ஒரு கலைஞனின் வக்கிர புத்தி

நாகேஸ்வரி அண்ணாமலை

தமிழ்நாட்டில் ஒரு காலத்தில் பெயர் வாங்கிய இயக்குநர், நடிகர் ஒருவர் பெண்களுக்கு ஆண்களால் இழைக்கப்படும் அநீதி குறித்துப் பேசியிருப்பது பெண்ணான எனக்கு நெஞ்சில் நெருப்பை அள்ளிக் கொட்டியதுபோல் இருக்கிறது.  இப்படிப் பேசுவதற்குப் பெண்களை இவர் எவ்வளவு தரக்குறைவாக நினைக்கிறார் என்பதை நினைத்தால் இவருடைய சில படங்களைப் போய் ரசித்துப் பார்த்தோமே என்ற நினைப்பு வந்து மனதில் ஒரு குமட்டல் ஏற்படுகிறது.

இல்லஸ்ரேடட் வீக்லி என்னும் பத்திரிகைக்கு ஆசிரியராக இருந்த குஷ்வந்த் சிங், ‘ஒரு பெண்ணால் ஒரு ஆண்மகனுக்கு இழைக்க முடியாத கொடுமை ஒன்று உண்டென்றால் அது அவனுடைய கற்பைச் சூறையாடுவதுதான்’ என்று சொல்லியிருக்கிறார். இவரே, rape is not violent expression of sex, but sexual expression of violence’  என்று கூறியிருக்கிறார். ‘ஒரு ஆண் ஒரு பெண்ணைக் கற்பழிக்கும்போது அது வன்முறையாகச் செய்யும் பாலுறவு மட்டுமல்ல; தன் ஆதிக்கத்தைப் பாலுறவின் மூலம் காட்டுகிறான்’. இந்தக் கொடுமையை ஆண்களால் மட்டுமே பெண்களுக்கு இழைக்க முடியும்.  இப்படிப்பட்ட கொடுமையில் பெண்களுக்கும் பங்கு உண்டு என்று சொல்ல இந்த இயக்குநருக்கு எப்படி மனம் வந்தது? ஊசியின் காது இடம் கொடுத்தால்தான் நூல் நுழைய முடியுமாம். இது என்ன அபத்தமான உவமை!  இவர் உதிர்த்த முத்துக்களில் இதுவும் ஒன்று!

சில வருஷங்களுக்கு முன்னால் டில்லியில் இரவு பதினொரு மணிக்கு நண்பனுடன் தெருவில் போய்க்கொண்டிருந்த பெண்ணை ஒரு வாகனத்திற்கு இழுத்துக்கொண்டுபோய் நான்கு மிருகங்கள் அவளைப் பலாத்காரம் செய்தனவே, அந்தச் சம்பவத்தில் ஊசி என்ன செய்தது, நூல் எப்படி நுழைந்தது என்று  வெற்றி இயக்குநர் விளக்குவாரா? சென்னையில் ஆறு வயதுச் சிறுமியை அவள் வசித்த அதே அப்பார்மென்ட் கட்டடத்தில் வசித்த ஒரு மிருகம் சீரழித்ததே,  அது எப்படி அந்தச் சிறுமியின் தவறாகும் என்று இவர் விளக்குவாரா? இவை இரண்டே இரண்டு உதாரணங்கள்தான். இன்னும் எத்தனையோ இருக்கின்றன.

அமெரிக்காவில் தொட்டுத் தாலிகட்டிய கணவனே தன் மனைவியைப் பாலியல் பலாத்காரம் செய்ய முடியாது.  அப்படிச் செய்யும் பட்சத்தில் கணவனே குற்றவாளியாகிறான். அப்படியிருக்க ஒரு பெண்ணை எதோ ஒரு மிருகம் பலாத்காரம் செய்யும்போது அதில் பெண்ணுக்கும் பங்கு உண்டு என்று சொல்ல இயக்குநருக்கு எப்படி மனம் வந்தது?

பெண்கள் தங்கள் உடல் தெரிய உடை உடுத்துவதால்தான் ஆண்கள் இப்படி நடந்துகொள்கிறார்கள் என்று ஒரு அதிமேதாவி கூறியிருந்தார். இவர் ஒரு அரசியல்வாதி.  பெண்களை ஒரு தாயாக, சகோதரியாகப் பாவிக்க வேண்டும் என்று பாடம் புகட்டப்பட்ட தமிழ்நாட்டில் எப்போது இந்த வன்முறையில் பெண்களுக்கும் பங்கு உண்டு என்று சொல்ல ஆரம்பித்தோம்? ‘மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா’ என்று பாடினார் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை. மாதவம் செய்து பிறந்த பெண்களையா இப்படிப்பட்ட அவலத்துக்கு உள்ளாக்குகிறீர்கள்? பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர் நாகரிகத்தில் சிறந்து விளங்கினர் என்பதற்குச் சான்றுகள் கீழடியில் கிடைத்திருப்பதாக பெருமை பேசிக்கொள்கிறோம். அப்போதே நாகரிகத்தில் சிறந்து விளங்கிய சமூகத்தில், ஒரு பாதியான பெண்களை இப்போது `இப்படி இழிவுபடுத்த வேண்டுமா?

இன்னொரு உண்மையையும் உதிர்த்திருக்கிறார் இந்த இயக்குநர். ஆண்கள் சின்ன வீடு வைத்துக்கொள்வதில் தவறில்லை என்கிறார். ஆணும் பெண்ணும் சமம் என்று எல்லாச் சமூகங்களும் ஒப்புக்கொண்டாயிற்று. நாகரிகத்தில் பல்லாயிர ஆண்டுகளுக்கு முன்பே சிறந்து விளங்கியதாகச் சொல்லும் தமிழர்களாகிய நாம் பெண்களை இப்படிக் குறைத்துப் பேசலாமா? பெண்களை அடக்கி ஆள வேண்டும் என்ற மிருக உணர்ச்சி இன்னும் தமிழ்நாட்டு ஆண்களிடம் இருக்கிறதோ என்ற சந்தேகம் வருகிறது.

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “ஒரு கலைஞனின் வக்கிர புத்தி

  1. காமுறப்படுவதும் கற்புக்கிழுக்கு என்று ஒரு சொற்றொடருண்டு, அதில் எந்தளவு நியாயமுண்டோ தெரியவில்லை. சீதை, திரௌபதி போன்ற இதிகாச நாயகிகளும் காமுறப்பட்டார்கள். உடற்கூற்றியலின் (அனாட்டமி)அடிப்படையில் விருப்பமேற்படாத நிலையில் வன்புணர்வு சாத்தியமாகாது என்றவோர் கருத்துமுண்டு. சில வேளைகளில் அது தவறாகவுமிருக்கலாம். இதையிட்ட பல்துறை அறிவின்றி யாரும் யாரையும் குறைகூற முடியாது.

Leave a Reply

Your email address will not be published.