–ச. பொன்முத்து.

“அன்னை சிவகாமி பெற்றெடுத்த தமிழ்ச் சிங்கம்.. பொற்கால ஆட்சியை நடத்திக் காட்டிய தலைவர்! தர்மமே மானிடப் பிறப்பெடுத்துத் தரணியிலே வந்துதித்து ஏழைகளைக் காத்து நின்றதென்றால் காமராசருக்கே அது சாலப் பொருந்தும். நம் தமிழ் நாட்டில் இலட்சோப லட்சம் மக்கள் கல்விச்செல்வம் பெற்றுத் திகழ்வதற்கு காமராசர் ஒருவரே காரணம் என்பதை மறுக்க இயலாது.

எளிமைக்கு இவர், இனிய எடுத்துக்காட்டு! கருப்புத் தங்கம்.. காங்கிரஸ் பேரியக்கத்தில் மாநிலத் தலைவர் – இந்திய தேசிய காங்கிரசின் தலைவர்- இரண்டுமுறை இந்தியாவின் பிரதம மந்திரிகளை நிர்மாணித்த கிங் மேக்கர்! தன்னிகரில்லாப் பெருந்தலைவர்! ஈடில்லா உழைப்பாளி! மக்களுக்காகவே வாழ்ந்து மக்களுக்காகவே தியாக வாழ்வேற்று மறைந்த மா மனிதர் இவர் என்பதை இவரின் இறுதி ஊர்வலத்தில் கூடிய கூட்டம் சாட்சி சொன்னது! என்றும், அந்த நன்றிப் பெருக்கோடு உளம் கனிந்து அத்திருமகனாரை நினைவில் நிறுத்தும் பொருட்டு, உலகெங்கும் வாழும் தமிழர்கள் பலரும் பங்கேற்க, “கர்மவீரர் காமராசர்” என்னும் கட்டுரைப் போட்டியை அறிவித்திருக்கிற நிலையில், துணிவு மிக்க செயற்குரியவர்; எளிமை கண்டு இரங்கிடும் பண்பாளர்; ஏழ்மையில் தான்  உழன்றதை எந்நிலையிலும் மறவாதவர்; அதிகாரம் என்ற அழுக்கு ஒட்டாத தூய்மையாளர்;  உலகச் சிந்தனையாளர்கள்  வார்த்தைகளில் உதிர்த்தவற்றை வாழ்ந்து காட்டியதோடு, மக்களின் நலம் சார்ந்து நல்லபல செயல்களைச் சட்டமியற்றி செயல்படுத்திச் சாதித்தவர் எனப்  பலவகையில் காமராசரைப் போற்றிப் புகழலாம்.

அரசியலில் அக்பரைப் போல் கெட்டிக்காரர்; அனுபவத்தில் நேருஜிக்கு இணையானவர், நேர்மையிலும், தியாகத்திலும், எளிமையிலும் காந்திஜிக்கு இணையான தலைவர். தன்னைத்தானே தூய்மைப்படுத்திக் கொள்பவனும், சுயமாகத் தியாகம் செய்யக் கூடியவனுமான இந்தியனே, தான் பிறந்த நாட்டுக்கு உற்ற துணையாக இருக்க முடியும் என்று கூறிய மகாத்மா காந்தி கருத்துப்படி நடந்து காட்டியவர்  தென்னாட்டு காந்தி காமராசர். இளமை என்னும் வசந்த காலத்தை இந்த நாட்டின் சேவைக்கு அர்ப்பணித்து திருமணமே செய்து கொள்ளாமல் வாழ்ந்தவர் கர்மயோகி கர்மவீரர் எனப் பல வண்ணம் புகழ்ந்து வணங்கலாம்.

“மானிடத் தன்மையைக் கொண்டு – பலர்

வையத்தை ஆள்வது நாம் கண்டதுண்டு

மானிடத் தன்மையை நம்பி – அதன்

வண்மையினால் புவி வாழ்வுகொள் தம்பி

‘மானிடம் ’ என்றொரு  வாளும்- அதை

வசத்தில்  அடைந்திட்ட உன்இரு தோளும்

வானும் வசப்பட வைக்கும் – இதில்

வைத்திருக்கும் நம்பிக்கை வாழ்வைப் பெருக்கும்”

இக்கவிதையில் பாவேந்தர் பாரதிதாசன், உலகத்தின் உயர்வு என்பது ஒவ்வொரு தனி மனிதனின் சிந்தனையிலும் கூட்டுழைப்பிலும் தங்கி நிற்கின்றது; ஒவ்வொரு மனிதனின் தோற்றமும் வாழ்வும், ஆக்கமும் அழிவும் அவன் சார்ந்துள்ள சமுதாயத்தின் நலத்திற்காகவே நிகழ்கின்றன;  நிகழவும் வேண்டும்  என்றுரைக்கிறார். இச்சிந்தனை வழியே, கர்மவீரர் காமராசரின் வாழ்க்கையின் அத்தனை நிகழ்வுகளும் இந்தச் சமூகத்து மக்களின் நலத்திற்காகவே அமைந்தது என்றால் அது மிகையாகாது.

இளமையில் கர்மவீரர்

தங்கமணி மாளிகையில்

தனிவயிரப் பந்தலிட்டு

மங்கையர்கள் சுற்றிவந்து

மங்கலமாய் கோலமிட்டுத்

திருநாள் அலங்காரச்

சிலைபோல் அலங்கரித்து

வாழ்த்தொலிக்கப் பெற்றெடுக்கும்

மகனாக வந்ததில்லை!

. . . .     . .  .      . .  .

நிமிர்ந்தால் தலையிடிக்கும்

நிற்பதற்கே இடமிருக்கும்

அமைவான ஓர்குடிலில்

ஐயா நீ வந்துதித்தாய்!

என்னும் கவியரசு கண்ணதாசனின் கவிதை வரிகள் காமராசரின் பிறப்பையும், இல்லச் சூழலையும் எடுத்தியம்புவன.

ஏழ்மை குடியிருக்கும் எளிய குடும்பச் சூழலில் பிறந்து ஏழ்மையைக் கண்டு துவண்டு விடாமல்,  ஏழைமக்கள் ஏற்றம் பெறும் வகையில்  சிந்தித்த, செயலாற்றிய பெருமகன் இராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து  1987-ல் நிர்வாகக் காரணங்களால் பிரிக்கப்பட்ட விருதுநகர் மாவட்டத்திலுள்ள விருதுநகரில் 15.07.1903-ல் நாள் பிறந்தார். அவரது தந்தை  குமாரசாமி,  தாயார் சிவகாமி அம்மாள் ஆவார்.  அவர்களின் குல தெய்வமான காமாட்சி அம்மனின் பெயரால் முதலில் காமராசருக்கு “காமாட்சி” எனப்  பெயரிட்டார்கள்.  காமராசரை “ராஜா” என செல்லமாக  அவரது தாயார் அழைத்து வந்தார். பின்னர் காமாட்சி மற்றும் ராஜா ஆகிய பெயர்களை இணைத்து காமராசர் என்றே அழைத்தார்கள்.

1909 ஆம் ஆண்டு தனது 6 வயதில்  தந்தை குமாரசாமி நாடார் காலமாகவே சில ஆண்டுகளே பள்ளிக்குச் சென்றார் காமராசர். பின்னர் தனது 12-வது வயதில் படிப்பை நிறுத்த வேண்டிய நிலை உருவாகவே,  ஜவுளிக் கடை ஒன்றில் காமராசர் வேலையைப் பார்க்க நேரிட்டது.

பள்ளியில் நடைபெற்ற  விநாயகர் பூசையின்போது குறைவாக பிரசாதம் வாங்கி வந்ததற்காக கடிந்து கொண்ட தனது பாட்டியிடம், ஒவ்வொருவரிடமும் ஐந்து பைசா வீதம் வசூல் செய்த ஆசிரியர் பிரசாதத்தையும் ஒரே மாதிரியாகப் பிரித்து வழங்க ஏற்பாடு செய்யாததற்கு ஆசிரியரைத்தான் கடிந்து கொள்ள வேண்டும் என  மாணவப் பருவத்தில் காமராசர் கூறியது அவரது உயர்ந்த பண்புக்கு சான்றாகும்.

காலைநேரத்தில் மதம் பிடித்த நிலையில் ஓடிக் கொண்டிருந்த யானையை அடக்க முடியாமல் அனைவரும் அஞ்சி நடுங்கி, பயந்து ஓட,   அதன் நிலையை உணர்ந்த காமராசர் விரைந்து கோயிலுக்குச் சென்று அதனைக் கட்டியிருக்கும் இரும்புச் சங்கிலியை யானையின் துதிக்கைக்கு வீசி எறிந்து அதனுடைய கோபத்தை தணித்த சிறுவனாக,  எழுந்துள்ள சிக்கலுக்கான தீர்வை எளிதில் செயல்படுத்தும் தீரம் இளமையிலேயே காமராசரிடம் குடிகொண்டிருந்தது என்பதற்கு சான்று பகர்வதாகும்.

விடுதலைப் போரில் கர்மவீரர்:

            அவ்வப்போது சாலைகளில் கேட்கப்படுகிறது ‘வந்தே மாதரம்’ என்ற சொல்லும், விடுதலைப் போராட்டக் களமும் இளைஞனாக இருந்த காமராஜரை விடுதலைப் போராட்டத்தின் பக்கம் திருப்பியது.  1919 ஏப்ரலில் ரௌலட் சட்டத்தை எதிர்த்து காந்தியடிகள் விடுத்த அழைப்பை ஏற்று காங்கிரசின் முழுநேர ஊழியரானார்.  இதே ஆண்டில் சத்தியமூர்த்தியைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.

அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை

திறனறிந்து தேர்ந்த கொளல்.

என்னும் வள்ளுவத்திற்கிணங்க, சத்தியமூர்த்தியை தன்னுடைய அரசியல் ஆசானாகவே ஏற்றார்.

            தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராகச் சத்தியமூர்த்தி இருந்தபோது, காமராஜ் செயலாளராக இருந்தார்.  பிறகு காமராஜ்  தலைமைப் பொறுப்புக்கு வந்தபோது, சத்தியமூர்த்தி செயலாளராக இருந்து செயல்பட்டார்.  சத்தியமூர்த்தியும் காமராஜரும் ‘குரு-சீடர்’ என்ற முறையில் இருந்தார்கள் எனச் சிலர் சொல்வதுண்டு.

            1927-ம் ஆண்டு சென்னையில் ‘கர்னல் நீல்’ சிலையை அகற்றம் போராட்டம் நடத்த  அண்ணல் காந்தியிடம் அனுமதி பெற்ற நிலையில், போராட்டம் நடத்தாமலேயே அச்சிலை அகற்றப்பட்டது. 1928-ல் மதுரைக்கு வந்த சைமன் குழுவை எதிர்த்துப் போராட்டம் ;  வேதாரண்யம் உப்புச் சத்தியாகிரகம்; 1930-ல் சட்டமன்றுப்பு இயக்கம்; 1945-ல் ஆகஸ்டு புரட்சி  எனப் பல்வேறு விடுதலை வேள்விகளில் கலந்து கொண்டு,  சிறைவாசம் அனுபவித்தார்.

முழந்துண்டு சட்டைக்கும் முதலில்லாத் தொழிலாளி

பழனிமலை ஆண்டிக்குப் பக்கத்தில் குடியிருப்போன்

பொன்னில்லான், பொருளில்லான், புகழன்றி வசையில்லான்

இல்லாளும் இல்லான், இல்லையெனும் ஏக்கமிலான்

அரசியலைக் காதலுக்கே அர்பணித்தார் மத்தியிலே

காதலையே அரசியலுக்கு கரைத்துவிட்ட கங்கையவன்

என வாழ்க்கை முழுமையையும் காமராசர் மக்கள் பணிக்கே அர்ப்பணித்ததை படம் பிடித்துக் காட்டுகிறார் கவிஞர் கண்ணதாசன்.  இதனை உள்வாங்கிய தமிழருவி மணியன்,

நீ. . . முக்கால் கைச் சட்டையிலும்

முழந்துண்டு வேட்டியிலும்

சுயதேவைக்குச் சுவரெழுப்பியவன்

என வியந்து போற்றுகிறார்.

கட்சிப் பணியில் கர்மவீரர்

“வெறும் படிப்பறிவு, சொல்லிக் கொடுத்த கலையறிவு – இவை மட்டும் நாட்டை ஆள்வோருக்குப் போதாது.  எளிதில் எவரும் எட்டமுடியாத பட்டறிவைத்தான் அவர்கள் நிறையப் பெற்றிருக்க வேண்டும்.  வாழக்கையின் பெரும் பகுதியை அந்தப் பட்டறிவைப் பெறுவதில் செலவிட்ட ஒருவனே எஞ்சிய காலத்தில் நாட்டை ஆளத் தகுதியுடையவனாவான்” என்ற பிளேட்டோவின் கூற்று நம் கர்மவீரர் காமராசருக்குரியது.

            “எனக்குச் சுமார் 18 வயது. 1923ஆம் வருஷம் காங்கிரஸில் சேர்ந்திருந்தேன். . .  சுயராஜ்யம் நம்நாட்டுக்கு வேண்டும்; காங்கிரசும் காந்தியுமே அதைப் பெற முடியும்’- இதுதான் அப்போது எனக்கத் தெரிந்த அரசியல் விவகாரம்.  காங்கிரஸ் இடும் வேலையை முன் பின் பாராமல் அப்படியே செய்வேன்.  காங்கிரஸிலில் உள்ள தலைவர்களில் ஒற்றுமை, வேற்றுமை ஒன்றும் தெரியாது.  காங்கிரஸ் சட்டசையைப் பகிஷ்கரிக்கச் சொல்கிறது, தீவிரமாகப் பிரச்சாரம் செய்து அதைச் செய்யப் பாடுபட்டேன்.

அடுத்தாற்போல் சுயராஜ்யக் கட்சியைச் சட்டசபைக்குள் செல்ல அனுமதி கொடுத்து எல்லாக் காங்கிரஸ்காரர்களையும் வேலை செய்யச் சொன்னார்கள்.  அதையும் பிரச்சாரம் செய்தேன்.  பிறகு 1930ஆம் வருஷத்தில் சட்டமறுப்பு நடந்தது.  சட்ட மறுப்பில் சிறை சென்றேன்.  இப்போது  சட்டசபைக்கு என்னை அனுப்பியிருக்கிறார்கள்.  இவை எல்லாவற்றிலும் காங்கிரஸ் கட்டுப்பாட்டுப்படி நடப்பதுதான் எப்போதும் நான் கொண்ட கொள்கை.” என காமராஜ் தனது கட்சிப் பணி குறித்து விவரிப்பது நோக்கத்தக்கது.

தமுக்கடிக்கும் தொண்டராய் இருந்து  தலைவர்களுக்கு ஆலோசனை கூறும் உயர்தகு நிலைக்கு தன்னை உயர்த்திக் கொண்டதும், கட்சிக்காக உண்டியல் குலுக்கி நிதி திரட்டிய நிலையிலிருந்து பிரதமர்களை நிர்ணயிக்கும் ‘கிங் மேக்கராக’ செல்வாக்கு பெற்றதும், 1940 முதல் 1954 வரை 14 ஆண்டு காலம்,  இடைவெளியின்றி காங்கிரஸ் கட்சித் தலைவராகவும், 12 ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினராகவும், 15 ஆண்டுகள் தமிழகச் சட்டமன்ற உறுப்பினராகவும், 9 ஆண்டுகள் முதலமைச்சராகவும்  தொடர்ந்து நீடிக்கும் அளவிற்கு தன் நிலையை நிர்ணயித்துக் கொண்டதும், காமராசர்  ஆற்றிய  அரிய பணிகளால் என்றால் அது மிகையாகாது.

கல்விப் பணியில் கர்மவீரர்:

 என்னருந் தமிழ்நாட்டின்கண் எல்லாரும்கல்வி கற்றுப்

பன்னருங் கலைஞானத்தால் பராக்கிரமத்தால் அன்பால்

உன்னத இமயமலைபோல் ஓங்கிடும் கீர்த்தியெய்தி

இன்புற்றார் என்றுமாற்றார் இயம்பக்கேட்டிடல் எந்நாளோ?

என ஏங்கிய பாரதிதாசனின் ஏக்கத்தைப் போக்கவும்,  பாமரப் பிள்ளைகள் படித்து பண்டிதர் களாக்கவும் முதலமைச்சராகப் பொறுப்பேற்றவுடன் ராஜாஜி மாற்றி அமைத்து நடைமுறைப் படுத்திய குலக் கல்விக் கொள்கையைக் கைவிட்டதோடு எல்லா ஏழைக் குழந்தைகளுக்கும், தொடக்கக் கல்வி இலவசம் என்னும் திட்டத்தைச் செயல்படுத்தினார் காமராசர்.

ராஜாஜியால் நிதிப்பற்றாக்குறை காரணமாக மூடப்பட்ட 6000 ஆரம்பப் பள்ளிகளை  ஆட்சிக்கு வந்த சிலமாதங்களில்  மீண்டும் திறக்கும்படி  ஆணையிட்டார் காமராசர். மேலும் 300 மக்கள் இருக்கும் கிராமத்திற்கு ஓர் ஆரம்பப்பள்ளி.  3 மைல்களுக்கு ஒரு நடுநிலைப்பள்ளி.  5 மைல்களுக்கு ஓர் உயர் நிலைப்பள்ளி என 14000 புதிய பள்ளிகள் கட்டவும் உத்தரவிட்டார்.  எல்லா நகரங்களிலும் கல்லூரிகள் என தொடங்கி தமிழ்நாட்டு மக்கள் ஒளிபெற கல்விக்கண்களை திறந்துவிட்டார்.

            ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள், உடற்பயிற்சிக் கல்லூரிகள், கலைக் கல்லூரிகள், மதுரையிலும், தஞ்சாவூரிலும் மருத்துவக் கல்லூரிகள் என கல்வித் துறையில் மிகப் பெரிய புரட்சி செய்தார்.

            கல்வி கற்பது என்பது ஏதோ பகட்டான செயல் என்ற எண்ணத்தைப் போக்கி, பாமர மக்களும் முயன்றால் எதையும் எட்டிப்பிடிக்க முடியும் என்கிற நிலையை உருவாக்கினார் காமராசர்.  அன்று இட்ட வித்துகள் முளைத்து வேர்விட்டு வளர்ந்து தழைத்து இன்றைய தமிழகத்தில் பெரும் விருட்சங்களாகப் பெரிய பெரிய கல்வி நிறுவனங்களாக பல்வேறு பல்கலைக் கழகங்களாகப் பல்துறைக் கல்வியை வழங்கிக் கொண்டிருக்கின்றன.

kplan” நான் படிக்கக் காரணம் என் அப்பா. என் அப்பா படிக்கக் காரணம் காமராசர். Happy Birthday Kamaraj…” என அவரது பிறந்த நாளில் வாழ்த்துக் கூறி தன்னுடைய முகநூலில் (Facebook) பதிவு செய்கிறார் கார்த்திகேயன் சுப்பிரமணியன்.

ஆயிரமாயிரம் ஆண்டுகளாக தமிழ் மக்களுக்கு மறுக்கப்பட்டு வந்த கல்வி என்கிற சொத்தை இலவசமாக வழங்கி புரட்சி செய்தவர் காமராஜர். அதனால் தான் அவரை எல்லோரும் ‘கல்வி வள்ளல்’ என்றும் ‘கல்விக்கண் திறந்த காமராசர்’

 

 என்று அழைத்தனர்.  ஆனால் இன்றோ மாணவர்களின் நிலையோ வேறாக உள்ளது என்பதைச் சுட்டிக் காட்டுகிறது மேலுள்ள படம்.

இன்று உயர்வகுப்பினர் மட்டுமே ஆக்கிரமித்துள்ளதாகக் குற்றம் சாட்டப்படும் ஐஐடி நிறுவனத்தை, அனைத்து வகுப்பு மாணவர்களின் உயர்கல்விக்காகவும் தொடங்கிய பெருந்தகையாளர் காமராசர். படிக்க வரும் மாணவர்கள் பட்டினியாக இருக்கக் கூடாதென்று உணவும் அளிக்கும் வகையில் ‘மதிய உணவுத்’ திட்டம் தீட்டி நிறைவேற்றினார்!

முற்பகல் மூளை நிரப்பி

பிற்பகல் வயிறு நிரப்பி

தார்க்கோல் சிறுவர்களை

எழுதுகோல் ஏந்த வைத்தாய்

அது உன் தொலைநோக்கு.

என வைரமுத்து தன் வார்த்தைகளில் காமராசரை வாழ்த்துகிறார்.

            தமிழ்நாட்டு மக்களின் வாழ்க்கை நிலைபற்றிய காமராசரின் துல்லிய அறிவும், மக்கள் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் அவருக்கிருந்த ஆர்வமும், துறைச் செயலாளர்களிடத்தில் அவரது மதிப்பையும் மரியாதையையும் பலமடங்கு உயர்த்தின.  அலுவலர்கள் அறியாத பல விஷயங்களை, முதலமைச்சராவதற்கு முன்னரும் பின்னரும் அவர் மேற்கொண்ட பயணங்கள் அவருக்குக் கற்றுத் தந்தன. தமிழகத்தின் ஒவ்வொரு மூலைமுடுக்கும் அவருக்கு நன்கு தெரியும்.  ஒவ்வொரு முறையும் சுற்றுப் பயணத்திலிருந்து திரும்பியதும், மக்கள் தேவைகளைக் கண்டறிந்த காமராசர், பல புதுமைகளைப் புகுத்தி நிர்வாகத்தைச் செம்மைபடுத்தினார்.

நீர் மேலாண்மையில் கர்மவீரர்:

  பெருந்தலைவர் காமராசர் கல்வி வளர்ச்சி ஏற்பட்டுவிட்டால், சாதி வித்தியாசம் தன்னாலே அகன்றுவிடும். தாழ்த்தப்பட்ட ஒருவர் கலெக்டராகிவிட்டால், ‘நான் உயர்ந்த சாதி ஆகையால் நான் அவர் கீழ் வேலை செய்ய மாட்டேன்’ என்று யாரும் கூற முடியாதுன்னேன். உயர்ந்த சாதின்னு கூறிக் கொள்பவன் தானாவே கலெக்டர் உத்தரவுக்கு வேலை செய்யறான். ஆகவே, கல்வியே இந்த ஜாதிய கொடுமைய போக்க வழிவகுக்கும்ன்னேன்!”

            ” டாக்டருக்கு படிச்ச தாழ்த்தப்பட்டவன் ஊசி போட்டு எந்த நோயாளி செத்தான்னேன்? பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த எஞ்சினீயர் கட்டுன எந்தப் பாலம் இடிஞ்சுபோச்சுன்னேன்? யாருக்கு வாய்ப்பு கொடுத்தாலும் இஞ்சினியரும் ஆகலாம். டாக்டரும் ஆகலாம்னேன்!” என சாதி கட்டமைப்புகளை அடியோடு வெறுத்தார்.

தனது அமைச்சரவையில் பரமேஸ்வரன் என்னும் தாழ்த்தப்பட்டவரை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சராக்கி கோயில்களில் முதல்மரியாதை பெற வைத்தவர் காமராசர். பேச்சுதான் செயல்.. செயல்தான் பேச்சு என வாழ்ந்தவர் காமராசர்.

             நீர்பாசனமற்று வறண்டு கிடந்த பூமியை வளமாக்கும் நோக்கோடு மழைநீரை சேமித்து, தேக்கி விவசாய நிலங்களுக்கு நீர்பாசனம் செய்ய அமராவதி அணை, ஆரணியாறு அணை, வைகை அணை, மணிமுத்தாறு அணை, மலம்புழா அணை, சாத்தனூர் அணை, மேட்டூர் கால்வாய், குந்தா அணை,  வாலையாறு அணை, பரம்பிக்குளம்-ஆழியாறு அணை, கீழ்பவானி அணை, கிருஷ்ணகிரி அணை, புள்ளம்பாடி அணை, மங்கலம் அணை, கோமுகி அணை, மேல்கட்டளை கால்வாய்,  வீடுர் அணை, தோப்பியார் ஏரி, மீனக்கரை ஏரி, பெரியாறு நீர்மின் திட்டம் என்பன போன்ற அணைகளைக் கட்டி நீர்மேலாண்மையை மேம்படுத்திய பெருமை காமராசரைச் சாரும்.  இதனையே,

நதிகளை ‘அணை’த்து

நீரிலும் பெயரெழுதி

நிலைத்தாய்,

அது உன் சரித்திரம்.

 என வார்த்தைகளில் வடிக்கிறார் வைரமுத்து.

            மேலும், நீர்மேலாண்மையோடு நீர்மின்சக்தி தயாரிக்கும் பணிகளையும் மேற்கொண்டார் காமராசர்.  தொழில்வளம் பெருகும் நிலையில், தொழிற்சாலைகளுக்கு மின்சாரம் தேவைப்படும்  என்ற நோக்கில் அவர் ஆற்றிய பணிகள் அளப்பரியது.

தொழில் மேம்பாட்டில் கர்மவீரர்:

தொழிற்சாலைகளுக்கான அடிப்படை கட்டமைப்புகளை ஒருங்கிணைந்த முறையில் காமராசர் உருவாக்கியதன் மூலமாக தொழில் வளர்ச்சியில் இந்தியாவிலேயே தமிழகம் இரண்டாவது  இடத்தைப் பிடித்தது. அயல்நாட்டுச் சுற்றுப்பயணத்தின்போது இந்திய தேசத்தின் நலத்திற்கும்,  தமிழகத்தின் உயர்வுக்கும் வித்திட்டார்.

1. நெய்வேலி நிலக்கரித் திட்டம், 2.பெரம்பலூர் ரயில்பெட்டித் தொழிற்சாலை, 3.திருச்சி பாரத் ஹெவி எலெக்ட்ரிகல்ஸ், 4.ஊட்டி கச்சா பிலிம் தொழிற்சாலை, 5.ஆவடி கனரக வாகன தொழிற்சாலை, .கல்பாக்கம் அணுமின் நிலையம், கிண்டி டெலிபிரின்டர் தொழிற்சாலை, 8.சங்ககிரி துர்க்கம் சிமெண்ட் தொழிற்சாலை, 9.மேட்டூர் காகிதத் தொழிற்சாலை, 10.கிண்டி அறுவைச் சிகிச்சைக் கருவித் தொழிற்சாலை, 11 .துப்பாக்கி தொழிற்சாலை, 12. நெய்வேலி நிலக்கரி சுரங்கம், 13. சேலம் இரும்பு உருக்காலை, 14. பெரம்பூர் ரயில்பெட்டித் தொழிற்சாலை, 15. அரக்கோணம் இலகுரக ஸ்டீல் ப்லான்ட் தொழிற்சாலை, 16. சமய நல்லூர் அனல்மின் நிலையம், 17. சென்னை அனல்மின் நிலையம், 18. நீலகிரி கச்சாபிலிம் தொழிற்சாலை என்பன போன்ற தொழிற்சாலைகளை நிறுவி எண்ணற்ற தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பினையும் அவர்களுக்கான வாழ்வாதாரத்தையும் உருவாக்கித் தந்த பெருமை காமராசரையே சேரும்.

பதவித் துறப்பில் கர்மவீரர்:

வேலூர் சிறையில் இருந்தபோது,  1941-ம் ஆண்டில் விருதுநகர் நகராட்சி மன்றத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.  1937-ல் இப்பதவி தம்மைத் தேடி வந்தபோது, குறுகிய வட்டச் செயல்பாட்டுக்குள் தம்மை நிறுத்திக் கொள்ள விரும்பாததால் ஏற்கமறுத்தார் காமராசர்.  இதுபோன்ற பதவியில் இருப்பவர்கள், சரியாகக் கவனித்து பொறுப்போடு செயலாற்ற வேண்டும் என்பதில் உறுதியோடு இருந்தார்.  விடுதலையானதும் விருதுநகருக்கு வந்து, முனிசிபல் கவுன்சில் கூட்டத்தில் தலைவராகக் கலந்து கொண்டு, தம்மைத் தேர்ந்தெடுத்ததற்கு நன்றி கூறிவிட்டுத் தொண்ணுhறாவது தீர்மானத்தை நிறைவேற்றிவிட்டுப் பதவியை ராஜினாமா செய்தார்; கட்சி வேலைகளுக்காகப் பதவியைத் தூக்கி எறிந்தார்.

காமராசர் முதலமைச்சராக இருந்தபோது பிரதமராக ஜவஹர்லால் நேரு பதவி வகித்தார். அப்போது காங்கிரஸ் கட்சியில் சில பிரச்சனைகள் உருவாகின. எனவே காமராசர் ஒவ்வொரு மாநிலத்திலுள்ள மூத்த தலைவர்களும் நீண்ட நாட்கள் பதவி வகிக்கின்றவர்களும், ஆட்சிப் பணியை விட்டு விலகி கட்சிப்பணியில் ஈடுபட வேண்டும் என்ற திட்டத்தை பிரதமர் ஜவஹர்லால் நேருவிடம் கூறினார். இந்தத் திட்டத்தைப் பிரதமர் ஜவஹர்லால் நேரு வரவேற்று ஆதரித்தார்; மிகவும் பாராட்டினார்; உலகத்திலுள்ள நாளிதழ்களெல்லாம் பெருந்தலைவர் காமராஜரின் இந்தத் திட்டத்தைப் பாராட்டின. மூத்த தலைவர்கள் பதவி விலகும் திட்டத்தை “காமராசர் திட்டம்” என்றே அழைத்தார்கள். இதனை ‘கே பிளான்’ என்றே கூறினார்கள். இதற்கு முன்னுதாரணமாக தான் வகித்த முதலமைச்சர் பதவியைத் துறந்து கட்சிப்பணிக்கு தன்னை அர்ப்பணித்துக் கொண்டார்.

இராமனுக்கு நாளைய தினம் முடிசூட்டு விழா என்றபோது எந்தளவுக்கு மகிழ்வாய் இருந்தானோ அதே அளவுக்கு மறுநாள் வனவாசம் என்றபோதும் மகிழ்வாய், ‘அன்றலர்ந்த தாமரையாய்’ இருந்ததாக கம்பன் வர்ணிப்பதைப் போல காமராசர் தன்னுடைய முதலமைச்சர் பதவியைத் துறந்தபோது மனமகிழ்வாய் இருந்ததாகக் கூறுவர்.  ஆனால், கர்மவீரர் காமராசரோ,

இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள்

துன்பம் உறுதல் இலன்.

என வள்ளுவப் பெருந்தகை குறிப்பிடும் மனநிலையை ஒத்திருந்தார். அதனால்தான் கண்ணதாசன்,

தீயன நாடார், என்றும்

    சிறுமைகள் நாடார், வாழ்வில்

மாயங்கள் நாடார், வெற்று

     மந்திரம் நாடார், நீண்ட

வாய்கொண்டு மேடை சாய்க்கும்

     வரட்டு வார்த்தைகள் நாடார்

தமிழ் மேம்பாடும் நீதிமன்ற சூடும்:

      கர்மவீரர் காமராசர் தமிழ்ப் புத்தாண்டு தினமான 13.04.1953 அன்று தமிழக முதலமைச்சராகப் பதவி ஏற்றுக் கொண்டார். பகல் உணவுத் திட்டத்தை முதலில் எட்டயபுரத்தில் தொடங்குவது என முடிவெடுத்தார்.

‘வயிற்றுச் சோறிட வேண்டும்-இங்கு

வாழும் மனிதருக் கெல்லாம்

பயிற்றிப் பலகல்வி தந்து-இந்தப்

பாரை உயர்த்திட வேண்டும்’

என்றும்,

 ‘அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்;

      ஆல யம்பதி னாயிரம் நாட்டல்;

அன்ன யாவினும் புண்ணியம் கோடி

      ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறி வித்தல்’

என்று பாடிய மகாகவி பாரதி  பிறந்த மண்ணில் இத்திட்டத்தைத் தொடங்கி வைத்து  தமிழ்க் கவிதைகளால் விடுதலைக்கு வேகமூட்டிய மகாகவிக்கு மரியாதை செய்தார்.

மூதறிஞர் ராஜாஜியின் பல்வேறு செயல்பாடுகளில் காமராசர் முரண்பட்டிருந்தாலும்,  தான் அமைத்த மந்திரிசபையில் சி.சுப்பிரமணியம் உட்பட ராஜாஜியின் அமைச்சரவையில் இருந்தவர்களையும் சேர்த்துக் கொண்டார். இவ்வாறு தமிழுக்கும், தமிழுக்காக உழைத்தவர்களும் பெருமை சேர்த்ததோடு,

கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த

ஒன்றுநன்று உள்ளக் கெடும்

என்ற வகையில் ஒருவரிடம் உள்ள நல்ல செயலை எடுத்துக் கொண்டு அவரைப் பாராட்டவும் அவர்களிடம் ஆலோசனை பெறவும் முனைந்தவர் காமராசர்.

ஆனால், ஈழப் பிரச்சனையில்  முதலமைச்சர் எடுத்த முடிவு சரியில்லை என  முரண்பட்டார் என்பதற்காக, “வீட்டு வசதி வாரிய தலைமை அலுவலகக் கட்டடத்தின் மேல், பெரிய அளவில் நியான் விளக்கு போர்டு உள்ளது. அதில், “தமிழ் வாழ்க’ என்கிற வார்த்தை பொறிக்கப்பட்டுள்ளது. இதை உண்மையாக நடைமுறைப்படுத்த வேண்டுமென்றால், கொள்கை ரீதியான மாறுபாடுகள் இருந்தாலும் மனுதாரரைப் போன்ற தமிழ் எழுத்தாளர்கள், தமிழ் அறிஞர்கள், தமிழ் சிந்தனையாளர்களை கவுரவப்படுத்த வேண்டும். தமிழ் சிந்தனையாளர்களை பாதுகாப்பதன் மூலமே தமிழ் வாழும். அப்போது தான், நியான் விளக்கு பொருத்தப்பட்ட போர்டில் உள்ள, “தமிழ் வாழ்க’ என்கிற வாசகம் மேலும் மிளிரும்” என  நீதிபதி சந்துரு ஆணையிடும் அளவுக்கு கீழ்த்தரமான அரசியல் நடத்துவோரே இன்றுள்ள அரசியல்வாதிகளாய் நாட்டை வலம் வந்து கொண்டுள்ளனர்.

விளம்பரம் விரும்பா கர்மவீரர்:

            “விளம்பரத்தைத் துரத்திக்கொண்டு ஓடும் அரசியல் வாதிகளிடையே, விளம்பரம் தன்னைத் தேடி வந்தபோதும், அதைத் துரத்தி அடிக்கும் அரசியல்வாதியாகக் காமராசர் வாழ்ந்தார்” எனப் பத்திரிகையாளர்சோ  குறிப்பிட்டதற்கு சான்றாக ஒன்றைக் குறிக்கலாம்.

காமராசர் இலங்கை, மலேயா, ரஷ்யா, கிழக்கு ஜெர்மனி, ஹங்கேரி, பல்கேரியா, செக்கோஸ்லேவாகியா, யூகோஸ்லோவாகியா போன்ற வெளிநாடுகளுக்கு பயணம் செய்துள்ளார். இரஷ்யாவின் அழைப்பை ஏற்று 22.06.1966-ம் ஆண்டு மாஸ்கோ சென்றார்.  குளிரைச் சிறிதும் பொருட்படுத்தாமல் எளிய உடையில் சென்ற காமராசரை அங்குள்ள மக்கள் வியப்புடன் பார்த்தனர்.   நமது நாட்டு வேட்டியும் சட்டையுமே அணிந்து சென்றதால் இந்த எளிய உடை பற்றியும் அவருடைய எளிமை குறித்தும் அந்தந்த நாட்டு பத்திரிகைகளும் வெகு சிறப்பாக பாராட்டின.  மக்களும் வியந்து போற்றினர்.  வைரமுத்து இதனை,

சோவியத்தின் உறைபனிக்

காற்றிலும்

கதராடை பூண்டே

கைவீசி நடந்தாய்

அது உன் எளிமை.

என வார்த்தெடுக்கிறார்.

பள்ளியில் தொடர்ந்து கல்விகற்க இயலாத நிலையில், காமராசருக்கு ஆங்கில அறிவு குறைவு என்று கூறுவாருண்டு. ஆனால் அவர்களுக்கு பதிலளிக்கும் விதமாக ஒரு சம்பவத்தைச் சுட்டுகின்றனர் காமராசரைக் குறித்து அறிந்தோர்.  லால் பகதூர் சாஸ்திரி பிரதமராக இருந்தபோது இலங்கைக்குச் சென்று  ஒப்பந்தம் ஒன்று செய்துகொண்டு திரும்பினார். சென்னையில் ராஜ்பவனில் நிருபர்கள் அவரைச் சந்தித்துக் கேள்விகள் கேட்டனர். ஒருவர் கேட்டார், “இப்போது நீங்கள் செய்துகொண்டிருக்கிற ஒப்பந்தத்தை தொடர்ந்து பதவிக்கு வரும் ஆட்சியாளர்கள் மதித்து நடப்பார்களா?”” என்றார். அப்போது அங்கிருந்த பெருந்தலைவர்,

 “Don’t go and print any such suggestions in the paper. This is an agreement signed by two Democratic Governments. Just as any Democratic Government in India would honour this agreement, the successive Governments in Ceylon will also honour this agreement. That is the principle involved in it.”  என ஆங்கிலத்தில் பதிலிறுத்தாராம். இந்த பதிலினை சாஸ்திரியும் ஒப்புக் கொண்டாராம்.  மேலும், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் போன்ற மொழிகளும் காமராசருக்குத் தெரியும் என்கின்றனர்.

            ஆனால் இன்றுள்ள அரசியல்வாதிகள் எனக்கு பல மொழிகள் தெரியும் என்று கூறிக் கொண்டாலும், வழக்கு சார்ந்த தாள்களைப் பார்க்க, தமிழில் மொழிபெயர்க்கக் கூறி தங்களின் மொழியறிவை மக்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டும் அவலநிலையும் உள்ளது.

            கல்விச் சாலைகள், தொழிற்கூடங்கள், அணைக்கட்டுகள், போக்குவரத்து சாலைகள், மக்கள் மேம்பாடு,  என காமராசரின் ஆட்சி சிறப்பாக நடந்து வந்த நிலையில், ‘மலையக் கொடஞ்சு அணைகள் கட்டியிருக்கிற குந்தா அணை போன்றவற்றையும், நாம் செய்த சாதனைகளையும் ஒரு ‘நியூஸ் ரீலா’ எடுத்தா வர்ற தேர்தலுக்கு உதவியாக இருக்கும்’ என்று  நெல்லை ஜெபமணி கூற, சற்றே யோசித்த காமராசர், ‘எவ்வளவு செலவாகும்’ என்று வினவ, ‘ஒரு மூணு இலட்சம் வரை ஆகும்’ என்று பதிலளிக்கப்பட்டது.

            ‘ அடப்பாவிகளா? . .  மூணு இலட்சமா? இந்த மூணு இலட்சம் இருந்தா நான் இன்னும் பத்து ஊர்ல பள்ளிக்கூடம் கட்டிப்பிடுவேன். . . புள்ளைங்க படிக்க வழியக் காணோம், நீ நியூஸ் ரீல் காட்டி வெளிச்சம் போடப் பாக்குறியா. .  போ. . போ . .’  என காமராசர் விரட்டினார்.

            ஆனால் இன்றுள்ள அரசியல்வாதிகள், சட்டப்பேரவை வைரவிழா நினைவுத் தூண் கட்டுவதற்கு ரூ.1.32 கோடி செலவும், அதனை திறப்பதற்காக பத்திரிகைகளில் விளம்பரம் கொடுக்க ரூ.1.43 கோடியும் செலவு செய்வதைப் பார்க்கிறபோது, காமராசரின் பெயரை ஓட்டுக்காக உச்சரிக்கிறார்கள் என்பது மட்டும் தெளிவாகிறது.

பொதுவாழ்வில் கர்மவீரர்:

உலகில் முதன்மையானது எது என்று நபி(ஸல்) அவர்களிடம் கேட்டபோது, ‘தாய்’ என்றாராம். இரண்டாவதாக எது முதன்மையானது எனக் கேட்டபோது, ‘தாய்’ என்றாராம். மூன்றாவதாக முதன்மையானது எது என்று கேட்டபோதும், ‘தாய்’ என்றாராம்.

காதற்ற ஊசியும் வாராதுகாண் கடைவழிக்கே என்று வாழ்ந்து, எல்லாவற்றையும் துறந்த பட்டினத்தடிகள் கூட, தாயின் மரணத்தில் கண்ணீர் விட்டு ‘ஐயிரண்டு திங்களாய் அங்கம் எலாம் நொந்து பெற்று’ எனப் பாடித் தீமூட்டினாராம்.  ஆனால்  காமராசர் தனது தாயிடம் நடந்து கொண்ட விதம் நம்மை எல்லாம் மெய் சிலிர்க்கச் செய்கிறது. இதனை உள்வாங்கிக் கொண்ட தமிழருவி மணியன்

நீ. .  ஏழ்மையில் பிறந்து ஏழ்மையை உணர்ந்து

ஏழைகள் வாழ ஆட்சியில் அமர்ந்தவன்!

உன் பொது வாழ்க்கை. . .

வேள்வி வளர்க்கும் தபோவனத்தைப் போல்

தூய்மையானது.

வாய்மையும் நேர்மையும்

உன் வாழ்க்கை நதியின்

இரண்டு கரைகள்.

எனப் புகழ்ந்துரைக்கிறார்.

காமராசர்  அமைச்சரவையிலிருந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ஆர்.வெங்கட்ராமன், விருதுநகரிலுள்ள காமராசரின் வீட்டிற்கு கோடை காலத்தின் பொழுது சென்றிருந்தார். அப்பொழுது  காமராசரின் தாயார் சிவகாமி அம்மாள் பனை ஓலை விசிறியால் விசிறிக் கொண்டிருந்தார். உடனே தன்னுடைய சொந்த செலவில் ஒரு மின் விசிறியை வாங்கி வந்து, அதை இயக்குவதைப் பற்றி அவரிடம் சொல்லிக் கொடுத்து விட்டுப் போனார். பிறகொரு சமயம் வீட்டிற்குப் போனபோது மின் விசிறியைப் பார்த்துவிட்டு விசாரித்த காமராசர், எத்தனையோ தாய்மார்கள் பனை ஓலை விசிறியால் தான் விசிறிக் கொள்ளும் பொழுது, உனக்கு மட்டும் வெங்கட்ராமன் மின் விசிறி ஏன் வாங்கித் தந்தார்? முதலமைச்சரின் அம்மா என்பதால் தானே. இது கூட சலுகை லஞ்சம் மாதிரி தான் என்று சொல்லி விட்டு அந்த மின்விசிறியை விருதுநகரில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்திற்கு எடுத்துக் கொண்டு போகச் சொல்லிவிட்டார் .

தன்னுடைய பெயரை பயன்படுத்தி தனது குடும்பத்தினர் எந்த தவறான காரியத்திலும் ஈடுபடக் கூடாது என காமரசர் மிகவும் கண்டிப்பாக இருப்பார். இதனாலேயே தனது தாயாரை தான் முதல்வரான பிறகும் விருது நகரிலேயே தங்க வைத்தார்.  அம்மாவை சென்னைக்கு அழைத்து வந்தால், “அவர்களோடு கூட நாலு பேரு வருவான்,  அப்புறமா அம்மாவை பாக்க , ஆத்தாவை பார்க்கன்னு பத்து பேரு வருவான் . இங்கேயே டேரா போடுவான். இங்க இருக்குற டெலிபோனை யூஸ் பண்ணுவான், முதலமைச்சர் வீட்டிலிருந்து பேசறேன்னு சொல்லி அதிகாரிகளை மிரட்டுவான் எதுக்கு வம்புன்னு தான் அவங்களை விருதுநகர்லயே விட்டு வச்சிருக்கேன்” என தனது நண்பரிடம் கூறினாராம்.

டெல்லியில் நடந்த உலகக் கண்காட்சி  துவக்க விழாவுக்கு அன்றைய பிரதமர் நேருவுடன் காமராசரும் சென்றிருந்தார். தற்பொழுது பேரூந்து நிலையங்களிலும் இரயில் நிலையங்களிலும் வெகு சாதாரணமாகக் காணப்படுகிற எடை பார்க்கும் எந்திரம் அந்தக் கண்காட்சியில் அறிமுகமாகியிருந்தது . நேரு எந்திரத்தில் ஏறி நின்று, காசு போட்டு எடை பார்த்தார். மத்திய அமைச்சர்கள் பலரும் அவ்வாறே செய்தனர். காமராசர் மட்டும் சற்றே ஒதுங்கி நின்றிருக்க, நேரு அவரையும் எடை பார்க்கும்படி கட்டாயப் படுத்தினார். அவரோ மறுத்துவிட்டார். சுற்றியிருந்தோர் பிரதமர் சொல்லியும் காமராசர் மறுக்கிறாரே என்று திகைத்து நின்றனர்.

அப்பொழுது நேரு சொன்னார்; ” காமராசர் எதற்கு மறுக்கின்றார் என்று எனக்குத் தெரியும் , இந்த எந்திரத்தில் ஏறி நின்று போடும் காசு கூட இப்பொழுது இவரிடம் இருக்காது” என்றார். பிறகு, காமராசருக்கு தானே காசு போட்டு எடை பார்த்தார் நேரு .

முழந்துண்டு சட்டைக்கும் முதலில்லாத் தொழிலாளி

பழனிமலை ஆண்டிக்குப் பக்கத்தில் குடியிருப்போன்

பொன்னில்லான், பொருளில்லான், புகழன்றி வேறில்லான்

என்ற கவிதைவரிகள் காமராசரின் நிதர்சன வாழ்வை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

தேர்தல் சமயத்தில் எல்லா அரசியல்வாதிகளும் தங்களின் சொத்து விபர கணக்குகளை வெளியிட்டு இருக்கின்றனர். நம் பெருந்தலைவர் காமராசர் அவர்களின் சொத்து விபரக் கணக்குகளை ஒப்பிட்டு பார்த்தால் அவரின் எளிய வாழ்க்கை நமக்குப் பாடமாக அமையும்.

 1. சட்டை பையில் .. ரூபாய் 100
 2. வங்கிகணக்கில் .. ரூபாய் 125
 3. கதர் வேட்டி .. 4
 4. கதர் துண்டு .. 4
 5. கதர் சட்டை .. 4
 6. காலணி .. ஜோடி 2
 7. கண் கண்ணாடி .. 1
 8. பேனா .. 1
 9. சமையலுக்கு தேவையான பத்திரங்கள் -6

            இவற்றையெல்லாம் கண்ணுறும்போது கர்மவீரரின் பொதுவாழ்வில் தூய்மை என்னும் உயர்பண்பு உள்ளபடியே எண்ணி வியக்கத்தக்கது.

‘ஈன்றாள் பசிகாண் பானாயினும் செய்யற்க

சான்றோர் பழிக்கும் வினை’

என்ற குறள்வழி வாழ்ந்த காமராசரின் செயல்களைப் பார்த்தே மறைந்த அப்துல்கலாம் அவர்களும்,  குடியரசு மாளிகையில் வந்து தங்கிய தனது குடும்பத்தினருக்கான செலவை தனது வருமானத்திலிருந்து எடுத்து செலவு செய்தாரோ என்று எண்ணத் தோன்றுகிறது.

கர்மவீரர் குறித்து சான்றோர்:

            “காமராசர் பதவியையே நம்பி வாழ்பவரல்லர்.  தம்மாலானதை மக்களுக்குச் செய்யவோமென்று நினைத்துக் கொண்டு செய்பவர். காலுக்கு ஆகாத செருப்பைக் கழற்றியெறிவது போல தம் மக்களுக்குத் தொண்டு செய்ய இடந் தராத பதவியை அவர் விரும்பவில்லை. காரணம் அவர் பெண்டு, பிள்ளை குட்டி அற்றவர்.  யாருக்கும் சொத்து சேர்க்க வேண்டும் என்ற அவசியமும் இல்லாதவர்.  எனவேதான் அவரால் மக்களுக்கு நன்மை செய்ய முடிகிறது.  மற்ற எந்த அரசியல்கட்சியை எடுத்துக் கொண்டாலும் அவரைப் போன்ற ஆளைக் காட்ட முடியாது.

            “கல்வி சம்பந்தப்பட்ட வரையில் எந்த நிகழ்ச்சி ஆரம்பித்தாலும் கடவுள் வாழ்த்துச் சொல்வரை நிறுத்திவிட்டுக் காமராஜருக்கு வாழ்த்துக் கூற வேண்டும்””

நமது நாட்டைப் பொறுத்தவரையில் காமராசர் ஒரு பெரிய தியாகி ஆவார்.   காமராசர் கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளில் இந்தியாவில் தோன்றியிராத ஓர் அதிசய மனிதராகி, மக்களின் பாராட்டுதலையும் போற்றுதலையும் பெற்றவராக விளங்கினார்.  கடந்த 2000 ஆண்டுகளில் தமிழகம் கண்டிராத வளர்ச்சியை காமராசர் ஆட்சியில் காண்கிறோம் என தந்தை பெரியார் பாராட்டினார். மேலும் “பச்சைத் தமிழர்” என்றும் பெரியார் காமராசரைப் புகழ்ந்துரைத்தார். பொதுக்கூட்டங்களில் குழந்தைகளுக்குப் பெயர் வைக்க வலியுறுத்தும் போது பெரியார் அந்தக் குழந்தைகளுக்கு காமராசர் என்றே பெயர் வைப்பாராம்.

23.04.1967 அன்று காஞ்சிபுரம் பச்சையப்பன் உயர்நிலைப்பள்ளி ஆண்டுவிழாவில் காமராசர் திருவுருவப் படத்தை திறந்து வைத்து அண்ணா ஆற்றிய உரையில், ” நான் அவரது படத்தை நான் திறக்கிறேன் என்றால் அவர் தமிழகத்துக்கு நன்மை என்பதற்காக.  அடக்கி ஒடுக்கப்பட்ட சமுதாயத்திலிருந்துதான் உன்னதானமான மனிதர்கள் தோன்றுவார்கள் என்று மூதறிஞர்கள் கூறியிருக்கிறார்கள்.

வைரம் என்பது நீண்ட நெடுங்காலத்துக்குப் பூமியின் அழுத்தத்தால், கீழே அடங்கி ஒடுங்கிக் கிடந்த கரித்துண்டுதான்.  அதுபோல் நெடுங்காலமாக அடக்கி ஒடுக்கப்பட்ட சமுதாயத்திலிருந்து தோன்றி வைர மணிகளில் ஒருவரே காமராசர்” எனப் போற்றிப் புகழ்ந்தார்.

தமிழ்நாடு காங்கிரசின் அப்போதைய நான்கு தூண்களாக இருந்த பெரியார், திரு.வி.க. சேலம் டாக்டர் வரதராஜுலு நாயுடு, சர்க்கரைச் செட்டியார் ஆகியோர் ராஜாஜியின் மேட்டுக்குடி அரசியல் பிடிக்காமல் காங்கிரசிலிருந்து விலகிய நிலையில், ராஜாஜியை எதிர்த்து கடைசி வரை காங்கிரசில் இருந்தவர் காமராசர்.  இதைக் கருத்தில் கொண்டே  தமிழ்த்தென்றல் திரு.வி.“எங்கள் நான்கு பேரின் ஒரே உருவமாக நீங்கள் இருக்கிறீர்கள்.  ரொம்ப மகிழ்ச்சி” எனக் காமராசரைப் புகழ்ந்துரைத்தார்.

சென்னை மாநகராட்சியைக் கைப்பற்றிய தி.மு.க. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த காமராசருக்கு ஆளுயர வெண்கலச் சிலையை நிறுவியது.  இந்தச் சிலையை 09.10.1961-ல் அன்றைய பிரதமர் நேரு திறந்து வைத்தார்.  அவ்விழாவில், “உண்மையான தலைவன் என்பதற்கு எடுத்துக் காட்டத் தக்கதோர் உதாரணம்; மக்கள் மத்தியில் உருவானதோர் தலைவன்; தான் ஏற்றுக் கொண்டுள்ள பொறுப்பை நிறைவேற்றத்தக்க ஆற்றல் கொண்ட தலைவன்; செயலில் தன்னை மறந்து ஈடுபடும் தலைவன் சிலையைத் திறக்கிறேன்.

உயிரோடு இருப்பவர்களுக்குச் சிலை அமைப்பதை நான் விரும்புவதில்லை.  முறைந்த பின் மரியாதை செலுத்துவதே ஏற்றது என எண்ணுபவன் நான்.  ஆனால் காமராஜ் என் நண்பர் என்ற முறையிலும், அவர் மக்களிலிருந்து தோன்றிய மக்கள் தலைவர் என்ற முறையிலும் அவருக்கு விதிவிலக்கு  அளிப்பதே மாண்பு.

நாட்டில் குறைந்த (ஏழுபேர்) மந்திரிகளைக் கொண்டு இந்தியாவில் முன் உதாரணமான மாநிலமாக தமிழ்நாட்டை ஆக்கி, ஊழலற்ற ஆட்சி நடத்தினார்.  அதை கவுரவிக்கும் வகையில் அவரது சிலையைத் திறக்கிறேன்” என்றார்.

எம்.ஜி.ஆர். அவர்கள், “காமராசர் என் தலைவர்; அண்ணா என் வழிகாட்டி” என மொழிந்தார். கலைஞர் கருணாநிதி தன் எழுத்திலும் பேச்சிலும் காமராசரைப் பல வகைகளில் புகழ்ந்துரைத்துள்ளார்.  மேலும் காமராசர் பிறந்த நாளான ஜுலை 15-ஐ ‘கல்வி வளர்ச்சி நாள்’  என அறிவித்தார்.

காமராசர் தன்னுடைய தனிப் பெரும் செயல்களால்  மாற்று அரசியல் களத்தில் இருந்தவர்களும் மதிக்கத்தக்க வகையில் நடந்து கொண்டார்.  ‘குற்றம் இலனாய் குடிசெய்து வாழ்வானைச் சுற்றமாய்ச் சுற்றும் உலகு” என வள்ளுவப் பெருந்தகை கூறியது  கர்மவீரர் காமராசரையே குறிக்கும்.

கர்மவீரருக்கு நாம் செய்தன; செய்யத்தக்கன:

02.10.1977அன்று இம்மண்ணுலகை நீங்கிய கர்மவீரரரின்  நாட்டுத் தொண்டுக்கு மதிப்பளித்து இந்திய அரசு “பாரத ரத்னா” பட்டம் வழங்கியது. தமிழக அரசு விருதுநகர் இல்லத்தையும் சென்னை திருமலைப் பிள்ளை சாலையில் அவர் வாழ்ந்து வந்த இல்லத்தையும் அன்னாரின் நினைவு இல்லங்களாக ஆக்கியுள்ளது.  ஓவ்வொரு நாளும் பலரும் அங்கே சென்று அவர் வாழ்ந்த இடத்தையும் அவர் உபயோகப்படுத்திய பொருட்களையும் கண்டு வணங்கிச் செல்கின்றனர்.

மதுரைப் பல்கலைக் கழகம் இன்று “மதுரை காமராசர் பல்கலைக் கழகம்” என்று பெயர் மாற்றப் பெற்றுள்ளது.  கல்வித்  தொண்டாற்றிய காமராசருக்குத் தக்க நினைவுச் சின்னமாகும். சென்னை கிண்டியில் காமராசர் அடக்கம் செய்யப்பட்ட இடம் காமராசர் நினைவு ஆலயமாக அமைக்கப்பட்டுள்ளது.

ஊருக்கு உழைத்தவனே உறங்குகிறாயோ

உழைத்தது போதுமென்று உறங்குகிறாயோ

ஊராருக்கு அழுதவனே உறங்குகிறாயோ

ஊராரை அழ வைத்து உறங்குகிறாயோ

நாடு பார்த்ததுண்டா இந்த நாடு பார்த்ததுண்டா

நாடு பார்த்ததுண்டா இந்த நாடு பார்த்ததுண்டா

தன் வீடு பார்க்காமல் வாழ்வு பார்க்காமல்

நாடு முன்னேற நாளும் உழைத்தவனை  (நாடு பார்த்ததுண்டா. . )

பள்ளி அறியாத பிள்ளை பல பேரின் முகத்தை பார்த்தானடா

அது ஊரு சுற்றாமல் சோறு தான் போட்டு படிக்க வைத்தானடா

மாடு பிடித்த கையில் ஏடு கொடுத்த மகராஜன் இவன்தானடா

ஊரு உலகெங்கும் தேடி பார்த்தாலும் ஈடு எவந்தானட

இத்தனை தவம் தான் என்று வருந்த வைக்கிறானே

திரும்ப வர வேண்டுமே எங்கள் கருப்பு காந்தி இவனே (நாடு பார்த்ததுண்டா. . )

பதவி இருந்தாலும் பதவி போனாலும் உதவி புரிவானடா

தனை பெற்ற தாயை விட பிறந்த நாடு தான் பெரிது என்பானடா

ஆற்று நீரையே அணைகள் கட்டியே தேக்க வைத்தானடா

கண்கள் ஊற்றும் நீரை தடுக்க இயலாமல் ஏங்க வைத்தானடா

வலிமை இருந்த போதும் மிக எளிமையோடு இருந்தான்

வெள்ளை உள்ளம் கொண்ட எங்கள் கருப்பு காந்தி இவனே(நாடு பார்த்ததுண்டா. . )

காமராஜருக்காக வாலி எழுதி இளையராஜா பாடிய பாடல் காமராசரின் இறுதி ஊர்வலத்தை நம் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தும் காவியம்.

உன் பிரிவுக்குப் பின்

நாங்கள் வரங்கள் வாங்கிய தேவர்கள் அல்லர்.

சாபங்கள் சுமக்கும் சாதாரண மனிதர்கள்.

உன் பார்வை வெளிச்சம் படமுடியாததால்

எங்கள் வாழ்க்கை

பாழும் இருட்டில் படுத்திருக்கிறது.

என்னும் தமிழருவி மணியனின் இரங்கலும் எண்ணத்தக்கது.

சோலை  என்றால் பூத்து மணம் பரப்ப வேண்டும். தோட்டம் என்றால், காய்த்துக் கனி குலுங்க வேண்டும்.   தலைவனென்றால்.. மக்கள் பணி ஆற்ற வேண்டும் அந்த வகையில்,  எளிமை, அடக்கம், ஒழுக்கம், மனத்திட்பம், சிக்கனம், முயற்சி, ஊக்கம்,  வாய்மை,  நேர்மை,  நடுநிலைமை, துப்புரவு, உள அமைதி,  நிறையுடைமை, பணிவுடைமை என்பன போன்ற சான்றோர் போற்றும் பண்புகளை தன்னகத்தே கொண்டு குழந்தைகள் படிப்பதற்காகவும், மதிய உணவுக்காகவும் உலக நாடுகளிடம் கையேந்தி உதவிய கொடை வள்ளல் கர்மவீரர் காமராசர்.

பதினெண்கீழ்க்கணக்கு  நூல்களுள் ஒன்றான நாலடியார் அறிவிக்கிற,

இளையான் அடக்கம் அடக்கம் கிளைபொருள்

இல்லான் கொடையே கொடைப்பயன் – எல்லாம்

ஒறுக்கும் மதுகை உரனுடை யாளன்

பொறுக்கும் பொறையே பொறை. (நாலடியார் 65)

என்ற பாடல்  ஒருவர்,  இளமைக் காலத்தில் தங்களின் ஐந்து புலன்களுக்கும்  மிக எளிதாக அடிமைப்பட்டு விடுவர். அவரே முதியவராகும் பொழுது புலனடக்கம் என்பது எளிதாகின்றது. ஆனால், உண்மையான புலனடக்கம் என்பது ஒருவர் இளையவராக இருக்கும் பொழுது அடக்குவதே என்றும்,  கொடை என்பது  ஒருவரிடம் பொருள் குறைந்து இருக்கும் நிலையில், அவர் மற்றவருக்கு உதவி செய்வாரானால், அதுவே கொடை எனவும் விளக்குகின்றது இந்தப் பாடல்.

நிதியில்லை, அதனால் மதுக்கடைகளைத் திறந்து நிதி திரட்டுகிறோம் என அரசாட்சி நடத்தும் இன்றைய அவல நிலையை எண்ணி தலைகுனிய வேண்டியுள்ளது.

கர்மவீரர் காமராசர் என்ற தலைப்பில்  பேராசிரியர் சி.இலக்குவனார் நூலொன்றை எழுதியுள்ள நிலையில்,  ‘வல்லமை இணையதளம் நடத்தும் இக்கட்டுரையை, அவரைப் போற்றிப் புகழ்ந்து கொண்டாடிக் கொண்டிருக்கிற அரசியல் தலைவர்கள் காமராசர் வாழ்ந்த நெறிகளிலிருந்து எங்ஙனம் பிறழ்ந்து தங்களின் செயல்பாடுகளை வகுத்துக் கொண்டுள்ளார்கள் என்ற கோணத்தில் அணுகுவோம்.

‘இந்தியாவே உன்னிடம் இருந்தது! ஆனால் உன் சட்டைப்பை காலியாகவே இருந்தது’ என்ற தலைப்பிலான கவிஞர் மேத்தாவின் கீழ்க்கண்ட வரிகளிலும் இந்த நெருப்புமழை பொழிவதைக் காணலாம்.

ஒரு தீர்க்கதரிசியை நேசிப்பதைப் போல் உன்னை நேசிக்கிறேன். உன்னால்தான் முடிந்தது தாயையும் பார்க்காமல் நாட்டைப் பார்ப்பதற்கு! உன் கையில் தராசு! இவர்கள் கையிலோ சூட்கேஸ்! நீ நினைத்திருந்தால் கரன்ஸி நோட்டுகளால் விருதுநகரில் இன்னொரு இமயமே எழுந்திருக்கும்!  (இந்தியாவே உன்னிடம் . . )

ஆலைகளை  நேசித்தவரிடையே நீ அபூர்வமானவன்! ஏழைகளை நேசித்தாய்! நீ லட்சுமியை அனுப்பி சரஸ்வதியை வரவழைத்தாய்.  இவர்களோ சரஸ்வதியையே லட்சுமியாக்கிக் கொண்டிருக்கிறார்கள். ஆமாம். . நீ கல்விக்கண் திறந்தாய்! இவர்களோகல்விக் கடை திறந்தார்கள்! என்னால் கள்ளுக்கடை வைத்திருப்பவர்களை மன்னிக்க முடிகிறது. கல்விக்கடை வைத்திருப்பவர்களை மன்னிக்க முடியவில்லை

நிஜத்தைச் சொல்கிறேன் நேரு குடும்பத்தின் மீது நீ  பாசம் வைக்காதிருந்தால் இந்தியாவின் பரிமாணமே வேறு காந்திதான் நீயும். .  கருப்புக் காந்தி மகாத்மா காந்தியோ சிரிக்கும் நெருப்பு நீ சிரிக்கத் தெரியாத  நெருப்பு! அந்த நெருப்பு திரு நீறாகி விட்டது. உன் சாம்பலுக்கும் தணல் தகிக்கிறது.

பெரியாரின்  பல்கலைக்  கழகத்தில் பச்சைத் தமிழன் எனும் பட்டம் பெற்றவனே இன்று நீ இங்கிருந்தால் இங்கிருக்கும் காய்ந்த தமிழர்களைக் கண்டித்திருப்பாய்! இன உணர்வு தமிழனுக்கு இருந்திருந்தால் இந்தியாவின் ஸ்டாலினாய் இருந்திருக்க வேண்டியவன் நீ! நீ நாடியிருந்தால் ஒரு தமிழன் பிரதமராயிருக்க முடியும். நீதான். .  நாடா ராயிற்றே!

மணிமுடி உன்முன் வைக்கப்பட்டது. ஆனால் நீ காளிக்குத் தலையை வெட்டித் தந்த கபாலிகனாகவே காலத்தை முடித்தாய்! மறக்க முடியவில்லை மனது வலிக்கிறது! உன்னை  நினைக்கவும் முடியவில்லை நிஜம் நெஞ்சைக் கிழிக்கிறது!

பொதுவாழ்வில் நேர்மை, தனிவாழ்வில் தூய்மை, வார்த்தைகளில் வாய்மை இம்மூன்று பண்புகளையும் உள்ளடக்கிய இரசாயனக் கலவையில் உதித்தவன்தான் கர்மவீரர் காமராசர்  என்பார் தமிழருவி மணியன்.

மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார் கண்துஞ்சார்

எவ்வெவர் தீமையு மேற்கொள்ளார் – செவ்வி

அருமையும் பாரா ரவமதிப்புங் கொள்ளார்

கருமமே கண்ணா யினார் (நீதிநெறி விளக்கம்.53)

என்பதற்கொப்ப, தாம் எடுத்த பணியை, காரியத்தை எத்தனை தடைகள் வந்தாலும்  செவ்வனே செய்து முடிக்கிற தீரமிக்க ஆற்றலாளராய் விளங்கியதால்தான் காமராசர் கர்மவீரர் என்ற புகழுக்குரியவரானார்.

அத்தகு புகழுக்கும் சிறப்புக்கும் உரிய காமராசரின் வாழ்வியல் நெறிகள், தலைமைப் பண்புகள், தனி மனித மாண்புகள் என ஏராளமாய் உள்ளவற்றில்  சிலவற்றைச் சுட்டிக் காட்டுவது  வாழும் மக்களுக்கும், வருங்காலத் தலைமுறைக்கும் அறிமுகப்படுத்தியதாக அமையும் என்ற நோக்கில் காலம் உள்ள வரையும் நிலைத்து நிற்கும் மாமனிதரின் வாழ்வியலில் நுழைவோம்; அவர் வழி நடப்போம்இந்தியாவின் பெருமையை உலகில் நிலை நிறுத்துவோம்.

—————–

கட்டுரைக்கு உதவிய நூல்கள்:

 1. காமராஜ் ஒரு சகாப்தம்

.கோபண்ணா,  சூர்யா பப்ளிகேஷன்ஸ்,  ‘காமராஜ் பவன்’,  573, அண்ணா சாலை, தேனாம்பேட்டை, சென்னை-6  முதற்பதிப்பு ஜூலை 2003

 1. காமராஜ் ஒரு சரித்திரம்

முருக தனுஷ்கோடி,  பூம்புகார் பதிப்பகம்,  சென்னை-108  பதிப்பு 1975

 1. காமராஜரும் கண்ணதாசனும்

தமிழருவி மணியன், கற்பகம் புத்தகாலயம், 50/18, ராஜாபாதர் தெரு, தியாகராய நகர், சென்னை-17  பதிப்பு 2006.

 1. காமராஜருடன் கால்நூற்றாண்டு

உதவியாளர் வைரவன், ரமணா கம்யூனிகேஷன்ஸ், புதிய எண் 25/2, லட்சுமி காலனி, தியாகராய நகர், சென்னை-17  மூன்றாம் பதிப்பு 2013.

 1. திருக்குறள்
 2. நாட்டுக்கு உழைத்த நல்லவர் காமராஜ்

சந்தான லக்ஷ்மி,  பழனியப்பா பிரதர்ஸ், சென்னை-14, முதற் பதிப்பு 14.11.1975.

 1. நாலடியார்
 2. நீதிநெறி விளக்கம்
 3. பாரதிதாசன் கவிதைகள்
 4. பாரதியார் கவிதைகள்
 5. பெருந்தலைவர் காமராசர்

பட்டத்தி மைந்தன், சீதை பதிப்பகம், 6/16, தோப்பு வெங்கடாசலம் தெரு, திருவல்லிக்கேணி, சென்னை-5,  முதற்பதிப்பு  திசம்பர் 2006.

 1. பெருந்தலைவர் காமராஜ் நற்பணி டிரஸ்ட்டின் நான்காம் ஆண்டு மலர்.

–           62/2 பேரம்பாலு தெரு, பழைய வண்ணை, சென்னை-21.

 1. காமராசர் குறித்த தமிழருவி மணியன்  அவர்களின் பேச்சு

              (https://www.youtube.com/watch?v=jloAIJBhvxE)

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “கர்மவீரர் காமராசர்

 1. Very nice article on our Great Leader. Well written. Much appreciated. There are few corrections; 1. Year of Kamarajar becoming chief minister 2. Year of Kamarajar’s death. Appreciate if these are corrected immediately.

 2. அருமை அருமை அருமை
  கண் முன் வாழ்கிறார் காமராஜர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *