படித்தேன்! சுவைத்தேன்! பகிர்ந்தேன்! -19

0

முனைவர் ச.சுப்பிரமணியன்

பண்ணைக் கவிக்கோ துரை.வசந்தராசன் எழுதிய ‘குற்றங்களே தீர்ப்பு எழுதினால்’ என்னும் கவிதை நூல் பற்றிய செங்கோணப் பார்வை

முன்னுரை

‘விளையும் பயிர் முளையிலே’ என்பர். தம்பி வசந்தராசன் விளைந்த பயிர்தான். இதன் முளை அன்று வெளியான இந்த நூலில் தெரிந்ததுதான். விளைந்த பயிரின் மகத்துவம் உணரப்பட்டதா என்பதுதான் என்னுள் எழுந்த வினா. ஆற்றல் மிக்க கவிதைப் படைப்பாளர்கள் அரியர். அந்த அரியருள்ளும் அரியர் இவர். நாற்பதாண்டுகளுக்கு முன் அதாவது இவருக்கு முப்பது வயது கூட எட்டாத காலத்தில் இன்னும் தெளிவாகச் சொன்னால் வாழ்க்கைச் செலவுக்கே வரும்படி இல்லாத சூழலில் தன்னைப் பற்றியும் தன் எதிர்காலத்தைப் பற்றியும் கவலையும் பதைப்பும் கொண்டிருக்க வேண்டிய ஒரு காலக்கட்டத்தில் சமுதாயத்தைப் பற்றி எண்ணியிருக்கிறார். எழுதியிருக்கிறார். படித்திருக்கிறார். பாடியிருக்கிறார். அவற்றையெல்லாம் பொறுப்புடன் தொகுத்து ஒரு நூலாகவும் வடிவமைத்திருக்கிறார். எத்தனைப் பேர் இப்படிச் செயல்பட்டிருக்கிறார்கள் என்று கணக்கெடுத்தால் தம்பி வசந்தனின் கொள்கை உரம் புரியும். கோட்பாட்டின் நெறி தெரியும். இன்றைக்குக்கூட எழுதுபவர்கள் தங்கள் படைப்புக்களை நகல் எடுத்து வைத்துக் கொள்வதில்லை. அவர்கள் மீதே அவர்களுக்கு நம்பிக்கையில்லை. அனைத்துச் சிந்தனைகளும் ஆவணப்படுத்தப்படல் வேண்டும். அப்படி ஆவணப்படுத்திய காரணத்தால்தான் இன்றைக்கு நூல் வெளிவந்து நாற்பது ஆண்டுகளுக்குப் பின்பும் அதனைப் படிக்கிறோம். சிந்திக்கிறோம். விவாதிக்கிறோம். சிந்தனை ஒரு கருவூலம்!. அது பொதுவெளிக்கு வந்தபின் பொதுச்சொத்தாகி விடுகிறது. கருவூலமாகிய பொதுச்சொத்தைக் காக்க வேண்டியது நம் கடமையல்லவா? இந்தப் பின்புலத்தில் தம்பி வசந்தராசனின் ‘குற்றங்களே தீர்ப்பெழுதினால்’ என்னும் கவிதைத் தொகுப்பு மதிப்பீடு செய்யப்படுகிறது.

தமிழ்த்தாய் வாழ்த்து

பெற்ற தாயை வணங்குகிறார்களோ இல்லையோ தமிழ்க்கவிஞர்கள் பெரும்பாலோர் தமிழ்த்தாயை உச்சி குளிர வாழ்த்தி வணங்கிவிடுவார்கள். வசந்தனின் தமிழ்த்தாய் வாழ்த்து மரபார்ந்த உணர்ச்சித் துடிப்போடு அமைந்திருக்கிறது இந்நூலில். முன்னிலையில் வைத்துத் தமிழ்த்தாயைப் பரவாமல் படர்க்கையில் வைத்து வணங்கியிருக்கிறார். தமிழோடு வாழ்ந்திருக்கிறார் வசந்தராசன்!

“வானூற்றும் கார்மேகச் சொல்வி ரிப்பில்
வளச்சீரும் அடிதொடையும் தானடக்கி
நானூற்றும் தமிழ்க்கவிதை மிளிர்வ தாலே
நான்காணு கின்றேனே காதல் இன்பம்”

சீரினால் அடி. அடிக்குள் தொடை. இவற்றையெல்லாம் கலந்துதரும் தன்னுடைய கவிதைகளில் காதலின்பத்தைக் காணுகிறாராம். என்னதான் புதுக்கவிதை எழுதினாலும் எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை, பா, இனம் பற்றிய தனது புலமை ஐயத்திற்கிடமாகிவிடக் கூடாது என்னும் கவலை இல்லாத கவிஞர் எவருமிலர். பொதுவாக மரபுக்கவிதை எழுதுபவர்கள் பாடலுக்கு முன்பே வாய்பாடுகளைக் குறிக்கிற வழக்கத்தை இன்றும் காணலாம். அதற்குக் காரணம் ‘தனக்கும் யாப்பு தெரியும்’ என்பதை விளம்பரப்படுத்துவதற்காக அல்ல. பிறர் தனக்கு யாப்பு தெரியாதோ என்று நினைத்துவிடக் கூடாதே என்னும் அச்சமே! எனவேதான் நான் ஊற்றும் தமிழ்க்கவிதை என வாளா கூறாமல் ‘சீரும் அடி தொடையும் தானடக்கி’ என்று நிமிர்ந்து கூவுகிறார்.

“விரல் வெண்டை எனைத்தழுவ நெளியும் போது
வெளிர்தங்க நகக்கூர்கள் பேசும் போது
குரல் கம்பி, ‘உம்’ கூட்டி விடைபகன்று
குதித்தோடும் என்மொழிகள் ராணி நெஞ்சில்
பரலொலியாய் பசுமொழியாய் பரவும் போது
குரலெழுப்பிப் பறக்கின்ற எதுகை மோனை
குன்றொளியாய் மிளிர்கின்ற கவிதை ஊற்று!”

எந்தப் பொழுதிலும் என் தமிழை நான் மறக்கமாட்டேன் என்று சொல்ல வருகிறார். விரல்கள் தழுவும்போதும், நகங்கள் பேசும்போதும், குறிப்பு மொழிகளால் காதலியோடு பரிமாறிக் கொள்ளும் போதும் தமிழ் மறப்பதில்லையாம்!. எந்தத் தமிழை? ‘எதுகை மோனை குன்றொளியாய் மிளிர்கின்ற கவிதை ஊற்றையாம்!” முந்தைய வரிகளில் கவிதை உறுப்புக்களைச் சொன்னவர் இந்தப் பாட்டில் தொடை விகற்பங்களால் தனது கவிதை சிறப்படைவதைக் கூறுகிறார்.

“வாய்வைத்து ஊதுகையில் கழுத்துச் சங்கு
வளைத்திட்டு இதழுக்கு ஊட்டி விட்டுப்
போய்விட்ட தேனொலியும் கட்ட விழ்த்த
புதுத்தென்றல் வாசமென இதய வீட்டின்
பாய்விரித்துப் பழமங்கை படுத்து விட்டுப்
பக்கத்தில் எனையழைத்துப் பேசும் சொற்கள்
நோய்காதல் தீர்க்கின்ற மூச்சு எல்லாம்
நடமாடும் தமிழ்க்கவிதை காதல் இன்பம்”

(வ)சந்த’ராசன் ‘சிந்து’ ராசன்’ ஆன கதை

பொதுவாக மரபுக்கவிதை எழுதத் தொடங்குபவர்கள் அசை, சீர், தளை என்னும் இலக்கணக்கூறுகளில் கவனம் செலுத்துவார்கள். அவர்கள் அவற்றையே மரபுக்கூறுகள் என எண்ணிவிடுவதுதான் இதற்குக் காரணம். மரபு மக்கட்சமுதாயத்தைச் சார்ந்தது, தழுவியது என்பதை அவர்கள் மறந்து போனதன் இலக்கிய வெளிப்பாடுதான் வாய்பாடுகளை முன்னிறுத்திக் கவிதைகளைப் புனைய முற்படுவது. மக்கட்சமுதாயத்தை எண்ணி நூல் செய்ததால்தான் தொல்காப்பியர் இலக்கியத்தில் விருந்து, புலன் முதலியவற்றையும் சிந்திக்க முடிந்திருக்கிறது. அந்த வகையில் சிந்து என்பதற்கு இலக்கணம் இல்லை.. சான்றாக வெண்பா என்பது குறள் வெண்பா மட்டுமே. மற்ற வெண்பாக்கள் ஒன்று குறள் வெண்பாவின் விரிவாக இருக்க வேண்டும். அல்லது அந்த விரிவின் சிதைவுகளில் ஒன்றாக இருக்க வேண்டும். ஆனால் சிந்து முதலிய மக்களிசைப் பாடல்கள் ஒவ்வொரு முழுமையான தாளக்கட்டை அடிப்படையாகக் கொண்டவை. எத்தனை வகைச் சிந்து என்பது கணக்கில் அடங்காது. படைப்பவனின் உள்ள அசைவுகளுக்கு ஏற்பச் சொற்கள் இடமாறி நடமாடும். சந்தம் சதிராடும். ஒவ்வொரு சிந்தும் ஒவ்வொரு வகையானவை. காவடிச்சிந்து, வளையல் சிந்து, நொண்டிச்சிந்து, வழிநடைச்சிந்து, ஆனந்தக் களிப்பு, இலாவணி, கிளிக்கண்ணிகள், வண்டிக்காரன் பாட்டு என்னும் பெயர்களே சிந்துப்பாடல்களின் களங்களைக் காட்டிவிடும். இத்தகைய சிந்துப்பாடல்களைக் காய் காய் என்றோ மா மா என்றோ அடக்கிவிட இயலாது, அளந்துவிடவும் முடியாது. அப்படிச் செய்வது அபத்தத்தின் உச்சம். அண்ணாமலை ரெட்டியார் அவர்களே சிந்துக்குத் தந்தை என்றாலும் மகாகவி பாரதியை அவ்வாறு பாவேந்தர் அழைத்ததற்கு வலிமையான காரணம் உண்டு. ரெட்டியாரின் காவடிச்சிந்தில் ஒருசில வகைமாதிரிகளையே காண முடியும். ஆனால் மகாகவி தன் பாடல்களில் அத்தனை வகைகளையும் கையாண்டிருப்பார். குறிப்பதற்கு ஒன்று உண்டு, சிந்துக்குத் தந்தையான பாரதி எழுதிய சிந்துக்களில் காவடிச் சிந்து என்பது ஒரே பாட்டுதான் இருப்பதாகத் தெரிகிறது.

“வில்லினை யொத்த புருவம் வளைத்தனை;

வேலவா! – அங்கோர்
வெற்பு நொறுங்கிப் பொடிப்பொடி
யானது, வேலவா!

சொல்லினைத் தேனிற் குழைத்துரைப் பாள்சிறு

வள்ளியைக் – கண்டு
சொக்கி மரமென நின்றனை
தென்மலைக் காட்டிலே

கல்லினை யொத்த வலிய மனங்கொண்ட
பாதகன் – சிங்கன்
கண்ணிரண் டாயிரங் காக்கைக்
கிரையிட்ட வேலவா!
பல்லினைக் காட்டிவெண் முத்தைப் பழித்திடும்
வள்ளியை – ஒரு
பார்ப்பனக் கோலந் தரித்துக்
கரந்தொட்ட வேலவா!”

என்பது மட்டுமே மகாகவியால் பாடப்பட்ட காவடிச் சிந்தென்று தெரிகிறது. திரையிசைப்பாடல்களில் தோல்வியே அடையாத பாடல்கள் சிந்துக்களே! பல்வகைச் சந்தங்களில் பலவகைப் பாடல்களைத் திரைப்படப் பாடலாசிரியர்கள் எழுதியிருக்கிறார்கள். பாடகர்கள் தங்களது இனிமையான குரலில் அவற்றைப் பாடுகிறபோது உள்ளம் சிலிர்க்கிறது. உயிர் சிணுங்குகிறது.

“கட்டான சிட்டுப் பொண்ணு
கிட்டத்தில ஒட்டி நின்னு
தொட்டு உன்னைக் கட்டிக் கொள்ள
துணிஞ்சு இங்கே வந்தேன் இந்த
வேளை!  —  உன்
தொல்லையெல்லாம் தீர்ந்து போகும்
நாளை!!”

என்னும் ஆலங்குடி சோமுவின் புகழ்பெற்ற பாடல் நினைவிற் கொள்ளத்தகும். பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின்,

“ஆடைகட்டி வந்த நிலவோ? கண்ணில்
மேடை கட்டி ஆடும் எழிலோ? குளிர்
ஓடையில் மிதக்கும் மலர்
ஜாடையில் குளிக்கு மிவள்
காடுவிட்டு வந்த மயிலோ? நெஞ்சில்
கூடுகட்டி வாழும் குயிலோ?”

என்ற பாடலை மகாலிங்கம் பாடுகிறபோது துள்ளாத மனமும் துள்ளுமல்லவா?

“முள்ளை விலக்கி மலரை விரித்ததில்
கள்ளைச் சுவைக்க வந்தேன் – ரசம்
அள்ளிக் குடிக்க வந்தேன் – அந்தக்
கொள்ளை இறைவனின் சம்மதத்தோ டென்று
கூறத் துணிவு கொண்டேன்!  — துயர்
ஓடக்கனவு கண்டேன்!”

என்ற சிந்துக்கண்ணியை வசந்தமாளிகையில் சௌந்தரராசன் குரலில் கேட்டும் மயங்காதவர் உளரா?

“நீலக்கடலலை மோதி வருவதில்
நெஞ்சம் பறிகொடுத்தேன் – இன்று
கோடி அலைகள் என் நெஞ்சில் எழுவதை
யாரிடம் போய்உரைப்பேன்?”

என்னும் பாடியிருக்கிறார் கண்ணதாசன். அந்த மரபிலே வந்தவர் தம்பி வசந்தராசன். இந்த நூலிலே பலவகையான சிந்துக்களைப் பாடியிருக்கிறார்.

“பெண்ணை மலரென்று சொல்லித் திரிந்து நாம்
கிள்ளிக் கசக்குவதா? தட்சிணைத்
தீயில் பொசுக்குவதா?
மண்ணில் பிறந்தவர் தன்னை உணராமல்
இன்னும் இருப்பதுவா? ஐயகோ
இன்னும் இருப்பதுவா?

கொட்டும் இருளிலும் பட்டப்பகலிலும்
ஒட்டி இருப்பதற்கும் குழந்தை
பெத்துக் கொடுப்பதற்கும் – கணவன்
செத்த பின்னரவள் பொட்டு தாலியெனும்
சொத்தை இழப்பதற்கும் – வருவது
சொத்துக்காய் சாவதற்கா?”

20ஆம் நூற்றாண்டில் தமிழாசிரியர் பலர் சிந்துக்கு இலக்கணம் செய்வதாய்ச் சொல்லிக் கொண்டு புலவனுடைய வடிவக் கற்பனைக்கு வாய்பாடு தர முயன்றிருக்கிறார்கள். ஆனால் பாடுகிற கவிஞனின் காட்டாற்று வெள்ளத்திற்கு வெற்று வாய்பாடுகள் அணைபோட முடியாது தடுமாறி நிற்கின்றன. யார் வேண்டுமானாலும் சிந்து எழுதலாம். சிந்து என்பது உள்ளத்தின் துள்ளல்! அந்தத் துள்ளல் எந்த வகையிலும் அமையலாம். எந்த வாய்பாட்டிலும் அமையலாம். அதற்கெல்லாம் வரையறை கிடையாது. வரையறுக்கவும் முடியாது. எழுதிய சிந்துக்கு வேண்டுமானால் இவர்கள் இலக்கணம் சொல்லிக் கொள்ளலாம். அப்படிச் சொல்லப் புகுந்தால் எத்தனை ஆயிரம் கவிஞர்கள்? எத்தனை ஆயிரம் உள்ளங்கள்? எத்தனை ஆயிரம் துள்ளல்கள்? எத்தனை ஆயிரம் சிந்துகள்? எண்ணிப் பாருங்கள். அதனால்தான் சிந்துக்கு வடிவ வரையறை இல்லை! இயலாது. கூடாது. யாப்பிலக்கணம் கற்பிப்பதாய் ஒருவர் தாம் எழுதிய 600 பக்க நூலில் சமநிலைச் சிந்து, வியனிலைச் சிந்து என இருவகைக் கூறுகிறார். வியனிலைச் சிந்துக்கு இருசீர் இரட்டை முதலாக ஆறு வகைகளைக் கூறுகிறார். காவடிச் சிந்து, நொண்டிச் சிந்து, வழிநடைச் சிந்து என்று முன்னெடுத்து ஆனந்தக் களிப்பு, தெம்மாங்கு முதலியவற்றையும் சிந்தொடு இணைத்துக் கொள்கிறார். தாலாட்டு, ஒப்பாரி, கண்ணிகளையும் சிந்துக்குள் அடக்குகிறார். புலவர் குழந்தை, புலவர் சரவணத்தமிழன் சொல்லியிருக்கும் சிந்துக்கள் தனி. இதிலிருந்து என்ன தெரிகிறது. சிந்துக்கு இலக்கண வரையறை செய்வது வீண்முயற்சி என்பதுதான். நேரிசை வெண்பாவையும் சிந்தொலியில் பாடியிருக்கிறார்கள். விரிப்பின் பெருகும்.

“கேடு ஒழிந்திட கேள்வி பிறக்கணும்
கேட்டுக் கொண்டாயா தோழனே! – நம்
நாடு நலம்பெற நம்முடைச் செய்கைகள்
நன்மை விளைக்கணும் தோழனே!”

என்பது வசந்தராசன் எழுதியிருக்கும் மற்றொரு சிந்து வடிவம்.

“ஆடிவரும் அழகுறுப்புக் கூடம் — நெஞ்சம்
அவளுருவைச் செய்துவிடும் பாடம்! உள்ளம்
நாடிவிடும் ராணிமுன்னே
நாட்டியமாய் இசையுமுன்னே
ஆடும் – பின் ஓடும்!”

இந்தத் தொடக்கநிலைச் சந்தங்களைக் கொண்ட சிந்துக்கள் பின்னாளில் எடுத்த விஸ்வரூபத்தையும் நம்மால் காண முடிகிறது.

“போதை அணை உடைத்துப் பேதை இதழ்கொடுத்தாள்!
பேச மறந்து நின்றேன் தோழி!-அந்த
வாதை தினம்கடுக்க வாசல் மொழிதிறந்து
வந்து கவிபெயர்த்தேன் தோழி!”

“மொண்டு பருகும் மது! மொத்தக் கவிதையவள் !
முத்தக் கவிதையினில் சொல்வேன்!–நீ
கண்டு பிடித்துக்கொடு காலம் இருக்கும்வரைக்
கவிதை வடித்துத் தமிழ் வெல்வேன்!”

“‍‍‍‍‍அம்பு மலர்க்குறும்பு!ஆசை மனக்கரும்பு!
அன்பு ஊஞ்சல்பிடித் தாடும்!–அதில்
வம்பு விளையாடிக் கொம்புத் தேன்கூடி
வசந்த நதிப்படகும் ஓடும்!”

“வானை விரலிடுக்கில் வாரி வழியவிட
நாண விழியிரண்டே போதும்!-அவள்
மோனை இமையிரண்டில் மோகம் முந்திவர
மூன்று தமிழ்ச்சுவையும் மோதும்!”

“காதல் எழுதுகிற காலின் விரல்முனையில்
கன்னி மண்ணுமது பூக்கும்!–களி
நாதம் சுமந்துவர நாடு கிறங்கியெழ
நாளும் மூச்சுவழி சாய்க்கும்!”

“ஆன மட்டுமவள் வானைக் குட்டுகிற
அண்டப் பெருவளியின் அழகு! –ஒரு
மோன மொழிவழியில் மொத்த அழகெழுதி
மூடி வைத்தபடி பழகும்!”

“காதல் இணையவளைக் காணும் விழியிரண்டில்
காலம் கவியெழுதிக் கடக்கும்!–அவள்
பாத இணையடியில் பட்ட பூமிக்கொரு
பாப விமோசனமும் கிடைக்கும்!”

சொல்லிப்பாருங்கள்! சந்தத்தின் சுகம் தெரியும்! கவிதை இருக்கிற இடம் இலக்கணம் அல்ல. கவிதையில் இருப்பதுதான் இலக்கணம். ஆயிரம் சந்தங்களில் சிந்து பயின்றவர் கண்ணதாசன். அவரைத் தொடர்ந்து வென்றவர் வசந்தராசன். அவர் கவிதைகளைப் படிப்பதில் கவலை மறக்கிறேன். கண்டு வியக்கிறேன்!

பெண்விடுதலையில் பரத்தைமையொழுக்கம்

பொதுவாகப் பெண்விடுதலை பேசும் படைப்பாளர்களாகட்டும் கவிஞர்களாகட்டும் ஆண்கள் திட்டமிட்டே பெண்களை நாசமாக்குகிறார்கள் என்பது போலவும் வறுமையின் காரணமாகவே விலைமகளிர் என்னும் பிரிவு சமுதாயத்தில் கிளைத்து வந்தது எனவும் பெண்தொடர்பான பாலியல் வக்கிரங்கள் அனைத்திற்கும் ஆண்களே காரணம் என்பதுபோல எழுதிவருகிறார்கள். இந்தக் கருத்தியல் பரத்தமையொழுக்கம் பற்றிய முழுமையான புரிதலைக் காட்டுமா என்பது தெரியவில்லை. முழுமையானதா என்றும் புரியவில்லை. பசி போனால் பரத்தமை போய்விடும் என்பது பத்தாம்பசலித்தனமான வாதம்.

பரத்தமை என்பது ஒழுக்கத்திரிபாகத்தான் சங்கக் காலத்தில் கருதப்பட்டிருந்தது. பின்னாலே மூவேந்தர் ஆட்சியிலும் அதனைத் தடைசெய்ததாகவோ கண்டிக்கப்பட்டதாகவே குறிப்பில்லை. அதற்குப் பின்னாலே மராட்டியர் ஆட்சியிலும் அவரைத் தொடர்ந்த ஆங்கிலேயர் ஆட்சியிலும் இது குறித்த மாற்றுச் சிந்தனை இருந்ததற்கான வலிமையான தரவுகள் இல்லை. இதற்குப் பின்னாலேதான் மேட்டிமை கனவான்களின் உதவியோடு ஒரு மாற்றுத் திட்டம் நடைமுறைக்கு வந்தது. அதாவது சட்டப்படி பரத்தமையை ஒழிப்பது. அந்தரங்கத்தில் அதனை வளர்ப்பது. இல்லாவிட்டால் சட்டமியற்றி நூறாண்டுகள் ஆகியும் அதனை ஒழிக்க முடியாதது மட்டுமன்று மும்பை முதலிய இடங்களில் அத்தொழில் வரன்முறை செய்யப்பட்டுள்ளது.

“பாற்கடல் அமுதத்தைத்
தேவர்கள் சுவைத்துவிட்டதால்தான்
எங்கள் இதழ் அமுதத்தை
அரக்கர்களுக்கு வழங்குகிறோம்
எங்களுடைய நீதிமன்றத்தில்தான்
ஒழுக்கம் தண்டிக்கப்படுகிறது
நாங்கள் நிர்வாணத்தை விற்பனை செய்கிறோம்
ஆடை வாங்குவதற்காக”

என்னும் கவிதை 1971இல் எழுதப்பட்டது. ஆனால் சொர்க்க பூமியாக அன்றைக்குத் திகழ்ந்த சோவியத் ஒன்றியத்தில் 1917இல் புரட்சி வெடித்து 1991 இல் அது தாழ்ச்சியுறும் வரை 75 ஆண்டுகள் முக்கால் நூற்றாண்டு சோசலிசத்தின் பெயரால் ஆட்சி நடைபெற்றது. மக்கள் சீனத்தில் 1956இல் புரட்சி வெடித்து 2009 வரை 53 ஆண்டுகள் அரை நூற்றாண்டுக்குமேல் சோசலிசத்தின் பெயரால் ஆட்சி நடைபெற்றது. இந்த நாடுகள் எல்லாம் வறுமையுள்ள நாடுகளா? பரத்தமை ஒழியவில்லையே!. பாலியல் குற்றங்கள், நீலப்படத் தயாரிப்புகள் மற்றும் வெளியீடுகள் மறையவில்லையே! குறையவில்லையே! காரணம் என்ன? கண்ணதாசன் தாம் எழுதிய திரையிசைப் பாடல் ஒன்றில்,

“ஒவ்வொரு பெண்ணும் கண்ணகிதான்
ஒவ்வொரு நதியும் காவிரிதான்
சமுதாயம் ஜாடை செய்தால்
கலைமகள் கூட விலைமகள்தான்!

தாயாகிக் குழந்தைக்குப் பால் தேடினேன்
பால்வாங்க வழியின்றிப் பணம் தேடினேன்
பணந்தேடும் அதற்காக விலைபேசினேன்
பகவானும் என்மீது வலை வீசினான்”

என்று பரத்தமையின் பன்முகப் பரிமாணங்களை உள்வாங்கியே எழுதியிருக்கிறார். எனவே, பரத்தமைக்கும், பசி பஞ்சம் பட்டினிக்கும் நேரடியாகத் தொடர்புபடுத்திப், பசி ஒழிந்தால் பரத்தமை ஒழியும் என்கிற வாய்பாடு பொருளற்றது என்பதைச் தொடர்புடையவர்கள் புரிந்து கொள்ளுதல் வேண்டும். பரத்தமைக்கு வயிற்றுப் பசியைத் தாண்டி வேறுபல காரணங்களும், ஏதோ ஒரு வகையில் பாலுறவுப் பசியும் காரணமாக அமைகின்றன என்பதை நாம் உணரவேண்டும். ஒப்புக் கொள்ள வேண்டும்.

வயிற்றுப் பசி எப்படி விதம் விதமான உணவுகளை நாடுகிறதோ, அதேபோலப் பாலுறவுப் பசியும் விதம் விதமான உறவுகளை வழிமுறைகளை நாடுகிறது. வயிற்றுப் பசியுள்ள ஒருவன் அனைத்து வகை உணவுகளையும் வீட்டிலேயே சமைத்துச் சாப்பிடலாம். வெளியிலும் வாங்கிச் சாப்பிடலாம். அதேபோலப் பாலுறவுப் பசிக்காரனும் அவன் விரும்பியவாறான உறவுகளை வீட்டிலும் பெறலாம். இயலாதபோது வெளியிலும் பெறலாம். இது அவரவர் வாழ்நிலை, சமூக இருப்பு, சுற்றி நிலவும் கட்டுப்பாடு அல்லது கட்டுப்பாடின்மை அல்லது பழகும் வாய்ப்பு, வாய்ப்பின்மை இவற்றைப் பொறுத்தே அமைகிறது. இதனாலேயே இது இயல்பாகவும் நிகழ்ந்து விடுகிறது.

தற்போது புழல் சிறையில் அடைப்பட்டிருக்கும் அபிராமி என்ற பெண் தன் கள்ளக்காதலன் வேண்டுகோளின்படி தன் கணவனையும் குழந்தைகள் இருவரையும் கொல்ல முயன்றார். கணவனைக் கொல்லும் சூழல் வாய்க்காத நிலையில் தன் கணவனுக்குப் பிறந்த இரண்டு குழந்தைகளையும் தாயென்றும் நினையாமல் அவர்களைக் குழந்தைகளென்றும் பாராமல் கொன்ற செய்தி சில நாள் ஒளிபரப்புக்குப் பயன்பட்டதை நாம் அறிவோம். அப்போது அந்தப் பெண் சொன்னார் “என் கணவனைவிடப் பிரியாணிக் கடை சுந்தரத்தை நான் அதிகமாக விரும்பினேன்”

கவிஞர்கள் என்ன சொல்கிறார்கள்? சுந்தரத்தின் செயலை ஆணாதிக்கம் என்கிறார்களா? அபிராமியின் செயலுக்கு வறுமை காரணம் என்கிறார்களா? மகளிர் அமைப்பினர் என்ன சமாதானம் கூறுவார்கள்? வறுமையில் வாடும் பெண்களெல்லாம் பரத்தமையொழுக்கம் பூணுகிறார்களா என்ன? அது என்றைக்கும் ஒழுக்கக் கேடு. தெளிவாகச் சொன்னால் தமிழகத்தைப் பொருத்தவரை எந்த அரசாலும் கண்டிக்கவோ தடைசெய்யவோ விரும்பாத ஒழுகலாறு. இப்படித்தான் இந்த மண்ணின் வரலாறு அமைந்திருக்கிறது.

எனவே பரத்தமை ஒழுக்கம் நிலவிய ஒழுக்கம். ஆனால் சமுதாய ஏற்பளிப்பு கிடையாது. விலைமகளிர் சமுதாயப் பிரிவு. அது வறுமையின் காரணமாகத்தான் அமைந்திருந்தது என்பதற்கான வலுவான சான்றுகள் வரலாற்றில் இருப்பதாகத் தெரியவில்லை. உலகில் எந்தக் காலத்திலும் எந்த ஒரு சமுதாயமும் முழுமையும் புனிதப்பட்டு இருந்துவிட இயலாது. தமிழ்ச் சமுதாயத்திலும் இது ஊடுருவியிருந்தது என்பதே உண்மை வரலாறு. நடப்பியல். கவிஞர் ஈரோடு தமிழன்பன் எழுதிய ‘வணக்கம் வள்ளுவ’ என்னும் நூலில் விலைமாதர்கள் வள்ளுவரிடம் கேட்ட வினாக்கள்’ என்னும் தலைப்பில் எழுதியிருக்கும் கவிதை வரிகளில் சொல்லப்பட்டிருக்கும் கருத்துக்கள் அனைத்தையும் சமுதாயத்தின் உண்மையான நிலைப்பாட்டை உரைத்ததாகக் கொள்ளுதற்கு இயலாது.

“எந்த விலை மாது
தன் மகளுக்குக் குபேரன் வீட்டில்
சம்பந்தம் பேசினாள் என்று?”

என வினவும் தமிழன்பனின் வினா பொருளுடையதா? என்பதைச் சிந்திக்க வேண்டும். இந்தச் சிந்தனைகளையெல்லாம் உள்ளடக்கி எழுதுகிறார் வசந்தராசன்.

“வறுமைகளும் ஏழ்மைகளும் வாழு மட்டும்
வரதட்ச ணைக்கொடுமை நீங்கு மட்டும்
கருமையிலே கன்னிசுகம் தேடு கின்ற
காமுகர்கள் திருந்தி மனம் வாழும் மட்டும்
வெறுமுடலைக் காட்டுகிற விபச்சாரந்தான்
வேர்விட்ட ஆல்போல வளருமென்பேன்!”

“எல்லாரும் இராமர்களாய் இருந்துவிட்டால்
எதற்கிங்கே விபச்சாரம்? கரும்பு கண்ட
வெல்லமெனில் ஈக்கூட்டம் இருக்குந் தானே?
வெட்கமென்ன இதையிங்கே வெளியில் சொல்ல?
இல்லையொரு நாதியிங்கே என்பதால்தான்
இடையவிழித்தோம்!”

என்னும் விருத்தத்தில் வசந்தராசன் கண்ணதாசன் பின்பற்றிய பரத்தமை ஒழுக்கத்திற்கான காரணத்தை வழிமொழிந்திருக்கிறார். கவிதைக்காக மட்டுமன்றி இவருடைய கன்னித் தொகுப்பில் இடம் பெற்ற சமுதாயத்தின் அவலக்குரலைச் சுருதிபேதம் இல்லாமல் இவர் வாசித்ததற்காகவும் இது இங்கே சுட்டப்படுகிறது.

கருத்துக்களின் கொள்கலன்

கவிதைத் தொடர்பான கட்டுரைகளில் அது பற்றிய கூடுதல் வரலாற்றுச் செய்திகளையோ புனைவுச் செய்திகளையோ அறிந்து கொள்வதும் அவற்றோடு தொடர்புபடுத்திக் கவிதையை உணர்ந்து சுவைப்பதும் கவிதைப்பயனைப் பெருக்கக்கூடும். நான் சொல்லப் போவது வள்ளற் பெருமான் வாழ்க்கையில் நடந்ததாகக் கூறப்படும் நிகழ்வு. அனைவருக்கும் தெரிந்ததுதான். இந்த நிகழ்வின் அடையாளமும் சூழலும்  மாறலாம். அடிப்படை உண்மை உயர்ந்தது, சிறந்தது. மிக உயர்ந்த கற்பித்தல் கோட்பாட்டை உள்ளடக்கியது. பெருமானின் அண்ணனின் பெயர் சபாபதி. தம்பி இராமலிங்கத்தைக் குருகுலக் கல்வியில் சேர்க்க எண்ணிய அவர் காஞ்சி மகாவித்வான் சபாபதி முதலியாரிடம் அழைத்துச் சென்றார். தன் ஆவலைத் தெரிவித்தார். முதலியாரும் விருப்பத்தோடு ஏற்றுக் கொண்டார். அன்றே வகுப்பு தொடங்கியது. வகுப்பில் இருந்த மாணவர்கள் இறைவணக்கம் பாடினர். அவர்கள் பாடிய இறைவணக்கம்,

“ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்
ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்
மாதாவை ஒருநாளும் மறக்க வேண்டாம்
வஞ்சனையைச் செய்வாரோடு இணங்க வேண்டாம்
போகாத இடந்தனிலே போகவேண்டாம்
போகவிட்டுப் புறஞ்சொல்லித் திரிய வேண்டாம்!
வாகாரும் குறவருடை வள்ளி பங்கன்
மயிலேறும் பெருமானை வாழ்த்தாய் நெஞ்சே”

உலகநாதர் எழுதிய உலகநீதி!. பெருமானின் முகத்தில் மகிழ்ச்சியும் இல்லை! வருத்தமும் இல்லை. சமநிலை! ஐயாவின் வாட்டத்திற்குக் காரணம் கேட்டார் ஆசிரியர். சிறார்களிடம் வேண்டாம் என்னும் எதிர்மறைச் சொல்லைவிட வேண்டும் என்னும் உடன்பாட்டுச் சொல்தான் மனத்தில் பதியும். எனவே இந்தப் பாடலை என் மனம் ஒப்பவில்லை என்றார். “பாட்டின் எல்லா வரிகளையும் ‘வேண்டும் என்று முடியுமாறு’ பாட முடியுமா? உன்னால் சொல்ல முடியுமா?” என்றும் வினவினார். அப்போது வள்ளலார் பாடிய பாடல்தான்,

“ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற
உத்தமர்தம் உறவு வேண்டும்
உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார்
உறவு கலவாமை வேண்டும்

பெருமை பெறும் நினது புகழ் பேசவேண்டும்!
பொய்ம்மை பேசாதிருக்க வேண்டும்!
பெருநெறி பிடித்தொழுக வேண்டும்!
மதமான பேய் பிடியாமை வேண்டும்!”

இந்தப் பாடல் தொடங்கி அமைந்திருக்கும் திருத்தணிகைமாலை பின்னாளில் செப்பம் செய்யப்பட்டதாகக் கொள்ளலாம். காரணம் அச்சிறிய வயதில் வள்ளலாருக்குக் கந்தகோட்டம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.  இந்தப் பாடலில் ‘வேண்டும்’ என ஐயா முடித்திருந்தாலும் எழுவாயையும் எச்சத்தையும் எதிர்மறையாக்கி வினைமுடிப்பினை மட்டும் உடன்பாடாக்கிக் காட்டும் சதுரப்பாடு உணர்க. இரண்டு எதிர்மறைகள் ஒரு உடன்பாடாகுமல்லவா? அவன் ‘கெட்டவன் அல்லன்’ என்றால் ‘நல்லவன்’ என்று பொருள்படுவதுபோல!

“சூழுதல் வேண்டுந் தாள்கள்
தொழுதிடல் வேண்டும் அங்கை
தாழுதல் வேண்டுஞ் சென்னி
துதித்திடல் வேண்டுந் தாலு
ஆழுதல் வேண்டுந் தீமை
அகன்றுநான் இவற்கா ளாகி
வாழுதல் வேண்டும் நெஞ்சம்
தடுத்தது மானம் ஒன்றே!”

என்னும் கந்தபுராணச் செய்யுளிலும் இந்நெறி பின்பற்றப்பட்டிருப்பது காண்க. இந்த முன்னோர் நெறியில் மூழ்கிப் போயிருந்த நான் தம்பி வசந்தராசனின் இந்த நூலில் காணப்படும் கவிதையொன்றினைப் படித்தபோது எனக்குத் தோன்றிய சிந்தனைகளை இங்கே பதிவு செய்கிறேன்.

“பிறப்புக்கு அணைபோட்டுப் பிள்ளைக்கு அறிவூட்டிப்
பிழையின்றி வளர்க்க வேண்டும்! – சோம்பி
இரைப்பைக்கு உரம்போட்டு இரவுக்குத் துணைதேடும்
இழிநிலைகள் ஒழிக்க வேண்டும்!

அடுத்தவன் நல்வாழ்வின் அடிக்கல்லைப் பறிக்கின்ற
அவலங்கள் மாற வேண்டும்! – பணம்
படைத்தவன் இறையென்ற பகல்வேடச் செய்கைகள்
பலியாகி ஒழிய வேண்டும்!

இறையென்னும் பெயராலே இருக்கின்ற மூடங்கள்
இல்லாமல் போகவேண்டும்! – ஒரு
வரைக்குள்ளே நாமிருந்து வளர்க்கின்ற பண்பாடு
வளமைதனை ஆள வேண்டும்!

இரவுக்கும் பகலுக்கும் இடைவெளியே இல்லாமல்
எப்போதும் உழைக்க வேண்டும்! – வந்த
வரவுக்குள் செலவடக்கும் வாழ்க்கையின் தத்துவத்தை
வழியெங்கும் பொறிக்க வேண்டும்!

சீர்கேட்டுப் பெண் கேட்கும் சீர் கெட்ட திருமணங்கள்
சிந்தனைகள் மாற வேண்டும்! — காதல்
வேர்பாய்ச்சித் திருமணத்தில் வேற்றுமைகள் வெறுத்தொதுக்கி
வேதனையை ஓட்ட வேண்டும்!

உள்ளத்தின் கனவுக்கும் உறைகின்ற நனவுக்கும்
உறவென்ற பாலம் வேண்டும்!  — அதில்
கள்ளங்கள் கபடுகள் கண்ணீரின் மூலங்கள்
கண்டிப்பாய் மாற வேண்டும்!

எட்டாத மாளிகையை எட்டியுள குடிசையுடன்
இணைக்கின்ற உருவம் வேண்டும்! – அதில்
கட்டாயம் சமதர்மம் கச்சிதமாய்க் குடியிருக்க
காலத்தின் துணையும் வேண்டும்!”

என்ற பாடலில் ஒவ்வொரு அடியையும் வேண்டும் என்ற வினைமுடிபு கொண்டு நிறைவு செய்திருக்கிறார். இது எதிர்மறைக்கு எதிரான உடன்பாடு அன்று. இயல்பாகவே அமைந்த உடன்பாடு. இந்தப் பாடலைப் பாவேந்தர் எழுதிய,

“வீழ்ச்சியுறு தமிழகத்தில் எழுச்சி வேண்டும்!
விசைஒடிந்த தேகத்தில் வன்மை வேண்டும்!
சூழ்ச்சிதனை வஞ்சகத்தைப் பொறாமை தன்னைத்
தொகையாக எதிர்நிறுத்தித் தூள்தூ ளாக்கும்
காழ்ச்சிந்தை, மறச்செயல்கள் மிகவும் வேண்டும்!
கடல்போலச் செந்தமிழைப் பெருக்க வேண்டும்!
கீழ்ச்செயல்கள் விடவேண்டும்!………”

என்ற பாடலோடு ஒப்பிட்டுச் சுவைக்க முடியும். ‘வேண்டும்’ என்ற வினைமுடிபில் மயங்கிய கண்ணதாசன்,

“நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்!
நாளோடும் பொழுதோடும் உறவாட வேண்டும்!
பாலோடு பழம் யாவும் உனக்காக வேண்டும்
பாவை உன் முகம் பார்த்துப் பசியாற வேண்டும்
மனதாலும் நினைவாலும் தாயாக வேண்டும்
மடிமீது விளையாடும் சேயாக வேண்டும்”

என்றெழுதினார். கவிதையில் மரபு படிவது என்பது இதுதான். ஒரு கவிதை மரபுக்கவிதை என வழங்கப்படுவதற்கான தகுதிகளில் இதுதான் தலையாயது. பாடலின் வடிவத்தில் மரபு என்பதும் இதுதான். காய் காய் மா மா என அரைகுறை வாய்பாடுகளையெல்லாம் மரபென்று எண்ணிக் கொண்டு ‘மாபாதகம்’ செய்வார் கொஞ்சம் நின்று நிதானித்துச் செல்ல வேண்டும். மற்றவர்கள் விருத்தத்தில் செய்த வித்தையைத் தம்பி வசந்தராசன் சிந்தில் செய்து காட்டியிருக்கிறார் என்பதுதான் சொல்ல வந்த கருத்து.

குருத்தில் வடியும் குருதி வெள்ளம்

மகாகவியின் முதற் கவிதை எதுவென்று நானறியேன் ‘எங்கெங்கு காணினும் சக்தியடா’ என்பதைப் பாவேந்தரின் முதற்பாடலாகச் சொல்லுகிறார்கள். எது எப்படி இருந்தாலும் முதற்பாடல் எழுதுகிறவர்களும் முதல் தொகுப்பினை வெளியிடுகிறவர்களும் பெரும்பாலும் அஃறிணைகளைப் பற்றியும் கந்பனை கலந்தும், காதல் பற்றியும் கவியளப்பார்கள். அதனால் கதையளப்பார்கள். தம்பி வசந்தராசனின் இந்தத் தொகுப்பில் காதல் கவிதையே பெரும்பாலும் இல்லை என்பது வியப்புக்குரியது. தனது படைப்புக் குறிக்கோளை வெளிப்படுத்தும் இராசன்,

“கஞ்சிக் கலயங்கள்
நெஞ்சின் அடிகளில்
அஞ்சி நடுங்கிடும் தீயை – ஏழ்மை
அழுத்திக் கிடந்திடும் வாயை
கொஞ்ச கொஞ்சமாய் என்
கொள்கைக் கவிகளால்
நெஞ்சுவாய் நீக்கி வைப்பேன்”

என்று பதிவு செய்திருக்கிறார். இந்தக் கொள்கைப் பிரகடனத்தை இந்த நூல் முழுவதும் இவர் கொண்டு செலுத்தியிருக்கிறார்.

“சேற்றுச் செருப்பணிந்து
செவ்வயலில் சிற்றிடைகள்
நாற்று நடுமழகை
நயமாகப் பாடியநீ
சோற்றுக்கு வழியின்றி
சோர்ந்து ஒண்ட நிழலின்றி
மாற்றுத் துணிக்கேங்கும்
மக்களை ஏன் பாடவில்லை?”

இந்தக் கவிதையைப் பிறரை நோக்கியதாகக் கருதாமல் இராசன் தன்னை நோக்கி வினவியதாகவே கருதினால் பாட்டின் சாரம் கூடுதலாகும். கெட்டியான களிமண் சேற்றில் காலை ஊன்றி அடுத்த அடிக்காகத் தூக்கி வைக்கிறபோது ஒட்டிய சேறே காலணியாகத் தொடரும். இந்த அவலக்  காட்சியின் அரிய கலைநுட்பத்தைச் “சேற்றுச் செருப்பணிந்து” எனக் கவிதையில் காட்டியிருக்கும் பாங்கு கண்டேன்! பரவசம் கொண்டேன்!

‘வேதனைத் துளிர்ப்புக்கள்’ என்னுந் தலைப்பில் சேரிவீட்டு மழலைகளைக் காட்சிப்படுத்தியிருக்கிறார்.

“எச்சில் படுக்கைச்
சாணச் சகதியில்
குச்சியாய்க் கிடந்து
குளிரில் ஒடுங்கும் இவர்
சோற்றுக்கு அலைவதே
சொந்த வாழ்வெனில்
சாதனைப் பட்டியல்
சாதிப்ப தென்ன?”

நூறாண்டு பேசும் ஓராண்டுச் சாதனையைப் பேசியவர்கள் எல்லாம் அடுத்த தேர்தலில் கூட்டுவதற்குக் குப்பையாகக் கூட இருக்க மாட்டார்கள் என்பதைத் தொடர்ந்து ஆராய்கிறார்.

“உழைத்துக் கொடுப்பவர்
வீதியில் கிடக்கையில்
உண்டு கொழுத்தவர்
மாடியில் படுக்கையில்

பிழைக்க வழிதராக்
கொள்கைத் துணிகளைப்
பிய்த்து எறிந்திடப்
புதுயுகம் பிறந்திட
புறப்படு தோழா புறப்படு!”

என ஆற்றுப்படுத்துகிறார். அணி திரட்டுகிறார் கவிதையில். முப்பது வயதில் வாழ்க்கைச் சிக்கல்களில் மொத்துண்டு கிடந்த இளைஞன் ஒருவன் எழுதிய கவிதை இது என்பதை நம்ப வேண்டும். எண்பது வயதில் ‘கன்னம் சிவந்த பொன்னம்மா’வைப் பாடுகிற வயோதிகக் கவிஞர்கள் இதனைக் கொஞ்சம் மனசாட்சியோடு சிந்திக்க வேண்டும். கவிஞன் தன்னைப் பாதிக்கிற விஷயங்களில் மிகக் கவனமாகவும் எச்சரிக்கையாவும் இருக்க வேண்டும். ‘தன்னை நெருப்புக் கவிஞன்’ என்று முன்னுரையில் சொல்லிக்கொண்டு “நாயிடு ஹால்” கவிதைகளை எழுதிக் கொண்டிருந்தால் நினைவு கொதிக்காதா? கொதிக்கும் நெஞ்சு நடுங்காதா?

“உப்பு நீரு உலகத்திலே ஓட்டைப் படகு பயணத்திலே
அப்பன் பாட்டன் எல்லோருக்கும் ஐலசா! வலை
அடங்கு மீனே வாயும் வயிறும் ஐலசா!”

பார்த்தீர்களா கவிஞன் பார்வையை? தூண்டில்காரன் பார்வை தூண்டிலின் முள் மீது. வலைவீசுகிறவன் மனம் வலையில் விழும் மீன்கள் மீது. பரந்த கடல் பயணம் வெறும் பயணம் ஆகிவிடக் கூடாது என்னும் வேதனை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மீனவனுக்கும் உண்டு. படகு ஓட்டை. படகு நீரால் நிரம்பிக் கவிழுமானால் வலையில் எப்படி மீன் விழும்? படகு நீரால் நிரம்பக் கூடாது. வலை மீனால் நிரம்ப வேண்டும். வலை நிரம்பினால் வயிறு நிரம்பும்! இவருடைய கவிதை வலையில் விழுவன எல்லாம் கண்ணீர் மீன்களே!

பாட்டரங்க முழக்கம்

ஓரளவு வளர்ந்த நிலையில் பாட்டரங்கங்கள் பலவற்றில் பங்கு கொள்கிற வசந்தராசன் இந்த நூலில் ஒரு பாட்டரங்கக் கவிதையை எழுதியிருக்கிறார். இது உண்மையில் பாட்டரங்கத்திற்காக எழுதிப் பதிப்பிக்கப் பெற்றதா? இந்த நூலுக்காகவே எழுதியதா என்பதற்கான குறிப்பு ஏதுமில்லை. எவ்வாறாயினும் எண்சீர் விருத்தங்களால் எழுதப்பட்டிருக்கும் அந்தப் பாடல் இந்த நூலின் ஒட்டுமொத்த பாடுபொருளையும் ஒருசில வரிகளில் முழங்குவதாகவே அமைந்திருக்கிறது. எண்ணிக்கையில் ஐந்து எண்சீர் விருத்தங்களைக் கொண்டிருக்கும் அந்தப் பாடலின் தலைப்பு ‘ஏழ்மைக்கு விடிவில்லை’. இந்தக் கவிதை நூலின் தலைப்பு ‘குற்றங்களே தீர்ப்பெழுதினால்’ என்பதாக அமைய உள்ளடக்கத் தலைப்புக்கள் எல்லாம் “வியர்வை தெய்வங்கள்”, “சேறு”, “முடங்கள்”, “தண்டிக்க வந்திடும் சட்டங்களே!”, “மயான வெளிகள்” என்னுமாறு அமைந்து கவிஞனின் சமுதாய நோக்கினைப் புலப்படுத்துவதாய் அமைந்திருக்கின்றன.

“இடுகாட்டு விறகானோம்! இடிம ழையின்
இனங்காட்டும் மண்ணானோம்! இரக்கம் நெஞ்சில்
அடைகாக்கும் புள்ளானோம்! அரசாங் கத்தின்
அடியேறும் படியானோம்! அவல வாழ்வின்
விடையில்லாக் கணக்கானோம்! வறுமைப் போதின்
விடியாத இரவானோம்! கார ணந்தான்
படையாகத் திரண்டெழுந்து உரிமைப் போரை
படைக்காமல் போனதுதான்! வேறு என்ன?
மூட்டுங்கள் புரட்சித்தீ! முடுக்கும் மூலை
முடங்கட்டும் வெற்றுவாதம்! தீவ ளர்க்க
பாட்டரங்கம் உதவட்டும்!…”

கவிதையிலக்கணத்தைக் கற்றுக்கொண்டு பாடுபொருளை ஒவ்வொன்றாகக் கருத்தில் கொண்டு பாடுவது ஒருவகை. அது பெரும்பாலும் பொதுவானது. இளைஞன் ஒருவன் தன்னைச் சுற்றியுள்ள சமுதாயத்தை உற்று நோக்கி அதன் எதிர்மறை வாழ்வியல் நிலையைப் படைப்பிலக்கியத்தில் கொண்டுவருவது அரிது. ‘சமுதாயப் பார்வைகளே இந்த நூலில்’ என்று இதனை நான் இந்தக் கட்டுரையில் பல இடங்களில் குறிப்பிட்டிருக்கிறேன்.

“நீரில்லாப் பாலைநிலம்! நெஞ்ச வீட்டின்
நினைவேக்கக் கானல் நீர்! தறிபுகுந்த
தாரில்லா நாடாக்கள்! தலைமையில்லாத்
தனிமையோடு துயரங்கள்! இன்ப மென்னும்
வேரில்லாச் செடிகொடிகள்! பகல் தூக்கத்தே
வெளியாகும் கனவிதழ்கள்! ஏழ்மை யென்னும்
எரிமலைக்கு எருவாகி எலும்புக் கூடாய்
அழுகி வரும் நடைப்பிணமாய் ஏழை நாங்கள்!”

“கரைவீழ்ந்த கரையானோம்! கரையோ ரத்துக்
காய்ந்தகொடிச் சருகானோம்! கடலின் வெள்ளைத்
திரையொதுக்கும் அழுக்கானோம்! வெட்டப் பட்ட
திரைப்படத்துச் சுருளானோம்! வாழ்க்கை யென்னும்
வரைபடத்துக் குறையானோம்! சமுதா யத்தின்
வழித்தடத்தின் கல்லானோம்! வயிற்றுக் கேங்கி
அரசியலின் உணவானோம்! வஞ்ச கத்தின்
அரிச்சுவடி அறியாத அகதி யானோம்!”

என்னுமாறு அமைந்த உருவகச் சங்கிலிகள், உடைந்து உருக்குலைந்து போன சமுதாயத்தின் உண்மை வடிவத்தை உணர்த்துவனவாம். வெற்றசைகளால் நிரம்பி வழியும் எண்சீர் விருத்த உலகில், செறிவும் ஆழமும் கொண்ட சீர்களால் நெய்யப்பட்ட கவிதைகளைத் தந்திருக்கிறார் இராசன்.

வாழ்வியல் திட்டம்

இந்த நூலைப் பற்றி எவ்வளவோ எழுதலாம். கருத்தில் கட்டுரையின் அளவு. ‘வாடும் பயிருக்கு வசந்தம் காட்டவே’ என்னும் தலைப்பில் எழுதியிருக்கும் சிந்து நெஞ்சைக் கொள்ளை கொள்ளுவதற்குப் பதிலாகப் பதைக்க வைக்கிறது. சமுதாய அவலங்களைக் கவிதைச் சுவை குறையாமல் நிரலாகப் பதிவு செய்திருக்கும் பாங்கு!

“புதியதோர் பாரதம் பிறந்திட வேணும்
புறப்படு! புறப்படு தோழனே! அதில்
புதுமைகள் பூக்கணும் புதுத்தேன் சுரக்கணும்
புன்மைகள் போக்கணும் தோழனே!”

என்று குறிக்கோளை முன்னெடுக்கும் கவிஞன் இருக்கிற சமுதாயத்தின் இரங்கத்தக்க நிலையை நிரல்படுத்துகிறான்.

“திறமையின் ஊற்று தூங்கிக் கிடக்குது
தட்டி எழுப்பு தோழனே”

“கைகளில் ஆயிரம் வீமனின் வலிமை
காத்துக் கிடக்குது தோழனே!”

“கருத்தினில் பளிங்கெனத் தெளிவுமிருக் கையில்
காலம் கடப்பதேன் தோழனே!”

எனப் பட்டியலிட்டு ஒவ்வொரு தனிமனிதனும் விடியலைக் காண விரையச் சொல்கிறார். இவற்றையெல்லாம் தனிமனிதனை நோக்கிக் கூறப்பட்டவையாகக் கருதினாலும்,

“மூட வழக்கங்களை முற்றிலும் அழிக்கணும்’’

“வாடும் பயிருக்கு வசந்தம் காட்டணும்’

‘வெட்ட வெளிகளும் பட்டு விரிக்கணும்’

‘புள்ளிகள் வைத்துநீ கோலம் போடணும்’

என்பன போன்றவற்றைச் சமுதாய அழுக்குகளாகக் கருதி அவற்றைக் களையும் முயற்சியை முன்னெடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறார்.

களிம்பில்லாத செம்பா?

இந்தக் கன்னித் தொகுப்பில் எல்லாமே சுவைத்தக்க கவிதைகளா? குறைகளே இல்லையா? எனச் சிலர் வினவக்கூடும். அது உண்மையே. அவை அறியாமையாலும் அவசரத்தாலும் அமைந்தவை. திட்டமிட்ட முரண்பாடுகள் அல்ல. சான்றாகப் புதுக்கவிதை என்ற பெயரில் எழுதப்பட்டிருக்கும் சில சொல் எம்பல்களை உரைநடையாகக் கூடக் கருத முடியாது. புதுக்கவிதைப் பரிமாணம்  பற்றிய தெளிவின்மையே இதற்குக் காரணம். மரபுக்கவிதைக்கு வடிவம் வெளியிலிருந்து வருவது. இலக்கணத்தை வைத்துக் கொண்டு எழுதுவது. அதனையே நெறியன்று என்பவன் நான். எழுதப்படுவதையே தனக்கான வடிவமாக ஆக்கிக் கொள்வது புதுக்கவிதை. புதுக்கவிதைக்கான வடிவம் உள்ளேயே அமைவது. மரபுக்கான உணர்ச்சிகள் வேறு. புதுக்கவிதைக்கான உணர்ச்சிகள் வேறு. பொருண்மைகளும் வேறு. புதுக்கவிதையில் தம்பி வசந்தராசனின் இன்றைய வளர்ச்சி இதனின் வேறுபட்டது. இன்றைக்கு இவற்றை அவர் எழுதியிருந்தால் இந்தப் பத்திக்கு வேலையிருந்திருக்காது. ஆனால் இதுவும் சேர்ந்துதான் அவர். அம்மணத்தோடு சேர்ந்ததுதானே ஆடை வாழ்வு?

நிறைவுரை

தம்பி வசந்தராசன் முகநூலில் எழுதி வரும் கவிதைகளைப் படித்துச் சுவைத்து அச்சுவையைப் பரிமாறி வருகிறேன். அவருடைய கவி மூலத்தை அறிதல் வேண்டும் என்னும் துடிப்பால் அவர் எழுதிய இந்தக் கன்னித் தொகுப்பை நான் கண்டேன். எனக்குத் தெரிந்தவரை கன்னித் தொகுப்பில் காதல் பற்றிப் பாடாத அல்லது மிகக் குறைந்த அளவில் பாடிய கவிஞர்களுள் தம்பி வசந்தராசனுக்கு இடம் உண்டு. இலக்கியத்திற்கும் வாழ்க்கைக்கும் தொடர்பு உண்டு. அன்றைக்கு வாழ்க்கையில் காதல் நிலைத்ததால் இலக்கியத்தில் காதல் மணந்தது. இன்றைக்கு நிலைமை தலைகீழ். காதல் ஒரு செயற்கையாகிவிட்டது. செயற்கையைப் பாடி என்ன பயன்? அலங்கோல வாழ்க்கையில் அகம் எடுபடாது, படைப்பில் குறையிருப்பது போலவே பார்வையிலும் குறையிருக்கலாம்.  அதிலும் என்னுடையது வயோதிகப் பார்வை. சமுதாயத்தின் மீது தான் கொண்ட அக்கறையைத் தனக்குத் தெரிந்த கவிதைத் தொழிலால்  வெளிப்படுத்தியிருக்கிறார். செய்யும் தொழிலே தெய்வம்!.

(தொடரும்….)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *