(Peer Reviewed) கழுகுமலைச் சமணப்பள்ளியில் பெண்கல்வியும் இருபாலர் கல்விமுறையும்
முனைவர் இரா.இலக்குவன்
உதவிப் பேராசிரியர்
வெ.ப.சு. தமிழியல் ஆய்வு மையம்
ம.தி.தா.இந்துக்கல்லூரி, திருநெல்வேலி.
இந்தியாவின் பழமையான மதங்களுள் ஒன்றாகக் கருதப்படுவது சமணசமயம் ஆகும். அது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்நாட்டில் பரவியிருந்ததுஎன்பதற்குப் பல்வேறு கல்வெட்டுச்சான்றுகள் துணைநிற்கின்றன. (1983))
மேலும் சமணம் தமிழ்நாடு முழுமையும் குறிப்பாக பாண்டிநாடு, தொண்டை நாடுகளில் வலுவாகப் பலநூற்றாண்டுக்காலம் கோலோச்சியிருந்ததை அறியமுடிகிறது. தமிழ்நாடு முழுமையும் பரவியிருந்த சமணஆலயங்கள் (ஜினாலயங்கள்) என்றும் பள்ளிகள் என்றும் சமணத்துறவிகள் தங்கியிருந்த இடங்கள் பள்ளி பாழி அதிட்டானம் தேவாரம் பஸ்தி என்றும் அழைக்கப்பட்டன. (2005,ப.14 )
கல்வெட்டுகள் பெரும்பான்மையும் சமணத்துறவிகள் இருப்பிடங்களையும் கோயில்களையும் பள்ளி என்றே குறிப்பிடுகிறது.
ஜினகிரிபெரும்பளளி –ஆனந்தமங்கலம்
சிறுவாக்கம் – ஸ்ரீஹரணபெரும்பள்ளி
குன்னத்தூர் –பெரியநாட்டுப்பெரும்பள்ளி
தொண்டூர் – வழுவாமொழிபெரும்பள்ளி
திருநறும்கொண்டை – நாற்பத்தெண்ணாயிரம்பெரும்பள்ளி
வீரசேகரபெரும்பள்ளி – சளுக்கி
பெருமண்டூர் – ரவிகுலசுந்தரபெரும்பள்ளி
பள்ளிச்சந்தல் – வாலையூர்நாட்டுப்பெரும்பள்ளி
அன்பில் – அமுதமொழிபெரும்பள்ளி
மருத்துவக்குடி – சேதிகுலமாணிக்கம்பெரும்பள்ளி, கங்கருளசுந்தரபெரும்பள்ளி
இருப்பைகுடி – பெரும்பள்ளி
பெருங்குளம் – நிகராகரப்பெரும்பள்ளி) (1954,ப.104-200)
மதுரையில் சமணப்பள்ளிகள் இருந்ததை “அறத்துறை விளங்கிய அறவோர் பள்ளி என்று (15:107) சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது. கல்வெட்டுகளிலும் இலக்கியங்களிலும் பள்ளி என்ற பெயரே பெருவழக்காக இருந்துள்ளது.
பண்டைகாலத்திலே சாதிபேதம் பாராட்டாத தமிழ்நாட்டிலே, சாதிபேதம் பாராட்டாத சமணசமயம் பரவியதில் வியப்பில்லை. மேலும், உணவு, அடைக்கலம், மருந்து, கல்வி என்னும் நான்கு தானங்களைச் செய்வதைச் சமணர் தமது பேரறமாகக் கொண்டிருந்தார்கள்.இந்த நான்கினையும் அன்னதானம், அபயதானம், ஔடததானம், சாத்திரதானம் என்று கூறுவர். (1954,ப.41)
சமணர்கள் மக்கள் அனைவருக்கும் பொதுக்கல்வி வழங்கிய அவர்கள் வாழும் இடமான பள்ளி என்பதால்தான் இன்று கல்விக்கூடங்களுக்குப் பள்ளிக்கூடம் என்று பெயர் வந்தது என்று மயிலை.சீனி.வேங்கடசாமி, தொ.பரமசிவன் உள்ளிட்ட அறிஞர்கள் அரிதியிட்டு உரைக்கின்றனர். சமணர்கள் சமணக்கோயிலான பள்ளிகளிலும் சமண முனிவர்கள் தங்கியிருக்கும் பள்ளிகளிலும் ஆண், பெண் இருபாலருக்கும் கல்வி கற்பித்தனர். சமண மதம் தமிழகத்திற்குப் புறத்தே இருந்து வந்த மதமெனினும் அவர்கள் தமிழ்மொழிக்கு முதலிடம் கொடுத்தனர். அவர்களது நூல்கள் அனைத்தையும் தமிழில் எழுதினர், தமிழ் இலக்கண நூலாம் தொல்காப்பியத்தைப் பழுதறக் கற்று உரை வரைந்தனர். மேலும் தமிழில் பல இலக்கண நூல்களையும் எழுதினர். அவ்விலக்கண நூல்கள் சமணப்பள்ளிகளில் கற்பிக்கப்பட்டன. மேலும் பற்பல இலக்கியங்களும் படைக்கப்பட்டு சமணப்பள்ளிகளில் கற்பிக்கப்பட்டன. எனவே சமணப்பள்ளிகள் சமணத் தத்துவநூல்களை மட்டும் கற்பிக்கும் இடமாக அல்லாமல் அடிப்படை மொழி வகுப்புகளை நடத்தும் இடமாகவும் தமிழில் புலமைபெற்று யாப்பியற்றும் பட்டறையாகவும் தமிழ் இலக்கண இலக்கியங்களை உரைகளோடு விவாதிக்கும் களனாகவும் இருந்தன என்பதை அறிய முடிகிறது. சான்றாக சமணரான இளம்பூரணது தொல்காப்பிய உரை ஆசிரியர் மாணாக்கர் ஐயங்களுக்கு விடையிறுக்கும் வகையாக அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. பெருவழக்காக சமணசமய இடங்கள் கல்விக்கூடங்களாக இருந்ததால் பள்ளி என்ற பெயர் தற்காலப்பள்ளிக்கூடங்களுக்கும் ஆகிவந்த பெயராக வழங்குகிறது. சமணர்கள் தமிழ்நாடு முழுவதும் ஔடத தானமாகிய கல்வியை மக்களுக்கு தமது இடங்களில் வழங்கிய வழக்கம் பலநூற்றாண்டு காலம் தொடர்ந்திருப்பதால் மக்கள் பிற்கால திண்ணைப்பள்ளி முதலான பொதுக்கல்வி அளிக்கப்படும் இடங்களையும் பள்ளி என்ற சொல்லால் நினைவுகூர்ந்தனர் என அறியமுடிகிறது.
சமணர்களிடம் சாத்திரதானம் பிள்ளைகளுக்குக் கல்வி கற்பிப்பதோடு மட்டும் நின்றுவிடவில்லை.செல்வம் படைத்த சமணர்கள், தம் இல்லங்களில் நடைபெறும் திருமண நாட்களிலும் இறந்தோருக்குச்செய்யும் இறுதிக்கடன் நாட்களிலும் தம் சமயநூல்களைப் பலபிரதிகள் எழுதுவித்து அவற்றைத் தக்கவர்க்குத் தானம் செய்தார்கள். அச்சுப்புத்தகம் இல்லாத அந்தகாலத்தில் பனை ஏடுகளில் நூல்களை எழுதி வந்தார்கள். ஒரு சுவடி எழுதுவதற்குப் பலநாட்கள் செல்லும். பொருட்செலவும் (எழுத்துக்கூலி) அதிகம்..ஆகவே, பொருள் உடையவர் மட்டும் புத்தகம் பெறுவது முடியாது. ஆகவே, செல்வம் படைத்த சமணர் தமது சமயநூலைப் பல பிரதிகள் எழுதுவித்து அவற்றைத் தானம் செய்தார்கள் (1954, ப.44) என்பதையும் அறியமுடிகிறது. சமணர்கள் தமிழ்நாடு முழுமையும் சமணப்பள்ளிகளில் கற்றல் கற்பித்தல் நிகழ்ந்தாலும் கழுகுமலையில் பல்கலைக்கழகம் எனும் அளவில் நடந்தது என்பதை சி.சிவராமமூர்த்தி (1983) கு.அருணாசல கவுண்டர் (2005, ப.122), செ.மா.கணபதி (2007) போன்ற ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அங்கு இருபாலரும் மாணவர்களாகவும் இருபால் ஆசிரியர்களும் பேரளவில் இருந்ததாகவும் கல்வெட்டுகள் சிற்பங்கள் மூலம் தெரிய வருகிறது.
கழுகுமலை பற்றிய கட்டுரையில் ராவ்சாகிப் கு. அருணாசலக்கவுண்டர் (2005,ப.124)
“சமணத்துறவிகளிடையே ஆண் பெண் இருபாலர் சேர்ந்து கல்வி பயில்வது என்ற கூட்டுக்கல்விமுறை இருந்ததா? இருந்தது என்று சொல்வதற்கில்லை என்ற முடிவுக்கு வருகிறார். இக்கட்டுரை கழுகுமலையில் இருபாலர் கல்வி இருந்ததா என்பதையும் சமணப்பள்ளிகளில் பெண்கள் பங்கு பற்றியும் ஆய்வு செய்கிறது.
இரு பாலர் ஒரே இடத்தில் அமர்ந்து ஒரு ஆசிரியரிடம் கற்கும் கல்விமுறையை இரு பாலர் கல்வி என்று அழைக்கலாம்.
கலப்பு–பாலினகல்வி , இணைகல்வி அல்லது கூட்டுறவு (கோ–எட் என்றும் அழைக்கப்படுகிறது, இதுஆண்களும்பெண்களும்ஒன்றாக கல்வி கற்கும்கல்விமுறையாகும். (https://mimirbook.com/ta/33cfb8b4fc2)
இந்தியாவில் பெண் கல்வி இடைக்காலங்களில் இல்லாமல் இருந்தது. ஆனால் வேத காலத்திலும் தமிழகத்தில் சங்ககாலத்திலும் பெண் கல்வி வழக்கில் இருந்தது என்றும் பிற்காலங்களில் அது தேய்வழக்கானது என்றும் சிலர் வலியுறுத்துவார்கள்.எனினும் பெண்களும் ஆண்களும் சேர்ந்து ஒரே இடத்தில் கல்வி பயின்றதற்கு நமக்கு வலிமையான சான்றுகள் கிடைக்கவில்லை. பிற்காலத்தில் தமிழகத்தில் இருந்த பல வைதிக மதம் சார்ந்த மடங்கள் ஆண்களுக்கு மட்டுமே கல்வி அளித்தன. அவை பெரும்பாலும் அங்கு பெண்கள் நுழைவதற்கே அனுமதிக்கவில்லை.
தென்தமிழகத்தில்தூத்துக்குடிமாவட்டம்கோவில்பட்டிவட்டத்தில்கோவில்பட்டி – சங்கரன்கோவில் சாலையில் கழுகுமலைஎன்ற ஊர் உள்ளது. இவ்வூரிலுள்ள குன்றுஎன்றஅளவில்உள்ளஒருசிறுமலையின் வடபகுதியில் நூற்றுக்கணக்கான சமணத் தீர்த்தங்கரர்கள், சமண தெய்வங்களின் சிலைகளும் அதன்அடிப்பகுதியில் வட்டெழுத்துக்கல்வெட்டுகளும் காணப்படுகின்றன. இங்கு சமண முனிவர்கள் தங்கியிருந்து சமணச்சித்தாங்களைக் கற்பித்துவந்தனர். கி.பி 8,9, 10ஆம் நூற்றாண்டுகளில் சமண சமயம் இவ்வூரில் செழிப்புற்று விளங்கியது. (1961) இவ்வூர் பண்டைகாலத்தில் நெற்சுரம் என்றும் இவ்வூரின் பகுதிகள் இளநெற்சுரம், பெருநெற்சுரம், குழுவாணை நல்லூர் என்றும் வழங்கப்பட்டன. (2007,ப 107)
புத்தமதக் கொள்கையைப் பரப்புவதற்காக வடக்கேயிருந்து தெற்கு நோக்கி வந்த கௌதமபுத்தர் இலங்கைக்குச் செல்லும் வழியில் கழுகுமலைக்கும் வந்து சென்றதாக தொல்லியல் அறிஞர் டி.ஏ.கோபிநாதராவ் குறிப்பிடுகிறார். இதேபோல இலங்கைக்குப் பௌத்த சமயததைப் பரப்பச் சென்ற வழியில் சங்கமித்திரை கழுகுமலை வந்து சென்றதாகவும் ஒரு செவிவழிச் செய்தி பேசப்பட்டுவருகிறது. (2005,ப.17)
கழுகுமலைக் கல்வெட்டுகளில் காணப்படும் ஆசிரிய மாணாக்கர் பரம்பரை விளக்கம்
கனகநந்திப் பட்டாரகர் மாணாக்கர் ஆதித்த படாரர் (SIIV No 341) குணசாகரப்படார் சீடன் பேரெயிற்குடிச்சாத்தன்தேவன் (SIIV No 310)
குணசாகரப்படாரர் சட்டன் பேரெயிற்குடிச்சாத்தன்தேவன் (SIIV No 347)
குணசாகரப்படாரர் மாணாக்கி (SIIV No 334}
குறண்டி தீர்த்தபடார் மாணாக்கர் கனகநந்திப் பெரியார் (SIIV No.345)
குறண்டி தீர்த்தபடாரர் மாணாக்கிகள் இளநெற்சுரத்துக் குரத்திகள்(SIIV No.369)
குறண்டி கனகநந்திப்படாரர் மாணாக்கன் பூர்ணசந்திரன் (SIIV No.359)
குறண்டி…. தோரிபடாரர் மாணாக்கர் சிறு படாரர் (SIIV No.323)
நல்கூர் அலநேமிப்படார் மாணாக்கிகள் நால்கூர்க்குரத்திகள் (SIVN6356)
பட்டினிப்படாரர் மாணாக்கிகள் திருப்பருத்திக்குரத்திகள் (SiIV No. 372)
படிக்கமணப்படாரர் மாணாக்கர் பவணந்திப் பெரியார் (SIIV No.381)
திருமலையர் மோனிபடாரர் மாணாக்கர் தயாபாலப் பெரியார்
புட்பநந்திப்படாரர் மாணாக்கர் பேறாநந்திப்படாரர் (SIIV No.391)
திருமலை அரட்ட நேமிப்படாரர் மாணாக்கர்…. படாரர் (SIIV No.397)
வேளற்குடி மூத்த அரட்டநேமிப்படாரர் மாணாக்கர் குணநந்திப் பெரியார் (SIIV No.398)
சேந்தன் கி… காடன் திருபடாரர் மாணாக்கர் சீமாங்கிக் குரவடிகள் (SIIV No.399)
திருநறுங்கொண்டை பலதேவக்குரவடிகள் மாணாக்கர் கனகவீரஅடிகள்(SIIV No.317)
திருக்கோட்டாற்று விமள சந்திரக்குரவடிகள் மாணாக்கர் சாந்திசேன அடிகள் (SIIV No.333-390)
திருநாட்டூர் விமள சந்திரக் குரவடிகள் மாணாக்கர் குண்ணூர் யோகியார் (SIIV No.384)
பெருங்காடி…. தேவர் குரவடிகள் மாணாக்கர்….
ஆணனூர் சிங்கநந்திக் குரவடிகள் மாணாக்கர், நாகநந்திக் குரவடிகள்
உத்தநந்திக்குரவிகள் மாணாக்கர் சாந்திதேசனப் பெரியார் (SIIV No.316) பழயிறைக் காணிக்குரத்தி மாணாக்கியார் சிரிகுரத்தியார் (SIIV No.320)
மிழலூர்க் குரத்தியார் மாணாக்கியார் திருச்சாரணுத்துப்பட்டாரிகள் (SIIV No.321)
வெண்பைக்குடி தச்சன் சங்கக்குரத்திகள் (யார்) மாணாக்கியார்
ஸ்ரீ(சிரி) விசயக்குரத்தியார் (SiIIV No.332 )
நால்கூர்க்குரத்திகள் மாணாக்கி நாட்டிகப்படாரர் (SIIV No.355)
பேரூர்க்குரத்தியார் மாணாக்கியார் மிழலூர்க் குரத்திகள் (SIIV No.394)
சித்தாந்தம் உரைக்கும் படாரர் உள்ளிட்ட பதின்மர் வயிராக்கியர் (SIVNo.405)
சித்தாந்தம் உரைக்கும் படாரர் உள்ளிட்ட ஐவர் வயிராக்கியர் (SIV No.406)
திருமலைக்குரத்திகள் மாணாக்கன் ஏனாதிக் கூத்தன் (SIIV No.370) மம்மைக்குரத்திகள் மாணாக்கிகள் அட்டநேமிக்குரத்திகள் (SIIV No.371) (2007,ப.170)
இக்கல்வெட்டுகளில் ஒவ்வொரு ஆசிரியரையும் குறிக்கும்போது அவரது ஆசிரியர் பெயரையும் இணைத்துக்குறிப்பிடும் மரபு இருப்பதை அறியமுடிகிறது. இன்று அந்த மரபு வழக்கொழிந்துவிட்டது எனினும் தற்போது சிலம்பம், வளரி போன்ற போர்க்கலைகளைக் கற்போர் தமது மரபை ஆசிரியர்களுடன் தொடர்புப்படுத்தும்போக்கு காணப்படுகிறது.
கல்வெட்டுகளில் காணப்படும் ஆண்பால் ஆசிரியர்கள்
- கனகநந்திப் பட்டாரகர்
- குணசாகரப்படார்
- குறண்டி தீர்த்தபடார்
- குறண்டி கனகநந்திப்படாரர்
- குறண்டி தீர்த்தபடாரர்
- நல்கூர் அலநேமிப்படார்
- பட்டினிப்படாரர்
- படிக்கமணப்படாரர்
- திருமலையர் மோனிபடாரர்
- புட்பநந்திப்படாரர்
- திருமலை அரட்ட நேமிப்படாரர்
- சேந்தன் கி… காடன் திருபடாரர்
- திருநறுங்கொண்டை பலதேவக்குரவடிகள்
- திருக்கோட்டாற்று விமள சந்திரக்குரவடிகள்
- திருநாட்டூர் விமள சந்திரக் குரவடிகள்
- பெருங்காடி…. தேவர் குரவடிகள்
- ஆணனூர் சிங்கநந்திக் குரவடிகள்
- வேளற்குடி மூத்த அரட்டநேமிப்படாரர்
பெண்பால் ஆசிரியர்கள்
குரவர் என்பது சமண சமய ஆசிரியர்களையும் குரத்தி என்பது ஆசிரியைகளையும் குறிக்கப்பயன்படுகிறது. சில கல்வெட்டுகளில் குரவி என்ற பெண்பால் பெயரும் சமண சமயத்துறவிகளைக்குறிக்க வழங்குகிறது. உழவன் என்பதற்குப் பெண்பால் பெயர் உழத்தி ஆகும். நெல்லை வட்டார வழக்கில் உழத்தி, உழவி என இருபெயர்களும் வழங்கப்படுகிறது. குறவன் என்ற சொல்லின் பெண்பாலாக குறவி என்ற சொல்லையும் தமிழ்ப்பேரகராதி குறிப்பிடுகிறது. அதுபோல குரத்தி, குரவி என இரு பெண்பால் பெயர்கள் கல்வெட்டில் வருகின்றன.
சமண சமயப்பெண்பால் துறவிகளைச் சமணர் இயக்கியர் (யட்சி) என்றும் ஆர்யாங்கனை என்றும் கந்தியார் என்றும் கூறுவர். கந்தியார் என்பது கவுந்தி என்றும் வழங்கப்படும் என்கிறார் மயிலை. குரத்தி, பட்டாரி, பட்டாரர், சாரணி, ஆரியை ஆகிய பெயர்களும் பெண்பால் துறவிகளை அழைக்கின்றனர்
- உத்தநந்திக்குரவிகள்
- பழயிறைக் காணிக்குரத்தி
- மிழலூர்க் குரத்தியார்
- வெண்பைக்குடி தச்சன் சங்கக்குரத்திகள்
- ஸ்ரீ(சிரி) விசயக்குரத்தியார்
- நால்கூர்க்குரத்திகள்
- பேரூர்க்குரத்தியார்
- திருமலைக்குரத்திகள்
- மம்மைக்குரத்திகள்
குழுவாணை நல்லூர் என்று அழைக்கப்பட்ட கழுகுமலை சமணப்பள்ளியில் ஆண் ஆசிரியர்கள் பதினெழுவர் பெயர்களும் பெண் ஆசிரியர்கள் ஒன்பது பேர் பெயர்களும் கல்வெட்டுகள் மூலம் அறியப்படுகின்றன. இனி மாணவ மாணவியர் பற்றிக்காண்போம்.
மாணவர்கள்.
- பேரெயிற்குடிச்சாத்தன்தேவன்
- ஆதித்த படாரர்
- கனகநந்திப் பெரியார்
- பூர்ணசந்திரன்
- சிறு படாரர்
- பவணந்திப் பெரியார்
- தயாபாலப் பெரியார்
- பேறாநந்திப்படாரர்
- குணநந்திப் பெரியார்
- சீமாங்கிக் குரவடிகள்
- கனகவீரஅடிகள்
- சாந்திசேன அடிகள்
- குண்ணூர் யோகியார்
- நாகநந்திக் குரவடிகள்
- சாந்திதேசனப் பெரியார்
- ஏனாதிக் கூத்தன்
மாணவிகள்
- இளநெற்சுரத்துக் குரத்திகள்
- நால்கூர்க்குரத்திகள்
- திருப்பருத்திக்குரத்திகள்
- சிரிகுரத்தியார்
- திருச்சாரணுத்துப்பட்டாரிகள்
- ஸ்ரீ(சிரி) விசயக்குரத்தியார்
- மிழலூர்க் குரத்திகள்
- அட்டநேமிக்குரத்திகள்
- நாட்டிகப்படாரர்
கழுகுமலைக்கல்வெட்டுகள் மூலமாக 16 மாணவர்கள் பெயர்களும் 9 மாணவிகளின் பெயர்களும் அறியவருகின்றன. மேலும் இதில் மாணவர்கள் பலர் பெண்பால் ஆசிரியர்களிடம் பயின்றதையும் மாணவிகள் ஆண்பால் துறவிகளிடம் பாடம் பயின்றதையும் கல்வெட்டு வழி அறியமுடிகிறது. இங்கு பல துறைகளில் வல்ல இருபால் ஆசிரியர்களிடம் மாணவர்களும் மாணவிகளும் ஒரே கூரையின் கீழ் கல்வி பயின்றுள்ளனர். வெளிப்பகுதிகளில் இருந்து வந்து பாடம் எடுத்துச் செல்லும் ஆசிரியர்களும் வெளியூர்களில் இருந்து கழுகுமலைக்கு வந்து தங்கி குறிப்பிட்ட பாடங்களைப் பயிலும் மாணவர்களும் இருந்துள்ளனர்.
திருச்சாரணத்து மலையிலுள்ள வரகுண மன்னனது கல்வெட்டு பேரெயக்குடியை (கழுகுமலை)ச் சார்ந்த அரட்டநேமிபட்டாரகரின் சிஷ்யை குணந்தாங்கி குரத்தியைக் குறிப்பிடுகிறது. (2005,ப.116) அரட்டநேமிப்பட்டாரகர் ஆண் பால் முனிவரிடம் பெண்பால் துறவி பாடம் பயின்றிருப்பதை அறியமுடிகிறது.
கழுகுமலைச் சமணச்சிற்பங்களில் உள்ள அச்சநந்தி பெயர் ஏர்வாடிக் கல்வெட்டிலும் இடம்பெறுகிறது. நாகர்கோவில் அருகிலுள்ள கோட்டாறு, காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள திருநறுங்கொன்றை,திருமலை, குமரி மாவட்டத்தில் உள்ள திருச்சாரணத்து மலை, நீலகிரி மாவட்டத்திலுள்ள குண்ணூர் தென்பாண்டி நாட்டுப்பகுதிகளான கோட்டூர்,களக்குடி, வேளற்குடி, வெண்பைக்குடி முதுகுடி நாடு ஆகிய பகுதிகளில் இருந்தும் ஆசிரியர்களும் மாணவர்களும் கழுகுமலைச் சமணப்பல்க்லைக்கழகத்திற்கு வந்து கற்றல் கற்பித்தல செயல்களில் ஈடுபட்டுள்ளனர் என்பதைக் கல்வெட்டுகள் காட்டுகின்றன. கழுகுமலையில் உள்ள குழுவாணைநல்லூர் என்ற சமண சர்வகலாசாலையை நிறுவியவர் யாப்பருங்கலக்காரிகை என்ற இலக்கண நூலுக்கு உரை எழுதிய குணசாகரர் என்ற சமணத்துறவி ஆவார் (2007,ப.123) எனவே இங்கு சமண மத சித்தாந்தங்கள், நூல்கள் மட்டுமல்லாது தமிழ் இலக்கண இலக்கியங்களும் கற்பிக்கப்பட்டன என உய்த்துணர இயலுகிறது. இங்கு கணிதமும் வானியலும் கற்பிக்கப்பட்டன என்றும் கூறப்படுகிறது. (2007,ப172-175) குழுவாணைநல்லூர் என அழைக்கப்படும் சமணப்பள்ளிக்கு ஏரி, அணைக்கட்டு, விளைநிலங்கள் இருந்தன என்பதும் கல்வெட்டுகள் மூலம் தெரியவருகிறது. (2007,ப.176) கழுகுமலை சமணப்பல்கலைக்கழகம் என்ற அளவில் விளங்கிய பல் துறைகளில் வல்ல இருபால் ஆசிரியர்களைக் கொண்டு நடத்தப்பட்ட சமணப்பள்ளியில் ஆண்களும் பெண்களும் சம அளவில் மாணாக்கர்களாக கல்வி கற்றனர் என்பதும் இத்தலம் மாணவர்களும் மாணவிகளும் தங்கியிருந்து பயிலும் உண்டு உறை கல்விக்கூடமாகவும் இருந்துள்ளது என்பதை அறியமுடிகிறது.
சான்றாதாரங்கள்.
- வேங்கடசாமி,மயிலை.சீனி.,(1954). சமணமும் தமிழும். சென்னை:கழக வெளியீடு.
- Sivaramamurthy,C., (1961). Kalugumalai and Early Pandyan Rock-cut shirnes. Bombay: N.M.Tripathi Private Ltd.
- Sivaramamurthy,C., (1983) Panorama of Jain Art-South India. New Delhi : The Times of India
- காசிநாதன்,நடன.,சந்திரமூர்த்தி,மா.,(ப.ஆ). (2005) சமணத்தடயம். சென்னை: மணிவாசகர் பதிப்பகம்.
- கணபதி,செ.மா., (2005).கழுகுமலை வெட்டுவான்கோயில். திருநெல்வேலி : சங்கத்தமிழ்ப்பதிப்பகம்.
- கணபதி,செ.மா., (2007).கழுகுமலையும் சமணமும். கழுகுமலை : சங்கத்தமிழ்ப்பதிப்பகம்.
ஆய்வறிஞர் கருத்துரை (Peer Review):
கட்டுரை நன்று. கட்டுரையில் வேடல் என்ற சமண பெண்டிர்க்கான பல்கலைக்கழகம் பற்றிய குறிப்பைச் சேர்த்திருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.