2019 நவராத்திரி கவிதைகள் 5
மரபின்மைந்தன் முத்தையா
எழுதப் படாத ஏடுகளில்- வந்து
எழுது கோல்முனை தீண்டுகையில்
உழுத நிலத்தில் பயிர்போலே-அங்கே
உதித்திடும் எண்ணம் கொடுப்பது யார்?
பழுது நிரம்பிய மனதுக்குள்ளே -உயர்
பாட்டும் இசையும் பிறப்பதெங்கே
தொழுது சொல்வேன் இவையெல்லாம்- தினம்
தருவது வாணியின் கருணையன்றோ!
பாரதி சரஸ்வதி பேரெழிலாள்- ஒளி
பொலிந்திடும் வெண்மலர் வீற்றிருப்பாள்
நேருறக் கலைகளை ஆண்டிருப்பாள்- அவள்
நேர்த்தியில் கீர்த்தியாய் நிறைந்திருப்பாள்
சீரிய விரல்களின் கோலங்களில்- எழில்
சித்திரம் தீட்டிடும் தூரிகையில்
காரியம் யாவையும் நிகழ்த்திவிடும்-எங்கள்
கலைமகள் பதமலர் வணங்கிடுவோம்!
நான்முகன் படைக்கின்ற உலகமெல்லாம்- எங்கள்
நாயகி கலையின்றிச் சிறந்திடுமோ
வான்வரை வளர்புகழ் பெருமையெலாம்- அவள்
வாரித் தராவிடில் வந்திடுமோ
தேன்மழை அவளது பெருங்கருணை- எட்டுத்
திக்குகள் ஆள்வதும் அவள் அறிவே
மான்விழி நோக்கினில் கலைமகளே -பல
மாண்புகள் நிறைந்திட அருளுகிறாள்!
சுவடிகள் தேன்மலர் ஜெபமாலை -அன்னை
சுந்தரக் கரங்களில் தவழ்ந்திடுமாம்
தவம்செய்த பயனாய் ஒரு வீணை- எங்கள்
தேவியின் திருமடி கிடந்திடுமாம்
நவமென ஒளிர்ந்திடும் கலைகளெலாம்- அவள்
நளினத் திருவிரல் நகங்களடா
அவள் விரல் துகள்படக் காத்திருப்போம்- நாம்
அதன்பின்னர் அவனியை ஆண்டிருப்போம்!