(Peer Reviewed) தமிழில் ஆற்றுப்படை இலக்கியம் – ஒரு வரலாற்றாய்வு

1

புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள்    
உதவிப்பேராசிரியர், மொழிகள் துறை 
பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், 
பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக்கழகம்,
வல்லம், தஞ்சை மாவட்டம் – 613403.   
மின்னஞ்சல் முகவரி-   egowrisss@gmail.com

முன்னுரை

இலக்கியம் வெற்றி பெறுவது உத்திகளால். உத்தி பலவகைப்படும். வெளிப்பாட்டு உத்தி என்பது அவற்றுள் ஒன்று. கவிஞன் தன் உள்ளத்துக் கருத்துக்களையும் கற்பனைகளையும் பலவகையாக வெளிப்படுத்த முடியும். தனக்குத்தானே சொல்லிக் கொள்வதைத் தன்னுணர்ச்சிப் பாடல்கள் என்பர். முன்னிலைப்பொருளை நோக்கி விளித்துச் சொல்கிற இலக்கியங்களும் உள. கவிதையைப் கேட்பதற்கான பொருள்களை அழைத்துப் பாடுவதும் தூது என்ற இலக்கிய வகையில் அடங்கும். ஒருவன் தன்னுடைய வாழ்வியல் அனுபவங்களை, வழிப்போக்கர்களை நோக்கிச் சொல்வதும் அக்காலத்தில் ஒரு இலக்கிய வகையாகக் கருதப்பட்டிருக்கிறது. இங்கே வழிப்போக்கர்கள் என்பது வறுமை தீர்க்கும் இடம் நோக்கிச் செல்வாரைக் குறிக்கும். ‘தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்னும் பரந்த மனப்பான்மையின் பழந்தமிழ்ச் சான்றாகத் திகழ்கின்ற இந்தக் கவிதை உத்திக்கு ‘ஆற்றுப்படை’ என்று பெயரிட்டு வழங்கியமையை அறிய முடிகிறது. இது பற்றிய சில செய்திகளை ஆராய்வதாக இக்கட்டுரை வடிவமைக்கப்பட்டுள்ளது.

கட்டுரைக் கட்டமைப்பு

இந்தக் கட்டுரை ஒரு இலக்கிய வகைமையின் உள்ளடக்கச் சுருக்கமாக  அமையாமல் அதன் தோற்றம் மற்றும் வளர்ச்சி பற்றிய வரலாற்றை ஆராய முயல்வதாக அமைகிறது. எனவே காலமுறைத் திறனாய்வு பின்பற்றப்படுகிறது. ஒவ்வொரு கால இலக்கியத்திலும் இதன் தாக்கம் எவ்வாறு அமைந்திருந்தது என்பதைப் பற்றியும் புதுக்கவிதை, ஹைக்கூ, லிமரைக், சென்ட்ரியூ முதலியன வளர்ச்சியடைந்திருக்கும் தற்காலத்தில் மரபார்ந்த இலக்கியங்களின் இரங்கத்தக்கநிலை பற்றியும் சுட்டிக் காட்டுகிறது.

ஆற்றுப்படை – ஒரு விளக்கம்

‘தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்பது பிற்காலத்திய வழக்கு. அன்றைய ஆற்றுப்படையின் அடிப்படையே அதுதான். வழி தெரியாதவனுக்கு வழி சொல்லவே மறுக்கும் அல்லது தவறான வழிகாட்டும் தற்கால அவசர உலகத்தில் ஆற்றுப்படையின் ஊடிழையான மனிதநேய மாண்பினைப் புரிந்து கொள்வது அவ்வளவு எளிமையானதன்று. குழு வாழ்க்கை நடத்திய முன்னோர்களின் வாழ்க்கைத் தடத்தில் ஆற்றுப்படுத்தல் கோடையிலே வீசிய குளிர் தென்றல்!. ‘எங்கிருந்து வருகிறாய்? என்று வறுமையாளன் கேட்கிறான். இன்னாரிடம் சென்றேன்! இவையிவை பெற்றேன்! அங்கிருந்து வருகிறேன்! அன்பனே! நீயும் செல்! அன்பனே அங்கே உனக்கு அன்பும் கிட்டும் ஆதரவும் கிடைக்கும் உனது வறுமை ஒழியும் வாழ்வு சிறக்கும்’ என்று ஒருவனை மற்றொருவன் வழிநடத்துவதே, (வழிகாட்டலே) ஆற்றுப்படையின் உள்ளடக்கமாகும்.

தொல்காப்பியமும் ஆற்றுப்படையும்

தொல்காப்பியப் பொருளதிகாரம் ‘கவிதையியல் பற்றிய இலக்கணம்’ என்னும் கருதுகோள் ஒப்புக்கொள்ளப்படுமானால், ‘ஆற்றுப்படை’என்பது இலக்கியத்தின் வெளிப்பாட்டு உத்திமுறைகளில் ஒன்று என்பதும் ஒப்புக்கொள்ளப்பட வேண்டியதொன்றாகும். ‘ஆற்றுப்படை’ இலக்கியம் அன்றைய சமுதாயத்தின் தனிமனித வறுமை நிலையையும் பிறர்நலம் பேணும் பெற்றியையும் ஒருசேரப் படம்பிடித்துக்காட்டும் இலக்கியத் தொழில்நுட்பமாகும்.

கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும்
ஆற்றிடைக் காட்சி உறழத் தோன்றிப்
பெற்ற பெருவளம் பெறாஅர்க்கு அறிவுறீஇச்
சென்றுபயன் எதிரச் சொன்ன பக்கம்

என்பது தொல்காப்பியம் காட்டும் அக்கால ஆற்றுப்படை இலக்கணம். இதனுள் ‘பெற்ற பெருவளம் பெறாஅர்க்கு’என்னும் தொடர் ஆற்றுப்படுத்துவோர்  ஆற்றுப்படுத்தப்படுவோர் ஆகியோர்தம் பொருளாதார நிலையைக் குறிப்பாகச் சுட்டுகிறது.  தற்போது பெற்றவன் முன்பு பெறாதவனாகத்தான் இருந்தான் என்பது குறிப்பு. இத்துடன், பத்துப்பாட்டில் அமைந்துள்ள ‘திருமுருகாற்றுப்படை’ முருகப்பெருமானாகிய ஒருவனே ஆற்றுப்படுத்துவோனாகவும் ஆற்றுப்படுத்தப்படுவோனாகவும் என்னும் இருநிலைப் பாத்திரமாகத் தோன்றுவதையும் கருத்திற் கொள்ளலாம். இறைவன் ஆதலின் இது சாத்தியமாயிற்று என்பதும் ஒன்று. கூத்தனைக் கூத்தன் ஆற்றுப்படுத்துவது கூத்தராற்றுப் படை என்றால் பாணனை பாணன் ஆற்றுப்படுத்துவது பாணாற்றுப்படை என்றால், முருகனை முருகன் ஆற்றுப்படுத்துதல் அல்லவா முருகாற்றுப்படை என்றாகும்? இருப்பவன் ஒருவனே! இதற்கு எப்படிப் பொருளமைதி கூற வேண்டுமெனின் இறைவனுடைய கந்தழி பெற்றான் ஒருவன் முருகனாகவே மாறிவிடுகிறான். கந்தழி பெற்றவன் பெறாதவனை முருகனிடத்தில் ஆற்றுப்படுத்துகிறான். இதுபற்றிய விரிவான விளக்கத்தைப் பேராசிரியர் துரை.அரங்கசாமி தனது ‘அன்பு நெறியே தமிழர் நெறி’ என்னும் நூலில் ஆராய்ந்துள்ளார்.

தொல்காப்பியர் காலச் செல்வாக்கு

ஆற்றுப்படை இலக்கியம் தொல்காப்பியர் காலத்துக் கூத்தராற்றுப்படை, பாணாற்றுப்படை, பொருநராற்றுப்படை, விறலியாற்றுப்படை என நான்காக இருந்தது. இலக்கிய வகைமைகளை எடுத்துக் கூறும் தொல்காப்பியர் ஏனைய இலக்கிய வகைகளைக் காட்டிலும் இந்த ஆற்றுப்படை இலக்கியத்தை விதந்தோதுகிறார். எனவே அவர் காலத்துக்கு முன்பே இவ்வகை இலக்கியம் சிறந்திருந்திருக்கலாம் என்பதை ஓரளவு அனுமானிக்க முடியும்.

இலக்கிய வரலாறு எழுத வேண்டிய முறை

பொதுவாக இலக்கிய வரலாறு எழுதுகின்ற ‘பேராசிரியர்கள்’ இலக்கியம் ஒன்றின் நதிமூலத்தைக் கண்டறிவதில்லை. அதற்கான முயற்சியும் மேற்கொள்ளப்படுவதில்லை. இலக்கியத்தின் உள்ளடக்கத்தையே அவர்கள் வரலாறு என்று கருதிவிடுவதுதான் இதற்குக் காரணம். சான்றாகத் தூது இலக்கியத்தின் வளர்ச்சி என்றால் அதன் முளை  இராமாயணத்தில் அங்கதன் தூது, பாரதத்தில் கண்ணன் தூது என்றவிடத்திலிருந்து அல்லவா தொடங்க வேண்டும்? பிறகு வரலாற்றில் தூது என்பது தொண்டைமான் இளந்திரையனிடத்தில் அதியமானுக்காக ஔவையார் சென்ற தூதும்  பிரபந்தங்களில் காணப்படும் தூதுக் கூறுகளும் ஆராயப்படல் வேண்டும். இத்தகைய தொடராய்வுக்குப் பின்பே தூது எவ்வாறு தனித்த இலக்கியமாக உருப்பெற்றது என்பது ஆராயப்படல் வேண்டும். அதுவன்றித் தூது கலிவெண்பாவில் பாடப்பெற வேண்டும் என்பதும் அது அகப்பொருள் சார்ந்து அமைய வேண்டும் என்பதும் அதன் வகைகள் இன்னின்ன எனப் பட்டியலிடுவதும் இன்னின்ன பொருளைத் தூதாக விடுக்கலாம் என்பதும் சரியான வரலாறாகவோ வரலாற்றாய்வாகவோ அமையாது.

ஆற்றுப்படை இலக்கியத்தின் தோற்றமும் கட்டமைப்பும்

ஆற்றுப்படை இலக்கியத்தைக் கலைஞர்களின் இலக்கியமாகவும் கருதலாம். காரணம் இந்த நூல்களின் நாயகர்களாக அமைந்தவர்கள் கலைஞர்களே. மன்னன் பாட்டுடைத் தலைவனாக இருந்தாலும் அவனைப் பற்றிய அத்தனைச் செய்திகளையும் பரிசில் பெற்றுவரும் இரவலனே எடுத்துக் கூறுகிறான். அதாவது மன்னர்களின் திருவோலக்கத்தில் குழுவாக அமர்ந்து பாடப்பெற்ற மன்னன் பெருமை நாட்டின் சாதாரண வறுமை நீங்கப் பெற்ற இரவலனால் பாடப்பெற்றது. சுருங்கச் சொன்னால் புரவலன் பெருமையை இரவலன் பாடினான். இரவலர்கள் அனைவரும் இசை வல்லுநர்கள். ஆற்றுப்படை இலக்கியத்தின் வளர்ச்சிக்கு இவர்களே காரணம்.  மொழிக்கு முன்னே தோன்றியது இசை என்பதும் இசையிலிருந்தே மொழி தோன்றியிருக்க வேண்டும் என்பதும் மொழியியலார் கருத்து. எனவே மொழியும் மொழியில் தோன்றிய பாடல்களும் தொடக்கத்தில் இசையாகவே இருந்திருக்க வேண்டும். இசையாகவே பாடப்பெற்றவையாதலின் இவை நாட்டுப் பாடல்களைப்போலப் பெரும்பாலும் வாய்மொழி இலக்கியங்களாகத்தான் தோன்றியிருக்க வேண்டும்.

பழுமரம் தேடும் பறவையினராய் எங்கோ ஒரு மன்னனிடம் சென்று அவனைப் புகழ்ந்து பாடிய இரவலர்கள் தாம் பரிசில் பெற்ற வரலாற்றின் வாய்மொழி வடிவமே ஆற்றுப்படை எனலாம்.

அவ்வப்பொழுது மன்னன் முன்னிலையில் பாடப்பெற்ற பாடல்கள் தங்களைப் போன்றோரும் தம்மைப் போன்றே பரிசில் பெற வேண்டும் என்னும் வேட்கையின் வெளிப்பாடே இதன் அடுத்த நிலையாகக் கருதப்படலாம்.

இதன் தொடர்ச்சியாகத் தான் பரிசில் பெற்ற மன்னனின் திருவோலக்கத்தை அடைவதற்கான வழிமுறைகளை எடுத்துக்கூறுவதாக வளர்ச்சியடைந்திருக்க வேண்டும்.

பாணர்கள் கையிலிருந்துப் புலவர்களுக்கு மாறிய ஆற்றுப்படை

ஒப்பாரிக்கு யாப்பிலக்கணம் கிடையாது. காரணம் அது மக்கள் வழக்கு. அவலத்தின் ஆற்றல் கூறுவது. அடர்த்தி வெளிப்படுவது. ஆனால் இந்த ஒப்பாரி திரைப்படத்தில் இடம்பெறுகிறபோது திரையிசைப் பாடலாசிரியர் கையில் வந்துவிடுகிறது. அந்த நிலையில் அது தனித்தன்மை பெறுகிறது. அந்தத் தனித்தன்மை முந்தைய பாமர வழக்கினின்றும் சிறந்துமிருக்கலாம். சிறவாமலும் அமையலாம். தூது இலக்கியமும் அவ்வாறே. கலிவெண்பாவில் பாடப்பெற வேண்டிய தூதிலக்கியம் தற்காலத்தில் எல்லா யாப்பு வகையிலும் பாடப்பெறுகிறது என்பதையும் திரையிசைப்பாடல்களில் இசையமைப்பாளரின் இசைக்கேற்ற வகையில் பாடப்பெறுகின்றன என்பதையும் கருத்திற் கொள்ள வேண்டியதிருக்கிறது. ஆற்றுப்படை இலக்கியமும் அதுபோன்றதுதான். தொழில்முறைப் பாணர்களிடமிருந்து அதாவது இசைக்கலைஞர்கள் கையில் தவழ்ந்த ஆற்றுப்படைப்பாட்டு தமிழ்ப் பாநெறி அறிந்த புலவர்கள் கையில் வந்தபோது பல மாற்றங்களை அடைந்தது. அவ்வாறு அடைந்த மாற்றங்களுள் ஆற்றுப்படைப் பாடப்படும் பாவகையும் முறையும் மிகவும் கவனிக்கத்தக்க ஒன்றாகக் கருதப்படுகிறது.

ஆசிரியப்பாவில் பாடப்பெறும் ஆற்றுப்படை

இரவலர்கள் கையிலிருந்த ஆற்றுப்படை இலக்கியம் புலவர்கள் கையில் வந்தபோது அடைந்த மாற்றங்களில் பாவகை தலையாயது என்பது சென்ற பத்தியில் உணர்த்தப்பட்டது. பாணர்களுக்கு இசை தெரியும். புலவர்களுடைய பாடல்களில் பொருள் நயத்தை உணர முடியும். அந்தப் பாடல்களில் இசை பற்றிய குறிப்புக்கள் இருக்கலாமே தவிர இசையே பாடலாக அமையவில்லை. பெரும்பாலும் ஆசிரிய உரிச்சீர்கள் பயின்று வருவதால் ஆசிரியப்பா என்பாரும் உளர். உண்மையில் உரைநடைக்கு அடுத்த பாநிலையின் தொடக்கமாக அமைந்ததாலும் பெரும்பாலான ஆசிரியர்கள் பயன்படுத்தியதாலும் அதற்கு அப்பெயர் வந்திருக்கக் கூடும். ஆசிரியர் என்பதற்குப் புலவர் என்பதும் ஒரு வழக்கு. ‘ஆசிரியர் நக்கீரர்’ என்பது காண்க. இவ்வாறு இசைவாணர்களுக்கான ஆற்றுப்படை இலக்கியம் புலவர்கள் கைக்குத் தொல்காப்பியத்துக்கு முற்பட்ட நிலையிலேயே வந்திருக்க வேண்டும். பின்னாலே வந்த புலவர் பெருமக்கள் தாம் பாடிய ஆற்றுப்படைத் துறையில் தமக்கு முன்னோர்களாகிய பாணர்களை ஒரு பாத்திரமாக இடமளித்துப் பெருமைப்படுத்தினர் எனலாம். புலவர்களது கற்பனைத்திறன், வரலாற்றறிவு, இயற்கை ஈடுபாடு ஆகியனவற்றுக்கெல்லாம் ஆற்றுப்படை இலக்கியம் இலக்கியத் தளமானது,. களமானது என்றால் அது மிகையில்லை.

சங்க இலக்கியங்களில் ஆற்றுப்படை

‘ஆற்றுப்படை’என்பது தமிழிலக்கியத்தின் புறத்துறைகளில் ஒன்றாகக் கருதப்பட்டது என்பதற்கான சான்றுகள் சங்க இலக்கியங்களில் காணக்கிடக்கின்றன.  புறநானூற்றில் ‘பாணாற்றுப்படை’என்ற வகையில் (68, 69, 70, 138, 141, 155, 180) சில பாடல்களும், ‘விறலியாற்றுப்படை’என்னும் வகையில் (64, 103, 105, 133) சில பாடல்களும் ‘புலவராற்றுப்படை’என்னும் வகையில் (48) ஒருபாடலும் கிடைத்துள்ளன. பதிற்றுப்பத்திலும் ‘பாணாற்றுப்படை’, ‘விறலியாற்றுப்படை’ என்னும் வகையில் பல ஆற்றுப்படைப் பகுதிகள் உண்டு. ‘தொல்காப்பியர் காலத்தில் நான்காக இருந்த ஆற்றுப்படை வகைகள் சங்கக்காலத்தில் ஐந்தாக வளரச்சியடைந்தது. கூத்தரும், பாணரும், பொருநரும், விறலியும் என்பாருடன் புலவர்களும் ஆற்றுப்படுத்தியதாகப் புறநானூற்றில் குறிப்பு உண்டு. புலவர்களும் பரிசிலராதலால் பரிசு பெறத்தக்க புலவர்களைத் தாம் பரிசில் பெற்ற மன்னர்களிடத்தில் ஆற்றுப்படுத்தியிருக்கலாம். பத்துப்பாட்டில் முதுற்பாட்டாக அமைந்த திருமுருகாற்றுப்படை ஏனைய ஆற்றுப்படை அமைப்பிலிருந்து சற்று வேறுபட்டு அமைந்திருப்பது முன்னரே சுட்டப்பெற்றது.

இறைவனிடம் புலவர்களை ஆற்றுப்படுத்தியதாக அமைக்கப்பட்ட புது வண்ண ஆற்றுப்படைகளை அடியொட்டிப் பிற்கால இலக்கண நூல்கள் அவற்றுக்கு இலக்கணத்தை வரையறை செய்த முறையையும் வரலாற்றில் காணமுடிகிறது.

இருங்கண் வானத்து இமையோர் உழைப்
பெரும்புலவன் ஆற்றுப்படுத்தன்று

எனப் புறப்பொருள் வெண்பா மாலையும்,

“புலவ ராற்றுப்படை புத்தேட்கும் உரித்தே”

எனப் பன்னிரு பாட்டியலும் இலக்கணம் வகுத்திருப்பதை அறிய முடிகிறது. பாணாற்றுப்படை என்னும் ‘ஒருபெயர்’ வழக்கே, சிறுபாணாற்றுப்படை பெரும்பாணாற்றுப்படை என ‘இருபெயர்’ வழக்காக வகைப்பட்டது. சீறியாழை வைத்திருப்பவன் சிறுபாணன் எனவும் பேரியாழை வைத்திருப்பவன் பெரும்பாணன் எனவும் பிரித்துணரப்பட்டனர்.

பாணாற்றுப்படை ஒரு விளக்கம்

பாணாற்றுப்படைகளில் ஒன்றான சிறுபாணாற்றுப்படை என்னும் இலக்கியம் பத்துப்பாட்டுள் ஒன்றாகக் கோக்கப்பட்டுள்ளது. இது நல்லியக்கோடனைப் பாட்டுடைத்தலைவனாகக் கொண்டு இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் என்னும் சான்றோரால் பாடப்பெற்றது. தொண்டைமான் இளந்திரையனைப் பாட்டுடைத்தலைவனாகக் கொண்டு கடியலூர் உருத்திரங்கண்ணனார் என்னும் சான்றோரால் பாடப்பெற்ற பெரும்பாணாற்றுப்படையும் பத்துப் பாட்டுள் அமைந்துள்ளது.

பொதுவாகப் பெரும்பாணாற்றுப்படைத் துறையில் புறநானூற்றில் முன்பே குறிப்பிட்டுள்ளபடி ஏழு பாடல்களும் பதிற்றுப்பத்தில் ஒன்றுமாக அமைந்துள்ளது.

விறலியாற்றுப்படை என்னும் பெயரால் ஏனைய ஆற்றுப்படை நூல்களைப் போல் தனிநெடும் பாட்டு கிட்டவில்லையெனினும் தொகை நூல்களில் மிகுதியாகக் காணப்படுவன இத்துறை சார்ந்த பாடல்களே. புறநானூற்றில் நான்கும் பதிற்றுப்பத்தில் ஐந்துமாகக் கூடுதல் ஒன்பது பாடல்கள் இத்துறையில் கிட்டியுள்ளன.

ஏனைய தொகுதிகளில் காணப்படாத பொருநராற்றுப்படையும் கூத்தராற்றுப்படையும் பத்துப்பாட்டில் மட்டுமே கோக்கப்பட்டுள்ளன. கூத்தராற்றுப்படைக்கு ‘மலைபடு கடாஅம்’ என்னும் பெயர் வழக்குமுண்டு. நன்னனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு பெருங்குன்றூர் கௌசிகனார் கூத்தராற்றுப்படையைப் பாட, பெண்பாற்புலவர் எனக் கருதப்படும் முடத்தாமக் கண்ணியார் கரிகால் பெருவளத்தானைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு பொருநராற்றுப்படையைப் பாடியிருக்கிறார்.

இவ்வாறு தனிப்பெருந்துறையாக ஆற்றுப்படைத் துறை விளங்கியிருக்கிறது. தொல்காப்பியம் வாழ்வியல் நூல் என்னும் கருத்தியலிலிருந்து விலகி மாபெரும் இலக்கியவியல் அல்லது பாவியல் நூல் என்பதற்கு இதுவும் ஒரு வலுவான சான்றாகும். தனிநெடும் பாடல்களாகப் பத்துப்பாட்டுள் அமைந்த இவ்வாற்றுப்படைத்துறை சிறுகுறு பாடல்களுக்கான துறையாகத் தொகை நூல்களில் அமைந்திருக்கின்றது என்பது நோக்கத்தக்கது.

ஆற்றுப்படையின் பிற்கால வளர்ச்சி

சங்க இலக்கியத்தில் காணப்படும் ஆற்றுப்படைப் பாடல்களை மையமாகக் கொண்டு பன்னிரண்டாம் நூற்றாண்டில் தோன்றிய ‘பன்னிரு பாட்டியல்’ என்னும் இலக்கண நூல் ஆற்றுப்படைக்கு இலக்கணம் கூறியிருக்கிறது. தமிழைப் பொருத்தவரையில் இலக்கிய வளர்ச்சி என்பது மொழியின் எளிமையாகவே கருதப்பட்டிருக்கிறது. சங்க இலக்கியத் தொகுப்புக்களின் மொழிநடையும் அவற்றைத் தொடர்ந்து இலக்கியங்களின் மொழிநடையும் இலக்கியத்தின் ஏனைய கூறுகளில் சிறந்து விளங்கினாலும் மொழிநடையைப் பொருத்தவரையில் எளிமையே அரசாண்டது. இது நீர்த்துப் போகும் அளவுக்கு இன்றைக்கு நிலைமை இருக்கிறது.

ஆற்றுப்படை இலக்கியங்களின் வளர்ச்சிநிலையைப் பொருத்தவரையில் திருஞான சம்பந்தப் பெருமான் பாடிய கோடிக்கரை ஆற்றுப்படை குறிப்பிடத்தக்கது. பதினெட்டாம் நூற்றாண்டில் தோன்றிய கச்சியப்ப முனிவரால் இயற்றப்பட்ட திருத்தணிகையாற்றுப்படையும் ஆசிரியர் பெயர் தெரியாத திருப்பாணாற்றுப்படையும் இலக்கிய வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளன. சில பத்திகளுக்கு முன்னர் கூறியவாறு சங்க இலக்கியங்களில் காணப்படும் புலவராற்றுப்படை பதினேழாம் நூற்றாண்டுவரை தொடர்ந்துள்ளது. திருமேனி இரத்தினக் கவிராயர் என்பார் எழுதிய புலவராற்றுப்படை இந்த நிரலில் வரும். இடைக்கால இலக்கியங்களில் ஏகம்பவாணன் ஆற்றுப்படையும் அருணகிரிநாதர் எழுதிய மற்றொரு திருமுருகாற்றுப்படையும் சிந்திக்கத்தக்கன.

ஆற்றுப்படை இலக்கியப் படைப்பில் இஸ்லாமியர்

குலாம் காதிர் நாவலர் என்பாரால் எழுதப்பட்ட ‘புலவராற்றுப்படை’ கவனத்தைக் கவர்கின்றதொரு ஆற்றுப்படையாகும். இது மதுரைத் தமிழ்ச் சங்கத்தலைவர் பாண்டித்துரைத் தேவரிடம் புலவர் ஒருவரை ஆற்றுப்படுத்துவதாக அமைந்துள்ளது. பெரும்பாலான ஆற்றுப்படை நூல்களில் இரவலர்களும் புலவர்களும் நடந்து சென்று பாட்டுடைத் தலைவனைக் காண்பதைத்தான் கண்டிருக்கிறோம். இந்த ஆற்றுப்படையில் ஆற்றுப்படுத்தப்படுகிறவன் புகைவண்டியில் செல்வதாக அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பரிசில் பொருளாகக் கைக்கடியாரத்தைப் பெற்றதாகவும் பாடப்பெற்றுள்ளது. சொற்பொழிவாற்றுப்படை, காதலியாற்றுப்படை, மாணாக்கர் ஆற்றுப்படை, ஆசானாற்றுப்படை, செந்தமிழ்ச் செல்வியாற்றுப்படை எனப் பல்வகையாக ஆற்றுப்படைகள் தோன்றியிருக்கின்றன.

ஆற்றுப்படை ஒரு பண்பாட்டுக் கருவூலம்

“பசித்தவனுக்கு உணவை வழங்குவதை விட, அதை உருவாக்கிக் கொள்ளும் வழியை அவனுக்குச் சொல்லிக் கொடுப்பதே சிறந்த அறம்” என்பது மேல்நாட்டுப் பொன்மொழி. இன்றைய நடப்பியலின் எதிர்மறைப் போக்கினைச் சிந்தித்தால் அன்றைய ஆற்றுப்படை இலக்கியம் ஒரு பண்பாட்டு இலக்கியம் என்பதை அறிந்து கொள்ள முடியும். தான் தேடிய செல்வத்தைத் தானே துய்ப்பதும் துய்க்க இயலாக் காலத்து மாண்டு போவதும் தேடிய செல்வம் வீணாவதும் நிகழ்கால நடப்பியல். ஆனால் தனக்குப் பரிசளித்தவனின் முழு முகவரியைக் கூறி அந்த முகவரிக்குச் செல்லும் தடத்தினைச் சிறிதும் வழுவில்லாமல் எடுத்துரைத்து ‘இன்ன பரிசில் யான்பெற்றேன் எனப் ‘பெற்ற பெருவளத்தை’ மறைக்காமல் காட்டி மற்றொருவனையும் வாழச்செய்யும்’ மனநிலையின் மொழிவழி வெளிப்பாடே ஆற்றுப்படை இலக்கியத்தின் சாரமாகும். சங்க காலத்துக் கலைஞர்களின் பண்பாட்டையும் வாழ்வையும், அவர்களை ஆதரித்துக் கலை வளர்த்த புரவலர்களின் ஈர உள்ளத்தையும், வீர நெஞ்சத்தையும் ஆற்றுப்படைகள் இலக்கிய ஓவியங்களாகக் காட்டி நிற்கின்றன. ‘கொடுப்பதூஉம் அழுக்கறுப்பார்கள்’ நிறைந்த உலகில் கொடுப்பவன் இருக்கும் இடத்திற்கு வழிகாட்டும் இரவலர்கள் புரவலர்களினும் உயர்ந்தவர்களாகவே கருதப்படுவர்.

இருபதாம் நூற்றாண்டில் ஆற்றுப்படை இலக்கியம்

தமிழிலக்கிய வரலாற்றில் சங்ககாலத்திற்குப் பின் ஏனைய இலக்கிய மரபுகள்  உருவத்தாலும் உள்ளடக்கத்தாலும் தொடர்ந்து வந்திருப்பினும், ஆற்றுப்படை இலக்கியம் மட்டும் அத்தகைய தொடர்ச்சியைப் பெற்று வந்ததற்கான அடையாளத்தைக் காண இயலவில்லை. சங்க இலக்கியங்களுக்குப் பிறகு மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவை இருபதாம் நூற்றாண்டில்தான் தோன்றினவோ என எண்ணுமாறே வரலாறு அமைந்துள்ளது.

  1. திருச்சியைச் சார்ந்த அமிர்தம் சுந்தரநாதபிள்ளை எழுதிய ‘புலவராற்றுப்படை’
  2. மேலூர் பி.கே. சீனிவாச ஆச்சார்யா எழுதிய ‘மன்பதை ஆற்றுப்படை’
  3. தஞ்சை பழநிவேல் பிள்ளை எழுதிய ‘வரமுருகாற்றுப்படை’
  4. திம்மப்ப அந்தணர் எழுதிய ‘ஞானியார் ஆற்றுப்படை’
  5. இராமகோவிந்தசாமிப் பிள்ளை எழுதிய ‘ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாச்சார்யா ஆற்றுப்படை’
  6. பி.எம் வேணுகோபால் எழுதிய ‘வடஅரங்க ஆற்றுப்படை’
  7. டி.எஸ்.சீனிவாசஆச்சார்யா எழுதிய ‘நமசிவாய மூர்த்தி ஆற்றுப்படை’
  8. வே.ரா. தெய்வசிகாமணி எழுதிய ‘சென்னிமலை முருகன் ஆற்றுப்படை’

முதலிய ஆற்றுப்படை நூல்கள் இந்த நூற்றாண்டில் தோன்றியவற்றுள் சிலவாகலாம்.

ஆற்றுப்படை இலக்கியங்களும் அ.கி.பரந்தாமனாரும்

தமிழில் ஆற்றுப்படை இலக்கிய வடிவத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவர் பேராசிரியர் அ.கி.பரந்தாமனார் ஆவார். அவரெழுதிய ஆற்றுப்படை நூல்கள்,

  1. 1926 இல் எழுதிய ‘தமிழ் மகள் ஆற்றுப்படை’ (189 வரிகள்)
  2. 1943 இல் எழுதிய ‘திருத்தொண்டர் ஆற்றுப்படை’ (297 வரிகள்)
  3. 1958 இல் எழுதிய ‘அன்னை இயற்கை ஆற்றுப்படை’ (303 வரிகள்)

மேற்கண்ட ஆற்றுப்படைகளுள் ‘திருத்தொண்டர் ஆற்றுப்படை’ புதியதொரு சிந்தனையை உள்ளடக்கியது. ‘திருத்தொண்டர்’’ என்னும் திருநாமம் சைவ அடியவர்களுக்கே உரியது. அதனைத் தமிழ்த்தென்றல் திரு.வி.க. அவர்களுக்குரியதாக்கி, அவர்பால் ஆற்றுப்படுத்துவதாக அமைந்தது இது. திரு.வி.க.விடம் கல்வி பயின்றுப் பொதுவாழ்வு நெறியைக் கற்றுக் கொண்ட ஒருவர் மற்றொருவரை நோக்கி, அத்தகைய பண்புநலன்களைப் பெற்றுப் பொதுத்தொண்டு செய்யுமாறு ஆற்றுப்படுத்துவது  இதன் உள்ளடக்கமாகும்.

இருபதாம் நூற்றாண்டு ஆற்றுப்படை இலக்கியங்களில் மரபும் புதுமையும் 

இருபதாம் நூற்றாண்டு ஆற்றுப்படை நூல்கள் பெரும்பாலும் ‘யாப்புத் தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்பட்ட செயற்கைச் ‘செய்யுள் தளவாடங்களாகவே’ தோன்றுகின்றன. ‘கலம்பகம் பார்த்தொரு கலம்பகம்’, ‘அந்தாதி பார்த்தொரு அந்தாதி’என்னும் பாவேந்தரின் கூற்றை உறுதி செய்வனவாக அவை அமைந்துள்ளன. இருப்பினும், பத்துப்பாட்டுள் செம்பாதியாய் நின்று ‘உமாமகேசுவரராகத்’தோன்றும் இவ்வாற்றுப்படை இலக்கியங்களுள், உருவத்தால் மரபுசார்ந்தும் உணர்ச்சி — உள்ளடக்கம் ஆகியவற்றால் புதுமை சார்ந்தும் கற்பனை நயம் சார்ந்தும் கருத்துக்களின் பெட்டகமாகத் திகழ்கின்ற படைப்புக்களும் உண்டு.

  1. ‘மாணவர் ஆற்றுப்படை’என்பது பேராசிரியர் டாக்டர் சி. இலக்குவனார்அவர்களால் புதுக்கோட்டைக் கல்விச் செல்வரும் வள்ளலுமான பி.ஏ. சுப்பிரமணியபிள்ளை அவர்களைப் பற்றி, 1959ஆம் ஆண்டு 190 வரிகள்  கொண்டதொரு நூலாக எழுதப்பட்டது.
  1. கரந்தைக் கவியரசு வேங்கடாசலம் பிள்ளை தன்னுடைய ஆசிரியரும் பீட்டர்ஸ் உயர்நிலைப்பள்ளி தமிழாசிரியருமான ஆ.சுப்பிரமணிய அய்யர் அவர்களிடம் தம் நெஞ்சை ஆற்றுப்படுத்துவதாகப் பாடியது ‘ஆசான் ஆற்றுப்படை’ நூலாகும்.

ஆற்றுப்படைகளின் பாடுபொருள்கள் பல்வகையாக அமைந்திருப்பினும், மேற்சுட்டியனபோலக் கல்வி தொடர்பான ஆற்றுப்படைகள் எண்ணிக்கையிலும் தரத்திலும் தனித்தும் சிறந்தும் விளங்குகின்றன. அறியாமையாகிய இருட்டை விலக்குவதிலும் குருவணக்கத்திலும் கவிஞர்களுக்குள்ள ஆர்வத்தையும் மனப்பான்மையையும் இவை வெளிப்படுத்துவதாகக் கொள்ள முடியும். ‘மாணவர் ஆற்றுப்படை’ என்றும் ‘மாணாக்கர் ஆற்றுப்படை’ என்றும் ‘ஆசான் ஆற்றுப்படை’ என்றும் அவை தாங்கியுள்ள பெயர்களே அவற்றின் பொருண்மையை விளக்கப் போதுமானவையாக உள்ளன.

கடவூர் மணிமாறனின் மாணாக்கர் ஆற்றுப்படையின் தனித்தன்மை

மரபுசார்ந்த வடிவங்களோ, சொல்லாட்சிகளோ புதியன தோன்றுவதற்குத் தடையாக இருப்பதில்லை. உத்தியால் மரபுசார்ந்தும் பாடுபொருளாலும் கற்பனையாலும் புதுமை கூட்டியும் அமைந்துவிடுமானால் எந்தவொரு படைப்பிலக்கியத்திற்கும் தனித்தன்மை தானாகவே அமைந்துவிடும். பாவேந்தர் பாரதிதாசனின் பெரும்பாலான படைப்புக்கள் இவ்வாறு அமைந்தனவே. கவிஞர் கடவூர் மணிமாறன் படைத்திருக்கும் மாணாக்கர் ஆற்றுப்படையும் இதற்கோர் எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது.  கல்வி சார்ந்த பொருண்மைகள் ஆற்றுப்படை நூல்களின் உள்ளடக்கமாக அமைந்ததற்குச் சமுதாய வரலாறு சார்ந்த மற்றொரு காரணமும் உள்ளது. பொதுவாக இந்தியாவில் சிறப்பாகத் தமிழகத்தில் கல்வியின் பெருமை உணரப்பட்டதும் அதற்கான உரிமை பெற்றதும் இருபதாம் நூற்றாண்டில்தான். அனைவருக்கும் கல்வி என்பதே இருபதாம் நூற்றாண்டில் தமிழகத்தில் அமைந்த எந்த அரசுக்கும் கொள்கையாக அமைந்தது. படைப்பாளர்களும் கவிஞர்களும் சமுதாயத்தின் இந்தத் தேவையைத் தங்கள் படைப்பாற்றல் மூலம் வெளிப்படுத்தினார்கள் என்பதுதான் உண்மையாகும்.

பரிசில் பெற்ற ஒருவர் பெறாத ஒருவரைக் குறிப்பிட்டதொரு வள்ளலை நோக்கி ஆற்றுப்படுத்துவதே ஆற்றுப்படையின் பொதுவிலக்கணம். அதாவது அவ்விருவரும் ‘வளத்தைப் பெற்றதையும் பெறாததையும் தவிர’வேறு எல்லா வகையினும் ஒரே தன்மையினராய் இருப்பர். இவ்வடிப்படையில் நோக்கினால், ‘மாணாக்கர் ஆற்றுப்படை’ மாணவர் ஒருவர் மற்றொரு மாணவரை ஆற்றுப்படுத்துவதாக அமைந்திருத்தல் வேண்டும். அவ்வாறின்றி, ஆசிரியர் ஒருவர் மாணவர்களை ஆற்றுப்படுத்துமாறு அமைத்துக் காட்டியது ஆற்றுப்படை இலக்கணப் பொருண்மையை இன்னும் விரிவுபடுத்தியதாகக் கருதமுடியும்.

ஆக்கம் நாடி அரும்பயன் தேடும்
நோக்கம் மிகுந்தோர் ஒருங்கக் கூடுமின்!”

என்னும் வரிகளால் மணிமாறனின் மாணாக்கார் ஆற்றுப்படையின் தனித்தன்மையைக் கீழ்க்கண்டவாறு வரையறுக்க முடிகிறது.

  1. ஆற்றுப்படுத்தும் ஆசிரியர் ஒருவராகவும் ஆற்றுப்படுத்தப்படும் மாணவர்கள் பலராகவும் இருப்பது
  2. ஆற்றுப்படுத்தப்படும் இடம், பாட்டுடைத்தலைவனின் திருவோலக்கத்திற்குப் பதிலாகக் கல்வி நல்கும் பள்ளியாக இருப்பது.
  3. கல்விக்காக வேற்றிடம் சென்று அல்லற்பட வேண்டாமென்று அறிவுறுத்துவது.

மேற்கண்ட மூன்று கூறுகளால் மணிமாறனின் மாணாக்கர் ஆற்றுப்படை, ஏனைய ஆற்றுப்படைகளினின்றும் தனித்தும் சிறந்தும் விளங்குகிறது.

பின்னத்தூராரின் ஒருவரும் மணிமாறனின் பலரும்

இருபதாம் நூற்றாண்டின் முதல் ஆற்றுப்படை நூல் கும்பகோணம் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராகப் பணிபுரிந்த பின்னத்தூர் நாராயணசாமி அய்யரால் எழுதப்பட்டது. ‘மாணாக்கர் ஆற்றுப்படை’என்னும் பெயரால் 1900ஆம் ஆண்டு எழுதப்பட்ட இந்நூல் 335 வரிகளைக் கொண்டுள்ளது. நகராட்சிப் பள்ளியில் படித்து நன்னிலையில் உள்ள ஒருவர் கற்பதற்கு வசதியற்ற ஒரு மாணவனை, அப்பள்ளிக்கு ஆற்றுப்படுத்துவதாக அமைந்துள்ளது. இதனுள் தனிமனிதரிடம் ஆற்றுப்படுத்தும் தொல்காப்பிய மரபு புதுவடிவம் பெற்று, ஒரு நிலையத்தை நோக்கி ஆற்றுப்படுத்துவதாக அமைந்துள்ள புதுமைப் போக்கு நோக்கத்தக்கது. பின்னத்தூராரின் ஆற்றுப்படை உட்பட, ஆற்றுப்படை நூல்கள் அனைத்தும் ஒருவர் மற்றொருவரை ஆற்றுப்படுத்துவதாக அமைய, கடவூர் மணிமாறனின் மாணாக்கர் ஆற்றுப்படை, ஒருவர் பலரை ஆற்றுப்படுத்துவதாக அமைந்திருக்கிறது. கல்விப்பணியில் ஆசிரியர் ஒருவராகவும் மாணவர் பலராகவும் அமைந்துவிடுவது இயல்பாதலின், இத்தகைய அமைப்பு ஆற்றொழுக்கான உணர்ச்சி வெளிப்பாட்டுக்குத் துணையாகிவிடுவதைக் காணமுடிகிறது.

திணைச்சிறப்பும் துறையமைதியும்

புறத்திணைகளில் பாடாணும் காஞ்சியும் தனித்துவம் மிக்கன. நிலையாமையை எடுத்துக் கூறி அறத்தை முன்னிறுத்துவது காஞ்சியெனின், மனிதனின் விழுமியங்களை எடுத்துக்கூறி வீரத்தினும் அவை சிறந்தன என்னும் உண்மையை எடுத்துக் கூறுவது பாடாணாகும். அதாவது பாடாண் திணை என்பது மனிதனின் தலைமைப் பண்புகளாகிய அறிவு, ஆற்றல், தன்னலமறுப்பு, ஈகை, அன்பு, அருள் முதலிய பண்புகளைப் பாடுகின்ற திணை. மேற்கண்ட தனித்த இலக்கிய வரலாற்றை உள்ளடக்கிய ஆற்றுப்படை இலக்கியத்தின் கட்டமைப்பை ஓர் இலக்கியச் சான்று கொண்டு விளக்கி இக்கட்டுரை நிறைவு பெறுகிறது.

பாடாண்திணை, புலவராற்றுப்படைத் துறையில் பொய்கையார் பாடியதாக ஒரு பாட்டு புறநானூற்றில் காணப்படுகிறது. இந்தப் பாட்டில் இன்னின்ன வளமுடையது எம்மூர். அவ்வூரை ஆள்கிறவன் இவன் எம் மன்னன். அவனிடம் சென்று பரிசு பெறுகிறபோது வழிகாட்டிய என்னை மறந்துவிடாதே’ எனச் சொல்வது போல் அமைத்திருக்கிறது. .

நாட்டுவளத்தைக் குறிப்பாக வண்ணனைச் செய்கிறார் புலவர். வளமில்லாதவன் வள்ளலாகத் திகழ்வது இயலாது ஆதலின் அது முதலில் கூறப்படுகிறது. மலர்களை வைத்து வளத்தைக் கூறுகிறார் பொய்கையார். கோதையாகிய சேரனைக் கோதையாகிய பெண்கள் தழுவுகிறார்கள். அவ்வாறு தழுவுகிற பெண்களைக் கோதைகள் (மாலைகள்) தழுவுகின்றன.

கோதை மார்பிற் கோதை யானும்
கோதையைப் புணர்ந்தோர் கோதையானும்

என்று கோதை என்ற சொல்லைச் சேரனுக்கும் மங்கையர்க்கும் மலர்களுக்கும் ஆக்கிப் பாடுகிறார். கரிய கழிகளில் பூத்த நெய்தல் மலர்களாலும் தேன் நாறுகின்ற தொண்டி என்பார்.

மாக்கழி மலர்ந்த நெய்த லானும்
கள் நாறும்மே கானலந் தொண்டி

என்று பாடுகிறார். கோதை ஆள்கிற சிறப்பும், அவனைத் தழுவுகிற மாதர்ச் சிறப்பும், மாதரைத் தழுவுகிற மாலையின் சிறப்பும், கழியில் மலர்ந்த நெய்தல் சிறப்பும் வழிகாட்டுகிற பொய்கையாருக்குத் தற்போது சேய்மையாதலின் அந்த ஊர்தான் தன்னுடைய ஊர் என்று புலவரிடம் கூறுகிறாராம்.

அஃது எம் ஊரே!’

என்பது புலவர் மொழி!. ‘அந்த ஊரைத் தலைநகராகக் கொண்டு ஆளுகிற கோதை மார்பன் தன்னுடைய அரசன்’ என்பதை,

அவன் எம் இறைவன்!’

எனப் பாடுகிறார். இந்த இடத்தில் மன்னன் என்னாது இறைவன் எனப் புலவர் சொல்லியதற்கு ஒரு காரணம் உண்டு. அரசநீதி செலுத்துகிற இடத்தில்தான் அவன் மன்னன் அல்லது அரசன். புரவலனாக மாறிப் புலவர்களுக்கு உதவுகிறபோது அவன் இறைவன் என்பது குறிப்பு. ‘எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்’ என்பது நோக்குக.

‘அன்னோன் படர்தி’

என்று முன்னிலையில் ஆற்றுப்படுத்துகிறான். ஒருவேளை இரவலனுக்கு விருப்பமில்லாவிடின், என்ன செய்வது? ‘படர்தியாயின்’ என்னும் ஐயக்கிளவியால் ‘சென்றால் பெறலாம்’ என்பதோடு நிறுத்திக் கொள்கிறான்.

எம்மும் உள்ளுமோ முதுவாய் இரவல!
 அமர் மேம்படூஉங் காலை நின்
புகழ் மேம்படுநனைக் கண்டனம் எனவே!”

என்னும் இறுதி வரிகளில் “புலவரே! அவனைக் கண்டால் காணுமிடத்து போர்க்களத்தில் நீ அடைந்த மேம்பாட்டைப் பாடி நின் புகழை மேம்படுத்தியவனைக் கண்டேன்” என்று என்னையும் நினைப்பாயாக” என்று பொய்கையார் பாடுகிறார்.

கோதை மார்பிற் கோதை யானும்
கோதையைப் புணர்ந்தோர் கோதையானும்
மாக்கழி மலர்ந்த நெய்த லானும்
கள் நாறும்மே கானலந் தொண்டி
அஃது எம் ஊரே! அவன் எம் இறைவன்!
அன்னோர் படர்தி யாயின் நீயும்
எம்மும் உள்ளுமோ முதுவாய் இரவல!
அமர் மேம்படூஉங் காலை நின்
புகழ் மேம்படுநனைக் கண்டனம் எனவே!” (புறம். 68)

ஆற்றுப்படுத்தப்பட்ட மன்னனின் வரலாறு மருட்சியை ஏற்படுத்துகிறது.    கோதை மார்பன் என்பவன் சேர மன்னருள் ஒருவன். இவனுக்கும் மதுரையிலிருந்து ஆட்சிபுரிந்த பழையன்மாறன் என்பவனுக்கும் பகைமை இருந்தது. கிள்ளிவளவன் என்ற சோழ மன்னன் பழையன் மாறன் என்பவனைப் போரில் வென்றான். அதாவது சேரனுக்கும் பாண்டியனுக்கும் பகையாம். ஆனால் சோழன் பாண்டியனை வெல்கிறானாம். அதனால் சேரன் மகிழ்ந்தானாம்.

நெடுந் தேர்,
இழை அணி யானைப் பழையன் மாறன்,
மாட மலி மறுகின் கூடல் ஆங்கண்,
வெள்ளத் தானையொடு வேறு புலத்து இறுத்த
கிள்ளி வளவன் நல் அமர் சாஅய்,
கடும் பரிப் புரவியொடு களிறு பல வவ்வி,
ஏதில் மன்னர் ஊர் கொள,
கோதை மார்பன் உவகையின் பெரிதே. (அகநானூறு 345)

தமிழன் ஒற்றுமை எவ்வளவு உயர்ந்ததாகப் பாடப்படுகிறது பார்த்தீர்களா????? ‘‘பாண்டியன் ஏதில் மன்னராம்’!. அவ்வாறு மகிழ்ந்த சேரனிடத்துப் புலவர் பொய்கையார் மற்றொரு புலவரை ஆற்றுப்படுத்துவதாக அமைந்திருக்கிறது இந்தப் பாடல். “தலைவனது ஊரையும் இயல்பையும் கூறிமுதுவாய் இரவல எம்மும் உள்ளெனத் தம் தலைமை தோன்றக் கூறினமையின் இது புலவராற்றுப்படை ஆயிற்றுஎன்னும் பாடலின் பின் குறிப்பு புலவர்களின் செம்மாந்த மனநிலையைக் காட்டுவதாக அமைந்திருக்கிறது.

ஆற்றுப்படையை அறிந்தால் அனைத்தும் அறியலாம்.

படித்துக் கெட்டவர்கள் யாருமிலர். படிக்காமல் கெட்டவர்கள் இருக்கக் கூடும். எனவே இலக்கியச் சுவையுணர் திறனும், இலக்கிய ஆய்வுத் திறனும் கைவரப் பெற்றவர்கள் ஒரு நூலைப்பற்றிய தோற்றத்தையும் வளர்ச்சியையும் அறிந்து கொண்டால் அவ்விலக்கியத்தை முற்றும் அறிந்ததாகக் கருதப்படுவர். இசை, கூத்து என்னும் நுண்கலைகள் எவ்வாறு பழந்தமிழகத்தில் போற்றப்பட்டன என்பதையும் கலைஞர்கள் எவ்வாறு ஆட்சியாளர்களால் மதிக்கப் பெற்றனர் என்பதையும் அறிந்து கொள்ள முடியும். அழுக்காறு அறியா அக்காலக் கலைஞர்களின் அகவழகையும் மக்கள் வாழ்வியல் நுட்பங்களைக் கவிதையாக்கும் பழந்தமிழ்ப் புலவர் பெருமக்களின் புலமைத்திறத்தையும் அறிந்து கொள்ள முடியும். வாரி வழங்கும் மன்னர்கள் ஆண்ட திறத்தையும் அவர்தம் வள்ளன்மையைப் பாடிப் புகழ்ந்த இரவலர்கள் மற்றும் புலவர்களின் நன்றியுணர்ச்சியையும் அறிந்து கொள்ளலாம். சுருங்கச் சொன்னால் சங்கக் காலம் தமிழகத்தின் பொற்காலம் என்பதற்கான சான்றுகளில் ஆற்றுப்படை இலக்கியச் சான்றுகள் தனித்துவம் மிக்கன.   

நிறைவுரை

இலக்கியக் கூறுகளில் காலத்திற்கேற்பக் கருத்துக்களும் பாடுபொருளும் வடிவமும் மாறுபடும். ஆனால் கற்பனையும் உணர்ச்சியும் மாறுபடாது. அவை புதுமையாகவும் அடர்த்தி வேறுபாட்டோடும் வெளிப்படும். தமிழ்க்கவிதைகளைப் பொருத்தவரை ஹைக்கூ, லிமரைக், சென்ட்ரியூ என ஜப்பானிய இறக்குமதிக் கவிதை வடிவங்களைப் பயன்படுத்திப் படைப்புத் தொழிலைச் செய்ய எத்தனிக்கிறோம். இந்த மண்ணின் மரபுக்கேற்ற இலக்கியங்களை அத்தகைய வடிவங்கள் முழுமையாக்குமா என்பது ஐயமே!  ஆற்றுப்படை ஓர் இலக்கிய வடிவம். இலக்கிய வடிவங்களைப் பொருத்தவரையில் தொல்காப்பியம் நெகிழ்ச்சியுடையது. அந்த அடிப்படையில் தற்காலத்திற்கேற்பத் திருத்தலங்களை நோக்கியோ, புகழ்மிகு கல்வி நிலையங்களை நோக்கியோ, அறிஞர்களின் இல்லம் நோக்கியோ கவிஞர்களின் இருக்கை நோக்கியோ ஆற்றுப்படை இலக்கியங்கள் தோன்றியிருக்க வேண்டும். நிலைமை அவ்வாறில்லை. பழைமையில் புதுமை தேக்குகின்ற முயற்சி பாரதி, பாரதிதாசனோடு முடிவடைந்துவிட்டதோ என எண்ணத் தோன்றுகிறது. அவ்வாறின்றி ‘இன்று ‘புதிதாய்ப் பிறந்தோம்” என்று இலக்கியங்களும் மகிழ வேண்டும் என்றால் ஆற்றுப்படை முதலிய பழந்தமிழ் வடிவங்கள் தற்காலக் கவிஞர்களின் சிந்தனையிலும் கணிப்பொறியிலும் எழுதுகோலிலும் நர்த்தனம் புரிதல் வேண்டும்.

துணை செய்த நூல்கள்

1. கடவூர் மணிமாறன் மாணாக்கர் ஆற்றுப்படை, விடியல் வெளியீட்டகம்,109, மேலத்தெரு, கிருஷ்ணராயபுரம், கரூர் மாவட்டம்.

2. ஒளவை துரைசாமிப்பிள்ளை புறநானூறு மூலமும் உரையும், தெ.இ.சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம்,  சென்னை. மறுபதிப்பு – 1967.

3. துரை. அரங்கனார் கருவிலே திருவுடையான், மீனாட்சி புத்தக நிலையம், 60, மேலக்கோபுரத் தெரு, மதுரை – 1, இரண்டாம் பதிப்பு – 1964.

4. தொல்காப்பியர்    தொல்காப்பியம் – பொருளதிகாரம், கு.சுந்தரமூர்த்தி (ப.ஆ.), 14, தெற்குத் தெரு, திருப்பனந்தாள் அஞ்சல், தஞ்சை மாவட்டம், இரண்டாம் பதிப்பு – 1970

5.    நக்கீரர் நெடுநல்வாடை, தி.தெ.இ.சை.சி.நூ.ப.கழகம் லிமிடெட், சென்னை, மூன்றாம் பதிப்பு – 1955

6.   மர்ரே பதிப்பகம் 1955இல் வெளியிட்ட பாட்டும் தொகையுமாகிய தொகுப்பு நூல்கள்.


ஆய்வறிஞர் கருத்துரை (Peer Review):

தமிழில் ஆற்றுப்படை இலக்கியம் – ஒரு வரலாற்றாய்வு’  என்னுந்  தலைப்பில் அமைந்த இக்கட்டுரையைப் பலமுறை பயின்று கட்டுரையின் அனைத்துக் கூறுகளையும் உள்வாங்கி ‘வல்லமை’ முன்மதிப்பீட்டு விதிகளைக் முழுமையாகக் கருத்திற்கொண்டு செய்யப்படும் முன் மதிப்பீடு 

  1. ‘வாய்மொழி இலக்கியங்கள் படைப்பிலக்கியங்களாகப் பரிணாமம் பெறும்’ என்னும் இலக்கிய வரலாற்றின் நுண்ணியத்தைச் சிறப்பாக அணுகியிருக்கும் கட்டுரையாசிரியர். ஆற்றுப்படை இலக்கியத்தைச் சரியான தளத்தில் வைத்து ஆராய முயன்றிருக்கிறார். 
  1. பெரும்பாலான தமிழ்ப் பேராசிரியர்கள் எழுதும் இலக்கிய வரலாறு என்பது குறிப்பிட்ட நூலின் உள்ளடக்க அமைதியைப் பந்திவைப்பதாகவே அமைந்துள்ளதை அனைவரும் அறிவர். இவர் ‘வரல் ஆறு’ என்பதற்கேற்ப நூல் வந்த மூலத்தையும் நடந்த தடத்தையும் கண்டறிவதையே இலக்கிய வரலாறாகக் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்துவது நோக்கத்தக்கது. 
  1. பாடாண் திணை  மற்றும் ஆற்றுப்படைத் துறை முதலியன பற்றிய விளக்கத்தையும், சங்கக் காலத்திற்குப் பிறகு தவளைப் பாய்ச்சலாக ஆற்றுப்படை இலக்கியம் அமைந்து போனது என்பதையும் தக்க சான்றுகளுடன் நிறுவுகிறார். 
  1. ஏனைய ஆற்றுப்படைகளிலிருந்து திருமுருகாற்றுப்படை வேறுபடும் நுண்ணியத்தைப் பதிவிடும் ஆசிரியர் அதுபோன்றதொரு விளக்கத்தை ‘மாணாக்கர் ஆற்றுப்படைக்கும்’ தந்து சமன்செய்து சீர் தூக்கும் கோல்போல் இலக்கியத் தரநிர்ணயத்தைச் செய்வது .ஆய்வுக்குத் தேவையான நடுநிலைப் பண்பைப் புலப்படுத்துவதாக அமைகிறது. 
  1. வரலாற்றை முன்னே சொல்லி, புலவராற்றுப்படையில் அமைந்த ஒரு பாட்டைப் பின்னே சொல்லி விளக்கியிருப்பது ‘இலக்கணம் கண்டதற்கு இலக்கியமாக’ மாறுபட்டதொரு சுவையினைத் தருகிறது. 
  1. பல ஆற்றுப்படை நூல்களைப் பற்றிய விளக்கமும் பட்டியலும் கட்டுரையாசிரியரின் உழைப்பையும் பொறுப்புணர்வையும் உணர்த்துவதாக உள்ளது.


பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “(Peer Reviewed) தமிழில் ஆற்றுப்படை இலக்கியம் – ஒரு வரலாற்றாய்வு

  1. அருமையான ஆழமான கட்டுரை. படித்தேன்; ரசித்தேன். வாழ்க,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.