(Peer Reviewed) தமிழ்த் திரையிசைப்பாடல்களில் அந்தாதி – ஓர் ஆய்வுப் பார்வை

0

புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள்                                                                                                                         
உதவிப்பேராசிரியர், மொழிகள் துறை 
பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், 
பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக்கழகம்,
வல்லம், தஞ்சை மாவட்டம் – 613403.   
மின்னஞ்சல் முகவரி-   egowrisss@gmail.com

முன்னுரை

மரபு என்பது மாறாதது. மாற்றம் என்பதும் மாறாதது. அப்படியானால் மரபு மாறுமா? அல்லது மாறுவது மரபாகுமா? என்றால் உறுதியாக இல்லை. மரபு மாறாதது என்பது மட்டுமன்று; மாறுவது மரபாகாது. மாற்றமடைவது மரபின் பூக்களே! அடிமரமாகிய மரபு என்றைக்கும் மாறாது. அப்படி மாறினால் அது மரபாகாது. மாறினால் என்னாகும்? பிறிது பிறிதாகும். கட்டமைப்பு சிதறிவிடும். என்னதான் தமிழில் புதுக்கவிதை,  ஹைக்கூ, சென்ட்ரியூ, லிமரைக், பழமென்ரியு எனக் கவிதைப்பூக்கள் புதுமையாகப் பூத்தாலும் அவற்றைத் தாங்குவது மரபின் வேர்களே! அல்லது மரபாகிய வேரே! இந்தப் பின்புலத்தில் மரபார்ந்த யாப்புக் கூறுகளில் ஒன்றாகிய அந்தாதியில் அமைந்த திரையிசைப்பாடல்கள் சிலவற்றைப் பற்றிய ஆய்வாக இக்கட்டுரை அமைகிறது.

கட்டுரைக் கட்டுமானம்

‘அந்தாதி’ என்னும் மரபியல் சார்ந்த யாப்பு நெறி, மெட்டுக்களுக்கு எழுதப்படும் திரையிசைப் பாடல்களில் அமைந்துள்ள பாங்கினை ஆராய்வதாக இக்கட்டுரை வடிவமைக்கப்படுகிறது. தமிழ்த் திரைப்படங்களில் வந்த ஒருசில பாடல்களையே தனக்குத் தரவுகளாகக் கொள்கிறது. விதிவருமுறையில் அமைந்த இக்கட்டுரை, விளக்கவியல் திறனாய்வு நெறிப்படி கட்டமைக்கப்படுகிறது. மரபும் புதுமையும் இணைந்து இழையும் இத்தகைய பாடல்கள் ஆழமான மேலாய்வுக்குரியது என்னும் நோக்கத்தை முன்னிறுத்துகிறது. திரைப்படப் பாடல்கள் பற்றிய சுவையுணர்வின் அடர்த்தி இன்னும் கூடுதலாக அமைவதோடு, மரபின் நிழலை அடையாளம் காணும் முயற்சியும் கூடும் என்பனவற்றைப் பயனாகக் கொள்கிறது.

அந்தாதியின் இலக்கிய நிலை

அந்தாதித் தொடைத் துளிகளைக் கொண்ட பாடல்களிலிருந்து அந்தாதி என்பது தனியொரு இலக்கியமாக உருவெடுத்தது கி.பி.ஐந்தாம் நூற்றாண்டில் என்பது ஆய்வறிஞர் கருத்தாகும். காரைக்கால் அம்மையார் எழுதிய அற்புதத் திருவந்தாதியே அந்தாதி இலக்கியத்தின் தலையிலக்கியமாகும். காரைக்கால் அம்மையாருக்குப் பின் சேரமான் பெருமாள் நாயனார், பட்டினத்தடிகள், பரணதேவ நாயனார், நம்பியாண்டார் நம்பி முதலியோர் அந்தாதி இலக்கியத்தை வளர்த்த சான்றோர்கள் ஆவர். ஆனால் இதற்கு முன் தோன்றிய திருமந்திரத்தின் நான்காம் மந்திரம் முழுமையும் அந்தாதித் தொடையால் அமைக்கப்பட்டது. தேவாரப் பகுதிகளும் திருவாசகத்தின் திருச்சதகமும் அந்தாதித் தொடையால் அமைக்கப்பட்டவையே. அந்தாதி தனி இலக்கியமாக உருப்பெற்ற காலத்திற்குப் பின்னும் அதன் தொடையழகில் கவிஞர்கள் மயங்கியது உண்மை என்பது இதனால் புலனாகிறது.

அந்தாதி இலக்கியக் கூறுகளுக்கும் அந்தாதி இலக்கியத்திற்குமான ஒரு நுண்ணிய வேறுபாடு உண்டு. அந்தாதிக் கூறுகள் பாட்டின் இடையில் வருவன. ஒரு பாட்டுக்கும் அடுத்த பாட்டுக்குமான இயைபு. ஆனால் அந்தாதி இலக்கியம் மாறுபட்டது. அந்தாதி இலக்கியத்தின் முதற்சீரும் ஈற்றுச்சீரும் ஒன்றாகவே அமைய வேண்டும். பட்டர் எழுதிய அபிராமி அந்தாதி என்னும் நூல் ‘உதிக்கின்ற’ எனத் தொடங்கி ‘உதிக்கின்றவே’ என நிறைவடைவது காணலாம். ‘மெய்தான்’’ எனத் தொடங்கி ‘மெய்யனே’ என்று முடிவது திருச்சதகம். ‘பூவான்’ எனத் தொடங்கிப் ‘பூவே என்று முடிவது சிவப்பிரகாசர் எழுதிய ‘நான்மணிமாலை’. கவிக்கோ துரை.வசந்தராசன் எழுதியுள்ள ‘வேல் வேல்! வேல்!’ என்னும் குறளந்தாதி வேலில் தொடங்கி வேலிலேயே நிறைவடைகிறது.

அந்தாதித் தொடையில் பாரதி எழுதிய இலக்கியங்களான பாரதமாதா நவரத்தினமாலை, திருத்தசாங்கம், விநாயகர் நான்மணி மாலை முதலியன முதற்சீரும் ஈற்றுச்சீரும் பொருந்துமாறு அமையவில்லை.

சிற்றிலக்கியங்களுக்கு வரையறை கிடையாது எனினும் அந்தாதி இலக்கியம் அவற்றுள் ஒன்றாகவே கருதப்படுகிறது. வெண்பா அந்தாதி, கலித்துறை அந்தாதி, பதிற்றந்தாதி, நூற்றந்தாதி, பதிற்றுப்பத்தந்தாதி, ஒலியந்தாதி, கலியந்தாதி, சிலேடையந்தாதி, திரிபந்தாதி, யமக அந்தாதி, நீரோட்ட யமக அந்தாதி எனப் பலவாறு அமைவதுண்டு.

‘அந்தாதி’ என்னும் பெயர் தாங்கித்தான் அந்தாதி இலக்கியம் அமைய வேண்டுமென்பதில்லை. இரட்டை மணிமாலை, மும்மணி மாலை, ஒருபா ஒருபஃது, இருபா இருபஃது, அலங்காரப் பஞ்சகம் முதலான பல்வேறு சிற்றிலக்கியங்களும் அந்தாதித் தொடையிலேயே அமைந்தவை என்பது நோக்கத்தக்கது. அந்தாதி ரசிப்பதற்குரியது. இந்த ரசனை சங்கக் காலத்திலேயே தொடங்கிவிடுகிறது.

மண்திணிந்த நிலனும்
நிலனேந்திய விசும்பும்
விசும்பு தைவரு வளியும்
வளித் தலைஇய தீயும்
தீ முரணிய நிலனும் என்றாங்கு
ஐம்பெரும் பூதத்து இயற்கை போல

என்னும் புறநானூற்று வரிகளில் அடியின் முடிவு தொடக்கமாகி அமைந்துள்ள பாங்கினை அறியலாம்.

மால்வரை ஒழுகிய வாழை
வாழை பூவெனப் பொலிந்த ஓதி

என்னும் சிறுபாணாற்றுப்படையிலும், அந்தாதித் தொடை அழகுற அமைந்துள்ளது. பதிற்றுப்பத்தில் நான்காம் பத்து பாடியவரான காப்பியாற்றுக் காப்பியனார் அப்பத்து முழுமையும் அந்தாதித் தொடையில் அமைத்துப் பாடியுள்ளார். புறப்பாடல் மட்டுமன்றி அகப்பாடல்களிலும் அந்தாதி அமைந்த காலம் உண்டு.

மகிழ்நன் மாண்குணம் வண்டு கொண்ட கொல்
வண்டின் மான்குணம் மகிழ்நன் கொண்டான் கொல்?”

என்னும் ஐங்குறுநூற்றிலும்,

குன்றகத்ததுவே கொழுமிளைச் சீறூர்
சீறூரோளே நாறுமயிர்க் கொடிச்சி
கொடிச்சி கையகத்ததுவே

என்னும் நற்றிணையிலும் அந்தாதித் தொடைகள் ஆங்காங்கே அழகுகாட்டி அமைந்திருக்கின்றன.

திங்கள் மாலை வெண்குடையான்
சென்னி செங்கோல் அதுவோச்சி
கங்கை தன்னைப் புணர்ந்தாலும்
புலவாய் வாழி காவேரி
கங்கை தன்னைப் புணர்ந்தாலும்
புலவா தொழிதல் கயற்கண்ணாய்
மங்கை மாதர் பெருங்கற்பென்று
அறிந்தேன் வாழி காவேரி

என்னும் சிலப்பதிகார வரிகளில் இரண்டு அடிகளே அந்தாதியாக வந்திருக்கின்றன என்பதும் நோக்கத்தக்கது.

படைப்பிலக்கியத்தை விஞ்சும் திரையிசைப்பாடல்கள்

பெரும்பாலும் மெட்டுக்கு எழுதப்படுபவையே திரையிசைப்பாடல்கள். உண்மையில் கவித்துவத்திற்கான உரைகல்லும் திரையிசைப்பாடல்களுக்குமான உரைகல்லும் வெவ்வேறானவை. கவிதை நூல்களுக்கும் மேடைக்கவியரங்கத்திற்குமான வேறுபாடாகக் கொள்ள முடியும். கவிதை நூல்கள் காலங்கடந்து நிற்பன. நிற்பதற்கு உரியன. நிற்க வேண்டியன. எல்லா கவிதை நூல்களுக்கும் இது பொருந்தாது. பாரதிதாசன் எழுதிய எல்லாக் கவிதை நூல்களும் வெற்றியடையவில்லை என்பது இங்குக் கருதத்தக்கது. திரையிசைப்பாடல்களின் வெற்றி பெரும்பாலும் அமைக்கப்படும் இசையைச் சார்ந்துள்ளது என்பது உண்மையேயாயினும் அவற்றுள்ளும் எழுதப்படும் வரிகளுக்காகக் கொண்டாடப்படுவன பல உண்டு. அவை குறைந்த விழுக்காடாயினும் சிறந்த வரிகளாக நின்று சிந்தையைக் கொள்ளை கொள்ளுகின்றன என்பதில் ஐயமில்லை. ஒருசில நேர்வுகளில் பண்பட்ட இலக்கியக் கூறுகளையும் விஞ்சி நிற்கக் கூடிய கற்பனை வளம் வடிவ அழகு, உணர்ச்சியோட்டம் முதலானவற்றைத் திரையிசைப்பாடல்களில் காண முடியும். ‘மங்கையர் திலகம்’ என்ற ஒரு திரைப்படம். அதில் மருதகாசி எழுதிய ஒரு தாலாட்டுப் பாடலில் வரும் கற்பனை தமிழ்க்கவிதைகளின் அத்தனைக் கற்பனைகளையும் விஞ்சி நிற்பதாக உள்ளது. தாய் தாலாட்டுகிறாள். வாடைக்காற்று குழந்தைக்கு ஆகாது. வாடைக்காற்றை நோக்கித் தாய் பாடுகிறாள்.

நடுங்கச் செய்யும் வாடைக்காற்றே!
நியாயமல்ல உந்தன் செய்கை!
தடைசெய்வேன் தாழைப் போட்டு!
முடிந்தால் உன் திறமை காட்டு!’

‘சன்னலின் கதவை மூடிவிட்டால் உன்னால் என்ன செய்ய முடியும்? என் குழந்தையின் தூக்கத்தைக் கெடுக்க முடியுமா உன்னால்? உன் வேகத்தால் சன்னலைத் துளைத்துக் கொண்டு வர முடியுமா? முடியாதே!’ என்று அந்தப் பாசத்தாய் வாடைக்குச் சவால் விடுகிறாளாம். நந்திக் கலம்பகம், கம்பராமாயணம் போன்ற செவ்விலக்கியங்களில் மட்டுமே காண்பதற்குரிய அரிய அழகிய கற்பனையை ஒரு திரையிசைப்பாடலில் காணமுடிகிறதல்லவா?

திரையிசைப்பாடல்களில் அந்தாதித் தொடை

பல்வேறு உத்திகளில் இசையைத் தழுவி அமைக்கப்படுவன திரையிசைப்பாடல்கள். அத்தகைய திரையிசைப்பாடல்களில் அந்தாதித் தொடை பரவலாகப் பயன்படுத்தப்பட்டிருப்பதுடன் வெற்றியும் பெற்றிருக்கிறது.

ஆத்மநாதனும் அந்தாதியும்

எம்.கே.ஆத்மநாதன் ‘‘நாலுவேலி நிலம்’ என்ற படத்தில் அந்தாதித் தொடையில் நாட்டுப்புறச் சாயலில் ஒரு பாட்டை எழுதியிருக்கிறார்.

ஊரார் உறங்கையிலே உற்றாரும் தூங்கையிலே
நல்ல பாம்பு வேடங்கொண்டு நான் வருவேன் சாமத்திலே
நல்ல பாம்பு வேடங்கொண்டு நடுசாமம் வந்தாயானால் 
ஊர்க்குருவி வேடங்கொண்டு உயரத்தில் பறந்திடுவேன்
ஊர்க்குருவி வேடங்கொண்டு உயரத்தில் பறந்தாயானால்
செம்பருந்து வேடங்கொண்டு செந்தூக்காய் தூக்கிடுவேன்!
செம்பருந்து வேடங்கொண்டு செந்தூக்காய் தூக்க வந்தால்
பூமியைக் கீறியல்லோ புல்லாய் நான் மொளைச்சிடுவேன்!
பூமியைக் கீறியல்லோ புல்லாய் நீ முளைத்தாய் ஆனால்
காராம்பசு வேடங்கொண்டு கடித்திடுவேன் அந்தப் புல்லை
காராம்பசு நீயானால் கழுத்து மணி நானாவேன்
ஆலா மரத்தடியில் அரளிச் செடி நானாவேன்!
அத்தியிலே மரமுமாவேன் அத்தனையும் பிஞ்சாவேன்!
நத்திவரும் அத்தானுக்கு முத்துச்சரம் நானாவேன்!’’

அந்தாதி படிப்பதற்கும் பாடுவதற்கும் எளிது. ஆனால் படைப்பதற்கு அரிது. காரணம் அந்தம் ஆதியாக இணைக்கப்படும் அசை, சீர், அடி முதலியவை சொற்பொருள் இணைப்பாக இருக்க வேண்டும். கவிதை வல்லாளர்கள் அமைப்பார்கள். மற்றவர்கள் கதைப்பார்கள். யாப்பின் உறுப்புக்களுள் தொடை என்பதும் ஒன்று. கட்டுதற்குப் பயன்படும் உறுப்புக்கள் வேறு. கட்டிய பின் பார்த்து ரசிக்கின்ற பாங்கு வேறு. பின்னது நோக்குவாரின் பார்வையில் உள்ளது. அதனால்தான் அந்தாதி என்பது யாப்பின் கூறுகளுள் ஒன்றாகக் கொள்ளாமல் தொடைவிகற்பங்களுள் ஒன்றாகக் கொண்டார்கள். ஆத்மநாதனின் பாடலில் காதலர்கள் தங்களுக்குள் கண்ட கனவைப் பரிமாறிக் கொள்கிறார்கள். அந்தக் கனவுப் பரிமாற்றம் ஊடலின் பரிணாமமாக ஒளிர்கிறது. அதுவும் அந்தாதியில் அமைகிறதுபோது ‘காதலி முதலானால் காதலன் முடிவாகிறான் காதலன் முதலானால் காதலி முடிவாகிறாள்’ என்னும் அரிய தத்துவத்தை விளக்குவதாகவும் அமைந்திருக்கிறது.

கண்ணதாசனும் அந்தாதியும்

‘கவலையில்லாத மனிதன்’ என்று கவிஞர் கண்ணதாசனே எழுதித் தயாரித்த படம். அந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள ‘பெண்பார்க்க மாப்பிள்ளை வந்தார்’ எனத் தொடங்கும் பாடலில் அந்தாதியைக் கையாண்டிருக்கிறார்.

பெண்பார்க்க மாப்பிள்ளை வந்தார்! வந்தாரே
பெண்பார்க்க மாப்பிள்ளை வந்தார்!
கண்பட்டமோகமோ? கைபட்ட வேகமோ?
புண்பட்ட நெஞ்சிலும் புதுமைகள் தோன்றுமோ?
எண்ணங்கள் மாறியும் மாறாத சொந்தமோ?
பெண்மையின் நீதியில் பண்பட்ட பந்தமோ?

வெண்முல்லைச் சோலையில் பொன்வண்டு பாடுமோ?
பொன்வண்டு பாடினால் பூந்தென்றல் வீசுமோ?
பூந்தென்றல் வீசினால் பருவங்கள் பேசுமோ?
பருவங்கள் பேசினால் பலனின்றிப் போகுமோ?
மண்பெற்ற பிள்ளைகள் எண்ணற்ற கோடியே!
எண்ணற்ற கோடியில் பெண்மக்கள் பாதியே!
பெண்மக்கள் காதலை ஆண்மக்கள் நாடியே
மணமாலை சூடிடும் மணமேடை தேடியே!
பெண்பார்க்க மாப்பிள்ளை வந்தார் வந்தாரே
பெண்பார்க்க மாப்பிள்ளை வந்தார்!”

ஒரு அடியின் ஈற்றுச் சீரையே அடுத்த அடியின் முதற்சீராக வைத்து  எழுதிய கண்ணதாசன் ஒரு கண்ணியின் ஈற்றுச்சீரை அடுத்த கண்ணியின் முதற்சீராக வைத்துப் புனைந்த பாடல் இப்படி அமைந்திருக்கிறது.

ஆடிவெள்ளி தேடி உன்னை நானடைந்த நேரம்!
கோடி இன்பம் நாடிவந்தேன் காவிரியின் ஓரம்!
ஓரக்கண்ணில் ஊறவைத்த தேன்கவிதைச் சாரம்!
ஓசையின்றிப் பேசுவது ஆசை என்னும் வேதம்!
வேதம் சொல்லி மேளமிட்டு மேடை கண்டு ஆடும்!
மெத்தை கொண்டு தத்தை ஒன்று வித்தை பல நாடும்!
நாடும் உள்ளம் கூடும் எண்ணம் பேசும் மொழி மௌனம்!
ராகந்தன்னை மூடிவைத்த வீணை அவள் சின்னம்
சின்னம் மிக்க அன்னக்கிளி வண்ணச் சிலைக் கோலம்;!
என்னை அவள் பின்னிக் கொள்ள என்று வரும் காலம்!
காலம் இது காலம் என்று காதல் தெய்வம் பாடும்!
கங்கை நதி பொங்கும் கடல் சங்கமத்தில கூடும்!”

என்ற பாடல் எழுபதுகளின் பிற்பகுதியில் தமிழக இளைஞர்களின் உதடுகளை நனைத்த பாடல். இன்னொரு பாடல் இதயத்தையே நனைத்தது. அந்தப் பாடலும் அந்தாதித் தொடையால் அமைந்ததுதான்.

வசந்த கால நதிகளிலே வைரமணி நீரலைகள்!
நீரலைகள் மீதினிலே நெஞ்சிரண்டின் நினைவலைகள்!
நினைவலைகள் தொடர்ந்து வந்தால் நேரமெல்லாம் கனவலைகள்!
கனவலைகள் வளர்வதற்குக் காமனவன் மலர்க்கணைகள்!
மலர்க்கணைகள் பாய்ந்துவிட்டால் மடியிரண்டும் பஞ்சணைகள்!
பஞ்சணையில் பள்ளிகொண்டால் மனமிரண்டும் தலையணைகள்!
தலையணையில் முகம் புதைத்து சரசமிடும் புதுக்கலைகள்!
புதுக்கலைகள் பெறுவதற்குள் பூமாலை மணவினைகள்!
மணவினைகள் யாருடனோ? மாயவனின் விதிவழியோ!
விதிவகையை முடிவு செய்யும் வசந்த கால நீரலைகள்!”

வசந்தத்தில் தொடங்கி வசந்தத்தில் முடித்திருக்கும் கண்ணதாசனின் அரிய திரையிசைப்பாடல் இது. இந்தப் பாடலும் ஒரு அடியின் ஈற்றுச்சீரைத் தொடரடியின் முதற்சீராக வைத்து எழுதிய அரிய பாடல். இவ்வாறு அமைத்து எழுதுவதில் இவர் முன்னோடியாக இருக்கக்கூடும்.

வாலியும் அந்தாதியும்

கண்ணதாசனும் வாலியும் திரையிசைப் பாடலாசிரியர்கள் என்றே அறியப்பட்டுள்ளனர். ஆனால் தமிழிலக்கியக் கவிதை வரலாற்றில் கண்ணதாசனின் இடத்தைத் திரைப்படப்பாடலாசிரியர் என்னும் வரையறைக்குள் அடக்கிவிட இயலாது. இதற்கு அவருடைய கவிதைத் தொகுதிகளே சான்று. இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த கவிஞர் பெருமக்களில் கண்ணதாசன் இரண்டு பொருண்மைகளுக்காக நினைக்கப்படலாம். ஒன்று, தனிமனித அனுபவத்தையே மிகச்சிறந்த கவிதைகளாக்கியது. இரண்டு, இழுத்த இழுப்புக்கு மொழியைக் கையாளும் இலாவகம். திரைப்பட உலகில் கலைஞர் மற்றும் கண்ணதாசன் ஆகியோரைப் போல மரபியல் வீச்சும் ஆழமும் கொண்ட பிறரைக் காண்பது அரிது. வாலி முழுமையான திரையிசைப் பாடலாசிரியர். கண்ணதாசனைவிட மெட்டுக்குப் பொருத்தமாக எழுதுவதில் வாலி விஞ்சி நிற்பார். ஆனால் கண்ணதாசனின் திரையிசைப்பாடல்களில் அடைந்த இலக்கிய வெற்றியை வாலி இறுதிவரை தொடவே முடியவில்லை. பலராலும் பாராட்டப்படும் பாண்டவர் பூமி, அவதார புருஷன் முதலிய படைப்புக்களின் இலக்கியத் தரமும் சிந்தனைக்குரியது. மேடைக் கவியரங்கத்தில் வாலியின் வெற்றி அளவிட முடியாதது. அது அவருடைய சொற்சேர்க்கைகளாலும் சிலேடைகளாலும் பெற்றவை. இவற்றை ஓர் அறிமுகமாகக் கொள்ளலாமே தவிர ஒப்பீடாகக் கொள்ளக் கூடாது. அது பெரியதொரு ஆய்வுக்குரியது. வாலி முதன் முதலாக எழுதிய ‘கற்பகம்’ என்னும் திரைப்படத்திலேயே அந்தாதித் தொடையைப் பயன்படுத்தியிருக்கிறார்.

பக்கத்து வீட்டுப் பருவமச்சான் பார்வையிலே படம் புடிச்சான்!
பார்வையிலே படம்புடிச்சு பாவை நெஞ்சில் இடம் புடிச்சான்!
மனசுக்குள்ளே தேரோட்ட மைவிழியில் வடம் புடிச்சான்!
மருக்கொழுந்து வாசத்திலே மாந்தோப்பில் வழி மறிச்சான்!
மாந்தோப்பில் வழிமறிச்சு மயக்கத்தையே வரவழைச்சான்!

தைமாதம் தாலிகட்ட மார்கழியில் கைய புடிச்சான்!
வைகையிலே வெள்ளமில்லை விடியும் வரை கதைபடிச்சான்!
விடியும் வரை கதை படிச்சு முடியாமல் முடிச்சு வச்சான்!

ஊரெல்லாம் உறங்காது உள்ளமட்டும் அடங்கிவிடும்
ஓசையெல்லாம் அடங்கிவிடும் ஆசை மட்டும் அடங்காது!
ஆசை மட்டும் அடங்காமல் அவனை மட்டும் நெனச்சிருப்பேன்

இந்தப் பாடல் படத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஒருவரின் மகள் பாடுவதாக வருகிறது. மாவட்ட ஆட்சித்தலைவர் மகளுக்குக் காதல் வரக்கூடாத ஒன்று என்பதன்று. அந்த வெளிப்பாடு இப்படித்தான் அமைய வேண்டுமா என்பது பொருளுள்ள வினாவே! ஒரு அறிக்கை போல அமைந்த இந்தப் பாடலில் தொடையழகு என்று தனித்து இல்லை. ஆனால் அந்தாதி அங்கங்கே தலைகாட்டுகிறது. ஓர் அடியின் ஈற்று இரண்டு சீர்களை அடுத்த அடியின் தொடக்கமாக வைத்துப் புனையப்பட்ட பாடல் இது.

வாலியின் புதிய முயற்சி

அந்தாதிக்குப் புதிய பரிணாமத்தைக் கொடுக்க முயன்றவர் வாலி. ஓரடியின் அல்லது ஒரு பாட்டின் இறுதிச்சீர், அசை என்பவற்றுள் ஒன்று அடுத்த அடியின் தொடக்கமாக அமைவதுதான் அந்தாதி. ‘அந்தம் முதலாத் தொடுப்பது அந்தாதி’ என்பது காரிகை. வாலியோ பொருளோடு கூடிய தொடரையே அந்தாதியாக்கிப் பாடுகிறார். அந்தத் தொடர் முந்தைய வரியின் ஈற்றாகவன்றி, நடுவே அமைந்திருக்கிறது.

என்னை எடுத்துத் தன்னைக் கொடுத்துப் போனவன் போனான்டி
தன்னைக் கொடுத்து என்னையடைய வந்தாலும் வருவாண்டி

என்ற ஒரு கண்ணியில் முதற்கண்ணியின் நடுவில் இருக்கிற ‘தன்னைக் கொடுத்து’ என்ற தொடரை அப்படியே எடுத்து அடுத்த வரியின் தொடக்கமாக அமைத்துக் காட்டுகிறார். இதே நெறியில் பின்வரும் கண்ணிகளையும் எழுதியிருக்கிறார் என்பதையும் அறிய முடிகிறது.

இந்த வயதுக்கு ஏக்கத்தை வைத்துப் போனவன் போனான்டி
ஏக்கத்தைத் தீர்க்க ஏனென்று கேட்க வந்தாலும் வருவான்டி

நெஞ்சை எடுத்து நெருப்பினில் வைத்துப் போனவன் போனான்டி
நீரை எடுத்து நெருப்பை அணைக்க வந்தாலும் வருவான்டி

ஆசை மனசுக்கு வாசலை வைத்துப் போனவன் போனான்டி
வாசலைத் தேடி வாழ்த்துக்கள் பாடி வந்தாலும் வருவான்டி

அந்நாள் வரை வந்த அந்தாதியில் இது ஒரு மாறுபட்ட நிலை!. போற்றத்தக்க நிலை!. வடிவத்தில் மாற்றம் என்பதும் இதுதான். மரபில் மாற்றம் என்பதும் இதுதான்.!

நிறைவுரை

கவிதையை எப்படி வேண்டுமானாலும் சுவைக்கலாம். பெண்ணைக் கனியென்பது இலக்கிய மரபு. எல்லாப் பக்கமும் கனி இனிக்கும் என்பது நடப்பியல் உண்மை. ‘செவி நுகர் கனிகள்’ என்பது கம்பன் வாக்கு. கற்பனை, உணர்ச்சி, கருத்து, வடிவம் என்னும் கவிதைக் கூறுகளுள் அந்தாதி என்பது வடிவத்தோடு தொடர்புடையது. எழுத்து, அசை, சீர், தளை என்பன கவிதையின் அகக்கட்டுமானக் கூறுகள் என்றால் புறத்துப் பொலிவைக் காட்டுவன தொடை விகற்பங்கள். கட்டிடத்தின் அகமும் புறமும் போல! அவ்விகற்பங்களுள் அந்தாதி கவிதையை ஈர்க்கும் காரணிகளில் தலையாயது. சிறந்தது. இந்தக் காரணி தமிழின் தங்ககாலமான சங்கக் காலம் முதல் கணினி காலமாகிய தற்காலம் வரைத் திரையிசைப்பாடல்கள் உட்பட எழுதப்படும் கவிதைகளில் மாறாமல் நின்று நிலவுகிறது என்பதை இக்கட்டுரை ஓரளவு விளக்கியிருக்கலாம்.

உதவிய நூல்கள்

  1. சங்க இலக்கியங்கள் — மர்ரே பதிப்பு
  2. சிலப்பதிகாரம் – கழகப் பதிப்பு
  3. பல்வேறு திரையிசைப் பாடல்கள்
  4. யாப்பருங்கலக்காரிகை – கழகப்பதிப்பு
  5. தமிழிலக்கிய வரலாறு – கா.சு.பிள்ளை

ஆய்வறிஞர் கருத்துரை (Peer Review):

‘திரையிசைப் பாடல்களில் அந்தாதி – ஒரு ஆய்வுப் பார்வை’ என்னுந் தலைப்பில் அமைந்த இக்கட்டுரையைப் பலமுறை பயின்று கட்டுரையின் அனைத்துக் கூறுகளையும் உள்வாங்கி ‘வல்லமை’ முன்மதிப்பீட்டு விதிகளைக் முழுமையாகக் கருத்திற்கொண்டு செய்யப்படும் முன் மதிப்பீடு

  1. ‘புதிய மொந்தையில் பழைய கள்’ என்பார்கள். இந்தக் கட்டுரை ‘பழைய மொந்தையில் புதிய கள்’ளாக இனிக்கிறது.
  2. மரபு சார்ந்தே சிந்தித்துப் பழகிய பேராசிரியர்களின் இத்தகைய கட்டுரைகள் புதுமையின் அடர்த்தியைக் கூட்டும் என்பதில் ஐயமில்லை.
  3. அந்தாதியைத் தொடைவிகற்பத்துள் ஒன்றாக முன்னோர்கள் காட்டியிருப்பது அதன் அழகு நோக்கி என்னும் கட்டுரையாளர் கருத்து அருமை!
  4. அந்தாதி இலக்கியத்தின் இடைப்பகுதி மட்டுமன்று தொடக்கமும் முடிவும் கூட ஒரே சொல்லால் நிறைவு பெற வேண்டும் என்பதற்குப் பொருத்தமான எடுத்துக்காட்டுக்களைத் தருவது பாராட்டுக்குரியது.
  5. ‘திரையிசைப்பாடல்களில் அந்தாதியின் வரலாறு’ என்ற தனித்த ஆய்வுக்கு இக்கட்டுரை வழிகோலக் கூடும்.
  6. கவிஞர் திரு ஆத்மநாதனில் தொடங்கி வாலிவரை தரவுகளைக் தேடிக் கொடுத்திருக்கும் ஆய்வாளரின் உழைப்பு குறிப்பிடத்தக்கது.
  7. விரிவும் ஆழமும் கொண்ட அந்தாதி பற்றிய முற்பகுதி விளக்கவுரை  கட்டுரையாளரின் சங்க இலக்கியப் புலமையை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.
  8. என்னதான் புதுமை என்றாலும் மரபின் வேர்களிலிருந்துதான் பூக்க முடியும் என்பதை உறுதி செய்யும் தெளிவான கட்டுரையாக இது மதிக்கப்படலாம்.


பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *