(Peer Reviewed) க.நா.சுவின் ‘அசுரகணம்’ – பித்தேறி அலையும் அடர் காமம்

0

ஜோ. ஜார்ஜ் இம்மானுவேல்
முனைவர் பட்ட ஆய்வாளர்
முதுகலைத் தமிழாய்வுத்துறை
ஜமால் முகமது கல்லூரி
திருச்சி – 20.
george.joshe@gmail.com
+91 9788784958

க.நா.சு தினமும் நாற்பது பக்கங்களுக்கு குறையாமல் எழுதிக் குவித்தார் என்று சொல்வர். அத்தனை பக்கங்கள் எழுதியிருக்க மாட்டார் எனப் ப்ரமிள் விமர்சித்ததும் ஊரறிந்தது. அவர் அப்படி எழுதினார் என்று எடுத்துக் கொண்டால், இந்நாவலை மூன்று நாட்களில் எழுதி முடித்திருக்கலாம். ஆனால், இதைத் திருப்திகரமாக எழுதி முடிக்க, பதினைந்து ஆண்டுகள் எடுத்துக் கொண்டேன் என முன்னுரையில் குறிப்பிடுகிறார் க.நா.சு. மேலும் இத்தனை காலம் நாவலின் தத்துவப் போக்கைப் கனப்படுத்த பயன்பட்டது என்று குறிப்பிடுகிறார். அவரது வார்த்தையிலிருந்தே, இது அவருக்கு எத்தனை முக்கியமான பிரதி என்பதை உணரலாம்.

தாயைச் சிறுவயதிலே இழந்த இளைஞன் வாலிபம் மீதூறும் காலத்தில் தாயொத்த வயதுடைய பெண்ணின்மேல் உண்டாகும் காமத்தை, அடக்கியாளத் துன்பப்படும் நிலையே நாவலின் களம்.

ஃப்ராய்டியம், இடிபஸ் உளச்சிக்கல் என நவீன உளவியல் கூறுகளின் புனைவாக்கமே அசுரகணம் என எடுத்துக் கொண்டு கடந்துவிடாதபடி செய்கிறது, இதன் ராமாயணத் தொன்மத்தின் மீளுருவாக்கப் பிறழ்ச் சித்திரிப்புகள்.

அவதூதர், பொய்த்தேவு போன்ற நாவல்களில் ஞானத்தை அடைந்த, நிம்மதியை அடைய எண்ணித் துறவு பூண்ட கதாப்பாத்திரங்கள், இடம்பெற்றிருக்கும். அந்நாவல்களை விடவும் க.நா.சுவின் இருத்தலியல்சார் கேள்விகள், விசாரணை எய்தி வெளிப்பாட்டை நோக்கி நகரும் நாவல், அசுரகணம்.

“ நாதசுர சப்தம் கேட்டால் யாருக்காவது சாவு நினைவுகளாக வருமோ?
எனக்கு  வருதே என்ன செய்ய?”

என்றுதான் நாவல் ஆரம்பிக்கின்றது.

மங்களம் எனக் குறிப்பிட்ட நாதத்தை அமங்களமாக உணரும் இளைஞன் எனத் தொடக்கத்திலே நாவலின் போக்கை உணரத் தருகிறார், ஆசிரியர். தன்னுடைய வித்தியாசமான பார்வையினாலே ராமன் ’செமி (பைத்தியம்)’ என்று வகுப்பு மாணவர்களாலும் பேராசிரியர்களாலும் சுட்டப்படுகிறான். படிப்பில் முதலிடம் என்றாலும் பொது காரியங்களில் ராமனுக்கு அறிவு போதாது என்கிற விவரணைகள் ராமனைச் சிந்தனையாளனாக, தனித்து நிற்கும் புத்தி ஜீவியாக முன்வைக்கிறது.

இடிபஸ் உளச்சிக்கல் என்பது எந்த இளைஞனுக்கும் இருக்கலாம். ஆனால், அதை ஓர் புத்திஜீவியான இளைஞன் எப்படி எதிர்கொள்கிறான் என்பதில்தான் பிரதியின் கனம் கட்டமைகிறது.

ராமனின் அதிகப்படியான சிந்தனைப் போக்கிற்குத் தன்னைத் தனிமைப் படுத்திக் கொள்ளுதல் முக்கியக் காரணமாக அமைகிறது. நடைப் பயணத்தில் அலாதியின்பம் காணும் ராமன், எங்கு சென்றாலும் நடந்தே செல்கிறான். அந்த நடைப் பழக்கமே அவனது சிந்தனைப் பெருக்கத்திற்கு உதவியும் புரிகிறது. மனிதர்களின் பலத்தரப்பட்ட முகவமைப்புகள் பற்றி வியக்கும் பார்வைகளுக்கு மத்தியில் க.நா.சு ராமனை, ஒவ்வொருவரின் தனித்துவமான கழுத்துகளைப் பற்றி எண்ணிப் பார்க்கவும் உறுப்புகளில் கூட மனிதர்களிடமுள்ள மாற்றங்களை எண்ணி வியக்கவும் வைக்கிறார்.

நூல்கள், தங்கை என இரண்டைத் தவிர அவனுடன் உரையாடுவதற்கு யாரும் இல்லை. அவன் அதை உருவாக்கிக் கொள்ளவுமில்லை. தாயைச் சிறுவயதிலே இழந்த பாரதி, தந்தையுடன் ஒருமித்து வாழ முடியாதது போலத்தான் ராமனும் வாழ்கிறான். தான் தன் தந்தையைப் போல் இருந்துவிடக் கூடாதென்ற தவிப்புகள், அவனைத் துண்டாடுகிறது. தன்னியல்பாக நடந்து கொள்ளும் வேளையில் அவனை யாராவது தந்தையைப் போல் நடந்து கொள்கிறாய் என்று சொல்லிவிட்டால் சமநிலை குலைந்துவிடுகிறான்.

சமநிலை அறுபடுவது, கற்பனையின் பிடியில் அவனைச் சமர்ப்பிக்கிறது. தன்னை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியாமல் அவதிப்படும் வேளைகளில், அவனைப் ஆட்கொள்ளும் கற்பனை நிஜம் போலவே தோற்றம் கொண்டு ஆளுகை செய்கிறது.

தன்னிலையின் இயல்பிலிருந்து பிறரைக் காண்பதிலுள்ள சிக்கல், அவர்களும் தன்னைப் போன்றே எல்லாக் காரியங்களையும் சிந்திப்பதாக மயக்கம் கொள்வது. ஆனால் ராமனின் தன்னிலையிலிருந்து எழும் சிந்தனை பிறர் தன்னைப் போல் எதையும் சிந்திக்கவோ அணுகவோ மாட்டார்கள் என்று மயங்குவதாக உள்ளது. தன்னுடைய போக்கை நியாயப்படுத்தும் சுயபச்சபாத உணர்வின், முழுத் தொகுப்பாகவே ராமன் எழுதப்பட்டிருக்கிறான்.

சாதாரண காரியத்திற்காகச் சென்ற ஓரிடத்தில் கண்டடையும் அசாதாரணத்திலிருந்து மீட்சிக் கொள்ள வழியுண்டா? என அலைகிறது ராமனின் மனம். தன் வகுப்புத் தோழியின் தாயாக இருக்கும் மத்திய வயதுடைய பெண்ணின் அழகு ராமனைக் கொதிப்படையச் செய்கிறது. அவனுலகில் அவளது ரூபம், இயல்விதி கடந்து எங்கும் வியாபித்தலைகிறது. பெருந்தாபம் கனலாகிக் கருத்தில் வெற்றி கொள்ள முனகும் உடலின் கொந்தளிப்பை, பூர்வ கவியின் கற்பனை மாந்தர்களைக் கொண்டு அணைத்துவிட நினைக்கிறார், க.நா.சு.

ராமன் அவளைச் சூர்ப்பணகையாகவே பார்க்கிறான். தனது இன்ப ஒடுக்கத்தைக் களவாடும் ரவிவர்மனின் மோகினியாகவே கண்டு கலங்குகிறான். இளமையை உடல் களையும் பருவத்தில், மீண்டுமாய் ருதுவெய்திய காலத்து பரிபூர்ண அழகு மேலெழுந்து மெருகேறுவதைக் கண்டு அல்லல் படுகிறான்.

அவனது மீட்புச் சுயமாய் நிகழமுடியும் என நம்பமுடியாத நிலைக்குப் போய்விடுகிறான். சூர்ப்பணகையின் மூக்கறுக்க லட்சுமணன் வேண்டுமெனத் தேடுகிறான். இல்லாத லட்சுமணனைத் தெரிந்தே வரவழைக்கத் துடிக்கிறான். தாபத்தை மேலும் எரியூட்டி வளர்ப்பதாக உள்ளது, ஹேமாவின் வருகை. ஹேமா அச்சூர்ப்பணகையின் மகள். அவளைத் தான் விரும்புவதாகச் சிந்திப்பதன் பின்னாலும் அவளது தாயே உள்ளதைக் கண்டடைவதோடு நாவல் முடிகிறது. மகளைக் கைப்பிடித்ததால் தாயின்மேல் நாட்டம் விலகியதாகச் சொல்லும் ராமன், ஹேமாவைத் தாயாகப் பார்க்கும் நிலையிலிருந்து தன்னுடைய நிரந்தர போராட்டத்தைத் தொடக்கிவிடுகிறான். தாய் நிலையை மனைவிக்கு வழங்குவதில் மீண்டும் குடிகொண்டுவிடுகிறது ஃப்ராய்டின் தத்துவம்.

இங்கே கேள்வி, அத்தாய்மைக் கருத்துரு இருவரில் யாருடைய தாயாக உருக்கொள்கிறது என்பதில் மீண்டும் முடிச்சு கிளைவிடுகிறது. நாவல் மறுவாசிப்பிற்கும், புதுதிறப்பிற்கும் கண்டடைதலுக்கும் அழைத்துச் செல்லும் பகுதி, இக்கேள்வியிலிருந்துதான் துளிர்க்கிறது.

இருபதாம் நூற்றாண்டின் முதற்பகுதி வரை பிராமணச் சமூகத்தில் பெரும்பாலான பெண்களுக்குத் தனது முதல் மகளை, மணம் முடித்து வைக்கும்போது வயது, நாற்பதிற்குள் தானிருக்கும். பண்பாட்டு ரீதியாக மணவயது பொருட்படுத்தப்படாத காலத்தில் இளவயதிலே பெண்கள் பேரப்பிள்ளைகளை எடுத்துவிடுவார்கள். இன்றும்கூட சொற்ப அளவில் பெண்கள் இளவயதிலே தன் இரண்டாம் தலைமுறையைக் காண்பதைப் பார்க்கிறோம். அப்படியான இளவயதுடைய தன்னுடைய வகுப்புத் தோழியின் தாயாக இருப்பதும் அவள் கவர்ச்சிகரமாக இருப்பதுமே ராமனைத் திக்குமுக்காட வைத்ததன், பின்னணி.

ராமன் என்கிற பெயருக்கு, பதிவிரதன் என்னும் பொருள் சூட்டப்பட்டு பல நூற்றாண்டுகள் கடந்துவிட்டன. அந்தத் தேய்வழக்குச் சிந்தனைப் போக்கை (Stereotype mentality) கூறுபோடுவது போல க.நா.சு, ராமனை நாலரை ரூபாய் கொடுத்து விலைமாதுவிடம் காதல் பயின்றதாகக் காட்சிப்படுத்துகிறார்.

தன் தந்தையை நகல் செய்து வாழக்கூடாதென ராமன் நினைக்கிறான். தந்தையை வெல்லவேண்டுமென்பதே அவனுடைய ஏக்கமாக இருக்கிறது. இங்கு தந்தையை வெல்லுதல் என்பது தந்தையின் குணாம்சத்தை, தான் அறிந்தும் அறியாமலும் சுவீகரித்துக் கொண்டு தளைப்பட்டுவிடக்கூடாது என்பதாகும். ராமனுடைய தந்தை இதிகாசத்தின்படி தசரதன் தானே. தசரதனின் போக இயல்பைத் தானும் பின் தொடர்ந்து யாருக்கும் தளைப்பட்டு (தசரதன் கையேயிடன் தளைப்பட்டதைப் போல்) விடக்கூடாதென்று ராமன் நினைக்கிறான்.

தசரதனின் போகந்துய்க்கும் பண்பு, நாவலின் தசரதனாகிய நாராயணனிடம் உள்ளதைச் சுட்டிக் காட்டுமிடம் நுட்பமானது. தான் காதல் பாடம் பயின்ற இடத்திற்குத் தந்தையும் அடிக்கடிச் சென்று வருபவர் என்பதால் அவருக்குத் தான் போய் வந்தது தெரிந்திருக்கும் என்கிறான் ராமன்.

அதற்கு முன்னும் பின்னும் நாராயணின் அச்செயலைப் பற்றி எவ்வித அறவியல் தீர்மானமும் (Moral correctness) ராமனிடமிருந்து வெளிப்படவில்லை. ராமனே அத்தீர்மானப் போக்கிற்கு எதிரான மனநிலை உள்ளவனாகவே தன்னைக் குறிப்பிடுகிறான். இவையாவும் நேரடி கூற்றாகவோ நனவோடையாகவோ இடம்பெறாமல் நுண்வாசிப்பில் வெளிப்படுவது, இந்நாவலின் சிறப்பு. க.நா.சுவின் மறைபிரதி என்று அசுரகணத்தைக் குறிப்பிடுவது சாலத் தகும்.

அந்தரங்கங்களிலிருந்து தப்பலாம் ஆனால் அந்தரங்கக் கதைகளிலிருந்து தப்புவது என்பது ஞானமடைந்ததாகத் திரிபுற்று சாக்கடைக் குழியில் சவமாகி மிதக்கும் சோமு பண்டாரத்தின் நிலைதான்.

மானுட வாழ்வுள்ளவரை அவனுக்கு ஒழுக்கவியல் சிந்தனையும் போதிக்கப்பட்ட அறவியலை மீறுவதால் உண்டாகும் குற்றவுணர்வும் உள்ளவரை, அசுரகணங்களை அவன் எதிர்க்கொண்டுத்தான் ஆக வேண்டும். அதை நுட்பமாகவும் எக்காலத்திற்கும் பொருந்துவதாகவும் பிரதியாக்கிய க.நா.சு, இந்நாவலுக்காக என்றும் நினைக்கப்படுவார்.

க.நா.சுவின் அசுர வார்த்தைகளாலே இக்குறுங்கட்டுரையை நிறைவுச் செய்கிறேன்:

”சிறை (புலன்) வாழ்வென்பது சுவடு தேய்ந்த பாதையிலே வளைய வருவதாகும்”.

முதன்மை நூல்:

  1. க.நா.சு, அசுரகணம், எழுத்து பிரசுரம், சென்னை – 40, முதற்பதிப்பு – 2020.

துணைமை நூல்:

  1. ஜெயமோகன், நவீனத்தமிழிலக்கியஅறிமுகம் கிழக்கு பதிப்பகம், சென்னை – 14, முதற்பதிப்பு – 2011.

ஆய்வறிஞர் கருத்துரை (Peer Review): 

கட்டுரையாளர் அசுரகணம் நாவலைப் படித்துத் தெளிவாக உள்வாங்கி இருக்கிறார். தமிழ் இலக்கிய மரபில் வரும் பெருந்திணை சார்ந்த கதையாடல் இந்நாவலில் வந்திருப்பதை உளவியல் கண்ணோட்டத்தில் இடிபஸ் சிக்கலாக எடுத்துக் கூறுவது சிறப்பு. ராமனுக்கும் அவனது தந்தையாகிய நாராயணனுக்கும் இடையே இருக்கும் குணம் சார்ந்த தலைமுறைப் போக்கிலிருந்து விடுபட என்னும் ராமனின் முயற்சிகளைக் கட்டுரையாளர் மிகவும் கவனத்துடன் உற்று நோக்கி இருக்கிறார். ஒவ்வொரு மகனும் தனது தந்தையின் சாயலில் இருந்து விடுபட்டுத் தனக்கான அடையாளத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று எண்ணுகிற, போராடுகின்ற மனநிலை இங்குச் சிந்திக்கத்தக்கது. ராமனின் அப்பா பெண் சார்ந்த ஈடுபாட்டில் மயங்கி திரிவதில் இருந்து தான் மீண்டு வர வேண்டும் என்று எண்ணுகின்ற இயக்கப் போக்கு நாவலின் உட்சரடாக இருப்பதை இக்கட்டுரையாளர் தெளிவாக வெளிப்படுத்தியிருக்கிறார். க.நா.சுவின் படைப்பாற்றலை வெளிப்படுத்தும் பாங்கில் இந்தக் கட்டுரை அமைந்துள்ளது.


பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *