நெல்லைத் தமிழில் திருக்குறள்- 82
நாங்குநேரி வாசஸ்ரீ
82. தீ நட்பு
குறள் 811:
பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை
பெருகலிற் குன்றல் இனிது
மனசால உருக்கமா இருக்கமாரி பசப்புதவங்களோட சேக்கய வளத்துக்கிடதவிட கொறச்சிக்கிடது நல்லது.
குறள் 812:
உறினட் டறினொரூஉம் ஒப்பிலார் கேண்மை
பெறினும் இழப்பினும் என்
தனக்கு தேவப்படுதப்போ சேக்காளி போல நடந்துக்கிட்டு பொறவு தேவையில்லாத நேரம் பிரிஞ்சுபோவுதவங்களோட சேக்க இருந்தா என்ன. இல்லாட்டி என்ன.
குறள் 813:
உறுவது சீர்தூக்கும் நட்பும் பெறுவது
கொள்வாரும் கள்வரும் நேர்
என்ன கெடைக்கும்னு எதிர்பாத்து பழகுத சேக்காளி, தாசி, களவாணி இந்த மூணு பேரும் ஒருத்தருகொருத்தர் சமம் தான்.
குறள் 814:
அமரகத் தாற்றறுக்கும் கல்லாமா அன்னார்
தமரின் தனிமை தலை
போர்க்களத்துல கீழதள்ளி விட்டுப்போட்டு ஓடுத புத்தியில்லாத குதிர கணக்கா இருக்கவங்களோட சேக்க வைக்கத விட தனியா இருக்கது மேல்.
குறள் 815:
செய்தேமஞ் சாராச் சிறியவர் புன்கேண்மை
எய்தலின் எய்தாமை நன்று
நாம பலவிதமா ஒதவி செஞ்சாலும் நமக்கு பாதுக்காப்பா இல்லாத அல்பங்களோட சேக்கயா இருக்கத விட இல்லாம இருக்கது நல்லது.
குறள் 816:
பேதை பெருங்கெழீஇ நட்பின் அறிவுடையார்
ஏதின்மை கோடி உறும்
கூறுகெட்டவனோட நெருங்கின சேக்காளியா இருக்கத விட புத்திசாலி ஒருத்தனுக்கு பகையாளியா இருக்கது கோடிமடங்கு மேல்.
குறள் 817:
நகைவகைய ராகிய நட்பின் பகைவரால்
பத்தடுத்த கோடி உறும்
மொகத்துல சிரிப்பாணியோட சிரிச்சுப் பேசி நடிக்குதவுகளோட சேக்கய விட பகையாளியால வருத துன்பம் பத்துகோடி மடங்கு நன்ம.
குறள் 818:
ஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை
சொல்லாடார் சோர விடல்
முடியும் ங்குத காரியத்தையும் முடிக்க உடாம கெடுக்கவங்க ஒறவ அவுகளுக்கு தெரியாம பையப் பைய வெலக்கிக்கிடணும்.
குறள் 819:
கனவினும் இன்னாது மன்னோ வினைவேறு
சொல்வேறு பட்டார் தொடர்பு
சொல்லுதது ஒண்ணு, செய்யுதது ஒண்ணு னு இருக்கவனோட சேக்க கனவுல கூட துன்பத்தக் கொடுக்கும்.
குறள் 820:
எனைத்துங் குறுகுதல் ஓம்பல் மனைக்கெழீஇ
மன்றிற் பழிப்பார் தொடர்பு
நம்ம வீட்டுக்குள்ளார வந்து நல்லதனமா பேசிப்போட்டு பொறவு பலபேர் இருக்க சபையில பொறளி பேசுதவன் ஒறவ வெலக்கிக்கிடணும்.