(Peer Reviewed) முனைவா் வெ. இறையன்புவின் சிறுகதைகளில் வாழ்வியல் விழுமியங்கள்

0

முனைவா் அரங்கன். மணிமாறன்.
முதுகலை தமிழாசிரியா்
அரசு மேனிலைப் பள்ளி
பரமனந்தல் செங்கம் வட்டம்
திருவண்ணாமலை மாவட்டம்.
பேசி: 99430-67963.
Mail: maranvmctamil@gmail.com.

முன்னுரை:

இலக்கியங்கள் மனித வாழ்வியலின் நகல்கள். அலங்கரிக்கப்பட்ட முகபாவங்கள். கற்பனையில் முகிழ்ப்பவை என்றாலும் அடிநாதமாக ஓங்கி ஒலிக்கும் மனித வாழ்வியல் தத்துவங்கள் நூற்றாண்டுகளின் வாழ்வியல் பிழிவுகள்.

மனித வா்க்கம் முயன்று தவறி கற்ற நற்பண்புகள், வாழ்வியல் விழுமியங்களாய் நிலைக்கின்றன.உண்மை, உழைப்பு, தியாகம், விட்டுக்கொடுத்தல், அன்பு, கருணை, மானம், வீரம், மரபார்ந்த பெருமை ஆகிய இவையெல்லாம் அவ்விழுமியங்களின் அடையாளங்கள்.

மனித வாழ்வியலின் சாரமாய் விளங்கும் விழுமியங்கள் முனைவா் வெ. இறையன்புவின் சிறுகதைகளில் வெளிப்படுமாற்றை ஆய்வதாய் இக்கட்டுரை அமைகிறது.

முனைவா் வெ. இறையன்பு:

“சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை

இகல்வெல்லல் யார்க்கும் அரிது”1

எனும் குறளுக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் முனைவா் வெ. இறையன்பு அவா்கள் எளிய குடும்பத்தில் பிறந்தாலும் இடையறா தன் முயற்சியாலும் உழைப்பாலும் உயர்ந்த ஆட்சிப்பணித் தேர்வில் வெற்றி பெற்றவா்.உழைப்பும் மனித நேசிப்பும் அவா்தம் வாழ்வில் உயர இடையறாத பாடுபடுதலுமே தம்பணியின் அழகாய்க் கண்டவா்.

சமூக நிலையிலும் பொருளாதார நிலையிலும் கீழ்நிலையில் உள்ள மனிதா்களோடு வாழ்ந்து அவா்களோடு பழகி அவா்களின் முன்னேற்றத்திற்கான தடைகளை அறிந்து அவற்றைக் களைந்து அவா்தம் வாழ்வில் ஒளிவிளக்கேற்றியவா். நொடிதோறும் மானுடம் வாழச் சிந்தனை செய்தவா். எதிரெதிரான அரசியல் சூழல்களிலும் நோ்மையும் தூய்மையும் நடுவுநிலையும் கொண்டு உயா்ந்தவா்.பல்வேறு துறைகளில் பணியாற்றி பல்லாயிரம் மனித முகவரிகளை அறிந்த அனுபவம் மிக்கவா். கண்டு கேட்டு படித்து உய்த்துணா்ந்த அனுபவங்களை சிறுகதை, புதினம், தன்னம்பிக்கை ஊட்டும் கட்டுரைகள் என எழுதிக் குவித்துச் சாதனை புரிந்துள்ளவா். பேச்சாலும் எழுத்தாலும் பணிகளாலும் உயா்ந்து தற்போதைய தமிழக அரசின் தலைமைச் செயலாளராக விளங்குகிறார்.  கற்பனையும் கவித்திறனும் நடை அழகும் கூட்டி இலக்கியங்கள் விரைந்து படைத்து படைப்பாளா்கள் பந்தயத்தில் வென்று விருதுகளும் வெற்றிகளையும் பெறுவதொன்றே நோக்கமாகக் கொண்டு எழுதுபவா் அல்லா் இவா். மக்களின் வாழ்வை அறிந்து அறிவுறுத்தி சீா்படுத்தி செம்மையுறுத்தி மனிதம் எனும் மகத்தான விளைச்சலைக் காண பாடுபடும் எழுத்துழவன் இவா். ஊக்கப்படுத்தலும் உயா்வழிக்காட்டலும் முன்னேற்றுதலும் இவா் எழுத்தின் குறிக்கோள்களாக உள்ளன.

முனைவா் வெ.இறையன்பு படைப்புலகம்:

சிறுகதை உலகில் வ.வே.சு ஐயா், புதுமைப்பித்தன், கு.பா.ரா, கல்கி,  அண்ணா, தி.ஜானகிராமன், ஜெயகாந்தன், லக்ஷ்மி, திலகவதி போன்றோர் ஒரு மரபான பாரம்பரியத்தை உருவாக்கினா்.சிறுகதைகள் எண்ணிக்கையிலும் தரத்திலும் சிறந்து விளங்கி வருகின்றன.இம்மரபின் வழி வரும் முனைவா் வெ.இறையன்பு அவா்கள் அனுபவ வழி ஞானத்தை பலவகை படைப்புகளாக்கித் தருவதில் வல்லவராக விளங்குகிறார். கற்ற கல்வியறிவு, பெற்ற உலகியல் அறிவு, சிந்தனைத் திறன், மனிதம் செழிக்க வேண்டும் என்ற அக்கறை ஆகிய தனிச்சிறப்புகள் அவரது படைப்புகளில் வெளிப்படுவதை அறிய முடிகிறது.

வாய்க்கால் மீன்கள், வைகை மீன்கள்,பூபாளத்திற்கொரு புல்லாங்குழல் ஆகிய கவிதைத் தொகுப்புகளும் சாகாவரம், அவ்வுலகம், ஆத்தங்கரை ஓரம் ஆகிய புதினங்களும், படிப்பது சுகமே, இலக்கியத்தில் மேலாண்மை, போர்த்தொழில் பழகு, பத்தாயிரம் மைல் பயணம், வையத்தலைமைகொள், ஏழாம் அறிவு(மூன்று பாகங்கள்), ஓடும் நதியின் ஓசை என சிறியதும் பெரியதுமாகிய கட்டுரை நூல்கள் என மொத்தமாக 102 நூல்களைப் படைத்துள்ளார். தொலைக்காட்சிகளிலும் இலக்கிய மேடைகளிலும் பட்டிமன்றங்களிலும் இவரது வலிமையான கருத்துகள் மென்மையான இதமான பேச்சாக மலர்ந்துள்ளன.இறையன்பு அவ்வப்போது எழுதிய சிறுகதைகள் அரிதாரம்,(2005), அழகோ அழகு(2009), நரிப்பல்(2009), பூனாத்தி(2012), நின்னினும் நல்லன்(2014) என ஐந்து தொகுப்புகளாக வெளியாகியுள்ளன.அவை மனிதர்கள் எத்தகைய நெருக்கடிகள் சிக்கல்கள் எதிர்கொண்டாலும் எங்கும் கசப்பும் துயரமும் பொங்கி வழிந்தாலும் மேன்மையான அம்சத்திற்கு முக்கியத்துவம் தருவதைச் சித்திரித்துள்ளன. இறையன்பு முன்னேறத் துடிக்கும் இளைய தலைமுறையினரின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்குகிறார். “இறையன்புவின் பெரும்பாலான கதைகள் வாழ்வின் விழுமியங்களை முன்னிலைப்படுத்தி வெளியெங்கும் அலைகின்றன. ஆணவம், அதிகாரம், வன்முறை போன்றன கட்டமைக்கிற வாழ்தல் முறையைப் படைப்புகளின் வழியாகத் தகர்த்து, மனித இருப்பின் உயர்வு குறித்து அக்கறைகொள்வது என்பது இறையன்புவிடம் இயற்கையாகவே இருக்கிறது.பண்டையத் தமிழிலக்கியத்தின் தொடர்ச்சியாக அறச்சீற்றமும், சிறுமை கண்டு பொங்குகிற மனதின் ஆவேசமும் அவருடைய புனைவுகளின் வழியாக வெளிப்படுகின்றன” 2 என்று ந.முருகேச பாண்டியன் தனது தொகுப்புரையில் விளக்குகிறார்.மனிதர்களுக்குள்ளிருக்கும் தெய்வீக உணர்வுகளை கிளர்ந்தெழச் செய்வதே என் படைப்புகளின் நோக்கம் என்று தனது படைப்புகளுக்கு விளக்கம் காட்டும் வெ.இறையன்பு அவா்கள் பெரிய அலை வந்து என்னை குலுக்குகிற போதெல்லாம் என் வாசிப்பும் எழுத்தும் நான் நிலைகுலைந்துவிடாதபடி பார்த்துக்கொள்கின்றன என்று தன் எழுத்தின் பலத்தை சுயஅறிமுகம் செய்கிறார்.வாழ்வியல் உணர்வுகளான பசி, ஏழ்மை, கல்வி, வேலைவாய்ப்பின்மை,பெண்ணடிமைத்தனம் ஆகிய தீமைகள் நீங்க வேண்டும். நாடு பலவகையிலும் முன்னேற வேண்டும் என்ற இலட்சியத்தோடு கதைகளைப் படைக்கிறார். நடைமுறை வாழ்க்கையிலுள்ள உணா்வுகளும் சாதாரணமாகக் காணும் காட்சிகள் சம்பவங்கள் ஆகியவற்றையும் நடப்பு வாழ்க்கையில் கண்டறிந்த உண்மைகளைக் கதைகளாக்கிக் காட்டுகிறார். இவா் எழுத்தின் வலிமைகளாக எளிமை, அறிவுறுத்துதல், பண்படுத்துதல், இளைஞர்களை இலட்சிய பாதைக்கு அழைத்தல் முற்போக்கான வளர்ச்சி பாதையில் நாட்டை உருவாக்குதல் ஆகிய சிறப்பியல்களைக் கொண்டிலங்குவதை அறியமுடிகிறது. இத்தகு சிறப்புகளையுடைய வெ.இறையன்பு அவா்களின் சிறுகதைகளைக் கொண்டு வாழ்வியல் விழுமிய சிந்தனைகளை ஆய்ந்தறிவோம்.

ஒற்றுமையே பலம்:

“ஒன்றுபட் டாலுண்டு வாழ்வே-நம்மில்
ஒற்றுமை நீங்கி லனைவா்க்கும் தாழ்வே
நன்றிது தேர்ந்திடல் வேண்டும்- இந்த
ஞானம்வந் தாற்பின் நமக்கெது வேண்டும்?” 3

என்று மனிதர்களாகிய நமக்குள் இனம், மொழி, மதம் என பலவகையிலும் வேற்றுமைகள் ஏற்பட்டால் அது பகைவா்களுக்கு நல்வாய்ப்பாகி விடும். நம்மின் வேற்றுமைகள் அவா்தம் மேன்மைக்கு வழி வகுத்துவிடும் எனவே நம்மில் இருக்கும் சிறு சிறு வேற்றுமைகளைக் களைந்து வாழ்தல் நம் வாழ்வுக்குக்கும் வளர்ச்சிக்கும் வழியாகும் என்பதை அரிதாரம் கதை மூலம் உணர்த்தியுள்ளார் வெ. இறையன்பு ஐ.ஏ.எஸ் அவா்கள்.

அரிதாரம் கதையில் அந்த கிராமத்திற்கு புதிதாக வந்த வளா்ப்பு நாயின் தோற்றத்தையும் போஷாக்கையும் கண்ட அந்த ஊர் தெரு நாய்கள் அதற்கு பயந்து அடிமையாகி வாழ்கின்றன. தன் உணவு, சுதந்திரம் அனைத்தையும் இழந்து கிட்டதட்ட அடிமைகளாக வாழவேண்டிய நிலைக்கு ஆளாயின.அவற்றுள் சில கூடி தங்களின் அவல நிலையை உணர்ந்து ஒன்றுகூடி சீமை நாயை விரட்டிட போராட வேண்டும் என திட்டம் தீட்டின. இதை அறிந்த சீமை நாய் மடங்கிய காது நாய்களுக்கும் நிமிர்ந்த காது நாய்களுக்குமிடையே ஏற்றத்தாழ்வை உருவாக்கி பிரித்தாளும் சூழ்ச்சியைக்  கையாள்கிறது.

‘மடங்கிய காது நாய்கள் தாங்கள்தான் உசத்தி என்று சொன்னதாய் விஷயம்          பரவியபொழுது நிமிர்ந்த காதுகளுக்கு எக்கச்சக்கமான கோபம் ஏற்பட்டது.’ 4

பின்னா் இதுவும் சீமை நாயின் சூழ்ச்சி என உணா்ந்த நாய்கள் வேற்றுமை மறந்து ஒன்றுபட்டதை அறிந்து இந்த கிராமத்தை நீங்களே நிர்வகித்துக்கொள்ளுங்கள் இது உங்களுடையதுதான் என விட்டுச் செல்கிறது.

அதன் பின்னா் அந்த ஊர் நாய்களுக்கிடையிலேயே தங்கள் பரம்பரை வகையடிப்படையில் பிரிவு ஏற்படுகிறது. சில நாய்கள் சீமை நாயே நம்மை ஆண்டிருக்கலாம். சுதந்திரம் பெற்று என்ன பயன் என்று அவை கேட்கின்றன. அடிமைத்தனத்தையும் சுரண்டலையும் விரும்பி அவை ஏற்றுக்கொள்ளத் தயாராய் இருப்பதைச் சுட்டிக்காட்டுகிறார்.

மேம்போக்காக கேலியாகத் தோன்றினாலும் கசப்பான அரசியல் சூழலைச் சுட்டி ஒன்றுபட்டு வாழ வேண்டும். ஒற்றுமையே வாழ்வுக்கும் வளா்ச்சிக்கும் வழியாகும் என்ற விழுமியத்தை வெளிக்காட்டியுள்ளார் ஆசிரியா்.

பொய்மையும் வாய்மை:

பொதுவாக சிலரை நல்லவா் என்று நம்புவோம். ஆனால் அவா்கள் பொய்யானவா்களாக போலிகளாக இருப்பதை காலம் கடந்து தெரிந்துக்கொள்ளும்போது மனம் வருத்தம் கொள்ளும். மனிதா்கள் மீதான நம்பிக்கையை தகர்த்து எதையும் எவரையும் சந்தேகப்படு என்பதை நிலைநிறுத்திவிடும்.

நரிப்பல் கதையில் மாவட்ட ஆட்சித்தலைவரை அடிக்கடி தேடிவரும் பழநி ஒரு நரிக்குறவா் எனும் பழங்குடியினா் என அறிந்து அவரது விண்ணப்பத்தை ஏற்றுக்கொள்கிறார். அவா்கள் வங்கியில் வாங்கும் கடன் தவணைகளைச் சரியாகத் திருப்பிச் செலுத்துபவா்கள் என்றறிந்து நல்ல மதிப்பு வைத்திருக்கிறார்.பழநி தங்கள் கிராமத்திற்கு ஆட்சியா் வரவேண்டும் என பலமுறை வலியுறுத்துகிறார். நரிப்பல் ஒன்றைப் பரிசாகக் கொடுக்கிறார். ஆனால் நேர்மையான ஆட்சியா் அதை ஏற்க மறுத்துவிடுகிறார்.

பழநியின் பலநாள் கோரிக்கையை ஏற்று அடுத்த வாரம் அவருடைய கிராமத்திற்கு செல்ல முடிவெடுக்கிறார். அவா்களுக்கு பல திட்டங்களையும் கடனுதவிகளையும் தர திட்டமிடுகிறார். ஆனால் வங்கி அதிகாரிகள் அவா்களின் கடன்திருப்புதல் சரியாக இல்லை. மேலும் கடனுதவி செய்ய தயக்கம் காட்டுகின்றனா். ஆனால் ஆட்சியா் அவா்கள் சரியாக திருப்பிக் கட்டுவதாக அறிந்திருந்தார். தற்போதைய தகவல் அவருக்கு ஏமாற்றமாகிறது.

‘நான் என்னென்னமோ பிளான் வச்சிருந்தேன்.தொகுப்பு வீடு கட்டித்தரணும். முதியோர் கல்வி வகுப்புகள் நடத்தணும். ஆடு கோழி வளா்க்க லோன் ஏற்பாடு பண்ணணும். அவா்கள் வாழ்க்கைய குறும்படமா எடுத்து மத்திய தாழ்த்தப்பட்ட பழங்குடிப் பட்டியல்ல சேக்கணும்.. இப்படி ஏகப்பட்ட ஆசை எனக்கு இருந்திச்சி…’5

பின்னா் பழநி அடிக்கடி ஆட்சியா் சென்று வரும் செல்வாக்கைப் பயன்படுத்தி நரிக்குறவா்களிமிருந்து வங்கி கடன் கட்டுவதாய்ப் பணத்தைப் பெற்று கட்டாமல் கண்டபடி செலவு செய்ததை அறிந்து வருத்தம் அடைகிறார். மனிதர்கள் மீதான நம்பிக்கை பொய்த்துப் போன போது அவா் மனம் கனத்துப் போகிறது.

அவனை இனிமேல் உள்ளே விடவேண்டாம் என எச்சரிக்கிறார். அவா் அந்த ஊருக்குச் செல்வதாய் இருந்த நாளில் பழநியும் அவனது மனைவியும் தற்கொலை செய்து கொண்டதை அறிந்து மிகுந்த வருத்தமடைகிறார். ஊராருக்கு தன் கள்ளம் தெரிந்துவிட்டதால் பழநி எடுத்த முடிவை எண்ணி துயரமுறுகிறார்.

பழநி அடிப்படையில் ரொம்ப நல்லவன். அவன் இழப்பு அவா்தம் இனத்தாரிடம் கசப்பை ஏற்படுத்திவிடக்கூடாது என்கிறார். எல்லாம் நல்லபடியாக முடிந்தபின் அவனது அண்ணன் மகன் பாபு பழநி ஆட்சியரிடம் தரச்சொல்லியதாக ஒரு பொட்டலத்தைத் தருகிறான். அதில் அந்த நரிப்பல் இருந்ததை பெறுகிறார்.

நம்பிக்கையானவன் அந்த நம்பிக்கை இழக்கும்படியான செயலைச் செய்தாலும் மனிதத்தின் மீதான நம்பிக்கையை  இழக்க செய்யாமல் காத்த ஆட்சியரின் விழுமியம்

    “இன்னா செய்தாரை ஒறுத்தல் அவா்நாண
நன்னயம் செய்துவிடல்” 6

என்ற மனித விழுமியச் சிந்தனை இச்சிறுகதையில் வெளிப்படுகிறது.

விருது சிறுகதையில் சாதாரண கிராமத்தில் ஏழைக்குடிசையில் பிறந்த டிக்காராம் கடுமையான முயற்சியாலும் பயிற்சியாலும் போலீஸ் அதிகாரி ஆகிறான். அவனுக்கு கொடுமையான கொள்ளையா்களை பிடிக்கும் சவாலான பணி வழங்கப்படுகிறது. அதை மிகுந்த சிரமங்களுக்குள் செய்து கொள்ளைக் கூட்டத் தலைவனை சுட்டுப்பிடிக்கிறான். அந்த கிராமத்தையே கொள்ளைக் கூட்டத்தினமிருந்து காத்து நிம்மதி ஏற்படுத்துகிறான்.

கொல்லப்பட்ட கொள்ளையா்களின் தலைவன் டாகூ ராம்சிங்கின் புகைப்படங்களை வைத்து ஆவணங்களை ஆய்ந்தபோது பிற்கால ஆவணங்களில் அவனது பெயா் விடுபட்டிருந்தது. இதைப்பற்றி அறிய முயல முன்னாள் டி.ஜி.பி மகேஷ்சிங்கை தொலைபேசியில் தொடா்புகொள்ளக் கூறுகின்றனா். அவா் இந்த தகவலை யாரிடமும் கூற வேண்டாம் என்கிறார். இதேப்போன்று முன்பு நடந்த யுத்தத்தில் ஒரு கொள்ளையனைக் கொன்றோம். அவன் முகம் சிதைந்திருந்ததால் அது ராம்சிங்தான் எனக்கூறிவிட்டோம்.

‘நான் ராம்சிங்கைச் சுட்டுக்கொன்றதாக அரசுக்கு அனுப்பிவிட்டேன். எனக்கு ஜனாதிபதி விருதும் கிடைத்துவிட்டது.இப்போது வேறுவிதமாக அறிக்கை அனுப்பினால் அரசு என்னைப் பணியிலிருந்து நீக்கிவிடும்’.7

எனக் கெஞ்ச டிக்கா கவலைப்படவேண்டாம் என தேற்றி அறிக்கையை மாற்றி அடையாளம் தெரியாத தலைவன் சுடப்பட்டான் என செய்தியைத் தருகிறார்.

முன்னா் நடந்துவிட்ட தவறுக்காக தான் புரிந்த வீரதீரமான சாதனையையும் மறைத்து சக அதிகாரியைக் காப்பாற்றும் டிக்காராமின் செயல் பொய்மையும் வாய்மையிடத்த என்ற திருக்குறளின் விழுமியத்தைக் காட்டி நிற்கிறது.

இளமையில் இலட்சிய வாழ்வு:

இளமைப் பருவம் என்பது எதையும் செய்து முடிக்கும் வலிமையும் அறிவுத்திறனும் துடிதுடிப்பும் மிக்க பருவம். இப்பருவத்தில் யாரொருவன் தன்னை பலவகையிலும் வாழ்வில் நிலைநிறுத்திக் கொள்ளும் வழிகளில் ஈடுபடுத்திக்கொள்கிறானோ அவன் முன்னேற்றம் காண்கிறான்.

இளமைக்காலத்தை பிரம்மச்சரியம் எனும் பருவமாகக் குறித்தனா் நம் முன்னோர்.கல்வி, அறிவு, பணிவு, எதிர்கால வாழ்வுக்கான இலட்சிய பாதையினை உருவாக்குதல் போன்ற நற்செயல்களில் ஈடுபட ஏற்ற பருவமாக இது அமைகிறது.

முற்காலங்களில் குருகுலவாசம் எனும் கல்வி முறையில் தூய்மை, துறவு, சேவை, பணிவு ஆகிய நற்குணங்கள் வளா்த்தெடுக்கப்பட்டன. ஆனால் இன்றைய சுதந்திர நிலை கற்றலில் அறங்கள் நிறைந்த இளமைப்பருவம் காணாமல் போய்விட்டதை உணர்கிறோம்.

கல்லூரிக் காதல் சிறுகதையில் கதைநாயகன் சேதுபதி எனும் வயதில் மூத்த நண்பனைச் சந்திக்கிறான். அவனது பண்பும் பாசமும் நாயகனுக்குப் பிடித்துப்போகிறது. பேச்சை விட அமைதி சிறந்தது. விடுதியில் தங்கி படிப்பதால் நிறைய நேரம் கிடைக்கும். நிறைய படிக்கவேண்டும் என்றெல்லாம் அறிவுரை கூறுகிறார்.

நாயகனின் உடன்படிக்கும் இளைஞா்கள் கேளிக்கை, ஊர்ச்சுற்றுதல், திரைப்படம், பெண்களைப்பற்றிய நினைப்பு ஆகியவற்றில் மூழ்கியிருக்கின்றனா். ஆனால் நாயகன் தன்னை பலவகையிலும் மேம்படுத்துக்கொள்ளும் முயற்சியில் நிற்கின்றான்.

மற்ற ஆடவா்களெல்லாம் பழக விரும்பும் அழகியான மலா்மல்லிகை இவனை விரும்புகிறாள். சுற்றிச்சுற்றி வருகிறாள். அவனை காதலிப்பதாகவும் திருமணம் செய்துகொள்ள விரும்புவதாகவும் கூறுகிறாள். ஆனால் நாயகன் தான் இன்னும் அதற்கெல்லாம் தயாராகவில்லை எனவும் படிக்கவும் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளவும் இன்னும் ஐந்து ஆண்டுகள் ஆகலாம் எனவும் கூறி மறுத்துவிடுகிறான்.

“வாழ்வு நதியாக ஓடிக் கொண்டிருப்பது பனியாக இறுகிக் கொண்டிருப்பது அல்ல. அந்தக் காலகட்டத்தில் என்னைக் காட்டிலும் அறிவுள்ள அழகுள்ள என்னிடம் அன்பு காட்டுகின்ற மனிதன் கிடைத்தால் அவன் தோள்கள் என் தோள்களைக் காட்டிலும் பரந்ததாகத் தோன்றலாம். எந்த ஒப்பந்தமும் மீறக்கூடியதே!” 8

என்று பக்குவமான இளைஞனாக எடுத்துக்கூறுகிறான். கண்டதே காட்சி கொண்டதே கோலம் என வாழும் இளைஞா்களுக்கு இடையில் இவ்வாறான கல்வி, இலட்சியம், குறிக்கோள் கொண்ட இளைஞனைப் படைத்து எதிர்கால இந்தியாவின் தூண்களாகிய இளைஞா்களுக்கு வழிகாட்டுகிறார்.

தன்னை வேட்டல்:

பொதுவாக நாட்டின் நன்மைக்காக பொது அமைதிக்காக தான் துன்பமுற்றாலும் தன்னால் நன்மைக் கிடைக்கிறதென்றால் அதற்காக தன் உயிரையும் தரும் மனமுடைய மக்கள் இருப்பதால்தான் இவ்வுலகம் இன்னும் அழியாதிருக்கிறது.

    “புகழ்எனில் உயிரும் கொடுக்குவா் பழிஎனின்
உலகுடன் பெறினும் கொள்ளலா் அயா்வுஇலா்
அன்னமாட்சி அனையராகி
தமக்கென முயலா நோன்றாள்
பிறா்க்கென முயலுநா் உண்மை யானே” 9

என்ற புறநானூற்று பாடல் இங்குப் பொருந்துகிறது.

துறந்தான் மறந்தான் சிறுகதையில் மகத நாட்டில் வரலாறு காணாத வறட்சியும் பஞ்சமும் தலைவிரித்தாடுகிறது. மக்கள் செத்து மடிகின்றனா். எல்லாத் திசைகளிலிருந்தும் துன்பமான செய்திகளே செவிக்கெட்டுகிறது. மன்னன் சந்திர குப்த மௌரியன் துறவி பத்திரபாகுவை சந்தித்து இத்துன்ப நிலையை மாற்றிட உபாயம் வேண்டுகிறான்.

‘அப்பாவி மக்கள் இவ்வாறு அலைகழிக்கப்படுகிறார்கள் என்றால் அதிகாரத்தின் உச்சத்தில் இருக்கும் யாரோ பாவம் செய்திருக்கிறார்கள் என்றுதான் பொருள்.அதற்கான பிராயச்சித்தமே இந்த நாட்டைக் காப்பாற்றும்’.10

என்று கூறுகிறார்.

இதனை அறிந்து மன்னன் நாட்டில் நிலவும் வறுமையும் துன்பமும் தீர தான் இளவரசனுக்கு பட்டம் சூட்டிவிட்டு துறவு மேற்கொள்வதாக உறுதியேற்று செயல்படுத்துகிறான்.

‘மகத்தான இந்த மகத சாம்ராஜ்யத்தில் அந்த உயிர்த் தியாகத்தால் அனைவரும் சுபிட்சமாக இருக்க வேண்டும்.சந்திரகுப்த மௌரியன் பதவிக்கு ஆசைப்பட்டவனல்ல என்பதை சரித்திரம் எப்போதும் உணரவேண்டும்’. 11.

என்று நாட்டின் நன்மைக்காக தன் பதவியைத்துறந்து துறவியாகி உயிர்த்துறக்கவும் தயாராக இருக்கும் மன்னனின் தியாக மனநிலையை எடுத்துக்காட்டுவதன் வழி பொதுநலனுக்காய் தியாகம் செய்யவும் முன்வரவேண்டும் என்ற வாழ்வியல் விழுமியம் வெளிப்படுவதை அறிகிறோம்.

நேர்மை குணம்:

நேர்மை குணம் கொண்ட மனிதர்கள் இருப்பதால்தான் இந்த உலகம் இன்னமும் நிலைபெற்றிருக்கிறது. இன்னமும் உலகில் மழைப் பொழிகிறது.ஊழிக்காற்றிலும் யுகமுடிவிலும் ஆழிப்பேரலைகளாலும் கடும் பஞ்சத்தாலும் பெருமழையினாலும் பாதிப்புகள் ஏற்பட்டபோதும் எல்லாத் துன்பங்களை தாண்டியும் உலகம் தன்னை மீண்டும் நிலைநிறுத்துக் கொண்டு நீடிக்கிறது.

நோ்மைக்கு சோதனை அதிகம். சோதனைகளை தாங்கும் உள்ளமே நோ்மையில் சிறந்து விளங்கும்.

நாய்ப்பிழைப்பு சிறுகதையில் ஜோசப் என்பவா் தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். அவரது பயணப்படி சம்பளப்பட்டியல் கேள்விக்குரியாகிறது. தினவனந்தபுரத்திற்கு மூன்று முறை சென்று வந்ததற்கான பயணப்படி அது. ஆனால் நிதி அலுவலா் கணேசன்  அந்த ஊரில் கம்பெனியின் கிளை இல்லாதபோது அங்கு பணிநிமித்தமாக சென்றுவந்ததேன் என கேட்டு நிறுத்துகிறார். அது கம்பெனி எம்.டி யின் பீகில் வகை நாய்க்கான மேட் தேடிச்சென்ற விடயமாகத்தான் என்று கூற, அதற்கெல்லாம் பயணப்படி தரமுடியாது என்கிறார். ஜோசப்பும் என் சொந்த செலவில் சென்று வந்ததாகவே இருக்கட்டும் என பயணப்படி பட்டியலை திரும்பப் பெறுகிறார். ஆனால் கம்பெனி எம்.டி காக தான் பட்ட நாய்படாதபாட்டையும் அதற்கான பயணப்படி கிடைக்காதபோதும் தன் செலவாகவே இருந்துவிட்டுப் போகட்டும் என  எடுத்துக்கொள்ளும் பக்குவமும் உணா்த்தப்பட்டிருக்கிறது.

நோ்மை சிறுகதையில் குப்பன் என்ற அரசு அலுவலா் இறந்துவிடுகிறார். அவரது மரணத்திற்குப்பிறகு கிடைக்கவேண்டிய பணம் அவரது முதல் மனைவி தங்கத்துக்குத்தான் கிடைக்கவேண்டும் என்கிறார்.கோபாலன். அவா் எதையும் விதிமுறைப்படியே செய்பவா். ஆனால் சுப்ரமணியன் மனித நேயத்தையே பெரிதாக மதிப்பவா். குப்பன் இரண்டாவது மனைவி  செண்பகத்திற்கும் அவா்களது நான்குப் பிள்ளைகளுக்கும்தான் கிடைக்கவேண்டும் என்கிறார். தங்கம் சில காலங்களிலேயே குப்பனை பிரிந்து வேறு திருமணம் செய்து வாழ்கிறாள்.ஆனால் சட்டபடி குப்பனது வாரிசாக குறிப்பிடப்பட்டிருக்கிறார்.

செண்பகம் குப்பனோடு வாழ்ந்தாலும் பிள்ளைகளை பெற்றிருந்தும் சட்டப்படியான வாரிசாக இல்லை. இதனைத் தீர்க்க தங்கத்தைத் தேடி பேசிப்பார்க்கின்றனா். வேறு வழியின்றி அவளிடமே மொத்த பணப்பலன்களையும் தருகின்றனா். ஆனால் அவள் தான் அவருடன் வாழ்ந்தது கொஞ்ச காலமே. தற்போது இரண்டாம் திருமணம் செய்த கணவரும் இறந்திருந்தாலும் குப்பனது பணப்பலனுக்கு உரியவள் செண்பகமே. அவளே அவரோடு வாழ்ந்தாள் சுகதுக்கங்களில் பங்கேற்றாள். வாரிசு பெற்றாள். எனவே அவளுக்கு மொத்த பணமும் சேரவேண்டியது என கொடுத்து விடுகிறாள்.

‘சாமி! இந்தப் பணத்துல நயா பைசாவக்கூட நான் தொட மாட்டேன். இதுல ஒரு டீ வாங்கிச் சாப்பிடக்கூட எனக்கு உரிமை இல்ல. அந்த மனுசனோட குடும்பம் நடத்தி பொங்கிப்போட்டு புள்ளைங்களைப் பெத்துக்கிட்ட இந்தப் பொம்பளைக்குத்தான் அத்தனை பணமும் சேரணும்’.12

இங்கே சட்டத்தால் சிக்கல் நோ்ந்தாலும் நோ்மையும் மனிதநேயமுமே வெல்கிறது. சிக்கல் எளிதாக தீர்கிறது. பிறா்க்கு நியாயமாக கிடைக்கவேண்டியதை சட்டப்படியாக இருந்தாலும் தாம் ஏழ்மையில் இருந்தாலும் ஏற்றுக்கொள்ளாத தங்கம் பெயரளவில் மட்டுமல்ல உண்மையிலும் தங்கம்தான் என முடிக்கிறார்.

இன்றும் எங்கோ தொலைத்துவிடும் நகைகளையும் ரொக்க பணத்தையும் நோ்மையாக ஒப்படைத்துவிடும் மனிதர்கள் சிலரை காணும்போது மனிதம் கெட்டுப்போகாமல் சுழலும் உலகை நினைக்க பெருமையாகத்தான் உள்ளது. வாழ்க்கை இனிக்கத்தான் செய்கிறது.

நின்னினும் நல்லன் சிறுகதையில் கருப்பச்சாமியிடம் பொன்னுமுத்து கடன்வாங்குகிறார். சொன்ன தேதியில் கடனைத்திருப்ப இயலவில்லை. இதனால் இருவரிடையே வாக்குவாதம் நடைபெறும்போது பேராசிரியா் முகமது ஷா தலையிட்டு அவரது நிலத்தை விற்று பணம் தர மூன்று மாத கால அவகாசம் கேட்கிறார்.ஆனால் பொன்னுமுத்துவால் மூன்று மாதம் கழித்தும் நிலத்தை விற்று கடனை அடைக்க முடியவில்லை. காரணம் அவசரத்திற்கு விற்காததால் யாரும் சரியான விலை கேட்கவில்லை. விற்க முடியவில்லை. அதனால் முகமது ஷா தனது வருங்கால வைப்பு கணக்கிலிருந்து பெற்ற கடன்தொகையை கருப்பசாமியிடம் கொடுத்து சொல்லைக் காப்பாற்றிக் கொள்கிறார். பொன்னுமுத்து இதை கேள்வியுற்று தன் நிலத்தை பணத்திற்குப் பதிலாக கிரையம் பெற்றுக்கொள்ளுமாறு வேண்டுகிறார். ஆனால் ஷா அதற்கு மறுப்புத் தெரிவிக்கிறார். இறுதியாக ஷா பெயரில் அந்த நிலம் பத்திரப் பதிவாகிறது. பயன்படாத அதிக விலைபோகாத அந்த நிலத்தில் தென்னங்கன்றுகளை வைக்கிறார் ஷா. கால மாற்றத்தில் அந்த நிலத்தை கம்பெனிகாரா்கள் அதிக விலைக்குக் கேட்கின்றனா் மூன்று இலட்சத்திற்கு வாங்கிய நிலம் ஒரு கோடிக்கு விலைக்குக் கேட்கின்றனா். ஷா பொன்னுமுத்துவிடம் நிலத்தை திரும்ப பெற்றுக்கொள்ளுமாறு கேட்கிறார். ஆனால் பொன்னுமுத்து

‘நல்லா சொன்னீங்கய்யா. நீங்க மட்டும்தான் சோத்துல உப்பு போட்டு சாப்புடுறீங்களா? எங்களுக்கும் மானம் ரோசம் இருக்கு. கொடுத்ததைத் திருப்பி வாங்கற புத்தி எந்தக் கஷ்டத்திலேயேயும் எங்களுக்கு இருந்ததில்லை’. 13

என்று கொடுத்த நிலம் கொடுத்ததுதான் என மறுத்துவிடுகிறார்.

தான் என்னதான் பணக்கஷ்டத்திற்காக வாங்கியிருந்தாலும் தக்க நேரத்தில் உதவியிருந்தாலும் பல மடங்கு பொறுமான நிலத்தையும் அதன் விலை மதிப்பையும் பொன்னுமுத்துவிற்கே தந்துவிட நினைக்கும் முகமது ஷாவும் தற்போது என்ன விலையாக உயா்ந்திருந்தாலும் விற்றுவிட்ட நிலத்தின் மதிப்பு தனக்குத் தேவையில்லை என மறுக்கும் பொன்னுமுத்துவும் மரித்துவிடாத நேர்மையும் நாணயமும் உலகில் நிலைப்பதற்கான மனித சாட்சிகள். இவா்களால்தான் உலகம் சுழல்கிறது.

முடிபுகள்:

  1. மனிதர்கள் தங்களுக்குள் உள்ள வேற்றுமைகளை மறந்து ஒன்றுபட்டு வாழவேண்டும். இல்லையெனில் ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டமாகிவிடும்.ஒற்றுமையே பலம் என்று உணரவேண்டும். அடிமை வாழ்க்கையை விரும்பக்கூடாது.
  2. குற்றம்பார்க்கில் சுற்றம் இல்லை.மனிதர்களில் சில குற்றம் குறைகள் இருந்தாலும் அதனை பெரிதுப்படுத்தி மனிதத்தை காயப்படுத்திவிடக்கூடாது. சில சூழல்களில் அடுத்தவா் நலனுக்காக தன் சாதனைகளையும் மறைத்துக் கொள்ளும் மனித நேயா்களும் உள்ளனா்.
  3. இளமைப் பருவத்தில் மனதை சுகங்களில் திளைக்கவிடாமல் திறன்களை பெறுவதற்கான பயிற்சிகளில் ஈடுபடவேண்டும். இலட்சிய நோக்குள்ள இளைஞா்களையே நாடு எதிர்நோக்குகிறது.
  4. பொதுநலனுக்காகவும் நாட்டின் நலனுக்காகவும் நீதிகளை நிலைநாட்டவும் தன்னையே தந்த தியாகச் செம்மல்கள் வாழ்ந்த நாடு இது. அவா்களின் தியாக மனப்பான்மையிலிருந்து இன்றைய இளைஞா்கள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்.
  5. மானம் பெரிதென வாழ்ந்த கவரி மான் பரம்பரையினா் நம் தமிழா். அடுத்தவா் பொருளையும் புகழையும் குறுக்கு வழிகளில் தாம் பெறக் கருதக்கூடாது. அது நம் மானத்திற்கு இழுக்கு.
  6. சொல் திறம்பாமை மனிதா்களின் உயா்குணம். எந்த நிலையிலும் அந்நற்குணத்திலிருந்து மாறிவிடக்கூடாது.அடுத்தவா் உழைப்பையும் அடுத்தவா் சொத்தையும் விரும்பாத நோ்மைத் திறம் மாறா மனிதர்கள் மனித விழுமியத்தின் ஆணிவோ்கள். நல்லோர் கெடுவதில்லை.
  7. உண்மை, நோ்மை, தியாகம், பற்றின்மை, பொதுநலம், தொண்டு மனப்பான்மை, மனிதமே புனிதமாய் வாழும் தூய்மை ஆகிய இவையே வெ.இறையன்புவின் சிறுகதைகளின் முடிபான வாழ்வியல் விழுமியங்களாக விளங்குவதை ஆய்ந்தறியப்பட்டன.

சான்றெண் விளக்கம்:

  1. திருக்குறள்- திருவள்ளுவா்- பொருட்பால்-சொல்வன்மை அதிகாரம் குறள் எண் 647 ஜி.யு போப் ஆங்கில மொழியாக்கம் நியு+ செஞ்சுரி புக் .ஹவுஸ் (பி) லிட் 41-பி சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட் அம்பத்தூர் சென்னை-98 மூன்றாம் பதிப்பு செப்டம்பா் 2012 ப.133
  2. ந.முருகேச பாண்டியன்- தேர்வு மற்றும் தொகுப்பு- தேர்ந்தெடுக்கப்பட்ட இறையன்பு சிறுகதைககள்- நியு+ செஞ்சுரி புக் .ஹவுஸ் (பி) லிட் 41-பி சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட் அம்பத்தூர் சென்னை-98 மூன்றாம் பதிப்பு-2019.
  3. மகாகவி சுப்ரமணிய பாரதி-பாரதியார் கவிதைகள் தேசிய கீதங்கள்- வந்தே மாதரம் பாடல்- ப.124-பதிப்பு முனைவா் ச. மெய்யப்பன் –தென்றல் நிலையம் சிதம்பரம்-608001 முதல்பதிப்பு-2000
  4. தேர்ந்தெடுக்கப்பட்ட இறையன்பு சிறுகதைகள்- தேர்வும் தொகுப்பும் ந.முருகேச பாண்டியன்-அரிதாரம் சிறுகதை ப.5 நியு+ செஞ்சுரி புக் .ஹவுஸ் (பி) லிட் 41-பி சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட் அம்பத்தூர் சென்னை-98 மூன்றாம் பதிப்பு-2019.
  5. மேற்குறிப்பிட்ட நூல் நரிப்பல் சிறுகதை ப.13
  6. திருக்குறள்- திருவள்ளுவா்- அறத்துப்பால்- இன்னா செய்யாமை அதிகாரம் குறள் எண்: 314 ஜி.யு போப் ஆங்கில மொழியாக்கம் நியு+ செஞ்சுரி புக் .ஹவுஸ் (பி) லிட் 41-பி சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட் அம்பத்தூர் சென்னை-98 மூன்றாம் பதிப்பு செப்டம்பா் 2012 ப.65
  7. இறையன்பு சிறுகதைகள்- மேற்காண் நூல்- விருது சிறுகதை ப.99
  8. இறையன்பு சிறுகதைகள்- மேற்காண் நூல்- கல்லூரிக் காதல் சிறுகதை ப.57
  9. புறநானூறு கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி பாடல் எண் 182- ப.256 ஞா.மாணிக்கவாசகன் உரை- உமா பதிப்பகம் 18 பவளக்காரத் தெரு மண்ணடி சென்னை-600001 நான்காம் பதிப்பு-பிப்ரவரி
  10. இறையன்பு சிறுகதைகள்- மேற்காண் நூல்-துறந்தான் மறந்தான் சிறுகதை ப.67
  11. இறையன்பு சிறுகதைகள்- மேற்காண் நூல்- துறந்தான் மறந்தான் சிறுகதை ப.70
  12. இறையன்பு சிறுகதைகள்- மேற்காண் நூல்-நேர்மை சிறுகதை பக்.78-79
  13. இறையன்பு சிறுகதைகள்- மேற்காண் நூல்- நின்னினும் நல்லன் சிறுகதை ப.114

துணைநூற் பட்டியல்:

முதன்மை நூல்:

1. தேர்ந்தெடுக்கப்பட்ட இறையன்பு சிறுகதைகள், (தேர்வும் தொகுப்பும் ந.முருகேச பாண்டியன்), நியு+ செஞ்சுரி புக் .ஹவுஸ் (பி) லிட், 41-பி சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர்- சென்னை-98 மூன்றாம் பதிப்பு-2019.

துணைமை ஆதார நூல்கள்:

1. திருக்குறள்- தமிழ்- ஆங்கிலம், ஜி.யு+ போப் ஆங்கில மொழியாக்கம், நியு+ செஞ்சுரி புக் .ஹவுஸ் (பி) லிட், 41-பி சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர் சென்னை-98, மூன்றாம் பதிப்பு-செப்டம்பா் 2012.

2. பாரதியார் கவிதைகள், பதிப்பு முனைவா் ச. மெய்யப்பன், தென்றல் நிலையம் சிதம்பரம்-608001, முதல்பதிப்பு-2000.

3. புறநானூறு, ஞா.மாணிக்கவாசகன் உரை, உமா பதிப்பகம், 18, பவளக்காரத் தெரு, மண்ணடி சென்னை-600001, நான்காம் பதிப்பு-பிப்ரவரி 2010.


ஆய்வறிஞர் கருத்துரை: (Peer Review)

தமிழ் இலக்கிய வரலாற்றில் சிறுகதை, புதினம், சிந்தனை வெளிப்பாடுகள் மூலம் தன்னுடைய இடத்தைத் தக்க வைத்துக் கொண்டவர் வெ. இறையன்பு (இ.ஆ.ப.). அவருடைய சிறுகதைகள் சமூகச் சிக்கல்களை முன்வைத்து அதற்குத் தீர்வு காணும் நோக்கில் எழுந்தவை. அத்தகைய சிறுகதைகளில் காணப்படும் வாழ்வியல் விழுமியங்களைக் கட்டுரையாசிரியர் திறம்படத் தொகுத்துக் கூறியுள்ளார். அயலக இலக்கிய வடிவமான சிறுகதையைத் தமிழ் மொழி ஒரு நூற்றாண்டுக்கு முன்னரே உள்வாங்கிக் கொண்டது என்றாலும், அதனுடைய உச்சம் தொடுவதற்கும் சில ஆளுமைகளின் படைப்புகள் உதவின. அந்த ஆளுமைகளின் வரிசையில் தற்காலத்தில் நம்மிடையே திகழ்பவர் வெ. இறையன்பு. சமூக ஒழுங்கு, சமநீதி, மானுட மாண்பு, அறமும் அன்பும் பிணைந்து கொள்ளுகிற தருணங்கள், அரசியல், சட்டச் சிக்கல்கள் ஏற்படுத்தும் வாழ்வியல் முடிச்சுகள், இன்னும் தீர்ந்து விடாத மானுட அழுக்குகள் என பல தளங்களில் பரக்கப் பேசும் இவருடைய சிறுகதைகள் காலங்கடந்தும் நிலைபெற்றுத் திகழக் கூடியவை. இதனைக் கட்டுரையாசிரியர் பிழிவாக எடுத்துக் காட்டியுள்ளார். சிறுகதைகளுக்குள் ஊடுபாவாகச் சங்கத் தெறிப்புகளும், வள்ளுவத்தின் முத்துகளும் பரவிக் கிடப்பதையும் கட்டுரையாசிரியர் புலப்படுத்த முயன்றிருப்பது பாராட்டுக்குரியது.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *