(Peer Reviewed) தமிழ்க்கவிதைகளில் வெளிப்பாட்டு உத்திகள் (திருக்குறள்)

0

புலவர் முனைவர் கோ.சுந்தராம்பாள்
உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை
பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி,
விளார் புறவழிச்சாலை,
தஞ்சை மாவட்டம் – 613006.
மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

தமிழ்க்கவிதைகளில் வெளிப்பாட்டு உத்திகள் (திருக்குறள்)

முன்னுரை

கவிதை, கட்டுரை, சிறுகதை, நாவல் என இலக்கிய வடிவங்கள் பல. இவற்றுள் கவிதைக்குரிய வடிவங்கள் பா, இனம் எனப் பல்கிப் பெருகும். பாக்களுள் வெண்பா தலையாயது.  எழுவகை வெண்பாக்களில் குறள் வெண்பா என்பதும் ஒன்று.  தமிழ்க்கவிதை வடிவங்களில் மிகக் குறுகிய வடிவம் இதுதான். ‘குறுகத்தரித்த குறள்’ என்பது ஆன்றோர் வாக்கு. குறள் என்பது யாப்புக்கான குறியீடு. அது திருக்குறளைக் குறிக்கிறபோது அடையடுத்த ஆகுபெயராய் நிற்கும். நுட்பமாக நோக்கினால் ‘குறள்’ என்னும் யாப்பே அடைபெற்று அழைக்கப்படுவது தெரியவரும். அதாவது ‘குறள்’ என்பது கருவியாகுபெயராய் நூலை உணர்த்திப் பின் அடைபுணர்த்து அழைக்கப்படுகிறது என்பதாம். திருக்குறளில் திருவள்ளுவர் தமது கருத்துக்களைக் குறள் வெண்பாவில் பதிவு செய்திருந்தாலும் அத்தனைக் குறட்பாக்களையும் ஒரே நெறியில் பதிவு செய்யவில்லை. தமது மெய்யறிவால் உணர்ந்த சிந்தனைகளைப் பல உத்திகளைக் கையாண்டு பதிவு செய்திருப்பதை  அறிய முடிகிறது. ‘தமிழ்க்கவிதைகளின் வெளிப்பாட்டு உத்திகள்’ என்னும் பேராய்வுக் களத்தில் ஒரு துளியாக இக்கட்டுரை வடிவமைக்கப்படுகிறது.

கட்டுரையின் கருதுகோள்

‘திருக்குறளில் வெளிப்பாட்டு உத்திகள்” என்பதையே இக்கட்டுரை தனக்குரிய கருதுகோளாகக் கொண்டு அமைகிறது.

ஆய்வுக்களம் – எல்லை – நோக்கம் – பயன்

முப்பால்களாக இயங்கும் திருக்குறளில் மூன்றாவது பகுப்பாகிய காமத்துப்பால் புலனெறிவழக்கப் புனைவாகத் தலைமக்கள் கூற்றுப் பகுதியென அமைந்துவிடுகிறது. ஆதலின் காமத்துப்பாலில் திருவள்ளுவர் நேரடிக் கூற்றாக எதனையும் பெற முடியாத நிலையில் ஏனைய அறம், பொருள் என்னும் இருபாலில் அமைந்துள்ள ஆயிரத்து எண்பது குறட்பாக்களே (1080) ஆய்வுக்களமாகவும் எல்லையாகவும் கொள்ளப்படுகிறது.

வாழ்வியல் நெறிகளைப் பதிவு செய்ய திருவள்ளுவர் தேர்ந்தெடுத்துக் கொண்ட குறுகிய வடிவமான குறள் வெண்பாவில் அவர் கையாண்ட உத்திகளை ஆராய்வதையே இக்கட்டுரை தனது நோக்கமாகக் கொள்கிறது.

திருக்குறளில் அமைந்துள்ள வெளிப்பாட்டு உத்திகளை ஆராய்ந்து வடிவமைக்கப்படும் இக்கட்டுரையால் தமிழியல் ஆய்வுக்களப் பொருண்மை   விரிவும் ஆழமும் உடையதாகும் என்பதையும் இலக்கியச் சுவைஞர்கள் உத்திகளின் நோக்கத்தையும் திருவள்ளுவரின் படைப்பாளுமையையும் அவர்தம் பண்பாட்டுக் கூறுகளையும் ஒருசேர உணர்ந்து கொள்ள இயலும் என்பதையும் பயனாகக் கருதுகிறது.

ஆய்வு அணுகுமுறையும் நெறிமுறையும்

திருக்குறளில் விரவிக்கிடக்கும் பல்வகை வெளிப்பாட்டு உத்திகளை அடையாளம் கண்டு வெளிப்படுத்துவதற்கேற்ற வகையில் ‘அமைப்பியல்’ அணுகுமுறையும், திருக்குறளுக்குப் பிந்தைய பல்வகை இலக்கிய உத்திகளின் பயன்பாடு ஒப்பிட்டுக் காட்டப்படுதலின் ‘ஒப்பீட்டு முறைத் திறனாய்வு’ நெறியும் இக்கட்டுரையில் பின்பற்றப்பட்டுள்ளன.

இலக்கியத்தில் உத்திகள்

ஒரே பொருளை ஒன்றுக்கும் மேற்பட்ட முறைகளில் வெளிப்படுத்தும் நெறிக்கு ‘உத்தி’ என்று பெயர். “இதனை வேற மாதிரிச் செய்யலாமா?” என்று கணித ஆசிரியர் கேட்பதைப் போன்றது இது. கணிதம் எல்லாருக்கும் இனிக்காது. இலக்கியம் பெரும்பாலும் இனிக்கும். இதனை எளிமையாக விளக்கலாம். தலைமக்கள் இருவருக்குமிடையில் காதல் வளர்கிறது. வளர்கின்ற காதல் ஊராருக்குத் தெரியவரும். இது உலகியல். இது இலைமறை காயாகத் தெரியும் போது அதனை ‘அம்பல்’ என்று இலக்கியங்கள் கூறும். ‘இன்னாருக்கு இன்னாரோடு தொடர்பு’ எனத் தெளிவாகத் தெரிகிறபோது அது அலர் என அடையாளப்படுத்தப்படும். இதனை ‘அலர் அறிவுறுத்தல்’ என அகத்துறையிலக்கணம் கூறும். தற்காலத் திரையிசைப்பாடலில் அலருக்கு ஆளான நான்கு உள்ளங்களை வெளிப்படுத்தும் பாடலுக்கான காட்சியைச் சித்திரிக்கும் இரண்டு பதிவுகளை இங்கே காணலாம்.

“கண்ணா! ஜோடிக்குயில் மாலையிடுமா? இல்லை ஓடிவிடுமா? 1

என்று தலைமகள் ஐயப்படுகிறாள்.

‘கண்ணே நானிருக்க சோகம் என்னம்மா? கங்கை வற்றி விடுமா?” 2

என்று தலைமகன் ஆறுதல் கூறுகிறான். தன் அவசரத்திற்கான காரணத்தைத் தலைமகள் அங்கே பதற்றத்துடன் பதிவிடுகிறாள் இப்படி!

“உன்னை எண்ணி மூச்சிருக்குது உள்ளூரில்
என்னென்னமோ பேச்சிருக்குது” 3

இந்தப் பதற்றம் ஊராரின் அலர் தன்னைத் துரத்த தன்னை விரைந்து மணமுடித்துக் கொள்ள வேண்டும் எனத் தலைமகனை வற்புறுத்துவதாக அமைகிறது. “உள்ளூரில் என்னென்னமோ பேச்சிருக்குது!” 4 என்னும் தொடரே அலரைக் குறிப்பது. இதே அலர்தூற்றலை மற்றொரு பாடல் வேறு மாதிரியாகப் பதிவு செய்திருக்கிறது.

“பழச  மறக்கலையே,
பாவி மவ நெஞ்சு துடிக்குது!
ஒன்னையும் என்னையும் வச்சு
ஊரு சனம் கும்மியடிக்குது” 5

“உள்ளூரில் என்னென்னமோ பேச்சிருக்குது’ என்னும் வெளிப்பாடு ஓர் உத்தி. ‘ஊரு சனம் கும்மியடிக்குது’ என்பது மற்றோர் உத்தி. பொருள் ஒன்றுதான். தொல்காப்பியம் தொடங்கி இன்றைய திரையிலக்கியம் வரை அலருக்கு அஞ்சுபவள் பெண்ணாகவே சித்திரிக்கப்படுகிறாள் என்பதும் நோக்கத்தக்கது. எளிய புரிதலுக்காகவே இந்தத் திரையிசைப்பாடல் எடுத்துக்காட்டாகக் கொள்ளப்பட்டது. (இத்தகைய திரைப்பதிவுகள் முழுமையான இலக்கியத் தகுதியினைப் பெறுவதற்கு உரியனவே என்பது கட்டுரையாளர் கருத்து)

பழந்தமிழ் இலக்கியப் பொருண்மைகளும் உத்திகளும்

குறட்பாவில் பதிவு செய்யப்பட்டிருக்கும் உத்திகள் பற்றிய ஆய்வே இதுவாயினும் கட்டுரைப்பொருள் விளக்கம் கருதி ஒரு சில எடுத்துக்காட்டுக்கள் இந்தப் பத்தியில் தரப்படுகின்றன. பழந்தமிழ் இலக்கியத்தின் பாடுபொருள் பற்றிய கொள்கை ‘அகம் புறம்’ என வரையறுக்கப்பட்டது. இவை ஒவ்வொன்றும் தனித்தனியாக எழுவகைத் திணைகளாகவும் பகுக்கப்பட்டன. அதாவது அகம் என்பது பொருட்பாகுபாடு. முல்லை, குறிஞ்சி முதலியன திணைப்பாகுபாடு. புறம் என்பது பொருட்பாகுபாடு. ‘வெட்சி கரந்தை’ முதலியன திணைப்பாகுபாடு. ஒவ்வொரு பொருட்பகுதியின் உட்பிரிவுகளான திணையும் துறைகளுமே ‘பாடுதுறை’களாயின. இவற்றை மீறி எந்தப் பாடலையும் யாரும் பாடிவிட இயலாது. முடியாது. கூடாது. அகத்திணை முழுமையும் தலைமக்கள் கூற்றுப்பகுதிகளே! அதாவது தலைவன், தலைவி, தோழி, செவிலி, நற்றாய், கண்டோர் முதலியோரின் கூற்றுப் பகுதிகளே கவிதைக் களங்களாகும். எந்தப் புலவனும் காதலைப் பற்றிய தனது கருத்தினை நேரடியாகப் பதிவு செய்ததாகக் குறிப்பில்லை. காதலைப் பற்றிய எந்தக் கருத்தும் அதனை வெளிப்படுத்திய பாத்திரங்களின் கருத்தாகவே நோக்கப்படும். இந்தப் புலனெறி வழக்கம் திருக்குறள் காமத்துப்பாலிலும் தொடர்ந்தது. வரையறைக்குட்பட்ட இந்தக் குறுகிய பொருட் பகுதிகளுக்குள்ளேயே இத்தனை இலக்கியங்கள் என்றால் அவற்றைக் ‘கூறியது கூறல்’ என ஒதுக்க இயலுமா? இயலாது. காரணம் ஒரு துறையைப் பற்றிப் புலவர் பலர் பாடியிருந்தாலும் ஒவ்வொன்றும் ஒவ்வொருவகை உத்தியினால் சிறந்து நிற்கிறது. ‘ஐங்குறுநூறு’ முதலிய இலக்கியங்களில் ஒரு துறைக்குப் பத்துப்பாடல்கள் எனப் பாடப்பட்டிருந்தாலும் ஒவ்வொரு பாடலும் தனித்தன்மையுடையன. புறத்திணைத்துறைகளும் அத்தகையனவே மருதன் இளநாகனார் பாடிய கையறுநிலையும் மாங்குடி  மருதனார் பாடிய கையறுநிலையும் ஒன்றாகாது. உத்திகளால் சிறந்திருந்தாலேயொழிய இத்தகைய இலக்கியங்கள் இவ்வளவு காலம் நிலைபெற்றிருக்க இயலாது. ‘அரைத்த மாவையே அரைத்திருந்தாலும்’ பலகாரச் செய்முறை மாறுபட்டிருப்பதால் சுவை வேறுபடுவதைப் போல இந்தக் கவிதைகளின் உத்திகள் மாறுபட்டிருப்பதால் காலத்தை வென்று நிற்கின்றன எனலாம்.

மறையோன் புகழும் கோவலன்

காப்பியத்தின் பாத்திரங்கள் படைப்பாளனால் உருவாக்கப்படுகின்றன. கவிதைச் சுவையும் கதைப்போக்கும் பின்னிப் பிணைந்த நிலையில் தேவையற்ற பதிவுகளைத் தவிர்த்துவிடுவது படைப்பாளனுடைய உரிமை. அந்த வகையில் குற்றமற்ற கோவலன் பாண்டியனால் கொலைக்கு ஆளாகத் தன் கணவன் குற்றமற்றவன் என்பதை உறுதி செய்யும் பொறுப்பில் கண்ணகி. இந்தக் கதையில் கோவலன் துன்பத்திற்கு என்ன காரணம் என்பதை யாரும் அறிந்து கொள்ள முடியாது. காப்பியத்தைப் பொருத்தவரையில் அவன் காரணமின்றிக் கண்ணகியைப் பிரிந்து மாதவியிடம் சென்றுவிட்டான் என்பதைத் தவிர கொலைபடும் அளவுக்கு அவன் செய்த குற்றம் ஏதுமில்லை. தன்னைவிட்டுப் பிரிந்து இல்லறத்தில் சிக்கல் ஏற்படுத்திய கோவலனுக்காகப் பரிந்து மதுரையைக் கண்ணகி தீக்கிரையாக்குகிறாள் என்றால் அவனுடைய பிற செயல்கள் அவளைக் கவர்ந்திருக்க வேண்டும். சமுதாயத்தில் அங்கீகரிக்கப்படாத ஒருவனுக்காக ஒரு பத்தினிப்பெண் வேற்று நாட்டு அரசவையில் நீதி கேட்டு நிற்கிறாள் என்றால் அன்றைய சமுதாயம் கோவலனை நன்கு அறிந்திருக்க வேண்டும். குறைந்த அளவு புகாரில் அவனுடைய பெருமைகள் உயர்ந்த நிலையில் இருந்திருக்க வேண்டும். கோவலன், கண்ணகி மறைவு புகாரின் பேரவலத்திற்குக் காரணமானது என்பதை அறியமுடிகிறது. ஆனால் இந்தப் பெருமைக்கான செயல்களைக் காப்பியத்தில் எந்த இடத்திலும் பதிவு செய்ய இயலாது. செய்திருந்தால் காப்பியச் சுவை குன்றிவிடக் கூடும் என அடிகள் கருதியிருக்கலாம். அவன் மாதவியோடு வாழ்ந்த பதினாறு ஆண்டு காலத்தில் புகாரில் அவன் செய்த புகழுக்குரிய செயல்களை இளங்கோவடிகள் பதிவு செய்ய விரும்புகிறார். அடுத்த காதைகளில் கொலைபடும் கோவலன் மீது கற்பாருக்கு அனுதாபம் ஏற்பட வேண்டும் என அவர் உள்ளம் விரும்புகிறது. தக்கதொரு இடத்தினை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் அவருக்கு மாடலமறையோன்  கிடைத்துவிடுகிறான். மதுரை நோக்கிச் செல்லும் கோவலனையும் கண்ணகியையும் நோக்கி அவன் கோவலன் செய்த அறச்செயல்களையெல்லாம் பட்டியலிடுகிறான். மணிமேகலை பிறந்தநாள் விழாவில் அந்தணனைப் புடைத்தழிக்க முயன்ற மதங்கொண்ட யானையின் மீதேறி அடக்கிய செய்தியைப்

“பிடர்த்தலை இருந்து பெருஞ்சினம் பிறழாக்
கடக்களிறு அடக்கிய கருணை மறவ!” 6

என்று கூறிப் பாராட்டுகிறான் மாடலமறையோன். கீரிப்பிள்ளையைக் கொன்று மனைவி செய்த பாவத்துக்காக அவளைப் பிரிந்த கணவனைக் கண்டு அவன் குடும்பத்தை ஒன்று சேர்த்து வைத்த வரலாற்றைத்,

“தானம் செய்தவள் தன் துயர் நீக்கிக்
கானம் போன கணவனைக் கூட்டி
ஒல்காச் செல்வத்து உறுபொருள் கொடுத்து
நல்வழிப்படுத்த செல்லாச் செல்வ!”7

என்னும் வரிகள் காட்டுகின்றன. வெளியூர் சென்று திரும்பி வந்த கணவனுக்கு அவன் மனைவி பற்றிய தவறான தகவலைத் தந்தவனைச் சதுக்கப்பூதம் அடித்துக் கொல்ல எத்தனிக்க, அவன் தாய் பதற, பொய்க்கரி புகன்ற அவனைக் காப்பாற்ற முயல்கிறான் கோவலன். மறுத்த பூதம் பொய்க்கரி கூறியவனைக் கொல்ல அவனுடைய தாயோடு சுற்றத்தாரையும் கோவலன் காப்பாற்றினான்.

“பத்தினி ஒருத்தி படிற்றுரை எய்த
மற்றவள் கணவற்கு அறியோன் ஒருவன்
அறியாக் கரிபொய்த்து அறைந்துணும் பூதத்து
கறைகெழு பாசத்துக் கையகப்படலும்
பட்டோன் தவ்வை படுதுயர் கண்டு
கட்டிய பாசத்துக் கடிது சென்றெய்தி
என்னுயிர் கொண்டு ஈங்கு இவனுயிர் தாவென
நன்னெடும் பூதம் நல்கா தாகி
நரகனுயிர்க்கு நல்லுயிர் கொண்டு
பரகதி இழக்கும் பண்பு ஈங்கில்லை
ஒழிக நின் கருத்தென உயிர்முன் புடைப்ப
அழிதரும் உள்ளத்து அவளொடும் போந்து அவள்
சுற்றத்தோர்க்கும் தொடர்புறும் கிளைஞர்க்கும்
பற்றிய கிளைஞரின் பசிப்பிணியறுத்துப்
பல்லாண்டு புரந்த இல்லோர் செம்மல்” 8

மறையோனின் இந்தப் பேச்சை அமைதியாகக் கேட்டுக் கொண்டிருக்கிறாளே தவிர மறுமொழி சொன்னாள் அல்லள். மகிழ்ந்தாளும் அல்லள். வருந்தினாளும் அல்லள். ‘இத்தகைய நல்லவனா கோவலன்?” என்னும் நல்லெண்ணத்தைக் கற்பார் மனத்தில் வரவழைப்பதற்காக அடிகள் செய்திருக்கும் காப்பிய உத்தி இது.

இராமனைக் காப்பாற்றும் கம்பன் உத்தி

பரம்பொருளாகிய பெருமாளை மனிதனாக்கிக் காப்பியம் படைத்த கம்பன் சில நேர்வுகளில் பிழைசெய் இராமனைக் காப்பாற்றும் நிலைக்கும் வரவேண்டியிருப்பதையும் காண முடிகிறது. வேறு வகையாகச் சொன்னால் தான் படைத்த பாத்திரத்தின்வழித் தானே செல்ல வேண்டிய நிலை வருகிறபோது சற்று நிதானிக்க வேண்டியிருக்கிறது என்பதாம். சுக்ரீவன் வாலியிடையே நடந்த போருக்கும் இராமனுக்கும் எள்ளின் முனையளவும் தொடர்பில்லை. வாலிக்கும் இராமனுக்கும் நேரடிப் பகையென்பதே இல்லை. தன்னைக் கொல்ல இராமன் வந்திருக்கிறான் என்று தன் மனைவி தாரை கூறியபோது அந்த நொடிவரை,

“உழைத்த வல் இரு வினைக்கு ஊறு காண்கிலாது
அழைத்து அயல் உலகினுக்கு அறத்தின் ஆறெலாம்
இழைத்தவர்க்கு இயல்பு அல இயம்பி என் செய்தாய்?
பிழைத்தனை பாவி! நின் பெண்மையால் என்றான்” 9

என்று நம்பி, மனைவியைக் கண்டித்தவன் வாலி. இராமன் மீது அவன் கொண்டிருந்த அளவற்ற பக்தியும் நம்பிக்கையும் இந்தப் பாடலில் வெளிப்படுவதைக் காணலாம். இராமன் வாலியை மறைந்திருந்து கொன்ற செயல் அந்த நம்பிக்கைக்குக் கேடாக முடிந்துவிடுகிறது. இராமனுடைய அம்பினால் வீழ்த்தப்பட்டுக் கிடந்த வாலி இராமனை ஏசுகிறான். இருவருக்குமிடையே நடந்த உரையாடல் முடிவில் வாலி “தன்னை மறைந்திருந்து கொல்ல வேண்டிய அவசியம் என்ன?” என விடையிறுக்க இயலாத வினாவைக் கேட்கிறான். கம்பன் இங்கே தடுமாறுகிறான். இராமனைப் பேசவைப்பதா? பேசவைத்தால் என்ன விடை கூற வைப்பது? தன் கவியுரிமையைப் பயன்படுத்திக் கொள்ளும் கவியரசர், இராமனைப் பேச வைக்காது இலக்குவனைப் பேச வைக்கிறார். ஒரு பாட்டால் ஒரு பாத்திரத்தைக் காப்பாற்றி விட்டதாகக் கம்பன் எண்ணுகிறான்.

“………. மாண்ட
செவ்வியோய்! அனையது ஆக! செருக்களத்து உருத்து எய்யாதே
வெவ்விய புளிஞர் என்ன விலங்கியே மறைந்து வில்லால்
எவ்வியது என்னை என்றான் இலக்குவன் இயம்பலுற்றான்”10

ஒருவன் எழுத வேண்டிய தேர்வை வேறொருவன் எழுதினால் இன்றைய நிலையில் அது தண்டனைக்குரிய குற்றம். வகுப்பில் வினவப்பட்ட மாணவனைத் தவிர்த்து வேறொரு மாணவன் விடையிறுத்தால் இறுக்கப்படும் விடை சரியாகவே இருந்தாலும் ஆசிரியர் சினங்கொள்வாரேயன்றிச் சிரித்து ஏற்றுக் கொள்ள மாட்டார். ஆனால் இராமன் என்னும் தலைமகனின் பிம்பம் அல்லது பரிமாணம் சேதாரமடைந்து விடக்கூடாது என்பதற்காகக் கவிஞன் தனது ‘வீட்டோ’ அதிகாரத்தைப் பயன்படுத்தி இராமனைக் காப்பாற்றுகிறான்.

“முன்பு நின்தம்பி வந்து சரண்புக, “முறையிலோயைத்
தென்புலத்து உய்ப்பென் என்று செப்பினன். செருவில் நீயும்
அன்பினை உயரிருக்கு ஆகி “அடைக்கலம் யானும் என்றி
என்பது கருதி அண்ணல் மறைந்து நின்று எய்ததென்றான்”.11

“கவிக்குலத்தரசும் அன்ன கட்டுரை கருத்திற்கொண்டான்” என்றெழுதும் கம்பன் இலக்குவன் சொன்னது இதயத்துச் சொற்களல்ல அவை ‘இட்டுக்கட்டியன’ என்பதைப் புரிந்து கொள்கிறான். இங்கே அறிந்து கொள்ள வேண்டியது காப்பியத் தலைமைப் பாத்திரத்தின் பெருமையைக் காப்பாற்றவே தம்பியை விடையிறுக்கும் உத்தியைக் கம்பன் கடைப்பிடித்திருக்கிறான் என்பதேயாகும்.

மேற்கண்ட சான்றுகள் படைப்பாளன் தன் உள்ளக்கருத்தினைப் பதிவிடுவதற்குரிய வெளிப்பாட்டு முறையே உத்தி என்பதைக் காட்டுகின்றன. ‘கம்பன் கண்ட இலக்கிய உத்திகள்’ என்னும் தமது ஆய்வு நூலில் ஆராய்ச்சிப் பேரறிஞர் ச.வே.சுப்பிரமணியனார் இது பற்றி விரிவாக ஆராய்ந்திருக்கிறார் என்பது தகவலுக்காக இங்கே பதிவு செய்யப்படுகிறது.

ஆடூஉ முன்னிலை – மகடூஉ முன்னிலை

கீழ்க்கணக்கில் அமைந்துள்ள நீதிநூல்கள் சிலவற்றில் சில பாடல்களில் கருத்துக்களை வெளிப்படுத்தும் முறையில் ஒரு தனித்த நெறி பின்பற்றப்பட்டு வந்துள்ளது. புலவர் தனது கருத்தினை ஆசிரியர் கூற்றாக அமைக்காமல் ஆண்மகன் ஒருவனைப் பார்த்துக் கூறுவது போலவோ பெண்மகள் ஒருத்தியைப் பார்த்துக் கூறுவது போலவோ அமைக்கப்பட்டுள்ளது. முன்னதற்கு ‘ஆடூஉ முன்னிலை’ என்றும் பின்னதற்கு ‘மகடூஉ முன்னிலை’ என்றும் பெயர். இந்த நெறி திருக்குறளில் அறவே இல்லை. அங்கே அனைத்தும் ஆசிரியர் கூற்றே. வெளிப்பாட்டு உத்தியில் நிலவும் இந்த மாற்றம் சிந்திப்பதற்குரியது. இன்னொரு நுட்பமும் இந்நூல்களில் பதிவாகியிருக்கிறது. தலைமக்கள் கூற்றுப் பகுதியாகவே பதிவு செய்யப்பட்டு வந்த அகப்பொருள் செய்திகளையும் மகடூஉ முன்னிலையில் பதிவு செய்திருக்கும் புதுமை கீழ்க்கணக்கு நூல்களில் காணக்கிடக்கின்றது.

அகப்பொருள் பதிவு

திருக்குறள் கீழ்க்கணக்கு நூல்களில் வைத்து எண்ணப்படினும் ஏனைய பதினேழு நூல்களுக்கும் அதற்கும் நிலவும் வேறுபாடுகள் பல. பொருண்மையிலும் வெளிப்பாட்டு உத்தியிலும் கட்டமைப்பு உட்பட ஏனைய கூறுகளிலும் திருக்குறளின் தனித்தன்மையை மற்ற நூல்களால் பெற இயலவில்லை. இதனால் ஏனைய நூல்களைக் குறைத்து மதிப்பிடுவதாக எண்ணுதல் ஆகாது. அந்தந்த நூல்களின் தரமதிப்பீடு மற்றொரு நூலின் தர மதிப்பீட்டைப் பாதித்துவிடக் கூடாது என்பதே கருத்து. இந்த நூல்களில்தாம் அவ்விரு முன்னிலை உத்திகளும் கையளாப்பட்டுள்ளன.

“முயங்காக்கால் பாயும் பசலை மற்று ஊடி
உயங்காக்கால் உப்பின்றாம் காமம்! – வயங்கோதம்
நில்லாத் திரையலைக்கும் நீள் கழித் தண்சேர்ப்ப!
புல்லாப் புலப்பதோர் ஆறு” 12

என்பது “தலைமகற்கு வாயில் நேர்ந்த தோழி தலைமகள் புலவி நீங்கச் சொல்லியது” என்னும் துறையின் கீழ் அமைந்துள்ள நாலடியார் பாடல். துறைப்பொருளை அல்லது பொருளாகிய கூற்றினைப் பாத்திரத்தை நோக்கித்தான் கூறவேண்டுமே தவிர பாத்திரத்தோடு தொடர்பில்லாத முன்னிலை போலக் கருதி விளித்துக் கூறுதல் கீழ்க்கணக்கு நூல்களில் காணும் புதுமையாகும். இதுமாதிரியான துறைகளுக்கு அமைந்த பாடல்கள் அகத்திணை மாந்தர்களை நோக்கியே அமைந்திருக்குமேயன்றி இவ்வாறு உருவாக்கிய முன்னிலையை நோக்கி அல்லது முன்னிலைக்குரிய நபரை நோக்கி அமைந்ததற்குச் சான்றுகள் இல்லை!. “தலைமகள் பிரிவாற்றாமையைத் தோழிக்குச் சொல்லியது” என்னும் துறையில்,

“கண்மூன்று உடையானும் காக்கையும் பையரவும்
என் ஈன்ற தாயும் பிழைத்ததென்? – பொன்னீன்ற
கோங்கரும்பு அன்ன முலையாய்!  பொருள்வயின்
பாங்கனார் சென்ற நெறி” 13

என்று அமைந்திருக்கிறது. இந்தப் பாடலில் தலைமகள் தோழியை நோக்கிச் சொல்லியிருக்க வேண்டும். ஆனால் தோழியை மகடூஉ முன்னிலையாக்கி உரைப்பது காண்க!

“பிறங்கருவி நல் நாட!” 14

“இலங்கருவி நல் நாட!” 15

“விறல் மலை நல் நாட!” 16

என வருதல் காண்க. “இருநோக்கு இவள் உண்கண் உள்ளது” 17 என்று தலைவியை நோக்கிப் படர்க்கையில் தனக்குத்தானே பேசிக்கொள்வானேயன்றித் தலைவியை முன்னிலைப்படுத்திக் கூறமாட்டான்.

“யான் நோக்குங்காலை நிலன் நோக்கும் நோக்காக்கால்
தானோக்கி மெல்ல நகும்” 18

எனத் தனக்குத்தானே சொல்லிக் கொள்வான். “நன்னீரை வாழி அனிச்சமே!”19 என்றும் “மலர்காணின் மையாத்தி நெஞ்சே!”20 “கருமணியிற் பாவாய் நீ!”21 எனப் பாத்திரமல்லாதவற்றை முன்னிலையாக்குவாரேயன்றிக் கீழ்க்கணக்கின் ஏனைய நூல்களைப் போல முன்னிலையை உருவாக்கிக் கூறுதல் குறளில் காண இயலாத நெறியாம். இதுகாறும் எடுத்துக்காட்டிய சான்றுகள் சிலவற்றால் படைப்பாளன் தான் கருதியது முடித்தற்குத் தானே உருவாக்கிக் கொள்ளும் இலக்கிய வெளிப்பாட்டு நெறிக்கே உத்தி என்பதும் இது இலக்கணத்திற்காகக் கூறப்படும் முப்பத்திரண்டு உத்திகளின் வேறானது என்பதும் பெறப்படும். அவை இலக்கண நூற்பாக்களைப் பற்றியன. இவை இலக்கியத்தின் கருத்து வெளிப்பாடு பற்றியன.

திருக்குறளும் உத்தியும்

தமது கருத்துக்களை மிகக் குறுகிய கவிதைக் கட்டுமானமான குறள் வெண்பா யாப்பில் எழுதுவது என்பது திருவள்ளுவர் எடுத்த முடிவு. அந்தக் குறள் வெண்பாவில் கருத்துக்களை ஒரே மாதிரியாக அவர் வெளிப்படுத்தவில்லை என்பதுதான் இக்கட்டுரை உணர்த்த விரும்பும் கருத்து. 1330 குறட்பாக்களும் செய்திகளே! ஒவ்வொரு தத்துவங்களே! ஒவ்வெரு அனுபவங்களே! ஆனால் இவற்றைப் பல முறைகளில் அவர் வெளிப்படுத்தியிருக்கிறார். பல உத்திகளைக் கையாண்டிருக்கிறார். ஒரு கருத்தினை நிரல்படச் சொல்லுவார். ஒன்றினை வினா வடிவில் பதிவு செய்வார் வேறொன்றினை வியங்கோளால் அமைத்துக் காட்டுவார். சிலவற்றைத் தொழிற்பெயர்களால் கூட்டியுரைப்பார். வேறு சிலவற்றை முன்னிலை ஏவலால் ஆணையிடுவார். சிலவற்றைத் தன்மைப் பன்மையால் விளக்கிக் காட்டுவார். இன்னும் பல உத்திகளையும் கையாண்டு விளக்கியிருப்பார்.

வெளிப்பாட்டில் வெளிப்படும் வினா

கருத்துக்களை வெளிப்படுத்தும் உத்திகளில் திருவள்ளுவரைப் பெரிதும் கவர்ந்திருப்பது வினா உத்தியே!. அவ்வுத்தியில் அமைந்த குறட்பாக்களை நோக்கினால் இந்த உண்மையைப் புரிந்து கொள்ளலாம். சமுதாயத்தின் மீதும் தனிமனிதன் மீதும் சலிப்பு வந்த நிலையில் அவருடைய இந்த வெளிப்பாடு அமைந்திருக்கக் கூடும். ‘என்னத்த படிச்சு என்னத்த செய்யறது?” என்னும் வழக்கு நோக்குக. “பணம் இருந்து என்னங்க செய்யறது?” என்னும் வழக்கையும் நோக்குக. இந்த வழக்கைத்தான் வள்ளுவர் உத்தியாகக் கடைப்பிடித்திருக்கிறார் எனக் கருதலாம்.

  • ஞானத்தின் வடிவமான இறைவனை வழிபடுவதே நூல்களைக் கற்பதன் பயன் என்னும் ஒரு கருத்தினைக் ‘கற்றதனால் ஆய பயன் என்?’ என வினவுவார்.22
  • அறிவின் மற்றொரு பயன் உயிர்கள் மீது அன்பு காட்டுவது. இதனை ‘அறிவினான் ஆகுவது உண்டோ’ என வினவி அதற்கான விடையினைத் தொடர்ந்து பிறிதின் நோய் தன் நோய் போல் போற்றாக்கடை’ என்று சுட்டுவார்.23
  • அந்த அன்பைக் கட்டுப்படுத்த இயலாது என்பதை ‘அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்? என வினவுவார்.24
  • எதிர்மறை விளைவு ஏற்படுகின்ற இடத்தில்தான் சினத்தை அடக்குதல் வேண்டும். இதனை ‘அல்லிடத்துக் காக்கின் என்? காவாக்கால் என்?’ எனச் சாடுவார்.25
  • கருவியால் ஆராய்ந்து காலத்தால் செய்தால் அருவினை இல்லை என்பதை ‘அருவினை என்ப உளவோ?’ என்பார். 26
  • பிறவி யொழித்தவனுக்கு உடம்பும் மிகை என்பதை ‘மற்றும் தொடர்ப்பாடு எவன் கொல்?’ என்பார். 27

என்றெல்லாம் அறம் மற்றும் பொருள் பற்றிய கருத்துக்களை வினா உத்தியினால் வெளிப்படுத்திக் காட்டிய வள்ளுவ நாயனார் தலைமக்களின் கூற்றுப் பகுதியாகப் படைத்துக்காட்டிய காமத்துப்பாலிலும் அப்பாத்திரங்களுக்குள் நுழைந்து வினவுவதும் வியப்பாக இருக்கிறது.

  • “ஒன்று கலந்த நெஞ்சத்தாரோடு ஊடுதலே உண்மையான இன்பம்” என்னும் கருத்தினைத் தலைமகன் வாயிலாக “புலத்தலின் புத்தேள் நாடு உண்டோ?’ 28 என்று பதிவு செய்திருக்கிறார்.
  • ‘தன்னைப் பிரிந்து துன்புறும் தலைவியாகிய என்னை எண்ணுகிற தலைவனை நான் பெறாத போது நான் மட்டும் வருந்தி என்ன பயன்’ என்னும் தலைவியின் துயரத்தை “நோதல் எவன் மற்று?” 29 எனப் பதிவிடுகிறார்.
  • தலைவியின் துன்பம் அதுவானால் தனிமைத் துயரத்தில் தவிக்கும் தலைவன் கூற்றாகத் தலைவியை அன்றித் “துன்பத்திற்கு யாரே துணையாவார்?” 30 எனப் பதிவிடுகிறார்.
  • தன் தலைவன் வந்துவிடின் “புலப்பேன் கொல்? புல்லுவேன் கொல்லோ? கலப்பேன் கொல்?” 31 என்று தன் எதிர்கால விதும்பல்களை முன்கூட்டியே தனக்குத்தானே வினவும் தலைவியைக் காட்சிப்படுத்துகிறார்.

இவ்வாறு தன் கருத்துக்களை வினா வடிவத்தில் பதிவு செய்திருக்கும் குறட்பாவின் தாக்கம் பின்வந்த கவிஞர் பெருமக்களை எவ்வாறு ஆட்கொண்டிருக்கிறது என்பதையும் சுருக்கமாகக் காணலாம்.

வாழையடி வாழையென வந்த வினா உத்தி

கருத்துக்களையும் உணர்ச்சிகளையும் வெளிப்படுத்துவதற்குத் திருவள்ளுவரால் கையாளப்பட்ட இந்த வினாவுத்தி தொடர்ந்து தமிழ்க்கவிதைப் பரப்பில் பேரளவாக இடம் பெற்று வந்துள்ளமையை அறியலாம்.

“கங்கை ஆடிலென்? காவிரி ஆடிலென்?
கொங்கு தண் குமரித்துறை ஆடிலென்?
ஓங்கு மாகடல் ஓதம் நீராடிலென்
எங்கும் ஈசன் எனாதவர்க்கு இல்லையே” 32

“புத்தடியோம் புன்மை தீர்த்தாட் கொண்டால் பொல்லாதோ?
எத்தோ நின்அன்புடைமை எல்லோம் அறியோமோ?
சித்தம் அழகியார் பாடாரோ நம் சிவனை?”33

என்றெல்லாம் வழிவழியாக இந்த வினாமரபு, “செருப்புக்குத் தோல்வேண்டியே இங்குக் கொல்வரோ செல்வக் குழந்தையினை?” 34 என்று பரதியார் வினவுகின்ற அளவும் தொடர்ந்தது. ‘சுதந்திரப் பெருமை’35 சுதந்திரப் பயிர்’36 என்னும் இரண்டு பாடல்களயும் முற்றவும் வினாவுத்தியினாலேயே பாரதியார் வடிவமைத்திருப்பது இங்குச் சுட்டத்தகுந்தது. “காரிருளால் சூரியன்தான் மறைவதுண்டோ? கறைச்சேற்றால் தாமரையின் வாசம் போமோ?” 37 என்பார் பாரதிதாசன். “இன்பந்  தருந் தமிழில் அன்பு பிறந்ததுண்டு துன்பம் இனியுமுண்டோ?” 38 என்ற வினாவும் அவருக்குரியது. “சிங்கத்தின் கால்கள் பழுதுபட்டாலும் சீற்றம் குறைவதுண்டோ?”39 என்பார் கண்ணதாசன். “எரிமலை எப்படிப் பொறுக்கும்? நம் நெருப்புக்கு இன்னுமா உறக்கம்?” 40 எனக் கொதிப்பார் வைரமுத்து.

“இற்றைக் குமுகம் எழுந்திருக்க வேண்டாமோ?
முற்றும் முடங்கியே மூழ்குவதோ? – வெற்றுரையால்
பீடும் மறைவதோ? பேரெழுச்சி வாராதோ?
நாடுமொழி காப்பீர் நயந்து” 41

“ஒப்பனை வெல்லுமோ? உண்மை உறங்குமோ?
முப்பாலுக் கீடோ பிறநூல்கள் – செப்பரிய
தொண்டால் உழைப்பால் துணிவால் பெருவெற்றி
உண்டாகும் என்றே உணர்! 42

என்பன கடவூர் மணிமாறனின் வினாக்கள். இவரின் இந்த வினாக்களைத் தொடர்ந்து வேறு சிலரின் வினாக்களையும் கேட்கமுடிகிறது. உழைத்து ஓடாகிப் போன ஏழைகளின் புலம்பல்கள் வினாக்களாக வெடிக்கின்றன.

“ஓய்வின்றி உழைப்பவர்க்கா பஞ்சம்? – நாங்கள்
ஒன்றுபட்டால் இங்கென்ன மிஞ்சும்?
நாய்படாத பாடெல்லாம் எமக்கா? நாட்டில்
நல்லின்ப வாழ்வெல்லாம் உமக்கா?
வேலையின்றி உண்பதுமோர் பிழைப்பா? – இந்த
வேதனையை மாய்க்க வந்தால் மலைப்பா?
சாலைகள்தான் எங்களுக்கு வீடா – இது
சமவுடைமை உண்டாக்கும் நாடா?” 43

என்னும் கருவூர் கன்னல் எழுப்பும் வினாக்கள் கற்பாரையும் கொதிக்க வைக்கின்றன. இயல்பான தொடரால் அமைக்கப்படுவதைவிட மேற்காட்டியவாறு  வினாக்களால் அமைக்கப்படும்போது கற்பார் உள்ளத்தில் எளிதாக பதியும் வாய்ப்பு அதிகம் என்பதே இவ்வுத்தியின் பயன் எனலாம். திருவள்ளுவர் பின்பற்றிய இந்த வினாவுத்தி தமிழ்க்கவிதையுலகில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை உணர்வதற்கே மேலே சில சான்றுகள் தரப்பட்டன.

முன்னிலை ஏவல் ஒருமையும் வியங்கோளும்

‘யான்’ என்னும் அகப்பற்றையும் ‘எனது’ என்னும் புறப்பற்றையும் விட்டாலேயொழிய உயிர் வீடு பெறாது என்னும் கொள்கையுடையவர் திருவள்ளுவர். அதனால்தானோ என்னவோ அவருடைய குறட்பாவில் முன்னிலை ஏவல் ஒருமையில் அமைந்த ஒரு குறட்பாவைக்கூட காண இயலவில்லை. அந்தக் குறையைப் பாரதி இப்படி ஈடு செய்கிறார்.

“ஓடி விளையாடு பாப்பா” 44

“கூடி விளையாடு பாப்பா” 45

“மனதில் மகிழ்ச்சி கொள்ளு பாப்பா” 46

“திடங்கொண்டு போராடு பாப்பா” 47

என்றெல்லாம் முன்னிலையில் பாடுகிறார் பாரதியார். தொடர்ச்சியாக வந்த பாவேந்தர்,

“இன்பம் தருந்தமிழில் அன்பு பிறந்ததுண்டு
துன்பம் இனியுமுண்டோ?
சொல்! சொல்! சொல்! பகையே!” 48

எனப் பகையை நேரடியாக விளித்தே பேசுவதைக் காணமுடிகிறது. இந்த நிலை இற்றைநாள் வரை தொடர்கிறது.

“தாழ்வை அகற்றித் தலைநிமிர்வாய்! போற்றுமுயர்
வாழ்வில் சிறப்பாய் வளம்காண்பாய் – ஏழ்மையை
ஓடவே செய்வாய்! ஒரு பயனும் நல்காத
மூடப் பழக்கம் விலக்கு!” 49

“மூலையில் நீயும் முடங்கிக் கிடக்காமல்
வேலையில் நாளும் விழிபதிப்பாய் – காளை நீ!
வேழமாய் வீறுசால் வெம்புலியாய் சிங்கமாய்
வாழ வழிவகுக்க வா” 50

வள்ளுவர் காலத்து இல்லாத அல்லது தேவைப்படாத மொழி, இன, நாட்டுணர்வு இன்றைக்குப் பெரிதும் தேவைப்படுதலின் இந்த வாய்பாட்டிலும் மணிமாறன் கவிதை செய்தார் எனக் கருதலாம். திருக்குறளின் உத்தி பற்றிய ஆய்வில் அவர் கையாளாது பிறர் கையாண்ட முன்னிலை பற்றிய இந்தப் பகுதி எதிர்கால ஆய்வு நோக்கியதாகக் கொள்ளலாம்.

வியங்கோள்

ஏவலின் முதிர்ச்சியே வியங்கோள். ‘வாழ்’ என்றால் ஏவல். ‘வாழ்க’ என்றால் வியங்கோள். கட்டளைப் பொருளில் வரும் ஏவல் வினைகளைக் காட்டிலும் வியங்கோளில் வரும் வினைகள் பண்பாட்டினை வெளிப்படுத்தும் ஆற்றல் உடையவை. நீதியுரைத்தலிலும் பண்பாடு காக்கும் திருவள்ளுவரின் பேராளுமை அவர் பயன்படுத்தியிருக்கும் வியங்கோள்களில் விளங்கக் காண்கிறது.

“செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும்
எஃகுஅதனிற் கூரியது இல்” 51

“மருவுக மாசற்றார் கேண்மை ஒன்றீத்தும்
ஒருவுக ஒப்பிலார் நட்பு” 52

“உள்ளற்க உள்ளம் சிறுகுவ கொள்ளற்க
அல்லற்கண் ஆற்றறுப்பார் நட்பு” 53

பொருளைச் ‘செய்’ என்னாது ‘செய்க’ என்று கூறியவர், ‘மருவு’, ‘கொள்’ என்றெல்லாம் ஏவலிருந்தும் வியங்கோளைப் பயன்படுத்துவார்.   எதிர்மறையிலும் ‘கொள்ளற்க’, ‘உள்ளற்க’ என்பார். இத்தகைய வெளிப்பாடுகளுக்குக் காரணம் ஞானம். அந்த வெளிப்பாடுதான் இன்றைக்கும் வள்ளுவத்தைத் தூக்கி நிறுத்துகிறது. பின்னாலே பதினெண் கீழ்க்கணக்கு நூல்களிலும் இந்த நெறி பரவலாகப் பயன்பட்டு வந்துள்ளதை அறியலாம்.

“பகடு நடந்த கூழ் பல்லாரோடு உண்க!” 54

“முடியும் திறத்தால் முயல்க!” 55

“பழியின்மை மக்களால் காண்க! ஒருவன்
கெழி யின்மை கேட்டால் அறிக – பொருளின்
நிகழ்ச்சியான் ஆக்கம் அறிக!” 56

என்னுமாறு அமைந்த கீழக்கணக்குப் பதிவுகள் வியங்கோள் ஆளுமையை விளக்கக் கூடும். இந்த வியங்கோள் நெறியை வள்ளற் பெருமான்,

“கருணையிலா ஆட்சி கடுகி ஒழிக!
அருள் நிறைந்த சன்மார்க்கர் ஆள்க – தெருள் நயந்த
நல்லோர் நினைத்த நலம்பெறுக! நன்றுநினைந்து
எல்லோரும் வாழ்க இசைந்து” 57

என்னும் வெண்பாவில் தனது வேதனையைப் பதிவு செய்திருக்கிறார். இதன் தொடர்ச்சியாக பாரதியாரும்,

“ஊதுமினோ வெற்றி! ஒலிமினோ வாழ்த்தொலிகள்!
ஓதுமினோ வேதங்கள்! ஓங்குமினோ! ஓங்குமினோ!” 58

என்று பாடுகிறார். அவருடைய நண்பராகிய பாவேந்தர்,

“தமிழ்மொழியைத் தாய் என்னும்
தமிழர் வாழ்கவே!
தமிழ்மொழிக்குத் தாழ்வுரைக்கும்
தக்கை வீழ்கவே!
தமிழ்வாழத் தாம் வாழும்
தமிழர் வாழ்கவே!
தமிழ்வீழத் தாம் தாழும்
சழக்கர் வீழ்கவே!”59

மொழியினம் நாடு பாடும் நம் மணிமாறன் வெண்பாக்களில் இத்தகைய வியங்கோள் வினை உத்திகள் வேண்டிய மட்டும் பரவிக் கிடப்பதைக் காண முடிகிறது.

“நல்லனவே எண்ணுக! நன்மை விளைத்திடுக!
இல்லார்க் கிரங்கி உதவிடுக! – சொல்லினில்
இன்பம் பெருக்கி இடரகற்றி எப்போதும்
அன்பில் திளைக்க அறிந்து” 60

“கண்ணும் கருத்துமாய் கடமையை ஆற்றுக!
புண் மொழி பேசிப் புலம்பற்க! – மண்ணிலே
நல்லவன் என்னும் நறும்புகழ் எய்துக!
எல்லாம் அறிக! இசைந்து” 61

உடன்பாடும் எதிர்மறையுமாக அமைந்த முன்னிலை வியங்கோள் வினைமுற்றுக்களால் சமுதாயத்தோடு தனக்குள்ள தொடர்பினை வெண்பா மூலம் புதுப்பித்துக் கொள்கிறார் மணிமாறன். ஒரு கருத்தினை வியங்கோளாக வெளிப்படுத்துவது என்பது மரபுசார்ந்த கவிதை வெளிப்பாடு என்பதை அறியவும்! சிலப்பதிகாரத்தின் வரந்தரு காதை காண்க.

திருக்குறளில் தொழிற்பெயர்த் தொடரி

திருவள்ளுவர் அறுவகைப் பெயர்ச் சொற்களையும் கையாண்டு கவிதை செய்த பெருந்தகை. அவற்றுள் தொழிற்பெயர்களைத் தொகுத்துத் தொடரியாக்கிறார். அந்தத் தொழிற்பெயர்கள் பெரும்பாலும் ஒன்றுக்கும் மேற்பட்டு இணைந்து காணப்படுவது கூடுதல் சிறப்பு.

“உற்ற நோய் நோன்றல் உயிர்க்கு உறுகண் செய்யாமை
அற்றே தவத்திற்கு உரு” 62

“ஒன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும்
எண்ணின் தவத்தான் வரும்” 63

“இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்லது அரசு” 64

மேற்கண்ட குறட்பாக்களில் உள்ள தொழிற்பெயர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட வகையில் தொடர்ந்து அமைந்திருப்பதைக் காணலாம். இந்த நெறியும் பின்னாளில் தொடர்ந்து வந்திருப்பதை அறியமுடிகிறது.

“இன்னறுங்கனி சோலைகள் செய்தல்,
இனிய நீர்த்தண் சுனைகள் இயற்றல்,
அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்,
ஆலயம் பதினாயிரம் நாட்டல்,
பின்னருள்ள தருமங்கள் யாவினும்
பெயர்விளங்கி ஒளிற நிறுத்தல்,
அன்ன யாவினும் புண்ணியம் கோடி
ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்” 65

இவ்வாறு அனைத்தும் தொழிற்பெயர்களாக அடுக்கியுரைப்பதனை, வெற்று வாய்மொழிகளாக இருப்பதனால் பயனில்லை செயல்வடிவம் பெற வேண்டும் என்பதைக் குறிப்பால் பெற வைக்கும் உத்தியாகவும் கருதலாம்.

“கொள்ளை யடித்தல் குறுக்குவழி நாடுதல்
கொள்கை மறந்தே குழப்புதல் – விள்ளரிய
கேட்டை விளைத்திடுமிக் கீழோர் செயலெல்லாம்
நாட்டைக் கெடுத்திடும் நஞ்சு” 66

“மானம் இழத்தல் மதுவருந்தல் மற்றவர்க்கே
ஆனவரை தீங்கிழைத்தல் அன்றாடம் – ஊனம்செய்
கேட்டை விளைத்தல் கெடுமதியோர் நட்பெல்லாம்
நாட்டைக் கெடுத்திடும் நஞ்சு” 67

என்னும் கடவூர் மணிமாறன் பாடல்களில் தொழிற்பெயர்கள் தொடர்ந்து வருவதைக் காணலாம்.

திருக்குறளில் படர்க்கைப் பதிவுகள்

தனிமனித நெறியுரைத்த திருவள்ளுவர் பெரும்பாலும் படர்க்கை நிலையையே தமது வெளிப்பாட்டு உத்தியாகக் கொண்டிருக்கிறார் என்பதைக் குறட்பாக்களின் கட்டமைப்பால் அறியலாம்.

“அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு” 68

“வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப்படும்” 69

“ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்
பொன்றும் துணையும் புகழ்” 70

“தொட்டனைத்தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத்தூறும் அறிவு” 71

“மனநலம் மன்னுயிர்க்கு ஆக்கம் இனநலம்
எல்லாப் புகழும் தரும்” 72

என்றெல்லாம் அறம் மற்றும் பொருட்பாலில் எண்பது விழுக்காடு வெண்பாக்களைப் படர்க்கையில் அமைத்துக் காட்டியவர் திருவள்ளுவர்.  படர்க்கை என்பது இலக்கணத்தில் மூன்றாவது நிலையாக இருக்கலாம். வாழ்க்கைப் பட்டறிவில் முதனிலை. அதனால்தான் தமிழின் அத்தனை நீதி நூல்களும் பெரும்பாலும் படர்க்கையைத் தேர்ந்தெடுத்தன. படர்க்கையில் பதிவு செய்யப்படும் கருத்துக்கள் இலக்கியச் சுவையோடு வெளிப்பட வேண்டும் என்பதற்காகவே ஆடூஉ முன்னலை மற்றும் மகடூஉ முன்னிலைகள் இடம்பெற்றன. இப்பொருண்மை தனி ஆய்வுக்கு உரியது. விரிந்த மனத்தால் எதனையும் எவரையும் எந்த அளவுக்கு வேண்டுமானாலும் வாழ்த்தவும் வையவும் படர்க்கை பயன்படும். ஆசிரியர் கூற்று என்பதும் அது.

தமிழ் மறையில் தன்மைப் பன்மை

தம் கருத்துக்களை முன்னிலையிலும் வியங்கோளிலும் குறள் வெண்பாவில் பதிவு செய்திருக்கும் திருவள்ளுவர் மூன்று குறட்பாக்களில் மட்டும்  தன்மைப் பன்மையில் பதிவு செய்திருப்பதை அறிய முடிகிறது.

“பெருமவற்றுள் யாம் அறிவதில்லை அறிவறிந்த
மக்கட்பேறு அல்ல பிற” 73

“யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும்
வாய்மையின் நல்ல பிற” 74

“மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பார் யாம்கண்ட தில்” 75

என்பன காண்க. “யாம் அறிவதில்லை”, “யாம் கண்டவற்றுள்”, “யாம் கண்டதில்” என்பனவெல்லாம் இலக்கண அடிப்படையில் தன்மைப் பன்மைத் தொடர்கள். முதிர்ச்சியோடு கூடிய பதிவுகள். தன்மைப் பன்மையில் பதிவு செய்யப்பட்டிருக்கும் இக்குறட்பாக்களில் இரண்டு (61,1071) அதிகாரத் தொடக்கமாகவும் ஒன்று (300) அதிகார இறுதியாகவும் அமைக்கப்பட்டிருப்பதும் சிந்தனைக்குரியது. இத்தகைய உத்திகளின் பயன்பாட்டிற்குரிய நோக்கம் தனி ஆய்வுக்கு உரியது. இந்த நெறியால் ஈர்க்கப்பட்ட அப்பர் பெருமான்,

“நாமார்க்கும் குடியல்லோம் நமனைஅஞ்சோம்
நரகத்தில் இடர்ப்படோம் நடலையல்லோம்!
ஏமாப்போம் பிணியறியோம் பணிவோம் அல்லோம்
இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை” 76

என்று பாடியிருக்கிறார். ‘மன்னும் இமயமலை எங்கள் மலையே’77 என்பதும் “பாருக்குள்ளே நல்ல நாடு எங்கள் பாரத நாடு”78 என்பதும் பாரதி முழக்கங்கள்.

“நாமறிவோம் உலகத்தில் நம் பண்பாடு — தமிழா
நாம் தமிழர்! நம் திறத்துக்கெவர் ஈடு?
தீமை இனிப் பொறுக்காது நம் தமிழ்நாடு! – நாம்
தீர்த்துக் கொண்டோம் அவர் கணக்கை இன்றோடு!” 79

இது பாவேந்தர் பாரதிதாசனின் தன்மைப் பன்மை உத்தி. அவருடைய பரம்பரைக் கவிஞர் நிரலில் வரும் நாடறிந்த நற்றமிழ்ப் பாவலர் கடவூர் மணிமாறன்,

“கன்னல் தமிழ் காப்போம்! காழ்ப்பால் துயரிழைக்கும்
புன்மையர் வீழப் பொருதிடுவோம் – நன்னெறியால்
சூழும் பகைவெல்வோம்! சுற்றம் தழுவியே
வாழும் வகையறிவோம் வா!” 80

“நன்மை விளைத்திடுவோம்! நாடுமொழி நம்மினத்தை
என்றுமே காப்போம்! இனியன – நன்றாற்றி
மாற்றம் விளைப்போம்! மனத்தைப் புதுக்கிடுவோம்!
ஏற்றமே காண்போம் இனிது” 81

உளப்பாட்டுத் தன்மைப் பன்மையால் நேரிசை வெண்பா யாப்பில் தனது உயிர்மூச்சான கொள்கைகளைப் பதிவு செய்திருக்கும் இந்தப் பேராற்றல் பெரிதும் பாராட்டுக்குரியது. “பாதகம் செய்பவரைக் கண்டால் ‘நீ’ பயங்கொள்ளலாகாது” என்னாது ‘நாம் பயங்கொள்ளலாகாது’ எனப் பாரதி குழந்தையை அரவணைத்துப் பாடியது போலச் சமுதாய முன்னேற்றத்திற்குச் சமுதாயத்தோடு ஒன்றிணைந்து பாடுபடும் மணிமாறனின் உள்ளக் கிடக்கையை வெளிப்படுத்துவதாம்.

தன்னை அடையாளம் காட்டிய திருவள்ளுவர்

ஆயிரத்து முந்நூற்று முப்பது குறட்பாக்களில் திருவள்ளுவர் தான் சொல்லுவதாக அதாவது தன்மை ஒருமையில் வரித்துக் கொண்டு சொன்ன கருத்துப் பதிவு ஒன்றே ஒன்றுதான். அது,

“இரப்பன் இரப்பாரை எல்லாம் இரப்பின்
‘கரப்பார் இரவன்மின்’ என்று” 82

பெரும்பாலும் அறியப்படாத இந்தப் பாட்டின் கண்ணழிப்பு (நானாகிய திருவள்ளுவன் “இரப்பாரையெல்லாம் இரப்பின் கரப்பார் (ஐ) இரவன்மின் என்று இரப்பன்). இந்தப் பாட்டுக்கு என்ன பொருள் என்றால் பொருளிருந்தும் கரந்தொழிக்கும் கயவரிடத்தில் இரக்கின்றவர்களைப் பார்த்து,

“ஐயா! வைத்துக் கொண்டே இல்லை என்று மறுதலிக்கும் கயவர்களிடத்தில் இரக்காதீர்கள்” என்று நான் இரந்தேன்”

என்பதாம். இந்த ஒரு திருக்குறளில்தான் திருவள்ளுவர் தன்மை ஒருமையில் பதிவிடுகிறார். இதற்குக் காரணம் இருத்தல் வேண்டும் என்பது கட்டுரையாளரின் அனுமானம். தன்மை ஒருமை பெரும்பாலும் முனைப்பின் அடையாளம். யான், எனது என்பனவற்றுள் அது ‘யான்’ என்னும் அகப்பற்று. அது எனது என்னும் புறப்பற்றினைக் காட்டிலும் கேடுதருவது என்பதை உலகிற்கு உணர்த்தியவர் அவர். எனவே அத்தகைய உத்தியினை அவர் தவிர்த்திருக்கக் கூடும். பின்னாலே வந்த கவிதை படைப்பாளர் பலரும் திருவள்ளுவர் அரிதாகப் பயன்படுத்திய உத்தியினை மிக எளிதாகவும் பேரளவிலும் பயன்படுத்தியிருக்கிறார்கள். உருக்கும் திருவாசகத்தில்,

“யானேதும் பிறப்பஞ்சேன் இறப்பதனக்கு என் கடவேன்?
வானேயும் பெறில் வேண்டேன் மண்ணாள்வான் மதித்துமிரேன்!
தேனேயும் மலர்க்கொன்றை சிவனே எம் பெருமான் எம்
மானே உன் அருள்பெறுநாள் என்றென்றே வருந்துவனே!” 83

என்று தன்மை ஒருமையில் வைத்துப் பாடியிருக்கிறார். திருவாசகம் முற்றிலும் சன்மார்க்கத்தையொட்டி எழுந்த நூலாதலின் குருவை வழிபடுதலுக்குச் சீடனாகிய தன்னை முன்னிலைப்படுத்துவது பொருத்தம் என்று அவர் கருதியிருக்கலாம். வள்ளற்பெருமான் தனது சமரச சன்மார்க்கக் கொள்கைகளை வலியுறுத்திப் பாடும் பொழுது,

“புனைந்துரையேன்! பொய்புகலேன்! சத்தியம் சொல்கின்றேன்!
பொற்சபையில் சிற்சபையில் புகுந்தருணம் இதுவே!” 84

என்று பன்னியுரைக்கின்றார். மகாகவி பாரதி,

“விசையுறு பந்தினைப் போல் உள்ளம்
வேண்டியபடிசெலும் உடல் கேட்டேன்!
நசையறு மனம்கேட்டேன்! நித்தம்
நவமெனச் சுடர்தரும் உயிர்கேட்டேன்!
தசையினைத் தீச்சுடினும் – சிவ
சக்தியைப் பாடும் நல் அகம்கேட்டேன்!” 85

எனத் தன் வேண்டுதலைப் பதிவு செய்திருக்கிறார். அவர் காட்டிய புதுத்தடத்தில் கவிப்பயணம் தொடங்கிய பாவேந்தர்,

“ஆன என் தமிழ் ஆட்சியை நிறுவ
அல்லல்கள் வரின் ஏற்பேன்!
ஊனுடன் கேட்பினும் செந்தமிழ் நாட்டுக்கு
உவப்புடன் நான் சேர்ப்பேன்!” 86

என்று முழக்கமிடுகிறார். ஒவ்வொரு தமிழனும் மொழிக்கும் இனத்திற்கும் ஆற்ற வேண்டிய பணியினை ஆற்ற வேண்டும் என்னும் குறிப்பு இந்தத் தன்மைப் பதிவில் இருப்பதாகக் கருதலாம்.

நிறைவுரை

மூலப்பொருள் ஒன்றேயெனினும் கைத்திறப் பக்குவத்தால் படைப்புக்களின் தன்மைகள் மாறுபடுகின்றன. இந்த மாற்றம் ஒருவரே எழுதும் பல படைப்புக்களிலும் அமையும். பலர் எழுதும் பல படைப்புக்களிலும் அமையும். அந்தக் கையாளும் திறமைகளில் ஒன்றுதான் உத்தி என்பது. கவிதை உத்தியால் சிறக்கிறது. திருவள்ளுவர் தாம் படைத்த திருக்குறளில் தமது சிந்தனைகளைப் படர்க்கையில் கூறுகிறார். வியங்கோளில் கூறுகிறார். தன்மைப் பன்மையில் கூறுகிறார்.  தொழிற்பெயர்களை அடுக்கிக் கூறுகிறார். இவ்வளவு பொருளையும் இத்தனை உத்திகளில் கூறிய தெய்வப்புலவர் ஒரே ஒரு குறட்பாவில் மட்டும் தன்மை ஒருமையில் கூறியிருக்கிறார். வாழையடி வாழையென வந்த இத்த வெளிப்பாட்டு உத்தி ஓர் தொடர் மரபாகவே பின்பற்றப்பட்டு வந்துள்ளது எனத் தெரிகிறது. கவிதைகளின் புறக்கட்டுமானங்களை நோக்குவார்க்கு இத்தகைய உத்தி மாறுபாடுகள் கண்ணிற்படாமல் போகாது. அவ்வாறு கண்ணிற்பட்டதன் விளைவே இக்கட்டுரை. கவிதைப் பதிவுகளை உத்திகளின் அடிப்படையில் சுவைப்பதற்கும் ஆராய்வதற்குமான ஆய்வுத் தொடரியில் இக்கட்டுரையும் ஒரு கண்ணியாக அமையக்கூடும் என்னும் நம்பிக்கையோடு நிறைவுறுகிறது.

சான்றெண் விளக்கம்

  1. கங்கை அமரன் ‘இங்கேயும் ஒரு கங்கை’       திரையிசைப்பாடல்
  2. மேலது
  3. மேலது
  4. மேலது
  5. வைரமுத்து ‘முதல்மரியாதை’              திரையிசைப்பாடல்
  6. இளங்கோவடிகள் சிலப்பதிகாரம் அடைக்கலக்காதை      வரி. 2382-2383
  7. மேலது       வரி. 2403-2406
  8. மேலது       வரி. 2407-2430
  9. கம்பர்                 கம்பராமாயணம் கிட்கிந்தா காண்டம் பா.எண்.3965
  10. மேலது பா.எண் 4059
  11. மேலது பா எண்.4060.
  12. சமண முனிவர்கள் நாலடியார் காமம் நுதலியல்    பா.எண். 40-1
  13. மேலது                         பா.எண். 40.10
  14. மேலது                      கீழ்மை                 பா.எண். 35–3
  15. மேலது கீழ்மை                 பா.எண். 35– 4
  16. மேலது கீழ்மை                 பா.எண். 35 –8
  17. திருவள்ளுவர்       திருக்குறள்              கு.எண். 1091
  18. மேலது கு.எண். 1094
  19. மேலது கு.எண். 1111
  20. மேலது                              கு.எண். 1112
  21. மேலது கு.எண். 1123
  22. மேலது கு.எண். 02
  23. மேலது கு.எண். 315
  24. மேலது கு.எண். 71
  25. மேலது கு.எண். 301
  26. மேலது கு.எண். 483
  27. மேலது கு.எண். 345
  28. மேலது கு.எண். 1323
  29. மேலது கு.எண். 1308
  30. மேலது கு.எண். 1299
  31. மேலது கு.எண். 1267
  1. அப்பர் தேவாரம் 5ஆம் திருமுறை           பா.எண். 99
  2. மணிவாசகர் திருவெம்பாவை                     பா.எண். 3
  3. சுப்பிரமணிய பாரதியார் பாரதியார் கவிதைகள்          ப 404
  4. மேலது ப 66
  5. மேலது ப 67
  6. பாரதிதாசன் பாரதிதாசன் கவிதைகள் தொகுதி 1    ப 22
  7. பாரதிதாசன் இசையமுது தொகுதி 1               ப 42
  8. கண்ணதாசன்       பாகப்பிரிவினை         திரையிசைப்பாடல்
  9. வைரமுத்து       சிவப்புமல்லி            திரையிசைப்பாடல்
  10. மணிமாறன் கடவூர் வெண்பாச் சோலை                  ப 52
  11. மேலது                                                    ப 129
  12. கன்னல் கருவூர்        புயலைத் தாக்கும பூக்கள்             ப 81
  13. சுப்பிரமணிய பாரதியார் பாரதியார் கவிதைகள்                ப 221
  14. மேலது
  15. மேலது
  16. மேலது
  17. பாரதிதாசன் இசையமுது தொகுதி 1               ப 42
  18. மணிமாறன் கடவூர் வெண்பாச் சோலை                  ப 27
  19. மேலது                                          ப 76
  20. திருவள்ளுவர்       திருக்குறள்                          கு.எண். 759
  21. மேலது             கு.எண். 800
  22. மேலது             கு.எண். 798
  23. சமணமுனிவர் நாலடியார்                           பா.எண். 2
  24. முன்றுரையரையனார் பழமொழி                           பா.எண். 49
  25. விளம்பி நாகனார் நான்மணிக்கடிகை                    பா.எண். 61
  26. வள்ளலார்       திருவருட்பா – சமரசநிலை            பா.எண். 74-5
  27. சுப்பிரமணிய பாரதியார் பாரதியார் கவிதைகள்                ப 36
  28. பாரதிதாசன் தமிழ் உணர்ச்சி (தொகுப்பு நூல்) ப 6
  29. மணிமாறன் கடவூர் வெண்பாச் சோலை                  ப 33
  30. மேலது       ப 50
  1. திருவள்ளுவர் திருக்குறள்              கு.எண். 261
  2. மேலது கு.எண். 264
  3. மேலது கு.எண். 385
  4. சுப்பிரமணிய பாரதியார் பாரதியார் கவிதைகள்    ப 173
  5. மணிமாறன் கடவூர் வெண்பாச் சோலை      ப 28
  6. மேலது
  7. திருவள்ளுவர் திருக்குறள்              கு.எண். 72
  8. மேலது கு.எண். 50
  9. மேலது கு.எண். 156
  10. மேலது கு.எண். 396
  11. மேலது கு.எண். 457
  12. மேலது கு.எண். 61
  13. மேலது கு.எண். 300
  14. மேலது கு.எண். 1071
  15. அப்பர் தேவாரம் மறுமாற்றம் திருத்தாண்டகம் பா.எண். 1
  16. சுப்பிரமணிய பாரதியார் பாரதியார் கவிதைகள் ப 26
  17. மேலது ப 23
  18. பாரதிதாசன் பாரதிதாசன் கவிதைகள் ப 521
  19. மணிமாறன் கடவூர் வெண்பாச் சோலை      ப 27
  20. மேலது ப 32
  21. திருவள்ளுவர் திருக்குறள்              கு.எண். 1067
  22. மணிவாசகர் திருவாசகம் திருச்சதகம் பா.எண். 12
  23. வள்ளலார் திருவருட்பா – ஞானசரியை     பா.எண். 110 -1
  24. சுப்பிரமணிய பாரதியார் பாரதியார் கவிதைகள்    ப 122
  25. பாரதிதாசன் தமிழ் உணர்ச்சி ப 5

துணைநூற்பட்டியல்

  1. அப்பர் தேவாரம் (தலமுறை), திருப்பனந்தாள் ஆதீனம் (காசிமடம்) ஜனவரி -1966
  1. கம்பர் கம்பராமாயணம் கங்கை புத்தக நிலையம், 13, தீன தயாளன் தெரு, தி.நகர், சென்னை – 600017
  1. சுப்பிரமணிய பாரதியார் பாரதியார் கவிதைகள், பூம்புகார் பிரசுரம், பிரகாசம் சாலை, பிராட்வே, சென்னை – 600 108, நான்காம் பதிப்பு – 1991
  1. திருவள்ளுவர் திருக்குறள், வை.மு.கோபால கிருஷ்ணமாச்சாரியார் பதிப்பு, உமா பதிப்பகம், சென்னை – 600 001, முதற்பதிப்பு – 2009
  1. மணிவாசகர் திருவாசகம், அப்பர் புத்தக நிலையம், 1621, தெற்கு ராச வீதி, தஞ்சாவூர். முதற்பதிப்பு – 1963
  1. பாரதிதாசன் தமிழ் உணர்ச்சி தொகுப்பு நூல், மணிவாசகர் நூலகம், 12 – பி, மேல சன்னதி, சிதம்பரம் – 608101, முதற்பதிப்பு – ஜுலை 1993
  1. பாரதிதாசன் இசையமுது தொகுதி 1, பாரி நிலையம், 59, பிராட்வே, சென்னை – 600 001
  1. கடவூர் மணிமாறன் வெண்பாச் சோலை, விடியல் வெளியீட்டகம், 1—53, பெரியார் நகர், குளித்தலை, கரூர் மாவட்டம், முதற்பதிப்பு – சூலை 2020
  1. கருவூர் கன்னல் புயலைத் தாக்கும் பூக்கள், தமிழ்ப்பாசறை, 79, தெற்கு நரசிம்மபுரம், கருவூர் – 639001, முதற்பதிப்பு – டிசம்பர் 1998
  1. பதினெண்கீழ்க்கணக்கு நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், (மர்ரே பதிப்பு) அம்பத்தூர் தொழிற்பேட்டை, சென்னை – 600 098, இரண்டாம் பதிப்பு – 1981
  1. வள்ளலார் திருவருட்பா, சமரச சுத்த சன்மார்க்க சங்க வெளியீடு, 7—99, அம்மன் கோவில் தெரு, கிருஷ்ணாகுளம் அருகில் சென்னை, முதற்பதிப்பு – அக்டோபர் 1942

ஆய்வறிஞர் கருத்துரை (Peer Review)

‘தமிழ்க் கவிதைகளில் வெளிப்பாட்டு உத்திகள்  (திருக்குறள்)  என்னும் தலைப்பில் அமைந்த இக்கட்டுரையைப் பலமுறை பயின்று கட்டுரையின் அனைத்துக் கூறுகளையும் உள்வாங்கி ‘வல்லமை’ முன்மதிப்பீட்டு விதிகளைக் முழுமையாகக் கருத்திற்கொண்டு செய்யப்படும் முன் மதிப்பீடு

  1. திருக்குறளில் உத்தி பற்றிய இந்த ஆய்வு, ஆய்வு நெறிப்ப்டி கருதுகோள், வலிமையான தரவுகள், அகச்சான்றுகள், புறச்சான்றுகள், தரவுகள் மற்றும் சான்றுகள் பற்றிய விளக்கம், மேற்கோள்கள், சான்றெண் விளக்கம், துணை நூற்பட்டியல் ஆகிய உறுப்புகளைக் கொண்டு செவ்வையாகவும் பொறுப்புணர்வுடனும் நிகழத்தப்பட்டிருக்கிறது.
  1. தமிழ்க்கவிதைகளில் உத்தி என்னும் பொதுத்தலைப்பில் திருக்குறளில் உத்தி என்னும் பொருண்மை சிறப்பாக ஆய்வு செய்யப்பட்டிருப்பினும் ஒரு பரந்து பட்ட தமிழ்க்கவிதை களத்தையே   ஆய்வாளர் தம் ஆய்வுப்பார்வையால் காட்சிப்படுத்தியிருக்கிறார். .
  1. திருக்குறளை முன்னிறுத்திய இந்த ஆய்வுக் கட்டுரையில் கம்பன் முதல் கரூர் கன்னல் வரை இடம் பெறுகிறார்கள். வள்ளலார் முதல் வைரமுத்து வரை வந்து போகிறார்கள். காப்பியம் தந்த இளங்கோ முதல் கடவூர் மணிமாறன் வரை காட்சி தருகிறார்கள்.
  1. “ஒரே பொருளை  ஒன்றுக்கும் மேற்பட்ட  முறைகளில் வெளிப்படுத்தும் நெறிக்கு உத்தி என்று பெயர்” என வரையறைத்துச் செய்திருக்கிற  தொடக்கம்  ஆய்வு நெறியில் ஆய்வாளரின் தோய்நத புலமையைக் காடடுகிறது.
  1. “திருவள்ளுவர் பல உத்திகளைக் கையாண்டிருக்கிறார். ஒரு கருத்தினை நிரல்படச் சொல்லுவார். ஒன்றினை வினா வடிவில் பதிவு செய்வார் வேறொன்றினை வியங்கோளால் அமைத்துக் காட்டுவார். சிலவற்றைத் தொழிற்பெயர்களால் கூட்டியுரைப்பார். வேறு சிலவற்றை முன்னிலை ஏவலால் ஆணையிடுவார். சிலவற்றைத் தன்மைப் பன்மையால் விளக்கிக் காட்டுவார். இன்னும் பல உத்திகளையும் கையாண்டு விளக்கியிருப்பார்”. என்னும் திருக்குறளில் விரவியுள்ள உத்தி பற்றிய பன்முக விளக்கம் ஆய்வாளரின் திருக்குறள் புலமையைக் காட்டுவதுடன் எதனையும் ஆய்வு நோக்கில் காணும் அன்னாருடைய இயல்பினையும் புலப்படுத்துவதாக உள்ளது.
  1. “யாம் அறிவதில்லை” “யாம் கண்டவற்றுள்” “யாம் கண்டதில் என்பனவெல்லாம்” என்னும் இலக்கண அடிப்படையில் தன்மைப் பன்மைத் தொடர்கள். முதிர்ச்சியோடு கூடிய பதிவுகள். தன்மைப் பன்மையில் பதிவு செய்யப்பட்டிருக்கும் இக்குறட்பாக்களில் இரண்டு (61,1071) அதிகாரத் தொடக்கமாகவும் ஒன்று (300) அதிகார இறுதியாகவும் அமைக்கப்பட்டிருப்பதும் சிந்தனைக்குரியது.   என்னும் தன்மைப் பன்மை பற்றிய பயன்பாட்டு வரையறையும் அதனையொட்டிப் பின்வந்த சான்றோர்களின் படைப்புகளைக் காட்டி அவ்வுத்தியின் தாக்கத்தைக் காட்சிப்படுத்தும் ஆய்வாளர், திருக்குறளில் கையாளப்பட்டிருக்கும் ஒவ்வொரு உத்தியும் பின்வந்த சான்றோர்களாலும் நோக்கப்பட்டிருக்கிறது என்பதையும் ஆய்வுநெறிப்படி விளக்கியிருக்கிறார்.
  1. திருவள்ளுவர் “இரப்பன் இரப்பாரை எலலாம் இரப்பின் ‘கரப்பார் இரவன்மின்’ (1067) என்று ”ஒரே ஒரு இடத்தில் மட்டுமே தன்மை ஒருமையில் தன்னை வெளிப்படுத்தியிருக்கிறார் என்பது ஆய்வாளரின் உழைப்பையும் ஆய்வின துல்லியத்தையும்  காட்டுகின்றன.

ஆய்வு நெறிப்ப்டி கடும் உழைப்புடனும் ஒரு தேடல் பார்வையுடனும் அமைக்கப்பட்டிருக்கும் இந்த ஆய்வுக் கட்டுரை பகுப்பாய்வாக இருப்பினும் ஒவ்வொரு பத்தியிலும் ஆய்வு மணம் கமழ்வதை உணர முடிகிறது. ஆய்வாளருக்கு அறிவு இயற்பொருளாகவும் ஆற்றல் துணைப்பொருளாகவும் அமைந்திருப்பதைக் கட்டுரை வெளிப்படுத்துவதாக உள்ளது.


 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.