குழவி மருங்கினும் கிழவதாகும்- 13.1
மீனாட்சி பாலகணேஷ்
(சிறுதேர்ப்பருவம்- ஆண்பால்)
ஆண்பால் பிள்ளைத்தமிழின் பத்தாம் பருவமாக சிறுதேர்ப் பருவம் அமையும். சிறுதேர் உருட்டுதலானது சிறுகுழந்தை நன்கு நடை பழகுவதற்காகவும், ஓடியாடி விளையாடவும் வகைசெய்யும் விதத்தில் ஊக்குவிக்கப்படும் விளையாட்டாகும். தற்காலத்திலும் குழந்தைகளுக்கு நடைவண்டி என நடை பழகுவதற்காக மரத்தாலான மூன்றுகால் சக்கரவண்டி ஒன்றினைக் கொடுப்பதனைக் கிராமப்புறங்களில் காணலாம். நகரத்துக் குழந்தைகள், நான்கு சக்கர ஊர்தி பொம்மைகளையும், நாய்க்குட்டி பொம்மைகளையும் கயிற்றால்கட்டி இழுத்தவண்ணம் நடப்பதனைக் காணலாம்.
‘பொற்காற் புதல்வர் புரவியின் றுருட்டும்
முக்காற் சிறுதேர்1,’ என்று பட்டினப்பாலை, இச்சிறுதேரினை, சிறு குழந்தைகள் புரவியில்லாது உருட்டி விளையாடும் மூன்றுகால்களாலான சிறுதேர் எனக் கூறும்.
ஐங்குறுநூறு, தலைவனின் உள்ளம் தன்மகன் புன்னகை புரிந்தவாறு தளர்நடை நடந்து சிறுதேர் உருட்டும் அழகினைக்கண்டு தலைவியைவிடப் புதல்வனிடத்தில் அன்புமிகுதியால் ஈடுபட்டதனைக் கூறுகிறது.
‘புணர்ந்தகா தலியின் புதல்வன் தலையும்
……………………………………………………………………
சிறுதேர் உருட்டும் தளர்நடை கண்டே2,’ என்பன பாடல்வரிகள்.
பிள்ளைத்தமிழின் ஒவ்வொரு பருவத்திலும் பாட்டுடைத் தலைவன் அல்லது தலைவியின் சிறப்புகள் கூறப்படும்; சப்பாணி, அம்மானை, சிறுபறை ஆகிய பருவங்கள் கைகளைப் பாடுபொருளாகக் கொண்டமையும்; வருகை, சிற்றில் (ஆண்பால்) ஆகியன கால்களைப் பாடுபொருளாகக் கொண்டு அவற்றின் சிறப்பைப் பேசும். தளர்நடை நடக்கும் ஆண்மகவு இழுத்துச் செல்லும் சிறுதேரைப்பேசும் சிறுதேர்ப்பருவம், தலைவன் செலுத்தும் தேர் தொடர்பான பல செய்திகளைத் தெரிவிக்கும்.
இவையே பிள்ளைத்தமிழின் தனிச்சிறப்பாகும்.
தளர்நடைபயிலும் சிறு ஆண்மகவு நடக்கக் கற்றுக்கொண்டு விட்டதனால் அவனுடைய தாய் அவனுக்கு விளையாட தச்சனிடம் செய்து வாங்கிய ஒரு அழகான சிறுதேரினைக் கொடுத்திருக்கிறாள். இலேசான, கனமற்ற மரத்தால் குழந்தை விளையாடுவதற்காகவே செய்யப்பட்டு, குழந்தை கையிலோ காலிலோ குத்திக் காயம் பண்ணிக்கொள்ளாமலிருக்க முன்னெச்சரிக்கையாக கூர்மையான முனைகள் எல்லாம் தேய்த்து மழுங்கவைக்கப்பட்டு செய்விக்கப்பட்ட விளையாட்டுத்தேர்! சிவப்பு, பச்சை, மஞ்சள் எனக் கண்ணைக்கவரும் வண்ணங்கள் பூசப்பட்டு, சில பட்டுத்துணித்துண்டுகளால் கொடிகளும் பறக்கும்படி அமைந்து மிக அழகாக இருக்கிறது. தாய் தனது ஆசைப்படி அதில் ஒரு அழகான அன்றலர்ந்த தாமரைப்பூவினையும் செருகிவைத்திருக்கிறாள்.
இந்தத்தேரை அழகான ஒரு மணிக்கயிற்றினால் கட்டி, குழந்தை அதனை இழுத்து உருட்டும்போது ஒலியெழும்படியாகச் சில மணிகளையும் அங்கங்கே இணைத்துள்ளான் அதனைச் செய்த தச்சன். மிக்க மகிழ்ச்சியுடன் சிறுகுழந்தை தேரை இழுத்துக்கொண்டு செல்கிறான். தேர்ச்சக்கரங்கள் உருளும்போது மணிகள் இனிமையாக ஒலிக்க அதனை இழுத்து உருட்டும் தன் மகனைக்கண்டு தாயின் மனம் ஆனந்தத்தில் பூரிக்கின்றது. குழந்தையும் புது விளையாட்டில் உற்சாகமாக ஈடுபட்டுத் தெருவெங்கும் தேரினை இழுத்தவண்ணம் நடந்து செல்கிறான்.
இந்தக்குழந்தை நம்மையெல்லாம் காக்கும் செந்தில்வாழ் கந்தன்; சேவற்கொடி கொண்ட குமரன். பக்தியிலும் தாயன்பிலும் திளைக்கும் புலவர் பகழிக்கூத்தர் தாமியற்றியருளிய திருச்செந்தூர் பிள்ளைத்தமிழில் குமரன் சிறுதேர் உருட்டுவதனை பரவசமாக வருணிக்கிறார்: குமரன் தேருருட்டுங்காலை மற்றும் பலரும் பலவிதமான தேர்களை உருட்டுகின்றனர் எனக்கூறும் நயம் வியக்கத்தக்கது.
‘தேவர்களுக்கரசன் இந்திரன்; மணம்மிகுந்ததும் தேன்சொரிவதுமான மாலைகளை அணிந்தவன்; ஆயிரம் யாகங்களைச் செய்து இந்திரபதவி பெற்று தக்கதருணத்தில் அரியாசனத்தில் அமர்ந்தவன்; அவனுடைய அழகிய தேரினை ஓட்டுபவன் (தேரினை உருட்டுபவன்) மாதலி எனும் பெருமைமிக்க தேர்ப்பாகன். உலகின் நிலைப்பாடு அழிந்துபட்டதென்று குபேரன் எனும் தேவன் தானும் ஒரு தேரை உருட்டுகிறான். அது என்ன? பழங்காலம்தொட்டே பகைமைகொண்ட அரக்கர்கள் அச்சமடையும்படி, வடவரையாகிய இமயத்தினைப்பொரும் புஷ்பகவிமானத்தினை அவன் செலுத்துகிறான் (புட்பகத்தேரை உருட்டுகிறான்). வெற்றிமிகும்படி உதித்தெழுகின்ற ஆயிரம்கதிர்களைக் கொண்ட கதிரவன் ஆகாயத்தில் ஒளிபரப்பியவண்ணம் கோலம் நிறைந்த அழகான ஒளிவட்டத்தைப் பரிவட்டமாகக் கொண்டு சுடர் வீசுகின்றான்: உலகினைத்தன் ஒளியால் துலக்கி விளக்கமுறச் செய்கின்றான். சூரியனின் தேரோட்டியான அருணன் முட்கோல் எனப்படும் தேரோட்டுபவனின் கைக்கோலை (சாட்டைக்கோலை) எடுத்துக்கொண்டு வலிமைமிகுந்த தேரினை உருட்டிவருகிறான். ஆகவே, செந்தில்பதியில் வாழும் கந்தனே! நீயும் உனது சிறுதேரினை உருட்டி வருவாயாக!’ எனப் பகழிக்கூத்தர் வேண்டுகிறார்.
தண்டே னுடைந்தொழுகு மருமாலை நீள்முடி
தரிக்குஞ் சதக்கிருதுசெந்
தருணமணி ஆசனத் தேறமா தலிசெழுந்
தமனியத் தேருருட்டப்
………………………………………………………………………………
கொண்டே உதித்தசெங் கதிரா யிரக்கடவுள்
குண்டலந் திருவில்வீசக்
……………………………………………………………………………….
திண்டே ருருட்டவளர் செந்தில்வாழ் கந்தனே
சிறுதேர் உருட்டி யருளே
சேவற் பதாகைக் குமாரகம் பீரனே
சிறுதேர் உருட்டி யருளே3.
புலவரின் ஆவல் இத்துடன் நிறைவுபெறவில்லை! இன்னும் யார்யார் என்னவெல்லாம் உருட்டினார்கள் எனக் குறிப்பிடுவதிலேயே முனைப்பாக இருக்கிறார். இதுவுமொரு அழகிய சொல்நயமும் தமிழ்நயமும் செறிந்த பாடல்!
வாரணிந்த இளமுலைகளைக் கொண்ட இடைச்சியர்கள் (பொதுவியர்) தங்கள் ஆடை மோரினாலும் தயிரினாலும் முடைநாற்றம் வீசும் தகைமையர். தயிரினைக் கடைந்து வெண்ணையையும் உருண்டைகளாக உருட்டி, வெண்தயிரையும் உறிகளில் சேமித்து வைத்திருக்கிறார்கள். அவர்களுடைய வீடுகளுக்குள் கள்வனைப்போல் மெல்லப்புகுந்து அந்தத் தயிரினை உண்கிறான் ஒருவன்; பின் குடைத்தை உருட்டித்தள்ளி அதிலிருந்து வெண்ணையையும் அள்ளிவாரி (உருட்டி வாயில் இட்டுக்கொள்ளக்கூட அவகாசமின்றி) யாரும் காணும்முன்பு திருட்டுத்தனமாக மிக அவசரமாக வாயில் திணித்துக்கொண்டு உண்டுவிடுகிறான்; அதன்பின்பு தனது செங்கனி வாயினையும் துடைத்துக்கொண்டு ஒன்றுமே தெரியாதவன் போலச் செல்பவன், ஒரு பருத்த பெரிய சகடத்தைச் சிலம்பணிந்த தனது சிறுகாலால் எட்டியுதைத்து உருட்டி விளையாடிச் சிதைக்கிறான்! யாரிவன்? சகடாசுரனைக் கொன்ற கிருஷ்ணபெருமானே இவன். ‘அந்தப் பச்சைமாலின் மருகனே’ என முருகனைப் புலவர் விளிக்கிறார்: இவ்வாறு மாமனின் ‘சிறப்பைக்’கூறி விளித்த மருகனாகிய முருகனிடம், “உன்னிடம் தீராத பெரும்பக்தி கொண்ட அடியவர்களின் பழவினைகளாகிய கொடுமைகள் தீருமாறு நீ அத்தீமைகளைப் புறந்தள்ளி (உருட்டிவிட்டு) அனுக்கிரகம் செய்கிறாய் முருகா! மேலும் அத்துணை உலகங்களிலும், அண்டபகிரண்டங்களிலும் உனது ஆணை (கட்டளை, அதிகாரம்) எனும் ஆக்ஞாசக்கரத்தை (ஆழியை) உருட்டிக் காக்கிறாய். இவ்வாறு செய்து, உனதடியைச்சேராத/வணங்காத அசுரர்களின் தலைகளாகிய குவடுகளை (மலைகளை) உருட்டுகின்றனை! நீ இந்தச் சிறுதேரையும் உருட்டியருளுக,” என வேண்டுவதாக இப்பாடல் அழகுற அமைகிறது.
‘சேவற்பதாகைக் குமாரகம்பீரனே,’ என ஆசையாக விளிக்கிறார். சேவல்கொடியைக்கொண்டு கம்பீரமாக விளங்குபவனே எனும் இப்பிரயோகம் தனித்துவம்கொண்டு விளங்குகிறது.
வாராரும் இளமுலை முடைத்துகிற் பொதுவியர்
மனைக்குட் புகுந்து மெல்ல
வைத்தவெண் தயிருண்டு குடமுருட் டிப்பெருக
வாரிவெண் ணெயை யுருட்டிப்
பாராமல் உண்டுசெங் கனிவாய் துடைத்துப்
பருஞ்சகடு தன்னையன்று
பரிபுரத் தாளால் உருட்டிவிளை யாடுமொரு
பச்சைமால் மருக ……………………..
……………………………………………………..
அண்டபகி ரண்டமும் அனைத்துலக முஞ்செல்லும்
ஆணையா ழியையு ருட்டிச்
சேராநி சாசரர் சிரக்குவ டுருட்டநீ
சிறுதேர் உருட்டி யருளே4
முருகன் உருட்டும் சிறுதேரானது ஒவ்வொரு அடியாரின் உள்ளத்திலும் விதம்விதமான கற்பனைகளை உண்டுபண்ணுகின்றது.
திருப்போரூர் முருகன் பிள்ளைத்தமிழின் ஆசிரியர் சிதம்பர அடிகளார் மனித உடலையே முருகன் எனும் தெய்வக்குழந்தை படைத்து உருட்டும் அற்புதமான தேராக உருவகிக்கிறார். பாதங்களே தேரின் சக்கரங்களாகவும், எலும்பே பெரிய பலகையாகவும், சொல்லும் நாடியே அச்சாணியாகவும், பருத்தமார்பு தேரின் தட்டாகவும், காற்றாடியைப்போல அலமலந்து சுழலும் வஞ்சம் நெருங்கிய ஐம்பொறிகள் சிறப்பான தேர்க்கொடிஞ்சியாகவும் உள்ளன; விருப்பம் பொருந்திய சிகையே தேர்க்கொடிஞ்சியாக அமைய, பேசும் சொற்களே பல வாத்தியங்களின் தொகுக்கப்பட்ட ஒலியாக அமைகின்றது; இவ்வாறு பெரிய வேகம் மிகுந்த பலவகை மாறுபாடுகளையும் கொண்ட உடல் எனக் கூறப்படும் தேரின்மீது பெறுதற்கரிய உயிர் எனப்படும் ஒரு சிறுவனை அமரச் செய்துள்ளாய்! மனம் எனும் குதிரைகளை இருவினைகள் எனும் கயிற்றினால் பூட்டி, உனது திருவருளே பாகனாக இருக்குமாறு அமைத்து குற்றமற நடத்தச் செய்தருளும் குமரேசனே! நீ உனது சிறுதேரினை உருட்டியருளுக, என வேண்டுகிறார் புலவர்.
பாததிகி ரியுமெலும் புப்பெரும் பலகையும்
பகர்நாடி யுருவாணியும்
பரியமரு மத்தட்டும் ………………
……………………………………
காதல்தரு குஞ்சிக்கோ டிஞ்சியும் பலமொழி
கலித்தபல் லியராசியும்
…………………………………………………
பேதமுறு தேர்கள்மீ தாருயிர்ப் பிளையைப்
பிறங்கிட விருத்திவெற்றிப்
பேசரு மனப்புரவி கட்டிவினை வடவழிப்
………………………………
தீதற நடத்திடச் செய்தகும ரேசனே
சிறுதே ருருட்டியருளே5
அழகான உருவகங்களைக் கொண்டமைந்த பாடலிதுவாகும். முற்பிறவியில் அல்லது இப்பிறவியில் நாம் செய்த வினைகளின்படிதான் ஆன்மாக்கள் அடுத்தடுத்த பிறவிகளில் உடல் பெறுகின்றன. இதனையே, “கணமொடு மலிந்த உடலென உரைதரும் பெரிய கடுவேகம் உடைய நானாபேதமுறு தேர்கண்மீது,” எனப் பொருத்தமாகக் கூறுகிறார். அவ்வினைப் போகங்களை அனுபவிப்பதற்கு அந்தவந்த உடல்களில் உயிர்களைப் பொருத்திக் கூட்டிவைப்பதனால், “ஆருயிர்ப் பிள்ளையைப் பிறங்கிட இருத்தி,” எனும் தத்துவமும் விளக்கப் பட்டுள்ளது.
இத்தகைய பெரும் வேதாந்த தத்துவத்தை உள்ளடக்கிய பாடல்கள் பிள்ளைத்தமிழ் நூல்களில் பலவாகும்.
***
வேறொரு அடியாரின் சிந்தையில் உலகில் இயற்கை நியதிக்கேற்ப நடைபெறும் பலவிதமான செயல்களும் முருகனின் சிறுதேரோட்டத்திற்கு இணையாகக் கூறப்படுகின்றன.
சந்திரன் வானில் பலவேறு நட்சத்திரக் கூட்டங்கள் புடைசூழத் தன் விமானத்தில் உலாவருகிறான்;
ஒளி (சவி) வாய்ந்த இரவி எனும் சூரியன் ஏழு புரவிகளைப்பூட்டித் தனது அழகான தேரில் உலாவருகிறான்;
அரன் எனப்படும் சிவபிரான் தனது விடை வாகனத்தைச் செலுத்தி வர, மாயவனாகிய திருமால் தனது கருடவாகனத்தில் வலம் வருகிறான்; தாமரை மலரில் உறையும் பிரம்மன் தனது அன்னவாகனத்தில் வலம் வருகிறான்;
முப்பத்து முக்கோடி தேவர்கள் வாழ்த்திடவும், இந்திரனுடைய அழகான தேவமங்கையர் இருபுறமும் கவரிகளைக்கொண்டு வீசிடவும், இளமையான நிலவு வட்டமான வெண்குடையை ஏந்திடவும், இருகொம்புகளையுடைய மலைபோலும் யானைகள் மரங்கள் நிறைந்த மலைகளைச் சுறி வலம்வரவும், நீ உன் சிறுதேரினை உருட்டுக என வேண்டுகிறார் புலவர்.
சந்திரன் பலவேறு தாராக ணங்கள்சூழ்
தரவிமா னத்து லாவச்
சவிபெற்ற ரவிபுரவி யேழ்பூட்டி யேநெடும்
தமனியத் தேர்சே லுத்த
…………………………………….
முளரிப் பொகுட்டயன் புள்ளூர முப்பத்து
முக்கோடி தேவர் வாழ்த்த
………………………………………
…….. ஈரிருமருப் புப்பொ ருப்பு
சிந்துரம் கற்பகா டவிகடவி வலம்வரச்
…………………………….
தென்மயில மலைவாழ வந்தகரு ணாகரா
சிறுதே ருருட்டி யருளே6.
இது மயிலம் முருகன் பிள்ளைத்தமிழில் நாம் காணும் அழகான பாடல்.
உலகில் அனைத்தும் இலயம் தவறாது இயங்கிடவேண்டுமாயின் இறைவனின் அருளாணை வேண்டும். இதனையே முருகன் உருட்டும் சிறுதேராகக் காண்பார் இவ்வடியார்.
– (வளரும்)
பார்வை நூல்கள்:
- பட்டினப்பாலை
- ஐங்குறுநூறு
- பகழிக்கூத்தர்- திருச்செந்தூர்ப் பிள்ளைத்தமிழ்
- பகழிக்கூத்தர்- திருச்செந்தூர்ப் பிள்ளைத்தமிழ்
- சிதம்பர அடிகளார்- திருப்போரூர் முருகன் பிள்ளைத்தமிழ்
- திருவாரூர் வைத்தியநாத தேசிகர் – மயிலம் முருகன் பிள்ளைத்தமிழ்