இலக்கியம்கவிதைகள்

கொரோனாவைத் தாண்டி – வ.ஐ.ச. ஜெயபாலன்

வ.ஐ.ச. ஜெயபாலன்

மலர்கிறது முல்லை
கமகமவெனச் சுவர்க்கமாய் உயர்கிறதே
என் மாடித் தோட்டம்.
கிருமியை அஞ்சி ஊரடங்கிய சென்னையின்
மரண அமைதி அதிர
கருவண்டுகள் இசைக்கின்றன
”அஞ்சாதே தோழா” என்னும் பாடல்.

அமேசான் காட்டுத் தீயையும் மிஞ்சி
உலகை வேட்டையாடுதே கொரோனா.
அடாது கொட்டும் வெண்பனியையும்
விழாவாய்க் கொண்டாடும்
ஒஸ்லோ நகரும் முடங்கியதே.
கூதிரில் தனித்த என் மனைவிக்குப்
பூக்களும் இல்லை.
எனினும் எனினும்
இடுக்கண் வருங்கால் நகைக்கும்
புதல்வர்களை விட்டு வந்தேனே..

வெற்றியெனக் கொரோனோ கிருமிகள் துள்ளும்
பெசன்ட் நகர் கடற்கரையில்
கைவிடப்பட்ட படகுகளில் அஞ்சாமல்
நண்டுகள் தொற்றும் இரவில்
குடிசைகளுள்
படகெனத் துயிலும் பெண்டிர் மார்பில்
வலிய விரல்கள் ஊர்கின்றன.

சாத்தானே அப்பாலே போ.
மனிதர்கள் கைவிடப்படுவதில்லை.
ஒருபோதும் வெல்லப்படுவதுமில்லை.

————————————————————

Pic courtesy: https://www.maxpixels.net

Print Friendly, PDF & Email
Download PDF
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க