(Peer Reviewed) தொல்காப்பியச் சொல்லதிகாரக் கல்லாடனாருரையின் உரைப்போக்கும் உரைநலனும்

0

டாக்டர். வே. விக்னேசு,
தமிழ்  உதவிப்பேராசிரியர்,
பூ. சா. கோ. கலை அறிவியல் கல்லூரி,
கோயம்புத்தூர்641014.
vignesh@psgcas.ac.in
9597203214.

தோற்றுவாய் :

தொன்மைத் தமிழிலக்கண நூலான தொல்காப்பியத்திற்குப் பழையவுரைகளென  இளம்பூரணர், சேனாவரையர், நச்சினார்க்கினியர், தெய்வச்சிலையார், கல்லாடனார், பெயரறியப்படாத பழையவுரைகாரர் ஒருவர் ஆகிய அறுவருரைகளே கிட்டியுள. ஆசிரியர் தொல்காப்பியனாரின் உளக்கிடக்கையை உணர்ந்து உலகிற்குணர்த்தச் சான்றோர் பெருமக்கள் பலரும் காலந்தோறும் முயன்றதன் விளைவே தொல்காப்பியத்தின் உரைப்பெருக்கத்திற்குக் காரணமாம். தொல்காப்பிய நிலைபேற்றுக்கும், தொல்காப்பியக் கல்வி பரவலுக்கும் உரையாசிரியர்களின் உரைகளும் அன்னோர் மேற்கொண்ட உரைமுறைகளும் பெருங்காரணமாம். இவ்வுரையாசிரியப் பெருமக்களுள் சொல்லதிகாரத்திற்கு விருத்தியுரைகண்ட கல்லாடனார்தம் உரைப்போக்கு, அவர் மேற்கொண்ட உரைமரபுகள், அவருரையின் தனிச்சிறப்புக்கள் என்றின்னவற்றை ஆய்தலே இக்கட்டுரை ஆராயக்கொண்ட ஆய்பொருளாம்.

சொல்லுரைகண்ட கல்லாடனார் :

தொல்காப்பியச் சொல்லதிகாரத்திற்குக் கிட்டியுள்ள உரைகளுள் கல்லாடனார் விருத்தியுரையும் ஒன்றாம்.  அவ்வுரையும் இடையியல் பத்தாம் நூற்பா வரையிலேயே கிட்டியுளது.

பேராசிரியர் ஆபிரகாம் அருளப்பன், பேராசிரியர் வி.ஐ. சுப்பிரமணியம் ஆகிய இருவரும் இணைந்து தொல்காப்பியச் சொல்லதிகாரத்திற்கு உள்ள உரைகளையெல்லாம் தொகுத்து, தொல்காப்பியம் – சொல்லதிகாரம் – உரைக்கோவை என்னும் பெயரில் வெளியிட்ட சொல்லதிகார உரைவளப் பதிப்பில் இவ்வுரை முதன்முதலில் வெளிப்போந்தது. இவ்வுரைவளப் பதிப்பிலும் கிளவியாக்கம் முதலாக விளிமரபு ஈறாக நான்கு இயல்களைக் கொண்ட முதற்பாகம் மட்டுமே வெளிவந்துள்ளதாகலின், இவ்வுரையும் அந்நான்கு இயல்கள் மட்டுமே கொண்டு பதிப்பிக்கப்பட்டுள்ளது.

அடுத்து, இவ்வுரை பேராசிரியர் கு. சுந்தரமூர்த்தி அவர்களைப் பதிப்பாசிரியராகக் கொண்டு 1964 -ஆம் ஆண்டில் கழகவழி வெளிவந்தது. பின்னர், குருதேவர் தெ. பொ. மீனாட்சி சுந்தரனார் அவர்கள் பதிப்பித்துத் தமிழ்நாடு அரசினர் கீழ்த்திசைச் சுவடி நூலக வெளியீடாகத் தொல்காப்பியம் – சொல்லதிகாரம் – கல்லாடனார் விருத்தி என்னுந் தலைப்பில் இவ்வுரை 1971 -இல் வெளிவந்தது. இந்நூல் தெ.பொ. மீ. அவர்களின் விரிவான ஆராய்ச்சி முன்னுரையுடன் கூடியதாம்.

உரைப்போக்கு :

கல்லாடனார் உரை விருத்தியுரை என்று வழங்கப்படுகிறது. இவருரை இளம்பூரணர், நச்சினார்க்கினியர் உரைகளைத் தழுவிச் செல்வதாகும். எனினும், அவ்விருவர் உரைகளிலும் சேனாவரையர் உரையிலும் காணப்படாதனவாகிய  பல அரிய கருத்துக்கள் இவருரையில் காணலாகின்றன. இயல்களின் முறைவைப்பினை இவர் விரிவாக ஆராய்கின்றார். அங்ஙனமே, இவர்தம் நடை இளம்பூரணர், நச்சினார்க்கினியர் ஆகியோர்தம் நடையை ஒட்டிச் செல்கின்றது. அன்றியும், விருத்தியுரை என்பதற்கு ஏற்ப பல புதிய விளக்கங்கள் இவருரையில் காணப்படுகின்றன.

உரைநலன் :

          இவர்தம் உரைநலத்திற்குச் சான்றுகள் சிலவற்றைக் காட்டுதும் :-

 • சொல்லதிகார அதிகார விளக்கம் நுவலுங்கால், இளம்பூரணர், சேனாவரையர், நச்சினார்க்கினியர் ஆகிய மூவரினுஞ் சற்று விரிவாகக் கல்லாடனார், இவ்வதிகாரம் என்னுதலி எடுத்துக்கொள்ளப்பட்டதோவெனின், அதிகாரம் நுதலியதூஉம் அதிகாரத்தினது பெயர் உரைப்பவே விளங்கும். இவ்வதிகாரம் என்ன பெயர்த்தோவெனின், சொல்லதிகாரம் என்னும் பெயர்த்து. அஃது இடுகுறியோ காரணக்குறியோ எனின், காரணக்குறி. என்னை காரணம் எனின், சொல் உணர்த்தினமை காரணத்தின் என்பது. என்னை? கிளவியாக்கம் எழுவாயாக எச்சவியல் இறுதியாகக் கிடந்த ஒன்பது ஓத்துக்களுள்ளும் சொல்லின்கண் கிடந்த விகற்பம் எல்லாம் ஆராய்ந்தான் எனக் கொள்க (சொல். கல். நூ.1) என்று விரிவான விளக்கந் தருகின்றார். மாணாக்கர் நன்கு உளங்கொண்டு விளங்குதற் பொருட்டே இவர் இங்ஙனம் விரித்துரைக்கிறார்.
 • சொல் என்பதற்குப் பொருள் ஓசை எனக்கொள்ளும் கல்லாடனார், ஓசை என்று கூறியதால் கடலொலியும், காரொலியும், சங்கொலியும், விண்ணொலியும் சொல்லாகுமா? என்ற வினாவை எழுப்பிக் கொண்டு, ஓசையெனினும், அரவம் எனினும், இசையெனினும், ஒலியெனினும் எழுத்தானாம் ஓசைக்கும் எழுத்து அல் ஓசைக்கும் பொது. கிளவியெனினும், மாற்றம் எனினும் மொழியெனினும் இவையெல்லாம் எழுத்தொடு புணர்ந்து பொருளறிவுறுக்கும் ஓசைமேல் நிற்கும் (சொல். கல். நூ. 1) என்று விடை கூறுகின்றார். அங்ஙனமே, எழுத்தொடு புணராது பொருளறிவுறுக்கும் ஓசையும் உளவோ வெனின்? என வினவிக்கொண்டு, உள. அவை முற்கும் வீளையும், இலதையும், அணுகரணமும் என்றித் தொடக்கத்தன. அவை சொல் எனப்படா. பொருளறிவுறுக்கும் எழுத்தொடு புணராவோசை மேலதன்றாராச்சி (சொல். கல். நூ. 1) என விடையிறுக்கும் இவர், எழுத்தல் ஓசையும், எழுத்தொடு புணராது பொருளையறிவிக்கும் ஓசையும், எழுத்தொடு புணர்ந்து பொருளையறிவிக்கும் ஓசையும், எழுத்தொடு புணர்ந்தே பொருளையறிவுறுத்தாது இறிஞி, மிறிஞி என்றாற்போல் வரும் ஓசையும் (சொல். கல். நூ. 1) என ஓசையை நான்கு வகைப்படுத்தி, இந்நான்கனுள்ளும் பின்னின்ற இரண்டும் இவ்வதிகாரத்து ஆராயப்படுகின்றன என விரிவான விளக்கந்தருகின்றார். அன்றியும், ஏனைய ஓசைகள் சொல்லாகா என்று நச்சினார்க்கினியர் கூறியதனை உட்கொண்டே இவர் இங்ஙனம் விரிவாக உரைத்துள்ளார்.
 • ‘வினைப்பெயர் இடமாகத் தோன்றும் பாலறிவிக்கும் சொற்களும் ஏனைய பொருட் பெயரிடமாகத் தோன்றும் பாலறிவிக்கும் சொற்களும் ஒன்றனொடு ஒன்று தொடரும்பொழுது மயங்குதல் கூடாது; அவை தத்தம் இலக்கணத்தவேயாம்’ என்னுங் கருத்துடைய,

“வினையிற் றோன்றும் பாலறி கிளவியும்
பெயரிற் றோன்றும் பாலறி கிளவியும்
மயங்கல் கூடா தம்மரபினவே(சொல். கிளவி. நூ. 11)

எனவரும் நூற்பாவிற்கு உரைபகரும் இவர், எழுவகை வழுக்களுடைய பெயரும் முறையும் தொகையும் தனிமுறையில் ஆசிரியர் எச்சூத்திரத்திலும் கூறவில்லை; உரைகளிலேயே கூறப்பட்டுள்ளன என்றுரைத்து, ”எழுவகை வினாவிற்கும் இஃதோர் பொது விதி கூறியது” எனவும், சிறப்பு விதி வேறு வேறு கூறிற்று எனவும் உரைத்து, ஏனைய வழுக்களும் அவ்வவ்சூத்திரத்திற்குரிய இடங்களில் விளக்கம் பெறுகின்றன என்றும் கூறி, ஒழிந்த திணைபால் இடங்கட்கு விதி னஃகான் ஒற்று முதலிய சூத்திரங்களால் கூறிற்றெனவுணர்க. இவ்வாறு நூல் நயமாதல் இச்சூத்திரத்துரையிட் கண்டுகொள்க (சொல். கல். நூ. 11) என்பதனால் தொல்காப்பிய நூன் நயத்தைத் தெளிவிக்கின்றார்.

 • முற்படக் கிளத்தல் செய்யுளுள் உரித்தே(சொல். கிளவி. நூ. 39)

என்ற நூற்பா, ’சுட்டுப்பெயரை முற்படக் கூறுதல் செய்யுளுள் உரித்தாகும்’ என, மேற்சூத்திரத்தில் கூறிய விதிக்குப் பிறிதொரு விதி வகுக்கிறது. இந்நூற்பாவிற்கு, அவனணங்கு நோய் செய்தான் ஆயிழாய்! வேலன் எனத் தொடங்கும் பாடலொன்றை உரையாளர் யாவரும் மேற்கோளாகக்காட்டி, இதனுள் ’சேந்தன்’ என்பது இயற்பெயர்; அவன் என்பது சுட்டு என்பதால் இயற்பெயருக்கு முன் விரவுப்பெயர் கூறப்படினும் இது செய்யுளென்பதால் ஏற்கப்படும் என்று உரையாளர் யாவரும் ஒருமுகமாக உரைக்கின்றனர். கல்லாடனார் மட்டும் முன்கூறல்…நேர்ந்தவாறு ஆயிற்று… (சொல். கல். நூ. 39) என்பதால் முற்படக் கூறலாகாது எனப்பட்ட சுட்டுப்பெயர் செய்யுளில் முற்படக்  கூறப்படினும் மொழிமாற்றிப் பொருள் கொள்ளப்படும். ஆகலின், செய்யுளில் முற்படக்கூறல் ஏற்றுக்கொள்ளப்பட்டது என்று சிறப்புப் பொருள் உரைத்துள்ளமை ஈண்டுக் குறிக்கத்தக்கது.

 • கிளவியாக்கத்திற்குப் பின் வேற்றுமையியல் வைக்கப்பட்டதற்கான முறைவைப்பைக் கூறுங்கால், இளம்பூரணர் கருத்தைத் தழுவி இவ்வியலின் இயைபு கூறும் கல்லாடனார், மேலோத்தினோடு இவ்வோத்து இயைபு என்னையோவெனின் என வினவிக்கொண்டு, “மேல் ஓத்தினுள் நான்கு வகைப்பட்ட சொற்களையும் பொருள்கண்மேலாமாறு சொல்லிப் போந்தார். அவற்றுள் முதலாவது பெயர்ச்சொல் அதற்கிலக்கணம் உணர்த்திய எடுத்துக்கொண்டார் என்பது. யாங்ஙனம் உணர்த்தினாரோவெனின், எல்லாப் பெயர்களும் எழுவாயாகியப் பயனிலை கோடலும், ஒருவழி எழுவாயாகாது வேறோர் நிலைமையவாய் நிற்றலும், காலந்தோன்றாமை நிற்றலும், ஒருவழித் தொழிற்பொருளொடு கூறியக்கால் காலந்தோன்றி நிற்றலும், விளியேற்று நிற்றலும், சிலபெயர் விளியேலாது நிற்றலும் இன்னோரன்ன பிறவும் பெயரது இலக்கணம் எனவுணர்த்தினாரென்பது (சொல். கல். நூ. 63) எனப் பெயரின் இலக்கணம் ஆசிரியரான் உணர்த்தப்பட்ட பான்மையை நன்கு தெளிவித்ததுடன் “பொது இலக்கணமேயன்றி உருபிலக்கணம் உணர்த்தினாரால் எனின், அவ்வாராய்ச்சியும் பெயரது இலக்கணமாய் விடுதலுடைமையின் அமையுமென்பது என்று நுண்ணிதின் விளக்கியுள்ளமை ஏனையுரையாளரினும் வேறுபட்டதாம்.
 • ’வேற்றுமை மயங்கியல்’ என அவ்வியல் பெயர் பெற்றதற்குக் கல்லாடனார் கூறும் காரண விளக்கம் சிறப்புடையதாம். அவர் கூறுவதைக் கேண்மின் :-

”இவ்வோத்து என்ன பெயர்த்தோ வெனின் உருபும் பொருளும் உடன் மயங்குதலும், ஒருவழி யுருபே மயங்குதலும், ஒன்றற்குரியதனோடு ஒன்று மயங்குதலும், இரண்டும் ஒத்து மயங்குதலும், ஒரு பொருண்மை ஒன்றற்கே யுரியதாகாது பலவற்றோடு மயங்குதலும், ஓர் உருபு பலவுருபோடு மயங்குதலும், ஒன்றனது ஒரு  பொருளோடு ஒன்று மயங்குதலும், ஒன்றனது பல பொருளோடு ஒன்று மயங்குதலும், ஒன்றற்குரிமை பூண்டு எடுத்தோதின பொருள்வழி மயங்குதலும், ஓதாத பொருள்வழி மயங்குதலும், ஒன்றதன் மரபாய் மயங்குதலும், இலக்கண வழிக்குள்வழி மயங்குதலும், இலக்கண மல்வழி மயங்குதலும், மயக்க வகையான் மயங்குதலும், சொல்லுதல் வகையான் மயங்குதலும், ஒன்றனோடு பொருள் முடிந்து தொடர்ந்தடுக்கி மயங்குதலும், ஒன்றனோடு பொருள் முடியாது தொடர்ந்தடுக்கி மயங்குதலும், தொகையுள் மயங்குதலும், தொகையில் மயங்குதலும், உருபு வேற்றுமையால் மயங்குதலும், உருபும் உருபும் மயங்குதலும் என்று இன்னோரன்ன பல மயக்கங்கள் கூறலின் வேற்றுமை மயங்கிய லென்னும் பெயர்த்தாயிற்று (சொல். கல். நூ. 86) என்பது இவர் கூறும் விரிவான விளக்கமாகும்.

 • இயற்பெயர், சினைப்பெயர், சினைமுதற்பெயர், முறைப்பெயர் என்பவற்றைக் ’கள்’ விகுதி சேர்த்துப் பன்மையாற் கூறல் வேண்டும். ஆயின், தொல்காப்பியனார் ஒருமையாற் கூறியது என்னை? என்பதை விளக்கும் கல்லாடனார், இயற்பெயர் முதலாக முறைப்பெயர் ஈறாக ஓதினவெல்லாம் பலவெனினும் ஞாபக வகையான் ஒன்றெனப்பட்டன (சொல்.  கல். நூ.177) என்பதனான், ஞாபகப்படுத்தல் என்னும் உத்தியால் ஒருமையிற் கூறினார் என அமைதி காட்டி ஆசிரியர் கருத்தே வலியுடைத்து என நிறுவும் பகுதி ஏனைய உரைகளிற் காணாத்தாம்.
 • ’அகரமும் ஆகாரமும் வகர உயிர்மெய்யுமாகிய ஈற்றையுடைய அக்கூற்று மூன்று சொல்லும் அஃறிணைப் பன்மைப் படர்க்கை வினையாம்’ என்பதனை விளக்கும்,

”அ ஆ வவென  வரூஉ மிறுதி
அப்பான் மூன்றே பலவற்றுப் படர்க்கை(சொல். வினை. நூ. 18)

எனவரும் சூத்திரத்திற்கு உரைபகரும் கல்லாடனார், அஃறிணை வினைதான் ஒருமைவினையும் பன்மைவினையும் என இருவகைத்து; அவற்றுள் பன்மை வினையை இந்நூற்பாவான் உணர்த்துகிறார் ஆசிரியர் எனக் கூறி, ஒருமையே முன்னையது. எனில், அஃறிணைப் பன்மை வினைமுற்று ஒருமை வினைமுற்றின் முன் கூறப்பட்டதன் ஏது என்னை? என்பதனை விளக்கும் வகையில், யாண்டும் ஒருமையை முன்கூறின் அதற்கோர் சிறப்புண்டுகொல் என்பது படும் என்று முந்து மொழிந்ததன் தலை தடுமாற்று என்பதோர் தந்திரவுத்தியும் உண்டாதலான் இவ்வாறு கூறினான் என்க (சொல். கல். நூ.218) எனக் காரணங்கூறுகிறார். அஃதாவது, ஒருமையையே யாண்டும் முற்கூறுவதனால் அதற்குத் தனிச்சிறப்புண்டு  எனக் கருதப்படுமாகலான் அஃறிணைப் பன்மை வினைமுற்று முற்கூறப்பட்டது என்பதாம். அங்ஙனமே, இதனை, இவர் முந்து மொழிந்ததன் தலை தடுமாற்று என்னுந் தந்திரவுத்தியுளடக்குகின்றார் இவர் என்பதும் சுட்டத்தக்கதாம்.

 • ”இடையெனப் படுப பெயரொடும் வினையொடும்

நடைபெற் றியலுந் தமக்கியல் பிலவே” (சொல். இடை. நூ. 1)

எனவரும் நூற்பாவிற்குக் கல்லாடனார் வழங்கிய சிறப்புரை ஈண்டு நோக்கத்தக்கதாம். அவ்வுரை வருமாறு :

”இச்சூத்திரத்தின் பொருண்மையும் இலேசின் பொருண்மையும் இடைச்சொற் கிளவியும் உரிச்சொற் கிளவியும்என்ற சூத்திரத்துள்ளும் அதன் இலேசினுள்ளும் அடங்குமால் எனின், அது நிரல் நிறை வாய்பாட்டதாக பாற் பெயரெனப்பட்டு வரும் என்றும் வினையொடு உரிவரும் என்றும் கொள்ளக் கிடந்தமையின், இடையும் இரண்டொடும் வரும் என்றற்குக் கூறினார் என்பது (சொல். கல். நூ.251) மேலுங்கூறுவாராய், இனி அவ்விலேசு நிரனிறைச் சூத்திரத்த தாகலாற் புறத்து வழி வருதல் இடைச்சொற்காகவும் உள்வழி வருதல் உரிச்சொற்காகவும் கொள்ளக் கிடக்கும் என்பது கருதி, ஈண்டும் இருவகையானும் இடைவரும் என்பதற்கு இலேசு கூறினார் போலும் என நன்கு துணிதற்கியலாது ஐயுற்றுரைக்கின்றார்.

போலும் வாய்பாடு :

முன்னைய உரையாளர்கள் குறிப்பிடாத பல ஆய்வுகளை ஆராய்தற்கு எடுத்துக்கொண்ட இவர், அங்ஙனம் ஆராயுங்கால் உறுதியாக இன்னது என்று துணிதற்கியலாதவற்றை; ஐயப்பாடுடையனவற்றைப் போலும் என்னும் வாய்பாட்டால் குறிப்பிடுகின்றார். இங்ஙனம், இவர் துணிதற்கியலாது கூறிய இடங்களாக இவருரையில் ஏறத்தாழ 40 இடங்கள் உள. இப்பகுதிகளான் இவர்தம் சால்பு ஒருவாற்றான் வெளிப்படுகின்றது.
இன்னும், இவர் இரு கருத்துக்களைக் கூறி, இரண்டனுள் நல்லது தெரிந்து உரைக்க(சொல். 210) என்றும், தமக்கு உறுதியாகத் தெரிந்த காரணத்தை மட்டும் உரைத்துப் பிறிதுகாரணம் உண்டாயினும் அறிந்திலம் (சொல். 222) என்றும் அருகி உரைத்தலும் உண்டு என்பதும் ஈங்குக் குறிப்பிடற்பாலதாம்.

முடிபுகள் :

          இதுகாறுங் கூறியவற்றைத் தொகுத்து நோக்கின்,

 • தொல்காப்பியத் தொண்டர்கள் எனத்தகும் உரையாசிரியர்கள், ஆசிரியர் தொல்காப்பியனாரின் உளக்குறிப்பை உய்த்துணர்ந்து தெளிய அறிவிக்கும் நுண்ணறிவுடையோர்.
 • தொல்காப்பிய நிலைபேற்றுக்கும், தொல்காப்பியக் கல்வி பரவலுக்கும் உரையாளர்களின் உரைகளும் அன்னோர் மேற்கொண்ட உரைமுறைகளும் பெருங்காரணமாம்
 • தொல்காப்பியத்தின் மூன்றதிகாரங்களுள் சொல்லதிகாரம் ஒன்றே அறுபெறும் உரையாளர்களின் உரைகளைக் கொண்டது; இது சொல்லதிகாரத்திற்கே வாய்த்த பேறாகும்
 • இளம்பூரணர், நச்சினார்க்கினியர் உரைகளைத் தழுவிச் செல்வதாய் கல்லாடனாருரை தோன்றிடினும் அவ்விருவர் உரைகளிலும் சேனாவரையர் உரையிலும் காணப்படாதனவாகிய பல அரிய கருத்துக்கள் இவருரையில் காணலாகின்றன.
 • விருத்தியுரை என்பதற்கு ஏற்ப பல புதிய விளக்கங்களை இவ்வுரை கொண்டுள்ளது.
 • தாம் ஆராயப்புக்க இடங்களிற் நன்கு துணிதற்கியலாதனவற்றை போலும் என்னும் வாய்பாட்டால் இவர் குறிப்பிடுமாற்றான் இவர்தம் சால்பு ஒருவாற்றான் வெளிப்படுகின்றது.
 • இவருரையால் முன்னைய உரையாளர்களின் கருத்துக்கள் நன்கு தெளிவுறுகின்றனவாம்.
 • அன்றியும், இடையியல் பத்தாம் நூற்பாவிற்குப் பின்னுள்ள பகுதிகட்கு இவ்வுரைதானும் கிட்டாமற் போயினமை தொல்காப்பிய ஆய்வுலகிற்குப் பேரிழப்பேயாம்.

என்னும் முடிபுகள் இக்கட்டுரையான் பெறலாகின்றன எனக்கூறி நிறைவு செய்வாம்.

துணை நின்ற நூல்கள்:

1. தொல்காப்பியம், சொல்லதிகாரம், இளம்பூரணம், (கு. சுந்தரமூர்த்தியவர்கள் விளக்கவுரையுடன்) சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை. மறுபதிப்பு – 1973.

2. தொல்காப்பியம், சொல்லதிகாரம், சேனாவரையம், (ஞா. தேவநேயப்பாவாணர் மற்றும் ஆ. பூவராகம்பிள்ளை விளக்கவுரையுடன்), சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை. மறுபதிப்பு – 1970.

3. தொல்காப்பியம், சொல்லதிகாரம், சேனாவரையம், (கு. சுந்தரமூர்த்தியவர்கள் விளக்கவுரையுடன்) அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலை நகர், முதற்பதிப்பு – 1981.

4. தொல்காப்பியம், சொல்லதிகாரம், சேனாவரையம், சி. கணேசையர் பதிப்பு, வடஇலங்கைத் தமிழ்நூற் பதிப்பகம், சுன்னாகம், இலங்கை, முதற்பதிப்பு – 1978.

5. தொல்காப்பியம், சொல்லதிகாரம், நச்சினார்க்கினியம், இராமகோவிந்தசாமிப் பிள்ளை பதிப்பு, சரசுவதி மகால் நூலகம், தஞ்சாவூர், முதற்பதிப்பு – 1997.

6. தொல்காப்பியம், சொல்லதிகாரம், நச்சினார்க்கினியம், (கு. சுந்தரமூர்த்தியவர்கள் விளக்கவுரையுடன்) சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை. மறுபதிப்பு – 1962.

7. தொல்காப்பியம், சொல்லதிகாரம், தெய்வச்சிலையம், கரந்தைத் தமிழ்ச்சங்கப் பதிப்பின் நிழற்படப் பதிப்பு, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர், மறுபதிப்பு – 2010.

8. தொல்காப்பியம், சொல்லதிகாரம், தெய்வச்சிலையம், (கு. சுந்தரமூர்த்தியவர்கள் விளக்கவுரையுடன்) சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, முதற்பதிப்பு – 1963.

9. தொல்காப்பியச் சொல்லதிகாரக் குறிப்பு, பி.சா. சுப்பிரமணிய சாத்திரியார் விளக்கவுரை 38, பாண்டியன் சந்து, தெப்பக்குளம், திருச்சி. முதற்பதிப்பு – 1930.

10. தொல்காப்பியம் – சொல்லதிகாரம் – உரைக்கொத்து (தொகுதி-1), தி.வே. கோபாலையர். (ப.ஆ.) சரசுவதி மகால் நூலகம், தஞ்சாவூர்,  முதற் பதிப்பு – 2007.

11. தொல்காப்பியம் – சொல்லதிகாரம் -ஆராய்ச்சிக் காண்டிகையுரை, ச. பாலசுந்தரம். (உ.ஆ.), பெரியார் பல்கலைக்கழகம், சேலம், முதற்பதிப்பு – 2012.

12. மாணிக்கம். வ.சுப., தொல்காப்பியக்கடல், மணிவாசகர் பதிப்பகம், சென்னை, முதற்பதிப்பு – 1987.


ஆய்வறிஞர் கருத்துரை (Peer Review):

“தொல்காப்பியச் சொல்லதிகாரக் கல்லாடனாருரையின் உரைப்போக்கும் உரைநலனும்’ என்னும்  தலைப்பில் அமைந்த இக்கட்டுரையைப் பலமுறை பயின்று கட்டுரையின் அனைத்துக் கூறுகளையும் உள்வாங்கி ‘வல்லமை’ முன்மதிப்பீட்டு விதிகளைக் முழுமையாகக் கருத்திற்கொண்டு செய்யப்படும் மதிப்பீடு

 • ஆசிரியர் கல்லாடனார் உரைச்சிறப்புப் பற்றிய இவ்வாய்வுக் கட்டுரை முழுமையாக ஆய்வுப் பொருளை உள்வாங்கி ஆய்வுநெறிப்படி அமைக்கப்பட்டுள்ளது.
 • சொல்லதிகார முதல் நான்கு இயல்களுக்கே அன்னார் உரை கிட்டியிருப்பதால் ஆய்வுத் திறனை நன்கு வெளிப்படுத்தற்கு ஏதுவாக ஆய்வுக்களத்தைச் சுருக்கமாகவும் ஆழமாகும் அமைத்துக் கொள்கிறார்.
 • வேற்றுமை மயக்கம் என்பதற்கு உரையாசிரியர் தரும் மயக்கங்களை உள்ளவாறே நிரல்படுத்திக் காட்டியிருப்பது கட்டுரையைக் கற்பாருக்கு ஓர் இலக்கியச் சுவையை நல்குவதாக அமைந்திருக்கிறது.
 • இடைச்சொல் இலக்கணத்தை நூற்பா ஒன்றின் இலேசினால் பெறவிருக்க, பின்னும் கூறியதற்கு உரையாசிரியர் கூறும் காரணமும், பன்மையை ஆசிரியர் தொல்காப்பியர் முன்னெடுத்ததற்கு உரையாசிரியர் கூறும் காரணமும் கட்டுரையாசிரியரால் நன்கு விளக்கப்பட்டுள்ளன.
 • ”முற்படக் கிளத்தல் செய்யுளுள் உரித்தே” என்னும் நூற்பாவிற்கு ஏனைய உரையாசிரியர்களிடமிருந்து தாம்  மாறுபடுவதற்கான சூழலைக் கல்லாடனார் விளக்கியுரைத்ததை நயம்பட எடுத்துக் கூறுகிறார்.
 • ‘ஓசை’ என்பதற்கான நால்வகை விளக்கங்களையும் தானும் புரிந்து, பிறரையும் புரிந்துகொள்ள வைக்கும் கட்டுரையாசிரியரின் தனித்திறன் போற்றுதற்குரியது.
 • ‘ஆய்தலே இக்கட்டுரை ஆராயக்கொண்ட ஆய்பொருளாம்.’ என்னும் தொடரில் ஆய்தல் என்னும் தொழிற்பெயர், பொருளாம் என்னும் பெயரோடு இயையாமை நோக்குதற்குரியது.
 • ‘எழுவாயாகியப் பயனிலை கோடலும், “ஏனைய உரைகளிற் காணாத்தாம்’ எனத் தொடர்களில் அமைந்துள்ள அச்சுப் பிழைகள் நீக்குதற்குரியன. கணிப்பொறி காலத்தில் தட்டச்சுப்பிழை ‘தலைப்பிழை’ என்பதை உணர்தல் வேண்டும். ஆய்வில் சகித்துக்கொள்ள முடியாதது எழுத்துப்பிழை.
 • ”இயற்பெயர் முதலாக முறைப்பெயர் ஈறாக ஓதினவெல்லாம் பலவெனினும் ஞாபக வகையான் ஒன்றெனப்பட்டன” என்னும் பகுதியில் ‘ஞாபகம்’ என்னும் உத்தி எடுத்துக்காட்டுடன் விளக்கப்பட்டிருக்க வேண்டும்.
 • உரைப்போக்கும் உரைநலனும் என்பதே கட்டுரையின் மையப்பொருளாயினும் ஒப்பீட்டு முறைத் திறனாய்வே இத்தகைய கட்டுரைகளின் பொருள் விளக்கத்திற்கு ஏற்றது என்பதை அறிதல் வேண்டும். பொதுவாக ‘மாறுபடுகிறார்’ என்பதனின் குறிப்பிட்டுச் சொல்வது கட்டுரைக்கு வலுச்சேர்க்கக் கூடும்.
 • “இளம்பூரணர், நச்சினார்க்கினியர் உரைகளைத் தழுவிச் செல்வதாகும். எனினும், அவ்விருவர் உரைகளிலும் சேனாவரையர் உரையிலும் காணப்படாதனவாகிய  பல அரிய கருத்துகள் இவருரையில் காணலாகின்றன. என்பதற்கு எடுத்துக்காட்டுகள் வேண்டாமா?
 • விளக்கப்படும் நூற்பாக்களின் பொருண்மைக்கேற்ப கட்டுரையில்  துணைத்தலைப்புகள் இடம் பெற்றிருந்தால்  ஆய்வுப் பொருண்மையும் அளவும் இன்னும் தெளிவாகியிருக்கக்கூடும்.
 • இலக்கிய ஆய்வு என்றால் நாளேடுகளின் மொழிநடை’ என்றும் ‘கிழமை இதழ்களின் நான்கு வரிக் கவிதைகள்’ என்றும் ஆகிவிட்ட தமிழாய்வு பெரும்பரப்பில் இத்தகைய கட்டுரைகள் பெரிதும் போற்றுதற்குரியன. இவை கட்டுரையாசிரியரின் தனிப்போக்கு என்பதும் தனிச்சிந்தனை என்பதும் தெளிவாகத் தெரிகின்றன. .
 • ‘என்வழி தனிவழி’ எனத் தற்காலத் தமிழ்ப் பேராசிரியர் ஒருவர் செவ்வியல் இலக்கியங்களிலும் இலக்கணங்களிலும் தடம் பதிக்க முயல்கிறார் என்பது இக்கட்டுரையால் தெளிவாகிறது. வாழ்த்துகள்!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.