குறளின் கதிர்களாய்…(399)

செண்பக ஜெகதீசன்

குறளின் கதிர்களாய்…(399)

அழுக்கற் றகன்றாரு மில்லையஃ தில்லார்
பெருக்கத்தில் தீர்ந்தாரு மில்.

-திருக்குறள் – 170 (அழுக்காறாமை)

புதுக் கவிதையில்…

பிற மாந்தர் மீது
பொறாமை கொண்டவர்
பெறுவதில்லை வாழ்வில்
பெருமைகள் என்றும்..

பொறாமைக் குணமில்லார்
பெற்றிடும் பேறாம்
பெருஞ் செல்வப்பெருக்கு
போவதுமில்லை…!

குறும்பாவில்…

அடுத்தவர் மீது கொண்ட
அழுக்காறு அளிப்பதில்லை பெருமைகள் எதையும்,
அழுக்காறிலாரை அகலாது செல்வப்பெருக்கு…!

மரபுக் கவிதையில்…

மண்ணில் தமக்குள் பொறாமைகொண்டே
மற்றவர்க் கிடரே செய்வதென
எண்ணம் கொண்ட மனிதரெலாம்
என்றுமே பெருமை பெறுவதில்லை,
புண்ணாம் பொறாமை மனதினிலே
புகுந்திட விடாத தூயரையே
திண்ண மாக விலகிடாதே
திரண்டிடும் செல்வப் பெருக்கெலாமே…!

லிமரைக்கூ…

பெருமை எதுவுமே சேராதே
பொறாமை கொண்டோர் வாழ்வினிலே, அழுக்காறற்றோர்க்கு
அருஞ்செல்வம் அகலும்நிலை வாராதே…!

கிராமிய பாணியில்…

கொள்ளாத கொள்ளாத
பொறம கொள்ளாத,
அடுத்தவன் வாழுறதப் பாத்து
பொறாம கொள்ளாத..

அடுத்தவனப் பாத்து
பொறாம கொள்ளுறவனுக்கு
வாழ்க்கயில
எந்தப் பெருமயும்
வந்து சேராதே..
பொறம கொணம் இல்லாத
நல்லவங்கிட்ட
சேருற செல்வமெல்லாம்
ஒருநாளும்
அவனவுட்டுப் போவாதே..

அதால,
கொள்ளாத கொள்ளாத
பொறம கொள்ளாத,
அடுத்தவன் வாழுறதப் பாத்து
பொறாம கொள்ளாத…!

Leave a Reply

Your email address will not be published.