ஸ்னேக்ஸ் அண்ட் லேடர்ஸ் – வலைத்தொடர் விமர்சனம்

அண்ணாகண்ணன்
ஸ்னேக்ஸ் அண்ட் லேடர்ஸ் என்ற வலைத்தொடரை, அமேசான் பிரைமில் பார்த்தேன். இது சிறுவர்களை முதன்மையாக வைத்து எடுக்கப்பட்ட வலைத்தொடர். சிறுவர்களுக்கான வலைத்தொடர் எனச் சொல்ல முடியாது.
பள்ளிச் சிறுவர்கள், துப்பாக்கியால் சுடுவதும் பிணத்தை மறைத்து வைப்பதும் சாட்சியங்களை அழிப்பதும் பிணத்தைக் குழிதோண்டிப் புதைப்பதும் சொந்த அப்பாவையே தலையில் அடித்து அறையில் கட்டிப் போட்டு அடைத்து வைப்பதும் கார் ஓட்டுவதும் கண்டிப்புக்கும் தண்டனைக்கும் உரிய குற்றங்கள்.
பள்ளி ஆய்வகத்திலிருந்து குளோரோபார்ம் எடுத்து வந்து, மயங்க வைப்பது ஓரளவு லாஜிக்குடன் இருக்கிறது. ஆனால், திருடனிடம் கைப்பற்றிய நகைகளைக் காவல் துறை மூலம் உரியவர்களிடம் கொண்டு சேர்க்காமல், வெள்ள நிவாரணத்துக்குச் சேர்ப்பது தவறு.
ஒரு தவறு நடந்தால், உரிய வழியில் தீர்க்க வேண்டுமே தவிர, குறுக்கு வழிகளில் தீர்க்க முயலக் கூடாது. அப்படி முயன்றால் அதற்கு உரிய விளைவுகளைச் சந்திக்க வேண்டும் என்றாவது காட்டியிருக்கலாம். இதில் இறுதியில் பிள்ளைகள் எந்தச் சிக்கலிலும் மாட்டாமல் அவரவர் இயல்பாகப் படிக்கிறார்கள்.
இதைப் பார்க்கும் சிறுவர்கள் என்ன நினைப்பார்கள்? இவ்வளவு தவறுகள் செய்தாலும் இறுதியில் எதுவுமே நடவாதது போல் தப்பிவிடலாம் என நினைப்பார்களா? மாட்டார்களா?
சிறுவர்கள் புத்திசாலிகளாக இருக்க வேண்டும். தொழில்நுட்பங்களைக் கற்க வேண்டும். சாகசங்கள் கூடச் செய்யலாம். ஆனால், அறத்தோடு கூடிய நெறிமுறைகளுடன் வளர வேண்டும். தவறுகளைக் காணும்போது முறையாகப் புகார் தெரிவிக்க வேண்டும். குற்றவாளிகளைச் சிக்க வைக்கலாம். அதே நேரம் தங்களையும் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். தாங்களே தவறு செய்யும் பட்சத்தில் அதை ஒப்புக்கொண்டு தண்டனைகளை ஏற்க வேண்டும். அந்தத் தவறு மீண்டும் நிகழாவண்ணம் திருந்த வேண்டும். இந்த அடிப்படையோடு எடுத்திருந்தால், படம் வலிமையாக இருந்திருக்கும்.
காட்சி ஊடகங்கள் அதிகத் தாக்கம் உள்ளவை. அவ்வாறே செய்து பார்க்கும் ஆவலைத் தூண்டுபவை. அதிலும் சிறுவர்களை வைத்து எடுக்கப்படும் படங்கள், வலைத்தொடர்கள், அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். சிறுவர்கள் இவ்வாறு செய்வது தவறில்லை என நினைத்தால், இதே போல் எங்காவது செய்து பார்க்க நினைத்தால், செய்தாலும் தப்பிவிடலாம் என நினைத்தால் விளைவுகள் கடுமையாக இருக்கும். வலைத்தொடரை உருவாக்கிய கார்த்திக் சுப்புராஜ், இவற்றை யோசிக்கவில்லையா?
சிறுவர்கள் ஐவரும் நன்றாக நடித்திருக்கிறார்கள். வில்லனாக நடித்திருக்கும் நவீன் சந்திரா, தன் இரட்டை முகத்தைக் காட்டி மிரட்டியிருக்கிறார். காவல் துறை உதவி ஆய்வாளராக வரும் நந்தா துரைராஜ், சிறுவனுக்கு அப்பாவாக நடித்திருக்கும் மனோஜ் பாரதிராஜா உள்ளிட்ட பலரும் சிறப்பாகக் காட்டுகிறார். கதை நேர்த்தியாக அமைந்திருந்தால், வலைத்தொடர் இன்னும் வலிமையாக, வசீகரமாக இருந்திருக்கும்.