-மீனாட்சி பாலகணேஷ்

ஆண்பால் பிள்ளைத்தமிழ் நூல்களில்  எட்டாவது அல்லது ஒன்பதாவது பருவமாகப் பாடப்படுவது சிற்றில் பருவமாகும்.  

இச்சிற்றில் பருவத்தில் சிறுமியர் மணலால் கட்டி விளையாடும் சிறுவீடுகளைக் காலால் உதைத்து அழிக்கும் செயலைச் செய்யும் சிறுவர்களின் (குழந்தையின்) விளையாட்டு கூறப்படும். எவ்வாறு சப்பாணிப் பருவம் தெய்வக் குழந்தையின் கைகளின் பெருமையைப் போற்றுகின்றதோ, அவ்வறே சிற்றிற் பருவத்தில் பாட்டுடைத் தலைவனாகிய ஆண் மகவின் கால்களின்/ திருவடிகளின் பெருமையும், உயர்வும் சிறப்பும் போற்றப்படுகின்றதனைக் காணலாம். இது ஆண் மகவின் பதினேழாம் திங்களில் பாடப்படும். இரண்டு முதல் மூன்றாண்டு நிறைந்த ஆண் மகவாகவும் கொள்ளலாம். இன்னும் சிறிது வளர்ந்த குழந்தையாகவும் கொள்ளலாம். ஏனெனில் இத்தகைய செயல்களைச் செய்வதற்கு குழந்தை சிறிது வளர்ந்தவனாகவும், ஓடியாடுபவனாகவும் இருத்தல் வேண்டும்.

இவ்விளையாட்டு பெரும்பாலும் ஆண்பால் பிள்ளைத்தமிழுக்கு உரியது. சிறுபான்மையாகச் சில பெண்பால் பிள்ளைத்தமிழ் நூல்களில் சிறுமியர் சிற்றிலிழைப்பதனை ஒரு பருவமாகக் குறிப்பிட்டுப் புலவர்கள் பாடியுள்ளனர். இதுவும் பிள்ளைத்தமிழின் இலக்கணத்திற்கு உட்பட்டதாகும். இதுபற்றி பிறிதொரு கட்டுரையில் காண்போம். 

சிற்றில் விளையாட்டு எனப்படும் பொய்தல் விளையாட்டு ஆண்-பெண் இருபாலரும் சிலசமயம் இணைந்தும், சில பொழுதுகளில் சிறுவர்கள் சிறுமியர் இழைத்த சிற்றிலை அழித்தும் விளையாடும் விளையாட்டாகும். இது ‘பொய்தல் விளையாட்டு’ எனப்படும். அதாவது, பொய்யாக, பாவனையாக, சிறிய ஒரு மணல் வீட்டினைக் கட்டி, கணவன் – மனைவி குடும்பம் நடத்துவது போன்று பாவனையாக, பொய்யாக, கற்பனையாக,  சிறுமியர் பாவைகளை வைத்து விளையாடுவது. சிறுசோறும் பாவனையாகவே சமைக்கப்படும். 

கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் எழுந்த சிலப்பதிகாரத்தில் பொய்தல் விளையாட்டு பற்றிய குறிப்புகளைக் காணலாம். ஆகவே இது காலகாலங்களாகச் சிறுவர், சிறுமியர்களால் விளையாடப்பட்டுவரும் ஒரு விளையாட்டு எனத் தெளிகிறோம்.

கைதை வேலிக் கழிவாய் வந்து, எம்
பொய்தல் அழித்துப் போனார், ஒருவர்
பொய்தல் அழித்துப் போனார், அவர்நம்
மையல் மனம் விட்டு அகல்வார் அல்லர்1. 

மேலும் சங்க இலக்கியமான பரிபாடலும், ‘ஆடுவார் பொய்தல் அணிவண்டு இமிர்மணல்2,’ என்று சிறுபெண்கள் இழைத்து விளையாடும் சிற்றில்கள் வைகை ஆற்றுமணலை அழகு செய்வதாகக் கூறும்.

இந்தச் சிற்றில் விளையாட்டு தொடர்பான நிகழ்வுகளைக் கலைசை செங்கழுநீர் விநாயகர் பிள்ளைத்தமிழ் பாடலொன்றில் விளக்கமாகக் காணலாம். அதில் சிற்றிலிழைத்த சிறுமியர், சிறுசோறாக உண்ணச் சிறுவன் கணேசன் கொண்டுவரும் உண்மையான தின்பண்டங்களுக்காகக் காத்திருக்கின்றனர். பொய்யாக, மணலையும், சிறுமுத்துக்களையும் பெய்து சிறுசோறு சமைத்த சிறுமியர், மற்ற சிறார்கள் தமது மனைகளிலிருந்து கொண்டுவரும் உண்மையான தின்பண்டங்களைச் சுவைத்து மகிழ்வர் என்பது கண்கூடு. சிறுவர்களும் இவர்களுடன் சேர்ந்து விளையாட்டிலும், விருந்திலும் பங்கேற்று மகிழ்வர் என்று இப்பாடலின் பொருள்கொண்டு அறியலாம்.

ஒரு சிறுமியர் கூட்டம்; மண்ணால் சிறுவீடுகட்டி, சிற்றிலிழைத்து விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்; மூன்று கற்களை அடுக்கி, ஒரு சிறுமி சிவந்த மாதுளை மலர்களைப் பறித்துவந்து அவ்வடுப்பிலிட்டுப் நெருப்புப் பற்றவைத்தும் விட்டாள். வயதில் சற்றே பெரியவளான மற்றொரு சிறுமி அதன்மீது ஒருசிறு மண்சட்டியை ஏற்றி அதில் நிறைய மணலினையும் இட்டு சோறுசமைப்பதாகப் பாவனை செய்கிறாள். “ஆஹா, வெண்பொங்கலா அக்கா?” என மோப்பம் பிடிக்கின்றனர் மற்ற சிறுமிகள். அனைவருக்கும் பசி வயிற்றை உண்மையாகவே கிள்ளுகின்றது. இப்போது இவர்களுக்கு வேண்டியது எல்லாம் சிறுவர்கள் விரும்பும் விதம்விதமான -உண்மையான- தின்பண்டங்கள்தாம்.

உடனே ஒருசிறுமி, “அதோ பாருங்களடி! நமது நண்பன் கணேசன் தொலைவில் தொந்தியசைய வருகிறான் பாருங்கள்,” என உற்சாகமாகக் கைகளைத் தட்டியவண்ணம் குதூகலிக்கிறாள். எல்லாரும் அத்திசையையே ஆவலாகப் பார்க்கின்றனர்.

கணேசனேதான்! மெல்ல ஆடியசைந்து வருகின்றான்; இடதுபக்கம் இடுக்கிக்கொண்டிருக்கும் பாத்திரம் நிறையத் தின்பண்டங்கள்; வலது கையில் பாதி தின்றதொரு பணியாரம். அதனையும் அவசரஅவசரமாகத் தின்றுகொண்டேவருகிறான்! நண்பர்களை வந்தடையுமுன் முடிந்தமட்டும் தன்னிடமுள்ள பணியாரங்களைத் தின்றுவிடவேண்டும் என்ற பேராசை. சிறிது மிகுந்தால், ‘போனால் போகட்டும்,’ என அவர்களுக்குக் கொடுத்துவிடலாம் என்பது அவன் எண்ணம்போலும்!

ஒருவழியாக அவன் பக்கத்தில் வந்து நிற்கிறான். சிறுமிகள் அனைவரும் ஓடோடிச் சென்று ஆவலுடன் அவனைச் சுற்றிவளைத்துக் கொள்கின்றனர். அவர்கள் பார்க்கப் பார்க்க அவன் பணியாரங்களை வாயிலிட்டு மென்று சுவைக்கிறானே தவிரப் பகிர்ந்துகொள்வதாகக் காணோம்! வாய்த்துடுக்கு மிக்கவளான ஒரு சிறுமி அவனிடம், “கணேசா! தொந்தியை ஆட்டிக்கொண்டு, மெல்ல வருகிறாயே! இன்று நமது விளையாட்டிற்கு நீ பணியாரம் கொண்டுவருவதாகக் கூறியதை மறந்துவிட்டாயோ? நீ சாப்பிட்டுவிட்டுப் பாத்திரத்தில் மிகுந்ததையாவது எங்களுக்குத் தருவாய் என்று நாங்கள் ஆசையாகக் காத்துக் கொண்டிருக்கிறோம் என்று தெரியவில்லையா உனக்கு? எங்களுக்குக் கொடுக்காமல் நீயே தின்றுவிடப்போகிறாயா?” என்று கடிந்துகொள்வதுபோலக் கேட்கிறாள்.

கணேசனுக்கு எப்போதும் சினமே வராது. இன்று என்னவோ உண்டமயக்கம் போலும்! அவர்கள் பாடுபட்டுக் கட்டிவைத்திருக்கும் சிறுமண்வீட்டினைத் தன் காலால் விளையாட்டாக எற்றி உதைக்கிறான்; கூரை பிய்ந்து, ஒருபக்கச்சுவரும் உடைந்துவிழுகின்றது. சிறுமிகளுக்குக் கண்களில் நீர்தளும்புகின்றது.

“இடையூறுகள் செய்வதில் மன்னன்’ எனும் பெயரை எங்களிடமிருந்து பெற்றுக் கொள்வதில் உனக்கு என்ன ஆசையோ கணேசா! ஏன் எங்கள் சிற்றிலைச் சிதைத்தாய்? நீ எவ்வளவு நல்லவன்? எங்களுக்கெல்லாம் பெரியவன்; எங்களிடம் மிகுந்த அன்பு கொண்டவன் அல்லவா? தயவு செய்து எங்கள் சிற்றிலைச் சிதைக்காதே,” என்று அவன் கரத்தைப்பற்றிக்கொண்டு கெஞ்சுகின்றனர் அச்சிறுமிகள்.

பெருத்த வயிறு தயங்கமெல்லப் பெயர்ந்து நடந்து குடங்கைமிசைப்
பெரும்பண் ணியமு மேந்தியேம்பாற் பேணி வருநின் கரவினைக்கண்
டருத்தி யொடுநீ யுண்டபரி கலசே டத்தை யடியேங்கட்
களிக்க வருவாயென்றுவகை யரும்பி வழிபார்த் திருந்தேமை
வருத்த லழகோ விக்கினஞ்செய் மன்னனெனும்பேர் பேதையரேம்
மாட்டுத் தெரிப்ப தொருபுகழோ மடவாரூடன் மவுணரென்றும்
திருத்துங் கலைசைச் செங்கழுநீர்ச் சிறுவா சிற்றில் சிதையேலே
தெள்ளித் தெளிந்தோர்க் கள்ளூறுஞ் செல்வா சிற்றில் சிதையேலே3

சிவஞான முனிவர் இவ்வருமையான பிள்ளைத்தமிழை இயற்றியுள்ளார். சிறுவர்களின் விளையாட்டை நுணுக்கமாகக் கண்டு பதிவு செய்ததாக அமைந்த பாடலிது. கடவுளுக்குப் படைத்து எஞ்சியதனை (சேடத்தை) தாம் உண்ண விரும்புவதாகச் சிறுமியர் கூறுவது கணேசன் என்னும் சிறுவனை அவர்கள் கடவுளெனக் கண்டு தெளிந்ததாலும், ஆயினும் அவர்களுடன் அவன் விளையாட வந்ததனால் அவனைத் தங்களுக்குச் சமதையாகப் பாவித்து சண்டைபோடுவதனையும் இப்பாடலில் ஒருசேரக்கண்டு களிக்கலாம்!

இதே தொனியிலமைந்த இன்னொரு பாடல் குறுக்குத்துறை குமரன் பிள்ளைத்தமிழில் அமைந்துள்ளது.

சிறுமியர் சிலர் ஆற்றங்கரை மணலில் சிற்றில் எனப்படும் சிறுவீடுகளைக் கட்டி விளையாடிக் கொண்டுள்ளனர். குறும்புத்தனம் நிறைந்த சிறுவன் ஒருவன் அந்தச் சிறுவீட்டைக் காலால் எற்றி உதைத்து அழிக்க ஓடோடி வருகிறான். தினமும் நடக்கும் நிகழ்ச்சிதான் இது! இன்றும் சிற்றிலை அழிக்க அவன் ஓடோடி வருவதனைக் கண்டு அச்சிறுமியர் அவனிடம் இனிய மொழிகளைப் பேசி, சிற்றிலை அழிக்காமலிருக்க வேண்டுகின்றனர்.

“உன்னைப் பெற்றெடுக்க உனது தாய் முற்பிறப்பில் பெரிய அரிய தவம் செய்தவளல்லவோ?” என்கிறாள் ஒரு சிறுமி.

“அவ்வாறு உன்னை முயன்று பெற்றவள், எல்லாத் தெய்வங்களையும் அழைத்து உன்னைக் காப்பாற்ற வேண்டிக்கொண்டும் உள்ளாள்,” இரண்டாமவள்.

“நீயும் வளர்ந்து முகத்தினை உயர்த்தி நோக்கித் தவழ்ந்து செங்கீரையாடியவண்ணம் (இவ்வாறு குழந்தை தவழுவது செங்கீரையாடுவது எனப்படும்) பொருளற்ற மழலை மொழிகளைப் பேசினாய்,” முதலாமவள். (‘கீர்’ என்றால் தமிழில் சொல் எனவும் ஒரு பொருள் உண்டு. ஆகவே குழந்தை செங்கீரையாடுவதனை, அது பொருளற்ற குதலைமொழி பேசுவதாகவும் கொள்ளுவர்).

“இவ்வாறு தவழ்ந்துவரும் உனக்குத் தாலாட்டுப் பாடல்கள் பாடி உறங்கவும் வைத்தாள் உன் அன்னை.

“பின் உன்னைக் குந்தி உட்காரவைத்துக் கரங்களைச் சேர்த்துச் சப்பாணி கொட்டி விளையாடப் பழக்கினாள்,” என் இன்னொருத்தி!

“உன்னிடம் தனக்கு ‘முத்தம் தா’வென வேண்டினாள். உன்னைக் கூவி அழைத்து “வருக,” எனக் குறுநடை பழகி வருமாறு வேண்டி, கொஞ்சியும் குலவியும் உன்னை எடுத்து அணைத்துக் கொண்டாள்,” எனப் பட்டியலிடுகிறாள் வேறொரு சிறுமி.

“பின்பு நீ உணவுண்ண மறுத்தபோதெல்லாம் அந்தி சாய்ந்தபின்பு ஆகாயத்தில் வரும் அம்புலியை உனக்கு வேடிக்கை காட்டியும் விளையாட அழைத்தும் உணவூட்டினாள்.

“இவையனைத்தையும் செய்தவள், ‘குழந்தாய், நீ சென்று ஓடியாடி விளையாடுவாயாக!’ என உன்னைத் தெருவில் விளையாட அனுப்பியும் வைத்தாள். நீ என்னடா என்றால் இங்கு வந்து எமது சிறுவீட்டினை அழிக்க முயல்கிறாய். நாங்கள் இதற்காக உன்னை இங்கனுப்பிய தாயையே நொந்துகொள்ள வேண்டும். உன்னை நொந்து கொள்வது முறைமையல்லவே. நீர்நிலைகளால் சூழப்பெற்ற குறுக்குத்துறை எனும் ஊரின்கண் வாழும் முருகா, எங்கள் சிற்றிலைச் சிதைக்காமல் இருப்பாயாக!” என வேண்டுகின்றனர் சிறுமியர்.

‘முந்தித் தவமே புரிந்துன்னை முயன்று பெற்றுக் காப்பாற்றி
    முகமே தூக்கிச் செங்கீரை மொழிந்தே ஆடத் தாலாட்டிக்
குந்திக் கரத்தால் சப்பாணி கொட்டச் செய்து முத்தமிட்டுக்
    கூவியழைத்து வருகவெனக் கொஞ்சிக் குலவி யெடுத்தணைத்தே
அந்திப் பொழுதைக் கடந்துவரும் அம்பு லிகாட்டிப் பின்னருனை
    ஆடி நீவா எனமறுகில் அனுப்புந் தாயர் தமைவிடுத்து
நொந்திங் குன்னைக் குறைகூறல் நேர்மை யாமோ உணர்ந்திதனை
    நீர்சூழ் குறுக்குத் துறைவாழும் நிமலா சிற்றில் சிதையேலே4.’

பிள்ளைத்தமிழின் முதல் ஏழு பருவங்களிலும் நடைபெறும் நிகழ்ச்சிகள் தாய்மார்களின் செயலாதலால் சிற்றிலை அழிக்க வரும் சிறுவனைத் தெருவில் விளையாட அனுப்பியதனையும் அதனால் ‘சிறுவன் சிற்றிலை அழித்தாலும், அது தாயின் தவறே’ என அதனையும் அவளுடைய செயலாகத் தாய்மீதே ஏற்றிக் கூறுகிறார் புலவர். பிள்ளைத்தமிழின் எட்டுப் பருவங்களை ஒன்றுடன் ஒன்று கோர்வையாகத் தொடர்புபடுத்திப் பாடியுள்ள புலமை போற்றற்குரியதாம்.

குமரகுருபரனார் இயற்றிய மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழில், செங்கீரைப் பருவத்தில் சிற்றில் சிதைத்தல் நிகழ்ச்சி இடம் பெறுகின்றது. ஆச்சரியமாக இருப்பினும், அழகுதிகழ அமைந்த இப்பாடல், சிறு குழந்தைகளுக்கிடையேயான ஒரு விளையாட்டைப் பாடும் முகமாக, உலகியல், மானுட உளவியல், தெய்வத் தத்துவம், உலக உருவாக்கம் எனும் தொடர்ந்து நடக்கும் பிரபஞ்சத்தின் இயற்கைச் சுழற்சி முதலியனவற்றை உட்பொருளாகக் கொண்டு திகழ்கின்றது.   

சிறு குழந்தைகள் வளர்ந்து வரும் பருவத்தில், ஆண் குழந்தைகள் சிலர் முரட்டுத்தனமான விளையாட்டுகளை விளையாடுவர்.  மற்றக் குழந்தைகளின் விளையாட்டுப் பொருள்களை உடைப்பது, அவர்கள் கட்டும் மணல் அல்லது சிறு மண்வீட்டைக் காலால் எற்றி உதைத்துச் சிதைப்பது, அவர்கள் பின்னலைப் பிடித்திழுத்து அவர்களைத் துன்புறுத்துவது என்பன இவற்றுள் சில. 

உளவியல் ரீதியாக இதைக் காணப் போனால், நாம் வாழும் மானிட சமுதாயத்தை ஆதாரமாகக் கொண்டே இவை நிகழ்கின்றன எனலாம். அன்னையர் சமைப்பது, வீட்டிற்குரிய பணிகளைச் செய்து வீட்டை நன்முறையில் பராமரிப்பது, தமது குழந்தைகளைப் பேணுவது போன்றவற்றை நோக்கியே சிறுமியரும் தாய்மாரின் அடிச்சுவட்டில் சிற்றில் இழைத்து மணல் சோறாக்கி, குழந்தைகளைப் பேணும் விளையாட்டை விளையாடுவர். சிறுவர்களும் தந்தை, அண்ணன் முதலானோர் உடல் வலிமை தேவைப்படும் செயல்களைச் செய்வது போலத் தாமும் செய்ய முயல்வர். இவையே, சிற்றில் சிதைத்தல், சிறுபறை  முழக்குதல், சிறுதேர் உருட்டல், என்ற விளையாட்டுகளாகப் பரிணமித்ததோ என்னவோ! 

உலகங்களையே சிறிய வீடாக உருவாக்கி விளையாடும் சிறுமியாக மீனாட்சியன்னை உருவகிக்கப் படுகிறாள். இவ்வாறு அவள் பெருமையைப் பேசுமிடத்து, சிற்றில் சிதைத்தல் நிகழ்ச்சி இடம் பெற்றுள்ளது. அன்னை உருவாக்கும் அழகிய சிற்றிலையும் ஒருவன் சிதைக்க இயலுமா? அவ்வாறு செய்யத் துணிந்த அவன் யார்? அவன் ஒரே ஒருவன் தான்- அவனே அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாய் நிறைந்த தலைவனான சிவபிரான்.

இந்தப் பாட்டைக் கண்டு மகிழலாமா?

சிறுமி மீனாட்சி சிற்றில் இழைக்கின்றாள்; எவ்வாறு? முதலில், நெடிய சக்கரவாள மலையை எல்லா உலகங்களையும் வளைத்து நிற்கும் சுவராக அமைக்கிறாள். எட்டுத் திக்கிலும் எட்டு மலைகளை இந்தச் சுவர்களுக்குப் பொருத்தமான அடைசுவர்களாக நிறுத்துகிறாள். அடுத்து மேருமலை எனப்படும் தூணை நடுவில் நிலை நிறுத்துகின்றாள். ஆகாயமாகிய விண்ணின் உச்சியை மூடி, சூரியன், சந்திரன் ஆகிய இரண்டு ஒளிவிளக்குகளைப் பொருத்தி விடுகிறாள். முழுதும் எழுந்தெழுந்து மோதும் ஊழிக்கால வெள்ளத்தில் கழுவப்படும் புவனங்களே அவளுடைய பழைய பாத்திரம் பண்டங்கள்; அவற்றை வரிசையாக அடுக்கி வைத்து,  புதுக்கூழான இனிய அமுதத்தைச் சமைக்கிறாள். இவ்வாறு பலமுறை தாயாகிய மீனாட்சி சலிப்பின்றிச் செய்து வருகிறாள்.

அவற்றை அழித்த வண்ணமாக இருக்கிறான் பித்தனான சிவபிரான். அவன் ஒரு முற்றவெளியான தில்லையில், சிதம்பரத்தில் திரிகின்றவன்; ஊமத்தம்பூவை அணிந்திருக்கும் பெரும் பித்தன்; கூத்தன் அவன் அழித்ததுடன் நில்லாது  மீனாட்சியின் முன் நின்று கூத்தாடுகின்றானாம்! 

வழக்கமாக இத்தருணத்தில் சிறுமியர், “எமது சிற்றிலைச் சிதையேலே,” என வேண்டுவார்கள். அல்லது மேற்காணும் பாடல்களில் கண்டபடி, சினம் கொண்டு கூச்சலிடுவார்கள்; இல்லாவிடில் அழுவார்கள். ஆனால் அம்மை மீனாட்சி என்ன செய்கிறாளாம்? இவ்வாறெல்லாம் செய்யும் கூத்தனான சிவபிரானை வெறுக்காது, நாள்தோறும் மீண்டும் மீண்டும் அவற்றை எடுத்துப் பொறுமையாக வரிசையாக அடுக்கி, பெரிய பழைய அண்டத்தை மூடுகின்ற சிறுவீடு கட்டி விளையாடிய வண்ணம் இருக்கிறாளாம்! ‘இவ்வாறு விளையாடுகின்ற ஒப்பற்ற இளமையுடன் கூடிய பச்சைப் பெண்பிள்ளையே! செங்கீரை ஆடி அருளே!’ என வேண்டுகிறார் குமரகுருபரர்.

சுற்றுநெடு நேமிச் சுவர்க்குஇசைய

………………………………..

இன்னமுதமும் சமைத்து அன்னைநீபன்முறை
இழைத்திட அழித்தழித்தோர்
முற்றவெளி யில்திரியும் மத்தப்பெரும்பித்தன்
முன்னின்று தொந்தமிடவும்

…………………………………..

சிற்றில்விளை யாடும்ஒருபச்சிளம் பெண்பிள்ளை
செங்கீரை ஆடியருளே5

தாயான மீனாட்சி (பராசக்தி) உலகத்தை அடிக்கடி ஆக்குதலையும் அவற்றைச் சிவபிரான் அடுத்தடுத்து அழித்தலையும் ஆகிய செய்கைகள் சிறுமியர் சிற்றில் இழைத்தலும், சிறுவர்கள் அவற்றை அழித்தலும் ஆகிய செய்கைகளாக உருவகித்துக் கூறப்பட்டன. மானிடப் பெண்கள் வீட்டிற்கு வேண்டியவற்றைச் செய்வது போல, எல்லா உலகங்களையும் படைக்கும் பராசக்தியும் தன் கடமைகளாக இவற்றைச் செய்கின்றாள். அவற்றைத் திரும்பத் திரும்ப அழித்துத் திருவிளையாடல் புரிகிறான் சிவபெருமான். 

எற்றுபுனல் என்பது அலை மோதும் ஊழிப் பெருவெள்ளமாகும். இதில் அண்டங்களைக் கழுவி எடுத்து அன்னை புதுக்கூழாகிய இன்னமுதைப் படைக்கின்றாள். இவ்வாறாக உலகை உருவாக்குவதையே மீனாட்சி சிற்றில் இழைப்பதாகப் புலவர் கற்பனை செய்கிறார். உன்மத்தம் கொண்டு பித்தனாகிய கூத்தபிரான் மீண்டும் மீண்டும் சிதைக்கிறான். இவ்வாறு உலக உருவாக்கமும் அழிவும் மாறி மாறி வருவது சுட்டப்படுகிறது. அவை மீனாட்சி அம்மையின் சிற்றில் உருவாக்கமாகவும் ஈசனின் சிற்றில் சிதைத்தலாகவும் அமைந்துள்ளன. 

ஆண்பால் பிள்ளைத்தமிழில் ஒரு தனிப் பருவமாகப் பாடப் பெறும் சிற்றில்பருவம் பெண்பால் பிள்ளைத்தமிழில் செங்கீரைப்பருவத்தில் விளக்கப்பட்டு, சிவபிரானையே இப்பாடலின் பாட்டுடைத் தலைவனாகவும் கொண்டமைந்துள்ளது. குமரகுருபரரின் தெய்வப்புலமை பணிந்தேத்த வேண்டியதாம்.

இறைவனின் படைத்தலும் காத்தலும் கரத்தலும் அழித்தலும் அருளுதலும் ஆகிய ஐந்தொழில்கள் ஓயாது நடை பெறுவதை  தத்துவ விளக்கமாக இப்பாடல் அழகுறக் காட்டுகிறது. அதுவும் சிவபெருமான் தான் செய்யும் திருவருள் தொழில்களைத் தனது திருமேனியாக விளங்கும் சக்தி மூலமாகவே செய்தருள்கிறான் என்பது மறைபொருளாக விளங்குகிறது.

இன்னும் சில பிள்ளைத்தமிழ் நூல்களிலும் இக்கருத்து கூறப்பட்டுள்ளது. குமரகுருபரனாரின் கருத்தை அவர்கள் வழிமொழிந்திருக்கலாம்.

சேயூர் முருகன் பிள்ளைத்தமிழ் நூலின் (ஆண்பாற்) சிற்றிற்பருவத்துப் பாடலொன்று சிறுபெண்கள் எவ்வாறு ‘பாவனை’யாக, பொய்யாக விளையாடுகின்றனர் என்பதனை நயமுற விளக்குகிறது.

‘ஒளி பொருந்திய குளிர்ந்த முத்துக்களாலான அரிசியும், அதற்கு உலைபெய்த நறுந்தேனும் கவிழ்ந்து சிதறாதோ? சமைக்கும் பாண்டமாகப் பயன்படுத்தும் (நந்தின் கடமான) சங்கு உடைந்து போய்விடாதோ? மாதுளைமலர்களைப் பெய்து நாம் அமைத்த உலைத்தீ அவிந்து விடாதோ? பவளக்கொடிகளால் எம் சிறுவீட்டிற்கு நாம் ஆசையாக இட்டுள்ள விளக்கு அணைந்துவிடாதோ? நாங்கள் (பாவைத்)திருமணம் எனக்கூறிச் செய்துவைத்துள்ள பலவகை விருந்து வீணாகப் போகாதோ? (பாவனையாக) முலைப்பாலருந்துவித்து உறங்க வைத்துள்ள எமது மகவு (பாவை) தாமரை போன்ற தனது கண்களை விழித்தெழுந்து தேம்பி அழும் அல்லவோ? ஆகவே எமது சிற்றிலைச் சிதைக்க வேண்டாம்,’ என வேண்டுவதாக அமைந்த பாடல். 

நகைத்தண் டரளத் திரளரிசி நறுந்தே னுலையுங் கவிழாதோ
           நந்தின் கடமு முடையாதோ நளிமா துளைத்தீ யவியாதோ
தொகைத்தண் பவள விளக்கணைந்து விடாதோ வடியேம் வதுவையெனச்
           சொல்லிச் சொல்லிக் கொணர்ந்தசிறா விருந்தும் வருந்திச் சோராதோ
முகைபபுண் டரிக முரம்பிணித்து முலையென் றறிந்து னிடத்திரங்கி
           மொழிந்து துயிற்று மணற்குழந்தை முழுத்தா மரைக்கண் விழித்துமனந்
திகைப்புண் டழுது தேம்பாதோ சிறியேம் சிற்றில் சிதையேலே
           சேயே சேயூர்ப் பெருமானே சிறியேஞ் சிற்றில் சிதையேலே.6 

என்பன பாடல் வரிகள். இது ஆண்பாற் பிள்ளைத்தமிழானதனால் சிறுமியர் சிறுவீடு கட்டுவதும், சிறுசோறு சமைப்பதும், பாவை விளையாடலும் (குழமணம் மொழிதல்) ஒருங்கே கூறப்பட்டுள்ளன. இவையே பெண்பால் பிள்ளைத்தமிழில் மூன்று வகைகளாகப் பிரிக்கப்பட்டுப் புலவரின் கற்பனைக்கேற்பப் பாடப்படுகின்றன. இதனைப் பிறிதொரு கட்டுரையில் காணலாம்.

___________&____________

பார்வை நூல்கள்:

  1. சிலப்பதிகாரம், கானல்வரி
  2. பரிபாடல்
  3. கலைசை செங்கழுநீர் விநாயகர் பிள்ளைத்தமிழ்- சிவஞான முனிவர்
  4. குறுக்குத்துறை குமரன் பிள்ளைத்தமிழ்-
  5. மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்- குமரகுருபரர்
  6. சேயூர் முருகன் பிள்ளைத்தமிழ்- அந்தகக்கவி வீரராகவ முதலியார்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *