நதியினில் வெள்ளம்! கரையினில் நெருப்பு!
சக்தி சக்திதாசன்
(இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் – 302)
அக்டோபர் 31! இங்கிலாந்து அரசியல் காலண்டரில், இதுவும் முக்கியமான நாளாக ஐக்கிய இராச்சிய மக்கள் மத்தியில் மட்டும் அல்ல, ஐரோப்பிய ஒன்றிய நாட்டு மக்களின் மத்தியில் மட்டும் அல்ல, உலக மக்கள் அனவரினதும் மனங்களிலேயும் அழுத்தமாகப் பதிந்துவிட்ட தேதி.
ஐக்கிய இராச்சியம், ஐரோப்பிய ஒன்றியம் எனும் ஒரு கூட்டிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள முயலும் தேதி .
சுதந்திரமாக, தமது இறைமையைத் தமது கைகளிலே கொண்டுள்ள நாடாக வாழ வேண்டுமானால் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறினால் மட்டுமே முடியும் என்று வாக்களித்தோரில் பெரும்பான்மையான ஐக்கிய இராச்சிய மக்கள் எடுத்த ஏகோபித்த முடிவு.
ஐக்கிய இராச்சியம், குறிப்பாக இங்கிலாந்து நாட்டு மக்களின் மனத்தில் கொஞ்சம், கொஞ்சமாகத் தமது நாட்டின் பாரம்பரிய கலாச்சாரம், வாழ்க்கை முறை என்பன முற்றாக தமது நாட்டில் மாறி வருகிறது எனும் எண்ணம் வளர்ந்து வந்தது.
அதற்குக் காரணங்கள் இல்லாமல் இல்லை. சுகாதாரச் சேவையில் ஏற்பட்ட மாற்றங்கள் அதாவது சிகிச்சைகளுக்காகக் கால அவகாசத்தின் நீட்சி, வைத்தியர்கள், தாதிமாரின் பற்றாக்குறை என்பன.
பாடசாலைகளில் குழந்தைகளுக்கு ஏற்பட்ட இடப் பற்றாக்குறை. ஒரு இடத்தில் பலகாலமாக வசித்து வந்தவர்களின் குழந்தைகளுக்கே அவர்களது அருகில் உள்ள பாடசாலைகளில் இடம் கிடைக்காத நிலை.
வெளிநாடுகளில், அதுவும் குறிப்பாக கிழக்கு ஐரோப்பிய நாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்ததும் அந்நாட்டுப் பிரஜைகள் இலகுவாக ஐக்கிய இராச்சியத்தினுள் நுழைந்ததால் உள்நாட்டுப் பணியாளர்களின் ஊதியத்துக்குக் குறைவாகப் பெற்று அவர்களது பணிகளை இவர்கள் பெற்றுக்கொண்டதால் எழுந்த விரக்தி.
இப்படியான காரணங்கள் இங்கிலாந்து மக்களின் மனத்தில் எழுந்த ஐரோப்பிய ஒன்றியத்தின் மீதான அதிருப்திக்கு வழிவகுத்த காரணங்களில் முக்கியமானவை.
ஐக்கிய இராச்சியப் பிரஜைகளின் இளம் சந்ததியினரில் பலர் வைத்தியத்துறை, தாதித்துறை, மற்றும் சரீர உழைப்பின் அடிப்படையில் அமைந்த பணிகளின் மீதான ஈர்ப்பின்மையால் ஏற்பட்ட அத்தகைய துறைகளின் பணியாளர்களின் பற்றாக்குறையை இக்கிழக்கு ஐரோப்பிய பணியாளர்கள் பூர்த்தி செய்வதும் மறுக்கப்பட முடியாத உண்மை.
இவர்களின் சேவையின் தேவை ஐக்கிய இராச்சியத்துக்கு அத்தியாவசியமானது எனும் ஒரு நிலையே காணப்படுகிறது.
எனது கண் சம்பந்தமான வைத்தியத்துக்காக நான் வைத்தியசாலைக்குச் செல்வது உண்டு. அப்போது அங்கே ஒரு பதாகையில் அன்று அங்கு பணிபுரிவோரின் பட்டியல் (டாக்டர்கள், தாதிமார்) எழுதப்பட்டிருக்கும். அப்பட்டியலில் பத்துப் பெயர்கள் இருந்தால் அதில் இரண்டு அல்லது மூன்று பெயர்களே ஐக்கிய இராச்சியத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பதைக் கண்கூடாகக் கண்டிருக்கிறேன்.
இங்கிலாந்து மக்களின் இவ்விரக்தியும் அதற்குக் காரணம் என்று எளிமையாக அவர்கள் கருதும் வெளிநாட்டவரின் வருகை என்பதும் இன்றைய இங்கிலாந்து மக்களின் மனநிலைக்குக் காரணம் என்பதும் உண்மை.
இந்த வெளிநாட்டவர் கட்டுப்பாடின்றி ஐக்கிய இராச்சியத்தினுள் நுழைவதற்குக் காரணம், ஐரோப்பிய ஒன்றியம் என்பதுவே பெரும்பான்மையினரின் கருத்தாக இருக்கிறது.
இங்கு ஒரு விடயம் என்னவென்றால் இந்த வெளிநாட்டவர் வருகை என்பது ஐக்கிய இராச்சியத்தில் குறிப்பாக வெள்ளை இனத்தவரிடையேதான் பிரச்சனையாக இருக்கிறது என்று எண்ணுவதே இயல்பாகும்.
என்னே ஆச்சரியம் !
புலம்பெயர்ந்த மக்கள் பலர் கூட இத்தகைய அபிப்பிராயத்தைக் கொண்டுள்ளார்கள் என்பதுவே உண்மை. நான் சந்தித்த ஆசிய இனத்தவர் பலர் கூட இவ்வெளிநாட்டவர் வருகையை விரும்பாததை அறிந்திருக்கிறேன். தாம்கூட ஒரு காலத்தில் இங்கு வந்த வெளிநாட்டவர் எனும் நிலை இருந்தபோதும் இப்போது ஐக்கிய இராச்சிய பிரஜை எனும் நிலைக்குத் தம்மை உயர்த்திக்கொண்டதை உணர முடிந்தது.
அதைத் தவறு என்று சொல்ல முடியாது. ஏனெனில் அவர்கள் தம்மையும் ஐக்கிய இராச்சியம் எனும் தராசில் அந்நாட்டு மக்களுடன் சரிசமமாக எடையிட்டுக் கொள்வது காலத்துக்கேற்ற மாற்றம் என்பதை மறுக்க முடியாது. அது காலத்தின் தேவையும் கூட .
இந்த ஒரு பின்னணியில் இன்று அதாவது அக்டோபர் முதலாம் தேதி இங்கிலாந்து அரசியல் நிலை என்ன வடிவம் கொண்டுள்ளது?
பிரதமரோ இன்னும் 30 நாட்களில் நாம் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவது வெளியேறுவதுதான் எனும் நிலைப்பாட்டிலிருந்து சற்றும் அசைவதாகத் தெரியவில்லை.
ஆனால் அத்தேதி வெளியேறுவதற்கான ஓர் ஒழுங்கான வெளியேற்றத்துக்கான உடன்படிக்கையை எட்டுவதற்கான சாத்தியக்கூறு இருப்பதாகத் தெரியவில்லை.
அதேநேரம் அத்தகைய உடன்படிக்கையற்ற வெளியேற்றம் சட்டத்துக்கு முரணானது எனும் வகையில் ஒரு சட்டத்தை அனைத்து எதிர்க்கட்சிகளும் சேர்ந்து அமுலாக்கியுள்ளார்கள்.
கைகட்டப்பட்ட நிலையில் போர்க்களத்தில் நிற்பதைப் போல நிற்கும் பிரதமர் தனது கைக்கட்டுக்களைத் தளர்த்திக்கொள்ளச் சிறிது அவகாசம் தாருங்கள் என்று ஐரோப்பிய ஒன்றியத்திடம் வேண்டுகோள் விடுக்க வேண்டும் என்பதுவே கூட்டாக எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த சட்டப் பிரேரணை.
ஒரு சேற்றுக் குழியில் பிணமாக இருந்தாலும் இருப்பேனேயொழிய (சும்மா ஒரு பேச்சுக்காக) அக்டோபர் 31ஆம் தேதி வெளியேறுவதில் எந்தவிதமான அவகாசமும் கேட்கமாட்டேன் என்று சூளுரைத்திருக்கிறார் பிரதமர்.
ஆயினும் ஓர் உடன்படிக்கையை எட்டுவேன் என்று பலதரப்பான ஐரோப்பிய ஒன்றியத்துடனான பேச்சுகளில் தன்னையும், தன்னைச் சார்ந்தவர்களையும் ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார் பிரதமர்.
உடன்படிக்கை எட்டுவதற்கான பேச்சுகளைத் தாம் இன்னமும் எதிர்கொள்ளவில்லை என்று நம்பிக்கையின்மையோடு பேசுகிறார்கள் ஐரோப்பிய ஒன்றியத்தினர்.
தமது அடுத்த கட்ட நகர்வுக்கான தொடர் ஆலோசனைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள் எதிர்க்கட்சியினர்.
இந்த இழுபறி நிலையைத் தமக்குச் சாதகமாக்கிக் கொள்ள, இது பாராளுமன்றத்துக்கும், மக்களின் ஐனநாயக உரிமைக்கும் இடையிலான போராட்டம் எனவும் இப்போராட்டத்தில் தான் மக்கள் பக்கம் என்று மக்கள் ஆதரவில் குளிர்காய்கிறார் பிரதமர்.
சில பொதுக் கருத்துக் கணிப்புகளின்படி பிரதமருக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரித்து வருகிறது என்று தெரிவிக்கப்படுகிறது.
எனது நடவடிக்கைகளில் அதிருப்தி என்றால் நான் விடுத்த அழைப்பினை ஏற்று ஒரு பொதுத் தேர்தலை நடத்த ஆதரவு தாருங்கள். மக்கள் யார் பக்கம் என்று பார்த்து விடுவோம் என்று எதிர்க்கட்சிக்குச் சவால் விடுகிறார் பிரதமர்.
தேர்தலுக்கு நாம் தயார் ஆனால் உடன்படிக்கையற்ற ஒரு விலகலை தவிர்த்துவிட்டோம் என்று உறுதிப்படுத்த ஐரோப்பிய ஒன்றியத்திடம் கால அவகாசம் பெற்று அக்டோபர் 31ஆம் தேதி வெளியேற்றம் என்பதை அகற்றுங்கள். அதன் பின்னால் தேர்தலுக்கு நாம் தயார் என்கிறார் எதிர்க்கட்சித் தலைவர்.
போச்சுடா! ஒரு கயிறிழுக்கும் போட்டியைப் பார்ப்பது போலல்லவா இருக்கிறது.
இது இப்படியிருக்க பிரதமர் பொரிஸ் ஜான்சன் மீதான குற்றச்சாட்டுகள் ஒரு முனையிலிருந்து சராமாரியாக வீசப்படுகின்றன.
அவரும், அரச தரப்பும் இந்த ப்ரெக்ஸிட் விவகாரத்தில் உபயோகிக்கும் பதங்கள் மக்கள் மத்தியில் துவேஷ உணர்வுகளை வளர்க்கும் வகையில் அமைந்திருக்கின்றன என்கிறார்கள்.
அத்தோடு ஐக்கிய இராச்சிய அரசியல் வரலாற்றில் ஒரு ஆச்சரியப்பட வைக்கும் நிகழ்வாக இங்கிலாந்து சுப்ரீம் கோர்ட்டு பிரதமரின் பாராளுமன்றத்தை ஒத்திவைக்கும் செயல் சட்ட விரோதமனாது என்று தீர்ப்பளித்ததை அடுத்து பிரதமர் தனது அதிகாரத்தை இழந்து விட்டதனால் பதவி விலக வேண்டும் எனும் கூப்பாடு ஓரத்தில் எழுகிறது.
பிரதமர் லண்டன் நகர மேயராக இருந்த சமயம் அவருக்கும் ஒரு தொழிலதிபரான இளம்பெண்ணுக்கும் இடையில் தகாத உறவு இருந்ததாகவும் அவ்வுறவின் அடிப்படையில் அப்பெண்ணின் நிறுவனத்துக்கு மக்கள் பணத்தில் இருந்து நிதி உதவி செய்தார் என்றும் குற்றச்சாட்டுகள் கிளம்பியுள்ளன.
அதே நேரம் 20 வருடங்களுக்கு முன்னால் ஒரு விருந்தின் போது இப்போதைய பிரதமர், தன் மீது கை வைத்தார் என்று அப்போதைய பெண் நிருபர் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இவையெல்லாம் பிரதமர் மீது எதிரிகள் சுமத்தும் அபத்தமான குற்றச்சாட்டுகள். இதை மக்கள் ஒருபோதும் பெரிதுபடுத்தப் போவதில்லை என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.
தொடர்ந்திருந்து பார்ப்போம் ஒரு பக்கம் வெள்ளம் ஒரு பக்கம் நெருப்பு இரண்டில் ஒன்றுக்குள் அகப்படப் போகிறாரா? இல்லை தனது புத்தி சாதுரியத்தால் அவ்வெள்ளத்தை அந்நெருப்பை நோக்கித் திசைதிருப்பி நெருப்பை அணைக்கப் போகிறாரா?