அக இலக்கியச் சிறுபாத்திரங்கள்- 6 (ஏவலிளையர்)

0

ச.கண்மணி கணேசன்,
முதல்வர் & தமிழ்த்துறைத் தலைவர் (ப.நி.),
ஸ்ரீகாளீஸ்வரி கல்லூரி, சிவகாசி.

முன்னுரை

ஏவல் இளையர் என்னும் குழுப்பாத்திரம் அகஇலக்கியச் சிறுபாத்திரங்களுள் ஒருமை விகுதி பெறும் தனிப்பாத்திரமாக இடம்பெறுவதில்லை. அகஇலக்கியம் மட்டுமின்றிப் புறஇலக்கியத்திலும் இப்பாத்திரம் பற்றிய குறிப்புகளைக் காண இயல்கிறது.

இருவேறுபொருள் தரும் ‘இளைய-’ எனும் சொல்தொகுதி

தொகைநூல்களில் இளையர் என்னும் சொல் இரண்டு பொருட் பரிமாணங்களுக்கு உரியதாகக் காணப்படுகிறது. வயதில் மூத்தவரோடு உறழ்ந்து சுட்டப்படும் ‘இளையர்’, ‘இளமையை’, ‘இளையோர்’ ஆகிய பெயர்ச்சொற்கள் உள்ளன (பெரும்.- 268; பொருநர்.- 187; சிறு.- 232; புறம்.- 213, 254; பரி.- 6- அடி- 27; 10; நற்.- 111, 207; அகம்.- 30, 348; குறுந்.- 61, 246; ஐங்.- 198; கலித்.- 83). உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னியை;

“இளையோன் சிறுவன்” (பொருநர்.-அடி- 130)

என்று குறிப்பிடுகிறார் புலவர். அகப்பாடல் தலைவனும் தன் இளமை காரணமாக இளையோன் என்று அழைக்கப்படுவது உண்டு (அகம்.- 203). வயதால் இளைய பெண்பாலினரைச் சுட்டும் ‘இளையள்’, ‘இளையோள்’ ஆகிய சொற்கள் அக இலக்கியத் தலைவியைக் குறிப்பதாகப் பயின்று வருகின்றன (நற்.- 143, 201; ஐங்.- 256; குறுந்.- 119; அகம்.- 193, 314, 319; ). பரத்தையைச் சுட்டும் ‘இளையோள்’ என்ற சொல்லும் உளது (நற்.- 320). புறநானூற்றுத் தலைவரின் மனைவியரும் ‘இளையோய்’ என்றும் ‘இளையோள்’ என்றும் அழைக்கப்படுகின்றனர் (பா.- 144, 340, 350). ‘இளையோர்’ என்னும் சொல் தலைவியையும் அவளது தோழியர் கூட்டத்தையும் ஒருங்கே குறிப்பதாக அமைந்துள்ளது (நற்.- 68; அகம்.- 90, 254, 370). குறிஞ்சிப்பாட்டின் தலைவன்; தலைவியையும், தோழியையும் ஒருங்கு ‘இளையீர்’ என்று அழைக்கிறான் (அடி- 141).

இத்தரவுகளினின்று மாறுபட்டு ஏவலர்களைக் குறிக்கும் ‘இளையர்’ மட்டுமே இங்கு கட்டுரைப்பொருள்  ஆகின்றனர் .

புறப்பாடல்களில் ஏவல் இளையர்

பாணர் குழுவில் இளையர் என்றே அழைக்கப்படும் ஏவலர் இருந்தனர் (சிறு.- 33; பதிற்.- 40, 41, 48, 51). வையைப் புதுப்புனலில் ஆட எழுந்த கூட்டத்திற்குள் முண்டியடித்துச் செல்ல இயலாத ஏவலரே அப்பாட்டில்

“சேரி இளையர் செலவரு நிலையர்” (பரி.- 6- அடி- 38)

என்று விதந்து சொல்லப்படுகின்றனர்.

வீரரைக் குறிக்கும் ‘இளையர்’, ‘இளையோர்’ என்ற பயன்பாடும் உள்ளன. (புறம்.- 57, 150,  242, 253, 254, 263, 286, 353; பதிற்.- 54, 71). அவ்வாறு அழைக்கப்பட்ட காரணம் அவர்கள் தலைவருக்கு அடங்க வேண்டியவராய் இருந்தமை எனலாம். அதனால்தான்

“ஏவல் வியங்கொண்டு இளையரொடு எழுதரும்” (பதிற்.- 54)

என்று பாடப்பட்டுள்ளது.

“யான் கண்டனையர் என்இளையரும் வேந்தனும்” (புறம்.- 191)

என்ற பிசிராந்தையார் கூற்றில் இளையர் ஏவலரையே குறிக்கிறது.

அகப்பாடல்களில் இளையர்

“ஏவல் இளையர்” (அகம்.- 342; நற்.- 389)

என்ற தொடரில் இளையர் ஏவலுக்கு உரியவர் என்ற செய்தி வெளிப்படை.

பலதிறத்தினராகிய இளையர்

இளையர் வேந்தரிடமும், வேளிரிடமும், திணைமாந்தரிடமும் பணியாற்றினர். ஆறலைக்கள்வரும் இளையராக மறவர் தலைவருடன் சேர்ந்து பணியாற்றினர். ஊராட்சியில் பணியமர்த்தப்பட்ட காவலரும் இளையரே.

“ஏவல் இளையர் தலைவன்” (அகம்.- 342)

எனப் பாண்டியனும் அவனிடம் பணியாற்றிய ஏவலரும் சுட்டப்  படுகின்றனர்.

சோழவேந்தன் அழிசி ஏவலர் கூட்டத்தை உடையவன் ஆதலால்;

“நிரைய ஒள்வாள் இளையர் பெருமகன்” (குறுந்.- 258)

என்று சுட்டிப் பாடுகிறார் புலவர்.

“வல்வில் இளையர் பெருமகன் நள்ளி” (அகம்.- 152)

என வேளிர்குலத் தோன்றலாகிய நள்ளியும் அவனது ஏவலரும் பாடலில் இடம்பெறுகின்றனர்.

வேட்டையைத் தவிர வேறேதும் தெரியாததால் புல்லியின் ஏவலர் கல்லா இளையர் என்று அழைக்கப்பட்டனர்.

“கல்லா இளையர் பெருமகன் புல்லி” (அகம்.- 83)

எனக் குறிப்பிடப்படுவது காண்க.  மழை பொய்த்த மூங்கில் காட்டுவழியாகச் செல்லும் வணிகச்சாத்துகளைக் கொன்று; கொள்ளையில் ஈடுபடும் கொடுமையான வாழ்க்கை உடைய பாலைநிலத்து மறவரை இளையர் என்றும்; அவரது தலைவரை;

“வல்வில் இளையர் தலைவர்” (அகம்.- 245)

என்றும் பாடியுள்ளமை காண்க. அணிகலன்கள் இல்லையெனினும் வழிச்செல்வோரைக் கொன்று பறவைகளுக்கு இரையாக்கும்;

“கல்லா இளையர் கலித்த கவலை” (அகம்.- 375)

என்ற பாடலடியிலும் ஆறலைக் கள்வர் இளையர் என்றே அழைக்கப்  படுகின்றனர்.

இரவுக்குறியின் ஏதத்தை எடுத்துரைக்கும் தலைவி;

“துஞ்சாக் கண்ணர் காவலர் கடுகுவர்
இலங்குவேல் இளையர் துஞ்சின்” (அகம்.- 122)

நாய் குரைக்கும் என்கிறாள். தூங்காத ஊர்காவலரை வேலேந்திய இளையராகக் காட்டுகிறது இப்பாடல்.

இளையரும் ஆயுதமும் 

இளையர் ஆயுதமேந்தியவராகவே அகப்பாடல்களில் சித்தரிக்கப்படுகின்றனர்.

“வெல்வேல் இளையர்” (அகம்.- 64, 104),

“ஒள்வாள் இளையர்” (குறுந்.- 258),

“வல்வில் இளையர்” (குறுந்.- 275; அகம். – 152, 245),

“இலங்குவேல் இளையர்” (அகம்.- 122),

“திருந்துவேல் இளையர்” (அகம்.- 345)

என; ஆயுதத் தொடர்போடு அவர்களது பணி இருந்தது என்பதை நிறுவுதற்கேற்ற தொடர்கள் பலவாக உள்ளன.

இளையரின் பணி

தலைவர்களிடம் மெய்க் காப்பாளராய்ப் பணியாற்றி; அவருடன் வெட்சிப் போரிலும், கரந்தைப் போரிலும் ஈடுபட்டனர் இளையர்.  காட்டகச் சிறுகுடியினர் ஏவல் இளையராய்த் தலைவருடன் வேட்டைக்குச் சென்றனர்.

“……………………..பொறாஅர்
விண்பெறக் கலித்த திண்பிடி ஒள்வாட்
புனிற்றான் தரவின் இளையர் பெருமகன்
தொகுபோர்ச் சோழன் ” (அகம்.- 338)

எனும் பாடலடிகளில் சோழனுக்காக அவனது இளையர் பொறுக்க மாட்டாதவராய்ப் பகைப்புலத்தினின்று ஆநிரைகளைக் கவர்ந்து வந்தமை விளக்கம் பெறுகிறது. எனவே அவர்கள் வெட்சி வீரர்கள்.

தலைவன் சென்றிருக்கும் காட்டுவழி பற்றிக் கவலும் தலைவி; பெண்யானை துயில்வது போல் தோற்றமளிக்கும் சிறுகுன்றுகளின் மருங்கில்; நடப்பட்டவை போலக் காட்சியளிக்கும் இயற்கையான நெடுங்கற்களின் பரந்த இடத்தில்; நிரை கவர்ந்த வெட்சி வீரருடன் நடந்த போரில்  வீரமரணமடைந்தவர்களின் பெயர்களை எழுதி; மணமிகுந்த அரைத்த மஞ்சளைப் பூசி வழிபட்டு; சிவந்த கரந்தைப் பூக்களைத் தம் அம்புகளால் அறுத்தெடுத்த ஆத்தி நார்களில் கட்டிக் கண்ணியாக அணிந்து; வண்டுகள் ரீங்காரத்துடன் மொய்க்கக்; கழலணிந்து; நிரைமீட்கும்

“இளையர் பதிபெயரும் அரும்சுரம்” (அகம்.- 269)

என்கிறாள். எனவே இங்கு சுட்டப்படும் இளையர் கரந்தைவீரர் ஆகின்றனர்.

இரவுக்குறியின் ஏதத்தைச்  சிறைப்புறமாக நின்ற தலைமகனுக்குச் சொல்லுவாளாய்த் தலைவி; பெண்பன்றி தன் குட்டிகளை வேட்டுவரிடம்  இருந்து காத்துச் சென்றமையை;

“இளையர் எய்துதல் மயக்கி கிளையொடு” (அகம்.- 248)

போனது என்கிறாள். இதனால் இங்கு இளையர் வேட்டுவர் என்பது தெளிவு. வேட்டுவர் எழுப்பிய ஆரவாரத்தில் மிரண்டு காட்டிலிருந்து ஒதுங்கிய ஆமான்கன்று; சிறுகுடியுள் நுழைந்து; அங்கிருந்த இளையரால் பேணப்பட;  அவரோடு கலந்துவிட்டது என்று சொல்லும் பாடலில்;

“இளையர் ஓம்ப மரீஇ அவண் நயந்து” (குறுந்.- 322)

உறைந்தது என்பதால் இளையர் வேட்டுவச் சிறுகுடியினர் எனப்பெற்றோம். இனிய பலாச் சுளைகளில் விளைந்த தேனைப் பருகிச்; சீழ்க்கை ஒலியுடன் செல்லும் அம்பினைச் செலுத்தும் ஏவலருடன் சேர்ந்து முள்ளம்பன்றியை வீழ்த்தும் வேட்டுவனை;

“வீளை அம்பின் இளையரொடு மாந்தி” (அகம்.- 182)

எனக் காட்சிப்படுத்துகிறது பாடல். இவ்இளையர் வேட்டுவனின் ஏவலர் ஆவர். இவ்வாறு வேட்டுவனுக்கு அமைந்த ஏவலர் பற்றி நற். 389ம் பாடலும் கூறுகிறது.

அகப்பாடல் துறைகளும் இளையரும்

முதன்முதலில் தலைவியைச் சந்திக்கும் போதும், குறியிடத்தில் அவளைச் சந்திக்கச் செல்லும் போதும், வரைதல் வேண்டித் தலைவியின் தமரைப் பார்க்கச் செல்லும் போதும், கற்புக் காலத்தில் வேந்தர்க்காக வினைவயிற் பிரிந்து செல்லும் போதும், பொருள் வயிற்பிரியும் போதும் தலைவனுடன் இளையர் செல்வதுண்டு. தலைவியின் அன்பு கிடைக்கப்  பெறாத தலைவன் மடலேறித் தன் வேட்கையை ஊரார்க்குப் புலப்படுத்தும் முன்னர் தன் இளையரிடம் புலம்பித் தெரிவிப்பதுண்டு.

தலைவி ஆயத்துடன் வண்டல்மனை இளைத்து ஆடிக் கொண்டு இருந்த போது தேரில் வந்த தலைவன்; ஏவலருடன் தேரைத் தூர நிறுத்தி விட்டுத் தலைவியின் அருகே வந்து அம்மனையைப் பாராட்டி; அவள் பதில் சொல்லாதிருக்க மீண்டு சென்றான்.

“கொடுஞ்சி நெடுந்தேர் இளையரொடு நீக்கி” (அகம்.- 250)

அவன் தலைவியுடன் சொல்லாடியமை நோக்கத்தக்கது.

குறியிடத்துத் தலைவியைக் காணவரும் போது;

“கவர்பரி நெடுந்தேர் மணியும் இசைக்கும்
பெயர்பட இயங்கிய இளையரும் ஒலிப்பர்” (நற்.- 307)

எனத் தலைவனின் தேர்மணி ஓசையுடன்; ஏவலரின் கலகலப்பான பேச்சொலியும் கேட்பது பற்றித் தலைவியிடம் உரைக்கிறாள் தோழி.

தலைவியைப் பெண்கேட்டு வரும் தலைவன் ஆரவாரம் செய்யும் ஏவலரோடு தேரேறிப் பகலில் வந்துள்ளான்; அதனால் இனி ஊராரின் வாயிலிருந்து அலர் எழாது என்பதை;

“ஒல்லென ஒலிக்கும் இளையரொடு வல்வாய்” (அகம்.- 160)

என்று தொடர்கிறாள் தோழி.

வினைவயிற் பிரிந்த தலைவனுக்காகக் காத்திருக்கும் தலைவியிடம்;

“நின் பல்லிருங் கதுப்பின்
குவளையொடு தொடுத்த நறுவீ முல்லை
தளையவிழ் அலரித் தண்ணறுங் கோதை
இளையரும் சூடி வந்தனர் நமரும்
விரியுளை நன்மா கடைஇப்
பரியாது வருவர் இப்பனிபடு நாளே” (நற்.- 367)

என்று தோழி இளையர் முதலில் வந்து சேர்ந்து விட்டதை உரைக்கிறாள். குவளையும், முல்லையும், அலரியும் விரவி நீ சூடியிருப்பது போலவே ஏவலரும் சூடிக்கொண்டு வந்துவிட்டனர் ஆதலால்; இனித் தலைவன் வந்துசேர்வது ஒருதலை என்பது பொருள். இது போன்ற சூழலில் ஏவலிளையர் இடம் பெறும் பாடல்கள் பல உள (அகம்.- 104; குறுந்.- 275)

பொருளுக்காகப் பிரிந்து செல்லும் தலைவனுடன் ஏவலரும் செல்வதைத்;

“……………………………………..தம்மொடு
திருந்துவேல் இளையர் சுரும்புண மலைமார்” (அகம்.- 345)

என்று எடுத்துக்கூறுகிறாள் தலைவி. ஏவலர் தம் தலையில் தரித்துக் கொள்ள ஏதுவாக நுணாமரக் கொம்புகள் தளிர்க்கும்படி மழை பெய்து குளிர்ச்சி நிலவட்டும் என்பது அவளது எண்ண வெளிப்பாடு.

மடலேறி வெற்றிகரமாகத் தலைவியை மணந்த தலைவன் தானுற்ற காதல்நோய் பற்றிப் பின்னர் உரைக்கும் போது;

“இளையாரும் ஏதிலவரும் உளைய யான்
உற்றது உசாவும் துணை” (கலித். – 138)

என்றிருந்த தன் நிலையை எடுத்துரைக்கிறான். தன் மனவுளைச்சலை இளையரிடம் எடுத்துச் சொல்லி ஆற்ற முற்பட்டமை இப்பாடலடியில் புலனாகிறது.

தலைவன் இளையரை ஏவும் முறை

வினைமுடித்து மீளும் தலைவன் உடன்வரும் இளையரை மூன்று நிலைகளில் ஏவுகின்றான். தனக்கு முன்னரே சென்று தலைவியிடம் தன் வருகையை உணர்த்த விரைந்து செல்லச் சொல்வதுண்டு.

“ஏகுமின் என்ற இளையர் வல்லே ” (நற்.- 42)

விரைந்து சென்று தலைவிக்குத் தலைவன் வருகையை  அறிவித்ததால்; அவள் தன் கூந்தலைப் புனைந்து; ஒப்பனை செய்து கொண்டு காத்து  இருந்தாள் என்று முன்னர் நடந்ததை நினைவு கூரும் தலைவன் மீண்டும் அதுபோலவே ஏவலரை முன்னனுப்ப முடிவு செய்கிறான்.

 தானும் தன் இளையரும் ஒருங்கு இணைந்து ஊர் திரும்புவதும் உண்டு. “இளையர் ஏகுவனர் பரிப்ப வளைஎனக்” (நற்.- 161) காட்டுவழியில் தம் வீரர் ஆங்காங்குத் தங்கிச் செல்லத் தலைவனும் அவருடன் சேர்ந்தே வந்தான் .

‘இளையர் தேருக்கு முன்னர் ஓடிச் செல்ல வேண்டியிருப்பதால்; அவர்கள் இடையிடையே காலாற அமர்ந்து இளைப்பாறி வரட்டும். நீ தேரை விரைந்து செலுத்து; நாம் முன்னர் சென்று சேர்வோம்’ எனத் தலைவன் தான் முதலில் தலைவியிடம் சேர முனைவதும் உண்டு.

“விரைபரி வருந்திய வீங்குசெலல் இளையர்
அரைசெறி கச்சை யாப்பு அழித்து அசைஇ” (நற்.- 21)

என்ற பாடல் வரிகள் வேகமாக ஓடிவந்த ஏவலர் தம் அரைக்கச்சையை நெகிழ்த்துவிட்டு மூச்சிரைக்க ஓய்வெடுக்க முனைவதைக் காட்சிப்படுத்துகிறது.

ஏவல் இளையர் பாத்திரத்தின் பயன்பாடு தலைவனின் பெருந்தன்மையையும், நாகரிக மேம்பாட்டினையும் புலப்படுத்தவும், அவனுக்குத் தலைவிமேல் இருந்த காதலின் மிகுதியைப் புரியவைக்கவும் இளையர் பாத்திரம் கருவியாகப் பயன்பட்டுள்ளது.

தலைவியைச் சந்திக்கும் போதெல்லாம் தேரையும் ஏவலரையும் சேய்மையில் நிறுத்திவிட்டு வரும் தலைவனின் பண்பைத் தோழி பாராட்டுகிறாள்.

“கடுந்தேர் இளையரொடு நீக்கி நின்ற” (அகம்.- 310)

நாகரிகம் அவனது பாத்திரப்படைப்பை உயர்த்திக் காட்டுகிறது. உடன்போக ஊக்கும் தோழி; பிற்றைநாளில் உனக்கு மனைவியான  இவளோடு; ஏவலரும் குதிரையும் ஒருங்கே எம் இல் வந்து விருந்துண்டு செல்க என்கிறாள் (அகம்.- 300). அங்ஙனம் விருந்துண்ணுங்கால் ஏவலரை முதலில் உண்ணவைத்து அதன் பின்னர் அவன் விருந்துண்பான் என்று கற்பனை செய்து கூறுகிறாள்.

“இளையர் அருந்த பின்றை நீயும்” (அகம்.- 394)

விருந்தயரலாம் என்பது  தோழியின் கூற்றாயினும் தலைவனின் பெருந்தன்மை அறிந்து அவள் பேசுவதாகக் கொள்வதில் தவறில்லை.

தலைவிமேல் அவனுக்கு இருந்த வேட்கையால் தான்; காட்டுவழியில் தேருக்கு முன்னால் ஓடிச்செல்லும் ஏவல் இளையரைக் கண்டு இரக்கம் மேலோங்கினும்;

“இளையர் ஏகுவனர் பரிய விரிஉளை”க்  (அகம்.- 375)

குதிரையின் கடிவாளத்தைத் தேர்ப்பாகன் வலிந்து பிடித்துச் செலுத்த விரைகிறான்.

முடிவுரை

இளையர் எப்போதும் ஆயுதமேந்தி வேந்தரிடமும், வேளிரிடமும், திணைமாந்தரிடமும் பணியாற்றினர். ஆறலைக்கள்வரும் இளையராக மறவர் தலைவருடன் சேர்ந்து பணியாற்றினர். ஊராட்சியில் பணிசெய்த காவலரும் இளையரே. தலைவர்க்கு உறுதுணையாய் வெட்சிப்போரிலும், கரந்தைப்போரிலும் ஈடுபட்டனர் இளையர். காட்டகச் சிறுகுடியினர் ஏவல் இளையராய்த் தலைவருடன் வேட்டைக்குச் சென்றனர்.

முதன்முதலில் தலைவியைச் சந்திக்கும் போதும், குறியிடத்தில் அவளைச் சந்திக்கச் செல்லும் போதும், வரைதல் வேண்டித் தலைவியின் தமரைப் பார்க்கச் செல்லும் போதும், கற்புக் காலத்தில் வேந்தர்க்காக வினைவயிற் பிரிந்து செல்லும் போதும், பொருள் வயிற்பிரியும் போதும் தலைவனுடன் இளையர் செல்வதுண்டு. தலைவியின் அன்பு கிடைக்கப் பெறாத தலைவன் மடலேறித் தன் வேட்கையை ஊரார்க்குப் புலப்படுத்தும் முன்னர் தன் இளையரிடம் புலம்பித் தெரிவிப்பதுண்டு. வினைமுடித்து மீளும் தலைவன் இளையரைத் தனக்கு முன்னரோ; தன்னுடன் சேர்ந்தோ அல்லது தனக்குப் பின்னரோ வரச்சொல்லி ஏவுவதுண்டு. தலைவனின் பெருந்தன்மையையும், நாகரிக மேம்பாட்டினையும் புலப்படுத்தவும், அவனுக்குத் தலைவிமேல் இருந்த காதலின் மிகுதியைப் புரியவைக்கவும் இளையர் பாத்திரம் கருவியாகப் பயன்பட்டுள்ளது

ஏவல் இளையர் என்னும் குழுப்பாத்திரம் ஒருமை விகுதிபெற்றுத் தனிப்பாத்திரமாக இடம்பெறுவதில்லை. புறஇலக்கியத்திலும் இப்பாத்திரம் பற்றிய குறிப்புகளைக் காண இயல்கிறது. தலைவனின் முழுமையான பாத்திரப்படைப்புக்கு ஏவல்இளையர் எனும் பாத்திரம் இன்றியமையாதது.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *