குறளின் கதிர்களாய்…(412)

செண்பக ஜெகதீசன்
குறளின் கதிர்களாய்…(412)
பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்
கறனொன்றோ வான்ற வொழுக்கு.
-திருக்குறள் -148(பிறனில் விழையாமை)
புதுக் கவிதையில்…
மற்றவர் மனைவியை
மனதாலும் விரும்பாத
மாண்பே ஆடவர்க்கு
மதிப்புறு பேராண்மை..
அதுவே
ஆன்றோர்க்குரிய
அறமாம் சிறப்பே,
அவர்க்கு நல்லொழுக்கமும்
அதுவே…!
குறும்பாவில்…
அடுத்தவர் மனைவி மீது
ஆசைப்படாததே பேராண்மை, ஆன்றோர்கதுவே அறம்
அதுவே யவர்க்கு நல்லொழுக்கமுமாம்…!
மரபுக் கவிதையில்…
மற்றவர் மனைவியை அடைந்திடவே
மனதிலும் நினைத்திடா மாண்புடையோர்
பெற்றிடும் பேரதே பேராண்மை
பெருமையா லுயர்ந்த பேருண்மை,
மற்றிதைப் பெற்றிடும் சான்றோர்க்கே
மாண்புடைப் பேரற மிதுவாமே,
பெற்றவர் தமக்கது நல்லொழுக்கப்
பேறது தன்னையும் தந்திடுமே…!
லிமரைக்கூ…
பிறர்மனையாளை விரும்பா மனமே
பேராண்மை, இதையுடைய சான்றோர்க் கிதுவே
நல்லற நல்லொழுக்க இனமே…!
கிராமிய பாணியில்…
ஆசப்படாத ஆசப்படாத
மனசால கூட ஆசப்படாத,
அடுத்தவன் மனைவிமீது
ஆசப்படாத ஆசப்படாத..
ஆண்மயெல்லாம் ஆண்மயில்ல
அடுத்தவன் மனைவிமீது
ஆசப்படாததே
ஆண்மயிலெல்லாம் பேராண்ம,
அது இருக்கிற நல்லவங்களுக்கு
அதுவே
நல்லறம் மட்டுமில்ல
நல்லொழுக்கமும் ஆவுமே..
அதால
ஆசப்படாத ஆசப்படாத
மனசால கூட ஆசப்படாத,
அடுத்தவன் மனைவிமீது
ஆசப்படாத ஆசப்படாத…!