சுட்டும் விழிச்சுடர்!
பவள சங்கரி
சுட்டும் விழிச்சுடர்! (1)
நம் இந்தியாவைப் பொறுத்த வரையில் பெண் குழந்தைகளை பெரும் சுமையாக நினைப்பதாலேயே பெண் குழந்தை என்று தெரிந்தால் அதை கருவிலேயே அழிக்கும் சூழலும் காணப்படுகிறது. கடந்த 20 ஆண்டுகளில், அதாவது 1990 – 2010 இடையே சுமார் ஒரு கோடி பெண் சிசுக்கள் கருவிலேயே கலைக்கப்பட்டிருக்கின்றன. தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களில் ஆண் பெண் குழந்தைகள் விகிதம் கவலை தருவதாக உள்ளதென கருக்கலைப்புக்கு எதிரான அமைப்பு CAMPAIGN AGAINST SEX SELECTIVE ABORTION(CASSA) தெரிவிக்கிறது. தமிழ் நாட்டில் மாநில விகிதம் 1000 ஆண் குழந்தைகளுக்கு 952 பெண் குழந்தைகள் என்பதாக இருக்கிறது 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு மதுரை, தர்மபுரி,சேலம்,விழுப்புரம், அரியலூர்,பெரம்பலூர்,கிருஷ்ணகிரி மற்றும் கடலூர் மாவட்டங்களில் 1000 ஆண் குழந்தைகளுக்கு 952 க்கும் குறைவான பெண் குழந்தைகளே இருப்பதாக தெரிவிக்கிறது. கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் 1000 ஆண் குழந்தைகளுக்கு 900 க்கும் குறைவான பெண் குழந்தைகளே இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது. 2001ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவில் 1000 ஆண்களுக்கு 933 பெண்கள்தான் இருந்திருக்கிறார்கள். இந்த எண்ணிக்கை நகர்புறங்களில் 946 ஆகவும், கிராமப் புறங்களில் சுமார் 900 ஆகவும் தான் இருக்கிறது. அதே நேரத்தில் படித்தவர்கள் அதிகமுள்ள கேரளாவில் ஆயிரம் ஆண்களுக்கு 1058 பெண்கள் இருக்கிறார்கள். ஹரியானா மாநிலத்தில் மிகக் குறைவாக 861 பெண்கள்தான் இருக்கிறார்கள்.
கடந்த 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி 6 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளின் பாலின விகிதம் சென்னை மாவட்டத்தில் 21 புள்ளிகள் குறைந்து 950 ஆகவும், திருவள்ளூர் மாவட்டத்தில் 8 புள்ளிகள் குறைந்து 946 ஆகவும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 2 புள்ளிகள் குறைந்து 959 ஆகவும் உள்ளது. இந்த பாலின விகிதம் இயற்கையாக 985 ஆக இருக்க வேண்டும். ஆனால், மிகக் குறைவாக உள்ளதாக தெரிய வந்துள்ளது.
2012ம் ஆண்டு பிறப்பு விகிதம் குறித்து தகவல் ஆணையத்தின் கணக்கெடுப்பின்படி தமிழகத்தில் 1000 ஆண் குழந்தைகளுக்கு 952 பெண் குழந்தைகள் உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், 18 மாவட்டங்களில் மாநில சராசரி அளவை விட குறைவாக இருப்பதும் தெரியவந்துள்ளது. குறிப்பாக 3 மாவட்டங்களில் பெண் குழந்தை பிறப்பு விகிதம் 900க்கும் குறைவாகவே உள்ளது. காஞ்சிபுரத்தில் 914, விழுப்புரத்தில் 889, மற்றும் கடலூரில் 896 ஆகவும் உள்ளது.
கருவில் இருப்பது ஆணா, பெண்ணா என கண்டறிந்து கூறும் முறை, கிராமப்புற பெண்களைக் காட்டிலும், நகர்ப்புற பெண்கள் மத்தியில் அதிகளவில் பிரபலமாகவுள்ளது. இதன் விளைவாக, கடந்த, 50 ஆண்டுகளாக பெண் குழந்தைகளின் எண்ணிக்கை, கிராமப்புறங்களைக் காட்டிலும், நகர்ப்புறங்களில் அதிகளவில் குறைந்து வருகிறது. இதற்குக் காரணம் பெண்களின் பாதுகாப்பற்ற நிலைதான். பாலியல் வன்முறைகள், வரதட்சணை பிரச்சனைகள் போன்றவைகளே. பெண்களுக்கான கல்வி மற்றும் வேலை வாய்ப்புகள் பரவலாக இருந்தும், போராட்டமான வாழ்க்கைச் சூழலே பெண் குழந்தைகளின் பிறப்பையே பெற்றோர் அஞ்சும் அளவிற்குச் சென்று கொண்டிருப்பது வருங்காலத்திற்கு நல்லதல்ல.
ஆனால் எழுத்தறிவில் முன்னிலை வகிக்கும் கேரளா, இதில் முன்னுதாரணமாக விளங்குகிறது. இம்மாநிலத்தில், கடந்த, 50 ஆண்டுகளாகவே பெண் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அரியானா, இமாச்சல பிரதேசம், மிசோராம் போன்ற பல்வேறு மாநிலங்களிலும், தனிநபர் வருமானம் அதிகமுள்ள, “இந்தியாவின் உணவுக் களஞ்சியம்’ என வர்ணிக்கப்படும் பஞ்சாப் மாநிலத்திலும், பெண்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆனால், இந்தியாவில் அளவில் மிகப் பெரியதும், அதிகப்படியான மக்கள் தொகையைக் கொண்டதுமான உத்தரப் பிரதேச மாநிலத்தில், பெண்கள் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருவது வேதனைக்குரிய விசயம். அதேபோன்று, நம் நாட்டின் தலைநகராகவும், உயர்வகுப்பினர் அதிகமாக வசிக்கும் பகுதியாகவும் விளங்கும் தில்லி மாநிலத்திலும், பெண்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது என்கிறது கணக்கெடுப்புகள். மேலும் நாட்டிலேயே ஆண் – பெண் விகிதம் மிகக் குறைவாக உள்ள மாநிலமாக அரியானா பட்டியலிடப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
பெண்களைப் பாதிக்கும் பல்வேறு பிரச்சனைகள், குறைந்து வரும் ஆண், பெண் குழந்தைகள் விகிதத்தை அதிகரிக்க வேண்டியதன் அவசியம் ஆகியவைகளைக் கருத்தில்கொண்டு, நம் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் சமீபத்தில் அரியானா மாநிலம் பானிபட் நகரில், ‘பெண் குழந்தையைப் பாதுகாப்போம், பெண் குழந்தைக்கு கல்வி அளிப்போம்’ என்ற திட்டத்தை தொடங்கி வைத்தார். அப்போது பெண் குழந்தைகளின் பாதுகாப்புக்கும், கல்விக்கும் மத்திய அரசு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கான்பூரைச் சேர்ந்த பள்ளி மாணவிகள் ஒன்று சேர்ந்து பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு 100 மீ. நீளமுள்ள கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர். இந்திய அஞ்சல் துறை சார்பில், “பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம் பெண் குழந்தைகளுக்குக் கற்பிப்போம்’ என்ற திட்டம் தொடர்பான சிறப்பு அஞ்சல் தலை வெளியிடப்பட்டது. இந்தியாவில் பெண் குழந்தைகளின் நலனைக் காக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஆண்டு தோறும் ஜனவரி 24ஆம் தேதி, ‘தேசிய பெண் குழந்தைகள் தினம்’ ( National Girl Child day ) கொண்டாடப்படுகிறது. பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தை மத்திய அரசு கொண்டிருக்கிறது. குடும்ப வன்முறைக்கு எதிராக பெண்களுக்கு சட்டப் பூர்வமாக பாதுகாப்பும் உள்ளது
இப்படி ஆக்கப்பூர்வமான பல்வேறு திட்டங்கள் போடப்பட்டிருந்தாலும் நடந்துகொண்டிருக்கும் சில நிகழ்வுகளைப் பார்க்கையில், இவை யாவும் செயல்படாமல் ஏட்டளவிலேயே இருக்கிறதோ என்ற எண்ணமே தோன்றுகிறது. எங்கோ ஓரிரு நிகழ்வுகளை வைத்துக்கொண்டு ஒரு முடிவிற்கு வரலாமா என்ற ஐயம் எழலாம். ஆனால் ஒரு பானை சோற்றிற்கு ஒரு சோறு பதம் என்பதோடு, பிரச்சனைகள் மென்மேலும் அதிகரிக்காமல் இருக்கும் விழிப்புணர்வும் வேண்டியது அவசியம். வெளியில் தெரியாமல் எத்தனையோ குழந்தைகள் பாதிக்கப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள். பிரச்சனை அதிகமாகி பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் வேளைகளில் மட்டுமே அவை வெடித்து வெளியே சிதறுகின்றன. அந்த வகையில் நாட்டில் பெண் குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் எதிராக நடந்து கொண்டிருக்கும் வன்முறைகளை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டுமாயின் அவர்களுக்கு அதற்குரிய விழிப்புணர்வும், தன்னம்பிக்கையும், துணிச்சலும் வேண்டியது அவசியமாகிறது. பெண் குழந்தைகள் 18 வயதுக்கு முன் திருமணம் செய்து கொள்வதைத் தவிர்க்க வேண்டும். குடும்ப வன்முறைக்கு எதிராக பெண்களுக்கு சட்டப் பூர்வமாக பாதுகாப்பு உள்ளது என்பதை அவர்கள் அறிந்து வைத்துக் கொள்வதோடு அது பற்றிய சரியான புரிதலும் அவசியம்.
அந்த வகையில் நாட்டில் அவ்வப்போது நடந்துகொண்டிருக்கும் பெண் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பிரச்சனைகள் குறித்த சிறு அலசலே, ‘சுட்டும் விழிச்சுடர்’ எனும் இப்பகுதி. நாட்டு நலன் மற்றும் பெண்களின் நலனில் அக்கறை கொள்ளும் அனைவரும் இதில் பங்குகொண்டு தங்களுடைய வெளிப்படையான கருத்துகளை முன் வைக்குமாறு அன்புடன் அழைக்கிறோம்.
முளையிலேயே கிள்ளி எறியப்பட்ட இளமொட்டு!
நாமக்கல் மாவட்டம் புதுசத்திரம் அருகே, காரைக்குறிச்சி புதூர் பகுதியை சேர்ந்த, கணவனை இழந்த, சாந்தி என்பவரின் மகள் அம்பிகா. பதினைந்து வயதான இச்சிறுமி, அப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். சென்ற வெள்ளிக் கிழமை (ஜனவரி 24, 2015) வழக்கம் போல் பள்ளிக்குச் சென்ற அம்பிகா மதிய உணவு இடைவேளையின் போது, தன் வகுப்பு அறையிலேயே, தனது துப்பட்டாவின் மூலம் தூக்கு மாட்டி தற்கொலை செய்து இறந்து விட்டார். காவல் துறை விசாரணையில், கடந்த மாதம் நடைபெற்ற அரையாண்டுத் தேர்வில், அம்பிகா என்ற அந்தச் சிறுமி, குறைந்த மதிப்பெண்கள் பெற்றிருந்ததால் மனவேதனையில் இருந்ததாகவும், மதிப்பெண் குறைந்த விரக்தியில் அவர் தற்கொலை செய்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
“மாணவியின் மரணத்துக்குச் சொல்லப்படும் காரணம் சரியானதா என்ற ஐயம் ஏற்படுகிறது. இப்படிச் சாதாரண காரணத்திற்காகத் தற்கொலை செய்துகொள்ளும் அளவிலா நம் பெண்களின் மன முதிர்ச்சி இருக்கிறது?” – இப்படியும் எண்ணம் தோன்றலாம். உண்மையில் நாட்டில் ஆங்காங்கு நடந்துகொண்டிருக்கும் சில நிகழ்வுகள் இதனை உறுதிபடுத்தத்தான் செய்கிறது. பள்ளி, வீடு தவிர வேறு வகையான வெளித்தொடர்போ அல்லது பொழுதுபோக்கோ இருக்க முடியாத, தகப்பனும் இல்லாத, ஏழ்மையின் பிடியில் இருக்கும் ஒரு சிறுமிக்கு இது சாத்தியம் என்றுதான் தோன்றுகிறது. தம் சக மாணவர்களின் முன்னிலையில் ஏற்பட்ட அவமானம் இப்படி ஒரு முடிவைத்தேடும் அளவிற்கு தூண்டியிருக்கலாம்.
இது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் சிலர் கூறியதாவது: “விரைவில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு துவங்க உள்ளதால், மாணவ, மாணவியரை பொதுத்தேர்வுக்கு தயார்படுத்தி வருகிறோம். அந்த வகையில், மாவட்டம் முழுவதும், முதல் திருப்புத் தேர்வு நடந்து வருகிறது. சம்பந்தப்பட்ட பள்ளியில் நடந்த திருப்புத் தேர்வில், இந்த மாணவி பங்கேற்க, தலைமை ஆசிரியர் அறிவழகன், வகுப்பாசிரியர் ராஜ் ஆகியோர் அனுமதிக்கவில்லை. மற்ற மாணவியர் தேர்வெழுதிய நேரத்தில், இந்த மாணவி மட்டும் வகுப்பறையில் தனிமைப்படுத்தப்பட்டார். முதல் தளத்தில் வகுப்பறை இருந்தாலும், இரண்டாம் தளத்தில் உள்ள அறையில் தான் திருப்புத் தேர்வு நடந்தது. முதல் தள வகுப்பறையில், தனிமையில் இருந்த மாணவி, மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார். பொதுத்தேர்வில், 100 சதவீதம் தேர்ச்சி காட்ட வேண்டும் என்பதற்காக, மாணவியை திருப்புத்தேர்வு உள்ளிட்ட தேர்வுகளை எழுத அனுமதிக்கவில்லை. அந்த மாணவியிடம், ‘பொதுத் தேர்வு எழுதினால், நீ பெயிலாகி விடுவாய்; அதனால் எழுத வேண்டாம்’ என ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். சில ஆசிரியர்களின் அணுகுமுறை சரியில்லாததால், மொத்த கல்வித்துறைக்கும் அவப்பெயர் ஏற்பட்டுள்ளது”.
பெண் குழந்தைகளுக்கு கல்வி அவசியம் என்று நாம் அனைவரும் உணர்ந்து அதற்கேற்றவாறு பல்வேறு திட்டப்பணிகளை நிறைவேற்ற முயற்சிக்கும் இவ்வேளையில் இது போன்ற பின்னடைவுகள் வேதனைக்குரியவை. பல செய்திகள் இது போன்று வந்த வண்ணமே உள்ளன. பத்தாம் வகுப்புத் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி காட்ட வேண்டும் என்பதற்காக மாணவர்களுக்கு அதிக அழுத்தம் கொடுக்கும் தனியார் பள்ளிகளின் வரிசையில் தற்போது அரசு பள்ளியும் இணைந்திருப்பது அதிர்ச்சியான விசயம். ஆசிரியர்களின் அதிகப்படியான கெடுபிடியின் காரணமாக மாணவர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். ‘சில ஆசிரியர்களின் அணுகுமுறை சரியில்லாதலால் மொத்த கல்வித்துறைக்கும் அவப்பெயர் ஏற்பட்டுள்ளது’ என்று பட்டும்படாமல் பதில் சொல்லி தப்பிக்க முடியாது. மேற்கொண்டு மீண்டும் ஒருமுறை இது போன்ற அவலம் நடவாமல் காக்கும் பொருட்டு, குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்பட வேண்டும். வளர் இளம் பருவத்தில், இரண்டும் கெட்டான் நிலையில் இருக்கும் மாணவர்களின் மன நிலையை அறிந்தவர்களாக ஆசிரியர்கள் இருக்க வேண்டும் என்பதற்காகவே அவர்களுக்கு ஆசிரியப் பயிற்சியின்போது மனோதத்துவ முறையிலும் குழந்தைகளிடம் நடந்துகொள்ளும் முறையை பயிற்சியளிக்கப்படுகிறது. ஆனால் ஒவ்வொரு ஆண்டும் பள்ளியிறுதித் தேர்வு சமயங்களில், இதைப்பற்றியெல்லாம் சிந்திப்பார் இருப்பதில்லை. 100 சதவீத தேர்ச்சி மட்டுமே இலக்கு என்ற வகையில், அதற்குத் தடையாக இருக்கும், படிக்க முடியாத குழந்தைகளுக்கு அதிக கவனம் செலுத்தி கற்கச் செய்வதை விடுத்து அவர்களை தேர்வு எழுத விடாமல் செய்வது எந்த விதத்தில் நியாயமாகும். இதனால் பள்ளி நிர்வாகம் மற்றும் ஆசிரியர்கள் கடமை தவறியவர்களாகிறார்கள் என்பதே சத்தியம். தகப்பன் இல்லாத ஒரு பெண் குழந்தை, வசதி வாய்ப்பு இல்லாத, அரசு பள்ளியில் படிக்கும் ஒரு பெண் குழந்தையை எந்த அளவிற்கு அழுத்தம் ஏற்படுத்தியிருந்தால் அச்சிறுமி உயிரை மாய்த்துக்கொள்ளும் அளவிற்குச் சென்றிருப்பார் என்று எண்ணிப்பார்க்க வேண்டும். கல்வித் துறையும், அரசும் இனிமேலாவது விழித்துக்கொண்டு இப்பிரச்சனைக்கு முழுமையான தீர்வு காண வேண்டும். சம்பந்தப்பட்டவர்களுக்கு கடுமையான தண்டனையும் வழங்கி, இது போன்ற எண்ணம் இன்னொரு முறை மற்ற ஆசிரியருக்கு தோன்றாத வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியதும் அவசியம்.
இது குறித்த தங்கள் கருத்துகளை பதிவு செய்ய வேண்டுகிறேன் நண்பர்களே. நன்றி.
அருமையான, தேவையான கட்டுரை. சான்றுகளும் நன்று.
இந்த கருவிலேயே அழிக்கும் சூழலும், பல்லாண்டுகளாக, தங்கு தடையின்றி காணப்படுகிறது, சட்டவிரோதமாக இருந்தாலும். பெண்களின் பாதுகாப்பற்ற நிலையை காரணம் சொல்ல இயலாது.இதற்குக் காரணம், பெண்களே பிற்கால வரததட்சிணை கொடுமைக்கு அச்சம் கொள்வதும், வீட்டில் பெரியவர்கள் பெண் குழந்தைகளை கரிச்சுக்கொட்டுவது தான். பல வட இந்திய அலுவலகங்களில் பெண் ஊழியர்களுடன் அவர்களின் நலன் பொருட்டு பேசி வந்ததால், எனக்கு பல கசப்பான உண்மைகளும், ரகசியங்களும் தெரிந்து நடவடிக்கை எடுக்க வேண்டியிருந்தது. படித்த மேல்த்தட்டு மக்களிடையே பெண் சிசுஹத்தி நடந்து வந்தது. சில டாக்டர்கள் தான் ரகசியமாக காசு வாங்கிக்கொண்டு சட்டவிரோதமாக நடந்தனர். நான் கேஸ் போடுவதாக பயமுறுத்த வேண்டியிருந்தது… இந்த 18 வயது விவகாரம் எளிதில் தீராது, அதுவும் காதல் வயப்பட்டால். நல்ல சமூகங்களில் பெற்றோரே பெண்ணின் 18 வயது வரை திருமணம் செய்ய விரும்பமாட்டார்கள். விழிப்புணர்வுடன், சட்ட அறிமுகமும் தேவை.
அந்த தற்கொலை விவகாரம் சிக்கலானது. வல்லமை வாசகர்கள் விரும்பினால், மனோதத்துவரீதியில் அதை விவாதிக்கிறேன். ‘உளவியல்’ என்ற சொல்லை நான் ஏற்கவில்லை.
அன்பின் இ ஐயா,
தங்களுடைய தெளிவான விளக்கத்திற்கு நன்றி. ஐயா தங்களுடைய ஒரு சில அனுபவங்கள் பகிர்வதால் படிப்பினையாகும் வாய்ப்பும் இருக்கும் என்று நம்புகிறேன். சட்ட அறிமுகம் குறித்து நம் சட்ட வல்லுநர்கள் தங்கள் கருத்தை முன்வைத்தால் பல வகையில் பயனுள்ளதாக அமையும்.
அன்புடன்
பவளா
நம் கண் முன் நடக்கும் தவறுகளை தட்டிக் கேட்கவோ தடுக்கவோ முடியாமல் இருக்கும்போது, அடுத்தவர் ஒருவர் நம் எண்ணத்தையும் குமுறலையும் பிரதிபலிக்கும் வண்ணம் தட்டிக்கேட்கும் குரலை கேட்கும்போது நமக்கு உண்டாகும் உணர்வுதான் இந்தக்கட்டுரையை படிக்கும் போது எனக்கு உண்டானது.
பெண் குழந்தைகளை இந்தியர் விரும்பாமல் போவதற்கு முதலாவதாகவும் முக்கியமானதாகவும் இருக்கும் காரணம் திருமனம் செய்து வைப்பது,அதற்கு உண்டாகும் செலவு. இரண்டாவது படிக்கவைத்தாலும் அதனால் உண்டாகும் பலன் முழுக்க கணவனுக்கே போய் சேர்ந்து விடுவது. ஆக நம் கலாசார தவறு தான் முக்கிய இடம் வகிக்கிறது. இன்று ஒரு குழந்தை எனும் கட்டுப்பாடுக்கு வந்துவிட்டார்கள். அந்த ஒரு குழந்தை ஆணாக இருக்கவேண்டும்,அவனை நன்கு படிக்க வைக்கவேண்டும் இது மட்டுமே எண்ணமாகிவிட்டது.இன்னும் ஒருவகையில் நமக்கு தெளிவு கிடைப்பது எதில் எனில் பெண்ணே பெண் குழந்தையை விரும்புவதில்லை.
உலகெங்கும் பார்த்தோமென்றால் அந்தந்த நாட்டு மக்களிடம்,வாழ்க்கை முறை,பொருளாதாரம் யாவும் ஒரே சீராக இருக்கும். அதனால் அங்கு ஏழை பணக்காரன் எனும் பேதமில்லை. ஆனால் நம் இந்திய துர்அதிர்ஷ்டம் பணக்காரன் பணக்காரணாகவும் ஏழை ஏழையாகவும் தலைமுறைகள் தாண்டியும் தொடர்கிறது.
இந்த தலைமுறை பிரச்சினையை அரசாங்கள் கண்டுகொள்வதில்லை,பெண் குழந்தையின் பிறப்பை குடும்பத்தாரும் விரும்புவதில்லை.
அரசாங்கங்களை நம்பி பயன் இல்லை என்பது தெளிவானது.ஆனால் பெண் குழந்தையின் பிறப்பு வளர்ப்பு நம் கையில் இருக்கிறது.
எனக்கு இரண்டு குழந்தைகள் இரண்டும் பெண் குழந்தைகள்.
//1990 – 2010 இடையே சுமார் ஒரு கோடி பெண் சிசுக்கள் கருவிலேயே கலைக்கப்பட்டிருக்கின்றன//
nearly 1% of total population? My God!
கட்டுரை படித்தேன்..என் உள்ளே இருந்த மிகப்பெரிய பலம் ஒன்று பலவீனமானதைப் போன்ற ஒரு உணர்வு.
இப்போது காலம்போகும் நிலையில் கருத்தரிப்பதே ஒரு கஷ்டமான நிலையாக இளைஞர்கள் நினைக்க ஆரம்பித்துள்ளனராகத் தெரிகிறது. அதிலும் பெண்கள் ஆர்வம் காட்டுவதாக எங்களுக்கு செய்திகள் உள்ளன.
ஆனால் பெண் சிசுக்கொலை போன்றவை கிராமங்களிலும், ஏழ்மை குடும்பங்களிலும்தான் ஏராளமாக நடந்து வருகிறது. ஒரு சில சாதிகளில் பெண் பிறந்தால் செலவு என்ற நிலையும் உண்டு. இன்றைய தமிழகத்தில் பெண் சமுதாயம் மட்டுமே வாழ்க்கையை வாழ்க்கையாகப் பார்த்து வேலை செய்து சிரமப்பட்டு முன்னேற்றுகின்றார்கள். ஆண்களில் பாதிக்கு மேல் டாஸ்மாக் கடை வாசலில் தவம் கிடக்கிறார்கள். இது நிதர்சனம். கடந்த பத்தாண்டுகளில் முன்னை விட 23% அதிக ஆண்கள் குடிப்போதைக்கு அடிமையாகக் கிடக்கிறார்கள்.
கல்விவிஷயத்தைப் பொறுத்தவரை மாணவர்களாகட்டும் மாணவிகளாகட்டும் கல்விச் சுமையைத் தாங்காமல் தற்கொலை செய்வது ஆந்திரத்தில் மிக அதிகம். ஒரு மலையாள மாணவன் சமீபத்தில் அப்படி தற்கோலை செய்த போது அந்தப்பள்ளி மீது நடவடிக்கை எடுக்கப்பட உதவியவன் என்ற ஒரு அனுபவத்தில் சொல்கிறேன். ஆனால் கல்விக் கொள்கை மிகக் கடினமான முறையில் இருப்பதால்தான் இந்த வினை. பத்தாம் வகுப்பில் நிறைய மார்க் எடுப்பது ஒன்றே மிகப் பெரிய லட்சியமாகவும், அப்படிஎடுக்காவிட்டால் இந்தவாழ்வே வீண் என்றும் பெற்றவர்களும் ஆசிரியர்களும் சேர்ந்து சதி செய்வதாகத்தான் எனக்குப் படுகிறது. பெற்றவர்களுக்கு இந்தத் தற்கொலை விஷயங்களில் பெரும்பங்கு உண்டு (பொதுவாக).
சரி, தீர்வு என்ன என்பதையும் நீங்களே சொல்லுங்கள். இம்மாதிரி நடக்காமல் இனியாவது இருக்கவேண்டும் என்பதை பலர் வெளியே சொன்னாலும் இது நின்றபாடில்லை எனும்போது கடினமான சட்டங்கள், சட்டங்களை முறையாக அமுல்படுத்துவது, பெண்களிடையே எடுத்துச் செல்வது, பெரும்பான்மை ஆண்களின் மிகப் பெரிய உதவிகள் செய்வது, பெண் பெற்றெடுத்தால் கவர்ச்சிகரமான உதவித்தொகைகள், இவை போன்றவை தேவை. இவை எல்லாவற்றையும் விட கருத்தரிப்பின் போது ஸ்கேன் செய்வது தவறு என்கிற சட்டத்தை மிகச் சரியாக அமல்படுத்தவேண்டும்.பெண் பிள்ளைகள் பள்ளியில் படிக்கும்போது ஆறுதலான வார்த்தைகளாக ஆசிரியர்கள் கூறவேண்டும் என்பதைக் கட்டாயமாக வலியுறுத்தல் செய்யவேண்டும்.
என்ன செய்யலாம், என்ன செய்தால் இவை நிற்கும் என்ற பலமான தீர்வு தேவை.
அன்புடன்
திவாகர்
அன்பின் திரு அமீர்,
உண்மை. பெண்களின் தனிப்பட்ட முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு இது போன்று சிறு களைகளை நீக்க வேண்டியதே இன்றைய முக்கிய தேவை. அதற்கான ஆக்கப்பூர்வமான பணிகளை நிறைவேற்றுவதில் நம் எண்ணம் செயல்பட்டால் போதும். அடுத்த பத்தாண்டுகளில் நிலைமை குறிப்பிடும் வகையில் மாற்றம் பெறும். நன்றி.
விழிப்புணர்வு ஏற்படுத்தக்கூடிய நல்லதொரு பகிர்விற்கு நன்றி திரு திவாகர்ஜி.
https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=nbBL4QcSolU
[ பெண் அடிமை இல்லை தமிழ்த் திரைப்படம்] [2 hour 11 min]
சி. ஜெயபாரதன்
பெண் அடிமை இல்லை .
சி. ஜெ.