(Peer Reviewed) தம்பிமார் கதைப்பாடலில் வரலாற்றுப் பதிவுகள்

0
நீ.அகிலாண்டேஸ்வரி
முனைவர் பட்ட ஆய்வாளர்
அரிய கையெழுத்துச் சுவடித் துறை
தமிழ்ப் பல்கலைக் கழகம்
தஞ்சாவூர்- 10
—————————————————————————————————————————————————-

தம்பிமார் கதைப்பாடலில் வரலாற்றுப் பதிவுகள்

கதைப்பாடல்கள் வாய்மொழி வரலாறு மட்டுமன்று வாழ்க்கைப் பொருளின் வரலாறு என்பது இன்று நாட்டுப்புறவியலாளர்கள் மட்டும் அல்ல வரலாற்று ஆசிரியர்களாளும் முழுமையாக ஏற்றுக் கொள்கின்ற வகையில் இவை வரலாற்றுப் பெட்டகமாகவும் அமைகின்றன. அவ்வகையில் சிவ விவேகானந்தனின் தம்பிமார் கதைப்பாடலில் வரலாற்றுப் பதிவுகளை ஆய்கிறது இக்கட்டுரை.

கதைப்பாடலின் தோற்றம்

பெரும்பாலும் கதைப்பாடல்கள் யாவும் பாரம்பரியமாக அந்நாட்டு மக்களால் வாய்மொழியாகப் பாடப்பட்டு வரும் இயல்பு உடையன. இதன் அடிப்படையில் தம்பிமார் கதைப்பாடலும் கோவில்களில் வில்லுப்பாட்டாகப் பாடப்பட்டு வருகிறது. வரலாற்றுக் கதைப்பாடல்கள் பெரும்பாலும் அரசியல் பிரச்சனைகள் காரணமாக எழும் போர்கள் பற்றி அமைவனவாகும்.  இதனடிப்படையில் தம்பிமார் கதை திருவிதாங்கூர் வரலாறு தொடர்பான ஒரு போர் கதைப்பாடலாகும்.

வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறுநல்லுலகம் சங்க காலத்தில் 13 மண்டலங்களை உள்ளடக்கியதாக இருந்தது. அவற்றுள் பூழி, குடம், குட்டம், வேண் என்ற நான்கு மண்டலங்களும் அரபிக்கடலை ஒட்டி வடக்கிலிருந்து தெற்காக அமைந்து இருந்தன. குட்ட நாட்டிற்குத் தெற்கில் உள்ள வேணாடு குமரிமுனை வரை பரவிக்கிடந்த்து. இந்த வேணாட்டை சங்க காலத்தில் வேள் மன்னர்கள்(குறுநில) ஆட்சி செய்து வந்துள்ளனர்.அவ்வாறு வேள் மன்னர்கள் ஆட்சி செய்த வேணாடு இன்றைய திருவிதாங்கூர் பகுதியாகும்.ஆய்வேள், எவ்விவேள், பேகன்வேள், வேண்மான், பாரிவேள், நன்னன் முதலியோர் வேள் மன்னர்கள் என்று அழைக்கப்பட்டனர்’’.

அரசு உருவாக்கமும் மன்னராட்சியும்

மன்னராட்சி முறை என்பது உலகம் முழுவதும் வாரிசு முறையே இருந்து வந்துள்ளது. மேலும் நாடாலும் உரிமை மன்னனுக்குப் பிறகு வாரிசுகளுக்கும் வலிமையைக் கொண்டு யார் ஆட்சியைக் கைப்பற்றுகிறார்களோ அவர்களும் நாட்டை ஆண்டு இருக்கிறார்கள். இவை உலக நாடுகளில் நடந்து உள்ளன. சேர நாட்டில் வாரிசு உரிமை தாய்வழிச் சார்ந்தது எனவும், சோழ நாட்டிலும், பாண்டிய நாட்டிலும் தந்தை வழிச் சார்ந்தது எனவும் கருத்து நிலவுகிறது. ஆனால் தொல்காப்பியர் தாயத்தின் அடையாத் தாயம்1 என்று உலகம் முழுவதுக்குமான ஒரு பொதுவான வழக்கத்தைக் குறிப்பிட்டு உள்ளார். இதன் வழியாக அக்காலச் சமூகம் தந்தை வழிச் சமூகம் என்பது தெளிவாகிறது.

தொல்காப்பியம்

சோழர், பாண்டியர் மரபினரில் வாரிசு முறை பின்பற்றப் பட்டது. மேலும் இதிகாச புராணங்களில் பட்டத்து அரசியின் மூத்த மகனுக்கே என்கிறது. சோழர் பாண்டியர் மரபினில் சில சமயங்களில் மூத்த சகோதரனுக்குப் பின்னர் இளையவர் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற செய்திகளும் சங்க இலக்கியத்தில் உள்ளது.

                  “பரந்துபடு நல்லிசை எய்தி மற்று

                   உயர்ந்தோர் உலகம் எய்திப் பின்னும்

                   ஒழித்த மாயம் அவர்க்குரி தன்றெ …’’ 2

என்ற புறநானூற்றுப் பாடல் அரசுரிமை தந்தைக்குப் பின் மகனுக்கே என்பதை உணர்த்துகிறது. மேலும் மன்னர்கள் மரபுகளையும், வழக்காறுகளையும் மதித்தனர். முறைமுதற்கட்டில் என்பது மரபு. தந்தைவழி தாய முறையில் மூத்த மகனுக்கு அரசு உரிமை கிட்டியது என்பதை

                   மூத்தோர் மூத்தோர்க் கூற்றம் உய்த்தெனப்

                   பால்தர வந்த பழவிரல் தாயம்….’’ 3

என்ற புறநானூற்றுப் பாடல் வழியாக அரசுரிமை தலைமுறை, தலைமுறையாக அரசின் மூத்த மகனுக்கு வந்துகொண்டிருந்தது என்பதை அறிய முடிகிறது.

சங்க கால ஆட்சிமுறையில் இருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு ஆட்சியாக திருவாங்கோட்டு மன்னர் ஆட்சி முறை இருந்தது குறிப்பிடத் தக்கதாகும். இங்கு தந்தை வழிச்சமூகமோ அல்லது தாய் வழிச்சமூகமோ ஆட்சி நடத்தவில்லை. அதற்கு மாறாக மருமக்கள் வழி தாயத்தின் படி ஆட்சி நடந்துள்ளது. என்பதனைத் தம்பிமார் கதைப்பாடலின் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. அதாவது ராம வர்மாவிற்கு அரசாளக்கூடிய தகுதிகளோடு இரு மகன்கள் இருந்தும் அவர் தனது மருமகனான மார்த்தாண்ட வர்மாவிற்கு அரசுரிமையை வழங்குகிறார். இதனை,

                  நானிலிருந்து பொறுத்தது போல் நலமாக நீபொறுத்து

                   முக்காலும் நீ பொறுத்து முடிசூட்டி நீ ஆண்டிடுவாய்

                   செங்கோலும் முத்திரையும் திருமுடியும் தான் கொடுத்து

                   திருக் கையினால் கொடுக்க திருவயது குறைந்திடுமாம்’’4

என்ற கதைப்பாடல் வரிகள் மூலமாக ராமவர்மா நாட்டை எந்தக் குறையும் இல்லாமல் ஆள வேண்டும் என்று மார்த்தாண்ட வர்மாவிடம் கேட்டுக்கொண்டது மட்டுமல்லாமல், நாட்டை ஆள்வதற்கு உரிய செங்கோல், ராஜமுத்திரைமோதிரம் மற்றும் ராஜகிரீடம் ஆகியவற்றை தன் மருமகனிடம் ராமவர்மா அவர்கள் வழங்கினார் என்பதை அறிய முடிகிறது.

மேலும் பொதுவாக மன்னராட்சி முறையில் அரசன் இறந்து விட்ட பிறகு அவனுடைய ஆண்வாரிசு அரசனாக்கப் படுவான். இந்த வாரிசு உரிமையில் பொது மக்களின் பங்கு எதுவும் இருக்காது. புதிதாக வாரிசு உரிமை ஏற்ற அரசின் நேர்ப்பொறுப்பில் முன்பு இருந்த அரசின் கீழ் உள்ள நிலங்களும், ஊர்களும் அப்படியே தொடர்கின்றன’’5 ஆனால் தம்பிமார் கதைப்பாடலில் அரசனுக்குப்பிறகு அவனுடைய மருமகன் அரசுரிமை ஏற்று ஆட்சி நடத்தினான் என்பதை,

                   ஆண்டிருக்கும் நாளையிலே அழகு முடிமன்னவரும்

                   ஆறிலொரு கடமை தாண்டி அசையாத மணியும்கட்டி

                   செங்கோலும் முத்திரையும் தேசமதில் சிறந்திலங்க

                   ஒன்றும் குறைவராமல் உலகமதை ஆண்டிருந்தார்….’’ 6

என மார்த்தாண்டவர்மா ஆட்சிப் பொறுப்பினை  ஏற்ற பின் மக்களின் வருவாயில் ஆறில் ஒரு பங்கு மட்டுமே வரியாக வசூலித்தார். மேலும் செங்கோல் வலையாத நிலையில் ஆட்சி புரிந்தார் என்பதை இக்கதைபாடல் வரிகள் மூலம் அறிய முடிகிறது.

மணமுறை

                   பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்

                   ஐயர் யாத்தனர் கரணம் என்ப.’’ 7

என்கிறார். ஆணும், பெண்ணும் சேர்ந்து வாழ்ந்தனர். பின் பொய்யும், குற்றமும் மிகுந்த பின்பு இவனுடைய மனைவி இவள் என்று அடையாளப்படுத்தும் விதமாகத் தோன்றியதே திருமணம் என்கிறார் தொல்காப்பியர். மேலும் குறுந்தொகை தலைவி தலைவனுடன் தான் பழகியதற்குக் குருகைச் சாட்சியாக்குகிறாள்.

                   யாரும் இல்லைத் தானே கள்வன்

                   தானது பொய்ப்பின் யானெவன் செய்தோ

                   ——————————————————-

                   ஒழுகு நீர் ஆரல் பார்க்கும்

                   குருகும் உண்டு தான் மணந்த ஒன்றே…’’8

என்றதன் வழி ஊரார் அறியாமல் நடந்த களவு வாழ்வில் ஆடவனிடம் பொய் தோன்றுமாயின் சாட்சி இல்லை என்ற நிலை அறியலாகிறது. இக்காரணத்தினால் திருமணம் தோன்றியது எனலாம். இதனையே,

                   தந்தையும் கொடா அன் ஆயின்வந்தோர்

                   ———————————————————-

                   ———————————————————-

                   படை மயங்கி ஆரிடை நெடுநல் ஊரே ’’9 

மணமகள் வீட்டில் பெண் கேட்டு ஊரரிய திருமணம் செய்து கொள்ளும் வழக்கம் இன்றளவிலும் இருந்து வருவதைக் காணலாம். ஆனால் வேணாட்டின் திருமண முறைகள் சற்று வேறுபட்டு இருந்தன. யாதெனில் திருவாங்கோட்டு மன்னர்கள் யாரும் முறைப்படி திருமணம் செய்து கொள்ளவில்லை. ஏனெனில் அவர்களுடைய வாரிசுகளுக்கு அவருடைய நாட்டில் ஆட்சி செய்யும் உரிமை இல்லாத காரணத்தால் மன்னர்கள் முறைப்படி திருமணம் செய்து கொள்ளாமல் அவர்கள் விருப்பத்திற்கேற்ப பல பெண்களுடன் வாழ்ந்து வந்தார்கள். மன்னர்கள் பலரும் திருமணம் செய்து கொள்ளாமல் ரகசிய மனைவிகளை வைத்திருந்தனர். ஆனால் மன்னர் ராமவர்மா மட்டுமே ஊரரிய கணிகையர்குலப் பெண்ணை மணந்து கொண்டு அவளோடு இல்லறம் நடத்துகிறார். அதன் பின் அவருக்கு மூன்று பிள்ளைகளும் பிறக்கின்றன.

பொதுவாக இவ்வாறு திருமணம் செய்து கொள்ளும் பெண்ணுக்கும், அவளுடைய வாரிசுகளுக்கும் சொத்துரிமைகள், இல்லறக் கடமைகள் என அனைத்து சமூக செயல்பாட்டு உரிமைகளும் மறுக்கப்பட்டன. ஆனால் ராமவர்மா அவர்கள் தன்னுடைய மனைவிக்கும், வாரிசுகளுக்கும் அரசுரிமையைத் தவிர்த்து மற்ற அனைத்து உரிமைகளையும் வழங்கியிருந்தார். இதனை,

                   நாலாறு முட்டுச்  சந்தையிலே நல்லமுதல் எடுப்புகளும்

                   கொடுப்பக்குழி பேட்டையிலே கூண்ட முதல் எடுப்புகளும்

                   கொடுத்தாரே மன்னவரும் கூண்ட….’’10

போரும், போருக்கான காரணங்களும்

மூன்று வேந்த மரபினரும் தங்களிடம் மூன்றினைத் தவறாது வைத்திருந்தனர். அவை குடை, முடி, கோல். வெண்கொற்றக் குடை என்பது காவல் தொழிலையும், மணிமுடி என்பது அரசியல் தலைமையையும், செங்கோல் என்பது நீதியையும் குறிக்கும் குறியீடுகளாகத் திகழ்ந்தன. இவை மூன்றும் தனக்கு நிலைக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே போர் மேற்கொண்டனர், சங்க கால வேந்தர்கள். அப்போரானது மண்ணாசைக் காரணமாகவும், பெண்ணாசைக் காரணமாகவும் நிகழ்ந்தன என்று புறப்பொருள் வெண்பாமாலை குறிப்பிடுகிறது. இங்கு நடைபெறுகின்ற போரானது பெண்ணாசையின் காரணமாக நடக்கிறது. அதாவது தம்பிமார்களின் தங்கையை மன்னர் பெண் கேட்டலும் அதற்குத் தம்பிமார்கள் நிபந்தனையின் பேரில் மறுத்தலும் போருக்கு முக்கிய காரணமாகிறது.

மார்த்தாண்டவர்மா அவர்கள் தம்பிமாரின் தங்கையைப் பெண் கேட்கிறார். அப்போது தம்பிமார்கள் துருவத்தில் பிறந்தார்க்கு பெண் கொடுப்பதில்லை என்று கூறி மறுத்து விடுகின்றனர். இதனால் கோபம் கொண்ட மன்னர் மார்த்தாண்டவர்மா  தம்பிமார்களுக்கு அவருடைய தந்தை கொடுத்த குமரி நாட்டுப் பகுதிகளையும், அவர்களின் அரண்மனையையும் பறித்துக் கொண்டு அவர்களையும் நாட்டை விட்டுத் துரத்திவிடுகிறான். இதனை,

                   வலியதம்பி மன்னவர்க்கு மன்னவனார் கொடுத்திருந்த

                     வகைதொகையும் கூண்ட மன்னர் தானெடுத்தார்

                     குஞ்சுதம்பி மன்னவர்க்கு கொடுத்திருந்த வகைதொகையும்

                     திருவுளக் கோடாக வல்லோ சிறியவர் எடுத்துவிட்டார்…. ’’11

என்ற கதைப்பாடல் வரிகள் மூலம் அறியலாம். மேலும் ஒரு தலைவன் நின் மகளைத் தருக என்று கேட்க அதனை அவனுக்கு எளியவன் ஒருவன் மறுத்துக் கூறுதலை புறநானூற்றின் வழியாக அறிய முடிகிறது.

அரசனின் அறம்

                    அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது

                      பொன்றுங்கால் பொன்றாத் துணை …’’12

என்று கூறுகிறது வள்ளுவம். அதாவது அறம் செய்வதற்கு காலம், நேரம் பார்க்கவேண்டியதில்லை என்பதுதான் வள்ளுவரின் ஆழமான கருத்தாக இருந்திருக்கின்றது. இந்த அறமானது தனிமனித வாழ்வில் பிரதிபலிக்கின்றது. அதாவது சர்வவல்லமையும், ஆதிக்க மனப்பான்மையும் கொண்டு இருந்தாலும் அறநெறியைப் பின்பற்றி ஆட்சி நடத்தல் வேண்டும் என்று மன்னருக்கு எடுத்துரைக்கப்பட்டது. இதனை

                    நான்குடன் மாண்டது ஆயினும் மாண்ட

                     அறநெறி முதற்றே அரசின் கொற்றம்

                     அதனால் நமர் எனக் கோல் கோடாது

                     பிறர் எனக் குணம் கொல்லாது …’’13

என்று புறநானூறு குறிப்பிடுகின்றது. வலிமையான நான்கு படைகள் கொண்டு இருந்தாலும் அறநெறி வழியாகச் செயல்படுதலே நாட்டின் இறையான்மையைப் பாதுகாக்க முடியும் என்று மருதன் இளநாகனார் குறிப்பிட்டுள்ளார். ஆனால் மார்த்தாண்டவர்மா இக்கொள்கையினைக் கடைபிடிக்கவில்லை. தான் ஒரு அரசன் என்கின்ற ஆளுகையையும், செல்வாக்கினையும் கொண்டு தம்பிமார்களின் சொத்துக்கள் அனைத்தையும் பறித்துக்கொண்டு நாட்டைவிட்டுத் துரத்தி விடுகிறான். இதன் காரணமாகச் சர்வ வல்லமை பொருந்திய மன்னரைப் பெரும்படைகளைக் கொண்டு தம்பிமார்கள் தோற்கடித்து விடுகின்றன. இதனைக் கீழுள்ள கதைப்பாடல் வரிகள் உணர்த்துகின்றன.

                 மந்திரவாள் உறை உருவி வலுவுடனே குஞ்சு தம்பி

                 கைகலந்து வெட்டும் நேரம் கண்டாரே ’’…..14

மன்னிக்கும் பண்பு

முகம் தெரியாத யாரோ ஒருவர் மீதும், இனம் புரியாத ஏதோ ஒரு உயிரின் மீதும் செலுத்துகின்ற  அன்பு, நேசம் இவற்றைக் காட்டிலும் எதிரிகள் மற்றும் பகைவர்களை மன்னிக்கும் செயலே உயர்பண்பாகக் கருதப்படுகிறது. பிழை செய்தவர்களை மன்னிக்கும் பண்பு புநானூற்றில்

                   நின் யான் பிழைத்து நோவாய்; என்னினும்

                   நீ பிழைத் தாய் போல் நனி நாணினையே …’’15

என்று கண்ணனார் குறிப்பிடுகிறார். பகைவனே தவறு செய்திருந்தாலும் நான் தான் தவறு செய்தேன் என்று அவன்மேல் சினம் கொள்ளாது சொல்வது என்பது உயர்ந்த பண்பாகக்  கொள்ளப்படுகிறது. அதுபோல தம்பிமாரும் மன்னரும் ஒருவருக்கொருவர் தங்களுடைய பகையினை மறந்து சமாதானம் அடையும் படியாக அழகப்ப முதலியார் வேண்டிக்கொண்டதற்கு இணங்க அவர்கள் தங்களது பகையினை மறந்து மனதில் எந்த விதமான வஞ்சகமும் இல்லாமல் மன்னருடன் நட்பு பாராட்டி வந்தனர். அதாவது பகைவனை வெல்ல நண்பனாக்கிக் கொள்வது சிறந்த வழியாகும். அதுபோல தம்பிமார்களோடு மன்னர் மார்த்தாண்டவர்மா நட்பு பாராட்டி வந்தாலும் தம்மை கொள்ள வந்த தம்பிமார்களை எப்படியும் கொன்று விட வேண்டும் என்று அவர்கள் மீது வஞ்சகம் கொண்டு இருந்தார். இதனை,

                   மன்னவரும் தன்மனதில் வஞ்சகமாய் தானினைந்து

                   ———————————————————————

                   ———————————————————————

                   நம்மைக்கொள்ள வந்தவனை தாம் கொலை செய்யவேனும்… ’’16

என்ற கதைப்பாடல் வரிகளால் அறிய முடிகிறது. மேலும் போர்களில் எதிர்ப்படை வீரர்களைச் சிறைபிடித்தல் என்பது பொதுவான வழக்கம் ஆகும். அதுபோல தம்பிமார் கதையிலும் சிறைபிடித்தலுக்கு ஒப்பான இரு காட்சிகள் இடம்பெறுகின்றன. மன்னரைக் காண வந்த தம்பிமார்கள் இருவரையும் சூழ்ச்சியின் காரணமாகத் தனியே பிரித்து அவர்களிடம் உள்ள ஆயுதங்களைப் பறித்துக் கொண்டு காவலர்களை ஏவி சிறைபிடித்து விடுகிறார்  மன்னர் மார்த்தாண்டவர்மா. பொதுவாக நிராயுதபானியாக உள்ளவர்கள் எதிரியாக இருந்தாலும் கூட அவர்களிடம் போர் செய்தல் என்பது அரச மரபிற்கு அப்பாற்பட்டது. அது அரசனுக்குரிய தர்மமும் கிடையாது. ஆனால் மார்த்தாண்டவர்மா இத்தகைய அரச தர்மத்தை மீறி தம்பிமார்களைச் சிறைபிடித்துக் கொலை செய்து விடுகிறான். இருப்பினும் இது வெற்றியாகக் கருதப்படாது. ஏனெனில் இந்த வெற்றி அநியாயமாகவும், வஞ்சகச் சூழ்ச்சியாலும் பெறப்பட்டது. அதாவது போரின் மீறிப் பெற்றது. ஆதலின் உண்மையில் வெற்றி பெற்றவர்கள் தம்பிமார்களே என்று கூறினால் அது மிகையாகாது.

சான்றெண் விளக்கம்

  1. தொல்காப்பியம் பொருளதிகாரம், இளம்பூரணனார் உரை, சாரதா பதிப்பகம், சென்னை,முதல் பதிப்பு – மே 2005, பக்கம் – 329
  2. .புறநானூறு, புலியூர்கேசிகன், சாரதா பதிப்பகம், சென்னை, முதல் பதிப்பு – டிசம்பர் 2010, பக்கம் – 224
  1. மேலது, பக்கம் – 75
  2. தம்பிமார் வரலாறு, விவேகானந்தன்.சிவ, காவ்யா வெளியீடு, சென்னை, முதல் பதிப்பு 2012, பக்கம் – 289
  3. தமிழ் மக்கள் வரலாறு, அறவாணன் க.ப, தமிழ் கோட்டம், சென்னை, முதல் பதிப்பு மார்ச் 2006, பக்கம் – 195
  4. தம்பிமார் வரலாறு, விவேகானந்தன். சிவ, காவ்யா வெளியீடு, சென்னை, முதல் பதிப்பு 2012, பக்கம் – 290
  5. தொல்காப்பியம் பொருளதிகாரம், இளம்பூரனார் உரை, சாரதா பதிப்பகம், சென்னை, முதல் பதிப்பு – மே 2005, பக்கம் 247
  6. குறுந்தொகை, சுப்பிரமணியன் ச.வே, மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம், முதல் பதிப்பு – டிசம்பர் 2009, பக்கம் – 45
  7. புறநானூறு, புலியூர்கேசிகன், சாரதா பதிப்பகம், சென்னை, முதல் பதிப்பு – டிசம்பர் 2010, பக்கம் – 331
  8. தம்பிமார் வரலாறு, விவேகானந்தன் சிவ, காவ்யா வெளியீடு, சென்னை, முதல் பதிப்பு -2012, பக்கம் – 275
  9. மேலது, பக்கம் – 304
  10. திருக்குறள், பரிமேலழகர் உரை, செண்பகா பதிப்பகம், சென்னை, முதல் பதிப்பு – ஆகஸ்ட் 2012, பக்கம் – 20
  11. புறநானூறு, புலியூர்கேசிகன், சாரதா பதிப்பகம், சென்னை, முதல் பதிப்பு – டிசம்பர் 2010, பக்கம் – 77
  12. தம்பிமார் வரலாறு, விவேகானந்தன் சிவ, காவ்யா வெளியீடு, சென்னை, முதல் பதிப்பு – 2012, பக்கம் – 329
  13. புறநானூறு, புலியூர்கேசிகன், சாரதா பதிப்பகம், சென்னை, முதல் பதிப்பு – டிசம்பர் 2010, பக்கம் – 64
  14. தம்பிமார் வரலாறு, விவேகானந்தன் .சிவ, காவ்யா வெளியீடு, சென்னை, முதல் பதிப்பு – 2012, பக்கம் – 334.

———————————————————————————————————–

ஆய்வறிஞர் கருத்துரை (Peer Review):

ஆய்வாளர் இக்கட்டுரையை நேர்த்தியாகச் செய்திருக்கிறார். தம்பிமார் கதைப் பாடலின் வரலாற்றுப் பின்புலம் நன்றாக எடுத்துக் கூறப்பட்டுள்ளது. மருமக்கள் வழி மாண்மியம், தாய் வழிச் சமூகத்தின் எச்சமாக விளங்கியதை எடுத்துக் காட்டியுள்ளார். துரோகத்தின் அரசியல் வரலாற்றைத் தம்பிமார் கதைப் பாடலும் பெற்றுள்ளதை அறிய முடிகிறது. தொல்காப்பியம் மற்றும் புறநானுற்றுச் சான்றுகள் கட்டுரைக்குக் கூடுதல் வலு சேர்ப்பதாக அமைந்துள்ளது.

———————————————————————————————————–

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *