படக்கவிதைப் போட்டி (28)
பவள சங்கரி
அன்பிற்கினிய நண்பர்களே!
வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?
திரு. ராகுல் ரவீந்திரன் எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பு ஆசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.
இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (05.09.2015) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினர், தமிழ் இலக்கிய ஆராய்ச்சியாளர் திருமதி மேகலா தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பல முறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். இது, கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்கு பெற அழைக்கிறோம்.
புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்த திருமதி மேகலா இராமமூர்த்தி கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்றவர். அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009 ம் ஆண்டுகளில் (ஆர்லாண்டோ & அட்லாண்டா) கவியரங்கம், இலக்கிய வினாடி வினா நிகழ்ச்சிகளில் பங்கேற்று பாராட்டுகளும், பரிசுகளும் பெற்றுள்ளவர். புறநானூறு, குறுந்தொகைப் பாடல்களில் அதிக நாட்டமும், இலக்கியக் கூட்டங்களில் சுவைபட பேசுவதிலும் வல்லமை பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்
கடைக்கண்ணால்தான்!
திருக்கடவூர் அபிராமி
கடைக்கண் பார்த்தாள்!
தனத்தோடு கல்வியும்
தளர்வறியா மனமும்
தெய்வத்தின் வடிவும்
வஞ்சமில்லா இனமும்
நல்லன யாவையும்
நலத்தோடு தந்தாள்!
வனத்திடை நிற்கும்
காரிகைதன் கடைக்கண்கள்
என்னவெல்லாம் தருமோ?
அருள்புரிவோர் அனைவருமே
அன்போடு நோக்குவது
கடைக்கண்ணால்தான்!
இலைகளின் கவிதை
நீ கவிதையோடு
நிற்கும் இலைகளில்
இல்லாமலே போன
இலையுதிர் காலத்து
மரம் நான்….
பெயர் தெரியாத
பனி நாளாகி
முகம் புரியாத
மூடு மந்திரம் வளர்த்த
சருகுகளின் நுனி
இணுங்கலாய் எனது
தனிமை…..
நீ பறவையாகிப்
போன பரிதவிப்பில்
மூச்சிழந்து பட்டை
பட்டையாய்
உரிக்கப்பட்ட பாழும்
மனதுக்குள்
கொஞ்சம் கறையான்கள்
உன் குறுகுறு பார்வை போல….
வேரோடு சாய்க்க
முயற்சிக்காத எனது
படுகொலையில்
நான் மரமாகி வீழ்ந்த
இலைக்குள்
நீ- உணர்வுபூர்வமான
கவிதைக்காரி….
வாசிக்கப் படும்
கவிதையின் வெற்றிட
கால்தடம்
என்பது சருகுகளாகிப்
போன எனக்கு புரியாமலே
போகட்டும்….
வாசித்து, கை தட்டு வாங்கி போ….
மரங்களினூடாக
ஒரு தென்றலென….
கவிஜி
ஒரு ‘ஹைக்கூ’ முயற்சி!
மயக்கும் கருநிற வண்டுகள்
மோஹனப் புன்னகை
மங்கிய வசந்தம்!
மோனா லிசா முறுவல்
சி. ஜெயபாரதன்.
அகத்தின் மின்னல்
ஒளிப்படம்
பளிச்செனத் தெரியுது
பாவை
முகத் திரையில் !
அது என்ன
காதல் பார்வையா ?
கடைக் கண் அளிக்கும்
விடையா ?
விழி பேசும் மொழி
என்ன ?
மோதல் முன்னகையா ?
மோனா லிசாவின்
மோகனப்
புன்னகையா ?
கன்னியின் மின்னல்
புன்னகை
காயப் படுத்தும்
காளையின் கல் நெஞ்சை !
இதயத்தில்
குற்றாலச் சிற்றருரி
குதித்தோடும் !
பெண் சிரித்தால்
புண் உண்டாக்குவாள் !
கண்கள் சுட்டால்
காளையர்
கோழை யாவார் !
ஆத்மாவின் உட்கரு
நாடகத்தை
அரங்கேற்றும் முகம் !
விழிகள்
நாடக பாத்திரம் !
முகத்துக்கு
வேடம் போடத் தெரியும் !
எதிர் முகம் காட்டி
புதிர் போடும் !
விதியின் மேடையில்
சுதியுடன்
பதில் சொல்லும் !
+++++++++++
நளின நடை, அன்னம் போலே
தெளியும் இடை, மின்னல் போலே
ஆடை கொடி, பின்னல் போலே
மேகத்தினில் மறையும், நிலவு போலே
உனது அழகு இலையினில், மறைவது போலே,
உனது ஓரப் பார்வை, காந்தம் போலே
நீயோ ! மாறாத எழிலரசி, மங்காத ஒளி வீசி ,
ஆடவன் மனதினை, மயக்கிடும் உல்லாசி,
ஒட்டாம ஒதுங்கினா, அழகினை காண முடியுமா!
எங்கள் மனதை கவராமல் இருக்க முடியுமா !
ரா.பார்த்தசாரதி
பவளா,
கண்கள் சுட்டால்
காளையர்
கோழை யவார் !
கோழை யாவார் – என்று திருத்துங்கள்.
சி. ஜெ.
விழியை பார்த்து
வழியை மறந்து விடாதே
மனங்கவர் பெண்மலர்…!!
######################
மென்மனப்பூவது
சொன்னதைக் கேட்டிருக்
கைவிரல் மண்ணிலே
நட்டதே நன்விதை!!
நன்விதை தானமர்
மென்மணல் மீதினில்
என்மன மாடவே
இன்பொடு நீண்டது !
நீண்டது, நீண்டதன்
தண்டதில் மெல்லிலை!
மெல்லிலை நீண்டதில்
மெல்லிசை மூண்டது!
மெல்லிலை நீண்டதும்
எவ்விதம் பூவரும்?!
என்றுநான் மெல்லமாய்
எண்ணிணேன்! ஏங்கினேன்..!!
ஏங்கினேன்! தூங்கினேன்!!
தூங்குமோ என்னவா?!
தூங்கிடும் கண்ணிலும்
மெல்லிலை மென்கனா!!
மென்கனா மெல்லமாய்
என்துயில் நீக்கிட,
மின்னலாய் என்செடி
பூத்ததா? தேடினேன்!
என்செடி பூத்ததா
கண்கவர் பூவிது?!
பெண்மலர் பூவிதைக்
கண்டதே யில்லையே..?!
கண்டிடா கண்கவர்
பெண்மலர்ப் பூவதன்
மெல்லிதழ்ப் பூவதால்
என்னிதழ் பூத்தது!!
மெல்லிதழ்ப் பூவுடன்
கண்கவர்ப் பூவது,
கண்மலர்ப் பூவதும்
பூத்ததே! எங்ஙனம்?!
என்செடி பூத்ததா?
என்மனம் ஏய்க்குதா?
மெல்லமாய் என்விரல்
கிள்ளினேன்! துள்ளினேன்!!
துள்ளினேன்! துள்ளினேன்!!
துள்ளலைக் கண்டதும்
நன்மலர் மெல்லமாய்
என்னிடம் வந்ததே..!!
என்னிடம் வந்தது

என்செடிப் பூவென
எண்ணினேன்! வந்தது,
பெண்ணதால் வெட்கினேன்…!!
######################
அன்புடன்,
சுந்தர் புருஷோத்தமன்
இலைமறைக் கன்னியோ இன்பத்தேன் ஊற்றோ
சிலையெழிற் சிற்பமோ செப்பு – தலைவி !
கதைபேசும் கண்களில் காந்தமோ கள்ளோ
வதைக்கிறாய் நெஞ்சுள் மலர்ந்து .
தோற்றப் பிழையல்ல…
பச்சை மேகங்களுக்கிடையே
பௌர்ணமி நிலவு
பவனி வருமா?
அடர்ந்த
இலைகளுக்கிடையே
நிலத்தின் மீது
இப்படி ஒரு தாமரை
எப்படி முகிழ்க்கும்?
பூக்குவியல் மீது
பொன் வண்டிரண்டு
கண்ணென அமர்ந்ததால்
கன்னியாய்த் தெரியும்
காட்சிப் பிழையா?
இது
வானவில்லின்
வடிவ மாற்றமோ
தோற்றப் பிழையோ
இல்லை என
அவள்
புன்னகை மட்டுமே
நமக்குப் புரிய வைக்கிறது!
பின்தொடரும் வொலியால் பின்திரும்ப நானும்
பின்னிவரும் கொடியும் பின்திரும்பி நாணும்
பின்னல்க ளாடும்! இன்னல்கள் வாடும்!
உருவத்தைப் பார்க்க முகமொன்றுத் தடுக்கும்
புருவத்தைப் பார்க்க பார்வையைத் தொடுக்கும்
கருவிழியும் பார்க்கும்! கண்ணிமையும் தாக்கும்!
காயத்தினால் வுள்ளம் கானகத்தில் வொலமிடும்
சாயத்தினால் வுன்னுதடு மிடம்பார்த்துப் புள்ளியிடும்
சாய்ந்தவுன் சிரமும் கருமையால் கோலமிடும்
இடைவெளிக் குறையும்! நிலவோளி நிறையும்!.
போர்வாள்
மரங்கொடிக்குள் மறைந்தலைந்துத் திரிந்து
==மடியிரைக்குப் பசித்திருந்துக் கௌவும்
அரவமென மனத்தவளைப் விழுங்கும்
==அழகுக்கொடி யாலுயிரும் புழுங்கி
நரகமெனும் கொடுந்துயராய் வாட்ட
==நயனங்களால் வதைக்கின்றப் பார்வை
மரணம்வரை இழுத்தெடுக்கும் கூர்மை
==மாவீரர் தமைசாய்க்கும் போர்வாள் !
மெய்யன் நடராஜ்
தென்றலை வென்றவள்…
பேசிடும் இதழ்கள் பேசவில்லை
பூத்தது புன்னகை மவுனங்களே,
பேசிடாக் கண்கள் பேசிடுமே
புரிந்தவர் தெரிந்திடும் காதல்மொழி,
நேசம் கொண்டவர் வரவுகண்டே
நெருங்கிடத் துடிக்கும் இதயமது,
வீசும் தென்றலும் இவளழகில்
விலகிச் சென்றிடும் தனைமறந்தே…!
-செண்பக ஜெகதீசன்…
அகிலத்தில் வெற்றி காண்பர்!!
கயல் விழிகள் சொல்லும்
காலம் வெல்லச் சொல்லும்
கடமை முதலாய்ச் சொல்லும்
காத்து நிற்கச் சொல்லும்
காதல் வலிமை சொல்லும்
காமம் விலகச் சொல்லும்
கருத்தை உணரச் சொல்லும்
களங்கம் உரக்கச் சொல்லும்!
கண்ணெதிர் தவமாய் நிற்கும்
காண்பன உயிராய் நிற்கும்
கேளிக்கை அல்ல வாழ்க்கை
கேள்விக்கு பதில்தான் வாழ்வென
கோரிக்கை வைக்கும் நகர்வு
கோள்களின் உச்சம் எட்டும்
காலமும் தோற்றுப் போகும்
காதலின் சக்தி முன்னே!
பெண்ணவள் மாய சக்தி
கண்ணவள் தூய சக்தி
காண்பவர் பெறுவர் சக்தி
காமத்தை அழிக்கும் சக்தி
வாழ்க்கையின் பேறு சக்தி
வாழ்ந்திட வேண்டும் சக்தி
புரிந்தவர் பெறும் சக்தி
பூவுலக சொர்க்கம் சக்தி!
தாயெனும் தொடக்கம் முதலாய்
தமக்கையாய் தொடர்ந்து வந்து
தாரமாய் வாழ்க்கையில் இணைந்து
தமக்கொரு மகளாய்ப் பிறந்து
தரணியில் பெண்ணெனும் பேருடன்
தடம்பல பதிக்கும் உறவைப்
போற்றிடும் இல்லம் சிறக்கும்
பொய்யில்லை கண்டு மகிழ்வீர்!
எத்தனை இன்பம் வைத்தாள்
இந்தநல் வாழ்வு செழிக்க
அத்தனை துன்பமும் விலக
அவளன்றொ ஆக்கும் சக்தி!
அன்னவள் போற்றிடும் ஆடவர்
அகிலத்தில் வெற்றி காண்பர்!!
அன்புடன்
சுரேஜமீ
இலைகளினூடே தெரியும்
பரவசமொன்று
எனக்கென வைத்தது
பார்வை விருந்தினை இன்று…
கலையெனத் திகழும்
நிலாமுகம் இங்கு
கனவினில் மெள்ள
உலாவரும் நன்று…..
சிந்தாமல் சிரிக்கும்
புன்னகையால் நின்று
முந்தாமல் முகிழும்
முகத்தாமரை கொண்டு….
என்ன மாயமோ….
என்ன ஜாலமோ….
கண்ணிலாடிடும்
காட்சிகள் இங்கு….
வேதமுதற் பொருள்
விளம்பும் மெய்ப்பொருள்…
காதல் கொண்டவர்
கருதும் கைப்பொருள்….
கானக் குயிலெனக்
கானில் பரவிடும்
மோனக் குரலென
முடியும் பெரும்பொருள்…
பார்வை ஒன்றினில்
காட்டும் பரம்பொருள்…
பரசிவ சக்தியெனப் பாரில்
பரவிடும் அரும்பொருள்…..
பெண்மையெனக் கண்டோம்
பெரிதும் பேசுகின்றோம்….
உண்மையிலே பெண்மையினை
உயர்வுசெய்ய உறுதி கொள்வோம்!
கவிஞர் “இளவல்” ஹரிஹரன், மதுரை
அலையும் மேகங்களுக்குள்ளே
நகரும் நிலவு போல
இலை மறை காயாக மறையும்
இளமையின் ரகசியம் காதல்
காதல் பூத்த வேளையில்
நாணம் தோன்றுவது அழகுதான்
இன்றைய பெண்ணுக்கு
இந்த நாணம் புதுமுறை
உன் கடைக்கண் பார்வை
தென்றலாகஎன்னை தழுவுது
மல்லிகை கொடியாய்
என் தோளை சுற்றுது
உன் கண்ணின் ஈரம் பட்டதும்
என் மனசெல்லாம துளி விட்டது
நீ போட்ட கண் விலங்கில்
மாட்டி தவிக்குது மனசு இதை
ஊட்டி வளர்ப்பாயா இல்லை போக்கு
காட்டி மறைவாயா?
புரியவில்லை
சரஸ்வதி ராசேந்திரன்
கண்களால் கைது செய்யாதே..!
உன் அருகே நான் வருவதர்கு…!!
நங்கையே !
உந்தன் இதழ் உதிர்க்கும்
கீற்றுப் புன்னகை மட்டும்
மட்டும் உந்தன் அழகிற்கு
மெருகூட்டவில்லை !
உந்தன் இதழுடன்
உன்னிரு –
கருவண்டு விழிகளும்
ஏன் – உன் மூக்கு கூட
புன்னகைக்கிறதே !
பொன்னகைக்கு அவசியமிலாது
புன்னகையே உன்
முகத்திற்கு பொலிவூட்ட
ஆயிரம் மின்னலின் ஒளியும்
உந்தன் முகத்தில் பிரகாசிக்கிறதே !
பவுருசம்(ஆண்மை) சௌந்தரம் (அழகு)
முகில் மறைக்கும் முழுநிலவாய்
துகில் மறைக்கும் முகமாய்
நாணத்தில் சிவக்கும் வதனம்!
காணாதது, கேட்காததாய் நீ !
செய்வதேது புரியவில்லை. நான்
மெய்யாக உன்னை நேசிக்கிறேன்.
மதுவேந்தும் கலசமாய் மனம்
இது கூடவா புரியவில்லை!
வா அருகே! வந்து
தா உன் பதிலை!
பார்வை பேசும் மொழியன்றோ
சீர் மேவும் காதல்!
ஒழித்து வைத்தது போதும்!
அழியா உண்மையை உணர்த்து!
மௌனம் உடை! பவுருசம்
சௌந்தரம் என்று காட்டேன்!….
பா ஆக்கம்
பா வானதி வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
5-9-2015
அண்ணலும் நோக்கிய
அவளும் நோக்கிய
கலியுக இராமாயணம்
இங்கு அரங்கேற்றமோ!
மாளிகை இடம் மாறி அசோகவனக்
களங்கள்தான் இங்கு உருமாற்றம்!
நவீனக் கலியுகத்துச் சீதையே!
இரண்டுமுறை ஏகபத்தினிவிரதன்
சந்தேகப்பட்டதிற்காகவா இப்பிறப்பு!
மாருதியின் கை ஆழி கண்ட
புன்னகையோ!
பழங்காவியமாய் மாற
இது நேரமல்ல மான்விழியே!
பெண் ஒன்றும் அழகுப் பதுமையல்ல
என்றே முழங்கி விடு!
பிரம்மன் வரைந்த கிறுக்கலில்
உலகிற்கு ஒளி அளிக்கும்
தாய்மை தீபங்கள்
என்றே உரக்க முழங்கிவிடு!
விழுங்கிவிட மண்மாதாவும்
மறுபடியும் வருவாரா
வண்ணக் கிளியே!
பிறருக்காக பயந்து வாழும்
பத்தினியின் மனம் அறியா
பத்தினி விரதனுக்காக
இனியொருமுறை தீக்குளிக்க
அவனையும் சேர்த்து நிறுத்த
மனம் உண்டோ!
பிரிவு இருவருக்கும்
ஒன்றே என்று இயம்பிவிடு!
பசுஞ் சோலைக்குள்
ஒளிந்து விளையாடிய
சோடிக் கருவண்டுகள்
யாரைத் தேடி பாற்குடத்தினுள்
சென்றன?
செவ்வாம்பல் பூத்த
அதரத்தினால்
சோலைக்குள் ஏற்பட்ட
செவ்வாம்பல் மலர்ப்பஞ்சம்
எப்போது தீரும்?
காமன் கணை தொடுக்க
வில்லரசிப் பெண்ணாள்
பிறப் பெடுக்கவில்லை!
மௌனம் பேசும்
மழலை மாறா
மங்கையவளை மதித்து
வாழும் பண்பு வேண்டி இங்கு
யாசிக்கின்றாள்!
சாதிக்கத் துடிக்கும் என்னை
வீட்டுச் சிறைக்குள்
பூட்டி விடாதே என இறைஞ்சுகின்றாள்!
என் உயிர் போனாலும்
கண் தானம் அளிக்க வேண்டுகின்றாள்!
பிரம்மன் வரைந்த
பாலியல் பொருளல்ல
என்றே அவளும் மௌனமொழி
பேசுகின்றாள்!
புனையா ஓவியக் காரிகையே!
குருஷேத்திரப் போர் புரிய
உன் புருவ வில்லுக்கு
இது நேரமல்ல!
அஞ்சாத அஞ்சுகமே!
அறம் காக்கப் பெற்ற மைந்தன்
அஞ்சி அவன்
எங்கு சென்றான்?
நிதிக்குவியல் அரம்பைக்கு
தமிழ் வான் உலகில்
சிறு ஓவியம் தொடர்ந்து
வரைய எந்த ஆசான்
எழுதினார்?
தொல்காப்பியம் காட்டும்
திவ்விய மொழியும்
இதுதானோ?
அறம் செய விரும்பாமல்
நில்லாப் புகழ் மட்டும் நிலைக்குமா?
அழகான அஞ்சுக ஆரணங்கே!
தட்டிக் கேட்க தரணியிலே
தமிழுக்கு உரிமையுண்டு
என்றே தயங்காமல்
முத்திரை இங்கு பதிக்கின்றேன்!
பிரிவினைகள் இல்லையெனில்
பரிதியில்கூட
கால் பதிக்கலாம்!
தாளங்கள் தவறலாம்!
தமிழ் தவறுமோ!
தவறான சிந்தையினாலே
தமிழ் நாள்காட்டியில்
உருண்டு மறைந்த
நாட்களனைத்தும்
கழுவிய கறைகளாய்
மறைந்தோட
பசுஞ்சோலை மனமாய்
இன்முகம் காட்டி
அறக்கோட்பாட்டை விதைப்பாயா!