(Peer Reviewed) செம்மொழியாம் தமிழ்மொழி

0
images

முனைவர் பீ. பெரியசாமி,
உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை,
டாக்டர் எம்.ஜி.ஆர். சொக்கலிங்கம் கலைக் கல்லூரி,
ஆரணி, திருவண்ணாமலை மாவட்டம் – 632317,
தமிழ்நாடு, இந்தியா,
மின்னஞ்சல்: periyaswamydeva@gmail.com,
கைபேசி: 9345315385,

ORCID ID –  https://orcid.org/0000-0002-7395-9699


1. முன்னுரை

மொழி என்பது ஒருவர் தன் உணர்வுகளைப் பிறருக்கு அறிவிக்கப் பயன்படும் ஒரு தொடர்புக் கருவியாகும். இந்தியாவில் உள்ள மொழிக்குடும்பங்களில் மிகப் பழமையானது திராவிட மொழிக்குடும்பமாகும். அத்திராவிட மொழிக்குடும்பத்தின் தாய் மொழியாக விளங்குவது தமிழ் மொழியாகும். அத்தமிழ் மொழியின் தொன்மையையும் அம்மொழி பெற்றிருக்கும் செம்மொழிக்குரிய தகுதிகளையும் ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும். அதனடிப்படையில் மொழியின் அடிப்படை, இந்திய மொழிக்குடும்பங்கள், திராவிட மொழி, திராவிட மொழிகளின் தாய் தமிழ்மொழி, திராவிட மொழிகளின் எண்ணிக்கை அவற்றின் பகுப்புமுறை, தமிழ் மொழிக்கும் பிற மொழிகளுக்குமானத் தொடர்பு, தமிழ்மொழி, வெளிநாட்டார் குறிப்புகள், நூல்கள், கல்வெட்டுகள், தமிழரின் தொன்மை, சிறப்பு, தோற்றம், செம்மொழியே தமிழ்மொழி எனும் தலைப்புகளினூடாக இவ்வாய்வுக்கட்டுரை பயணித்து தமிழ்மொழியில் செம்மொழிக்குரிய தகுதிப்பாடுகளை ஆராய்கின்றது.

2. மொழி

மொழி என்பது, மனிதர்கள் தங்களது உணர்வுகளையும் கருத்துகளையும் மற்றவர்களுக்குத் தெரிவிப்பதற்கான ஒரு முறையான வழிமுறையாகும். இது, பேச்சு மொழி, எழுத்து மொழி என இரண்டாகப் பகுப்பர். ஆரம்பத்தில் பேச்சுமொழி சைகைகளாகவும், எழுத்து மொழி குறிகள், அடையாளங்களாகவும் இருந்தன. இதனை,

குழந்தைகளின் மொழித்திறன் வளர்ச்சி, பிறப்பிலிருந்தே தொடங்கி பல ஆண்டுகள் நீடிக்கும்.மொழியின் பிறவடிவம், செயல்முறை ஆகிய இரண்டையும் உள்ளத்தில் கொண்டு மொழியை விளக்கிய அறிஞர்கள் பொருளைக் குறிக்க மரபாக ஏற்பட்ட குறியீடுகளின் ஒழுங்குபட்ட அமைப்பே மொழி என்றனர். (திராவிட மொழிகளின் ஒப்பாய்வு, ப.2)

எனவும்,

ஒரு குறிப்பிட்ட பண்பாட்டுக் குழுவினர் புரிந்து கொள்ளும் வரையறுக்கப்பட்ட ஒலிகளின் இணைப்பே மொழி என்றனர். (திராவிட மொழிகளின் ஒப்பாய்வு, பக்.2-3)

ஜான்சாமுவேல் கூறியுள்ளார். குறியீடும்,  ஒலிகளும் மொழிகளின் தோற்றத்தின் அடிப்படை என்பது இதிலிருந்து அறியமுடிகின்றது.

மொழியே ஒரு இனத்தின் முக்கிய அடையாளம்.மொழி என்பது சொல்வளம், இலக்கியம், இலக்கணம், ஆகியவற்றையே கொண்டிருத்தல் சிறப்பு. மொழியானது பிறரிடம் தொடர்பு கொள்ளவும், தன் உணர்வுகளை வெளிப்படுத்தவும் பயன்படுகிறது. இதனை,

மொழி மனித சமுதாயத்தோடு தோன்றி, நின்று, அழியும் என்பது தெளிவு. மொழி நாகரிகத்தின் வித்து; எண்ணத்தின் வடிவம்; ஒருவரோடு ஒருவரை பிணைக்கும் இணைப்பு; காலத்தைக் கடந்து நிலையாக நிற்கின்ற கருத்தோவியம்; மற்ற உயிரினங்களுக்கிடையே காணப்படாத பெருஞ்சிறப்பு; பழக்கம் என்ற விளைநிலத்தின் பயிராக்கப்பட்ட பயிர். (திராவிட மொழிகளின் ஒப்பாய்வு, ப.3)

என ஜான்சாமுவேல் கூறியுள்ளார். எனவே மனிதன் சமூகமாகக் கூடிவாழத் தலைப்பட்ட காலத்திலே மொழிகள் தோன்றியிருக்க வேண்டும் என்பதை உய்த்துணர முடிகின்றது.

3. இந்திய மொழிக் குடும்பங்கள்

இந்தியாவில் ஆஸ்ட்ரிக் குடும்பம், இந்தோ – ஆரிய மொழிக் குடும்பம், திபத்தோ –  சீன மொழிக் குடும்பம்,  திராவிட மொழிக் குடும்பம் என்ற நான்கு மொழிக் குடும்பங்கள் உள்ளன.

4. திராவிட மொழி

திராவிட மொழி என்பது மொழியல்ல. அது மொழிக் குடும்பத்தின் பெயர். தமிழிலிருந்து தோன்றிய பல மொழிகளின் கூட்டே திராவிட மொழி என்பது. இதனை முதலில் ஆய்ந்த டாக்டர் கால்டுவெல் அவர்கள் தென்னிந்திய திராவிட மொழிகளையே ஆய்வுக்கு உட்படுத்தினார் பின்னர் ஏற்பட்ட மொழியியல் ஆய்வின் வளர்ச்சியின் காரணமாக வட இந்தியாவிலும், பிற இடங்களிலும் திராவிடம் மொழிகள் கண்டறியப்பட்டன. தமிழில் திராவிடம் என்ற சொல்லை முதன் முதலில் குமரிலபட்டரே பயன்படுத்தியுள்ளார். அவர்,

திராவிட மொழிகளை ஆந்திர, திராவிட பாஷா(திராவிட மொழிகள்,(தொகுதி-2), ப.79)

என்க கூறியுள்ளார். பழங்காலத்தில்,

தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு போன்ற தென்னிந்திய மொழிகளை‘Tamilian’அல்லது ‘Tamulic’ ( திராவிட மொழிகள், (தொகுதி-1), ப.21)

என்றே  அழைத்துள்ளனர்.

‘தமிழ்’ என்ற சொல்லிலிருந்து தான் ‘திராவிட’ என்ற சொல் உருவாயிற்று என்பதை ஸ்டென்கனொவ் எனும் ஆய்வாளர்,

‘திராவிட’ என்ற சொல்லை விட ‘திரமிள’ என்ற சொல் தான் பழமையாக உள்ளது என்றும் அது ‘தமிழ்’ என்ற சொல்லிலிருந்து உருவானது ( திராவிட மொழிகள், (தொகுதி-1), ப.26)

என்று கூறியுள்ளார். இந்தியாவின் பழைமையான நாகரிகம் திராவிட நாகரிகம் என்பதை,

இந்திய நாட்டை பொறுத்தமட்டில் ஆரியர்கள் வருவதற்கு முன்பே சிறந்ததொரு நாகரிகம் இந்திய மண்ணில் உருவாகி வளர்ந்திருந்தது என்பதும் அந்நாகரிகம் பல கோணங்களில் பண்பட்டுச் சிறந்து இருந்தது என்பதும் இன்றைய ஆராய்ச்சியாளர்களின் முடிபாகும். ( திராவிட மொழிகள், (தொகுதி-1), ப.31)

என்றும்,

திராவிட மொழிகள் மிகப் பழமையான மொழிகள் என்பதும் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இந்திய நாட்டில் வழக்கிலிருந்து வந்துள்ளன என்பதும் இன்றைய மொழியியலாளர்களின் கொள்கை. (திராவிட மொழிகள், (தொகுதி-1), ப.35)

என்றும் ச. அகத்திய லிங்கம் கூறியுள்ளார். இவற்றின்வழி திராவிட நாகரிகம் இந்தியாவின் பண்பட்ட நாகரிகம் என்பதும் பழைமையான நாகரிகம் என்பதும் அறியமுடிகின்றது. மேலும், இதற்கு வலுசேர்க்கும் விதமாக,

திராவிடர்கள் பற்றிப் பொதுவாக இரண்டு வன்மையான கருத்துக்கள் உள்ளன. ஒன்று அவர்கள் இந்நாட்டுப் பழங்குடியினர், இந்நாட்டுக்கே சொந்தமானவர்கள். (திராவிட மொழிகள், (தொகுதி-1), ப.95)

எனக் கூறியதிலிருந்து திராவிடர்களே இந்தியாவின் மூத்த குடிமக்கள் என்பது நிறுவப்படுகின்றது.

சமஸ்கிருத மொழியிலிருந்து தான் இந்தியாவிலுள்ள எல்லா மொழிகளும் தோன்றின என கால்டுவெல் எனும் அறிஞரின் ஆய்வுநூலான திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் வெளிவரும்வரை சமஸ்கிருத மொழியாளர்களாலும் அதற்குத் துணை போன சில மொழியியல் ஆய்வாளர்களாலும் நம்பவைக்கப்பட்டிருந்தன. ஆனால்,

திராவிட மொழிகள் சமஸ்கிருத மொழியிலிருந்து பிரிந்தவை அல்ல என்றும் இவை தனி ஒரு இனம் ( திராவிட மொழிகள், (தொகுதி-1), ப.40)

என்று விளக்கியுள்ளார்  கால்டுவெல்.

5. திராவிட மொழிகளின் எண்ணிக்கை

திராவிட மொழிகளின் எண்ணிக்கையில் ஆய்வாளர்களிடையே பல்வேறு கருத்து மாறுபாடுகள் உள்ளன. அவற்றுள் டாக்டர் கால்டுவெல் திராவிட மொழிகள் பன்னிரண்டு என்கிறார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளி ஆகிய ஐந்து மொழிகளையும் பண்பட்ட மொழிகளாகவும் தோடா, கோடா, கோண்டு, கூ என்ற நான்கையும் பண்படாத மொழிகளாகவும் கருதினார். பிராகூயி, மால்டோ போன்ற மொழிகளைச் சுட்டிச் சென்றார் தவிர அவற்றைப் பற்றிய சிறப்பாராய்ச்சியினை அவர் மேற்கொள்ளவில்லை. (திராவிட மொழிகளின் ஒப்பாய்வு, ப.18)

மேலும், கிரியர்ஸன் எனும் மொழியியல் ஆய்வாளர்,

கொலாமி, நாயக்கி ஆகிய இரு மொழிகளையும் கால்டுவெல் கூறியதோடு இணைத்து திராவிட மொழிகள் 14 எனக் குறிப்பிட்டுள்ளார். திராவிட மொழிகளைத் தென் திராவிட மொழிகள், நடு திராவிட மொழிகள், வட திராவிட மொழிகள் என்று பிரித்தும் ஆராய்ந்துள்ளனர்.

பர்ரோதன் ஆய்வில்,

1950 இல் பெங்கோ, பர்ஜி ஆகியன திராவிட மொழிகளின் கிளை மொழிகள் எனக் கண்டார்.

ஆனால், தற்போது திராவிட மொழிகளின் எண்ணிக்கை முப்பதுக்கும் மேலாகப் பெருகி உள்ளன.

6. திராவிட மொழிகளின் பகுப்பாய்வு

திராவிட மொழிகளைத் தென் திராவிட மொழிகள், நடு திராவிட மொழிகள், வட திராவிட மொழிகள் என மூன்று பிரிவுகளாகப் பகுப்பர். அவற்றுள், தமிழ், மலையாளம், கொடகு, கோடா, தோடா, கன்னடம், படகா, துளி ஆகிய ஒன்பது மொழிகளும் தென் திராவிட மொழிகள்.நடு திராவிட மொழிகளைத் தெலுங்கு – குவி கிளை என்றும்,  கொலாமி –  நாயக்கி கிளை என்றும் மொழி நூலால் இரு கூறுபடுத்துவர்.தெலுங்கு – குவி கிளையில் – தெலுங்கு, கோண்டி, குவி, குவி, பெங்கோ, மண்டா ஆகிய ஏழு மொழிகளும் கோலாமி – நாயக்கி கிளையில் – கோலாமி, நாயக்கி,  பர்ஜி, கடப்பா ஒல்லாரி,  கடப்பா சில்லூர் ஆகிய ஐந்து மொழிகளும் உள்ளன.வட திராவிட மொழிகள் – பிராகுயி, மால்டோ, குருக் ஆகிய மூன்று மொழிகள்.

7. திராவிட மொழிகளின் தாய் தமிழ்மொழி

திராவிட மொழிகளில் பல்வேறு வகையிலும் தொன்மை வாய்ந்ததும் மற்ற மொழிச் சொற்களுக்கு எல்லாம் வேர்ச்டசொற்களைத் தந்ததும் தமிழ் மொழியே ஆகும். தமிழில் தான் திராவிட மொழி நூல்களுக்கு எல்லாம் காலத்தால் முந்திய தொல்காப்பியம் எனும் நூல் தோன்றியுள்ளது. இதனை,

திராவிட மொழிகளில் காணப்படும் மிகவும் பழமையான நூல்களில் முதன்மையானது தொல்காப்பியம். ( திராவிட மொழிகள், (தொகுதி-1), ப.150)

என்று ச. அகத்திய லிங்கம் கூறியுள்ளார். மேலும், ஏனைய திராவிட மொழிகளைக் காட்டிலும் பழமையான இலக்கண இலக்கியங்கள் தமிழில் உள்ளன என்பதை,

திராவிட மொழிகளின் பழமையான இலக்கியங்களையும் இலக்கணங்களையும் கொண்டுள்ளது தமிழ்மொழி. ( திராவிட மொழிகள், (தொகுதி-1), ப.106)

என்றும் கூறப்பட்டுள்ளது. டாக்டர் ஜார்ஜ் ஆலுவர் சிந்துவெளி நாகரிகத்தின் தோற்றத்திற்கு அடிப்படை காரணமாக இருந்தவர்கள் திராவிட மக்களே எனத்  தெளிவுபடுத்தி உள்ளார். இதன்வழி தமிழ்மொழி திராவிட மொழிகளின் தாய் என்பதை அறியலாம்.

8. தமிழ்மொழி

தமிழின் பழமைக்குச் சான்றாய் விளங்கும் கி.மு. 5 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த தொல்காப்பியத்தை முதல் நூலாகக் கொண்டே தமிழ்மொழி, இலக்கியம், இலக்கணம் பற்றிய ஆதாரங்கள் ஆரம்பமாகின்றன. கிறிஸ்துக்கு முன்பே தமிழில் சிறந்த படைப்புகள் இருந்தன என்பதை,

திராவிட மொழிகளுக்குள்ளே கிறிஸ்துவ சகாப்தத்தின் துவக்கத்திலிருந்தே சிறப்புமிக்க இலக்கியங்களைக் கொண்டு சிறந்த மொழி தமிழேயாம். (தமிழும் பிற பண்பாடும், ப.15)

என்று தெ. பொ. மீனாட்சி சுந்தரம் கூறுவதிலிருந்து அறியலாம். மேலும்,

தமிழ் மொழியின் வரலாற்றுக்கான அடிப்படைச் சான்றுகளுக்கு இலக்கியங்களையே முதன்மையாகக் கொள்ள வேண்டியதிருக்கிறது. இலக்கியம் என்று குறிப்பிடுகின்ற பொழுது இலக்கியத்தரம் வாய்ந்த நூல்கள் என்ற வரையறைக்கு உட்படுத்தாது எல்லா பொருள்களையும் பற்றிய உரைநடை அல்லது செய்யுள் வடிவில் உள்ள எல்லாத் தமிழ் நூல்களையும் குறிப்பதாகக் கொள்ள வேண்டும். (தமிழ் மொழி வரலாறு, பக். 41- 42)

என்றும் கூறியுள்ளார். எனவே, தமிழ் மொழியின் பழமையான நூல்களைத் தேடி ஆய்வதிலிருந்தே தமிழரின் தமிழ்மொழியின் முழுமையான வரலாற்றை அறிய முடியும் என்பதை உணரமுடிகின்றது.

9. வெளிநாட்டாரின் பார்வையில் தமிழ்மொழி

வெளிநாட்டார் சில  தமிழ் மொழியினைக் குறித்த நூல்களை இயற்றியுள்ளனர். அவைகளும் நமக்குத் தமிழ்மொழியின் தொன்மையையும் சிறப்பையும் அறிய உதவுகின்றன. அவற்றுள், பால்தே இயற்றிய இந்திய மொழிகள் பற்றிய நூலொன்று எழுதியுள்ளார். 1680இல் கோஸ்டா தமிழ் இலக்கணத்தை இலத்தின் மொழியில் இயற்றியுள்ளார். 1685 இல் புருனோ தமிழ் இலக்கண நூல் ஒன்று எழுதியுள்ளார். பெஸ்கி (வீரமாமுனிவர்) பேச்சுத்தமிழ் இலக்கணம் ஒன்றை எழுதியுள்ளார். வீரமாமுனிவர் போர்த்துகீசிய மொழியிலும் தமிழிலும் அகராதிகளை இயற்றியுள்ளார். இவையெல்லாம் குறிப்பித்தகுந்தவைகள்.

10. தமிழ் மொழியின் தொடர்பு

தமிழ்மொழி ஆரிய மொழி, கிரேக்கம், கொரிய மொழி, ஜப்பானிய மொழி ஆகியவற்றோடு நெருங்கிய தொடர்புடையனவாக விளங்குகின்றன. இதனால் பிற மொழிகளில் தமிழ் மொழிச் சொற்களும் தமிழ்மொழியில் பிறமொழிச் சொற்களும் கலந்து போயின. இதனை,

பன்னெடுங்காலமாகப் பிறமொழி பேசும் மக்களோடு ஏற்பட்ட தொடர்பினாலே பல பல சொற்கள் தமிழிலே புகுந்து இன்றைய வழக்கிலும் நிலைபெற்று விட்டன. இதுபோலவே தமிழ்ச் சொற்களும் பிற மொழிகளில் புகுந்தன. (தமிழும் பிற பண்பாடும், ப.13)

என்பதன் வழி அறியலாம். மேலும்,

1700 ஆண்டுகளுக்கு முன்பு சோழ மன்னர்கள் பலர் மலாயாவை, கெடாவை, சயாமைக் கைப்பற்றி ஆண்ட செய்திகளும், அவர்களில் முதலாம் குலோத்துங்கன் பர்மாவை ஆண்ட செய்தியும், சோழன் கரிகாலன் இலங்கையைக் கைப்பற்றி ஆண்ட செய்தியும், இலக்கியங்களாலும், வரலாறுகளாலும், கல்வெட்டுகளாலும் அறியப்படும் உண்மைகளாகும். இதனால், தமிழ் மொழியானது அக்காலத்திலேயே உள்நாட்டை ஆட்சி புரிந்தும், வெளிநாட்டை ஆட்சி புரிந்தும் ஒரு வல்லரசின் ஆட்சி மொழியாகவும் இருந்திருக்கிறது எனத் தெரிய வருகிறது. (தமிழின் சிறப்பு, ப.28)

படையெடுப்புகளாலும் தமிழ்மொழி வெளிநாடுகளில் பரவியது என்பதை இதன்வழி அறியமுடிகின்றது.

11. தமிழ்மொழிக்கும் ஏனைய திராவிட மொழிகளுக்குமான உறவு

தமிழ் மொழிக்கும் ஏனைய திராவிட மொழிகளுக்கும் நெருங்கிய தொடர்புகள் உள்ளன. இதனை,

கி.மு. நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்த வரருசியும் (Vararuchi), கி.மு இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த பூஞ்சலையும்(Patanjali) குறிப்பிடும் சில தென்னிந்தியச் சொற்களுடன் இதைத் தொடங்கலாம். இதற்குப் பின்னர் பாலி, சமஸ்கிருதம், பிராகிருதம்  ஆகிய மொழிகளின் இலக்கியங்களிலும், குமரிலபட்டரின் (Kumarila Bhatta), ‘தந்திர வாத்திகா’ (Tantra Varttika) போன்ற நூல்களிலும், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற திராவிட குடும்ப மொழிகளிலும் குறிப்புக்கள் வருகின்றன. கி.பி.14ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ‘லீலா திலகம்’ (Lila Tilakam) எனும் மலையாள நூல் பாண்டிய நாட்டிலும், சோழ நாட்டிலும் நிலவிய சில வழக்காறுகளையும் உச்சரிப்புகளையும் குறிக்கின்றது. இதற்கு முற்பட்ட இராம சரிதம் போன்ற மலையாள நூல்கள், தமிழ் நூல்களே என்க கூறப்படுவதுமுண்டு. (தமிழ் மொழி வரலாறு, பக். 49-50)

என்பவற்றிலிருந்து அறிய முடிகின்றது.

  • கல்வெட்டுகள்

தமிழ் மொழியின் தொன்மையை அறிந்து கொள்ளக் கல்வெட்டுகள், பட்டயங்கள், செப்பேடுகள், இலக்கியங்கள், இலக்கணங்கள், வெளிநாட்டார் குறிப்புகள், வெளிநாட்டார் நூல்கள், மொழியியல் ஆய்வுகள் எனப் பல இருந்தாலும், கல்வெட்டுச் சான்றுகள் என்பவை முக்கியமானதாகப் பார்க்கப்படுகின்றன. அந்த வகையில்,

தமிழகம் கல்வெட்டுகளுக்குப் பெயர் போனது. ஒரு சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னமே கல்வெட்டுகளைக் கண்டுள்ளது தமிழகம். (திராவிட மொழிகள், (தொகுதி-1), ப.142)

என்பதன் வழி ஏனைய மொழிக் கல்வெட்டுகளைக் காட்டிலும் தமிழ் மொழியில் உள்ள கல்வெட்டுகள் காலத்தால் முந்தியவை என்பதை அறியமுடிகின்றது. மேலும்,

இன்று கிடைக்கும் கல்வெட்டுகளில் பழமையானவை பிராமி எழுத்துக்களால் ஆனவை. இவற்றைக் கீழ் வளைவு, மறுகால் தலை, ஆனைமலை, அழகர் மலை, மேட்டுப்பட்டி, முத்துப்பட்டி, சித்தனை வாசல், திருவாதவூர்,  விக்கிரமங்கலம் போன்ற இடங்களில் காணலாம். இவற்றைப் பற்றிய செய்திகள் கிபி 1903 முதலே நமக்குக் கிடைக்கின்றன. (திராவிட மொழிகள், (தொகுதி-1), ப.142)

என்பதன் வழி தமிழகத்தில் கல்வெட்டுகள் கிடைக்கப்பட இடங்களை அறியமுடிகின்றது. அவ்வாறு கிடைக்கும் கல்வெட்டுகள், தமிழ், கிரந்தம், வட்டு எழுத்து ஆகிய மூன்று வகை எழுத்துக்களால்  பொறிக்கப்பட்டுள்ளன. மேலும்,

தமிழகத்தின் தென் மாவட்டங்களிலுள்ள குகைகளில் பிராமி வரிவடிவத்தில் எழுதப்பட்ட சிறிய கல்வெட்டுகள் பல காணப்படுகின்றன. இவை பிராமி வரிவடிவத்தில் தெற்கத்திய முறையில் எழுதப்பட்டவையாகும். கல்வெட்டு ஆராய்ச்சியாளர்கள் தொல் எழுத்தியல் (Paleography) ஆராய்ச்சி அடிப்படையில் இவற்றின் காலத்தைக் கிறிஸ்துக்கு முந்திய மூன்றாம் இரண்டாம் நூற்றாண்டுகள் என மதிப்பிடுகின்றனர். (தமிழ் மொழி வரலாறு, ப.46)

எனவே கி.மு. மூன்றாம் நூற்றாண்டளவில் தமிழில் கல்வெட்டுகள் எழுதப்பட்டுள்ளன என்பது அறியப்படுகின்றது. இதுவே பழமை என்றல்ல மேலும் பழமையானக் கல்வெட்டுகளும் கிடைத்துள்ளன. கிடைத்துக் கொண்டும் உள்ளன. சமீப காலமாகத் திருச்செந்தூர் கடற்கரை ஒட்டிய பகுதிகளில் கல்வெட்டுகளும் முருகன் சிலைகளும் பாறைகளும் கண்டறியப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

  • வெளிநாட்டார் குறிப்புகள்

வெளிநாட்டினர்களான மெகஸ்தனிஸ், பெரிபுளூஸின் ஆசிரியர், ப்ளினி, தாலமி, சீன யாத்திரிகர் யுவன் சுவாங், மார்கோபோலோ போன்றவர்கள் குறிப்புகள் குறிப்பிடத் தகுந்தன. இவர்களின் குறிப்புகள் தமிழ் மொழியினுடைய பழமைக்குக் குறிப்பிடத் தகுந்த சான்றுகளாகின்றன.

12. தமிழ் மொழியின் சிறப்பு

தமிழ் மொழியில் முதல் எழுத்துக்கள் மொத்தம் 30 தான். அவை உயிர்- 12, மெய்- 18, உயிர்மெய் – 216, ஆயுதம் -1 என மொத்தம் 247 எழுத்துக்கள் உள்ளன.  இம்மொழி எழுதவும் படிக்கவும் ஏனைய மொழிகளைக் காட்டிலும் எளிமையானது என்பதை,

தமிழ் மொழியானது எழுத மட்டுமல்ல படிக்கவும் எளிது. தமிழில் ஒரு எழுத்துக்கு ஒரே ஒலியானதால் எவரும் எளிதாக எதையும் படிக்க முடிகிறது. (தமிழின் சிறப்பு, ப.15)

என்றும், அதனை எழுதும் முறை எளிமையானது என்பதை,

சீன, சப்பானிய மொழிகளின் எழுத்துக்களைப் போல் மேலிருந்து கீழ்நோக்கி எழுதுகிற அல்லது உருது மொழி எழுத்துக்களைப் போல வலப்புறமிருந்து இடப்புறம் நோக்கி எழுதுகின்ற கடினமான முறை தமிழுக்கு இல்லை. இடதுபுறமிருந்து வலப்பக்கம் நோக்கி எளிதாக எழுதலாம். (தமிழின் சிறப்பு, ப.16)

என்றும் கூறப்பட்டுள்ளது.

13. தமிழ் மக்களின் தோற்றம்

தமிழ் மக்கள் இந்தியாவின் பூர்வக்குடிகள் என்பதை முன்னமே கண்டோம். அவர்களின் காலம் என்ன என்பதை இன்றளவும் நம்மால் ஆராய்ந்தறிய முடியாததாகவே உள்ளது. 2000 ஆண்டுகளுக்கு முன் கிரேக்கர்கள் இந்தியாவைப் பற்றி எழுதியிருக்கும் குறிப்புகளிலும், 2300 ஆண்டு பழமை வாய்ந்த பிராமிய கல்வெட்டுகளிலும் தமிழ்மொழி குறிப்புகள் காணப்படுகின்றன.  2800 ஆண்டுகளுக்கு முன்பு ரோம் நாட்டை ஆண்ட ஏழாவது சாலமன் காலத்தில் தமிழர்கள் அந்நாட்டுடன் உறவு கொண்டிருந்தார்கள். 3000 ஆண்டுகளுக்கு முந்தைய தொல்காப்பியத்தில் என்மானார் புலவர், என்ப எனத் தொல்காப்பியரே குறிப்பிட்டுள்ளார். மேலும்,

தமிழகத்தில் 3 கடற்கோள்கள் அடுத்தடுத்தும் தோன்றிக் கடல்நீர் நாட்டில் புகுந்து நிலப்பரப்பை, மக்களை, தமிழ்ச் சுவடிகளை அழித்துவிட்டன என்றும்,  இது நடந்த காலம் 3000-ம், 5000-ம், 9000-ம் ஆண்டுகளாயின எனவும் கூறப்படுகிறது. (தமிழின் சிறப்பு, ப.30)

என்பதன் வழி ஒன்பதாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இங்குத் தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர் என்பதை அறியமுடிகின்றது. அதுமட்டுமன்றி,

காவிரிபூம்பட்டினத்தில் நிலைத்து நின்று வாழும் தமிழ் மக்களைப் “பதியெழு அறியாப் பழங்குடியினர்” என இளங்கோவடிகள் கூறுகின்றார். இதற்கு உரை கூற வந்த அடியார்க்கு நல்லார், “படைப்புக் காலந் தொட்டே வாழுங்குடியினர்” எனக் கூறியிருக்கிறார். தமிழ் மக்கள் தோன்றிய காலத்தைக் குறிப்பிடும் பொழுது, “கல்தோன்றி மண் தோன்றாக் காலத்திற்கு முன் தோன்றி மூத்த குடியினர்” என ஆசிரியர் பரிமேலழகர் கூறுகிறார். (தமிழின் சிறப்பு, ப.26)

என்கின்றனர். இவற்றின்வழி, தமிழ்மொழியின் தொடக்கக் காலம் என்பது அறுதியிட்டுக் கூற இயலாத வகையில் நீண்டு செல்கிறது என்பதை அறியமுடிகின்றது.

14. தமிழ்மொழி செம்மொழி

தமிழ் செம்மொழித் தகுதிக்குத் தொன்மை ஒரு முக்கியமான கூறுபாடாகக் கருதப்படுகிறது. தமிழின் தொன்மை உலகளாவிய ஒன்று. என்பதை,. “Apart from literature written in classical (Indo-Aryan) Sanskrit, Tamil is the oldest literature in India” (Encyclopedia Britannica. Vol.II.P.350) என்று என்சைக்ளோபீடியா பிரிட்டானிகா தமிழையும், சமஸ்கிருதத்தையும் தொன்மையான இந்திய மொழிகள், செம்மொழிகள் எனக் கூறியிருக்கிறது.உலகில் எத்தனையோ மொழிகள் பேசப்பட்டு வருகின்றன. இதில் பல மொழிகளுக்கு எழுத்து வடிவங்கள் இல்லை என்பதால் பயன்பாட்டுக்குக் கொண்டு வர முடியாமல் உள்ளன. ஆனால் சில மொழிகள் மிகப் பழமையானதாகவும், இலக்கியத்தில் சிறந்து விளங்குவதாகவும் உள்ளன. இவற்றில் சில மொழிகளைச் செம்மொழிகள் என்று அடையாளப்படுத்துகின்றனர்.

15. செம்மொழித் தகுதி

ஒரு மொழிக்குச் செம்மொழி என்ற தகுதி அம்மொழியில் இடம் பெற்றிருக்கும் இலக்கியத் தரத்தின் அடிப்படையில்தான் முடிவு செய்யப்படுகிறது. இருப்பினும் செம்மொழி என்பதற்கு அம்மொழியில் இடம் பெற்றிருக்கும் முக்கியமான இரண்டு சிறப்புகள் தேவையாய் இருக்கின்றன. அவைகள், இலக்கியப் படைப்புகள், கலைப் படைப்புகள் இந்த இரு படைப்புகளைக் கொண்டே அந்த மொழி செம்மொழிகளாக அறிவிக்கப்படுகின்றன. அந்தவகையில், 2004-ம் ஆண்டுச் செப்டம்பர் 17-ம் நாள் நடைபெற்ற இந்திய அரசின் அமைச்சரவைக் கூட்டத்தில், தமிழைச் செம்மொழியாக அறிவிக்க முடிவு செய்யப்பட்டது. அதற்கான ஆணை, 2004 அக்டோபர் 12-ம் நாள் வெளியிடப்பட்டது.

  • இலக்கியப் படைப்புகள்

ஒரு மொழியின் சிறப்பிற்கும் செம்மைக்கும் முதல் அடையாளமாகத் திகழ்வது அம்மொழியின் பழமை வாய்ந்த இலக்கியங்கள்தான். இந்த இலக்கியங்களில் இருக்கும் பழமையுடன் அதில் கருத்துச் செறிவுகளும் இருக்க வேண்டும். ஒரு மொழியின் சிறப்பு அந்த மொழியில் படைக்கப்பட்ட இலக்கியப் படைப்புகள் வழியாகத்தான் அறிய முடிகிறது.

  • கலைப் படைப்புகள்

ஒரு மொழியின் பழமைக்கு இலக்கியம் சான்றாக இருந்தது என்பதுடன் அந்த மொழி சார்ந்த பகுதிகளில் உருவாக்கப்பட்ட கலைப் படைப்புகள் அந்த மொழியின் பழமையை உணர்த்தும் அடுத்த சான்றாக இருக்க வேண்டும். கலைப் படைப்புகள் என்பது கட்டடக் கலை, சிற்பக் கலை போன்ற பழமை வாய்ந்த கலைச் சான்றுகளாக இருக்க வேண்டும்.

16. உலகச் செம்மொழிகள்

16.1. தொல் பழமை

சுமேரிய மொழி, எகிப்திய மொழி, பண்டைய பாபிலோனியம், மத்திய அசீரியம், வேத சமசுகிருதம், பண்டைய எபிரேயம், பண்டைய பாரசீகம், பண்டைய சீனம், பண்டைய கிரேக்கம், பண்டைய சமசுகிருதம், பண்டைய தமிழ், பண்டைய பாளி, பண்டைய இலத்தீன், பண்டைய மண்டேயம், பண்டைய சீரியாம், மத்திய பாரசீகம், பண்டைய கொப்டிக்

16.2. திராவிட மொழிகள்

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம்

16.3. இந்தோ-ஐரோப்பிய மொழிகள்

கிரேக்க மொழி, சமசுகிருதம், இலத்தீன், பாரசீக மொழி

16.4. ஆப்பிரிக்க-ஆசிய மொழிகள்

அரபு மொழி, எபிரேயம்

16.5. சீனோ-திபெத்திய மொழிகள்:

சீன மொழி

17. பழமை வாய்ந்த தமிழ்மொழி

இந்தியாவில் ஆரியம் சார்ந்த பண்பாட்டிற்கு வடமொழி எப்படி விளங்கியதோ அதைப் போலவே திராவிடம் சார்ந்த பண்பாட்டிற்குத் திராவிட மொழிகளில் முதலாவதான தமிழ் 6000 ஆண்டுகள் மேற்பட்ட இலக்கிய பழமை வாய்ந்தது. ஐரோப்பிய நாகரீகத்தை அறிந்து கொள்ளக் கிரேக்கம், இலத்தீன் மொழிகள் போல் தற்போதைய இந்திய வரலாற்றை அன்றைய சேர, சோழ, பாண்டியர்கள், போன்ற வரலாற்றை அறியத் தமிழ், மொழி தேவையாக உள்ளது.

18. செம்மொழிக்கான தகுதிகள்

தொன்மை, தனித்தன்மை, பொதுமைப் பண்பு, நடுவு நிலைமை, தாய்மைப் பண்பு, பண்பாட்டுக் கலை அறிவு பட்டறிவு வெளிப்பாடு, பிற மொழித் தாக்கமில்லா தன்மை, இலக்கிய வளம், உயர் சிந்தனை, கலை இலக்கியத் தனித்தன்மை, மொழிக் கோட்பாடு

18.1. தொன்மை

செம்மொழி நிலைக்கு ஒரு மொழி ஆயிரம் ஆண்டுக்கால தொன்மை படைத்ததாக விளங்க வேண்டும். தமிழோ ஆயிரமல்ல ஓராயிரம் ஆண்டிற்கும் மேலாகப் பேசி, எழுதி, படைத்து தனக்குள்ளே பெரும் இலக்கியச் செல்வங்களைக் கொண்டது. இதனை எவராலும் மறுக்கப்படாமல் ஏற்கத்தக்க அளவிற்கு இதன் தொன்மை சிறப்பானது. அத்துடனில்லாமல் இன்றளவும் உலகமெங்கும் பரவியுள்ள தமிழர்களின் பேச்சு மொழியாகவும், எழுத்து மொழியாகவும், கல்வி கற்கும் மொழியாகவும், படைப்பு புனைதலில் புதிய புதிய துறைகளிலும் நிகரற்று விளங்குவது அதன் தனிச் சிறப்பு.

18.2. தனித் தன்மை

பல்வேறு திணை நிலங்களிலும் திராவிட குடும்ப மொழிகள் கிளைத்திட வைத்த தமிழ், தாயாக விளங்கி தனக்கென ஒரு மொழிக் குடும்பத்தை உருவாக்கி தன்னைச் சுற்றி வேர்களாகவும், விழுதாகவும் மொழிகள் கிளைப்பினும் தன்னிலை மாறாத உன்னத நிலையுடன் நிலைபெற்று விளங்குவது இதன் தனித்தன்மையாகும்.

18.3. பொதுமைப் பண்பு

உலகின் எந்த இயற்கை மொழிக்கும் இல்லாத சிறப்புமிக்க இலக்கணக் கட்டமைப்பு கொண்டது தமிழ் மொழி. தமிழின் இலக்கணப் பொதுமைப் பண்பு நெறிகள் திராவிட மொழிக் குடும்பத்திற்கு மட்டுமல்லாமல் இதர இயற்கை மொழி அனைத்தும் பயனுறும் வகையில் அமைந்துள்ளது இதன் சிறப்பாகும்.

18.4. நடு நிலைமை

தமிழின் இலக்கண விதி உன்னத நெறியுடனான பன்முகத் தன்மை கொண்டது. எனினும் இதன் இலக்கண விதிகள் வேறு எதனுடனும் சாராமல் தனித்தியங்கி நடுநிலையுடன் விளங்குவது.

18.5. தாய்மைத் தன்மை

தமிழ் எனும் மூல மொழி தான் மட்டுமே என்ற தன்னலமின்றி தாய்மைப் பண்புடன் திராவிட மொழிக் குடும்பம் உருவாகிட அடிப்படையில் விளங்கியது. பேச்சு மொழியென்றும், இலக்கிய வளமிக்க மொழிகளென்றும், பல்வேறு தன்மையுள்ள மொழிக் குடும்பத்தில் முதலாய் ஏனையவற்றுக்குத் தொடக்கமாய் விளங்கும் தாய்மைப் பண்பு ஏனைய இயற்கை மொழிகளை விடச் சிறப்பானது.

18.6. பண்பாட்டுக் கல்வியறிவு பட்டறிவின் வெளிப்பாடு

தமிழின் உன்னதமே அதன் இலக்கிய வளங்கள் தாம். தமிழரின் அகத்திணைக் கோட்பாடும், புறத்திணைக் கோட்பாடும் இலக்கியப் படைப்பாளர்களான முன்னோர்களின் பண்பாட்டுக் கல்வியறிவின் வெளிப்பாடாகும். அகத்திணை புறத்திணை மட்டுமல்லாமல் மெய்யியல் கோட்பாடும், அறவழிக் கோட்பாடும் வேறெந்த இயற்கை மொழிப் படைப்பிலும் தமிழில் உள்ள அளவுக்கு இல்லை. இந்த இலக்கிய வளமே தமிழ்ப் புலவர் பெருமக்களின் அறிவுப் புலன் சான்றாக இன்றளவும் திகழ்கிறது.

18.7. பிறமொழித் தாக்கமில்லா தனித் தன்மை

உலகில் நிலவும் மொழிக் குடும்பங்களில் மூல மொழியாய்த் திகழும் மொழிகள் யாவும் வேர்ச் சொல்லாக்கத் திறன் குறைவால் பிறமொழிகளின் கூறுகளை சில துறைகளில் தாங்கி நிற்கின்றன. வினைகளால் ஒரு புதிய துறை சார்ந்த சொற்களைத் தமிழில் எளிதாக உருவாக்கும் அளவுக்கு இலக்கண வளம் செறிந்தது தமிழ். ஆகையினால் கடந்த காலமாயினும் சரி நிகழ்காலமாயினும் சரி எதிர்காலமாயினும் சரி எக்காலத்திலும் சமூகப் பண்பாட்டில் நிகழும் மாற்றங்களுக்கேற்ப தனித் தன்மையுடன் தனக்கேயுரிய இலக்கண செழுமையுடன் தமிழில் புதிய சொற்களை, துறைகளை உருவாக்குதல் எளிது. காட்டாக, கம்ப்யூட்டர் எனும் 20ஆம் நூற்றாண்டு சாதனம். உலகெங்கும் பல துறைகளில் பரவியது போன்றே தமிழ் நிலத்திலும் காலூன்றியது. பிறமொழிகள் அதில் வழங்கும் துறை சார்ந்த சொற்களை நேரடியாகப் பயன்படுத்தும் நிலையில் தமிழில் அதனைப் பொருளுணர்ந்து கணியம், கணினி, கணிப்பொறி என ஆக்கம் செய்து பயன்படுத்தல் ஒன்றே தமிழின் பிறமொழி கலவாத் தனித்தன்மை விளங்கிக் கொள்ளத்தக்கது.

18.8. இலக்கிய வளம்

தமிழர் தமிழ் இனம் எனும் மக்களினத்தைத் தெளிவாக அறியக்கூடிய காலக் கண்ணாடியாக விளங்குவது தமிழில் உள்ள இலக்கியங்களே. இலக்கியங்கள் வழியாகத் தமிழரைப் பார்க்கும் போது தமிழ் நிலத்தில் ஓங்கி இருந்த பண்பாட்டை, சமூக, பொருளாதார, இயற்கைக் கோட்பாட்டுடன் இணைந்த தமிழரின் வாழ்வை, வளத்தை அறிய இயலும். சங்க காலத்திலிருந்து தொடங்கும் தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒவ்வொரு காலம் தோறும் அந்தந்த சூழல்களுக்கேற்ப அரசன், தலைவன், தெய்வம், அற வாழ்க்கை, அக வாழ்க்கை, புற வாழ்க்கை, வீரம், இயற்கை வளம், பழக்க வழக்கம், வழிபாட்டு முறைகள் என்பன போன்றவற்றின் தாக்கம் எப்போதெல்லாம் அதிகரிக்கின்றதோ அப்போதெல்லாம் அது தொடர்பான இலக்கியங்கள் படைக்கப்பட்டன. எந்த இலக்கியமாக இருந்தாலும் அதில் கையாளப்படும் மொழியின் ஓசை, எழுத்து, சொல், பொருள் போன்றவை பொதுமைப் பண்புடன் துலங்கும் வகையில் இலக்கணக் கட்டமைப்புடன் இலக்கியங்கள் படைக்கப்பட்டுள்ளது.

தமிழிலக்கியத்தின் சிறப்பு : பொதுவில் இத்தகைய இலக்கியப் படைப்புகள் தனிநபர், தன்னார்வக்குழு, அரசு நிறுவனம் எனும் மூன்று தளங்களில் உருவாக்கப்பட்டன. சிற்சில இலக்கியம் தனிப்புலவர்களால் உருவாக்கப்பட்டது. அதைப் போலவே கூட்டாகப் புலவர்கள் குழுக்களும் நூல்களைப் படைத்துள்ளனர். இது போன்ற படைப்பிலக்கியப் பணிகளுக்குக் கொடையாளர்களாக அரசர்கள், அரசாங்கம் விளங்கியுள்ளது. சில அரசர்களே புலமை மிக்கவர்களாக விளங்கி இருந்தமையால் நேரடி இலக்கியப் படைப்பிலும் ஈடுபட்டுள்ளனர்.

பெரும்பாலான சங்க இலக்கிய நூல்கள் புலவர்கள் அமர்ந்த பெரும் குழுவால் உருவாக்கப்பட்டு அவைகளை பிறிதொரு புலவர் குழு அந்த இலக்கிய திறனை அதன் மொழியமைப்பை ஆய்வு செய்வர். பிறிதொரு புலவர் குழு. அப்படைப்பு எக்காலமும் தமிழர்களுக்குப் பொதுவில் பயன்பட வேண்டும் எனும் உயரிய சிந்தனையால் அதன் இலக்கணக் கட்டமைப்பை ஆய்ந்திடுவர். இவ்வாறு ஒரு படைப்பு ஆய்வுக்குப்பின்னரே மக்களை அடைந்ததால் மொழிப் பயன்பாடு, பொதுமைப்பணபாடு தமிழரிடம் மிகுந்திருந்தது. தமிழ் இலக்கிய நூல்களில் கற்பனை நயத்தை விட இன்புறு நோக்கு அதிகமிருக்கும். இயற்கையோடு இணைந்த வாழ்வியல் பண்பாட்டைத் தமிழர்கள் கொண்டிருந்ததால் அது இலக்கியப் படைப்புகளிலும் எதிரொலித்தன.

தமிழ் இலக்கியப் படைப்புகள் சங்க காலம் தொடங்கி 16ஆம் நூற்றாண்டு வரை செய்யுள் நடையிலேயே படைப்புகள் உருவாக்கம் நிகழ்ந்துள்ளது. ஐரோப்பியர் வருகைக்குப் பின்னரே உரைநடை எனும் புதிய நடை தமிழில் இடம் பெற்றது. பின்னர் ஈழத்து ஆறுமுகநாவலர் தொடங்கி நாடகத்தந்தை பம்மல் சம்பந்த முதலியார், திரு.வி.க. வரை பலர் உரை நடை இலக்கியம் வளர வித்திட்டனர். மேலைநாட்டு இலக்கியங்களையொத்த புதினங்கள், சிறுகதைகள் கட்டுரைகள் எனத் தமிழிலக்கியம் உரைநடை பரிமாணம் பெற்றது. செய்யுள் நடைகளில் படைத்த இலக்கியங்களில் இலக்கணக் கட்டமைப்புடன் பல்வேறு சிற்றிலக்கியங்களும், காப்பியங்களும் விரவியுள்ளன. இவற்றில் தூது, பிள்ளைத் தமிழ், பரணி, கலம்பகம், குறவஞ்சி, பள்ளு, உலா, பல்சந்தம் எனச் செய்யுள் வடிவ இலக்கியத்துள் உறுப்புகளாக விளங்குகிறது.

இது போலவே மரபு நடைச் செய்யுள் வடிவிலிருந்து புதுக்கவிதை, அய்க்கூ எனும் வடிவுடனும் தமிழ்க் கவிதை படைக்கப்படுகிறது.

தமிழ் தன் இலக்கியச் செல்வங்களால் இன்புறு, கற்பனை இலக்கியத்துடன் நில்லாமல் தொழில் நுட்பம் சார்ந்த அறிவியல் நூல்கள் படைப்பாக்கத்திற்கும் உட்பட்டுள்ளது. படைப்பின் எந்த உறுப்பாக இருப்பினும் அதற்கேற்ற சொல்வளமும், பொருள் வளமும் தமிழில் சிறப்புடன் விளங்குவதால் உலக இயற்கை மொழிகளின் இலக்கிய தளத்தில் தமிழுக்கென தனித்துவமான இடமுள்ளது.

18.9. உயர் சிந்தனை

இலக்கியத்தில் உயர் சிந்தனை என்பது அது எத்தகைய படைப்பாக விளங்கினும் மக்கள் சமூகத்திற்குப் பயன் விளைவிப்பதாக விளங்குதலே. இந்த அடிப்படைதான் தமிழ் இலக்கியங்களின் கருப் பொருளாக விளங்குகின்றன. தமிழ் இலக்கியங்கள் எத்தகைய காலத்தவையாக இருப்பினும் அவை மானுடம் போற்றும் உயர் சிந்தனைகளின் தொகுப்பாகவே மிளிர்வதைக் காணலாம். சங்க இலக்கியங்களில் பாடுபொருளாக விளங்கும் அகத்திணையும், புறத்திணையும், அறவியலும் தமிழர் வாழ்வுடன் இணைந்த உயர் சிந்தனை மரபாகும். உயர் சிந்தனை மரபுகள் இலக்கியத்தில் நிலை பெற்றிட வேண்டி இலக்கண நெறிகள் பிழையறப் பின்பற்றப்பட்டன. தனிமனிதர் தொடங்கி சமூகம், அரசு என்ற மூன்று நிலைகளிலும் கோட்பாடுகளை, வாழ்வியல் நெறிகளை வலியுறுத்தும் தமிழ் இலக்கியங்களில் உள்ள உயர்ந்த சிந்தனை மரபு உலக சிந்தனை மரபிலிருந்து உயர்ந்தோங்கியவை என்பது மறுக்கவியலாது.

18.10. கலை இலக்கிய தனித் தன்மை வெளிப்பாடு

தமிழ் இலக்கியங்களில் திகழும் கலை நயம் தனித் தன்மை பெற்றது. தமிழ் இலக்கியங்களில் தனிப்பாடலாயினும், புலவர்கள் குழு படைத்து, தொகுத்த பாடலாயினும் அரசர்கள் அரசு உதவியுடன் படைப்புகளை உருவாக்கிய இலக்கியங்களில் இழையோடும் கலை நயமும், கவி நயமும் போற்றத்தக்கவை.

ஏழைப்புலவரான சத்திமுத்தப் புலவர் அக்காலத்தில் பாடிப்பரிசு பெறும் வண்ணம் ஓர் ஊருக்குச் சென்றார். அது பனிக்காலம் என்பதால் மேலாடை இல்லா கவிஞர் குளிர்தாங்காமல் ஊர் புறத்தே இருந்த குட்டிச் சுவருக்கருகில் நடு நடுங்கி இருந்தார். அச்சமயம் இரைதேடப் பறந்த நாரையொன்றைப் பார்த்த சத்திமுத்தப் புலவரின் சிந்தனை கவிபுனையத் தொடங்கியது. அவர் கவிதையை உரக்கக் கூறிய போது அந்த வழியாக இரவுக் காவலுக்குத் தாமே பொறுப்பேற்ற அவ்வூர் அரசன் குட்டிச் சுவரருகே ஒரு கவிதை ஒலிப்பதைக் கண்டு கூர்மையாக அதைக் கேட்டனன்.

“நாராய் நாராய் செங்கால் நாராய்
பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன
பவளக் கூர்வாய் செங்கால் நாராய்
நீயு நின் மனைவியும் தென்திசை குமரியாடி
வட திசைக்கு ஏகி விராயின்
எம்மூர்ச் சத்திமுத்த வாவியுள் டங்கி
நனைசுவர்க் கூறைகளைக் குரற் பல்லி
பாடு பார்த்திருக்குமென் மனைவியைக் கண்டு
எங்கோ மாறன் வழுதி கூடலில்
ஆடையின்றி வாடையின் மெலிந்து
கையது கொண்டு மெய்யது பொத்திக்
காலது கொண்டு மேலே தழீஇப்
பேழையுள் இருக்கும் பாம்பென உயிர்க்கும்
ஏழையாளனைக் கண்டனும் எனுமே” (தனிப்பாடல் – சத்திமுத்தப்புலவர்)

என்று பாடினார் சத்திமுத்தப் புலவர். பாடி முடித்ததும் மறைவிலிருந்த அரசன் அவரறியாமல் தன் மேலாடையை அவர் மேல் போர்த்துமாறு வீசி விட்டு உடனிருந்த காவலரைப் பணிந்து இப்புலவரை அரண்மனைக்கு அழைத்து வர ஆணையிட்டுச் சென்றான்.

தமிழகத்தை ஆண்ட பல அரசர்களும் சிறந்த புலமையுடையோர். இயற்கையோடு இணைந்த வாழ்வில் ஊறித் திளைப்பவர்கள். அதனால் அவர்கள் நாட்டு நலத்துடனேயே தங்களின் புலமை வளர்க்கும் திறத்தால் அறிவு சார் புலவர் பெருமக்கள் எப்போதும் அரசவையில் சூழ்ந்திருக்குமாறு வாழ்ந்தனர். இது போன்ற அவைக்களத்தில்தான் கருத்துப் பரிமாற்றம், புதிய பொருட்களைப் பற்றிய ஆய்வு, இலக்கியம் படைத்தல் போன்ற தமிழ்ப் பணிகள் நடந்தது. மேற்காணும் அரசனும் அத்தகையவனே. நாரையின் கூர்மையான நீள மூக்கிற்கு இயற்கையான எடுத்துக்காட்டை அறியப் பல புலவர்களையும், நூல்களையும் ஆய்வு செய்தும் சரியான விடை தெரியாத நிலையில் அரசனின் ஐயத்தையும் போக்கி, தன் நிலையையும் தன் மனைவியின் பிரிவாற்றாமையையும் நயம்படக் கூறிப் பாடிய செய்யுள்.

ஒரு புலவனின் புலமை அவன் வறுமை. அரசனின் ஐயம் என்பவற்றை மட்டும் கொண்டதல்ல. அந்நாளில் ஆள்வோரும், புனைவோரும் இயற்கையோடு இணைந்த இயல்பு வாழ்க்கையில் திளைத்தனர். அவர்கள் வாழ்க்கை முழுவதும் ஒரு கோட்பாட்டுடன் விளங்கியுள்ளது. வாழ்வதற்கேற்ற நிலம், காலம் அமையப் பெற்றதால் அன்பு தழைக்கும் அமைதி வாழ்வைக் கொண்டிருந்தனர். அதனால் அவர்களின் சிந்தனை எச்சூழலிலும் இயற்கை வயப்பட்டதாகவே விளங்கியுள்ளது. இந்த பண்பே பொதுமையாக இக்கால இலக்கியங்களிலும் வெளிப்பாடாக விளங்குகிறது.

18.11. மொழிக்கோட்பாடு

உலகில் சில இனங்களின் அடையாளமாக மொழி காணப்படுகிறது. அந்த மொழியில் படைக்கப்பட்டுள்ள படைப்புகளும், மொழியின் பயன்பாடும், அதன் பொதுப்பண்புகளும் எல்லா காலங்களுக்கும் பொருந்தும் வகையில் மொழியானது தனக்குள் உரியவாறு கட்டமைப்பைக் கொண்டிருப்பதே அம்மொழியின் அடிப்படைக் கோட்பாடாகும். இந்த அரும் பண்புகள் தமிழுக்குண்டு.

மொழியியலாளர் ஒரு மொழியை மதிப்பிடுகையில் மொழியில் உருவான இலக்கியங்களைத் திறனாய்வு செய்வர். அதில் அம்மொழிக்குரிய இனம், அது வாழ்ந்த, வாழ்ந்துவரும் சூழல், காலம் எனும் மூன்றையும் நோக்குவர். ஏனெனில் ஒரு மொழியால் உருவான இலக்கியம் அச்சமூகத்தை மட்டுமே நமக்குத் தெரிவிப்பவை அல்ல. கூடவே அச்சமூகத்தைத் தொடர்ந்து வரும் மரபார்ந்த பண்பு நலன்கள் பலவற்றையும் தெரிவிக்கின்றன. எனவே தான் முன்னோர்கள் தமிழ் மொழிகளின் படைப்புகள் சமுதாயத்தில் தாக்கத்தை உருவாக்கும் வல்லமை கொண்டது என்கிற காரணத்தால் இலக்கியங்கள் கற்பதற்கும், கற்பிப்பதற்கும் வழங்கும்போது பொருளமைதி குறித்த கோட்பாட்டை வகுத்தனர். இந்த கோட்பாட்டை நெறி பிறழாமல் விளங்க இலக்கணத்தை வகுத்தனர். அதனால் தான் தமிழ்மொழி தனக்குள்ளே இலக்கணம் என்கிற கட்டமைப்பைப் பெற்றுள்ளதால் தரமிக்க இலக்கியப் படைப்புகள் அனைத்தும் சங்ககாலம் முதல் ஓர் ஒழுங்கமைதியுடன் பேணப்பட்டுவருகிறது. அத்துடன் வளர்ந்து வரும் புதிய துறைகள் எதுவென்றாலும் அதனையும் ஏற்றுத் தனித்தன்மை மாறாமல் தூய தமிழ்ச் சொற்களிலேயே அத்துறைகளை அறியும் வண்ணம் சீரிளமைத் திறனுடன் தமிழ் மொழி விளங்குகிறது. இத்திறனே அதன் கோட்பாடாகும்.

இந்த பதினோர் தகுதிப்பாடுகளும் தமிழுக்கு மட்டுமே பொருந்துவனவாம் என்பதுதான் தனிச் சிறப்பு சமஸ்கிருதத்துக்கு ஏழு தகுதிப்பாடுகளும், லத்தீன், கிரேக்க மொழிகளுக்கு எட்டுத் தகுதிப்பாடுகளும் மட்டுமே பொருந்துகின்றன என்பது மொழியியலாளர் கணிப்பு

19. தமிழ்ச் செவ்வியல் நூல்கள்

தமிழ் மொழி இலக்கியங்கள் ஐரோப்பியச் செம்மொழிகளான கிரேக்கம், இலத்தீன், சீனம், ஹீப்ரு, பாரசீகம், அரேபியம் ஆகியவற்றைக் காட்டிலும்  செறிவு மிக்கவை.  கி.பி. 600க்கு முந்தைய காலத்தைச் செவ்வியல் காலமாகக் கொண்டு அக்காலப்பகுதியில் தோன்றிய நூல்களைச் செவ்வியல் அவைகள்,

19.1.இலக்கணம்

தொல்காப்பியம், இறையனார் அகப்பொருள்

19.2.சங்க இலக்கியம் – எட்டுத்தொகை

நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு

19.3.பத்துப்பாட்டு

திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்

19.4.பதினெண் கீழ்க்கணக்கு

நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னாநாற்பது , இனியவை நாற்பது, கார்நாற்பது, களவழிநாற்பது, ஐந்திணைஐம்பது, ஐந்திணை எழுபது, திணைமொழிஐம்பது, திணைமாலைநூற்றைம்பது, பழமொழி, சிறுபஞ்சமூலம், திருக்குறள், திரிகடுகம், ஆசாரக்கோவை, முதுமொழிக்காஞ்சி, ஏலாதி, கைந்நிலை

19.5.காப்பியம்

சிலப்பதிகாரம், மணிமேகலை,

19.6. முத்தொள்ளாயிரம்

ஆகியனவாகும்.

20. முடிவுரை

தமிழ்மொழி இந்திய மொழிகளில் பழமையானது என்பதும், தமிழர்களே இந்நாட்டின் பழங்குடிகள் என்பதும், சிந்து சமவெளி நாகரிகம் தமிழர்களுடையதே என்பதும் இக்கட்டுரையின்வழி அறியப்படுகின்றது. அதுமட்டுமல்லாது சமஸ்கிருதம் உள்ளிட்ட எம்மொழியிலிருந்தும் தோன்றியதல்ல தமிழ்மொழி . அது சுயம்புவாக தானே தோன்றி மற்ற மொழிகளுக்கு தாயாக விளங்கக் கூடியது. இம்மொழியின் தோற்றத்தையோ இம்மொழி பேசும் மக்களின் தோற்றத்தையோ எக்கால எல்லைக்குள்ளும் அடக்க இயலாது. உயிர்கள் தோன்றிய காலத்தில் தோன்றிய மனித இனம் தமிழினம். இம்மொழி வணிகத்தாலும், படையெடுப்புகளாலும் பல்வேறு நாடுகளுக்குச் செல்லலாயிற்று. அதுமட்டுமன்றி இம்மொழியில் பல்வேறு மொழிச் சொற்களும் புகுந்துக் கொண்டது. இருந்தாலும் தன் தன்மை மாறாமல் இன்றளவும் நிலைத்து வருகின்றது. அது மட்டுமன்றி செம்மொழிக்குரிய அனைத்துத் தகுதிப்பாடுகளையும் தன்னக்தே கொண்டு செம்மொழியாம் தமிழ்மொழி எனச் சீரிய நடைபயின்று வருகின்றது என்பது இவ்வாய்வுக்கட்டுரையின் வழி அறியப்பட்டது.

துணைநூற்பட்டியல்

  1. அகத்தியலிங்கம், ச. திராவிட மொழிகள், (தொகுதி-1), மணிவாசகர் பதிப்பகம், சென்னை, 2002.
  2. அகத்தியலிங்கம், ச. திராவிட மொழிகள், (தொகுதி-2), மணிவாசகர் பதிப்பகம், சென்னை, 2002.
  3. மீனாட்சி சுந்தரனார், தெ. பொ. தமிழ் மொழி வரலாறு, நியூசெஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, 2022.
  4. மீனாட்சி சுந்தரனார், தெ.பொ. தமிழும் பிற பண்பாடும், நியூசெஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, 1998.
  5. விசுவநாதன், கி.ஆ.பெ. தமிழின் சிறப்பு, பாரி நிலையம், சென்னை, 1993.
  6. ஜான் சாமுவேல், ஜி. திராவிட மொழிகளின் ஒப்பாய்வு, ஆசியவியல் நிறுவனம், சென்னை, 2001.
  7. Encyclopedia Britannica. Vol.II.
  8. https://www.tamilvu.org/courses/hg300/hg304/html/hg304tso.htm

மதிப்பாய்வறிஞரின் கருத்துரை

Ø தனது மொழிச் செல்வப் பெருமையையும் பண்பாட்டு விழுமியத்தையும் கருத்திற் கொள்ளாமல் நடப்பியல் சார்ந்த, பயனற்ற ஒரு அலங்கார வாழ்வுக்குத தன்னை அர்ப்பணித்துக் கொண்டிருக்கும் இன்றைய தமிழ்ச சமுதாயத்திற்குக், குறிப்பாக இளைஞர் சமுதாயத்திற்குப் பயன்படும் ஒரு கட்டுரை இது.

Ø திராவிட மொழிகள் பற்றி உலகந்தழுவிய அறிஞர் பெருமக்களின் ஆய்வுக் கருத்துக்களை நிரலாகப் பயன்படுத்தியிருப்பதும் இந்திய மொழிக்குடும்பங்களைப் பற்றிய பகுப்பும் வரலாற்றுப் பின்புலமும் மொழியியல் ஆய்வு மாணவர்களுக்குப் பெருந்துணையாகலாம்.

Ø “உயர்பதவியில் இருப்பதனாலேயே அனைத்தும் தெரிந்தவர்கள்” என எண்ணிக் கொள்ளும் போலிகள் வலம் வரும் காலத்தில், வலிமையான தரவுகளோடும், பொருத்தமான மேற்கோள்களோடும் கட்டுரை அமைந்திருப்ப்து ஒரளவு ஆறுதலைத் தருகிறது.

Ø ஆய்வு நெறி முற்றாகப் பின்பற்றப்படவில்லை எனினும் அதற்குப் பங்கம் ஏற்படாத அளவுக்குக் கட்டுரை அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Ø பத்தி பிரிப்புக்களிலும் அவற்றுக்கு எண் மற்றும் பகுப்பு எண் கொடுப்பதிலும் ஆய்வாளர் இன்னும் கவனம் செலுத்தியிருக்க வேண்டும். சான்றாகச் செம்மொழிக்கான தகுதிகள் என்னும் பத்திக்கு எண் கொடுக்காமல், அதன் துணைப் பிரிவுகளுக்கு எண்கொடுத்திருப்பதைச் சுட்டலாம். செம்மொழிக்கான தகுதிகள் என்னும் பத்திக்கு எண் 11 என்றால் தொடர்ந்து வரும் உட்தலைப்புக்கள் 11.1. 11.2 11.3 11.4 என்று அமைந்திருக்க வேண்டும். அதுதான் ஆய்வு நெறி. இதுபோன்றே கட்டுரையின் அனைத்துப் பத்திகளுக்கும் உட்தலைப்புக்களுக்கும் எண் கொடுத்திருந்தால் கட்டுரை இன்னும் சிறந்திருக்கும்.

Ø சராசரியாகப் பக்கத்திற்கு ஐந்தென நூற்றுக்கும் மேற்பட்ட ஒற்றுப்பிழைகள் நீக்கமற இலங்கும் இறைவனைப் போல் கட்டுரை எங்கும் பரந்து கிடக்கின்றன. “மொழி என்பது ஒருவர் தன் உணர்வுகளை (ப்) பிறருக்கு அறிவிக்கப் பயன்படும் ஓர் தொடர்பு (க்) கருவியாகும்.” என இரண்டு ஒற்றுப் பிழைகளோடுதான் கட்டுரையே தொடங்குகிறது. வல்லினம் மிகுதலும் மிகாமையும் செம்மொழியான தமிழின் தனிச்சிறப்பல்லவா?


 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.