பவள சங்கரி

IWD

ஆதி மனிதம் உருவானது பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு என்றாலும் குரங்கிலிருந்து முதன் முதலில் தோன்றியது மூதாய் என்று நம் அறிவியல் அருதியிட்டுக்கூறும் பெண் தான் அவள். ஆதியில் பெண்ணே தலைமை வகிப்பவளாகவும், வேட்டையாடி உணவைக் கொண்டுவருபவளாகவும், சமுதாயத்தை வழிநடாத்துபவளாகவும் இருந்தாள். நாகரிகம் வளர ஆரம்பித்தவுடன் பொதுவுடமைக் கொள்கைகளில் மாற்றம் காண ஆரம்பிக்கவும், தனியுடைமைக் கொள்கை, அரசியல், மத நிறுவனங்கள் தலை தூக்க ஆரம்பித்தன. அறிவியல் கண்டுபிடிப்புகள் உருவாக ஆரம்பித்தன. மெல்ல மெல்ல ஆண் தலைமைப் பொறுப்பை ஏற்க ஆரம்பித்தான். முதல் விஞ்ஞானி, முதல் விவசாயி, முதல் ஞானி என அனைத்திலும் பெண்களே முன்னிலை வகித்திருந்தனர். ஆனாலும் சட்டங்கள், கருத்தாக்கங்கள், சமூக அமைப்புகள் என அனைத்திலும் பெண் ஓரங்கட்டப்பட்டு ஆண் மட்டுமே முன்னிலைப்படுத்தப்பட்டான். மெல்ல மெல்ல அவள் வீட்டிற்குள் முடக்கப்பட்டு, குறுகிய எல்லைகளை வகுத்து, இறுதியாக இரண்டாந்தர குடிமக்களாகவும் ஆக்கப்பட்டாள். 15ஆம் நூற்றாண்டின் பிறகு ஐரோப்பிய நாடுகள் பெரும் அரசியல் மாற்றங்களைச் சந்தித்த பிறகு மனித உரிமைச் சிந்தைகள் எழுச்சியுற்றன.

சமுதாயத்தில் அடக்கி ஒடுக்கப்பட்ட பெண் வீறு கொண்டு எழுந்தது இன்று நேற்று முதல் அல்ல. பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே தம் உரிமையை மீட்க போர்க்கொடி தூக்கியவள்தான். கி.பி.1789இல், லூயி மன்னரின் அரசாட்சியையே முடிவுக்குக் கொண்டு வந்த, சுதந்திரம், சமத்துவம், பிரதிநிதித்துவம் என்ற உரிமை முழக்கங்களுடன் பிரான்ஸ் நாட்டின் பாரீஸ், வெர்செயில்ஸ் ஆகிய நகரங்களில் பெண்கள் கிளர்ச்சியில் இறங்கி போராட்டம் நடத்தினர். 1759-1797 காலகட்டங்களில் மேரி வோல்ஸ்டன் கிராப்ட் என்பவர் குறிப்பிடத்தக்க பெண்ணுரிமைப் போராளி. இவர் எழுதிய The Vindication Of the Rights of Women என்னும் புத்தகம் பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தக்கூடியதாக இருந்தது. இதன்பின் அமெரிக்கா, பிரஷ்யா, இத்தாலி, கிரீஸ், ஆஸ்திரியா, டென்மார்க் போன்ற பல நாடுகளிலும் பெண்ணுரிமைப் போராட்டங்கள் நடந்தன. இதன் தொடர்பாக லூயி மன்னன் 1848ஆம் ஆண்டில் மார்ச் 19ஆம் நாள் பெண்களுக்கு வாக்குரிமை அளிப்பதாகவும், அரசவை ஆலோசனைக் குழுக்களில் பெண்களுக்கு பிரதிநிதித்துவம் தருவதாகவும் உறுதியளித்தாலும் அவை நிறைவேற்றப்படவில்லை.

இறைவன் படைப்பில் ஆணும், பெண்ணும் சமம் என்று 1848இல் நியூயார்க்கில் உள்ள செனீகா ஃபால்ஸ் என்னும் ஊரில் நடந்த மாநாட்டில், பெண்ணுரிமைப் போராட்டங்களின் ஓர் மைல்கல்லாக கருதப்படும், பெண்ணுரிமைப் போராளிகள் வெகுண்டெழுந்து பெண்களின் உரிமைப் பிரகடனத்தை (Declaration of the Rights of Women) வெளியிட்டனர்.

இந்தப் போராட்டங்களின் சாரமாக பெண்ணின் வாழ்வெல்லைகள் விரிவாக்கப்படவும், ஓட்டுரிமை பெறவும், சம உரிமையும், பொறுப்புகளும் உள்ளதையும் அடிப்படையாகக் கொண்டதாக இருந்தது. வெற்றி என்பது ஆணும் பெண்ணும் இணைந்து உழைத்துப் பெறும் வகையில் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தினர்.

1857ஆம் ஆண்டில், அமெரிக்க நாட்டின் நியூயார்க் நகரில் பெண்கள் பெரும்போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பெரும்பாலான பெண்களுக்கு ஆரம்பக் கல்வி கூட தரப்படாமல் மறுக்கப்பட்டிருந்தது. பருத்தி நூற்பாலைகள், நிலக்கரி சுரங்கங்கள், ஆடை உற்பத்தியகங்கள் போன்றவற்றில் பணியாற்றிய ஆயிரக்கணக்கான பெண் தொழிலாளர்கள், குறைவான கூலி, அதீதமான ஒடுக்குமுறை, மோசமான பணிச் சூழல் போன்றவற்றை எதிர்த்துப் போராடினர். ஆனால் இப்போராட்டத்தை அரசாங்கம் கடுமையாகத் தடை செய்தது. ஆனால் அமெரிக்க நாட்டில் 1908இல் வாக்குரிமையும், கூலி உயர்வும் வேண்டி நடந்த மாபெரும் போராட்டம் உலகளவில் பெண்களிடம் எழுச்சியை ஏற்படுத்தியது. இதன் பயனாக, 1910இல் செருமனியின் சமூக சனநாயகக் கட்சியின் பெண்கள் பிரிவின் தலைவரான கிளாரா ஜெட்கின் என்பவரின் தலைமையில், டென்மார்க்கின் கோபன்ஹேகன் நகரில் பெண்கள் மாநாடு கூட்டப்பட்டதோடு சர்வதேச மகளிர் அமைப்பும் தோற்றுவிக்கப்பட்டது. இதன் விளைவாக 1911இல் மார்ச் 19ஆம் நாளில் டென்மார்க், செருமனி, ஆசுத்திரியா, சுவிட்சர்லாந்து போன்ற ஐரோப்பிய நாடுகளில் முதல் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. 1913ஆம் ஆண்டில் உருசியாவிலும் முதல் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. இதன் பின்னர் ஆண்டுதோறும் மார்ச் 8ஆம் தேதி, பெண்களுக்கான சமத்துவம், உரிமைகளை வலியுறுத்தும் வகையில், தேச எல்லைகளைக் கடந்து உலகம் முழுவதும் மகளிர் தினம் தினம் (International Women’s Day) கடைபிடிக்கப்பட வேண்டும் என்று சர்வதேச மகளிர் பிரதிநிதிகள் தீர்மானித்தனர். பல நாடுகளில் பொது விடுமுறை நாளாகவும் அறிவிக்கப்பட்டது.

1917ஆம் ஆண்டில் 90,000 பெண்கள் தங்கள் வாழ்வாதாரங்களான உணவு, வாக்குரிமை போன்றவற்றிற்காக உருசிய மன்னன் ஜார்ஜ்க்கு எதிராக முன்னெடுத்து வெற்றிகொண்ட போராட்டமே 8 மாதங்களுக்குப் பிறகு வெற்றி பெற்ற உருசியப் புரட்சியின் வித்தாக அமைந்தது. புதிதாக மலர்ந்த சோசலிச சோவியத் கூட்டமைப்பில் பெண்களுக்கு முழுமையான வாக்குரிமையும், அனைத்துத் துறைகளிலும் பங்கேற்கும் உரிமையும் உறுதி செய்யப்பட்டது. இதன் பிறகு பல அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளிலும் படிப்படியாக பெண்களுக்கு வாக்குரிமைகள் வழங்கப்பட்டன. 1920ஆம் ஆண்டு சோவியத் உருசியாவில் செயின்ட் பீட்டர்சு நகரில் நடந்த மகளிரின் போராட்டத்தில் உருசியாவின் அலெக்ஸ்சாண்டிரா கெலன்ரா கலந்து கொண்டு ஆண்டுதோறும் மார்ச் 8ம் தேதி உலக மகளிர் தினமாகக் கொண்டாட வேண்டும் என்று பிரகடனம் செய்தார். அதன்படி 1921ம் ஆண்டு முதல் மார்ச் 8ஆம் நாள் சர்வதேச மகளிர் தினமாகக் கடைபிடிக்கப்படுகிறது.

1960களில் எழுச்சி பெற்ற தீவிர பெண்ணிய சிந்தனைகளின் விளைவால் 1975ஆம் ஆண்டை ஐக்கிய நாடுகள் சபை சர்வதேச மகளிர் ஆண்டாக அறிவித்துள்ளது.

ராஜாராம் மோகன் ராய், மகாதேவ கோவிந்த ரானடே, ஈஸ்வர சந்திர வித்யாசாகர், கேசவ சந்திர சென், பண்டித ரமாபாய், மகாத்மா பூலே முத்துலட்சுமி ரெட்டி, காந்தியடிகள் போன்ற பல சிந்தனையாளர்களும் நம் இந்திய சமூகத்தில் பெரும் விழிப்புணர்வை எற்படுத்தினர். இந்திய பெண்களின் விடுதலைக்கு வித்திட்டனர். அண்ணல் அம்பேத்கர் இந்தியப் பெண்கள் அரசியல், பொருளாதார, சமூக உரிமைகளின் சட்டரீதியான அங்கீகாரத்துக்காகப் போராடினார் . தந்தை பெரியாரின் சிந்தனைகளும் போராட்டங்களும் முழுமையான பெண் விடுதலைக்கு வழிகாட்டியாக இருக்கின்றன.

இன்றைய இந்தியாவில் மகளிர் பல்வேறு சாதனைகளைப் புரிந்தவர்களாக இருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சேலம் மாவட்டம் எடப்பாடியைச் சேர்ந்த அரசுப் பள்ளியில் படித்த லாவண்யா தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக்கழகம் நடத்திய பட்டமளிப்பு விழாவில் 9 தங்கப் பதக்கங்கள் உட்பட 32 பதக்கங்களை தட்டிச்சென்றது குறிப்பிடத்தக்கது.

பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பூங்கோதை சிறந்த விவசாயிக்கான தேசிய விருது பெற்றார். மக்காச்சோள உற்பத்தியில் இவர் படைத்த சாதனைக்காக ‘கிரிஷிகர்மான்’ என்ற தனிநபர் சாதனையாளர் விருதை பிரதமர் கையால் பெற்றார்.

நெல் விளைச்சலில் தமிழகத்திலேயே முதலிடம் பெற்றுச் சாதனை படைத்துள்ளவர் மதுரை திருப்பாலை கிராமத்தை சேர்ந்த பிரசன்னா என்பவர். இயற்பியல் பட்டதாரியான இவர், நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இச்சாதனையை நிகழ்த்தியிருக்கிறார்.

இந்த நவீன காலத்தில் பெண்களுக்கான சுதந்திரமும் தவறான முறையில் பயன்படுத்தப்படுவதையும் காணமுடிகிறது. ஐக்கிய நாடுகள் அமைப்பின் (United Nations Population Fund) புள்ளி விவரப்படி நம் நாட்டில் ஒரு ஆண்டுக்கு சுமார் 2,45,000 மணமாகாத இளம் பெண்கள் கருக்கலைப்பு செய்து கொள்கிறார்கள் என்பதையும் அறியமுடிகிறது.

இந்தியாவில் பெண்கள், சிறுமியர் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் அதிகமாக நடக்கின்றன.

“இந்தியாவில் பெண்கள், சிறுமியர் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் பலாத்காரம் சம்பவங்கள் அதிகமாக நடக்கின்றன. அதேபோல், குழந்தைகளைப் புறக்கணிக்கும் நடைமுறையும் அதிகமாக உள்ளது. பாதிக்கப்படும் பெண்கள் புகார் கொடுக்க முன்வருவதில்லை. அவர்களுக்கு ஆதரவாக சமுதாயத்தினர் இருப்பதில்லை. இந்நிலை, சமீபகாலமாக உச்சத்தை அடைந்துள்ளது. பெண்கள், குழந்தைகளைப் பாதுகாக்கும் உயரிய பொறுப்பிலிருந்து இந்திய அரசு தவறிவிட்டது. பொதுவான சட்டங்கள் இருந்தபோதிலும் அவை சரியானபடி நிறைவேற்றப்படுவதில்லை. இந்நிலை மாற வேண்டும்” என்று ஐ.நா.குழந்தைகள் உரிமைக் குழுத் துணைத் தலைவர், பென்யாம் மெஜ்முர் கூறியிருப்பது கருத்தில் கொள்ளவேண்டியது.

மத்திய அரசின், பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் குழந்தைகள் மீதான அத்துமீறல் பற்றிய ஆய்வு 2007 என்ற ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில், சிறு குழந்தைகள், குறிப்பாக 5 முதல் 12 வயதிற்குட்பட்டோர் அதிகளவில் குழந்தைகள் மீதான அத்துமீறலுக்கு ஆளாகிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளது. ஆந்திரபிரதேசம், அசாம், பீகார், டெல்லி ஆகிய மாநிலங்களில் ஆண், பெண் குழந்தைகளிடையே அதிகளவு பாலியல் வன்முறை கண்டறியப்பட்டுள்ளது.

பதின்மூன்று மாநிலங்களில் 12,447 குழந்தைகளிடம் மேற்கொண்ட ஆய்வில் 53 விழுக்காடு குழந்தைகள் ஏதோ ஒரு பாலியல் வன்முறைக்கு ஆளானதாகவும், 21.9 சதவீத குழந்தைகள் மோசமான பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகவும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்தியாவில் ஆண்டொன்றுக்கு சுமார் 7 லட்சம் சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகின்றார்கள். விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்டவர்களில் 15 விழுக்காட்டினர் பதினைந்து வயதுக்குட்பட்டவராவர். 2006இல் துளிர் எனும் அமைப்பு 2211 சென்னைக் குழந்தைகளிடம் ஆய்வு செய்ததில் 42 விழுக்காட்டினர் பாலியல் கொடுமைகளுக்கு ஆளானதாகக் கண்டுபிடிக்கப்பட்டது.

தமிழகத்திலும் பெண்களுக்கு எதிராக கடந்த 2008-இல் 573 பாலியல் குற்றங்களும், 1160 கடத்தலும், 1548 குடும்ப வன்கொடுமைகளும் பதிவாகியுள்ளன. 2009-இல் 596 பாலியல் குற்றங்களும், 2010-இல் 686 பாலியல் வன்கொடுமைக் குற்றங்களும் பதிவாகியுள்ளன. இந்த ஜூன் மாதம் மாத்திரம் தக்கலையில் 13 வயது சிறுமி, பொள்ளாச்சியில் ஆதரவற்றோர் விடுதியில் தங்கிப் படித்த இரண்டு சிறுமிகள், மற்றும் கரூர், மதுரை, சாத்தூர் சென்னை என 12 பாலியல் வன்கொடுமைகள் பதிவாகியுள்ளன. இதில் 8 வழக்குகள் சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமை வழக்குகளாகும். 2011-ஆம் ஆண்டு 677 பாலியல் வன்கொடுமைக் குற்றங்களும், 2012ஆ-ம் ஆண்டு 528 குற்றங்களும் 2013-இல் 1019 பாலியல் வன்கொடுமைக் குற்றங்களும் பதிவாகியுள்ளதாக புள்ளி விவரம் ஒன்று தெரிவிக்கிறது. தமிழ்நாட்டில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் கடந்த 5 ஆண்டுகளில் இரட்டிப்பாகியுள்ளதாக தேசிய குற்றப்பிரிவு புலனாய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரம் தெரிவித்துள்ளது.

2005இல், பெண்களைப் பாதுகாக்க குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் வந்தது. 2006 நவம்பர் முதல் 2007 சூலை வரையிலான காலகட்டத்தில் மட்டும் 7913 வழக்குகள் பதிவாகியுள்ளன. 2008 மே மாதம் வரை வந்த 712 புகார்களில் தீர்வு காணப்பட்டவை 179 என்கிறது தமிழக புள்ளிவிவரம்.

சராசரியாக 50 கோடி பெண்கள் வாழும் நம் இந்தியாவில், கல்வியிலும், திறமையிலும் ஆணுக்கு நிகராகவே சாதித்துக்கொண்டிருப்பவர்கள் பெண்கள். 2003ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி அந்த 50 கோடி பெண்களில் 48.3% பெண்கள் கல்வியறிவு பெற்றவர்கள் என்பதும், அதில் 28% பேர் வேலையில் இருப்பவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தின் சராசரியான 7 கோடி சனத்தொகையிலும் பெண்களுக்குச் சரி பாதியிடம் உள்ளது. இங்கு கல்வி பெற்றவர்கள் எண்ணிக்கை மட்டும் இரண்டு கோடி பேர் என்பதும் பெண்களின் வளர்ச்சிக்கு ஆதாரமாக இருப்பது.

“பெண் அடிமை என்பது மனித சமூக அழிவு என்பதை நாம் நினைக்காததாலேயே, வளர்ச்சி பெற வேண்டிய மனித சமூகம் பகுத்தறிவு இருந்தும் நாள்தோறும் தேய்ந்து கொண்டே வருகிறது” என்ற தந்தை பெரியாரின் வாக்கை நினைவில்கொண்டு பெண்களின் மீதான ஒடுக்குமுறையைக் களைந்து, சுய மரியாதை, சமூக மதிப்புடன் கூடிய அரசியல், சமூக, பொருளாதார, பண்பாட்டுச் சுதந்திரம் ஆகியவற்றுடன் மென்மேலும் சாதனை புரிய வழிவகுக்கும் வகையில் பெண்கள் வாழ்வு மலரவேண்டும் என்பதே இந்த சர்வதேச மகளிர் தினத்தின் குறிக்கோளாக இருக்கவேண்டும்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *