ஈழம் தந்த பிள்ளைத்தமிழ் நூல்கள் – 1

0

மீனாட்சி பாலகணேஷ்

அமுதத் தமிழ்மொழியில் சிற்றிலக்கிய வகைகள் நாள்தோறும் வளர்ந்து பெருகிக் கொண்டிருக்கின்றன. பிரபந்தங்கள் எனப்படும் இவை 96 என்று கூறப்பட்டாலும், பல நிகண்டுகளையும் பிரபந்தங்களையும் இணைத்துப் பார்க்கும்பொழுதில் கிட்டத்தட்ட 196 இலக்கிய வகைகள் காணப்படுவதாக பேராசிரியர் ச. வே. சுப்பிரமணியம் ஆராய்ந்து வெளியிட்டுள்ளார்.

கலம்பகம், உலா, பிள்ளைத்தமிழ், மாலை இவற்றோடு அம்மானை, ஊசல், வள்ளை, பந்தடி, கும்மி, சாழல், அலங்காரம், வண்ணம், தாலாட்டு, திருவுந்தியார் என இன்னும் பலவற்றையும் குறிப்பிடலாம்.

‘குழவி மருங்கினும் கிழவதாகும்’ எனத் தொல்காப்பியம் கூறுவதற்கிணங்க ‘சிறுபிள்ளைகளும் பாட்டுடைத்தலைவர்களாகக் கொள்ளப்படுவர்’ என்பதனால், பிள்ளைத்தமிழ் எனப்படும் பெருமை வாய்ந்த இலக்கியம் மட்டும் நெஞ்சையள்ளும் வகையில் விரிந்து பரந்து எண்களில் பலவாகப் பல்கிப் பெருகி வளர்ந்தும், இன்னும் வளர்ந்து கொண்டும் உள்ளது. காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி, எனப் பொதுவான பருவங்களையும், ஆண்பாலுக்கு சிற்றில், சிறுபறை, சிறுதேர் எனும் பருவங்களையும், பெண்பாலுக்கு அம்மானை, நீராடல், ஊசல் எனும் பருவங்களையும் கொண்டு பத்துப் பருவங்களால் அமைவது பிள்ளைத்தமிழ். பிள்ளையின் (குழந்தையின்) வளர்ச்சியைப் பத்து அல்லது அதற்கும் மேற்பட்ட பருவங்களால் போற்றுவது இந்தப் பிரபந்தம்.

இவ்வகை இலக்கியம் வேறு எந்த மொழியிலும் இல்லாததனால் இது பிள்ளைத்தமிழ் எனும் அருமையான பெயர்கொண்டு, தமிழ் எனும் பொதுப்பெயரே அடையெடுத்துச் சிறப்புப் பெயராயிற்று என்று கதிரகாம பிள்ளைத்தமிழை இயற்றிய சிவன் கருணாலய பாண்டியப்புலவர் கூறுவார்.

தமிழகத்தைப்போல் ஈழத்திலும் 17, 18ம் பொது நூற்றாண்டுகளில் பல பிள்ளைத்தமிழ் நூல்கள் எழுந்தன. ஈழநாடும் பிள்ளைத்தமிழ் இலக்கியத்திற்குக் குறிப்பிடத்தக்க பங்களிப்புச் செய்துள்ளது. ஈழத்தில் ஒல்லாந்தர் ஆட்சிக்காலத்தில் வாழ்ந்த இணுவில் சி. சின்னத்தம்பிப் புலவர் பாடிய இணுவில் சிவகாமியம்மை பிள்ளைத்தமிழ் எனும் நூலே காலத்தால் பழமையானதென அறியப்படுகிறது. ஆனால் இந்நூல் இன்னும் பார்வைக்குக் கிடைக்கவில்லை.

ஈழத்தில் விநாயகர், முருகன், அம்பிகை ஆகிய தெய்வங்கள் பேரில் பல பிள்ளைத்தமிழ் நூல்கள் இயற்றப்பட்டுள்ளன. இவை யாவும் தமிழின் பலவிதமான நயங்களிலும் சிறந்து விளங்குவன. இக்கட்டுரையின் நோக்கம் இவற்றைப்பற்றி அறிந்து மகிழ்வதற்காகவே!

விநாயகர் மீது மட்டும் நான்கு பிள்ளைத்தமிழ் நூல்கள் பார்க்கக் கிடைத்துள்ளன. தமிழ்நாட்டில் இயற்றப்பெற்று நாமறிந்த விநாயகர் மீதான பிள்ளைத்தமிழ் நூல்கள் அரும்பாத்தை வேதவிநாயகர்  பிள்ளைத்தமிழ் (இயற்றியவர் பெயர் அறியவில்லை),  கலைசைச் செங்கழுநீர் விநாயகர் பிள்ளைத்தமிழ் (சிவஞான யோகிகள்) ஆகிய இரண்டாகும். இவ்விரண்டும் எவ்வாறு கவிநயமும் பொருள் நயமும் மிகுந்து சிறந்து விளங்குகின்றவோ அவ்வாறே நாம் காணப்போகும் ஈழத்துப் பிள்ளைத்தமிழ் நூல்களும் இனிய, எளிய தமிழில் கற்பனைவளம் செறிந்து காணப்படுகின்றன.

எந்தவொரு செயலைத் தொடங்கும்போதும் அது இடையூறுகளின்றி நிறைவேற வேண்டி சிவபிரானின் மூத்த மகனான விநாயகப்பெருமானை முதலில் வணங்கிவிட்டே தொடங்குவது வழக்கம். ஆகவே நமது வழிபாடுகளிலும்  அனைத்துச் செயல்களிலும் விநாயகர் முதலிடம் வகிக்கிறார். விநாயகரைப் பற்றி, அவர் தோன்றிய வரலாறு, கதைகள் பற்றி விரிவான விநாயகர் புராணம் உள்ளது. அவ்வையாரும் விநாயகர் அகவல் பாடியுள்ளார். தமிழில் எழுந்த எந்தச் சைவசமய நூலும் விநாயகர் வழிபாட்டுடன்தான் ஆரம்பிக்கின்றது. விநாயகர் எனும் பிள்ளையாருக்குப் பல சிறப்புகள் உள்ளன.

இத்தகைய சிறப்பு வாய்ந்த பிள்ளையார் மீது ஈழத்திலிருந்து நான்கு பிள்ளைத்தமிழ் நூல்கள் காணக் கிடைத்துள்ளன. இன்னும் கூட இருக்கலாம். காலங்கனிந்து வரும்போது கிடைக்கலாம். இப்போது கிடைத்தவற்றைப் பற்றிப் பார்க்கலாம்.

                                   ——————————————

1. மட்டுவில் மருதடி தான்தோன்றி வீரகத்தி விநாயகர் பிள்ளைத்தமிழ்

இப்பிள்ளைத்தமிழ் நூல் மட்டுவில் நா. நல்லதம்பி அவர்களால் இயற்றப்பட்டது. 2014-ல் முதல்பதிப்பு வெளியிடப்பட்டது. கோயில் வரலாற்றைப் பார்த்துவிட்டுப் பின் நூலைப் பார்ப்போம்.

நாவாலியூர் சோமசுந்தரப்புலவர் என்பவர் மருதடி  விநாயகர் பதிகம் எனும் நூலை இயற்றியுள்ளர். இதனைப் பதிப்பித்த அவர்களின் திருமகளாம் திருமதி வை. மங்கையர்க்கரசி என்பவர் இவ்விநாயகர் கோவிலின் வரலாற்றை எனது பேராசிரியர் முனைவர் திரு. கோ. ந. முத்துக்குமாரசுவாமி அவர்களிடம் கூறியுள்ளார். இதனை முனைவர் ஐயாவின் அருட்சொற்களிலேயே காண்போமா?

விநாயகக் கடவுள் “அருவமு முருவுமாகி யனாதியாய்ப் பலவா யொன்றாய்ப் பிரமமாய் நின்றசோதிப் பிழம்பு” ஆய் இருப்பார். ஆயினும், அடியார்களுக்கு அருள் சுரக்கும்படி பூமியிலே பல இடங்களிலும் தமது அருட்டிரு மேனியைக் காட்டி வெளிப்படுவார். அங்ஙனம் வெளிப்பட்டருளிய விடங்களில் அன்பர்கள் அவருடைய அருண்மேனித் திருக்குறியை நிறுத்தித் திருக்கோவில் சமைத்து வழிபட்டுவருவர். அங்ஙனம் வழிபட்டுவரும் திருக்கோவில்களில் மருதடியும் ஒன்று.

இஃது இலங்கைக்கு மணிமுடியாக விளங்கும் யாழ்ப்பாண நாட்டிலே வண்டுபடு தாமரைக் குண்டுநீர்க் குளமும், கொண்டல் கண்படுக்கும் தண்டலை வளனும், காய்குலைத் தெங்கும் தீஞ்சுலைப் பலவும், நெடுஞ்சினை மாவும் தீஞ்சுலைக் கதலியும், கன்னலுஞ் செந்நெற் கழனியும் நிறைந்த அருந்தமிழ் மருதச் செழுந்திணை நலனுமுள, வானினனம் மாறாத மானியம்பதியிலே யாழ்ப்பாணத்துக்குப் போகும் தெருவின் முடக்கில் உள்ள முக்கோணத்திடர் என்னும் இடத்தில் தேனினம் முரலச் செழுந்தேன் பிலிற்ற வானளவோங்கும் ஒரு மருதமரத்தின்கீழ் அமைந்துள்ளது. இது மிகவும் பழையது. யாழ்ப்பாண நாட்டை ஆண்ட தமிழரசர் காலத்திற்கு முன் தோன்றியது என்று பெரியோர் கூறுகின்றனர்; அது எப்போது தோன்றியதென்று அறுதியிட்டுக் கூற முடியாது.

ஆதியில் அது அடியார் பொங்கல் செய்து பூசிக்கும் இடமாகவே இருந்தது. பின்பு வேளாள மரபில் உதித்த சிவபூசையாளரால் பூசிக்கப்பட்டு வந்தது. இப்பொழுது அந்தணரால் பூசை செய்யப்பட்டு வருகின்றது. இதற்குத் தென்மேற்குப் புறமாகப் பிள்ளையார் குளம் என்னும் பெயருடைய ஓர் திருக்குளமுண்டு. இங்கே ஒருநாளும் குறையாது பொங்கல் வணக்கம் நடைபெற்று வருகின்றது. திருக்கோவில் கிழக்கும் மேற்கும் வாசலும் கோபுரமுமுடையது. வாயில் மேற்கு வாயில். சுவாமிக்கு வீரகத்தி விநாயகர் என்ற பெயருண்டு. தாடொழு மடியவர் நாடொறுங் குழுமி, இங்கிதமொடுபுரி பொங்கல் மண்டபமும், வாய்த்திடு பங்குனி வருநாள் விழவினிற் தீர்த்த நின்றாடும் தீர்த்த மண்டபமும், அணித்தேர் நிறுத்து மணித்தேர் நிலையமும், விழுமிய சிறப்பிற் கழுநீர்க் கூவலும், உண்ணீருதவும் நன்னீர்க்கிணறும், அடியவவர் குழுமும் தெளிபுனற் குளனும், மாவும் மருதும் வன்னி மந்தாரையும் பாமலி செந்நெற் பழன நற்பரப்பும் வீதியிலுடையதாய் இப்பொழுது விளங்குகின்றது. நாட்பூசையும் திருவிழாக்களும் சிறப்பாக நடைபெறுகின்றன.

விழாக்காலங்களில் அடியவர்கள் திருவீதியில் உடம்பினாலுருளுதல், காவடி எடுத்தல் முதலாகிய தொண்டுகளைச் செய்து விரதமிருந்து வழிபாடாற்றி வருவர். ஆண்டுதோறும் பங்குனித் திங்கள் பதினைந்தாநாள் கொடி ஏறிச் சித்திரைத்திங்கள் முதலாம் நாளில் தேர்த்திருவிழாவும், இரண்டாநாள் தீர்த்தத் திருவிழாவும் நடந்து வருகின்றன. இவையிரண்டின் காட்சி வெகுமாட்சியானது. ஆதிநாட்டொடங்கி அடியார்கள் வேண்டியதை வேண்டிய வண்ணங் கொடுக்கும் அற்புதமான தலமிது வென்று அன்பர்கள் கூறுகின்றார்கள்.‘ (மருதடி விநாயகர் பதிகம்- தாரகை மின்னிதழ்)

இந்தப் பிள்ளையார் மீதான பிள்ளைத்தமிழ் நூலும் அருமையாகத் தொடங்குகிறது. பிள்ளைத்தமிழ் இலக்கணப்படி காப்புப் பருவத்து முதற்பாடல் திருமால் மீதே அமையும். பின்பு, சிவபிரான், உமையம்மை, ஏனைய தெய்வங்கள் என விளித்துப் பாடப்படுவர். அப்போது அவர்களின் சிறப்புகளும் பெருமைகளும் கூறப்படும். இந்த பிள்ளைத்தமிழ் நூலிலோ வினாயகப் பெருமானின் பெருமைகளைக் கூறி, அத்தகைய பெரியோனைப் பாடுதற்கு விக்கினங்கள் வராமல் காத்தருள் எனப் புலவர் வேண்டுவது ஒரு மாறுபாடான உத்தி. இந்நூலின் காப்புப் பருவத்துப் பாடல்கள் அனைத்துமே பெரும்பாலும் இவ்வண்ணமாகவே உள்ளன.

செங்கீரைப்பருவத்தின் முதற்பாடல் அழகானது.

                        அம்மையும் அப்பனும் உலகென உணர்ந்து
                            அங்கவர்க் காணாது, அங்கம்புரண்டு
                   வெம்பியும் விசும்பிற் தேடியுங் காணார்
                            விம்மியும் கண்ணீர் மல்கியும்
                   தம்பியோ மயிலேறித் தாவிப் பறந்தான்
                            தாயும் தந்தையும் உலகென
                   நம்பிய மட்டுவில் மருதடி விநாயகன்
                            நலமுடன் செங்கீரை யாடியருளே.

என ஒரு இனிய தத்துவத்தை உள்ளடக்கிய பாடலிது.

பின்னும் ‘கைத்தல நிறைகனி’ எனும் திருப்புகழ் வரியையும், அவ்வையாரின் ‘பாலும் தெளிதேனும்’ என்ற பாடல் வரியையும் உள்ளடக்கி யாத்த செய்யுட்களையும் இப்பருவத்தே காணலாம்.

தாலப்பருவத்துப் பாடலொன்று:

                        தலைபத்தோ னிராவணன் தாய்வணங்க இமயகிரி
                            தனையசைக்க உமையாள் கரம்பற்றுந்
                   தலைமகனே!….. ” எனத் தொடங்குகிறது.

இராவணன் கயிலையைப் பெயர்க்க அதனை அசைத்தபோது உமையம்மை அஞ்சினாள். சிவபிரானைத் தழுவிக் கொண்டாள். தாய்க்குத் தலைமகனான விநாயகப் பெருமானும் அவளுடைய கரத்தைப் பற்றி ஆறுதலளித்தார் என்பது இனிய கற்பனை! விநாயகப்பெருமான் ஒரு கொம்பன், இரு கையன், மும்மதத்தன், நால்வாயன், ஐங்கரத்தன், ஆனைமுகன் என விளங்குகிறான் என்கிறார் சப்பணிப் பருவப் பாடலொன்றில்.

வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம்,’ எனவும், திருவாக்கும் செய்கருமம் கைகூடும் செஞ்சொற் பெருவாக்கும் பீடும் பெருக்கும் என்ற பழம் தோத்திரப் பாடல்களின் வரிகளையும் தம் கவிதையில் எடுத்தாண்டுள்ளார் இப்புலவனார்.

அம்புலிப்பருவத்தை இப்புலவர் எடுத்தாண்டுள்ளது பிள்ளைத்தமிழ் நூல்களினின்றும் வேறுபட்டுள்ளது. வழக்கமாக சாம, தான, பேத, தண்டம் ஆகிய் உபாயங்களால் அம்புலியை குழந்தையோடு விளையாட அழைப்பர். “காசினியிற் பிள்ளைக்கவிக் கம்புலி புலியாம்,” என்ற சொற்றொடரே இதனாற்றான் எழுந்தது எனலாம். இந்நூலில் பிள்ளையாரின் பெருமைகளைக் கூறி, அத்தகைய விநாயகனுடன் ஆடவா அம்புலியே! எனக் கூறுவதாகவே பத்துப் பாடல்களும் அமைந்துள்ளன. எடுத்துக்காட்டாக,

                        கண்டவர் வியப்புறும் வகைஅருணன் ஒளியால்
                            கவினார் ஒளியைப் பெற்றிடும்
                   பண்பினால் நின்னி யொத்திடும் வேழமுகன்
                            மட்டுவிற் பதியினில் மருதமர நிழலமர்
வெண்டரளக் கொம்பன், வேழமுகத் தெம்பிரான்
                            விநாயகனோ டம்புலீ! ஆடவாவே
                   அண்டரும் பழமறையும் ஓலமிட நின்றஎம்
ஆனைமுக னொடம்புலீ! ஆடவாவே,‘ என ஒரு பாடல்.

அடுத்துக் காணும் சிற்றிற்பருவத்திலும், மிகுந்த விருப்பினில் முயன்று கட்டிய அச்சிறு மங்கையர் சிற்றில் சிதையேலே,’ என்றும், தேனிகர் மொழிபகர் அழகியர் செய்சிறு சீர்பெறு சிற்றில் சிதையேலே,’ எனவும், வேண்டுவதாகவே அமைந்துள்ளன.

சிறுபறை, சிறுதேர்ப் பருவங்களின் பாடல்களும் இவ்வாறே விநாயகர் புகழையே முன்னிலைப்படுத்தி இய்ற்றப்பட்டுள்ளன.

2. இணுவில் செகராச பிள்ளையார் பிள்ளைத்தமிழ்

இணுவில் பரராச சேகரப் பிள்ளையார் கோயில் ஈழத்தில் ஜாஃப்னா விலிருந்து 4 மைல்கள் தள்ளி இருக்கும் இணுவில் எனும் இடத்தில் உள்ளது. சுமார் 600- 700 ஆண்டுகள் பழமையான இக்கோயில் ஜாஃப்னா அரசுடன் தொடர்பு வாய்ந்ததாகும். முக்கிய தெய்வம் பரராச சேகரப் பிள்ளையார். 14-15 பொது நூற்றாண்டுகளில் ஜாஃப்னாவை ஆண்ட அரசனான சிங்கைப் பரராஜசேகரனால் இக்கோவில் கட்டப்பட்டது. தான் எக்காரியத்தைத் தொடங்கு முன்பும் இக்கோவிலில் வழிபட்டுச் செல்வது அவனுடைய வழக்கம். இதனை மடத்து வாசல் பிள்ளையார் கோவில் எனவும் அழைப்பார்கள்.

இந்தப் பிள்ளையார் மீதான பிள்ளைத்தமிழ் நூலானது ச. வே. பஞ்சாட்சரம் எனும் புலவரால் 1988ல் இயற்றப்பெற்றதாகும். இந்தப் பிள்ளையார் இவருடைய குலதெய்வமாவார். தன்மீது பிள்ளைத்தமிழ் பாடுமாறு பிள்ளையாரே இவருடைய கனவில் வந்து ஆணையிட்டார்; அதனால் இதனைப் பாடினார் என அறிகிறோம்.

காப்புப் பருவத்தில் வழக்கம்போலப் பல கடவுளர்களையும் அழைத்துக் குழந்தையைக் காக்க என வேண்டுகிறார் புலவர்.

செங்கீரைப் பருவத்துப் பாடல்களுள் ஒன்று  ஈழத்துக் கோயில் விசேடங்களின்போது நடக்கும் பலவகையான காவடியாட்டங்களையும், பிரதட்சிணம், தீமிதிப்பு ஆகிய வேண்டுதல்களை விளக்குகிறது. இப்படிப் பலவகையான வேண்டுதல்களை நிறைவேற்றி பக்தர்கள் கொண்டாடும் தந்தமுகனே! தம் தலையிற் குட்டிக்கொண்டு உன்னை வழிபடுவதல்லது உன் தலையிலேயே குட்ட வரும் (கோவில் சொத்தைக் கொள்ளையடிப்பவர்கள் எனப் பொருள் கொள்ளலாமா?) மனிதர்களும், மண், பெண், பொன் ஆகியவற்றால் மதிகெட்டவருமாகியோரின் ஆட்டத்தைக் கண்டு அவர்களை நெறிப்படுத்துபவனே! செங்கீரையாடுக! என வேண்டுவதாக அமைந்த பாடல். பொதுவாக அனைத்துப் பாடல்களுமே இத்தொனியிலேயே அமைந்து இயற்றியவரின் மனக்கிலேசத்தையும் தாபத்தையும் வெளிப்படுத்துகின்றன. அதைத் தணிவித்து அருள்பவன் செகராசப்பிள்ளையார் எனுங்கருத்து வெளிப்படுகின்றது.

பறக்குங் காவடி, துள்ளாட்டம்
                            பல்குங் காவடி, பாலமுதம்
                   நிறைக்குங் காவடி, பிரதட்டை
                            நிகழ்த்துங் காவடி தணல்பொங்கும்
                   தெறுந்தீ மிதிப்பு முதற்பத்தி
                            சிறக்கும் வைராக் கியர்ஏத்தும்
                   கறந்த பால்வெண் தந்தமுகா!
                            கையால் தம்தலை தமில்குட்ட
                   மறந்துன் தலையிற் குட்டவரும்
                            மண்,பெண், பொன்னில் குலைந்தவர்கள்
                    திறங்காண் செகரா சக்குருவே!
                            சிறுதளி இணுவை மாமன்னா!
                   முறம்பயில் செவிகள் மொய்த்தலைய
                            முக்கண்! ஆடாய் செங்கீரை!
                   வறங்கெட மாரி வான்பொழிய
                            மகிழ்ந்தெழுந் தாடாய் செங்கீரை!

இன்னும் ஒரு பாடலைக் காண்போம். சொன்னயமும் கவிதை நயமும் மிகுந்த ஒரு தாலப் பருவப்பாடல்:

முப்புரமெரிக்கச் சென்ற சிவபிரான் பிள்ளையாரின் அருளை முதலில் பெற்றே சென்றான்; செகராசப் பெருமானே! பிரணவமாகிய உன்னையீன்ற பிடிபோலும் உமையன்னை உன்னைப் பூந்தொட்டிலில் வளர்த்தித் தாலாட்ட நீ கேட்டுச் சிரித்தபடி உறங்குவாயாக எனும் அழகான பாடல்:

                        மூன்று புரமெரிக்க முக்கண்ணன் போங்காலை
                            ஆன்ற மகனாமுன் அருள்பெற்றான் என்பார்கள்!
                   ஊன்றி உனையெண்ணும் உத்தமர்நெஞ் செல்லாமே
                            தோன்றி இனிமைபல தூண்டச் செகராசக்
                   கோன்றன் கோவில் குடிகொண் டமர்வோனே!
                            ஈன்றாள் பிரண் வமென்னும் பிடியானை
                   போன்றாள்- உமையாள்- பூந்தொட்டி லாட்டவெழுந்
                            தேன்பா யிசைகேட்டிச் சிரித்துறங்கு தாலேலோ!

(வளரும்) 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *