உன்னையறிந்தால் . . . . . . (20)
வாழ்க்கைத் துணையுடன் ஒத்துப்போவது
நிர்மலா ராகவன்
கேள்வி: நான் பள்ளிப்படிப்புடன் என் கல்வியை நிறுத்திவிட்டேன். அது தெரிந்தே என் அழகுக்காக என்னைக் காதலித்து மணந்தவர், இப்போது `மேலே படி,’ என்று உயிரை வாங்குகிறார். எனக்கு விருப்பமில்லை. முதலிலேயே ஒரு பட்டதாரியைத் தேடிப் பிடித்திருக்க வேண்டியதுதானே?
விளக்கம்: பெரும்பான்மையான திருமணங்களில் ஏற்படும் பிரச்னையே இதுதான். எல்லா வேலைகளுக்கும் முன் அனுபவம் தேவைப்படுகிறது. ஆனால், வாழ்நாள் முழுவதும் இருவர் இணைந்து குடும்பம் நடத்த மட்டும் கிடையாது.
சில வருடங்கள் காதலித்திருந்தாலும், ஒரே வீட்டில், இரவு பகலாக சேர்ந்திருந்தால், பிரச்னைகள் வரத்தான் செய்யும். ஒன்றாக வளர்ந்த அண்ணன் தம்பிகள், அக்கா தங்கைகளுக்குள்ளேயே சண்டை பூசல் வருவதில்லையா? அதுபோல்தான்.
தனக்கு வரப்போகும் மனைவி வாளிப்பான உடலழகுடன், படிப்பு, செல்வம் எல்லாவற்றிலும் சிறந்திருக்க வேண்டும் என்று ஆண் கனவு காண்கிறான். பெண்ணுக்கோ, பெரிய உத்தியோகம், ஆடம்பரமான வாழ்க்கை இதெல்லாம் கொண்ட ஆண்தான் கணவனாக வரவேண்டும் என்ற ஆசை.
அழகான பெண் மனைவியாக அமைந்தால், அத்துடன் திருப்தி அடைய முடிவதில்லை. `நண்பருடைய மனைவி இன்னும் அதிகமாகப் படித்திருக்கிறாளே! புத்திசாலித்தனமாகப் பல விஷயங்களை விவாதிக்கிறாளே!’ என்ற போட்டி மனப்பான்மை எழுகிறது.
தன் கனவுப்படியே பெரிய உத்தியோகஸ்தனை மணந்தவளோ, அவருக்குத் தன்னைக் கவனிக்கவோ, கொஞ்சவோ நேரமே இல்லையே என்று ஏங்கி வாடுகிறாள். ஓயாமல் குறை கூற, அவர் பயந்து, நண்பர்களை அதிகமாக நாடுகிறார். ஆனால் எப்போதும்போல, விளையாட்டு, அரசியல், பெண்கள் என்று கலகலப்பாகப் பேச முடிவதில்லை. `பெண்’ என்றாலே மனைவி ஞாபகம் வர, வாயடைத்துப்போகிறது!
`கலகலப்பான பெண்’ என்று மகிழ்ந்து ஒரு பெண்ணைக் காதலிக்கிறான் மௌனச்சாமியான ஒருவன். அவளை மனைவியாக்கிக் கொண்டதும், `என்ன இவள், வாய் ஓயாமல் பேசுகிறாளே!’ என்ற அலுப்பு தோன்றும். பொதுவாக, முதலில் ஈர்த்த குணமே பிறகு வெறுப்பை விளைவிக்கும். இதனால், கல்யாணத்துக்குமுன் ஏற்படும் அனுபவங்களை வைத்து, பிறகு நடக்கப்போவதை கணிக்க முடியாது.
கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் மாற்ற முயற்சிப்பார்கள். இதைவிட ஒரு நாயைப் பூனையாக்குவது எளிது.
இந்த முயற்சி ஒரு மாரத்தான் பந்தயம் போலத்தான். முதலில் மெதுவாக ஆரம்பிக்கும். சிறிது பொறுத்து, தன் பலமும், `எதிரி’யின் பலகீனமும் புரிந்துபோக, வேகம் அதிகரிக்கும். எப்படியும் மாற்ற முடியாது என்று புரிந்தவுடன் ஏமாற்றம் எழ, அதுவே ஆத்திரமாக மாறுகிறது.
மிகச் சிலரே தமக்கு என்ன வேண்டும் என்பதைப் புரிந்து கொண்டிருக்கிறார்கள்.
`எனக்குப் பிடித்தவைகளில் (இசை, நாட்டியம், சித்திரம் வரைதல், இலக்கியம் — எவ்வளவு இல்லை!) அவருக்கும் நாட்டம் இருக்க வேண்டும். என்னை ஊக்குவித்து, பக்கபலமாக இருப்பவரையே நான் மணக்க விரும்புகிறேன்’ என்று கூறும் பெண் புத்திசாலி. தான் மகிழ்ச்சியாக வாழ என்ன தேவை என்று புரிந்து வைத்திருக்கிறாள்.
(இதிலும் ஒரு சிக்கல் இருக்கிறது. ஒரே துறையில் இருக்கும் இருவருக்குமிடையே போட்டி எழாதா? அடுத்தவரின் ஆற்றலைக் குறைத்து மதிப்பிடாமல், விட்டுக்கொடுக்க எத்தனை பேர் முன்வருவார்கள்?)
`கூட்டுக் குடும்பத்தில் என் பெற்றோரை அன்பாகப் பராமரிக்கும் பெண்தான் வேண்டும். மற்ற தகுதிகள் எல்லாம் இரண்டாம் பட்சம்தான்!’ என்று நிபந்தனை விதிக்கும் ஆண் அபூர்வம்.
இவர்களைப் போன்றவர்களுக்குத் தெரியும், எப்படிப்பட்ட துணையால் தங்களது வாழ்க்கையில் அதிகமான பிரச்னைகள் எழாது என்று. பரஸ்பர மதிப்புடன், ஒருவருக்கொருவர் எல்லாவற்றிலும் உறுதுணையாக இருப்பார்கள்.
ஆணுக்கும், பெண்ணுக்குமிடையே உள்ள உடலமைப்பின் வித்தியாசத்தால் ஆரம்பத்தில் ஈர்ப்பு ஏற்படலாம். ஆனால், இருவருடைய உளவியலும், உணர்ச்சிபூர்வமான நடத்தைகளும் வெவ்வேறு. அது புரியாததால்தான் கோபமோ, பயமோ ஏற்படுகிறது.
நண்பர்களுக்கிடையே புரிந்துணர்வும், அதனால் மற்றவரை ஏற்பதும் எளிது. தம்பதிகளுக்கு ஏனோ இது கைவரவில்லை. ஒருவரை ஒருவர் கட்டுப்படுத்த முயலுகிறார்கள். ஒருவரைப் புரிந்துகொள்ள இயலாதபோது, அவரை ஏற்பது மட்டும் இயலுமா?
திருமணமான புதிதில் இருந்ததுபோல் யாரும் இருப்பதில்லை, பத்து, இருபது வருடங்களுக்குப்பின். இதனால் ஏமாற்றம் அடையாது, `தானும் ஒன்றும் அப்படியே நிலையாக இருந்து விடவில்லையே!’ என்ற ஞானோதயம் பெறவேண்டும். உங்கள் கணவர் பூதம் மாதிரி இருந்தாலும், அவரை நீங்கள் ஆணழகர் என்று நினைத்தால், அதுதான் உண்மை அன்பு.
நான் பார்த்த தம்பதிகளிலேயே மிக ஒற்றுமையாக, மகிழ்ச்சியாக இருந்தவர்கள் என் பள்ளித்தோழியின் பெற்றோர். தந்தை உயரமாக இருப்பார். பெரிய உத்தியோகம், நல்ல அழகர். தாய்க்குக் கூனல், முகம் சற்று கோணலாக இருக்கும். அடிக்கடி சமையலறைக்குள் நுழைந்து, மனைவியின் தோளைக் கட்டிக்கொண்டு ஏதாவது கேட்பார். தான் செய்வது எல்லாவற்றையும் அவளைக் கலந்து ஆலோசிப்பார். பிறருக்காக ஆடும் நாடகமாகத் தெரியவில்லை. அவருடைய உணர்ச்சிகளைப் புரிந்துகொண்டு, அதற்கு மதிப்பு கொடுத்து நடந்ததாலோ, என்னவோ, மனைவியைக் கண்டால் உயிர் அவருக்கு. அறுபது வருடங்களுக்கு மேலாகியும், இவர்கள் என் மனதில் நிற்கிறார்கள்.