இலக்கியம்கவிதைகள்மரபுக் கவிதைகள்

2019 நவராத்திரி கவிதைகள் 7

மரபின் மைந்தன் முத்தையா

சூரியனை, சந்திரனை, சூடுகிற தோடாக்கி
சுந்தரி நீ நிற்கிறாய்
சூட்சுமங்கள் நிகழ வைத்து சாட்சியங்கள் இல்லாமல்
சுடராக ஒளி  பூக்கிறாய்
காரியங்கள் அத்தனையும் கணப்பொழுதில் ஆக்கிவிட்டு
கல் வடிவில் ஏன் நிற்கிறாய்
காண வரும் பக்தர் நலம் பேணுகின்ற அபிராமி
காண்பதெல்லாம் நீ ஆகிறாய்
காரிகையே உன்னுடைய காலசையும் ஜதியினிலே
கூத்தனவன் புன்னகைக்கிறான்
காலகாலன் மனம்நெகிழும் காதலிலே நீபோடும்
கட்டளைக்கே ஆட்படுகிறான்
பேரிகையின் ஒலியெல்லாம் பேரழகே உனைப்பாடும்
பெரியவிழா நவராத்திரி
பேணுமொரு தாயாகி புவனமெலாம் காக்கின்ற
பேரரசி அபிராமியே!

துந்துபிகள் ஒலிசெய்ய தும்பிகளும் களிசெய்ய
துதிக்கின்ற சுகம்போதுமே
தந்ததிமி தாளங்கள் திசையதிரும் மேளங்கள்
தரிசன சுகம்போதுமே
சிந்துரத் திருநுதலில் சிரிக்கின்ற குங்குமம்
சுகந்தத்தின் சுகம்போதுமே
சுடர்வீசும் தீபங்கள் இடர்தீரும் நேரங்கள்
சரணென்று விழும் நேரமே
வந்தவினை  தரியாமல் சென்றவழி தெரியாமல்
விடைபெற்று விரைந்தோடுமே
வந்தனைக்குச் செந்தமிழும் வண்ணவண்ண சந்தமுடன்
வரிசையில் சுழன்றாடுமே
கந்தனைப் பயந்தவளே கண்பதியைத் தந்தவளே
ககனத்தின் அன்னைநீயே
கரும்பேந்தி நிற்கின்ற கற்பக விருட்சமே
கலையேயென் அபிராமியே!

குங்கிலியக் கலயரின் கைகளிட்ட தூபங்கள்
காற்றிலின்றும் மணம்வீசுதே
கடவூரின் தெருவெங்கும் நாயன்மார் பாதங்கள்
கல்வெட்டு போல்நின்றதே
குங்குமத்தின் வாசத்தில் குறைமறந்த பட்டர்முன்
கோலநிலா  எழுகின்றதே
குற்றமிலா மார்க்கண்டன்  முற்றத்தில் தொழுதவிதம்
கண்ணுக்குத் தெரிகின்றதே
பொங்கியெழும் கடலோசை புண்ணிய  வடிவேஉன்
புகழ்பாடித் திரிகின்றதே
பொன்னெழுந்த பாவனையில் மின்னெழுந்த திருக்கோலம்
பார்வையை நிறைக்கின்றதே
இங்கும்நீ அங்கும்நீ எங்கெங்கும் நீயேதான்
எனக்கின்று புரிகின்றதே
இதழோரம் நகைவீசி என்னோடு கதைபேசி
எனையாளும் அபிராமியே!

Print Friendly, PDF & Email
Download PDF
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க