாம.ம்.