(Peer Reviewed) மெய்யுரைகண்ட தெய்வச்சிலையாரின் உரைமரபுகள்

0

டாக்டர்.  வே.விக்னேசு
தமிழ்  உதவிப்பேராசிரியர்,
பூ. சா. கோ. கலை அறிவியல் கல்லூரி,
கோயம்புத்தூர்641014.
vignesh@psgcas.ac.in
9597203214.

தோற்றுவாய் :

உயர்தனிச் செம்மொழியான தமிழ்மொழி இலக்கிய வளமும் இலக்கண வரம்பும் உடையதாம். தமிழ்மொழிக்கு இலக்கண வரம்புரைக்கும் நூல்களுள்ளும் தலைமைசான்றது தொல்காப்பியமேயாம். எழுத்து, சொல், பொருள் என்னும் மூன்றதிகாரப் பகுப்பொடு தொல்காப்பியரால் இயற்றப்பெற்ற இவ்வரிய நூலின் இடையதிகாரமாம் சொல்லதிகாரத்திற்கு உரைகண்ட உரையாசிரியர் பலராவர். அவருள்ளும் இற்றைக்கு அச்சிற்பதிப்பிக்கப்பட்ட பழையவுரைகளென இளம்பூரணர், சேனாவரையர், நச்சினார்க்கினியர், தெய்வச்சிலையார், கல்லாடனார், பெயரறியப்படாத பழையவுரைகாரர் ஒருவர் ஆகிய அறுவருரைகளே கிட்டியுள. அவ்வகையில், உரையெழுதுதல் வழியாக மூலநூலைப் போற்றிக்காத்த இவ்வுரையாசிரியப் பெருமக்களுள் தொல்காப்பியச் சொல்லதிகாரத்திற்கு மட்டுமே உரைகண்ட தெய்வச்சிலையாரின் உரைப்போக்கையும் உரைமரபுகளையும் இக்கட்டுரை சுருங்க விளக்க முற்படுகின்றது.

தொல்காப்பிய உரையாசிரியர்கள் :

தொன்மைத் தமிழிலக்கண நூலான தொல்காப்பியத்திற்குக் கிட்டிய பழையவுரைகளுள் இளம்பூரணருரையே பழமையானது; நூல் முழுமைக்கும் கிடைத்துளது. நச்சினார்க்கினியருரை எழுத்து, சொல், பொருளில் முன்னுள்ள அகத்திணை, புறத்திணை, களவு, கற்பு, பொருள் என்னும் ஐந்தியல்களுக்கு மட்டுமே கிடைத்துளது. எஞ்சிய பொருட் பகுதியாகிய மெய்ப்பாடு, உவமம், செய்யுள், மரபு என்னும் நான்கியல்கட்குப் பேராசிரியருரையே கிடைத்துளது. மற்றைய பகுதிகட்குப் பேராசிரியருரை கிடைத்திலது. அன்றியும், நச்சினார்க்கினியருரையும், பேராசிரியருரையும் இயைந்து ஒருவருரையாகத் தொல்காப்பியப் பொருளதிகாரம் முழுமைக்கும் அமைந்துள்ளது. அங்ஙனமே, நடுநின்ற சொல்லதிகாரத்திற்கு முன் சுட்டிய அறுவருரைகள் கிடைத்துள.

தமிழிலக்கிய இலக்கணங்களுள் உரை பலவாக வாய்க்கப்பெற்ற நூல்களுள் தொல்காப்பியமும் ஒன்றாம். தொல்காப்பியரின் உளக்கிடக்கையை உணர்ந்து உலகிற்குணர்த்தச் சான்றோர் பெருமக்கள் பலரும் காலந்தோறும் முயன்றதன் விளைவே தொல்காப்பியத்தின் உரைப்பெருக்கத்திற்குக் காரணமாம். இவ்வகையில், ’தொல்காப்பியமும் சங்க நூல்களும் கி.பி. நான்காம் நூற்றாண்டுக்குப் பின் தமிழகத்தில் ஏற்பட்ட அரசியல் மாற்றத்தால் கல்வியுலகிற் பரவாதிருந்தன’ என்றும், ’கி.பி. 11-ஆம் நூற்றாண்டுக்குப் பின் தொல்காப்பிய இயக்கமும் சங்கவிலக்கிய மறுமலர்ச்சியும் தோன்றின’ என்றும் உரைக்கும் வ. சுப. மாணிக்கனார், தொல்காப்பிய இயக்கம் பற்றியும், தொல்காப்பியக் கல்வி பரவியமை பற்றியும் கூறும் கருத்துக்கள் இவண் நோக்கத்தக்கனவாம். அவர் கூறுமாறு:

இவ்வியக்கத்தின் தலைவர் இளம்பூரணர்; உரையாசிரியர் என்ற கீர்த்தியைத் தமக்கே உரிமை கொண்டவர். நேராப் புகழ்மைப் பேராசிரியரும், ஆனாப் பெருமைச் சேனாவரையரும், மெய்யுரை கண்ட தெய்வச்சிலையாரும், உச்சிமேற்புலவர் நச்சினார்க்கினியரும், சொல்லுரைகண்ட கல்லாடனாரும் இவ்வியக்கத்தின் படையாளர்கள். இப்பேரியக்கம் மூன்று நான்கு நூற்றாண்டுகள் தொல்காப்பியக் கல்வியைக் கற்றாரிடைப் பரப்பியது (தொல்காப்பியக்கடல், ப. 264) என்பது அவர் கருத்தாம்.

இன்னவகையில், தொல்காப்பிய நிலைபேற்றுக்கும், தொல்காப்பியக் கல்வி பரவலுக்கும் உரையாசிரியர்களின் உரைகளும் அன்னோர் மேற்கொண்ட உரைமுறைகளும் பெருங்காரணமாம்.

சொல்லதிகாரத்திற்கு வாய்த்த பேறு :

எழுத்து, சொல், பொருள் என நிற்கும் தொல்காப்பியத்தில் நடுநின்ற சொல்லதிகாரத்திற்கு மட்டும் பழையவுரைகளென மேற்சுட்டிய அறுவருரைகள் உள. அஃதேல், எழுத்து, பொருள் என்பவற்றினும் இடையதிகாரமாம் சொல்லதிகாரத்திற்கு மட்டும் உரைகள் பல தோன்றியது என்னை? என்ற வினா எழுகின்றது. எழுத்ததிகாரத்தினும், பொருளதிகாரத்தினும் விட இலக்கணங் கற்போர்க்குச் சொல்லதிகாரம் இன்றியமையாதது ஆதலானும், அதற்கு விரிவான விளக்கமும் வேண்டப்பட்டதாலும், ’சொல்’ பற்றிய கருத்து வேற்றுமை மிக்கிருத்தலானும் உரையாசிரியர் பலர் இச்சொல்லதிகாரத்திற்குத் தனித்தனியே உரை வரைந்தனர் எனல் தகும். இப்பேறு சொல்லதிகாரத்திற்கே வாய்த்த பேறாகும்.

தொல்காப்பியச் சொல்லதிகார ஆராய்ச்சி இடைக்காலத்துச் சிறப்புற்று விளங்கியமை போன்றே, பதினேழாம் நூற்றாண்டில் மீண்டும் அவ்வாராய்ச்சித் தொடங்கியது. இவ்வகையில், பின்னங்குடி. சா. சுப்பிரமணிய சாத்திரியார் சொல்லதிகாரப் பழையவுரையாசிரியர்களின்  உரைக்குறிப்புக்களையும் தம் ஆய்வு முடிபுகளையும் கொண்ட, தொல்காப்பியச் சொல்லதிகாரக் குறிப்பு என்னும் பெயரிய நூலை 1930-இல் வெளியிட்டார். சொல்லதிகார மூலத்தையும் உரைகளையும் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார் பதிப்பித்தபொழுது, இளவழகனார், ஞா. தேவநேயப்பாவாணர், ஆ. பூவராகம்பிள்ளை, கு. சுந்தரமூர்த்தி போன்றோரின் குறிப்புரைகளுடனும் விளக்கவுரைகளுடனும் பதிப்பித்து வெளியிட்டனர்.

தொல்காப்பியச் சொல்லதிகாரம் மேற்சுட்டிய அறுவருரைகளுடன் உரைவளப் பதிப்பு என்னும் முறையில் பல பதிப்புகள் வெளிவந்துள. ஆபிரகாம் அருளப்பன், வி.ஐ. சுப்பிரமணியம் ஆகிய இருவரும் இணைந்து பதிப்பித்தத் ‘தொல்காப்பியம்-சொல்லதிகாரம், உரைக்கோவை (1963) என்னும் நூல் இவ்வகையில் முன்னோடியாகும். இவ்வுரைக்கோவையிலும் கிளவியாக்கம் முதலாக விளிமரபு ஈறாக நான்கு இயல்களைக் கொண்ட முதற்பாகம் மட்டுமே வெளிவந்துளது. தொல்காப்பிய நூல் வெளியீட்டுத் திட்டத்தின் மூலம் சொல்லதிகார அறுவருரைகளையும் சேர்த்தும், ஆ. சிவலிங்கனாரின் ஆய்வுரையுடனும் உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட ‘தொல்காப்பியம்-சொல்லதிகாரம் உரைவளமும் தி.வே. கோபாலையரின் விளக்கவுரையுடன் தஞ்சை சரசுவதி மகால் நூலகத்தராலும், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தாராலும் வெளியிடப்பட்ட தொல்காப்பியம் சொல்லதிகாரம் உரைக்கொத்துஎனும் உரைவளப்பதிப்பும் இவ்வகையில் சுட்டத்தக்கதாம்.

தொல்காப்பியச் சொல்லதிகாரத்தையும் நன்னூல் சொல்லதிகாரத்தையும் ஒப்பிட்டு, பல விளக்கங்களையும், குறிப்புக்களையும் சேர்த்து, தொல்காப்பியம்-நன்னூல்- சொல்லதிகாரம் (1971) என்ற தலைப்பில் க. வெள்ளைவாரணர் இயற்றிய நூலும் தொல்காப்பியம் முழுமைக்கும் ஆராய்ச்சிக்காண்டிகையுரை வரைந்து ச.பாலசுந்தரனார் வெளியிட்ட தொல்காப்பியச் சொல்லதிகார ஆராய்ச்சிக்காண்டிகையுரை’ நூலும் தொல்காப்பியச் சொல்லதிகாரத்திற்கு அ.கு. ஆதித்தர் தெளிவுரையெழுதி வெளியிட்ட தொல்காப்பியம்-சொல்லதிகாரம்-ஆதித்யம் (1977) என்ற நூலும் தொல்காப்பியச் சொல்லதிகார ஆராய்ச்சியின் தொடர் பணிகளெனச் சுட்டத்தக்கனவாம். இவற்றையடுத்தும் பல எளிய உரைகள் தொடர்ந்து வெளிவந்து கொண்டுள்ளன.

இனித் தொல்காப்பியச் சொல்லதிகாரத்திற்கு உரைபகன்ற தெய்வச்சிலையாரின் உரைப்போக்கும் உரைமரபுகளும் ஆய்ந்துரைக்கப் பெறுகின்றன.

மெய்யுரைகண்ட தெய்வச்சிலையார் :

தொல்காப்பியச் சொல்லதிகாரத்திற்கு உரைகண்ட சான்றோருள் ஒருவர் தெய்வச்சிலையாராவர். இவ்வுரையாசிரியர் சொல்லதிகாரத்திற்கு மட்டுமே உரை செய்தவராவர்.  இளம்பூரணர், சேனாவரையர், நச்சினார்க்கினியர் இம்மூவர் காலத்திற்குப் பிற்பட்டவரிவர்.  பாண்டிநாட்டில் தோன்றியவர்.

பதிப்பு வரலாறு :

தொல்காப்பியச் சொல்லதிகாரத் தெய்வச்சிலையாருரை முதன்முதலாக, கரந்தைத் தமிழ்ச்சங்கத்துச் சார்பில், கரந்தைக் கவியரசு அரங்க. வேங்கடாசலம்பிள்ளை அவர்களால் அரிதின் முயன்று பதிப்பிக்கப்பட்டு விரிவான பிற்சேர்க்கையுடன் 1929-ஆம் ஆண்டில் வெளியிடப்பெற்றது.

கரந்தைக் கவியரசு அவர்கட்கு முதலில் ஓர் ஏடு கிடைக்க, அவ்வேட்டின் இறுதியில் ஆத்திரேய கோத் என்னுஞ் சொற்கள் இருந்தன என்பதால் இது ஆத்திரேய கோத்திரத்துப் பேராசிரியர் உரையென்று பேரறிஞர் சிலர் எழுதியுளது பற்றி, முதலில் இந்நூலுக்குப் பேராசிரியர் உரையெனும் பெயர் தந்திட்டதுடன் அதுகொண்டே நூல் முழுவதும் பதிப்பித்து விட்டார்கள். பின், உ.வே. சாமிநாதையரவர்களிடம் இவ்வுரையேடொன்று இருப்பது அறிந்து அதனை வேண்டிப் பெற்று, அவ்வேட்டில் கண்ட வேறுபாடுகளையெல்லாம் பிற்சேர்க்கையாக இணைத்து, நூலின் பெயரையும் உ.வே. சாமிநாதையரவர்கள் தந்த ஏட்டின் முன்னும் பின்னும் கண்டாங்கு தெய்வச்சிலையார் உரை எனக் கொண்டு பதிப்பித்துள்ளார்கள். இவ்வுரையேடு அச்சிட்ட வரலாற்றினைக் கரந்தைக்கவியரசு அவர்கள் பதிப்புரையின்கண் விரிவாகக் கூறியுள்ளார்கள். அதனைக் கேண்மின்:-

இதன்கண் பல்வகையான பிழைகளும் மலிந்திருத்தல் கூடுமென யான் உணரேனல்லேன்; உணர்ந்தஞ்சேனல்லேன்; அஞ்சி அஞ்சியும் அச்சிட்டது, ஒன்றே ஒன்றைக் கருதியதாகும். அஃதாவது, இதில் என் மனமாரச் செய்த ஆக்கல், அழித்தல், திரித்தல் முதலாய செய்கைகள் இலவாகலின், நாளும் நாளும் பழுது பட்டொழிந்துவரும் இவ்வேட்டின் ஒருநேர் பிரதியாக இது நின்று, பிற்காலத்து அச்சிடும் பெரியார்கட்கு ஒருவாறு உதவி செய்யும் என்று எண்ணியதொன்றேயாகும். ஒரு பெரிய நூலை அச்சிட்டதொரு பிழையினை இது பற்றியேனும் தமிழுலகம் பொறுத்திடுவதாக (சொல். தெய். பதிப்புரை. ப.10) என்ற அரும் பண்பு நடையால் இந்நூலை அச்சிடுதற்கு அப்பெருமகனார் அஞ்சியதும் அறியலாகின்றது. அன்றியும், அவர் கூறியாங்கே, தெய்வச்சிலையாருரையைப் பிற்காலத்து அச்சிட்ட பெரியவர்கட்கு இப்பதிப்பே ஒருநேர் பிரதியாக நின்றுதவியது என்பதும் ஈங்குக் குறிப்பிடத்தக்கதாம்.

பின்னர், இவ்வுரை சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தாரால் கு. சுந்தரமூர்த்தி அவர்களின் விளக்கவுரையுடன் 1963-ஆம் ஆண்டில் வெளியிடப்பெற்றது. பின்னர், கரந்தைத் தமிழ்ச்சங்கப் பதிப்பின் தெய்வச்சிலையாருரை, நிழற்படப் பதிப்பாகத் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தாரால் 1984-ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. இந்நூலின் மறு அச்சு 2010-இல் வெளிவந்துளது.

உரைநலம் :

தெய்வச்சிலையாருரை ஏனையுரைகளினும் பல்வேறு சிறப்புக்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது. இவ்வுரை சொல்லழகும் பொருளழகும் திட்ப நுட்பமும் வாய்ந்ததாம். பிறவுரைகளிற் காணப்படாத பல அருஞ் செய்திகள் இவ்வுரையில் காணலாகின்றன.

கிளவியாக்கத்தின் தொடக்கத்தில் சொல்லதிகாரத்தின் ஒவ்வோர் இயலுக்குமுள்ள இயைபைக் கூறும் முறையாலும், தகுதியும் வழக்கும் (சொல். 17), உருபென மொழியினும் (சொல். 24), தன்மை சுட்டலும் (சொல். 25) என்பனபோன்ற நூற்பாக்களின் உரைகளானும், பத்துவகை எச்சங்களுக்கு இவர் வரைந்துள்ள உரையானும் இவ்வுரையாசிரியர் நுண்ணிய அறிவுடையவர் என்பது புலனாகின்றதாம்.

எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினெண்கீழ்க்கணக்கு, சிலப்பதிகாரம், மணிமேகலை, சூளாமணி ஆகிய நூல்களிலிருந்து பல மேற்கோள்களை இவர் எடுத்துக்காட்டுவதனின்று,  இந்நூல்களில் இவருக்கிருந்த இலக்கியப்புலமை நன்கறியலாகின்றது. சேனாவரையரையொப்ப இவ்வுரையாசிரியரும் வடமொழி இலக்கியங்களிலும் வல்லவரென்பது சொல் 66, 68, 81, 87, 106, 408, 410 ஆகிய நூற்பாக்களுக்கு இவர் வரைந்துள்ள உரைகளான் தெளிவாகின்றது.

சமயச் சார்பான எடுத்துக்காட்டுகளைத் தருதல் :

இவ்வுரையாசிரியர், மன்னாப் பொருளும் அன்ன இயற்றே (சொல். 34) என்னும் நூற்பாவிற்கு எடுத்துக்காட்டு வழங்குங்கால், ”வேதாகமத் துணிவு ஒருவர்க்கு உணர்த்துமிடத்து உலகும் உயிரும் பரமும் அனாதி; பதியும் பசுவும் பாசமும் அனாதி எனவரும் உலகும் உயிரும் பரமும் பசுவும் பொருந்தும் பொருள் ஆனவாறும், பாசமும் பதியும் இவற்றொடு பொருந்தாத பொருள் ஆனவாறும் காண்க என்று குறிப்பிடுகின்றார். இதனான் இவரின் சைவசித்தாந்தச் சாத்திர அறிவு புலனாகின்றது.

அங்ஙனமே, பெயர்நிலைக் கிளவியின் ஆஅகுநவும் (சொல். 438) எனவரும் நூற்பாவில் மந்திரப் பொருள்வயின் ஆஅகுநவும் என்ற பகுதிக்கு எடுத்துக்காட்டாக, மண்ணைச் சுமந்தவன் தானும் வரதராசன் மகன்தானும், எண்ணிய வரகாலி மூன்றும், இரண்டு மரமும், ஓர்யாறும் திண்ணம் அறிய வல்லார்க்குச் சிவகதியதனைப் பெறலாமேஎன்ற திருவைந்தெழுத்தைப் பொருண்மையாக உடைய பாடலைக் காட்டி, இதனுள் மண்ணைச் சுமந்தவன் – ந, வரதராசன் மகன் – ம, வரகாலிமூன்று – சி, இரண்டு மரம் – வா, ஓர்யாறு – ய எனக் கூற நமச்சிவாய எனப் பொருளாயிற்று என்று விளக்கியுள்ளார். இஃது, சிவபெருமான்பால் இவர் கொண்ட பற்றினை விளக்குவதாம்.

உரைப்போக்கு :

இளம்பூரணர் முதலானோர் உரைப்போக்கினின்றும் தெய்வச்சிலையார் உரைப்போக்கு வேறானதாம். இவருரை அதிகார விளக்கம், இயல்விளக்கம், இயல் இயைபு, கருத்துரை, பொருளுரை, எடுத்துக்காட்டு, விளக்கம் என்னும் அமைப்பினது. இவர் அதிகார விளக்கங் கூறுங்கால் தனியே கூறினாரல்லர்; கிளவியாக்க முதல் நூற்பாவினையடுத்தே கூறுகின்றார். ஒவ்வோரியலிற்கும் உள்ள இயைபினைப் புலப்படுத்துகின்றார். கருத்துரை வழங்குங்கால் இளம்பூரணரைப் போன்று இச்சூத்திரம் என்னுதலிற்றோ வெனின் என வினா எழுப்பிக் கூறாமல், நூற்பா நுதலியதை மட்டும் கூறி நுதலிற்று என முடிக்கின்றார்.

கிளவியாக்க முதல் நூற்பாவிற்குக் கடாவிடை யுள்ளுறுத்து உரைவிரிக்கும் இவர், அந்நூற்பா உரையின் நிறைவில், இனி இச்சூத்திரத்திற்குப் பிறவாற்றானும் கடாவிடை யுள்ளுறுத்து உரைப்பிற் பெருகும் என அமைகின்றார். அங்ஙனமே, இவர் ஒவ்வோரியலின் நிறைவிலும் உரையினது அளவைக் கிரந்த வகையால் இவ்வளவு என்று கணக்கிட்டு உரைக்கின்றார்.

மறுப்புநலம் :

இவ்வுரையாசிரியர் எவர் பெயரையும் எவ்விடத்தும் கூறினாரல்லர். அங்ஙனமே, இவர் பெயரையும் பிறவுரையாளர்கள் குறிப்பிடவில்லை. இவர், தம் கொள்கையைக் கூறிச் செல்லும் இயல்பினரே அன்றிப் பிறர் கொள்கையைக் கூறி அவர்களைப் பெயர் சுட்டி மறுத்துரைக்கும் இயல்பினரல்லர். இவர் பிறரை மறுக்கும் இடங்கள் சொல். நூ. 1,32, 87, 100, 441, 62, 404 என்னும் ஏழிடங்களேயாம். இவற்றுள் முதல் இரு இடங்கள் இளம்பூரணரையும், அடுத்த மூவிடங்கள் இளம்பூரணரைத் தவிர ஏனையுரைகளை மறுத்துரைத்தனவாம். எஞ்சியுள்ள மறுப்புக்கள் இன்றுள்ள சொல்லதிகார உரைகள் எவற்றுக்கும் பொருந்துவனவாய் இல்லை. இங்ஙனமாக, பிறர் கொள்கையை மறுத்த இடங்களில் எவர் பெயரையும் குறிப்பிடாமல் இவர் மறுத்துச் செல்லும் மறுப்புநலம் இவரின் தனிச் சிறப்பாம்.

நூற்பாக்களின் அமைப்பு :

இளம்பூரணர், சேனாவரையர், நச்சினார்க்கினியர் ஆகிய மூவரும் கொண்ட நூற்பாக்களின் பாடம், அடிகள், முறைவைப்புக்கும் இவருரைக்கும் பலவிடங்களில் வேறுபாடுகள் காணலாகின்றன. அம்மூவரும் கொண்ட நூற்பா அமைப்பினையும் இவர் மாற்றியுள்ளார். அஃதாவது, நூற்பாக்களை ஒன்றாக்கல், பலவாக்கல், நூற்பாவினை இடம் மாற்றியமைத்தல் என்பனவாம். ஒரு நூற்பாவை இரண்டாக்கியும், சில நூற்பாக்களை இணைத்து ஒரே நூற்பாவாக்கியும் உரை செய்துள்ளார். இங்ஙனம் இணைத்தும் பகுத்தும் உரைகாண்பது மட்டுமன்றி,  சில நூற்பாக்களை இவர் இடமாற்றியும் அமைத்துள்ளார்.

இவர் செய்த நூற்பா இடப்பெயர்வுகளுள் சிலவற்றைக் கூறுவல் :

எச்சவியலிலுள்ள இறப்பின் நிகழ்வின் (எச்ச.31) எவ்வயின் வினையும் (எச்ச.32), அவைதாந், தத்தங்கிளவி (எச்ச.33) என்னும் மூன்று நூற்பாக்களும் முற்று வினைச் சொல்லின் இலக்கணம் கூறுபவை. ஆயின், இவற்றைத் தெய்வச்சிலையார் வினையிலக்கணமாதல் ஒப்புமை பற்றி வினையியலிறுதியில் 242, 243, 244 -ஆம் நூற்பாக்களாக வைத்து உரையெழுதியுள்ளார். இங்ஙனம் மாற்றியமைத்ததற்குத் தக்க காரணமும் 241-ஆம் நூற்பா உரையின் இறுதியில் கூறுகின்றார். அவ்வுரையுள், வினைக்கு இன்றியமையாத முற்றினை ஒழிபியல் கூறுகின்றுழிக் கூறிய அதனாற் பெற்ற தென்னை எனின், அஃது எமக்குப் புலனாயிற்றன்று என்று இவர் உரைத்துள்ளமையும் கருதத்தக்கதாம்.

இங்ஙனமே, எச்சவியலிலுள்ள இசைநிறை எனத் தொடங்கும் 15-ஆம் நூற்பாவை 26-ஆம் நூற்பாவாகவும், வேற்றுமை மயங்கியலில் அதுவென் வேற்றுமை எனத் தொடங்கும் 11-ஆம் நூற்பாவையும், ஆறன் மருங்கின் எனத் தொடங்கும் 15-ஆம் நூற்பாவையும் இடப்பெயர்வு செய்து அச்சக்கிளவிக் எனத் தொடங்கும் நூற்பாவினை அடுத்து ஒன்றன்பின் ஒன்றாக 15,16-ஆம் நூற்பாக்களாக வைத்து உரை செய்துள்ளார் என்பதும் இவண் சுட்டத்தக்கதாம்.

முடிபுகள் :

           இதுகாறுங் கூறியவற்றைத் தொகுத்து நோக்கின்,

  • தொல்காப்பியத் தொண்டர்கள் எனத்தகும் உரையாசிரியர்கள், ஆசிரியர் தொல்காப்பியனாரின் உளக்குறிப்பை உய்த்துணர்ந்து தெளிய அறிவிக்கும் நுண்ணறிவுடையோர்.
  • தொல்காப்பிய நிலைபேற்றுக்கும், தொல்காப்பியக் கல்வி பரவலுக்கும் உரையாளர்களின் உரைகளும் அன்னோர் மேற்கொண்ட உரைமுறைகளும் பெருங்காரணமாம்
  • தொல்காப்பியத்தின் மூன்றதிகாரங்களுள் சொல்லதிகாரம் ஒன்றே அறுபெறும் உரையாளர்களின் உரைகளைக் கொண்டது; இஃது சொல்லதிகாரத்திற்கே வாய்த்த பேறாகும்
  • அன்றியும், தொல்காப்பியச் சொல்லதிகாரத் தெய்வச்சிலையாருரை ஏனையுரைகளினும் பல்வேறு சிறப்புக்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது.
  • இவ்வுரையாசிரியரின் பரந்துபட்ட இலக்கண இலக்கிய ஆராய்ச்சிநலமும் வடமொழிப்புலமையும் பிறவுரைகளிற் காணாதனவாய் இவர் வரைந்த சிறப்புரைகளான் தெள்ளிதிற் புலனாம்.
  • சமயச்சார்பான எடுத்துக்காட்டுக்களை இவர் காட்டியுள்ள பான்மையை நோக்குழி, இவர்தம் சமயப்பற்றும் வேண்டுழியெல்லாம் அதனை வெளிப்படுத்தும் நுண்மையும் நேரிதின் விளங்குகின்றதாம்.
  • பிறவுரைகளைப் பெயர்சுட்டி மறுக்காத அரும்பண்புடைய மறுப்புநலனும் ஆசிரியர் ஓதிய சூத்திரங்களைத் தான் இடப்பெயர்வு செய்தமைக்கு இவர் பகன்றுள்ள ஏதுக்கள்தாமும் பல்வேறு மேலாய்வுகளுக்கு இட்டுச் செல்வனவாம்.

என்னும் முடிபுகள் இக்கட்டுரையான் பெறலாகின்றன எனக்கூறி நிறைவு செய்வாம்.

துணை நின்ற நூல்கள் :

  1. தொல்காப்பியம், சொல்லதிகாரம், இளம்பூரணம், (கு. சுந்தரமூர்த்தியவர்கள் விளக்கவுரையுடன்) சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை. மறுபதிப்பு – 1973.
  1. தொல்காப்பியம், சொல்லதிகாரம், சேனாவரையம், (ஞா. தேவநேயப்பாவாணர் மற்றும் ஆ. பூவராகம்பிள்ளை விளக்கவுரையுடன்) சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை. மறுபதிப்பு – 1970.
  1. தொல்காப்பியம், சொல்லதிகாரம், சேனாவரையம், (கு. சுந்தரமூர்த்தியவர்கள் விளக்கவுரையுடன்) அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலை நகர், முதற்பதிப்பு – 1981.
  1. தொல்காப்பியம், சொல்லதிகாரம், சேனாவரையம், சி. கணேசையர் பதிப்பு, வடஇலங்கைத் தமிழ்நூற் பதிப்பகம், சுன்னாகம், இலங்கை, முதற்பதிப்பு – 1978.
  1. தொல்காப்பியம், சொல்லதிகாரம், நச்சினார்க்கினியம், இராமகோவிந்தசாமிப் பிள்ளை பதிப்பு, சரசுவதி மகால் நூலகம், தஞ்சாவூர், முதற்பதிப்பு – 1997.
  1. தொல்காப்பியம், சொல்லதிகாரம், நச்சினார்க்கினியம், (கு. சுந்தரமூர்த்தியவர்கள் விளக்கவுரையுடன்) சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை. மறுபதிப்பு – 1962.
  1. தொல்காப்பியம், சொல்லதிகாரம், தெய்வச்சிலையம், கரந்தைத் தமிழ்ச்சங்கப் பதிப்பின் நிழற்படப் பதிப்பு, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர், மறுபதிப்பு – 2010.
  1. தொல்காப்பியம், சொல்லதிகாரம், தெய்வச்சிலையம், (கு. சுந்தரமூர்த்தியவர்கள் விளக்கவுரையுடன்) சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, முதற்பதிப்பு – 1963.
  1. தொல்காப்பியச் சொல்லதிகாரக் குறிப்பு பி.சா. சுப்பிரமணிய சாத்திரியார் விளக்கவுரை 38, பாண்டியன் சந்து, தெப்பக்குளம், திருச்சி. முதற்பதிப்பு – 1930.
  1. தொல்காப்பியம் – சொல்லதிகாரம் – உரைக்கொத்து (தொகுதி-1),  தி.வே. கோபாலையர். (ப.ஆ.) சரசுவதி மகால் நூலகம், தஞ்சாவூர்,  முதற் பதிப்பு – 2007.
  1. தொல்காப்பியம் – சொல்லதிகாரம் -ஆராய்ச்சிக் காண்டிகையுரை, ச. பாலசுந்தரம். (உ.ஆ.), பெரியார் பல்கலைக்கழகம், சேலம், முதற்பதிப்பு – 2012.
  1. மாணிக்கம். வ.சுப., தொல்காப்பியக்கடல், மணிவாசகர் பதிப்பகம், சென்னை, முதற்பதிப்பு – 1987.

ஆய்வறிஞர் கருத்துரை (Peer Review):

‘மெய்யுரை கண்ட தெய்வச்சிலையாரின் உரைமரபுகள்’ என்னும்  தலைப்பில் அமைந்த இக்கட்டுரையைப் பலமுறை பயின்று கட்டுரையின் அனைத்துக் கூறுகளையும் உள்வாங்கி ‘வல்லமை’ முன்மதிப்பீட்டு விதிகளைக் முழுமையாகக் கருத்திற்கொண்டு செய்யப்படும் முன் மதிப்பீடு

  1. தெய்வச்சிலையாரின் உரைச்சிறப்புப் பற்றிய இவ்வாய்வுக்கட்டுரை முழுமையாக ஆய்வுப் பொருளை உள்வாங்கி அமைக்கப்பட்டுள்ளது. 
  1. ‘உரைமரபுகள்’ என்பதே கட்டுரையின் மையப் பொருளாயினும் அது தொடர்பாக ஆய்வாளர் எடுத்து மொழிந்திருக்கும் ஏனைய உரையாசிரியர்கள், சொல்லதிகார உரைகள், அவற்றின் வரலாறு, சொல்லதிகார உரைப்பதிப்புகள் முதலியன கட்டுரைக்குக் கூடுதல் அடர்த்தியை அளிக்கின்றன. 
  1. பொருண்மைகளுக்குப் பொருத்தமாகக் கட்டுரையின் துணைத்தலைப்புக்கள் அமைந்திருப்பது ஆய்வுப் பொருளை  தெளிவாக அணுகத் துணைசெய்கிறது..
  1. பழந்தமிழ்த் தேட்டங்களைத் தேடியும் கண்டும் தொகுத்தும் வகுத்தும் பகுத்தும் செய்யும் ஆய்வுகள் அருகிய தற்காலத்தில் இத்தகைய கட்டுரைகள் பெரிதும் போற்றுதற்குரியன. 
  1. கட்டுரையில் குறிப்பிட வேண்டியது பொருண்மைக்கேற்ற மொழி நடை. எளிமை என்ற பெயரில் பொருண்மையை நீர்த்துப் போகச் செய்யும் மொழிநடை தவிர்த்து செப்பமான மொழிநடையைக் கடடுரையாசிரியர் பின்பற்றியிருப்பது குறிப்பிடத்தக்கது. 
  1. ‘தெய்வச் சிலையாரின் உரைமரபுகள்’ என்பதே ஆய்வுப் பொருண்மையாயிருக்க, ‘மெய்யுரை கண்ட தெய்வச் சிலையார்’ என  அடைமொழி அளித்திருப்பது முடிவுக்குப் பின் ஆய்வோ என்னும் மயக்கத்தைத் தருகிறது. 
  1. தொல்காப்பியச் செய்யுளியலுக்கான ஆசிரியர் நச்சினார்க்கினியர் உரை, கழகம் மற்றும் தமிழ்மண் பதிப்பகத்தில் அண்மையில் மீண்டும் பதிப்பிக்கப்பட்டு உள்ளது என்பது சுட்டப்படுகிறது. 
  1. ‘உரைமரபுகள் என்னும் தலைப்புக்கேற்ப ஒரு குறிப்பிட்ட நூற்பாவின் உரையைப் பெருமதிப்பு வாய்ந்த சேனாவரையர் உள்ளிட்ட உரையாசிரியர்தம் உரை மரபுகளோடும் உரைப்பகுதியோடும் ஒப்பிட்டு நோக்கியிருந்தால் கட்டுரை இன்னும் சிறந்திருக்கக் கூடும். 
  1. ‘பதிப்பித்தத் தொல்காப்பியம்’ ‘ஒப்பிட்டு பல’ என்னும் இடங்களில் உள்ள ஒற்றுப்பிழைகள் நீக்குதற்குரியன. பெயரெச்செங்களில் வல்லினம் மிகாது.

தேவை, தெளிவு, சுருக்கம், அடர்த்தி, செம்மை ஆகிய பண்புகளைக் கொண்டு, ஆய்வு நெறிப்படி இந்தக் கட்டுரை அமைக்கப்பட்டுள்ளது. ஆய்வாளருக்குப் பாராட்டுகள்.


பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *