-மேகலா இராமமூர்த்தி

இராவணனுடைய கட்டளையை ஏற்றுக் கும்பகருணனை அழைத்துவர அவன் அரண்மனைக்குச் சென்ற இராவணனின் பணியாளர்கள், அங்கே நீடுதுயிலில் ஆழ்ந்திருந்த கும்பனைக் கண்டனர். எளிதில் துயிலெழுப்ப இயலாதவன் அவன்; ஆகையால், அவனுடைய தலையிலும் செவிகளிலும் தங்கள் கைகளிலிருந்த இரும்புத் தூண்களால் தாக்கி அவனை எழுப்ப முற்பட்டனர்; அவன் எழாதது கண்டு வெகுளியோடு,

”உறங்குகின்ற கும்பகர்ணனே! உங்களுடைய பொய்யான வாழ்வெல்லாம் இன்றிலிருந்து இறங்கத் தொடங்கிவிட்டது; அதனைக் காண எழுந்திருப்பாய் எழுந்திருப்பாய்; காற்றாடிபோல எல்லா இடங்களிலும் திரிகின்ற வில்பிடித்த காலனுக்குத் தூதரானவர் கையில் இனிப் படுத்து உறங்குவாயாக!” என்றார்கள்.   

உறங்குகின்ற கும்பகன்ன உங்கள் மாய வாழ்வெலாம்
இறங்குகின்றது இன்றுகாண் எழுந்திராய் எழுந்திராய்
கறங்குபோல வில்பிடித்த காலதூதர் கையிலே
உறங்குவாய் உறங்குவாய் இனிக்கிடந்து உறங்குவாய்.
(கம்ப: கும்பகருணன் வதைப் படலம் – 7316)

இப்பாடலின் சந்த நயம் நம் சிந்தை கவர்கின்றது.

இரும்புத் தூண்களின் அடிகளுக்கு கும்பகருணன் எழவில்லை; அதனைத் தொடர்ந்து இராவணனின் கட்டளைப்படி யானைகளையும் ஆளிகளையும் அவன்மீது விட்டு மிதிக்கச் செய்தும் அவன் எழவில்லை; ஆயிரம் மல்லர்கள் தாரை, சங்கு, சின்னம் முதலிய ஊதுகருவிகளைக் கொண்டு அவன் காதுகளுக்குள் பெருத்த ஓசை எழுப்பியும் அவன் எழவில்லை; அடுத்து அவன் மார்பில் ஓராயிரம் குதிரைகளை நடத்தியும் ஓட்டியும் வந்தனர்; பெருந்துயில் விருப்பினான அவனுக்கு அச்செய்கை உடம்பைப் பிடித்துவிட்டதுபோல் (மசாஜ்) ஆகிவிடவே இன்னும் இனிதாய்த் துயிலலானான்.

அதன்பின்னர் சூலப்படையாலும் மழுப்படையாலும் வாட்படையாலும் கண்படையில்(துயில்) ஆழ்ந்திருந்த கும்பனைத் தாக்கினர்; பலனில்லை. முயற்சியைக் கைவிடாது ஆயிரம் வீரர்கள் அவன் கன்னங்களில் நீண்ட உலக்கைகளால் விடாது அடிக்கவே இறந்தவன் உயிர்கொண்டு எழுந்ததுபோல் இடத்தைவிட்டு அசைந்து எழுந்தான்.

அவன் எழுந்ததும் அவன்கொண்ட கடும்பசியும் உடனெழுந்ததால், தன் முன் வைக்கப்பட்ட அறுநூறு வண்டிச் சோற்றையும் பலநூறு குடம் கள்ளையும் விரைவாய் உண்டான்; இவை அவன் பசியை மேலும் தூண்டுவன (appetizers) ஆயின. ஆகவே, அவற்றைத் தொடர்ந்து, எருமைக் கடாக்களையும் களிறுகளையும் தின்று சற்றே பசியாறியவன், அண்ணன் அழைத்த செய்தியறிந்து அவனைக் காணச் சென்றான்.

அண்ணனைக் கண்ட கும்பகருணன் மலையொன்று கீழே படுத்துக் கிடப்பதைப்போல் அவனை நிலத்தில் வீழ்ந்து வணங்கினான். இராவணன் கும்பகருணனை ஆரத் தழுவிக் கட்குடங்களையும் மாமிசத் தசைகளையும் மேலும் கொடுத்துப் பசிபோக்கி, அவனுக்குப் புதிய அணிகளைப் பூட்டினான்; மேனியில் சந்தனக் குழம்பைப் பூசினான். அவன் மார்பிலே கவசத்தைக் கட்டினான். அண்ணனின் செயல்களுக்குக் காரணம் விளங்காத கும்பகருணன், அணிகளும் கவசமும் எனக்குப் பூட்டுவது எதற்காக? என்று வினவ,

‘மானிடர் இருவர் வானரப் பெருஞ்சேனையுடையோராய் நம் இலங்கை நகரைச் சுற்றி வளைத்துவிட்டனர்; ஏனையோர் யாரும் பெறாத வெற்றியையும் பெற்றுள்ளனர்; நீ போய் அவர்களின் உயிரை உண்ணும் வேலையை முடித்து வா” என்றான் இராவணன்.

”பேசுவது மானம்; இடைபேணுவது காமம்; கூசுவது மானுடரை; நன்று நம கொற்றம்!” என்று மந்திரப் படலத்தில் இராவணனை இடித்துரைத்துச் சீதையை விட்டுவிடுமாறு அறிவுறுத்திய கும்பகருணன், அதன்பின்பு உறங்கச் சென்றுவிட்டான்; இப்போது வலுவில் உறக்கங் கலைத்து அவன் அழைத்துவரப்பட்ட நிலையில், அண்ணனுக்கும் இராமனுக்கும் போர் ஆரம்பமாகிவிட்டதை அறிகின்றான்; வருத்தமுற்ற அவன், ”கொடும்போர் தொடங்கிவிட்டதா? உவமை கூறவியலா கற்புடைய சானகியின் சிறைத்துயர் இன்னும் நீங்கவில்லையா? விண்ணுலகிலும் மண்ணுலகிலும் ஒப்புக்கூற முடியாதபடி வளர்ந்த நம் மிகுபுகழ் அழிந்ததா? அழிவுகாலம் வந்து புகுந்துவிட்டதா?” என்று குமுறுகின்றான்.

ஆனதோ வெஞ்சமம் அலகில் கற்புடைச்
சானகி துயர்இனம் தவிர்ந்தது இல்லையோ
 
வானமும் வையமும் வளர்ந்த வான்புகழ்
போனதோ புகுந்ததோ பொன்றும் காலமே.
  (கம்ப: கும்பகருணன் வதைப் படலம் – 7350)

”ஐயா! இந்த உலகினைப் பெயர்த்தெடுக்கலாம்; ஏன்…இவ்வுலகம் முழுவதற்கும் வேலிகட்டவும் சொல்லலாம்; ஆனால், பெருவலிமை படைத்த இராமனது தோள் ஆற்றலை வென்றுவிடலாம் என்று நீ நினைப்பது சீதையின் மேனியைத் தழுவலாம் என்பது போலும் (இயலாத காரியம்)” என்றுரைத்தான் கும்பகருணன் இராவணனிடம்.

கல்லலாம் உலகினை வரம்பு கட்டவும்
சொல்லலாம் பெருவலி இராமன் தோள்களை
வெல்லலாம் என்பது சீதை மேனியைப்
புல்லலாம் என்பது போலுமால் ஐயா.  (கம்ப: கும்பகருணன் வதைப் படலம் – 7352)  

தொடர்ந்தவன்…”நம்மோடு போரிட வந்திருக்கும் மானுடர்களின் நெஞ்சமும் செயலும் பேச்சும் அறத்தின்பாற் பட்டதாக அமைந்துள்ளது; நாமோ நெஞ்சில் வஞ்சமும் செயலில் பாவமும் பேச்சில் பொய்யும் வல்லவர்களாயிருக்கின்றோம். நம்மால் அவர்களின் அறத்திற்கு எந்தக் குறையையும் செய்ய இயலுமோ?

சீதையை இராமனிடம் சேர்ப்பித்துவிட்டு ஐயப்படத்தகாத நம் தம்பி வீடணனோடு நாம் நட்புப் பூணுதலே உய்யும் வழியாகும்; அவ்வாறு செய்வதற்கு உனக்கு உடன்பாடில்லையா? நம் படைகளைக் கொஞ்சம் கொஞ்சமாய்ப் பிரித்துப் போருக்கு அனுப்பி அவை அழிதல்கண்டு வருந்துவதை விடுத்து அவற்றை மொத்தமாய்ப் போருக்கு அனுப்புவது உசிதமான செயலாகும்” என்றான்.

கும்பகருணன் சீதையை இராமனிடம் சேர்ப்பிக்குமாறு யோசனை சொன்னதாலும், மானுடரைப் புகழ்ந்தமையாலும் வெகுளியுற்ற இராவணன், ”உன்னை நான் இங்கே வரவழைத்தது மேல் நடக்கவேண்டியது பற்றி அறிந்துகொள்வதற்காக அன்று! எனக்கு அறிவுரை கூறுதற்கு நீ அறிவுபடைத்த என் அமைச்சனுமல்லன்; பகைவர்களைக் கொன்றுவிட்டு வருவதற்காகவே உன்னை வருவித்தேன்; ஆனால் நீயோ போருக்கு அஞ்சுகின்றாய்; உன் வீரம் வீணானது; கள்ளும் கறியும் வேண்டிய அளவுக்கு உண்டுவிட்டாய்; ஆகையால் இரவும் பகலும் நிம்மதியாய்த் தூங்கு போ!” என்று இகழ்ந்துரைத்துவிட்டு ”நானே போருக்குப் போகின்றேன்” என்று இராவணன் போக்குக் காட்டவே, அதுகண்டு, அண்ணன்பால் அன்புடையவனான கும்பகருணன், ”என்னைப் பொறுத்துக்கொள்! நானே போருக்குப் போகின்றேன்” என்றுரைத்துத் தன் சூலத்தைக் கையில் எடுத்துக்கொண்டு, ”அண்ணா! உன்னிடம் சொல்வதற்கு இன்னும் ஒரு செய்தி உளது!” என்றான். ”என்ன செய்தி?” என்பதுபோல் பார்த்தான் இராவணன்.

”தலைவனே! நான் போரில் வென்று மீண்டு இங்கே வருவேன் என்று சொல்லமாட்டேன்; வலிய விதி இடைநின்று என்னைப் பிடர்பிடித்துத் தள்ளுகின்றது; ஆகவே, நான் போரில் இறந்துபடுவேன்; அவ்வாறு நான் இறந்தால் அழகிய தோளுடைய சீதையை விட்டிடுவாய்; அதுவே உனக்கு நன்மை கிட்டிட வழி.

இலங்கை காவல! நம்மோடு போரிட வந்திருக்கும் பகைவர்கள் என்னை வென்றார்களென்றால் உன்னையும் வென்று உயர்தல் உறுதி; ஆதலால், அதன்பிறகும் அவர்களை வெல்ல வேறு வழிகளை நீ எண்ணுதல் தவறான செயலாகும்; வளையணிந்த மாதான சீதையை விட்டுவிடுவதே நமக்குச் சிறந்த தவப்பயன் அளிக்க வல்லது.

என்னை வென்றுளர்எனில் இலங்கை காவல 
உன்னை வென்று உயருதல் உண்மை ஆதலால்
பின்னை நின்று எண்ணுதல் பிழை அப் பெய்வளை
அந்தரம் உணர்ந்து உனக்கு உறுவது ஆற்றுவாய்.  
(கம்ப: கும்பகருணன் வதைப் படலம் – 7368)

கொற்றவ! நான் இதுவரை ஏதேனும் குற்றங்கள் செய்திருந்தால் அவற்றைப் பொறுத்துக்கொள்; இனி நான் உன் முகத்தில் விழித்தல் என்பது இல்லாமற் போய்விட்டது; விடைபெற்றுக் கொள்கின்றேன்” என்று அண்ணனுக்கு அளிக்கவேண்டிய நல்லுரைகளை அளித்துவிட்டுப் புறப்பட்டான் கும்பகருணன்.

கும்பகருணனைப் பொறுத்தவரை வீடணனைப்போல் அவனால் அறத்தின் பக்கம் உறுதியாய் நிற்கமுடியவில்லை; மானம், அறம் எனும் இரு கயிறுகளுக்கிடையே ஊசலாடுகின்றது அவன் உள்ளம். இறுதியில் மானத்துக்காக உயிரைத் துறப்பது எனும் முடிவுக்கு வருகின்றான் என்பதே கம்பன் தீட்டும் கும்பனின் குணச்சித்திரம்.

கும்பகருணனின் உரைகளைக் கேட்ட இராவணனின் இருபது விழிகளிலும் கண்ணீரும் செந்நீரும் தேங்கி நின்றது; உறவினர்களும் அவனை ஏக்கத்தோடு நோக்கிய வண்ணம் நின்றிருக்க, அரண்மனையை விட்டு நீங்கினான் அவன்.

கும்பகருணன் அவ்வளவு சொன்னதன் பிறகும், சகோதர பாசத்தினால் இராவணன் கண் கலங்கினானே தவிரச் சீதையைச் சிறைவீடு செய்து போரை நிறுத்த வேண்டும்; மீதமுள்ள தன் உறவினரையும் படையினரையும் காக்க வேண்டும் எனும் எண்ணம் கொண்டானில்லை. காமத்தின் வலிமை அத்தகையது போலும்!

ஊனையும் கள்ளையும் வழிநெடுகிலும் வாங்கி உண்டவண்ணம் பெரும் படையோடும் எண்ணற்ற படைக்கலங்களோடும் போர்க்களம் நோக்கிச் சென்றான் கும்பகருணன்; அவனது உருவுகண்டு மருண்டது வானரப்படை.

பிரம்மாண்டமான உருவொன்று தேரேறி வருவதுகண்ட இராமன் வீடணனை நோக்கி, ”இவனுடைய ஒரு தோளிலிருந்து மற்றொரு தோள்வரை முழுவதும் தொடர்ச்சியாய்ப் பார்க்க முயன்றிட்டால் அதற்குப் பலநாள் கழிந்துவிடும்; நடுவிலே நிற்பது கால்முளைத்த மேருமலை கொல்லோ? போர்விரும்பி வந்த ஒரு வீரனாக இவனை உணரமுடியவில்லையே; யார் இவன்?” என்று வியப்போடு வினவினான்.

தோளொடு தோள்செலத் தொடர்ந்து நோக்குறின்
நாள்பல கழியுமால் நடுவண் நின்றது ஓர்
தாளுடை மலைகொலாம் சமரம் வேட்டது ஓர்
ஆள்என உணர்கிலேன் ஆர்கொலாம் இவன்.
(கம்ப: கும்பகருணன் வதைப் படலம் – 7382)

வீடணன் இராமனை வணங்கி, ”ஐய! இவன் இராவணனுக்குப் பின்னோன் (தம்பி); எனக்கு முன்னோன் (அண்ணன்); இவன் பெயர் கும்பகருணன் என்பதாகும். எமனுக்கு எமன் போன்றவன்; இந்திரனை வெருண்டோடச் செய்தவன்; இவன் அதிக காலம் தூங்குவதால்தான் இந்த உலகம் இன்னும் அழியாமல் பிழைத்திருக்கின்றது.

இன்னொருவன் இல்லுறை தவத்தியை அறம் வழுவிக் கவர்ந்த செயலால் நமக்கு அழிவு வரும் என இராவணனிடம் பன்முறை சொன்னவன் இவன்; இராவணன் அவற்றை ஏற்றுக்கொள்ள மறுக்கவே, அவனிடம் உண்ட நன்றிக் கடன் தீர்க்க இங்கு வந்துள்ளான்” என்றான்.

வீடணன் மொழிந்தது கேட்ட சுக்கிரீவன், ”இவனைக் கொல்வதால் ஒரு பயனுமில்லை; அறத்தில் நாட்டமுள்ள இவனை நம்மோடு சேர்த்துக்கொள்ளுதல் நலம்” என்றான். இராமனும் அக்கருத்தை ஆமோதித்தான். ஒத்த கருத்துடையவர்களை ஓரணியில் சேர்க்க முயலுதல் போர் உத்திகளுள் ஒன்று.

”கும்பகருணனை அழைத்து வர யாரை அனுப்புவது?” என்று இராமன் கேட்க, ”நானே போகின்றேன்” என்றான் வீடணன்; இராமனும் அதற்கு உடன்பட, கும்பகருணனைச் சந்திக்கச் செல்கின்றான் வீடணன்.

போர்க்களத்தில் வீடணன் கும்பகருணன் சந்திப்பு என்பது மூலநூலான வான்மீகத்தில் இல்லாத ஒன்று. கம்பர் இந்தச் சந்திப்பைத் தாமே நேர்த்தியாய் உருவாக்கி உடன்பிறந்தோராகிய இராவணன், கும்பகருணன், வீடணன் ஆகிய மூவருக்கும் இடையிலுள்ள பண்பு வேறுபாடுகளை நாம் துல்லியமாக உணர்ந்துகொள்ள வழிவகுக்கின்றார். கும்பன் வீடணன் உரையாடல் உணர்ச்சிகளின் பிழிவாய் அமைந்து, காப்பியத்தைப் படிப்போரின் கண்களைக் குளமாக்கிவிடும் தன்மையது.

இனி அச்சந்திப்பையும் அதன் தொடர்ச்சியாய் நிகழ்ந்த உரையாடலையும் கவனிக்கலாம் வாருங்கள்!

கடல்போன்ற அரக்கர் சேனையைக் கடந்துசென்று அண்ணன் கும்பகருணனின் வீரக்கழல்களில் வீழ்ந்து வணங்குகின்றான் தம்பி வீடணன். அவனை வாரியெடுத்து அணைத்து விழிநீர் பெருக்கிய கும்பகருணன், வீடணன் வந்த நோக்கத்தை அறியாது, அவன் இராமனைவிட்டுத் தன்னோடு சேருவதற்குத்தான் வந்திருக்கின்றான் என்று தவறாக எண்ணிக்கொண்டு வீடணனுக்கு அறிவுரைகள் கூறத் தொடங்குகின்றான்…

”தம்பி! நீ ஒருவனாவது நம் குலத்தில் பிழைத்திருக்கின்றாய் என்று மகிழ்ந்தேனே! அம்மகிழ்ச்சி சிதறும்படி இங்கே வந்தது ஏன்?

புலத்தியன் மரபு இராவணனின் செயலால் இழிவை அடைந்தது; எனினும், உன்னால் அழிவிலாப் புண்ணியத்தைப் பெற்றது என்று நினைத்திருந்தேனே; நீ இங்குத் திரும்பி வந்தது கண்டு என் உள்ளம் வருந்துகின்றது.

அறத்தின் மூர்த்தியெனும் பெயர்பெற்ற தலைவனுக்குத் தொண்டனான நீ, அறந்துறந்து பிறன்மனை நோக்கும் எங்களை உம் உறவுகளாகக் கொள்வாயோ?

ஐய! நீ அயோத்தி வேந்தனுக்கு அடைக்கலமாகிப் பிழைக்காவிட்டால் அரக்கர்கள் எல்லாம் இராமன் கணைகளால் இறந்தபிறகு அவர்களுக்குப் பிதிர்க் கடன்கள் செய்ய யார் இருக்கிறார்கள்?

நீ எப்போது இலங்கைக்குத் திரும்ப வேண்டும் தெரியுமா? புலையராக உள்ள தீய அரக்கர்கள் அனைவரும் மாண்ட பின்பு, இராமனோடு திரும்ப வேண்டும். இலங்கை அரசச் செல்வத்தை நீ துய்க்கவேண்டும்; ஆதலால், இப்போதே விரைவில் எங்களைவிட்டுப் போய்விடு!” என்றுகூறித் தன் பேச்சை முடித்தான்.

வீடணனை ஏனைய அரக்கர்களிடமிருந்து வேறுபடுத்தி, உயர்ந்தோனாகவே எண்ணும் கும்பகருணனின் உள்ளம் இங்கே தெளிவாய் வெளிப்படுகின்றது. பிறன்மனை நயக்கும் அரக்கரின் புன்மையை வெறுக்கின்றான் கும்பகருணன்; அத்தகு புலையோர் அழிவது உறுதி என்று நம்புகின்றான். அரக்கரினம் அழிந்தபின்னர் அவர்களுக்கு நீர்க்கடன் செய்வதற்கேனும் தம்பி வீடணன் பிழைத்திருக்க வேண்டும் என்று நினைக்கின்றான். இவ்விடத்தில் கும்பகருணன் பாத்திரத்தின் அரக்கத் தன்மையை நாம் முற்றிலும் மறந்துவிடுகின்றோம்; அவனுள் சுடர்விடுகின்ற உயர் மானுடப் பண்புகளைத் தரிசித்து உள்ளம் நெகிழ்கின்றோம்.

அண்ணனின் அன்புமொழிகளைக் கேட்ட வீடணன், “அண்ணா! நான் உங்களிடம் சொல்வதற்கு ஒன்று உண்டு!” என்று கூறவே, “சொல்” என்றான் கும்பகருணன்.

[தொடரும்]  

*****

கட்டுரைக்குத் துணைசெய்தவை:

1. கம்பராமாயணம் – கோவை கம்பன் அறநிலை விளக்க உரைக்குழு.

2. கம்பரும் வால்மீகியும் – பேரா. அ. பாண்டுரங்கன், எம்.ஏ., பிஎச்.டி., டிப் (மொழி), தமிழரங்கம் பதிப்பு, புதுவை – 605 008.

3. கம்பர் கருவூலம் – தொகுப்பாசிரியர், பேரா. மு. சாயபு மரைக்காயர், கங்கை புத்தக நிலையம், சென்னை – 600 017.

4. கம்பனில் மக்கள்குரல் – பேரா. ந. சுப்புரெட்டியார், வானதி பதிப்பகம், சென்னை – 17

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *