(Peer Reviewed) தமிழிலக்கியங்களில் விருந்தோம்பல் – ஒரு தொகுப்பாய்வு

0

புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள்                                                                                                                            
உதவிப்பேராசிரியர், மொழிகள் துறை 
பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், 
பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக்கழகம்,
வல்லம், தஞ்சை மாவட்டம் – 613403.   
மின்னஞ்சல் முகவரி-   egowrisss@gmail.com

ஆய்வு முன்னுரை

ஒரு குறிப்பிட்ட பண்போ பண்புகளின் தொகுப்புக்களோ ஓர் இனத்தை அடையாளம் காட்டும். சப்பானியர் அரை உடம்பைக் குனிந்து குறுக்கி வணங்குவது அவர்க்கே உரிய உயரிய பண்பாகும். இருகை கூப்பிக் ‘கரமலர் மொட்டித்து’ வணங்குவது பொதுவாக இந்தியர்களின் பண்பாடாகாவும் சிறப்பாகத் தமிழர்களின் பண்பாடாகவும் கருதப்படுகிறது. இது ஏதோ தற்புகழ்ச்சி என எண்ணுதல் நெறியன்று. உலக இனக்குழுக்களை ஆராய்ந்த ஆய்வறிஞர்கள் பண்பாட்டுக் கூறுகளை ஆராய்ந்து உலகிற்குச் சொன்ன ஒப்பற்ற உண்மை இது. இந்தப் பின்புலத்தில் ‘விருந்தோம்பல்’ என்னும் தமிழர்களுக்கே உரிய தனித்த அடையாளத்தைப் பற்றிய இலக்கியக் குறிப்புக்களின் தொகுப்பாய்வே இந்தக் கட்டுரையாகும்.

கட்டுரைக் கட்டுமானம்

‘தமிழிலக்கியங்களில் விருந்தோம்பல்’ – ஒரு தொகுப்பாய்வு’  என்னுந் தலைப்பில் இந்தக் கட்டுரை வடிவமைக்கப்படுகிறது. தமிழிலக்கியம் என்பது தமிழ்க்கவிதைகளேயாதலின் சங்க இலக்கியம் தொடங்கி இற்றை நாள் வரை உள்ள கவிதை இலக்கியங்களே ஆய்வுக்களமாகக் கொண்டு ஆய்வு நிகழ்த்தப்படுகிறது. தொகுப்பாய்வு முறையில் செய்யப்படும் இந்த ஆய்வு, ஆட்சி மாற்றங்கள், வரலாறுகள் மாறிச் சென்றாலும் விருந்தோம்பல் முதலிய உயர்பண்புகள் மக்கள் வாழ்வியல் நெறியிலிருந்து விலகிச் செல்வதில்லை என்னும் ஆழமான கருத்தியலை வலியுறுத்துவதாக அமைகிறது. முன்னோர்களின் பண்பாட்டு இருப்புக்களைத் தேடிக் கண்டறிவதும், கண்டு மகிழ்ச்சியடைவதும், ஒல்லும் வகையால் தொடர்ந்து பின்பற்றுவதுமே இந்த ஆய்வின் நோக்கமாகும். ஒரு நூலில் ஒரு கருத்து பற்றிய விளக்கமுறை ஆய்வைப் பகுப்பாய்வு என்பராதலின் ஒரு கருத்து பற்றிய பன்னூல்களின் கருத்துக்களின் தொகுப்புப் பற்றிய ஆய்வு தொகுப்பாய்வு எனக் கருதப்படலாம். முன்னுரை, உள்ளடக்கத் துணைத்தலைப்புக்கள், முடிவுரை என்னும் வடிவத்தில் அமைக்கப்படும் இந்தக் கட்டுரை, இப்பொருள் பற்றிய முந்தைய ஆய்வுகளின் தொடர்ச்சியாகவும் நினைவூட்டலாகவும் மீட்டுருவாக்கமாகவும் கருதப்படலாம்.

விருந்து ஓர் இலக்கணப் பார்வை

‘விருந்து’ என்னும் சொல் விருந்தோம்பல், விருந்து புறந்தருதல், விருந்தயர்தல் என்னுமாறு பல்வகையான பின்னொட்டுக்களோடு இணைந்து பயன்படுத்தப்படுகிறது. ‘விருந்து’ என்ற சொல்லுக்குப் புதுமை என்று பொருள்.  பெண்களுக்குரிய சிறந்த பண்புகளில் ஒன்றாக விருந்தோம்பலைத் தொல்காப்பியம் குறிக்கிறது.

விருந்து புறந்தருதலும் சுற்றம் ஓம்பலும்
பிறவும் அன்ன கிழவோள் மாண்புகள்1

விருந்து பற்றிக் கிட்டும் தலையாய சான்று இதுவே எனக் கொள்ளுதற்கு இடமுண்டு. இலக்கியங்களைப் பற்றிப் பேசும் தொல்காப்பியம் புதுமைப் போக்கோடு வெளிவரும் இலக்கியங்களையும் இந்தச் சொல்லால் அரவணைத்துக் கொள்வதையும் காண முடிகிறது.

விருந்தே தானும்
புதுவது கிளந்த யாப்பின் மேற்றே2

தொல்காப்பியரை முக்காலமும் உணர்ந்த ஞானி என்பது பொருந்தாதாயினும் மொழி பற்றியும், அதன்கண் தோன்றி வளரும் இலக்கிய வளர்ச்சி மற்றும் நெறி பற்றியும் தெளிந்த ஞானம் பெற்றிருந்தார் என்பதற்குத் தொல்காப்பியமே சான்றாகும். தமிழின் இலக்கிய எதிர்காலத்தைச் சரியான தளத்தில் வைத்துக் கணிக்கின்ற நூற்பாவாக இது திகழ்கிறது எனலாம்.

சங்க இலக்கியங்களில் விருந்தோம்பல்

விருந்தயர்தல் இல்லறம். இல்லறம் கற்பியல். கற்பியல் அகம். ஆனால் இவ்வறத்தின் சிறப்பு நோக்கிய சங்கச் சான்றோர்கள் அகத்திலும் புறத்திலும் இவ்வறம் உள்ளிட்ட செய்திகள் கொண்ட பாக்களைக்  கோத்திருக்கிறார்கள். இது தனித்த விரிந்த ஆய்வுக்குரிய பொருளாகையால் ஒரு சில எடுத்துக்காட்டுக்களால் விளக்க முற்படலாம்.

தூங்கல் ஓலை ஓங்குமடற் பெண்ணை
மாஅரை புதைத்த மணல்மலி முன்றில்
வரையாத் தாரம் வருவிருந்து அயரும்
தண்குடி வாழ்நர் அம்குடிச் சீறூர்
இனிது மன்ற அம்மதானே!” 3

என்னும் நற்றிணைப் பாடலில் தலைவன் வராதபோது தன் சிற்றூரும் இன்னாதிருந்தது என்பதைக் குறிப்பாகப் புலப்படுத்தும் தோழி தலைவனைப் பற்றி அறியாத போது இருந்த ஊர்ச்சிறப்பில் வைத்து விருந்தோம்பலைக் கூறுவதை அறிய முடிகிறது. வருவிருந்து அயரும் தண்குடி வாழ்நர் அம்குடிச் சீறூர் இனிது’ என்பது தற்போது இன்னாமையைக் குறித்தது என்க.

அல்லில் ஆயினும் விருந்து வரின் உவக்கும்             
முல்லை சான்ற கற்பின்
மெல்இயற் குறுமகள் உறைவின் ஊரே4

வினைமுடித்து மீளும் தலைவன் தலைவியை விரைந்து  காணும் அவாவுக்கான காரணங்களை அடுக்குகிறபோது அவளுடைய ஊர்ப்பெருமையைப் புகழ்வதன் வழி அவளுடைய விருந்தோம்பும் மாண்பை விதந்தோதுகிறான். அகத்திணைப் பாடலொன்றில் தலைவியின் பண்புநலன்களை முன்னிறுத்திச் செய்யப்பட்டிருக்கும் இந்தப் பாடலின் கருத்து ஒரு பண்பாட்டுக் கருவூலமாகும். இளையான்குடி மாறனார் மழைக்கால இரவில் வந்த சிவனடியாரை உபசரித்த வரலாற்றுக்கு மூலமான முந்தைய சிந்தனை இது. சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனைப் பாடவந்த இடைக்காடனார், அவனுடைய விருந்தோம்பும் பண்பைக் குறிப்பிடுகிறார்.

பெருவிறல் யாணர்த் தாகி, அரிநர்
கீழ்மடை கொண்ட வாளையும்
உழவர் படைமிளிர்ந்திட்ட யாமையும், அறைநர்
கரும்பிற் கொண்ட தேனும்,பெருந்துறை
நீர்தரு மகளிர் குற்ற குவளையும்
வன்புலக் கேளிர்க்கு விருந்து அயரும்
மென்புல வைப்பின நன்னாட்டுப் பொருந! 5

கிள்ளிவளவன் விருந்தில் வாளும் ஆமையும் தேனும் மலரும் கைகோத்துள்ளன என்பது நோக்கத்தக்கது. ‘விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா மருந்தெனினும் வேண்டற்பாற்றன்று’ என்னும் சிந்தனைக்கு மூலமான ‘இந்திரர் அமிழ்தம் இயைவதாயினும் தமியர் உண்டலுமிலரே’6 என்னும் சிந்தனையும் புறநானூற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது இங்குக் கூடுதல் குறிப்பாகக் குறிக்கப்படுகிறது.

கேளிர்போல கேள் கொளல் வேண்டி
வேளாண் வாயில் வேட்பக் கூறி
கண்ணில் காண நண்ணுவழி இரீஇ
பருகு அன்ன அருகா நோக்கமொடு
உருகு பாவைபோல் என்பு குளிர் கொளீஇ7

பொருநர்களை உபசரித்தான் கரிகால்வளவன் என்னும் குறிப்பு அவன் உபசரித்த முறையினைப் பொருநராற்றுப்படை வழிக் காணமுடிகிறது.

திருக்குறளில் விருந்தோம்பல்

‘நீதி’ என்பதற்கு வாழ்வியல் நெறி என்பது பொருத்தமாயின் திருக்குறளை ஒரு வாழ்வியல் நூல் எனல் பொருந்தும். தனிமனிதன் தொடங்கி அரசன் வரை உள்ள அனைவர்க்குமான வாழ்வியல் நெறியை அது நிரல்பட திறம்படக் கூறுகிறது. இந்தத் திருக்குறளில் விருந்தோம்பல் ஒரு தனித்த அதிகாரப் பொருண்மையாகக் கொள்ளப்பட்டுள்ளது என்பதே அதன் இன்றியமையாமையை ஓரளவு விளக்கக்கூடும். ‘தென்புலத்தார், தெய்வம், விருந்து ஒக்கல், தான்  என்றாங்கு ஐம்புலத்தாறு ஓம்பல் தலை”8 என்னும் குறட்பாவிற்குச் சிறப்புரை எழுதிய பரிமேலழகர் விருந்து பற்றிய தம் ஆய்வுக்கருத்தினைப் பதிவு செய்திருக்கிறார்.

விருந்து என்பது புதுமை. அஃது ஈண்டு ஆகுபெயராய்ப் புதியவராய வந்தார் மேல் நின்றது. அவர் இருவகையர். பண்டு அறிவுண்மையின் குறித்து வந்தாரும்அஃது இன்மையின் குறியாது வந்தாரும் என. ஒக்கல் சுற்றத்தார் எல்லா அறங்களும் தான் உளனாய் நின்றுசெய்ய வேண்டுதலின் தன்னை ஓம்பலும் அறனாயிற்று 9

இந்தக் கருத்தினாலும் இதனைத் தொடர்நது வருகின்ற இரண்டு குறட்பாக்களுக்கு அவர் எழுதிய உரையாலும் இல்லறம் கடைபோவதே விருந்தோம்புதலினால்தான் என்பது தெளிவாகும்.

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது 10

என்னும் குறட்பா சிறப்புரையின் இறுதியில்  ‘இவை மூன்று பாட்டானும்  இல்நிலையின் நின்றான் அறம் செய்யும் ஆறு கூறப்பட்டது” என்று எழுதுகிறார் பரிமேலழகர். எனவே துறவறப்பயன் உயிர்களைப் பேணுதல் எனின் இல்லறப் பயன் விருந்தினரைப் பேணுதல் என்பது தெளிவாம்.

காமத்துப்பாலில் ‘விருந்து’

சங்க இலக்கியப் புறத்திணைப் பகுதியில் அமைந்துள்ள கொளுவும், அகத்திணைப் பாடல்களில் கொடுக்கப்பட்டுள்ள திணை, துறை விளக்கமும் திருக்குறளில் பரிமேலழகர் உரையில் கொடுக்கப்பட்டிருக்கும் அதிகாரப் பொருண்மை விளக்கமும் பொருள் தொகுப்பு விளக்கமும் அவற்றைத் தெளிவுபட புரிந்து கொள்வதற்கு உதவும் பெருங்கருவிகள் ஆகும். அவற்றைப் பற்றிய புரிதலின்றி அவ்விலக்கியப் பாடல்களின் பொருளுணர்தல் அரிதாம்.

தம்மில் இருந்து தமதுபாத் துண்டற்றால
அம்மா அரிவை முயக்கு11

களவியல் சார்ந்த இந்தக் குறட்பாவிற்குத் துறைவகுத்த பரிமேலழகர்,”

இவளை நீ வரைந்து கொண்டு உலகோர்தம் இல்லிருந்து தமது பாத்துண்ணும் இல்லறத்தூடு படல் வேண்டும் என்ற தோழிக்கு (வரைவு மறுத்துத் தலைவன்  சொல்லியது)” 12

என்றெழுதுகிறார். இல்லறத்துக்குட்படுத்த எண்ணும் தோழிக்கு அதன் பயனாகிய துறக்கச் செல்வம் தலைவியோடு கூடிய களவுப் புணர்ச்சியிலேயே கிட்டுமாதலின் தலைவன் மறுத்தான் என்பதாம். “இன்பம் பயத்தற்கண் தமக்குரிய இல்லின்கண் இருந்து உலகோர் தாளான் வந்த பொருளைத் தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல்கட்குப் பகுத்துத் தம் கூற்றை உண்டாற் போலும்” என்னும் தலைவன் கூற்றினால் இது புலப்படும். ‘தம்மில் இருந்து தமது பாத்து உண்டல்’ இல்லறப் பகுதியே என்பதை நினவூட்டப் பரிமேலழகர், ‘தென்புலத்தார்’ 13 எனத் தொடங்கும் குறட்பாவைத் தலைவன் உரையிலும் வைத்துக் கூறினார். இலக்கண நூலாகிய தொல்காப்பியத்திற்கு அடுத்தபடியாகத் திருக்குறள் காமத்துப்பாலில் இருவகை விருந்தின் சிறப்பும் போற்றப்பட்டுள்ளன என்பது இதனால் தெளிவாகும். தொல்காப்பியம் கற்பியலில் தலைமகள் பண்பாகக் கூறியதைத் திருவள்ளுவர் களவியலில் தோழி மற்றும் தலைவன் சிந்தனையில் வைத்துக் கூறும் நுண்ணியம் உணரத்தக்கது.

வறுமைக்கிலக்கணம் வருவிருந்து ஓம்பாமை

வறுமைக்கான பொருள் வரையறையை திருவள்ளுவர் இரண்டு பாக்களில் கூறியிருப்பதை அறிய முடிகிறது. அவற்றுள் ஒன்று விருந்தோம்பல் அதிகாரத்திலும் மற்றொன்று பொறையுடைமை அதிகாரத்திலும் காணப்படுகிறது.

உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ம்பா
மடமை மடவார்கண் உண்டு14

(செல்வமிருந்தும் விருந்தோம்புதலைச் செய்யாதவர்கள்) பொருளால் கொள்ளும் பயனை இழப்பித்து உடைமையை இன்மையாக்கலின்  மடமையை இன்மையாக உபசரித்தார். பேதைமையால் விருந்தோம்பலை இகழின் பொருள் நின்ற வழியும் அதனால் பயன் இல்லை என்பதாம்.” 15

என்னும் பரிமேலழகரின் உரை நுட்பத்தால் உடைமை எஞ்ஞான்றும் பயனோக்கியது என்பதும், செல்வத்துப் பயன் ஈதலாதலின் அது கடைபோகாவழி அது இன்மையாகுமேயன்றி உடைமையாகாது என்பதும் விருந்தோம்புதல் பண்பாட்டு விழுமியம் என்பதும் அதனைச்  செய்யாமை ‘பேதைமை’ என்பதும் பெறப்படும். இதே கருத்தினை வேறொரு வாய்பாட்டில் எதிர்மறையில் வைத்தும் திருவள்ளுவர் கூறியிருக்கிறார். இல்லறத்தில் விருந்தோம்பலின் இன்றியமையாமை அதன் சிறப்பு ஆகியவற்றை எதிர்மறைமுகத்தால் திருவள்ளுவர் கூறியிருப்பது இங்குச் சிந்தனைக்குரியது. உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம் இவை தேவையெனின் இவற்றின் இன்மையே வறுமை எனப்படல் வேண்டும். ஆனால் திருவள்ளுவர் இவை மூன்றும் இல்லாதிருந்தும் விருந்தினரைப் போற்ற வேண்டும் எனவும் போற்றாமையே வறுமை என்றும் வறுமைக்குப் புதுவெளிச்சம் பாய்ச்சுகிறார்.

இன்மையுள் இன்மை விருந்தொரால்., வன்மையுள்
வன்மை மடவார்ப் பொறை16

என்பது குறட்பா. அறனல்லாத விருந்தொரால் பொருளுடைமை ஆகாதவாறு போல என்னும் உவமத்தால் விளக்குகிறார். பொறையுடைமை உயர்ந்த பண்பே. அவ்வுயர்ந்த பண்பினை விளக்கப் பயன்படுத்தும் விருந்தோம்பல் அதனினும் உயர்ந்தது என்பது ஆற்றலால் பெற்ற பொருளெனக் கொள்க. ‘உயர்ந்ததன் மேற்றே உள்ளுங்காலை’ என்பது இலக்கணமாதலின்!

விருந்தோம்புதலின் மூவகைப் பயன்கள்

நல்லறம் செய்பவனை ஊக்கப்படுத்த வேண்டும் என்பதற்காகத் திருவள்ளுவர் விருந்தோம்புவார்க்குப் பல்வகை நன்மைகள் கிட்டும் என விளக்குகிறார். இதனை இம்மைப் பயன், மறுமைப் பயன், இருமைக்கான பயன் என வகுத்துக் கொண்டு ஐந்து குறட்பாக்களில் கூறுகிறார்.

வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை
பருவந்து பாழ்படுதல் இன்று17

அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து
நல்விருந்து ஓம்புவான் இல்18

வித்தும் இடல் வேண்டும் கொல்லோ விருந்தோம்பி
மிச்சில் மிசைவான் புலம் 19

இம்மூன்று குறட்பாக்களும் பகுத்தறிவுக்கு முரணாக அமைந்திருப்பதாகச் சிலர் கருதக்கூடும். ‘பருவந்து பாழ்படுதலும்’, ‘அகனமர்ந்து செய்யாள் உறையும்’ என்பதும் ‘வித்தும் இடல் வேண்டும்’ என்பதும் அறிவுக்கு முரணாக அமைந்திருக்கின்றன என்பதைவிட உலகியல் நோக்கிக் கூறியனவாகக் கொள்ள வேண்டும். எதிர்பாராமல் உதவிசெய்தவனைத் ‘தெய்வமே நேரில் வந்து உதவிய”தாகக் கூறுவதில்லையா? அதுபோல என்க.

செல்விருந்தோம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்விருந்து வானத்தவர்க்கு20

இனைத்துணைத்து என்பதொன்றில்லை விருந்தின்
துணைத்துணை வேள்விப் பயன் 21

என்னுங் குறட்பாக்களில் முறையே  மறுமைப் பயனையும் இருமைப் பயனையும் எடுத்துக் கூறுகிறார் திருவள்ளுவர். வேதம் ஓதுதல், யாகம் வளர்த்தல், விருந்தோம்புதல், தருப்பணம் செய்தல், பலியிடுதல் என்னும் வேள்வி ஐந்தனுள் ஒன்றுதான் விருந்தோம்புதல். ஒவ்வொரு வேள்விக்குமான பயன் வரையறுக்கப்பட்டுள்ளதெனினும் விருந்தோம்பலாகிய வேள்விக்கு அது செய்யும் அளவே அளவாக்கப்பட்டுள்ளது. ‘விருந்தின் துணை’ என்பதற்கு விருந்து செய்யும் அளவு என்பது பொருள். ‘சாவா மருந்தெனினும் வேண்டற்பாற்றன்று’ எனவும் ‘விருந்தோம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு’ எனவும் இல்லறத்தின் தலையாய கடமையாகிய விருந்தோம்பலை வலியுறுத்திய திருவள்ளுவர் அதன் அனைத்து வகைப் பயன்களையும் நிரல்படக் கூறுவதை நோக்குக.

சிலப்பதிகாரத்தில் விருந்தோம்பல்

குடிமக்கள் காப்பியம் எனச் சிறப்பிக்கப்படும் சிலம்பில் விருந்தோம்பலின் சிறப்பினைச் சித்திரிக்க ஏற்ற இடமில்லாது அடிகள் அல்லற்பட்டிருப்பது நன்கு புரிகிறது. இதே நிலை கம்பனுக்கும் வந்திருக்கிறது. கோவலனோடு  கண்ணகியாவது சில ஆண்டுகள் இல்லறம் நடத்தியதாகத் தெரிகிறது. ஆனால் இராமனுக்கும்  சீதைக்கும் அந்த வாய்ப்பும் இருந்ததாகத் தெரியவில்லை.

மருந்தான் விருந்து

தலைவியின் ஊடல் நீக்கும் வாயில்களுள் விருந்தும் ஒன்று. இதனைத் தொல்காப்பியம் பலபடப் பேசுகிறது. சிலப்பதிகாரத்தில் இரவு நேர வண்ணனைப் பகுதியில் தொல்காப்பிய இலக்கணம் நினைவு கூரப்பட்டிருப்பதை அறியமுடிகிறது. பரத்தையர்பால் பல்வரிக்கோலம் புனைந்துப் புணர்ச்சியின்பம்  அனுபவித்து வீடு திரும்பும் கணவன்மார்கள் தங்கள் மனைவியர் தங்களிடம் ஊடல் கொள்வார்கள் என எதிர்நோக்கி விருந்தைத் துணைக்கழைத்துக் கொண்டு செல்கிறார்கள். ஆனால் இல்லத்தரசியர் ஊடல் நீங்காமையை அவர்தம்  முகக்குறிப்பினைக் கண்டு பேதுறும் கணவன்மார்கள் ‘ஊடல் தீர்க்கும் மருந்து விருந்தினும் சிறந்தது உண்டோ?’ என நெஞ்சு நடுங்கியதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

விருந்தொடு புக்க பெருந்தோள கணவரோடு
உடனுறைவு மரீஇ ஒழுக்கொடு புணர்ந்த
வடமீன் கற்பின் மனையுறை மகளிர்
மாதர் வாள்முகத்து மணித்தோட்டுக் குவளைப்
போது புறங்கொடுத்துப் போகிய செங்கடை
விருந்தின் தீர்ந்தில தாயின் யாவதும்
மருந்தும் தருங்கொல் இம்மாநில வரைப்பெனக்
கையற்று நடுங்கும் நல்விளை நடுநாள் 22

இதனால் விருந்தின் பயன்பரப்பு நடப்பியல் சார்ந்தது என்பதும்  இல்லறச் சிக்கலை மிக நுட்பமான முறையில் தீர்த்து வைக்கும் பேராற்றல் விருந்துக்கு உண்டு என்பதும் பெறப்படும்.  எல்லாரும் அறிந்த சிலம்பின் மற்றொரு காட்சி கொலைக்களக்காதையில் சித்திரிக்கப்பட்டுள்ளமையாகும். கணவனைக் குற்றவாளி எனச் சுமத்திய பழிக்காக மாமதுரையைத் தீக்கிரையாக்கிய கண்ணகி புகாரில் மாதவியோடு வாழ்ந்த காலத்து வந்த அவன் பிரிவைத் தனக்கேற்பட்ட இழப்பாகக் கருதவில்லை. இல்லறம் செய்ய தன் கணவன் உதவவில்லையே என்றுதான் வேதனைப்பட்டிருந்திருக்கிறாள். காப்பிய நிகழ்வுகளின் இறுதிக்காட்சியில் வைத்து இதனைக் காட்டுகிறார் அடிகள்.

“அறவோர்க் களித்தலும் அந்தணர் ஓம்பலும்
துறவோர்க் கெதிர்தலும் தொல்லோர் சிறப்பின்
விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை”23

தன் கணவன் மீது பழிபோடாத கண்ணகியை இங்கு நாம் காணலாம். ‘உன்னோடு இல்லறம் நடத்த நான் கொடுத்துவைக்கவில்லை’ என்பதே அவள் ஆதங்கமாக இருந்திருக்கிறது. அதனால்தான் ‘இழந்த என்னை’ எனத் தன்மீது தானே பழிபோட்டுக் கொள்கிறாள். இல்லறத்தில் இழக்கக்கூடாத ஒன்று எனக் கருதும் அளவுக்கு விருந்தோம்புதல் அரியதொரு அறமாகக் கருதப்பட்டுள்ளது என்பதைச் சிலம்பின் வழி அறியலாம். இந்தப் பகுதியில் வரும் ‘தொல்லோர் சிறப்பின் விருந்தெதிர் கோடல்’ என்னும் தொடரில் மனம் பறிகொடுத்த பாவேந்தர் தாம் எழுதிய குடும்ப விளக்கில் இதற்கான விரிவுரையைத் தந்திருக்கிறார்.

வீட்டுக்கு வந்த விருந்தோம்பு நாட்டிலுறு
நற்றமிழர் சேர்த்தபுகழ் ஞாலத்தில் என்னவெனில்
உற்ற விருந்தை உயிரென்று பெற்றுவத்தல்!
மோந்தால் குழையும் அனிச்சம்பூ முகமாற்றம்
வாய்ந்தால் குழையும் வருவிருந்தென்று ஆய்ந்ததிரு
வள்ளுவனார் சொன்னார் அதனைநீ எப்போதும்
உள்ளத்து வைப்பாய் ஒருபோதும் தள்ளாதே!
ஆண்டு பலமுயன்றே ஆக்குசுவை ஊண்எனினும்
ஈண்டு விருந்தினர்க்கும் இட்டுவத்தல் வேண்டுமன்றோ?
வந்தாரின் தேவை வழக்கம் இவையறிய
நந்தாவிளக்குன்றன் நல்லறிவே! செந்திருவே!
இட்டுப்பார் உண்டவர்கள் இன்புற்று இருக்கையிலே
தொட்டுப் பார் உன் நெஞ்சம் தோன்றுமின்பம்! – கட்டிக்
கரும்பென்பார் பெண்ணை கவிஞரெலாம் வந்த
விருந்தோம்பும் மேன்மையினால் அன்றோ?” 24

திருக்குறளில் விருந்தோம்பல் என்னும் தனியதிகாரத்தைப் போலவே பாவேந்தரும் தமது குடும்பவிளக்கில் விருந்தோம்பலைத் தனியியலாகவே அமைத்திருப்பதன் மூலம் குடும்பத்தின் தலையாய அறம் விருந்தோம்புதலே என்பதில்  அவருடைய பார்வை தெளிவாக இருந்திருக்கிறது என்பது புலனாம்.

பெரியபுராணத்தில் விருந்தோம்பல்

நம்மை நாடி வரும் விருந்தினரை இன்சொல்லால் மகிழ்வித்தும் உள்ளம் கலந்து உறவாடியும், தங்குவதற்கேற்ற இடமளித்தும், ஆடை அணிகலன்கள் முதலியவற்றையும் அளித்தும் உபசரிக்க வேண்டும். இவ்வாறு விருந்தினரை உபசரிப்பவர்களைத் தேவர்கள் தம் விருந்தினராக ஏற்றுக் கொள்வார்கள் என, ஏலாதி பண்டையத் தமிழரின் விருந்தோம்பல் முறையைத் தெரிவித்து ‘நல்விருந்து வானத்தவர்க்கு’ என்னும் குறட்பாத் தொடரையும்  நினைவூட்டுகிறது.

இன்சொல்அளாவல்இடம்இனிது ஊண் யாவர்க்கும்
வன்சொல் களைந்து வகுப்பானேல் மென்சொல்
முருந்து ஏய்க்கும் முட்போல் எயிற்றினாய்! நாளும்
விருந்து ஏற்போர் விண்ணோர் விரைந்து 25

தமிழர்தம் இந்தப் பண்பாட்டு விழுமியத்தின் காப்பிய வடிவமே பெரியபுராணம். பெரிய புராணத்தின் சாரம் விருந்தோம்பலே. எந்தச் சூழ்நிலையிலும் எத்தகைய விருந்தோம்பலையும் மேற்கொள்ள வேண்டும் என்னும் அவ்வறத்தின் மேன்மையை முன்னெடுப்பதாக அமைந்திருப்பதுதான் இளையான்குடி மாறனார் புராணம்.

ஆரம் என்பு புனைந்த ஐயர்தம் அன்பர் என்னுந் தன்மையால்
நேர வந்தவர் யாவராயினும் நித்தமாகிய பத்திமுன்
கூர் வந்து எதிர்கொண்டு கைகள் குவித்து நின்று செவிப்புலத்து
ஈரம் மென்மதுரப் பதம் பரிவெய்த முன்னுரை செய்தபின் 26

 கொண்டு வந்து மனைப்புகுந்து குலாவு பாதம் விளக்கியே
மண்டு காதலின் ஆசனத்திடை வைத்து அருச்சனை செய்தபின்
உண்டி நாலு விதத்தினில் ஆறு சுவைத் திறத்தினில் ஒப்பிலா
அண்டர் நாயகர் தொண்டர் இச்சையில் அமுது செய்ய அளித்துள்ளார் 27

செல்வம் மேவிய நாளில்  இச்செயல் செய்வதன்றியும் மெய்யினால்
அல்லல் நல்குரவானபோதினும் வள்ளல் என்று அறிவிக்கவே
மல்லல் நீடிய செல்வம் மெல்ல மறைந்து நாடோறும் மாறிவந்து
ஒல்லையில் வறுமைப் பதம்புக உன்னினார் தில்லை மன்னினார். 28

ஈரமேனியை நீக்கி இடம் கொடுத்து
ஆர இன்னமுது ஊட்டுதுற்கு ஆசையால்
தாரமாதரை நோக்கி, தபோதனர்
தீரவே பசித்தார் செய்வதென்? என்று 29

என்னும் பாடல்கள் விருந்து உபசரிப்பார்க்குப் பரிமேலழகர் சொன்ன ‘நன்று ஆற்றல்’ என்னும் சொல்லுக்கு இலக்கியமாக அமைந்துள்ளதைக் காணலாம். பெரியபுராணத்துள் வருகின்ற விருந்தோம்பும் நிகழ்வுகளுள் இன்றியமையாது குறிக்கப்படுபவை மூன்று.

  1. சிறுத்தொண்டர் புராணம்.
  2. அப்பூதிநாயானார் புராணம்.
  3. இளையான்குடி மாறனார் புராணம்

இவற்றுள் முந்தைய இரண்டும் (பிள்ளைக்கறி உண்டமையும், மாண்ட இளைய திருநாவுக்கரசு மீண்டதும்) மீயுயர் கற்பனை கலந்து அமைய இறுதியாக உள்ள இளையான் குடிமாறனார் புராணம் நடப்பியல் சார்ந்து அமைந்துள்ளது நோக்குதற்குரியது.

கம்பராமாயணத்தில் விருந்தோம்பல்

கம்பராமாயணத்தில் நேரடியான உபசரிப்பைக் கங்கைப் படலத்தில் காணமுடிகிறது. ‘ஆறுகொள் சடிலத்தானும் அயனும் என்று இவர்கள் ஆதி வேறுள குழுவையெல்லாம் வென்று’ மானுட அவதாரம் பெற்றுவந்த இராமனுக்கு நாவாய் வேட்டுவன் குகன் செய்த விருந்து அது. இராமனை உபசரிக்க எண்ணிய எல்லை நீத்த அருத்தியன் ஆகிய குகன்.

இருத்தி ஈண்டுஎன்னலோடும்.
இருந்திலன்., எல்லை நீத்த
அருத்தியன், தேனும் மீனும்
அமுதினுக்கு அமைவது ஆகத்
திருத்தினென் கொணர்ந்தேன்
என்கொல் திருவுளம் என்ன. 30

நெஞ்சினில் அன்பையும் கைகளில் தேன், மீன் முதலியவற்றையும் கொண்டு வந்தான் குகன். அவனுடைய ஆழமான அன்பை நோக்கிய இராமன், மூத்தவர்களாகிய முனிவர்களை நோக்கிப் புன்னகைத்து விட்டுக், “குகனே! நீ அன்போடும் பக்தியோடும் கொண்டு வந்த தேனும், மீனும் மிகவும் அருமையானவை. அமுதத்தைக் காட்டிலும் சிறந்தவை. இவையெல்லாம் எம்மைப் போன்றவர் ஏற்கத்தக்கவையே. ஆதலால் நாம் அவற்றை இனிதாக உண்டவர்போல் ஆனோம்” என்று குகனிடம் கூறினான்.

அரியதாம் உவப்ப உள்ளத்து
அன்பினால் அமைந்த காதல்
தெரிதரக் கொணர்ந்த என்றால்
அமிழ்தினும் சீர்த்த அன்றே
பரிவினின் தழீஇய என்னின்
பவித்திரம் எம்ம னோர்க்கும்
உரியன இனிதின் நாமும்
உண்டனெம் அன்றோ என்றான்31

உள்ளத்து அன்பின் மிகுதியால் கொண்டு வந்த பொருள்கள் உண்ணத்தகாதன ஆயினும் சுமந்து வந்த அன்பு மிகுதியால் அவையும் உண்ணத்தகும் பயனைத் தரவல்லனவே என்னும் உயரிய கருத்தினைக் கவிச்சக்கரவர்த்தி இந்த இடத்தில் பதிவு செய்திருக்கிறார். கள்ளம் கபடமற்ற உள்ளமும் எளியவரை மதிக்கும் பெருந்தன்மையும் விருந்தோம்பல் அறத்தினை உயர்த்தும் என்னும் மாண்பினை இதனால் அறிந்து கொள்ளலாம்.

உண்டபின் தாம்பூலம் தரிக்கும் வழக்கமுள்ளவன் இராமன்.  அதனை அவனுக்கு அன்பைக் குழைத்து மடித்துத் தரும் சீதை தற்போது அசோகவனத்தில். தான் இல்லாதபோது அவற்றையெண்ணி மருகுகின்றாள்.

அருந்து மெல்லடகு ஆரிட அருந்தும் என்று அழுங்கும்!
விருந்து வந்தபோது என்னுறுமோ என விம்மும்!” 32

கணவனுக்கு அடைகாய் மடித்துக் கொடுப்பதும் இல்லறத்தில் விருந்தோம்புதலும் இணைந்து செய்ய வேண்டிய கடமை. அறம். அவ்விரண்டனையும் செய்ய முடியாமல் தான் தனித்து இருப்பதாகச் சீதை வருந்தினாள் என்பதாம். சிலப்பதிகாரத்தில் கண்ணகி தன் கணவனிடம் நேராகவே கூறினாள். சீதை செய்ய வேண்டிய கடமையைச் செய்ய இயலவில்லையே என தனக்குத்தானே மருகினாள்.  ‘இழந்த என்னை’ என்பது கண்ணகி வாக்கு. ‘என விம்மும்’ என்பது சீதையின் மெய்ப்பாடு. இரண்டிடங்களிலும் புலவர் பெருமக்கள் தலைமகன்களின் குற்றத்தைக் கூறாமல் தலைமகள்களின் வருத்தத்தையே முன்னிலைப்படுத்தியிருக்கிறார்கள் என்பது சிந்திக்கத்தக்கது.  

விருந்தோம்பும் கலைமரபு

வீடு தேடி வந்தார்க்குச் சோறு போட்டு அனுப்புவதன்று விருந்தோம்பல்.  இல்லறத்தின் தலையாய கடமையாக விருந்தோம்புதல் குறிக்கப்படினும் அதனை முறையாகச் செய்ய வேண்டும், செய்தார்கள் தமிழர்கள் என்பதிலேதான் பண்பாட்டு விழுமியம் அடங்கியிருக்கிறது.

மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து’” 33

என்னும் குறட்பாவில் மோப்ப மற்றும் நோக்க என்னும் இரண்டு சொற்களுக்குத் தம் நுண்ணிய உரையினால் விளக்கம் சொல்வார் பரிமேலழகர். இந்தக் குறளில் அமைந்துள்ளது வேற்றுமை அணி. உவம அணி அன்று.

சேய்மைக்கண் கண்டுழி இன்முகமும், அது பற்றி நண்ணிய வழி இன்சொல்லும் அதுபற்றி உடன்பட்ட வழி நன்றாற்றலும் என விருந்தோம்புவார்க்கு இன்றியமையாத மூன்றனுள் முதலாய இன்முகம் இல்வழிச் சேய்மைக்கண்ணே வாடி நீங்குதலின் தீண்டியவழி அல்லது வாடாத அனிச்சப்பூவினும் விருந்தினர் மெல்லியர் என்பதாம். 34

என்பது பரிமேலழகர் விளக்கம். அனிச்சப்பூ தீண்டுதலாகிய மூன்றாம் நிலையில்தான் வாடும். விருந்தினரோ நோக்குதலாகிய முதனிலையிலேயே வாடுவர் ஆதலின் அனிச்சப்பூவினும் மெல்லியர் என்பதாம். பரிமேலழகரின் இந்த உரை நுண்ணியம் அறிவு சார்ந்தது என்பதோடன்றிப் பண்பாடு சார்ந்தது எனல் பொருந்தும். திருக்குறள் உரைக்குப் பலகாலம் பின்னால் தோன்றிய விவேக சிந்தாமணி என்னும் நூலில் அழகர் சொன்ன மூன்று பண்புகள் ஒன்பதாக விரிவடைந்திருக்கின்றன என்பதை அறிய முடிகிறது.

விருந்தினனாக ஒருவன் வந்து எதிரின்
வியத்தல், நல் மொழி இனிது உரைத்தல்,
திருந்துற நோக்கல், வருகென உரைத்தல்,
எழுதல், முன் மகிழ்வன செப்பல்,
பொருந்து மற்றவன்தன் அருகுற இருத்தல்,
போம் எனின் பின் செல்வ தாதல்,
பரிந்துநல் முகமன் வழங்கல், இவ் வொன்பான்
ஒழுக்கமும் வழிபடும் பண்பே35

என்னும் பாடலின் வழி, வரும் விருந்தினரை மெச்சுதலும், அவரிடத்து இன்மொழி பேசுதலும், முகமலர்ச்சி கொண்டு நோக்குதலும், வருக என வரவேற்றலும், மரியாதை நிமித்தம் எழுந்து நிற்பதும், அவன் மகிழும்படியான செய்திகளைக் கூறுதலும் வந்து சேர்ந்த அவனது அருகிலேயே அமர்வதும், விடை பெற்றுச்  செல்லும் போது நேசமுற்று பின் சென்று, மகிழ்வான முகத்துடன் அவனை வழியனுப்புதலுமாகிய  ஒன்பது வகையால் விருந்தினரை உபசரிக்க வேண்டும் என்று கூறுகிறது. விருந்தினர்கள் விடைபெற்றுச் செல்லும் போது, அவர்கள் பின்னே, ஏழடி நடந்து சென்று, தமிழரிடையே நிலவிய பண்டை மரபு ஆகும். இம்மரபைக், கரிகாலன், தன்னை நாடி வந்த பொருநர்களை வரவேற்று உபசரித்து, அவர்கள் விடைபெறும் போது ஏழடி தூரம் நடந்து சென்று வழியனுப்பினான் என்பதைக்,

“காவின் ஏழு அடிப் பின் சென்று” 36

மேற்கண்ட பாடலடி விளக்குகிறது. மேற்கண்ட குறிப்புக்களிலிருந்து விருந்தோம்பல் என்பது தமிழ்மக்கள் வாழ்வியலின் ஒரு கூறாகவும் கலைமரபாகவும் பின்பற்றப்பட்டு வந்துள்ளது என்பதை அறியலாம். இதன் தொடர்ச்சியாக விருந்தயர்வாருக்கு இன்றியமையாத பண்பாக முகமலர்ச்சியே என்பது தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருவதையும் காணமுடிகிறது.

ஒப்புடன் முகம லர்ந்தே
உபசரித் துண்மைப் பேசி
உப்பில்லாக் கூழிட்டாலும்
உண்பதே அமுத மாகும்
முப்பழ மொடுபா லன்னம்
முகங்கடுத் திடுவா ராயின்
கப்பிய பசியி னோடு
கடும்பசி ஆகுந் தானே37

என்னும் பாடலடி உணர்த்துகிறது. விருந்தின் புண்ணியம், பொருளில் இல்லை. அயர்வாரின் உள்ளத்தில் இருக்கிறது. இல்லறத்தானின் உள்ளத்து இனிப்பு அவன் உபசரிக்கும் பொருளில் வந்து அமைகிறது. திண்ணனார் எச்சில்படுத்தியதில் உண்டான பாசம் இறைவனுக்கு இனித்தது போல! புளித்துப் போன குழம்பு, தவிடு, கூழ், புழுக்கள் பற்றிய மாவு, அரைக்கீரையின் வேர், கெட்டியாய் இல்லாத தயிர், பக்குவம் தவறிய சருக்கரைப் பாகு, கிளறிய களி, நன்றாகத் தீட்டப்படாத அரிசியில் பொங்கி இடப்பட்ட சோறு, உப்பு போடப்படாத நீராகாரம் ஆகிய இவையே ஆயினும், இவ்வுணவானது அன்புடன் பரிமாறப்பட்டதாயின் உண்பவன் மகிழ்வான். அவன் மகிழ்ச்சி உபசரித்தவனின் உள்ளத்தோடு கரைவதால்.

கெட்டசாறு தவிடு கஞ்சி
கிருமி உண்ட மா அரைக்
கீரை வேர்தெளித்த மோர்மு
றிந்த பாகு கிண்டுமா
இட்ட சோறு கொழியல் உப்பி
டாத புற்கை ஆயினும்
எங்கும் அன்ப தாக நுங்க
இன்ப மாயி ருக்குமே38

ஆனால் தேன்பாகு, பசுநெய், பருப்பு வகைகள், முப்பழ வர்க்கங்கள்,  பால் சாத வகைகள், தாளிக்கப்பட்ட கறி வகைகள், பல்வகை பலகாரங்கள்  சுண்டக் காய்ச்சப்பட்ட திரட்டுப் பால், சருக்கரைப் பொங்கல் முதலியவற்றுடன் உணவு படைத்தாலும், அன்போடு இடப்படாததாயின் அங்கே விருந்தறம் நிறைவு பெறுவதில்லை.

பட்ட பாத பசுவின் நெய்ப
ருப்பு முக்க னிக்குழாம்
பானி தங்கள் தாளி தங்கள்
பண்ணி கார வகையுடன்
அட்ட பாலகு ழம்பு கன்னல்
அமுத மோடும் உதவினும்
அன்பனோ டளித்தி டாத
அசனம் என்ன அசனமே 39

என்னும் பாடலடி உணர்த்துகிறது. எனவே எத்தகைய உணவினை இட்டாலும் அதனை அன்பினோடு இடுதல் வேண்டும் என்பதே பழந்தமிழரின் விருந்தோம்பல் கொள்கையாகும். இன்முகம், இன்சொல், இனியவை ஆற்றல் என்பனவற்றின் தொகுப்பே விருந்தோம்பல் என்பதை மேற்காட்டிய சில எடுத்துக்காட்டுக்களால் அறிந்து கொள்ள இயலும்.

நிறைவுரை

தமிழர்தம் பண்பாட்டு அடையாளங்கள் பல. அவற்றுள் தலையாயது விருந்தோம்பல். இயற்கை வாழ்வினைப் புறந்தள்ளிச் செயற்கையில் சிந்தனைப் போக்கிய தற்காலத்தில் இது கனவாய்க் கற்பனையாய்ப் பொய்யாய்ப் புனைவாய் மெல்லப் புறப்பட்டு இல்லறத்தின் புறம் போயிருக்கலாம். அதன் சாரம் இன்னும் மணந்து கொண்டுதான் இருக்கிறது. தமழிலக்கியங்கள் முழுமையாகக் கிட்டாத காரணத்தால் இது பற்றிக் கிட்டும் செய்திகள் குறைவே. ஆனால் கிட்டியிருக்கிற அத்தனை இலக்கியங்களிலும் விருந்தோம்பல் பேசப்பட்டுள்ளது என்பதே உண்மை. விருந்தோம்பலைப் பெண் பின்பற்றியிருக்கிறாள். ஆண் நேசித்திருக்கிறான். ஆண்டவனுக்கு அடியவன் செய்திருக்கிறான். அடியவருக்கு சாமான்யன் செய்திருக்கிறான். அவதாரங்களுக்கும் விருந்தோம்பல் நிகழ்த்தப்பட்டுள்ளது.  மன்னர்கள் புலவர்களுக்குச் செய்திருக்கிறார்கள். புலவர்கள் தங்கள் மனைவியருக்கு இது பற்றிப் புகன்றிருக்கிறார்கள். சுருங்கச் சொன்னால் தமிழிலக்கியப் பெரும்பரப்பில் அங்கிங்கெனாதபடி எங்கும் ஒளிவெள்ளமாய் ஊடுருவி நிற்பது விருந்தோம்பல் என்னும் பண்பே என்பதை ஓரளவு நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. அப்புரிதலுக்கு இந்தக் கட்டுரை ஓர் அணிற்பங்காகக் கருதப்படலாம்.

சான்றெண் விளக்கம்

  1. தொல்காப்பியர் தொல். கற்பியல்           நூ.எண். 11
  2. மேலது செய்யுளியல்                 நூ.எண். 231
  3. கதப்பிள்ளையார் நற்றிணை         பா.எண். 135 வரி.1-5
  4. இடைக்காடனார் நற்றிணை         பா.எண் 142 வரி 8-10
  5. இடைக்காடனார் புறநானூறு        பா.எண் 42 வரி. 12-18
  6. கடலுள் மாய்ந்த இளம் பெருவழுதி புறநானூறு பா.எண். 182
  7. முடத்தாமக்கண்ணியார் பொருநராற்றுப்படை.  வரி. 74-78
  8. திருவள்ளுவர் திருக்குறள்                      கு.எண். 43
  9. பரிமேலழகர் மேலது உரை
  10. திருவள்ளுவர் திருக்குறள்                        கு.எண். 45
  11. மேலது                                                                            கு.எண். 1007
  12. பரிமேலழகர் மேலது உரை
  13. திருவள்ளுவர் திருக்குறள்                         கு.எண். 43
  14. மேலது கு.எண். 89
  15. பரிமேலழகர் மேலது உரை
  16. திருவள்ளுவர் திருக்குறள்       கு.எண். 153
  17. மேலது                     கு.எண். 83.
  18. மேலது கு.எண். 84
  19. மேலது கு.எண்.  85
  20. மேலது கு.எண்.  86
  21. மேலது கு.எண்.  87
  22. இளங்கோவடிகள் சிலப்பதிகாரம்  இ.வி.எ.காதை          வரி. 227-234
  23. மேலது கொலைக்களக்காதை             வரி. 73-75
  24. பாரதிதாசன் குடும்பவிளக்கு    கண்ணிகள் – 34-40
  25. கணிமேதாவியார் ஏலாதி                  பா.எண். 7
  26. சேக்கிழார் பெரியபுராணம்     பா.எண். 442
  27. மேலது பா.எண். 443
  28. மேலது பா.எண். 445
  29. மேலது பா.எண். 449
  30. கம்பர் கம்பராமாயணம் கங்கைப்படலம்.          பா.எண்.41 வரி. 1-3
  31. மேலது பா.எண். 42
  32. மேலது காட்சிப்படலம்                                 பா.எண். 15
  33. திருவள்ளுவர் திருக்குறள்                    கு.எண். 90
  34. பரிமேலழகர் மேலது உரை
  35. விவேகசிந்தாமணி பா.எண். 33
  36. முடத்தாமக்கண்ணியார் பொருநராற்றுப்படை வ. 7
  37. விவேகசிந்தாமணி பா.எண். 4
  38. மேலது பா.எண். 57
  39. மேலது பா.எண். 58

துணைநூற்பட்டியல்  

  1. ஆசிரியர்குழு (உரை) ஏலாதி, சாரதா பதிப்பகம், சென்னை. பதிப்பு – 2018.
  1. கேசிகன் புலியூர் (உ.ஆ.), நற்றிணை, பாரி நிலையம், சென்னை – 600108, நான்காம் பதிப்பு – 1967.
  1. சுப்பிரமணியன் ச.வே. (ப.ஆ.), தொல்காப்பியம், மணிவாசகர் பதிப்பகம், 31, சிங்கர் தெரு, சென்ன – 600108. ஐந்தாம் பதிப்பு – 2003 .
  1. சேக்கிழார் பெரிய புராணம், திருப்பனந்தாள் மடம், திருத்திய பதிப்பு – 1967
  1. திருவள்ளுவர், திருக்குறள், தெ.இ.சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை -1975.
  1. துரைசாமிப்பிள்ளை ஒளவை புறநானூறு மூலமும் உரையும், தெ.இ.சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை. மறுபதிப்பு – 1967.
  1. துரை.அரங்கனார் கருவிலே திருவுடையான், மீனாட்சி புத்தக நிலையம், 60, மேலக்கோபுரத் தெரு, மதுரை – 1, இரண்டாம் பதிப்பு – 1966.
  1. பரிமேலழகர் (உ.ஆ.) திருக்குறள் உரை, தெ.இ. சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை. 1975.
  1. பத்மநாயன்(உரை) விவேகசிந்தாமணி, கற்பகம் புத்தகாலயம், சென்னை. பதிப்பு – 2008.
  1. பாரதிதாசன் குடும்பவிளக்கு, பாரி நிலையம், சென்னை – 108. நான்காம் பதிப்பு – 1966.
  1. வேங்கடசாமி நாட்டார் ந.மு.(உ.ஆ.) சிலப்பதிகாரம், தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக்கழகம், சென்னை. திருத்திய இரண்டாம் பதிப்பு – ஜுலை 1999

ஆய்வறிஞர் கருத்துரை (Peer Review):

தமிழிலக்கியங்களில் விருந்தோம்பல் – ஒரு தொகுப்பாய்வு’ என்னுந்  தலைப்பில் அமைந்த இக்கட்டுரையைப் பலமுறை பயின்று கட்டுரையின் அனைத்துக் கூறுகளையும் உள்வாங்கி ‘வல்லமை’ முன்மதிப்பீட்டு விதிகளைக் முழுமையாகக் கருத்திற்கொண்டு செய்யப்படும் முன் மதிப்பீடு

  1. ஆய்வுப் பொருளின் பன்முகப் பயன்பாடு நோக்கிப், பழந்தமிழ்ப் பண்பாட்டுத் தேட்டங்களை நினைவூட்டுவதும் மீட்டுருவாக்கம் செய்வதும் அவற்றின் சிறப்புக்களை எடுத்து மொழிவதும் இன்றைய சூழலில் ஏற்றதே!
  1. ஒரே பொருண்மை பற்றித் தமிழிலக்கியப் பரப்பிலிருந்து தொகுக்கப்பட்ட கருத்துருக்களின் ஆய்விற்குத் ‘தொகுப்பாய்வு’ எனப் பெயரிட்டிருப்பது பொருத்தமே!
  1. ‘தொல்லோர் சிறப்பின் விருந்தெதிர் கோடல்’ என்னுந் தொடர், ‘நற்றமிழர் ஞாலத்தில் சேர்த்த புகழ்’ என மரபு வழியாகப் பாவேந்தரிடம் அடைக்கலம் பெற்றிருப்பதைக் கட்டுரையாளர் சுட்டுவது அவர்தம் மரபுவழி ஆய்வுச் சிந்தனையை வெளிப்படுத்துவதாய் உள்ளது.
  1. கண்ணகிக்கும் சீதைக்கும் ஏற்பட்ட துன்பங்களுள் தலையாய துன்பமாக விருந்தோம்பாத் துயரமே என்பதை ஆய்வுக் கண்ணோட்டத்துடன் கட்டுரையாளர் நிறுவுகிறார்.
  1. ‘அனிச்சப்பூவன்ன விருந்தினர்’ என்னும் உவமப் பொருளினும்  அனிச்சப்பூவினும் மென்மையானவர் விருந்தினர்’ என்னும் உறழ்ச்சிப் பொருளைப் பரிமேலழகர் உரைவழி எடுத்துக்காட்டி அது வேற்றுமையணி என நிறுவுவது கட்டுரையாளரின் இலக்கண வன்மையையும் ஆய்நெறிப் புலமையையும் ஒருசேரப் புலப்படுத்துகிறது.
  2. விருந்தோம்பும் நெறி மற்றும் உணவு வகைகள் முதலியவற்றை விவேகசிந்தாமணியிலிருந்து தொகுத்திருக்கும் கட்டுரையாளர், இளையான்குடி மாறனார் புராணத்தில் சித்தரிக்கப்படும் சிவனடியார் விருந்தோம்பலை அழகுற எடுத்தோதுகிறார்.
  3. பல இலக்கியங்களிலிருந்து தொகுத்த செய்தி மலர்களை  ‘விருந்தோம்பல்’ என்னும் மாலைக்குள் கண்ணியாக்கித் தரும் இந்த ஆய்வாளருக்குப் பாராட்டுக்கள்!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.