குழவி மருங்கினும் கிழவதாகும் – 20
மீனாட்சி பாலகணேஷ்
(காமநோன்புப் பருவம்- பெண்பால் பிள்ளைத்தமிழ்)
அரிதாகப் பாடப்பட்டுள்ள பெண்பால் பிள்ளைத்தமிழின் அழகிய பருவங்களுள் ஒன்றே காமநோன்புப் பருவமாகும். இதுவும் ஆண்டாள் பிள்ளைத்தமிழ் ஒன்றில்மட்டுமே காணப்படுகிறது. முழுமையான பருவமாகப் பத்துப்பாடல்களால் பாடப்பட்டுள்ளது. திருமாலின் இராமாவதாரம், கிருஷ்ணாவதாரம் ஆகியவற்றின் ஒப்பற்ற தொன்மங்களையும், ஆண்டாள் பாடியுள்ள நாச்சியார் திருமொழியின் அழகமைந்த கருத்துக்களையும் தன்னகத்தே கொண்டு தனிப்பெருமை வாய்ந்து விளங்குகிறது இக்காமநோன்புப் பருவம்.
ஆண்டாள், தான் காமநோன்பு மேற்கொண்டதனை, ‘தையொரு திங்கள்’ எனும் பாசுரத்தில் அழகுறப் பாடியுள்ளாள். ஆகவே இப்பிள்ளைத்தமிழை இயற்றிய புலவரும் பிள்ளைத்தமிழ் இலக்கணத்திற்கேற்பப் பெண்பாற் பிள்ளைத்தமிழில் வரக்கூடும் ‘ஐங்கிணைக் கிழவனை ஆர்வமொடு நோற்றல்’ எனும் பருவத்தையே, சிறுமியர் ஆற்றில் நீராடி, பாவைகளைச் செய்து, ஐங்கணைக்கிழவனாகிய மலர் அம்பு வீசும் காமதேவனாகிய மன்மதனுக்கு சூடிக்கொடுத்த் சுடர்க்கொடியாள் ஆர்வமுடன் நோற்கும் நோன்பான ‘காமநோன்புப்பருவமாகப் பாடி மகிழ்ந்துள்ளார் எனலாம்.
நூலில் இப்பருவம் பொன்னூசற்பருவத்தின் பின் கடைசிப்பருவமாக வைக்கப்பட்டுள்ளது. ஐந்து முதல் ஒன்பது வயதுள்ள சிறுமியரால் மட்டுமே செய்யப்படுவது காமநோன்பாகும். இது விளையாட்டன்றி, நல்லதொரு மணாளனை அடைய இளம்பெண்கள் நோற்கும் நோன்பாகும். இது வடநாட்டில் ‘காத்யாயனி நோன்பு’ என அறியப்படும். காத்யாயனி எனப்படும் அன்னை பார்வதியின் சகோதரனான கிருஷ்ணனை மணாளனாகப் பெற இளம்பெண்கள் நோற்ற நோன்பே இது. இது பற்றிய விளக்கங்களை ஸ்ரீமத் பாகவதத்தில் காணலாம்.
ஸ்ரீ ஆண்டாள் பிள்ளைத்தமிழில் இப்பருவத்திலுள்ள பத்துப்பாடல்களும் ‘காமநோன்பது தவிர்கவே!’ எனும் சொற்களுடன் முடிவடைகின்றன. பாடல்களின் உட்பொருளை ஆழ்ந்து நோக்கினால், “பெண்ணே! நீ உன் செயல்களால், நீ நோற்ற நோன்பினால் அவ்விறைவனை அடைந்து விட்டாய்! இனிக் காமநோன்பு நோற்பதெதற்கு? அதனைத் தவிர்த்துவிடு,” எனக் கூறுவதனைக் காணலாம்.
பிள்ளைத்தமிழ்ப் பாடல்களைக் காணப்புகுமுன் ஆண்டாள் எவ்வாறு காமநோன்பு நோற்றாள் என அவளே தனது திருமொழிகளில் பதிவு செய்துள்ளதனை அறிந்து கொள்ள வேண்டுமல்லவா?
ஆண்டாளின் பாசுரங்கள் இந்நோன்பு நோற்கும் வகைமுறையை நன்கு விளக்குகின்றன. மார்கழிமாதம் முழுமையும் திருப்பாவை பாடி, பாவைநோன்பு நோற்றபின், தைமாதம் முழுவதும் தரையை நன்கு சுத்தப்படுத்தி, சம்பிரதாயமான கோலங்களை இட்டு வழிபாடு செய்யும் அவ்விடத்தை நன்கு அலங்கரிக்கிறாள் ஆண்டாள்.
‘தையொரு திங்களும் தரைவிளக்கித்
தண்மண் டலமிட்டு1….‘ காமதேவனையும் அவன் தம்பி சாமனையும் வழிபடுகிறாள்.
பின்பு கண்ணபிரான் வரும்வழியை நுண்ணிய வெண்மணலால் அலங்கரித்துவைத்து, கீழ்வானம் வெளுக்குமுன்பு எழுந்து நீராடி, காலை, பகல், மாலை ஆகிய மூன்றுபொழுதுகளிலும் பலவிதமான நன்மலர்களைச் சாற்றிக் காமனை வழிபடுகிறாள்.
‘காயுடை நெல்லொடு கரும்பமைத்துக்
கட்டியரிசி அவலமைத்து2,’ அவற்றை ஒன்றுசேர்த்து, அக்கார அடிசிலாக்கிச் சமைத்தும், காமநூலில் தேர்ச்சி பெற்ற அந்தணர்கள் மந்திரம் ஓத, சுவரில் காமனின் பெயரை எழுதிவைத்து, அவனுடைய கொடி, குதிரைகள், கரும்புவில் ஆகியவற்றையும் எழுதிக்கொண்டும் காமனிடம் தன்னைக் கண்ணபிரானிடம் சேர்த்துவைக்க வேண்டிப் பூசிக்கிறாள். இவ்வாறெல்லாம் செய்தவள்,
‘மானிட வர்க்கென்று பேச்சுப்படில்
வாழகில் லேன்கண்டாய் மன்மதனே3!’ என்றும் அவனிடம் தனது உறுதியையும் மொழிகிறாள்.
இவ்வாறெல்லாம் நோன்புநோற்றதனால்தான்
‘மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத
முத்துடைத்தாமம் நிரைதாழ்ந்த பந்தற்கீழ்
மத்துனன் நம்பி மதுசூதனன் வந்து தன்னைக்
கைத்தலம் பற்றக் கனாக்கண்டு4‘ பின் அக்கண்ணனையே மணாளனாகவும் பெற்றனள் அல்லவோ? ஆகவே அவள் இன்னும் எதற்காகக் காமநோன்பு நோற்றல்வேண்டும்? ‘அதனைத் தவிர்ப்பாயாக!’ என்று வேண்டும் பாடல்கள் சுவையானவை.
ஸ்ரீ ஆண்டாள் பிள்ளைத்தமிழ்ப் பாடல்களில் சிலவற்றை நோக்கலாமா?
புலவர் கூறுவார்: ‘தமிழால் ஆன பாமாலைகளே தனக்கு விருப்பமானவை என்றும், கையால் தொடுத்துப் பூமாலை அணிவித்துத் தொண்டுசெய்யும் அன்பர்களே தனக்கு விருப்பமான தொண்டர்கள் என்றும் கொண்டு ஒப்பற்ற ஒளிவடிவாகிய திருமால் திருமழிசை ஆழ்வார், கணிகண்ணன் ஆகியோர் பின் சென்றான்.
அத்திருமாலானவன் தான் பள்ளிகொண்டிருக்கும் பாற்கடலை விட்டு நீங்கி, திருமாலிருஞ்சோலைமலை, வேங்கடமலை ஆகிய இருமலைகளின் மீது இருவடிவங்கள் தரித்து உன்னைப் பெறுவதற்காகத் தவம் செய்து நிற்கின்றனனே!
பொன்னி நதியான காவேரியின் நடுவில் (திருவரங்கத்தில்) பள்ளிகொண்டுள்ள அவன் தன் மதிமுகத்தினைத் தெற்குநோக்கி வைத்தவண்ணம் துயில்கின்றான். அவனுக்கு இரு தேவியர் காவல் உள்ளனர். இருப்பினும் தேவாமுதத்தினையும் சிறந்த செல்வத்தையும் அடைய காவல்களை மீறிச்செல்ல யார்தான் தயங்கமாட்டார்கள்? அமுதம்போன்ற உன்னையடைய அவன் இக்கட்டுக்காவல்களால் தயங்கிநிற்பானோ எனும் பொருள் தொக்கிநிற்கின்றது.
புதுவை அந்தணர்களில் சிறந்தவரான ஸ்ரீவில்லிப்புத்தூர் பெரியாழ்வாரின் புதல்வியே! இதனால் நீ காமநோன்பினைத் தவிர்த்தல் வேண்டும்,’ எனும் கருத்துச் செறிந்த பாடல்.
‘சொல்தமிழ்ப் பாமாலை நாட்டியும் பூமாலை
சூட்டியும் தொண்டுபுரிவார்
தொண்டர்தம் தொண்டரென்று அவர்கள்பின் தொடரும்…
………………………………….
உம்பரமு தும்திருவும் எய்துதற்கு எவர்களே
உலகத்தில் எதிர்கொண்டிடார்?
கற்றவர் புகழ்ந்ததென் புதுவைஅந் தணர்புதல்வி!
காமநோன் பதுதவிர்கவே5!’ என்பன பாடல்வரிகள்.
‘உன்னையடைய அவ்வேங்கடவன் தவமியற்றுகிறான், நீ எதற்காக நோன்பியற்றுகிறாய்?’ என்றுகூறிக் காமநோன்பினை அவள் தவிர்க்க வேண்டியதனை வலியுறுத்தும் சுவையான பாடலிது.
மற்றொரு பாடல் இன்னும் கற்பனைவளம் சுரக்க அமைந்துள்ளது. புலவர் கூறுவார்:
‘அண்ணல் அவன் சுந்தரத்தோள் அழகன் என உலகம் கூறுவது என்னவோ உண்மைதான். ஆனால் மறைகளோ அது பொய் என்பதுபோல, அவனை ‘ஆண் அல்லன், பெண் அல்லன், அலி அல்லன்’ என்றும், (குள்ள)வாமன வடிவங்கொண்டவன் என்றும் தூற்றுவது போலப் போற்றும்!
‘முன்பு வெண்ணெய் திருடி உண்ட குற்றம் ஒன்று மட்டுமின்றி, வேறுபல குற்றங்களும் செய்தவன் அவன்! மாடுகளை மேய்ப்பவன்! ஆயர் குலத்தவன்; வில்விசயனுக்குத் தேர்ப்பாகனாக ஏவல் செய்திருந்தவன்.
‘மண்ணாசை கொண்ட பாண்டவர்களுக்காக ஓலையைத் தூக்கிக்கொண்டு தூதனாக அலைந்தவன். இவன்மீது அடுக்கிக்கூற வேறு என்னவெல்லாம் குற்றங்களைச் செய்துள்ளானோ? அவனிடம் நீ வலிந்து ஆசைகொண்டது ஏனோ? (உன்னை மணக்க அவனிடம் என்ன தகுதி இருக்கின்றது?) உன் காமநோன்பைத் தவிர்க!’ என் வேண்டுவதாக அமைந்த பாடல்.
அண்ணலார் சுந்தரத் தோளழக ரெனுமுலகம்
அஃதுண்மை யன்றிமறைதான்
ஆணலன் பெண்ணல்ல னலியல்ல னென்பதுடன்
அரியகுற ளுருவனென்றும்
……………………………………………………………..
மற்றுமெக் குற்றமென் றெண்ணுவே னவனைநீ
வலியவேட் கின்றதென்னோ
கண்ணகன் புத்தூர் விளங்கவரு கோதையே
காமநோன் பதுதவிர்கவே!6
……………………………………………………….’
ஈண்டு,
ஆணல்லன் பெண்ணல்லன் அல்லா அலியுமல்லன்
கானலும் ஆகான்; உளனல்லன்; இல்லையல்லன்
பேணுங்கால் பேணு முருவாகும்; அல்லனுமாம்
கோணை பெரிதுடைத்தெம் பெம்மானைக் கூறுதலே!7 எனும் ஆழ்வார் பாடல் நினைவுகூரத்தக்கதாம்.
திருமாலின் பெருமைகளை, அவற்றை மாற்றி இழிசெயல்களாகக் கூறுவது போலக்கூறி (தூற்றுமறைத் துதியாக) அத்தகைய ஒருவனை மணக்கவா இக்காமநோன்பு? அதனைத் தவிர்ப்பாயாக என்கிறார் புலவர்! வளமான, சுவையான, இனிமையான கற்பனை!
மேலுமொரு பாடலில் காமனையும் ஆண்டாளையும் ஒப்பிடுகிறார் புலவர்.
‘காமனிடமுள்ளது ஒரு கரும்புவில்; இளங்குமரி உன்னிடமோ இரு கரிய புருவங்களெனும் வில் உள்ளது. காமன் பொருத்தமான தேன்சிந்தும் கருங்குவளை மலரம்பினை வண்டெனும் நாணைப்பூட்டிச் செலுத்துவான்; நீயோ, உன் கண்மலர்களாகிய அம்புகளை அழகாக அவை புகவேண்டிய இடத்தில் (அரங்கன் நெஞ்சினில்) கருணை எனும் நாண்கொண்டு செலுத்தி அவனுடைய நிறையெனும் அறிவைத் திறைகொள்ளும் பார்வையையுடையவள்.
‘ஒருகரும்பு ருவவிற் குமரனவ னிருகரும்
புருவவிற் குமரியாநீ
ஒன்றுகட் காவியம் பாணத்தை யளியநா
ணுறநின் றுடக்குமவன்8,’
‘இருளையே தன்னிடமாகக் கொண்ட இரவே காமனுக்கு யானையாகும். நீயோ தாபத்தினால் பெருமூச்சு எழுவதனால், ஈரம் வற்றாத கத்தூரியை அணிந்ததும், அணியப்பட்ட கச்சுடன் நிமிர்ந்து விளங்குவதுமான முலைகளை இருயானைகளாகக் கொண்டவள்.
‘கரியமுகில் போன்ற அழகரைக் காதலில் வெற்றிகொள்ள இத்துணை தகுதிகள் உனக்கிருக்க, நீ உருவமற்ற காமனை ஏன் வேண்டி நிற்கிறாய்? உன் அழகிய திருவுருவே போதுமே! காமநோன்பினைத் தவிர்த்து விடுக!’ எனக் கூறும் பாடல்.
கருமுகிற் குழகரழ கரைவெல்ல வுருவிலாக்
காமனேன் வில்லிப்புத்தூர்க்
கன்னியே! நினதுதிரு வுருவொன்று மமையுமே
காமநோன் பதுதவிர்கவே8.
இதுபோன்றே அடுத்தடுத்த பாடல்களில் ‘வாரணமாயிரம்,‘ எனும் நாச்சியார் திருமொழியில் ஆண்டாள் கனாக்கண்டதாக விவரிக்கும் வரிகளை நினைவுகூரவைத்துப் பாடல்களை இயற்றியுள்ளமை மிக்க நயமானதாகும்.
ஐங்கணைக்கிழவனான காமவேளை ஆர்வமுடன் சிறுபெண்கள் வழிபடுவது என்பது தொன்றுதொட்டு இருந்துவரும் வழக்கமாகும். இதற்குப் பாவைநோன்பும், ஆண்டாள் திருப்பாசுரங்களும் சான்றுகளாக உள்ளன.
பிள்ளைத்தமிழ் இலக்கண நூல்கள் வகுத்த இலக்கணத்திற்குப் பொருந்த சிற்சில பிள்ளைத்தமிழ் நூல்களிலேயே அவ்வருமையான பருவங்களைப் புலவர்கள் பாடிப் பதிவு செய்து வைத்துள்ளதனைக் காண்கிறோம். ஆகவே இவை படித்துப் போற்றி மகிழத்தக்கனவாக விளங்குகின்றன.
இனி அடுத்த பகுதியில் பொய்தல் விளையாட்டின் மற்றொரு பருவத்தைக் கண்டு களிப்போம்.
பார்வை நூல்கள்:
1, 2, 3. ஸ்ரீ ஆண்டாள்- நாச்சியார் திருமொழி “தையொரு திங்கள்”
4. ஸ்ரீ ஆண்டாள் – நாச்சியார் திருமொழி “வாரணமாயிரம்”
5, 6. ஸ்ரீ ஆண்டாள் பிள்ளைத்தமிழ்.
7. ஆழ்வார் பாடல் – திவ்வியப்பிரபந்தம்.
8. ஸ்ரீ ஆண்டாள் பிள்ளைத்தமிழ்.
(தொடரும்)