– மீனாட்சி பாலகணேஷ்

சிறுமிகளின் சிற்றில் விளையாட்டு பல கூறுகளைக் கொண்டதாகும். ‘பொலந்தொடிப் புதல்வனும் பொய்தல் கற்றனன்1,’ எனும் நற்றிணை வரிகள் சிற்றில்பருவ விளையாட்டுப் பலவகைப்பட்டதெனக் கூறாமல் கூறும். பொய்யாக, பாவனையாக, சிறு மணல்வீடுகளைக் கட்டுதல், அதில் தாய்மார்கள் செய்வதுபோல, அடுப்பில் சமையல் செய்து குடும்பத்தோர்க்குச் சோறிடுதல், பாவைகளைத் தமது குழந்தைகளாகப் பாவித்து அவற்றைப் பேணிப் பராமரித்தல், அவற்றிற்கு மணம் பேசுதல், திருமண விருந்து சமைத்தல் ஆகியன இதன்பாற்படும். இனிமையான சிறுமிப்பருவத்தில் உடலுடன் மனமும் வளர்ச்சியடைந்து குழந்தை இளம்பெண்ணாக மாறிக்கொண்டு வருவதன் அடையாளம் இதுவே!

அரிதாகப் பாடப்பட்ட பெண்பால் பிள்ளைப்பருவங்களாக, சிற்றில் பருவத்தின் பல வடிவங்களை,  சிறுவீட்டுப் பருவம் (சிற்றில் இழைத்தல்), சிறுசோற்றுப்பருவம், பாவைவிளையாடல் பருவம் எனச் சில பெண்பால் பிள்ளைத்தமிழ் நூல்களில் கண்டு களிக்கலாம்.

ஆண்பால் பிள்ளைத்தமிழ் நூல்களிலும் இவை பற்றிய கருத்துக்கள், அதாவது பெண்குழந்தைகள் ஆகிய சிறுமியர் சிற்றிலிழைத்துச் சிறுசோறு சமைத்துப் பாவைகளைக் கொண்டு மணம்பேசி விளையாடுவது பற்றிய செய்திகள் சிற்றில்பருவப் பாடல்களில் விரவிக் கிடப்பதனைக் கண்டோம்;

மேலும் இனிமையான கருத்துக்கள் சிலவற்றையும் காண்போம்.

திருச்செந்தூர் பிள்ளைத்தமிழில் சிறுமியர் முருகனிடம் தங்கள் சிற்றிலை அழித்தல் வேண்டாம் என வேண்டும் பாடல் சுவைவாய்ந்தது.

“நீ எங்கள் சிற்றிலை அழிப்பதற்காக நாங்கள் வருந்தவில்லை! சிற்றிலை இழைத்த மணலின் சிறு முத்துக்கள் உனது பூம்பாதங்களை உறுத்தி நோகச்செய்யாதோ?

“பிறை முடித்த சோதியாகிய உன் தந்தை சிவபெருமான் உன்னை ஆசையுடன் எடுத்து முகத்தோடு சேர்த்து அணைத்துத் தோளில் இருத்திக் கொஞ்சிடும்போது உன் உடலிலிருக்கும் புழுதி அவருடைய தோளில் படியாதோ?

“அனைத்து உலகங்களையும் ஈன்றெடுத்தும் வயது முதிராத இளங்கன்னியாகிய உன் தாய் உன்னைத் தனது மடியிலிருத்திக்கொண்டு ஆசையாக முலைப்பாலை அருத்துவிக்கும்போது உனது கழற்கால்களில் உள்ள சிவந்த சிறு மணற்துகள்கள் (எம் சிற்றிலை நீ சிதைத்தபோது அதில் பதிந்த துகள்) அவள்மீதும் படியாதோ?

“ஆகவே முருகா! எம் சிற்றிலை நீ சிதைக்கவேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறோம்,” என்று வேண்டுகின்றனராம். இதுவும் ‘சிற்றிலை அழிக்காதே’ என்பதற்காக சிறுமியர் மேற்கொள்ளும் நல்ல உபாயம்!

 தையல் மடவார் இழைத்தவண்டல்
தன்னை அழிக்கும் அதுக்கல்ல
தரளம் உறுத்தி உனது பொற்பூந்
தண்டைத் திருத்தாள் தடியாதோ
………………………………………………..
வையம் அனைத்தும் ஈன்றெடுத்தும்
வயது முதிரா மடப்பாவை
மடியில் இருத்தி முலையூட்டி
வதனத் தணைக்கில் உன்கழற்காற்
செய்ய சிறுதூள் செறியாதோ
சிறியேம் சிற்றில் சிதையேலே2

திருவிடைக்கழி முருகன் பிள்ளைத்தமிழில் வேறொரு நயத்தைக் காணலாம். சிறிது அறிவார்ந்த சிறுமிகள் சிற்றிலிழைக்கின்றனர். அதனை அழிக்க வரும் முருகப்பெருமானிடம் சில கேள்விகளை முன்வைக்கின்றனர்: “எம்தந்தை செய்யும் ஐந்தொழில்களில் (படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல்) அழிப்பதும் ஒன்றாகும்; அதனை யானும் செய்வேன் என நீ இங்குவந்தால், மற்ற நான்கினையும் எவர் செய்வார்கள் எனக் கூறுவாயாக! அழிப்பது இறைவனின் இளைப்பாற்றும் கருணை என்பர்; ஆனால்  உனது அழிக்கும்தொழிலானது எங்களுக்கு மிக்க இளைப்பினைத் தருகின்றது,” எனக்கூறுவர்.

அழிக்குந் தொழினந் தந்தைதொழி லதனு
லியானு மதுபுரித
லறனே யெனின்மற் றொருநான்கு மார்செய்
தொழிலெங் களுக்குரைத்தி
கழிக்கு மதுவு மிளைப்பாற்று கருணை
என்பார தற்குமறை
கரிநீ யியற்றுன் தொழிறானெங் களுக்கு
மிகவு மிளைப்பேற்றும்
…………………………..3

மேலும், “நீ உலகை அழிக்கும் பிரானின் மகனென்று பெருமைபேசி, நாங்கள் வருந்தி இழைத்த எமது சிற்றிலை அழிப்பாய். அப்பிரானின் உயிராகிய அன்னையோ எனில் அண்டம் முழுவதனையும் சிறுவீடாக ஆக்கி மகிழ்வாள்; அவளுடைய மகனான நீ எங்களிடம் சிற்றிலை அழகுறப் படைக்குமாறு கட்டளையிட்டால் தகாதா? பழியுண்டாகுமா என்ன?” எனக் கேட்கின்றனர்.

மேவியுலக முழுதழிக்கும் விமலன் மகன்யா
னென் றெளியேம்
விரும்பி வருந்தி யியற்றுசிறு வீட்டை
யழிப்பா யனையபிராற்
காவி யனைய பெருமாட்டி யண்ட
முழுதும் சிறுவீடென்
றாக்கி மகிழ்வா ளவண்மகனீ யலையோ
……………………………….
பாவி யேங்கள் சிறுவீட்டைப் படைக்கு
மாறே பணித்தேகில்
பழியுண்டாமோ………………….4

இவையனைத்தும் சிறுமியரின் உளநோக்கில் அமைந்த அழகான, சுவையான எண்ணச் சிதறல்களைக் கொண்டமைந்த பாடல்கள்.

திருவேரகம் சுவாமிநாதன் பிள்ளைத்தமிழ் வேறொரு காட்சியைக் கண்முன் விரிக்கின்றது. சிறுமியர் கூடிப் பாவை விளையாட்டில் ஈடுபட்டுள்ளனர். தத்தம் பாவைகளுக்கு மணம்பேசி முடித்து, விருந்து படைக்க, சிறுசோறு சமைக்கின்றனர். அப்போது அங்குவரும் சுவாமிநாதனாகிய குமரப்பெருமான் அவர்கள் சிற்றிலை அழிக்க முற்படுகிறான். சிறுமியர் அவனிடம் கூறுவதாக அமைந்த இனியபாடல் கருத்துநயமும் இலக்கியச்சுவையும் பொதிந்து இலங்குகின்றது. தம்பிரான் தோழரான சுந்தரமூர்த்தி நாயனாரின் கதையையும் உரைக்கின்றது.

“உனது தந்தை ஒருபெண்ணின் மணத்தை முன்பு தடுத்து நிறுத்தினார். புத்தூர் சடங்கவி சிவாச்சாரியாரின் மகள் சுந்தரரை மணக்க இருந்ததனைச் சிவபெருமான் தடுத்தார். அந்தப் பாவத்திற்காக கால்களில் கல்லும் மண்ணும் குத்தி உறுத்த, திருவாரூர் வீதிகளில் சுந்தரருக்காகப் பரவையிடம் தூது சென்றலைந்தார். அதனை நீ அறியாயோ? நாங்கள் முயன்று பாவைகளுக்குத் திருமணம் முடிக்க எண்ணும் இவ்வேளையினில் வந்து எங்கள் சிற்றிலைச் சிதைக்கின்றனையே! இந்தப் பாவத்திற்காக எத்தனை பெண்களிடம் கால்கள் வருந்த நீ தூதாகச் செல்ல வேண்டிவருமோ?” எனக் கேட்பதாக அமைந்துள்ளது.

‘உந்தை புத்தூர் வருபாவை ஒருத்தி மணத்தை ஒருகால்முன்
ஒழித்த பவத்தால் இருகாலும் உறுத்த ஆரூர் வீதியெலாம்
முந்தை யிருளில் நடந்தலைந்த முறைமை யறியாய்ப் பலகாலும்
முயன்று பாவை பலர்க்குமணம் முடிக்கக் கருதும் வேளையிடை
வந்து சிதைத்தி யிப்பாவம் மலர்கால் சிவக்க எத்தனைகால்
மகளிர் பால்நீ தூதாக வருந்தி நடக்கப் புரிந்திடுமோ?5 என்பது பாடல்.

பெண்குழந்தைகளின் விளையாட்டை ஊன்றி நோக்கிய புலவர் பெருமக்களால்தான் இவ்வாறு சுவைபடப் பாடவியலும் எனலாம்.

சிறுபெண்கள், “சிற்றிலை அழிக்காதே,” என வேண்டுவதாக அமைந்த பாடல்கள் மட்டுமின்றி, ஆன்மீகத்திலாழ்ந்த புலவர் பெருமக்கள், சைவசித்தாந்தக் கருத்துக்களையும் அமைத்துப் பாடல்களை இயற்றியுள்ளனர். சிதம்பர அடிகள் இயற்றியுள்ள திருப்போரூர் முருகன் பிள்ளைத்தமிழில் பலபாடல்கள் இவ்வண்ணம் அமைந்தவை. இந்நூலில் சிற்றிற்பருவம் ஒன்பதாம் பருவமாக அமைக்கப்பட்டுள்ளது.

மலங்கள் நீக்கப்பட்ட தமது அழகிய மனத்தினை அடியவர்கள் சிறுவீடாகக் கொண்டுள்ளனர். இதில் அன்பு, பொறுமை, ஆசைகளை நீக்குதல் ஆகியவற்றால் அடுப்பினை அமைக்கின்றனர். ஆணவமலமாகிய விறகினில் சிவஞானம் எனும் தீயை மூட்டுகின்றனர்; என்றும் நிலைபெறும் உயிரினைப் பானையாக்கி அதில் பொங்கி வழியுமாறு திருவருள் எனப்படும் உலைநீரை நிரப்புகின்றனர். பெருமைவாய்ந்த சிவானந்தம் எனும் இனிமையான சோற்றினை நாள்தோறும் அதில் சமைக்கின்றனர். என்றென்றும் ஒளியாத தற்போத இருள் அகலுமாறு சகசநிட்டை எனும் விளக்கினை ஏற்றிவைத்து, அவ்வடியவரின் நிலையில் தானும்நின்று அருளுபவன் முருகன். சிற்றில் விளையாடும் கீழ்மையிலிருந்து நீங்கிய உள்ளத்தோரால் புகழப்படும் அவன் உமையின் திருமகன். அவனிடம், அத்தகைய பெருமையும் புகழும் வாய்ந்தவனிடம் தாமிழைத்த சிற்றிலை அழிக்க வேண்டா எனச் சிறுமியர் வேண்டுவதாக அமைந்த பாடலிது.

‘அடியார் நிமலத் திருவகத்துள்
அன்பு பொறுமை யவாவறுத்தல்
அடுப்பாங் கமைத்து மலக்காட்டத்
ததிக ஞானக் கனல்மூட்டி
மடியா திருந்த உயிர்க்கலசம்
…………………………
மாறாப் பெருமைச் சிவானந்த
மதுரச் சோறு தினம்பொங்கி
விடியாச் சீவ போதஇருள்
வீய………………6 என்பன பாடல் வரிகளாம்.

சிறுவர்களின் சிற்றில் விளையாட்டினைப் பொருளாக்கி அதனைச் சிவானந்தம் எனும் தேனில் தோயும் அடியவரின் நிலைக்கு உவமையாக்கிக் கூறிய இது அருமையான பாடலாகும்.

குருந்தமலை வேலாயுதசாமி பிள்ளைத்தமிழின் சிற்றில்பருவத்துப் பாடல்களில், ‘சிற்றிலை அழியேல்,’ எனச் சிறுமியர் வேண்டும்போது, சிற்றிலை அழிக்க முற்படும் சிறுவன் முருகனைத் தெய்வமென அவர்கள் உணர்ந்தமையால், தாம் அவனுக்கு வழியடிமை என்றும், எமது உள்ளத்திற் பொருந்தியிருந்து, எங்களுக்கு நன்னெறியை உணர்த்தி, மாயை, கன்மம் ஆகிய மலங்களை நீக்கி, உள்ளத்தில் குடிகொள்ளும் உருவமாகவும், எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்ட அருவமாகவும் உணர்ந்து வழிபடும்படிக்கு எம்மைத் தடுத்தாட்கொள்ள வேண்டும் எனவும் வேண்டுவதாக அமைந்துள்ளது.

‘வழி அடியோம் குடி முற்றவும் ஆட்கொண்டருளும் குமரா!7 என்றும்,

‘…………………………………..கதி
காட்டி, மாயை கன்மம் அறக்
கடத்தி, புறத்தில் அகத்தில் இசை
கண்டம் அகண்டமயம் பொருந்தத்
திருத்தும் கமலச் சேவடியால்…8,’

என்றும் அமைந்த பாடல்களைக் காணலாம். தாம் குழந்தையாகக் கண்டு மகிழ்ந்து களிக்கும் இறைவனே தமது முத்திக்கும் வித்தாவான் எனும் பேருண்மையை அறிந்த அடியார்கள் அதனைப் பாடல்களிலும் பதிவுசெய்துள்ளமை உள்ளத்தைத் தொடுவதாகும்.

வைணவப் பிள்ளைத்தமிழ் நூலாகிய அழகர் பிள்ளைத்தமிழ் காட்டும் சிறுமியர் தங்கள் சிற்றிலை அழிக்கவரும் திருமாலழகனான சிறுவனிடம் உரைப்பது சிந்தைக்கு விருந்தாகின்றது: தெய்வத்தின் திருவடி தீட்சையால், பரிசத்தால் அனைத்துயிர்களும் முத்தி எனும் பெருநிலையினை அடையலாம்.

“வரிசையாக மணிப்பந்தினையும், பொற்கழங்கினையும் ஆடும் சிறுமியரும், செய்குன்றமமைத்தும், வண்டல் மண்ணையிழைத்தும் பொன்னூசலை உதைத்தும் விளையாடும் இளம்சிறுமியரும், மேலும் அவர்கள் விளையாடும் இடங்களில் தேன்சொரியும் பருத்த குரவமரங்களும், அவரவர்கள் கொல்லைகளில் குதித்துவிளையாடும் ஆவின் இளம்கன்றுகளும், பச்சைக் கிளிப்பிள்ளைகளும் ஆகிய இவையனைத்தும் (சிற்றிலை அழிக்க முற்படும்) உன் பாதத்தூளிபட்டு முத்தியாகிய பெருவீட்டினை அடைந்தால் எங்களுடைய இந்தப் பொய்தல் விளையாட்டு அழிந்து படுமே! தாமரைமலரில் வீற்றிருக்கும் பிரமனை உனது உந்தியில் உற்பவித்த தேவே! எமது சிற்றிலை அழிக்க வேண்டா!” என வேண்டும் கருத்தமைந்த பாடல் உள்ளத்தைக் கொள்ளைகொள்ளும்.

கோவை மணிப்பந் தெறிந்தாடும்
கொடிபொற் கழங்கு பனல்வாவி
கொட்குங் கிரணச் செய்குன்று
கொய்பூந் தளவப் பந்தல்வண்டற்
பாவை யுகைக்கும் பொன்னூசல்
பராரைக் குரவந் தேன்கொழுக்கும்
படப்பை குதிக்கு மான்கன்று
பசும்பொற் கிள்ளைப் பிள்ளையிளம்
பூவை யிவையுன் பதத்தூளி
பொதியப் பெருவீ டுறிலடியேம்
பொய்த லொழியு மலர்வனசப்
பொகுட்டி லிருக்கு நான்குமுகத்
தேவைத் திரவுந் தியிலளித்த
சிறுவன் சிற்றில் சிதையேலே9

பல விதமான தொன்மங்களை இணைத்தும் சிற்றிலிழைப்பதுடன் பொருந்தக்காட்டும் உவமைகள் பெருக அழகான பாடல்கள் புனையப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக ஒன்றினைக் கண்டு இக்கட்டுரையை நிறைவு செய்வோம்.

அரும்பாத்தை வேத விநாயகனைிடம் தம் சிற்றிலை அழிக்க வேண்டாமென வேண்டும் சிறுமியர் இன்னொரு புத்திசாலித்தனமான கூற்றை முன்வைக்கின்றனர்.

“சேரமான் பெருமாள் நாயனார் குதிரைமீதேறிச் சென்று கயிலையை அடையுமுன்பே, சிந்தையுருகிப் பைந்தமிழால் கவிபாடி உன்னை வழுத்திப் பூசிக்கும் மேனிமெலிந்த அவ்வையாரை நீ உன் தும்பிக்கையால் தூக்கியெடுத்துக் கயிலாயத்துச் சேர்த்து மேல்வீடளித்தனை; சிறுமிகளாகிய எங்களுக்கு நாங்கள் பாடுபட்டு இழைத்துள்ள இவ்வீட்டினையாவது அழியாது அளிக்கவேண்டாமோ?’ என்கின்றனராம்.

‘சேரற் கிறைவன் வாம்பரிமேற்
சென்றுகயிலை புகுமுன்னே
சிந்தை யுருகிப் பைந்தமிழ்நூல்
செப்பி வழுத்து மப்பொழுது
வீரத் துதிக்கை கொண்டேந்தி
மேனி மெலிந்தவ் வையாருக்கு
மேல்வீ டளித்தாய் சிறுமியர்க்கிவ்
வீடு மளிக்க வேண்டாமோ?10

இவ்வாறு பலப்பல நயங்கள் நிறைந்த பாடல்களைப் பிள்ளைத்தமிழ் நூல்கள்தோறும் கண்டு, படித்து மகிழலாம்.

(வளரும்)

                        ______&_______

பார்வை நூல்கள்;

  1. நற்றிணை
  2. திருச்செந்தூர் பிள்ளைத்தமிழ்- பகழிக்கூத்தர்
  3. திருவிடைக்கழி முருகன் பிள்ளைத்தமிழ்- மகாவித்துவான் மீனாட்சிசுந்தரனார்
  4. மேலது.
  5. திருவேரகம் சுவாமிநாதன் பிள்ளைத்தமிழ்- கு. நடேச கவுண்டர்
  6. திருப்போரூர் முருகன் பிள்ளைத்தமிழ்- சிதம்பர அடிகள்
  7. குருந்தமலை வேலாயுதசாமி பிள்ளைத்தமிழ்- தவத்திரு கந்தசாமி சுவாமிகள்
  8. மேலது
  9. அழகர் பிள்ளைத்தமிழ்- கவி குஞ்சரம் ஐயர்
  10. அரும்பாத்தை வேதவிநாயகர் பிள்ளைத்தமிழ்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *