தவம்
பாஸ்கர் சேஷாத்ரி
எப்போதோ ஓடின ரயில் தடக்கென இன்றோடும்
எந்நாளோ ரணமான காயங்கள் சட்டென வலிக்கும்
தேய்ந்து போய் நின்ற பாடல்கள் செவியில் அலைபாயும்
கொள்ளி வைத்த உடல்களின் அனல் உடலில் அறையும்
கூர்ப்பான மனத்தில் உடல் ரோமம் உயிர்ப்பெடுக்கும்
கனவுகளைத் தின்று விட்டு கட்டில் இருளுக்கு நிற்கிறது .
மரங்களும் செடிகளும் பார்த்தே வளர்ந்துவிட்டன
சுவரில் செருகி நின்ற அட்டைப் பூச்சியும் இடம் மாறியது
எந்த இயக்கமும் எதற்காகவும் செயலைத் தள்ளவில்லை
நானும் நேரமும் சேர்ந்தே நிற்கிறோம் என்றென்றும்
ஆனாலும் அது நகர்வது போல நான் நகர முடியவில்லை
இருளில் கொண்டாட்டம், பகலில் கடிகார முள்ளில் கண்
எந்தக் கூட்டத்திலும் நான் மட்டும் தனியனாக நிற்கிறேன்
நெருங்க முயல முடியாமல் தோற்றுப் போகிறேன்
இழப்பில்லை எனக்கு ஓர் உலகம் எப்போதும் இருக்கிறது
தனித்திருப்பது தவமெனப் புரிந்து,எனக்குள் இருப்பது சுகம்