குழவி மருங்கினும் கிழவதாகும் – 19
மீனாட்சி பாலகணேஷ்
(சிறுசோற்றுப் பருவம்- பெண்பால் பிள்ளைத்தமிழ்)
பெண்மக்களின் வளர்ச்சியில் ‘பொய்தல் விளையாட்டு’ பெரும்பங்கு வகிக்கிறது. பெண் குழந்தைகள் உடல், உள, மன வகையாக வளர்ந்து தமது குடும்பப் பொறுப்புகளை ஏற்றுக்கொள்ளத் தயாராவது இவ்விளையாட்டுகளால்தான்.
இவை சிற்றில் இழைத்தல், சிறுசோறு சமைத்தல், பாவை விளையாடுதல், குழமணம் மொழிதல் எனப் பல சிறு விளையாட்டுகளை உள்ளடக்கிக் கொண்டுள்ளது. பெண்குழந்தைகள் சிற்றில் இழைத்தலைப் பற்றிய விளக்கங்களை இத்தொடரின் 18.1 & 18.2 ஆகிய பகுதிகளில் கண்டோம். ஆண்பால் பிள்ளைத்தமிழின் சிற்றிற்பருவத்திலும் பெண்குழந்தைகள் இழைக்கும் பலவிதமான சிற்றில்கள், அவர்கள் சமைக்கும் சிறுசோறு ஆகியன பற்றிய அழகான விளக்கங்களைக் காணலாம் (இத்தொடரின் பகுதிகள்11.1 & 11.2). மிகச்சில பெண்பால் பிள்ளைத்தமிழ் நூல்களில் மட்டுமே சிற்றில் பருவம் பாடப்பட்டுள்ளது. சிறுசோறு அடுதல்/சமைத்தல் என்பது இதில் ஒரு செயலாகவே அடங்கிவிட்டதனையும் காணலாம். ஸ்ரீ ஆண்டாள் பிள்ளைத்தமிழ் ஒன்றில் மட்டுமே இதனை ஒரு தனிப்பருவமாகவே இதனை இயற்றிய புலவர் (பெயர் தெரியவில்லை) பாடிவைத்துள்ளார்.
பதிப்பு ஆண்டை நோக்கினால், இப்பிள்ளைத்தமிழ் ஆண்டாள் வாழ்ந்த காலத்திற்கு நீண்டநாட்களுக்குப்பின் பாடப்பட்டது. ஆண்டாளின் காலம் கி. பி. 8-ஆம் நூற்றாண்டாக இருக்கும் என்பது சரித்திர, ஆன்மீகவாதிகள் கூற்று. இப்பிள்ளைத்தமிழோ கி. பி. 18-ஆம் நூற்றாண்டில் பதிப்பிக்கப்பட்டுள்ளது. பிள்ளைத்தமிழ் நூல்கள் கி.பி.12-ஆம் நூற்றாண்டின் பின்னரே எழுதப்பட்டன. அனைத்துப் பிள்ளைத்தமிழ் நூல்களுக்கும் முன்னோடியாகக் கருதப்படும் பெரியாழ்வாரின் (இவரே ஆண்டாளின் வளர்ப்புத் தந்தையுமாவார்) கண்ணன் மீதான திருவாய்மொழியும் இக்காலத்திலேயே படைக்கப்பெற்றது.
ஆண்டாள் எனும் தெய்வத் திருமகள் ஒருவளே மார்கழி, தைந்நீராடலையும், காமநோன்பு நோற்பதனையும், அவற்றினூடே சிற்றிலிழைத்தல், சிறுசோறு சமைத்தல் ஆகியனவற்றையும் பெண்மக்களின் விளையாட்டாக மட்டுமின்றி, நாடும் வீடும் நலம்பெற வைக்கும் ஒரு வழிபாடாகவும் காட்டி அழகுறத் தனது பாசுரங்களில் பாடிவைத்துள்ளமை வியத்தற்குரியதாகும். இதனால்தானோ என்னவோ புலவரின் கற்பனையும் கவித்திறனும் அவளிழைக்கும் சிற்றிலையும் சமைக்கும் சிறுசோற்றினையும் இரு இனிய பருவங்களாக்கி ஒவ்வொன்றினையும் பத்துப் பாடல்களால் பாட வாய்ப்பினையும் அளித்தது எனலாம்.
‘மூட நெய்பெய்து முழங்கை வழிவாரக்
கூடியிருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்!1′ எனும் திருப்பாவையில் ஆண்டாள் எவ்வாறு சிறுபெண்களாகிய தாங்கள் அக்கார அடிசிலைச் செய்து அதில் நெய்பெய்து முழங்கையில் வழியுமாறு அனைவருடனும் சேர்ந்து உண்போம் எனப் பாடுகிறாள்.
இதுபோன்று குளத்தூர் அமுதாம்பிகை பிள்ளைத்தமிழின் வருகைப் பருவத்துப் பாடலொன்றில் மிகவும் நயமாக அன்னை பார்வதி ‘ஐயன் அளந்த படி இருநாழி கொண்டு’ முப்பத்திரண்டு அறங்களையும் இயற்றி ‘விளையாடிக் கொண்டி’ருப்பதனைக் கூறுவதனைக் காண்கிறோம்.
‘லீலா க்லுப்த ப்ரஹ்மாண்ட மண்டலா2‘ என லலிதா சகஸ்ரநாமத்தில் ஒரு நாமம் பார்வதிதேவி அன்னைக்கு உண்டு. விளையாட்டாகவே இவ்வுலகங்கள் அனைத்தையும் படைப்பவள் என்பதுதான் அதன் பொருள். பேரண்டமாகிய இந்த உலகினையே சிற்றில் இழைப்பதாக அவள் பாவனை செய்துகொண்டு இழைத்து, மிக அருமையாக, ஆசையாக, விதம்விதமாக, அழகாகப் படைக்கின்றாள்; பின் படைத்த உலகங்களில் வாழும் உயிர்களுக்கு உணவளிக்கச் சிறுசோறாக்குகிறாள்.
இருவினைப் பயன்களே சிறுசோறெனச் சமைக்கப்படுகின்றன! சிறுமியாகிய நம் அன்னை இவ்வுலகில் உள்ள எண்பத்துநாலாயிரம் கோடிவகை உயிர்களையும் தான்விளையாட உயிருள்ள பாவைகளாகச் செய்விக்கிறாள். அவற்றை மலங்கள் எனப்படும் கருமவினைப் பயன்கள் நாள்தோறும் வருத்தித் துன்பத்தில் ஆழ்த்தியவண்ணம் உள்ளன. ஆகவே அவள் சமைத்து வைத்துள்ள இருவினைப் பயன்களெனும் சிறுசோற்றினை அந்தப் பாவைகளுக்கு உண்ணக் கொடுத்து அவற்றின் பசியைப் போக்கி அருளுகிறாள் அவள். ஒருநாளல்ல, இரு நாட்களல்ல, பொறுமையாகச் சலிப்பின்றி, கற்பகோடி காலங்களாகப் பாராசக்தி அன்னை எனும் சிறுமி செய்து வரும் விளையாட்டு இதுவாகும். இவ்வாறு செய்யும் பராசக்தி எனும் சிறுமி விளையாடுமிடம் பரமானந்தப் பெருவீடு எனப்படும் உயர்ந்த ஞானப் பெருவெளியாகும். அதாவது அவளை உணர்ந்து கொண்டவர்களுக்கே அவளுடைய இவ்விளையாடலையும் இக்கண்ணோட்டத்தில் உணர்ந்து போற்றவியலும் என்பதே பாடலின் உட்பொருள்.
‘கடிகொண் டலரு நறுங்கடுக்கைக்
கடவுண் மகிழப் பேரண்ட
கடாகப் பரப்பே சிற்றிலெனக்
கருமப் பகுப்பே சிறுசோறாம்,
படிகொண் டுயிராம் பாவைகட்குப்
பைதன் மலநோய்ப் பசியிரியப்
பல்கா லயிற்றி விளையாடிப்
பரமா னந்தப் பெருவீட்டிற்
குடிகொண் டிருக்குந் தீங்கொம்பே3
…………..’ என்பன இப்பாடலின் அழகிய பொருள்செறிந்த வரிகளாகும்.
இதனால் பெண்மக்கள் சிற்றிலிழைப்பதும் சிறுசோறு சமைப்பதும் பல பிள்ளைத்தமிழ் நூல்களிலும் தனியாகப் பாடப்படாவிடினும், அந்நூல்களின் மற்ற பருவங்களில் அவை ஒரு அழகான செய்தியாக அற்புதமான உவமைகளுடன் கூறப்படுகின்றன என அறியலாம்.
இனி ஆண்டாள் பிள்ளைத்தமிழிலிருந்து சில பாடல்களைக் கண்டு மகிழலாம். இயற்றப்பட்ட பத்துப்பாடல்களில் கிடைத்தவை ஆறு பாடல்களேயாம்.
முதற்பாடல் தேவர் முதலானோர் கூறுவதாக உள்ளது. அவர்கள், “திரிசூலமேந்திய சிவபெருமான் தொட்டுண்ட மிச்சத்தினை நாம் இங்கு உண்ண இயலாது; அவன் இருக்குமிடமோ சுடுகாடு; அவன் மாலையாக அணிந்துள்ளவை எலும்புகள்; அவன் மண்டையோட்டில் உண்ணுதற்காகப் பலியினை ஏற்பவன்; ஒரு அன்னையிடம் பிள்ளையை அறுத்துச் சமைத்து உணவிடக் கூறியுண்டவன்; (ஈண்டு சிறுத்தொண்ட நாயனார் கதை உள்ளடக்கமாகக் கூறப்பட்டது); இது எமக்குச் சரிப்படாது; ஆதலால் பிரமன் முதலானவர்கள் அவனை விட்டுவிட்டு உன்னிடம் வந்து நீ அமலனான எம்பெருமானுக்கு ஊட்டி உண்ணுகின்ற உணவின் சேடத்தை (மிச்சத்தை) உண்பதே உசிதம் என்று எதிர்பார்த்து நிற்கின்றனர். புதுவை எனும் ஸ்ரீவில்லிப்புத்தூர்ப் பிராட்டியே! நீ சிறுசோறு இழைத்தருளுக!
தென்னரங்கத்துப் பெருமான், திருமாலிருஞ்சோலைப் பெருமாள், திருமலைப்பிரான், திருத்தண்கா அப்பன், ஸ்ரீவில்லிப்புத்தூர் வடபத்ரசாயி ஆகிய ஐவரும் விருந்துண்ணுமாறு சிறுசோறு சமைத்தருளுக,” என வேண்டுகிறார் புலவர்.
ஊனறாச் சுடர்முத் தலைக்குல பாணிதொட்
டுண்டதீங் கொருவ ருண்ணா
……………………………………………………..
தானமுஞ் சுடுகாடு தமமென் பூனுடைத்
தலையிலிடு பலியை யுண்பான்
……………………………………………………
ஆனதா லவனைவிட் டிங்குவந் தன்னைநீ
யமலனுக் கூட்டி யுண்ணு
மச்சேட முண்பதே யுசிதமென் றயனைமுத
லவர்களெதிர் கொண்டு நின்றார்
………………………………………………
தென்னரங் கேசன்முத லைவரும் விருந்துணச்
சிறுசோ றிழைத்தருள்கவே 4.
மேற்காணும் பாடலில் ஆண்டாள் அரங்கப்பெருமானுக்கு ஆக்கும் சிறுசோற்றின்பெருமை விளம்பப்பட்டது. மற்றொரு பாடலில் உலகத்து உயிர்கட்கெலாம் சிறுசோறு இழைக்குமாறு ஆண்டாளை வேண்டும் நயம் மிகவும் அருமையாக உள்ளது.
உயிர்களையெல்லாம் படைத்து, அவற்றிற்கு உரிய வீடுகள் எனப்படும் உடல்களில் குடியேற்றி, அவை உயிர்வாழத் தேவையான உணவெனும் இருவினைப் பயன்களையும் ஊட்டுபவள் அன்னை தெய்வம் எனும் ஆழ்ந்த கருத்து இதனால் பெறப்படுகின்றது.
மேலும் ஆண்பாற்பிள்ளைத்தமிழின் சிற்றில் பருவத்துப் பாடல்கள் பெரும்பாலும் பெண்குழந்தைகளின் வேண்டுதல்களாகவே அமைவதனையும் முன்பே இத்தொடரின் பகுதி-11.1 & 11.2-இல் கண்டோம். இவற்றில் தாமிழைக்கும் சிற்றிலை அழிக்க வேண்டாம் என்றும், சமைக்கும் பாண்டங்களை உடைக்க வேண்டாம் என்றும், அடுப்புத்தீயை அவிக்க வேண்டாமெனவும், பாவைத்திருமண விருந்தினை வீணாக்க வேண்டம் எனவும் பலவாறாக வேண்டும் சிறுமியர் கூற்றுகள் மிகவும் நயமானவை; சுவைமிகுந்தவை.
‘நகைத்தண் டரளத் திரளரிசி நறுந்தே னுலையுங் கவிழாதோ
நந்தின் கடமு முடையாதோ நளிமா துளைத்தீ யவியாதோ
தொகைத்தண் பவள விளக்கணைந்து விடாதோ வடியேம் வதுவையெனச்
சொல்லிச் சொல்லிக் கொணர்ந்தசிறா விருந்தும் வருந்திச் சோராதோ
முகைப்புண் டரிக முரம்பிணித்து முலையென் றறிந்து னிடத்திரங்கி
மொழிந்து துயிற்று மணற்குழந்தை முழுத்தா மரைக்கண் விழித்துமனந்
திகைப்புண் டழுது தேம்பாதோ சிறியேஞ் சிற்றில் சிதையேலே
சேயே சேயூர்ப் பெருமானே சிறியேஞ் சிற்றில் சிதையேலே5,’ என்பது சேயூர் முருகன் பிள்ளைத்தமிழின் இனிய பாடல். பலமுறை கேட்டாலும் தெவிட்டாத கவியமுதம்.
மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழிலும்6 குமரகுருபரனார், திரும்பத் திரும்பப் புதியதாக உலகங்களைப் படைத்து, கலங்களைத் திரும்பவும் கழுவி அவற்றில் புதுக்கூழ் சமைத்து சலியாது உயிர்களுக்கு ஊட்டும் சிறுபெண்ணாக மீனாட்சியம்மையைச் செங்கீரைப் பருவப் பாடலொன்றில் அழகுபட உரைக்கின்றார். இதனைப் பகுதி 11.2-இல் காணவும்.
ஆண்டாள் பிள்ளைத்தமிழ் சிறுசோற்றுப் பருவத்தின் மற்றொரு இனிய பாடலைக் காண்போம்:
பறவைகள், விலங்குகள், மீன்வகைகள், ஊர்வன, தாவர வகைகள் என்பன ஆண், பெண், அலி எனும் முப்பாற்பட்டன. இவை தவிர, எண்ணிக்கையில் இன்னும் மேற்பட்ட மக்கள், தேவர் என்பவர்களுடனெல்லாம் சேர்த்து, எண்பத்துநான்கு நூறாயிரம்வகை உயிர்களும் குடிபுகுந்து வாழும்வண்ணம் அவற்றிற்குத் தேவையான வெவ்வேறு வகைப்பட்ட உணவினைப் பெருஞ்சோறு என ஆக்கி அருள்புரிபவள் அன்னை ஆண்டாள் என்கிறார் புலவர்.
நறவு எனும் தேன், தயிர், நெய், கன்னல் எனும் கரும்பு, பாலாழி, கறிசோறு என இவையனைத்தையும் செய்விப்பதாகக் கடலில் விளையும் முத்துகளைச் சோறாக்கி, மலையைப் பானையாக்கி, புனல்நீரை உலைநீராகப் பெய்து, இவற்றைச் சமைக்க சூரியனை அடுப்பின் நெருப்பாகவும் கொண்டு புதுவைப்பிராட்டியே, சிறுசோறு இழைத்தருளுக என வேண்டுவதாக அமைந்த பாடல். இழைத்தலுக்கு, ஆக்குதல் எனவும் ஒரு பொருளுண்டு.
பறவைமா மீனமூர் வனதாப ரங்கண்முப்
பானுடன் …………………..
…………………………………….
முறவுகொண் டெண்பத்து நான்குநூ றாயிரம்
யோனியிற் குடிபுக்கவா
முயிர்கட்கு வேறுவே றுணர்வொடு பெருஞ்சோறு
முற்றிழைத் தருள்புரியுநீ
நறவுதயிர் நெய்கன்னல் பாலாழி கறிசோறு
நரலையுட் டரளமுலைநீர்
நன்புனற் கடனேமி வரைமிடா வுலைமுக
நயந்ததழல் ஞாயிறாகச்
சிறகர்வண் டிமிழ்பொழிற் புதுவைப் பிராட்டியே
சிறுசோ றிழைத்தருள்கவே7
…………………………………….
இவ்வாறு நயம் மிகுந்த கருத்துக் செறிவான பாடல்களைக் கொண்டு இப்பருவத்தைப் பாடிவைத்துள்ளார் இப்புலவர் பெருமான்.
அடுத்த பகுதியில் பொய்தல் விளையாட்டின் மற்றொரு அங்கத்தைக் கண்டு களிக்கலாம்.
(தொடரும்)
பார்வை நூல்கள்
1. ஸ்ரீ ஆண்டாள் – திருப்பாவை
2. ஸ்ரீ லலிதா சகஸ்ரநாம சுலோகம்
3. சிவஞான சுவாமிகள்- குளத்தூர் அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ்
4, 7 ஸ்ரீ ஆண்டாள் பிள்ளைத்தமிழ்
5. அந்தகக்கவி வீரராகவ முதலியார்- சேயூர் முருகன் பிள்ளைத்தமிழ்
6. குமரகுருபரர்- மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்