— ஸ்வேதா மீரா கோபால்.

கனவு மெய்ப்பட வேண்டும் …

அந்தச் சிவகாமி மகனிடம் போய் செய்தி சொல்பவர் எவருமுண்டோ? புகழுரைகள் கண்டு மயங்காத சிந்தனையாளரைப் பற்றி இங்கே அனைவரும் புகழ்ந்து எழுதும் கட்டுரைகளை அவரிடம் ஒப்படைக்க இறைவா நீயே ஒரு நல்லவழியைக் காட்டிவிடு…

பட்டியை நகராக்கி விருதுகள் பல பெற்ற மாமனிதனைப் பற்றி எழுதுவது சுலபமல்லவே… இப்படியும் ஒருவர் வாழ முடியுமோ என்ற ஆச்சரியக்குறிக்குச் சொந்தமான தமிழன்னையின் செல்லப்பிள்ளை… இமாலய சாதனைகள் பல இவர் ஆற்றிய பொழுதும் அனைத்தையும் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதன்றோ? கர்மவீரர் காமராசர் பற்றி எழுதுவதில் எதை எடுப்பது, எதை விடுப்பது என்று சற்றே குழம்பியிருக்கிறேன்!

கருப்பு காந்தி என்று போற்றப்படும் காந்தியவாதி; சூழ்நிலைக் காரணமாக தன்னால் பள்ளிக்கல்வி கற்க இயலவில்லையே, ஆனால் தன் நாட்டு மக்கள் அனைவரும் கல்வியறிவுப் பெற்றவர்களாக திகழ வேண்டும் என்று பெரிதளவில் முனைந்த “கல்வியாளர்”; ஆம், பட்டித்தொட்டிகளிலெல்லாம் கல்விச்சாலைகளும் தொழிற்கூடங்களும் நிறுவியவர்…

ஒருமுறை மாடு மேய்க்கும் சிறுவன் ஒருவனிடம் ஏன் பள்ளிக்குச் செல்லவில்லை என்று முதலமைச்சர் காமராசர் வினவ, அதற்கு அச்சிறுவன் கஞ்சிக்கே வழியில்லை என்று கேட்பவர் யார் என்று கூட அறியாமல் கூறிவிடுகிறான். நமது பெருந்தலைவரும் “கஞ்சி கிடைத்தால் பள்ளிக்குச் செல்வாயா…?” என்கிறார். ஆம், என்று அச்சிறுவன் பதிலளிக்கவே, தமிழ்நாட்டில் அறியாமை நீங்கி அனைவரும் கல்வி கற்கத் திட்டங்கள் தீட்டுகிறார் கர்மவீரர்.

ஏழை, எளியவர், தாழ்ந்தவர் என்று எந்த பாகுபாடுமின்றி அனைவரும் கட்டாயம் கல்வி கற்க வேண்டும் என்று அவர் வகுத்த இலவச மதிய உணவு மற்றும் சீருடைத் திட்டம் உலக வரலாற்றில் சிறந்த மைல்கற்களில் ஒன்றாகும். கல்வி கற்பிக்கவும் ஆசிரியர்கள் வேண்டும் அல்லவா? அதற்காக ஆசிரியர்கள் நலன் கருதி இவர் அமைத்த மூன்று நலன் திட்டம் ஆசியக் கண்டத்தில் முதல்முறை அமுலுக்கு வந்த திட்டமாகும். அதுமட்டுமல்லாது தமிழகத்தில் பல நூலகங்களையும் தோற்றுவித்தவர்.

காமத்திற்கு அப்பாற்பட்ட மகாராஜா இவர். சமுதாய மேம்பாட்டிற்காகத் தொண்டாற்றியதால் தனக்கென்று குடும்பம், சொத்து என்று எதுவும் அமைத்துக் கொள்ளவில்லை. அவரது சொத்து ஒரு சில கதராடைகளும் சில நூல்களும் மட்டும் தான். முதலமைச்சராய் பதவி வகுத்தக் காலத்தில் தன் தாய்க்குக் கூட சலுகைகளும் சௌகரியங்களும் செய்யாத அபூர்வ மனிதர். தேசநலனுக்காகவே உழைத்து தன் சுகங்களை முற்றிலும் துறந்த தியாகி. இன்று இவரைப் போன்ற ஒரு தலைவரைக் காண முடியுமோ?

தொழிற்சாலைகளின் வளர்ச்சி, விவசாயத்தில் பசுமை, அணைக்கட்டுகள் அமைத்து நீர்நிலைகளை அதிகரித்தது என்று மேலும் மேலும் அடுக்கிக் கொண்டே போகலாம் இந்த சரித்திரநாயகனின் சாதனைகளை… நேர்மையான நோக்குடன் உண்மையாகவே தன் மாநிலத்தின் வளர்ச்சிக்காக சுமார் ஒன்பது ஆண்டுகள் (1954- 1963) முதலமைச்சராகப் பதவி வகுத்த காலத்தில், மற்ற அமைச்சர்களையும் அரவணைத்துச் சென்றதால் இவரது திட்டங்களுக்கு மக்களின் ஆதரவும் அமோக வெற்றியும் கிடைத்தது. இவரது ஆட்சியின் பொழுது தமிழகம் இந்தியாவிலேயே முதல் மாநிலமாக விளங்கியது. கர்மவீரரின் ஆட்சி தமிழகத்தின் பொற்காலம் ஆகும்.

அரசன் எவ்வழியோ அமைச்சர்கள் அவ்வழி என்ற கூற்றுக்கு ஒப்ப இவரது அமைச்சர்களும் எளிமையாகவும் நேர்மையாகவும் வாழ முன்னோடியாய் வாழ்ந்துகாட்டிய உதாரணப் புருஷர். தனக்கு எதிராகப் போட்டியிட்ட கட்சிக்காரர்களையும் நண்பர்களாக்கி அவர்களுடன் சேர்ந்து நாட்டிற்காக உழைத்த உத்தமர். எதிரும் புதிருமாயிருக்கும் இன்றையத் தலைவர்கள் நாட்டு முன்னேற்றத்திற்காக ஒற்றுமையாய் வாழ இவரிடமிருந்து கற்க வேண்டியப் பாடமிது. பிற தலைவர்களுடன் கருத்து வேறுபாடு கொண்ட பொழுதும் அவர்களைப் பற்றி அவதூறுகள் தானும் பரப்பாமல் மற்றவர்களையும் பரப்பவிடாமல் செய்த பெருந்தலைவர்.

விடுதலைப் போராட்டத்தின் போது கிடைத்த சிறைவாசத்தில்கூட ஆங்கிலம் மற்றும் பல பிற மொழிகளைக் கற்று நேர நிர்ணயம் செய்த நிர்வாகி. தமிழ் வடிவம் தட்டச்சில் மேண்மையடைய பாடுபட்டவர். பத்தரிக்கைக்காரர்களின் தோழர். ஒருமுறை பத்தரிக்கைக்காரர் ஒருவர் பல கோணங்களில் இவரைப் படம்பிடிக்க, என்ன செய்தாலும் தன் முகமோ அல்லது நிறமோ மாறப்போவதில்லை. இருக்கும் முகம் தானே வரப்போகிறது என்று நகைச்சுவையுடன் பதிலளித்த நகைச்சுவையாளர். சோவியத் நாடுகளுக்குக் கூட வேட்டி சட்டை அணிந்த எளிமையானவர். கடும்குளிரில் தாக்குப்பிடிக்க அதிகபட்சம் சால்வை அணிந்தவர்!

இவ்வாறு எத்தனையோ சம்பவங்கள் அடுக்கிக் கொண்டே போகலாம். இவரது உயர்ந்த நெறிகளைப்பற்றிக் கூற…லாவகமாக இரண்டு பிரதமர்களை உருவாக்கிய “கிங்மேக்கர்”; காமராசர் திட்டம்( கே பிளான்) மூலம் தானே முதலில் பதவி விலகிப் பிற மூத்த தலைவர்களுக்கு எடுத்துக்காட்டாய்த் திகழ்ந்த உத்தமர்.

வெறும் வார்த்தைகளால் அல்லாது செயல்களால் துணிந்து அற்புதங்கள் ஆற்றிய செயல்வீரர்.

பிறந்த பொழுதிலே காமாட்சி என்று பெயர் சூட்டப்பட்டு, பிறகு, தன் தாய்க்கு ராசாவாகி, இல்லை… இல்லை… ஒட்டுமொத்த தமிழர்களின் முடிசூடா மன்னராகி, காமராசராகிய சக்கரவர்த்தியே, நீவீர் மீண்டும் பிறக்க வேண்டும் எம் அன்னைத் தமிழ்நாட்டினிலே. பல இயற்கை வளங்களிலிருந்தும் மின்சாரம் அபிவிருத்தியடையவும், நம் மாநிலத்தில் காவிரி பாய்ந்தோடவும், மேன்மேலும் தொழில் வளர்ச்சியடையவும், சாலைகள் சீராகவும், பன்னாட்டு நிறுவனங்களின் முதலீடுகள் பெருகவும், சுத்தமான, சுதந்திரக்காற்றை சுவாசிக்கவும், கல்வி, கலை அனைத்தும் வளரவும், எல்லாவற்றிற்கும் மேல் கல்வியறிவுடன் பண்பும் நிறைந்த மனிதர்களாய்த் தமிழர்கள் திகழ, நமது மாநிலம் மீண்டும் முதலிடம் பெற்று நம் நாட்டிற்காக மட்டும் அல்லாமல் இவ்வுலகிற்கே வழிகாட்டியாக அமையத் தமிழனாய் இன்றேப் பிறந்திடுவீர் நம் தமிழ்நாட்டிலே.

விருதுப்பட்டி போல் எத்தனையோ பட்டிகள் நகரமாவதற்குக் காத்துக்கொண்டிருக்கிறது, மீண்டும் தங்கள் வருகைக்காக. அமைதிப்பூக்கள் வளர்த்து மற்றுமொரு வசந்தகாலம் தமிழ்நாட்டில் உலவ இன்றே வாரீர். உம் வருகைக்காகத் துடித்துக் காத்துக்கொண்டிருக்கும் தமிழர்கள் நாங்கள் என்ற இந்தச் செய்தியை அந்தச் சிவகாமி மகனிடம் போய் செய்தி ( தூது) சொல்பவர் எவருமுண்டோ, எவ்வழியுண்டோ, இறைவா காட்டிவிடு விரைவில்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *