(Peer Reviewed) அகஇலக்கியத்தில் முதுபெண்டும் முதுவாய்ப் பெண்டும்

ச.கண்மணி கணேசன்(ப. நி.),
முன்னாள் முதல்வர்& தமிழ்த்துறைத் தலைவர்,
ஸ்ரீகாளீஸ்வரி கல்லூரி, சிவகாசி.
முன்னுரை
அகஇலக்கியத்தில் இடம்பெறும் முதுபெண்டு, முதுவாய்ப் பெண்டு ஆகிய இரு பாத்திரங்களின் பெயர்க் காரணத்தையும் தன்மைகளையும் எடுத்துக் காட்டுவது இக்கட்டுரையின் நோக்கம் ஆகும். முதுபெண்டை முதுவாய்ப் பெண்டு எனப் பிறழ உணரும் இடத்தை எடுத்துக்காட்டித் தெளிவிக்க வேண்டிய தேவை உள்ளது. அகப்பாடல்கள் முதல்நிலைத் தரவாக அமைய; உரையாசிரியர் கூற்றுகளும் பிறவும் இரண்டாம்நிலைத் தரவாக அமைந்து; விளக்கமுறை ஆய்வாகக் கட்டுரை உருப்பெற்றுள்ளது.
முதுபெண்டிர்க்குரிய தகுதியும் வயதும்
பெண்ணானவள் மணம்புரிந்து; கற்புநெறி வழுவாது இல்லறத்தில் நிலைத்திருந்து கருவுயிர்த்தவுடன் முதுபெண்டு ஆகிறாள். மகப்பேறால் ஏற்பட்ட திதலை (stretch marks) மங்கலத்தின் அடையாளமாகக் கருதப்பட்டது. திருமணம் என்ற பந்தம் அளிக்கும் பொறுப்பு அவளது கடமை ஆகிறது. ‘முது-‘ என்னும் பெயரடை ‘வயதான’ எனும் பொருளைத் தராது; முழுமை எனும் பொருளைத் தருகிறது.
சுற்றத்தார் சூழ ஓம்புகின்ற சூல் உடையளாய்ப் புதல்வனை ஈன்று; பாயலில் படுத்திருந்தாள் காதல் மனைவி. ‘இதுகாறும் இளம்பருவத்தினளாய் இருந்தவள்; இனித் திதலை அல்குல் உடைய முதுபெண்டு ஆயினள்’ எனத் தலைவன் தன் கையிலிருந்த குவளை மலரால் அவளது வயிற்றைத் தடவிக் கிண்டல் செய்ய அவள் நாணத்தில் கண்களை மூடி மகிழ்ந்தாள்.
“புதல்வன் ஈன்றெனப் பெயர் பெயர்த்து அவ்வரித்
திதலை அல்குல் முதுபெண்டாகித்
துஞ்சுதியோ மெல் அஞ்சில் ஓதி எனப்” (நற்.-370)
பாராட்டும் தலைவனின் மகிழ்ச்சி, பெருமிதம், கேலி அனைத்தும்; முதுபெண்டு ஆவதற்குரிய தகுதி இல்லறநெறி நின்று மகவைப்பெறுதல் என்று புலப்படுத்துகிறது. ‘முதுபெண்டு’ எனும் தொடரில் உள்ள ‘முது’ எனும் அடை ‘முழுமை’ என்ற பொருளில் வழங்குவது காண்க.
தலைவன் புறத்தொழுகத் தன் கடமைகளைச் செய்வதில் கவனத்தைத் திருப்பும் மகப்பேறுற்ற தலைவி தன்னை முதுபெண்டிருள் ஒருத்தி எனக் கூறுகிறாள்.
“இருமருப்பு எருமை ஈன்றணிக் காரான்
உழவன் யாத்த குழவியின் அகலாது
பாஅல் பைம்பயிர் ஆரும்” (குறு.-181)
என்ற வருணனை; இரண்டு மருப்போடு ஈன்றணிமை உடைய எருமைக் காரானைக் காட்டுகிறது. அதன் கன்றை உழவன் கட்டிப்போட்டுச் சென்றுவிட்டான். எருமை மேயச் செல்ல வேண்டும்; ஆனால் கன்றைப் பிரிந்து தூரமாகச் செல்லாமல் தான் இருக்கும் இடத்திலுள்ள; பால்பிடித்த கதிர்களை மேய்வது; பல நுட்பமான பொருட்களை உணர்த்தும் உள்ளுறை ஆகிறது.
இரண்டு மருப்புள்ள எருமை என விதந்து சொல்வது உட்பொருள் கருதியே ஆகும். திருமணத்தால் ஒரு பெண் பிறந்தவீட்டில் இருந்து தன் வீட்டினுள் நுழைகிறாள். அவளது வாழ்க்கை இரண்டு குடும்பங்களின் பெருமையைப் பேசக்கூடியதாக அமைய வேண்டும் என்பதையே ‘இருமருப்பு எருமை’ என்ற தொடர் சுட்டுகிறது.
அகன்று செல்லாமல் இருந்த இடத்திலேயே எருமைக் காரான் பசியாற இயலும். பால் பிடித்த கதிர்களைக் கூட உணவாகக் கொள்ள முடியும். அதனால் ஏற்படும் இழப்பு கருதிக் கடிந்து எருமையை யாரும் விரட்டவில்லை. அவ்வளவு வளமான நன்செய்; இல்லறக் கடமைகளுக்கேற்ற செல்வமிகுந்த மனைவாழ்க்கையைக் குறிக்கிறது.
எருமைக்குத் தாய்மைப் பிணைப்பே முதன்மை ஆவது போலத்; தலைவிக்குப் பெற்ற மகவைப் பேணுவதே முதற்கடமை ஆகிறது. உழவன் கன்றைப் பாதுகாப்பு கருதிக் கட்டிப் போட்டுள்ளான்; குடும்பக் கட்டமைப்பு தலைவிக்கும் அவளது மகவுக்கும் பாதுகாப்பை அளிக்கிறது.
தலைவனின் புறத்தொழுக்கம் பற்றிப் பிறருடன் பகிர்ந்து கொள்ளத் தலைவி விரும்பவில்லை. துன்பத்தின் இடையில் தலைவன் ஒழுக்கம் பற்றிப் பேசுவது; மேலும் துன்பத்தை மட்டுமே கொடுக்கவல்லது எனத் தன்னைத் தேற்ற முயலும் தோழிக்குத் தடை போடுகிறாள்.
“திருமனைப் பல கடம் பூண்ட
பெருமுது பெண்டிரேம் ஆகிய எமக்கே” (மேலது)
எனத் தன் தகுதியைத் தானே நிலைநாட்டுகிறாள். திருமணம் என்ற பந்தத்திற்குரிய கடமைகள்; குழந்தை வளர்ப்பு, மூத்தோர் பேணல், விருந்து புறந்தரல், மனை மேலாண்மை; உறவுதாங்கல், நட்பு ஓம்பல், சுற்றம் போற்றல் எனப் பல. அவற்றை ஆற்றவேண்டிய முதுபெண்டு ஆகிவிட்டமை அவள் வாய்மொழியாக வெளிப்படுகிறது.
திருமணச் சடங்காற்றும் முதுபெண்டிர்
தலைவன் தன் திருமணத்தன்று முதுபெண்டிர் செய்தவற்றை நினைவு கூர்கிறான்.
“உச்சிக் குடத்தர் புத்தகல் மண்டையர்
பொதுசெய் கம்பலை முதுசெம் பெண்டிர்
முன்னவும் பின்னவும் முறைமுறை தரத்தரப்
புதல்வர்ப் பயந்த திதலை அவ்வயிற்று
வாலிழை மகளிர் நால்வர் கூடிக்
கற்பினின் வழாஅ நற்பல உதவிப்
பெற்றோர்ப் பெட்கும் பிணையை ஆகென
நீரொடு சொரிந்த…
வதுவை நன்மணம்” (அகம்.-86)
புரிந்த ஞான்று நிகழ்ந்த முக்கியச் சடங்காகிய மங்கல நீராட்டை வருணிக்கிறான். தலைக்கு மேல் தாங்கிய குடத்தை உடையவராய்; சுடுமண்ணாலான வட்டமான புதிய கலத்தில் அச்சடங்கிற்குரிய சுண்ணம், பூ, நெல் முதலிய மங்கலப் பொருட்கள் ஏந்தியவராக முதுபெண்டிர் நின்றனர். முன்னர் நீருள் சொரிய வேண்டியவை இவை; பின்னர் சொரிய வேண்டியவை இவை எனத் தம்முள் பேசியபடியே கொடுத்தனர். அவருள் புதல்வனைப் பெற்றுத் திதலை பொருந்திய வயிற்றை உடைய நால்வர் அணிகலன்களுடன் தலைவியை நீராட்டினர். ‘கற்பு நெறியிலிருந்து வழுவாமல் இல்லறத்திற்கு நலன் விளைக்கும் செயல்களுக்கு உதவி; உன்னை மனைவியாகப் பெற்றவன் மனம் நிறையும்படி; என்றும் அவனைப் பிணைந்திருக்கக் கடவாய்’ என முதுபெண்டிர் வாழ்த்தினர்.
நோய் நாடும் சடங்கில் முதுபெண்டிர்
நுதல் பசந்திருந்த மகளின் நோய் பற்றி அறியக் கட்டுவிச்சியை அழைத்துக் காரணம் கேட்கிறாள் அன்னை. அக்கம்பக்கத்தில் இருந்த முதுபெண்டிரை உடன் வைத்துக் கொண்டு; நெல்லைச் சுளகில் போட்டு; மகளை முன்னர் நிறுத்தி; ஏற்பாடுகளைச் செய்கிறாள். பின்னத்தூர் நாராயணசாமி ஐயர் ‘செம்முது பெண்டிர்’ கட்டுவிச்சியைக் குறிக்கிறது எனச் சொல்வதை (நற்றிணை- ப.356-357) ஏற்றுக் கொள்ள இயலவில்லை. ஏனெனில் கட்டுவிச்சியை அகப்பாடல்கள் முதுவாய்ப் பெண்டு என்கின்றன.
முதுவாய்ப்பெண்டின் தொழிலும் வாழ்வும்
ஏழ்மை உடைய முதுவாய்ப் பெண்டின் தொழில் தெய்வத்தை வணங்கிக் கட்டுப்பார்த்துக் குறி சொல்வதே.
வேலன் வெறியாட்டு முடிந்த நாளின் நள்ளிரவில்; தலைவனைக் களவில் கூடிமகிழ்ந்த தலைவியின் கூற்றில் முதுவாய்ப்பெண்டு குறி சொன்னமை இடம் பெறுகிறது.
“நெடுவேள் பேணத் தணிகுவள் இவள் என
முதுவாய்ப் பெண்டிர் அதுவாய் கூற” (அகம்.-22).
வேலன் வெறியாட்டு நிகழ்ந்தது என்கிறாள். மகளின் வளை
நெகிழ்ந்தவுடன் கட்டுவிச்சியிடம் குறி கேட்ட தாய்க்கு; முருகு
அணங்கியதாக உரைத்த;
“… முதுவாய்ப்
பொய்வல் பெண்டிர் பிரப்பு உளர்பு இரீஇ”ச்
(அகம்.-98) செய்த சடங்கு; தெய்வத்திற்குப் படையல் வைத்து நிகழ்ந்தமை தெரிகிறது. முதுவாய்ப் பெண்டு ஆநிரை கவரும் மறவர் சீறூரில் குடியிருந்த ஏழ்மை மிகுந்தவள்.
“கறவை தந்த கடுங்கால் மறவர்
கல்லென் சீறூர் …
முதுவாய்ப் பெண்டின் செதுகால் குரம்பை”
(அகம்.-63) எனும் பாடலடிகள் வலியற்ற காலை உடைய குடிலே அவளுக்குரியது என்கிறது.
‘முதுவாய்’ என்ற அடைமொழியின் காரணம்
கட்டுப்பார்த்துக் குறிசொல்வதை வாய்விட்டு நெடுங்காலமாகச் செய்து வந்தவர் ஆதலால்; ‘முதுவாய்’ என்னும் அடைமொழி கொடுக்கப்பட்டது.
‘பேசி முதிர்ந்த வாய்’ என ந.மு.வேங்கடசாமி நாட்டாரும் ரா.வேங்கடாசலம் பிள்ளையும் சேர்ந்து உரைப்பதும் (அகநானூறு களிற்றியானைநிரை- ப.254, பா.98). ‘முதிய வாய்மையை உடைய’ என்று ஒளவை சு.துரைசாமிப் பிள்ளை கூறுவதும் இக்கருத்தை அரண் செய்கின்றன (பதிற்றுப்பத்து- ப.311, பா.66).
‘முதுமை வாய்த்தலை உடைய’; ‘முதுமை வாய்ந்த’ என்றும் (அகம்.- 63&98); ‘அறிவு வாய்த்தலை உடைய’ என்றும் (அகம்.-22; அகநானூறு மணிமிடை பவளம்- ப.178, பா.195& நற்.200& குறுந்தொகை- ப.151, பா.78) ஒரே தொடருக்கு வேறுவேறு பொருள்கள் சொல்வது தொடக்க காலத் தெளிவற்ற நிலையைக் காட்டுகிறது. ஆயினும் கட்டுவிச்சி முதுவாய்ப் பெண்டு என்றே குறிப்பிடப்பட்டாள் என்பதில் மட்டும் எந்த ஐயமுமில்லை.
‘முதுவாய்’ எனும் அடைமொழி தொகையிலக்கியத்தில் ‘முதுவாய் வேல’ (அகம்.-195), ‘முதுவாய்க் குயவ’ (நற்.-200), ‘முதுவாய்க் கோடியர்’ (குறு.-78) ‘முதுவாய் இரவல’ (பதிற்.-66) எனப் பிற பெயர்களோடும் இணைந்து வழங்குகிறது. அவற்றுக்குரிய விளக்கம் ‘முதுவாய்’ என்னும் அடைமொழியின் பொருளை விளக்க உதவும்.
மட்கலம் வனையும் குயவனும் வாய்விட்டு விழா அறைகிறான் (நற்.-293). வழிவழியாக அறிவிக்கும் உரிமை பெற்று இருந்ததால் அவன் முதுவாய்க் குயவன் ஆனான்
கோடியர் என்னும் கூத்தர் காலங் காலமாக வாய்ப்பாட்டு பாடிக்கொண்டே ஆடும் தொழிலில் ஈடுபட்டு இருந்ததால் அவர்களை முதுவாய்க் கோடியர் என்று அழைத்தனர் எனப் புரிகிறது. இரவலர் என்பது பாணர், கூத்தர், பொருநர் புலவர் ஆகிய அனைவர்க்கும் உரிய பொதுப்பெயராகும். நெடுங் காலமாகப் பரிசில் வேண்டிப் பாடி ஆடி இசைத்துப் பாடல் இயற்றி இரப்போர் அனைவரும் ‘முதுவாய்’ என்னும் அடைமொழிக்கு உரியவர் ஆயினர். தொன்றுதொட்டு முருகு அணங்கிற்கு வெறியாடி வழிபட்டுப் பாடியவன் ஆதலால்; வேலன் முதுவாய் உடையவன் ஆகிறான்.
‘முதுவாய்’ என்னும் அடைமொழி பெரிதும் திணைமாந்தர்க்கே உரியதாகிறது. கோடியர், இரவலர், வேலன் மூவரும் திணைமாந்தராவது போல; முதுவாய்ப்பெண்டும் திணைமாந்தராகிய மறவர் சீறூரைச் சேர்ந்தவள் எனக் கண்டோம்.
வாய்விட்டுக் குறிசொல்லும் தொழிலை நெடுங் காலமாகச் செய்து வந்ததால்; கட்டுவிச்சி ‘முதுவாய்’ என்னும் அடைமொழி பெறுகிறாள்.
‘செம்மை’ என்னும் அடைமொழியின் காரணம்
முருகு அணங்கியதால் உண்டான நோய் என்று கட்டுவிச்சி கூறியதால்; அன்னை வெறியாட்டிற்கு ஏற்பாடு செய்வாள் என்ற எதிர்பார்ப்பினைச் சிறைப்புறத்து நிற்கும் தலைவன் காதுபடப் பேசுகிறாள் தோழி.
“செம்முது பெண்டிரொடு நெல்முன் நிறீஇக்
கட்டிற் கேட்கும்” (நற்.-288)
எனும் பாடலடிகட்கு உரை கூறும் போது; பின்னத்தூர் நாராயணசாமி ஐயரின் கட்டுப்பார்க்கும் முறை பற்றிய விளக்கம் மிகச் சிறப்பாக அமைகிறது. ஆனால் ‘செம்முது பெண்டிர்’ அவர் கூறும் கட்டுவிச்சியாகிய முதுவாய்ப் பெண்டிரினின்றும் வேறானவர்.
முதுபெண்டிர் செம்மை என்னும் அடைமொழி பெற்று ‘முதுசெம்பெண்டிர்’ என அழைக்கப்படுவதை முன்னர்க் கண்டோம் (பார்க்க: திருமணச் சடங்காற்றும் முதுபெண்டிர், அகம்.-86). அதுபோன்றே ‘செம்முது பெண்டிர்’ என்ற வழக்கும் அமைந்துள்ளது. கற்பின் அடையாளமாகிய அருந்ததியைச் சுட்டும் விண்மீன் சிவந்தது ஆதலால்; செம்மீன் எனப் பெயர் பெறுவதை ஒட்டிக் (பதி.-31); கற்பொழுக்கம் தொடர்பாகப் பெண்களுக்கும் ‘செம்மை’ எனும் பெயரடை பயின்று வருகிறது. நல்லொழுக்கத்தின் அடையாளமாகிக்; ‘குறையற்ற’ என்றும் பொருள்படும். எனவே ‘செம்முது பெண்டிர்’ கற்புநெறி வழுவாது; மகப்பயந்து இல்லறம் நடத்துவோர் என உறுதிப்படுகிறது.
முடிவுரை
‘முது-’ என்னும் பெயரடைக்கும் வயதிற்கும் தொடர்பு இல்லை. இளம்பெண்ணாயினும் மணம் புரிந்து; கற்புநெறி வழுவாது இல்லறத்தில் நிலைத்திருந்து கருவுயிர்த்தவுடன் முதுபெண்டு ஆகிறாள். மகப்பேறால் ஏற்பட்ட திதலை மங்கலத்தின் அடையாளம் ஆகும். திருமணம் என்ற பந்தம் அளிக்கும் பொறுப்பு அவளது கடமை ஆகும். ‘முது-‘ என்னும் பெயரடை முழுமை எனும் பொருளைத் தருகிறது. திருமணச்சடங்கையும் நோய்நாடும் சடங்கையும் ஆற்றும் தகுதி முதுபெண்டிர்க்கு உண்டு. திணைமாந்தராகிய கட்டுவிச்சிகள் ஏழ்மை நிலையில் கட்டுப்பார்த்து வாய்விட்டுக் குறிசொல்லும் தொழிலை நெடுங்காலமாகச் செய்தவர் ஆதலால் ‘முதுவாய்ப் பெண்டிர்’ எனப்பட்டனர். முதுவாய்ப் பெண்டையும் அகவன் மகளையும் ஒருசேர வைத்துப் பார்ப்பது அடுத்தகட்ட ஆய்விற்கு உரியது.
துணைநூற் பட்டியல்
- அகநானூறு களிற்றியானைநிரை- 2009- கழக வெளியீடு, சென்னை.
- அகநானூறு மணிமிடை பவளம்- 2007- கழகவெளியீடு, சென்னை.
- குறுந்தொகை- 2007- கழக வெளியீடு, சென்னை.
- நற்றிணை- 2007- கழக வெளியீடு, சென்னை.
- பதிற்றுப்பத்து- 2007- கழக வெளியீடு, சென்னை.
ஆய்வறிஞர் கருத்துரை (Peer Review):
“அகஇலக்கியத்தில் முதுபெண்டும் முதுவாய்ப் பெண்டும்” என்னும் தலைப்பில் அமைந்த இக்கட்டுரையைப் பலமுறை பயின்று கட்டுரையின் அனைத்துக் கூறுகளையும் உள்வாங்கி ‘வல்லமை’ முன்மதிப்பீட்டு விதிகளைக் முழுமையாகக் கருத்திற்கொண்டு வழங்கும் மதிப்பீடு:
1. ஒருவருடைய கபடற்ற உள்ளத்தைப் பாராட்ட வேண்டிய நிலையில் ‘குழநதையுள்ளம்’ கொண்டவர்’ எனச் சொல்வதற்குப் பதிலாகச் ‘சிறுபிள்ளைத்தனமாக’ என்று சொன்னால் என்ன ஆகும்? இத்தகைய சொற்பிறழ்வுகள் பொருட் பிறழ்வுகளுக்குக் காரணமாகி இலக்கியச் சுவையுணர்திறன் பழுதுபட வாய்ப்புண்டு. ‘முதுபெண்டிர்’ என்னும் சொல்லும் ‘முதுவாய் பெண்டிர்’ என்னும் சொல்லும் அத்தகையன. அவற்றிடை நிலவும் அக்காலப் பொருள் வேறுபாட்டைத் தெளிவுபடுத்திக் காட்டுவதன் மூலம் இருவேறு பாத்திரங்களின் தனித்தன்மையைக் வலிமையான தரவுகளால் கட்டுரையாளர் காப்பாற்றியிருக்கிறார், காட்சிப்படுத்தியிருக்கிறார்.
2. மரபுவழி அமைந்த இலக்கியக் கூறுகளை ஆய்ந்து எளிய தமிழில் விளக்க முயலும் ஆய்வுக் கட்டுரையாளருக்கு வாழ்த்துகள்!
3. ‘முதுபெண்டிர்’ என்னும் சொல்லில் ‘முது’ என்பது முதுமை என்னும் மூலத்திலிருந்து வந்ததாகக் கொள்ளாமல் முதிர்ச்சியின் வடிவமாகக் கொண்டு ‘முழுமை’ என்னும் பொருள் காண்பது ஏற்புடைத்தே. பெண்மை தாய்மையில் நிறைவடைகிறது என்பது உண்மையே.
4. ‘முதுவாய்ப் பெண்டிர்’ என்பது ‘தெய்வத்தை வணங்கிக் குறிசொல்லும் கட்டுவிச்சியையே குறிக்கும்’ என்பது கட்டுரையாளரின் ஆய்வுத் தெளிவைக் காட்டுவதாக உள்ளது.
5. கேலி, தூரம், வயது, கட்டிப்போட்டு, காதுபட’ முதலிய இக்காலச் சொற்கள். கட்டுரைப் பொருண்மை, வெளிப்பாட்டு உத்தி, ஆய்வு நெறி, சான்றுகள், கையாளப்பெற்றிருக்கும் மொழி நடை இவற்றோடு பொருந்துமாறு இருப்பதாகக் கருதவியலவில்லை. பாதாம்பருப்புப் பாயசத்தில் வேர்க்கடலை எதற்கு?
கருத்துரைக்கும் வழிகாட்டலுக்கும் நன்றி ஐயா
Sk
மிக அருையான கட்டுரை